உதிரிப் போதனைகள்
அஜான் சா
Fragments of a Teaching
A Dhamma talk by Ajahn Chah
(வாட் பா போங்கில் (Wat Pah Pong) இருந்த இல்லற மக்களுக்கு 1972ஆம் ஆண்டு தரப்பட்ட போதனை.)
புத்த-தம்மத்தை அடைய விரும்புவோருக்கு
புத்த-தம்மத்தை அடைய விரும்பும் ஒருவர் முதலில் அடித்தலமாகப் பக்தி அல்லது நம்பிக்கை உடையோராக இருக்க வேண்டும். அவர் புத்த-தம்மத்தின் பொருளை இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்:
புத்தர்: அந்தத் தெரிந்த ஒருவர், உள்ளத்தில் தூய்மையும், பிரகாசமும், அமைதியும் கொண்டவர்.
தம்மம்/அறம்: தூய்மையின், பிரகாசத்தின், அமைதியின் இயல்புகள் பண்பிலிருந்தும், மன ஒருக்கத்திலிருந்தும், மெய்யறிவிலிருந்தும் தோன்றுகின்றன.
எனவே, புத்த-தம்மத்தை அடைவோர் பண்புகளை, மன ஒருக்கத்தை, மெய்யறிவைத் தங்களுள் பேணி வளர்க்க வேண்டும்
புத்த-தம்மத்தின் மார்க்கத்தில் நடப்பது
வீடு வந்து சேர விரும்புவோர் ஓர் இடத்தில் உட்கார்ந்த வண்ணம் பயணத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, பயணத்தைத் தொடங்கிச் சரியான திசையில் அடிமேல் அடிவைத்து நடந்தால்தான் இறுதியில் வீடு வந்து சேரலாம். தவறான பாதையில் சென்று விட்டால் சிக்கல் ஏற்படலாம். சேற்று நிலமோ, தாண்டிச் செல்ல முடியாதபிற தடங்கல்களோ வழியை மறைக்கலாம். அல்லது வேறு ஆபாத்தான சூழ்நிலைகள் ஏற்பட்டு வீடு வந்து சேர முடியாமலே போகலாம்.
வீடு வந்து சேர்ந்தவர்களோ ஓய்வெடுத்து வசதியாகத் தூங்கலாம் - உடலுக்கும் மனத்துக்கும் வீடு ஒரு வசதியான இடம். இப்போது இறுதியாக வீடு வந்து சேர்ந்து விட்டனர். ஆனால் அந்தப் பயணி வீட்டுக்குள் செல்லாமல் முன்னால் மட்டும் நடந்து சென்றாலோ அல்லது அதைச் சுற்றிச் சுற்றி வந்தாலோ, வீடு வரை வந்து சேர்ந்துவிட்டதன் பயனை அவரால் நுகர முடியாது.
அதுபோலவே புத்த- தம்மத்தை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் நடக்க வேண்டிய பாதையில் தனிபட்ட முறையில் நாமாகவே நடந்து செல்ல வேண்டும். ஏனென்றால் நமக்காக வேறு எவரும் இதைச் செய்ய முடியாது. மேலும் பண்பு, ஒருக்கம் மற்றும் மெய்யறிவு என்ற சரியான பாதையில் தூய்மை, பிரகாசம், மன அமைதி ஆகிய நல்விளைவுகளைக் காணும் வரை பயணிக்க வேண்டும். இவையே மார்க்கத்தில் செல்வோருக்குக் கிடைக்கும் நல்விளைவுகள். ஆனால் ஒருவருக்குப் படிப்பறிவு மட்டுமோ மற்றும் சவுகத நூல்களிலிருந்தும், போதனைகளின் மற்றும் சூத்திரங்களிலிருந்து பெற்ற அறிவோ மட்டுமே இருந்தால், அதாவது பயணத் திட்டங்களின் அல்லது பயண வழியின் வரைப்படங்களின் அறிவு மட்டுமே இருந்தால், நூறு பிறப்பெடுத்தாலும் அவரால் தூய்மை, பிரகாசம், மன அமைதியைத் தெரிந்து கொள்ள முடியாது. மாறாக அவர் பயிற்சியின் பலன்களைப் பெறாமல் தன் நேரத்தை வீண் செய்தவராகிறார். . ஆசிரியர்கள் பாதையின் திசையை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களது போதனைகளைக் கேட்ட பிறகு பாதையில் நடந்து பயிற்சி செய்து பலன்களைப் பெறுவதும், பெறாததும் நம் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது.
இந்தப் பௌத்தப் பயிற்சியை ஒரு மருத்துவர் தன் நோயாளிக்கு விட்டுச் செல்லும் மருந்தோடு ஒப்பிடலாம். அந்த மருந்துப் பாட்டிலில் மருந்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நோயாளி எத்தனை நூறு தடவை அதைப் படித்தாலும், மருந்தை உட்கொள்ளாமல், பாட்டிலில் குறிப்பிட்டுள்ளதைப் படித்துக் கொண்டு மட்டுமே இருந்தால் அவர் மாண்டு விடுவார். மருந்தின் காரணமாக எந்தப் பயனையும் அடையமாட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் மருத்துவர் சரியில்லை, மருந்தும் தன்னைக் குணப்படுத்தவில்லையென்று வேதனைப் பட்டுக் குறைகூறலாம்! மருத்துவர் போலி மருத்துவர் என்றும், மருந்தும் ஒன்றுக்கும் பயனற்றதென்றும் நினைக்கலாம். ஆனால் நோயாளியோ பாட்டிலைப் பார்த்துக் கொண்டு மருந்தை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விளக்கத்தை மட்டுமே படித்து நேரத்தை வீண் செய்து கொண்டிருந்தவர். மருத்துவரின் அறிவுரையைக் கேட்கவும் இல்லை, மருந்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை.
ஆனால் நோயாளி மருத்துவரின் சொற்படி நடந்து மருந்தைத் தொடர்ந்து குறித்தபடி எடுத்துக் கொண்டால், அவர் குணமாகி விடுவார். கடுமையாக நோயுற்று இருந்தால் நிறைய மருந்தெடுக்க வேண்டியிருக்கும். சிறிதே நோயுற்று இருந்தால், குணமாகக் கொஞ்சம் மருந்து எடுத்தால் போதும். நிறைய மருந்தெடுப்பதற்குக் காரணம் நோய் கடுமையானதாக இருப்பதால் தான். இது இயற்கை தான் என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்கும்.
மருத்துவர்கள் மருந்து தருவது உடல் நோயைக் குணப்படுத்துவதற்குத் தான். புத்தரின் போதனைகள் மனத்தின் நோயைக் குணப்படுத்தி அதன் இயற்கை நிலைக்குக் கொண்டு வருவதற்காகத்தான் கற்பிக்கப் படுகின்றன. எனவே புத்தரை மன நோய்களைக் குணப்படுத்த நிவாரணங்கள் அளித்த மருத்துவர் என்று கருதலாம். சொல்லப்போனால் உலகின் தலை சிறந்த மருத்துவர் அவரே.
மன நோய்களை ஒருவரும் விடுபடாமல் அனைவரிடமும் காணலாம். இந்த மன நோய்களைக் காணும்போது, நோயைக் குணப்படுத்தும் மருந்தாக, அறத்தின் உதவியை நாடுவது சரி தானே? புத்த-தம்மத்தின் பாதையில் பயணிப்பது உடலால் அல்ல. பலனை அடைவதற்கு மனத்தோடு பயணம் செய்ய வேண்டும். இந்தப் பயணிகளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்:
முதல் மட்டத்தில் இருப்பவர்: இவர்களுக்குத் தாங்களே பயிற்சி செய்யவேண்டும் என்பதும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதும் தெரியும். புத்தர், தம்மம், சங்கத்தை அடைக்கலமாகக் கொண்டு போதனைகளின் படி ஊக்கத்தோடு பயிற்சி செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்கள் பழக்க வழக்கங்களையும், பரம்பரையான நம்பிக்கைகளை மாத்திரம் தொடர்வதை விட்டு விட்டு, உலகின் இயல்பைச் சிந்தனையோடு பரிசோதிக்கின்றனர். இவர்களைப் "பௌத்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்" என்ற கூட்டத்தில் சேர்க்கலாம்.
நடு மட்டத்தில் இருப்பவர்: இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்ததன் விளைவாகப் புத்த, தம்ம, சங்கத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். காரணங்களால் உருவான அனைத்தின் உண்மையான இயல்பினை ஊடுருவி விட்டனர். இவர்கள் மெதுவாகப் பற்றினையும் பிடிப்பினையும் விட்டு விடுகின்றனர். அவர்கள் எதையும் பிடித்துக் கொள்வதில்லை, மேலும் அவர்கள் மனம் அறத்தினை ஆழமாக அறிந்திருக்கிறது. எந்த அளவு பற்றில்லாமலும் மெய்யறிவும் கொண்டுள்ளனரோ அதற்குத் தகுந்தார்ப் போல அவர்களைச் 'சோதாபத்தி' (பாதையில் தொடர்ந்து செல்வது, ஓடையில் நுழைவது), 'ஸகாதாகாமிதா' ('ஒரு முறை மட்டும் மறு பிறப்பெடுப்பவரின் நிலை'), 'அனாகாமிதா' (இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்) என்றழைக்கலாம். அல்லது எளிமையாக மேன்மையானோர் என்று அழைக்கலாம்.
மேல் மட்டம்: இந்தக் கூட்டத்தில் இருப்பவரின் பயிற்சி அவர்களைப் புத்தரின் உடலிடம், பேச்சிடம், மனத்திடம் கொண்டு சேர்த்து விட்டது. உலகத்தின் மேல், உலகிடமிருந்து விடுபட்டு, எல்லாப் பற்றிடமிருந்தும் விடுபட்டவர்கள். அவர்கள் 'அரஹந்தர்' அல்லது விடுபட்டவர் என்று அழைக்கப்படுவார்கள். மேன்மையானோரில் மேலோங்கியவர்கள் இவர்கள்.
ஒருவர் பண்பை எப்படித் தூய்மையாக்குவது
பண்பென்பது உடலின், சொல்லின் அடக்கமும், ஒழுக்கமும் ஆகும். இல்லற மக்களுக்கும் ஆண், பெண் துறவிகளுக்கும் பல ஒழுக்க விதி முறைகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாகப் பேசும் போது ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒரு அடிப்படை இயல்பு உள்ளது - அதுவே நோக்கம். மனக் கவனத்துடன் தெரிந்த நிலையில் இருக்கும் போது நோக்கமும் சரியானதாக இருக்கும். தெரிந்த நிலையிலும், மனக் கவனத்தோடும் இருக்கும் போது நல்ல பண்பும் உருவாகும்.
அழுக்கு ஆடைகளை உடுத்து இருக்கும் போது, உடலும் அழுக்காக இருக்கும். உடல் அழுக்காக இருக்கும் போது மனம் அசௌகரியமாகவும் தாழ்ந்த நிலையிலும் இருப்பது இயற்கையே. நம் உடலைச் சுத்தமாக வைத்திருந்து தூய்மையான நல்ல துணிகளை உடுத்தியிருக்கும் போது மனமும் இலேசாகவும் உற்சாகமாகவும் இருக்கும். அதே போலப் பண்பு இல்லாவிட்டால் நமது நடத்தையும் பேச்சும் அழுக்குற்றதாகவே இருக்கும், இதனால் மனத்திலும் மகிழ்ச்சியிருக்காது. சரியான பயிற்சியிலிருந்து பிரிக்கப் படுகிறோம் இதனால் மனத்தோடு அறத்தின் சாராம்சத்தினை ஊடுருவத் தடங்கல் ஏற்படுகிறது. சரியான நல்ல உடல் நடத்தையும், பேச்சும், சரியாகப் பயிற்று விக்கப் பட்ட மனத்தை நம்பி இருக்கின்றன. ஏனென்றால் மனம் தான் நமது நடவடிக்கைகளின் பேச்சின் முன்னோடி. அதன் கட்டளைப்படியே நடக்கிறோம். அதனால் நமது மனத்தைப் பயில்வித்துப் பயிற்சியைத் தொடரவேண்டும்.
ஒருக்கம் அடையப் பயிற்சி
ஒருக்கம் அடையப் பயிற்சி செய்வது மனத்தை உறுதியாகவும் நிலையாகவும் வைத்திருப்பதற்கே. இதனால் மனம் அமைதி அடைகிறது. பயில்விக்கப்படாத மனம் நிலையாக இல்லாமல் சஞ்சலத்தோடு இருக்கின்றது. அதைக் கட்டுப்படுத்துவதும், சமாளிப்பதும் கடினம். மனம் புலன் ஆசைகளால் சீர்குலைக்கப் படுகிறது. தண்ணீர் இங்கேயும் அங்கேயும் ஓடி எப்போதும் கீழான மட்டம் தேடுவது போல. விவசாயிகளும் பொறியாளர்களும் தண்ணீரை எப்படி மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கும் வகையில் கட்டுப் படுத்துவது என்பதைத் தெரிந்திருக்கின்றனர். மனிதர்கள் அறிவாளிகள். ஓடும் தண்ணீரைத் தேக்கிப் பெரிய அணைகளையும், குளங்களையும் கால்வாய்களையும் அமைக்கத் தெரிந்துள்ளனர் - இவை எல்லாம் தண்ணீரை வழிப்படுத்திப் பயன்பட வைப்பதற்காகவே. மேலும் தேக்கி வைக்கப் பட்ட தண்ணீரால் மின்னுற்பத்தியும் செய்து மின் விளக்குகள் எரிவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. தண்ணீர் அதன் இயல்புக்குத் தகுந்தார்ப்போல கட்டுப்படாமல் ஓடிச் சில தாழ்வான பகுதிகளில் தேங்கி வீணாவதையும் தடுக்கிறது.
அதே போலக் கட்டுப் படுத்தப் பட்ட மனம், தொடர்ந்து பயில்விக்கப்பட்ட மனம் அளவிடமுடியாத பலன்களைத் தரும். புத்தரே, "கட்டுப் படுத்தப் பட்ட மனம் உண்மையான மகிழ்ச்சியைத் தரும், எனவே மேலோங்கிய அப்பயன்களுக்காக மனத்தைக் கட்டுப் படுத்துங்கள்," என்று போதித்தார். அது போலவே நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளையும் - யானை, குதிரை, ஆடு மாடு எருமை போன்றவை - பயிற்றுவித்தால் அவை நமக்கு வேலை செய்வதற்கு உதவும். அவற்றின் வலிமை, அவற்றிற்குப் பயிற்சி தந்த பிறகுதான் நமக்கு உதவிகரமாக இருக்கும்.
அது போலவே பயில்விக்கப்படாத மனத்தைவிடப் பயில்விக்கப்பட்ட மனம் பன்மடங்கு அதிக ஆசீர்வாதங்களைத் தரும். புத்தரும் அவரது ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் நம்மைப் போலவே, பயிற்சி அளிக்கப்படாத மனத்தோடு தான் தொடங்கினார்கள். ஆனால் பின்னர் எப்படி அவர்கள் நாம் அனைவரும் போற்றுதற் குரியோரானார்கள் என்பதைப் பாருங்கள். அவர்களது போதனைகளிலிருந்து நாம் எவ்வளவு பயன்பெறுகிறோம் என்பதையும் பாருங்கள். மனத்திற்குப் பயிற்சியளித்து அனைத்துக்கும் அப்பால் உள்ள விடுதலையை அடைந்தவர்களினால் உலகுக்கு எவ்வளவு பயன் கிடைத்திருக்கின்றது என்பதைப் பாருங்கள். கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கப்பட்ட மனம் நமது எந்தத் தொழிலானாலும், நாம் எந்தச் சூழ்நிலையிலிருந்தாலும் அவற்றைச் சமாளிக்கக் கூடிய சாமர்த்தியம் பெற்றுள்ளது. ஒழுக்கமுள்ள மனம் நமது வாழ்க்கையைச் சீராக வைத்திருக்கும். வேலையை எளிதாக்கும். நமது நடவடிக்கைகளை நடத்துவதற்குச் சிறந்த காரணங்களை வளர்க்கும். இறுதியில் மனத்தைச் சரியாகப் பயில்வித்தால் நமது மகிழ்ச்சியும் அதற்குத் தகுந்தார்ப்போல அதிகரிக்கும்.
மனத்திற்குப் பல வகைகளிலும், பல முறைகளிலும் பயிற்சியளிக்கலாம். மிகவும் பயனுள்ள வழியும், அனைத்து மக்களும் பயிலக்கூடியதுமான ஒருவழி "மூச்சின் மீது கவனம் கொள்வது" என்பது. உள் மூச்சின், வெளி மூச்சின் மீது கவனத்தை வளர்த்துவதே இந்த வழி முறை. விகாரையில் நமது கவனத்தை மூக்கின் நுனியில் மையப்படுத்தி உள் மூச்சினை வெளி மூச்சினைத் தெரிந்திருக்கப் "புத்-தோ" என்ற தியான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். தியானிப்பவர் வேறு வார்த்தையைப் பயன்படுத்த விரும்பினாலும் அல்லது காற்று உட் செல்வதையும், வெளியேறுவதையும் கவனிப்பதோடு மட்டும் இருந்தாலும் அதுவும் சரியே. பயிற்சியை உங்களுக்கு வசதியாக இருக்குமாறு சற்று மாற்றிக் கொள்ளலாம். இந்தத் தியானத்தில் அத்தியாவசியமானது இந்தக் கணத்தில் மூச்சைக் கவனிப்பது தான். உள் மூச்சும் வெளி மூச்சும் நடைபெறும்போது அதைக் கவனித்தவாறு இருக்க வேண்டும். நடைத் தியானம் செய்யும் போது பாதங்கள் நிலத்தைத் தொடும் உணர்ச்சி மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
தியானப் பயிற்சியை முடிந்த அளவு தொடர்ந்து செய்தல் அவசியம். அப்போதுதான் நாம் அதன் முழுப்பலனைப் பெறமுடியும். ஒரு நாள் மட்டும் கொஞ்ச நேரம் தியானித்த பின் நிறுத்தி விட்டு ஓரிரு வாரங்களுக்குப் பின்னரோ அல்லது ஏன் ஒரு மாதத்திற்குப் பின்னரோ பயிற்சியைத் தொடர வேண்டாம். இப்படிப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்காது. புத்தர் நம்மை அடிக்கடியும், அக்கறையோடும், தொடர்ந்தும் மனப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்றார். தியானப் பயிற்சி செய்வதற்கு ஒரு அமைதியான, நம் கவனத்தைத் திசை திருப்பாத ஓர் ஏற்ற இடத்தைத் தேடிக்கொள்வது நல்லது. தோட்டங்கள் அல்லது வீட்டின் பின்புறமுள்ள நிழல் தரும் மரத்தடி அல்லது தனிமையாக இருக்கக்கூடிய இடங்கள் எல்லாம் சரியான இடங்கள் ஆகும். ஆண் துறவியாகவோ பெண் துறவியாகவோ இருந்தால் சரியான குடிசையோ, அமைதியான காடோ அல்லது குகையோ சிறப்பான இடங்கள் எனலாம். மலைகளும் தியானிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடங்களைக் கொண்டுள்ளன.
எங்கிருந்தாலும் சரி, நாம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து உள்மூச்சையும் வெளி மூச்சையும் கவனித்த வண்ணம் இருக்க வேண்டும். கவனம் வேறு எங்காவது சென்றால், நாம் தியானிக்கும் பொருளுக்கே அதை மீண்டும் இழுத்து வர வேண்டும். மற்ற அனைத்து எண்ணங்களையும், கவலைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். வேறு எதையும் நினைக்க வேண்டாம் - மூச்சை மட்டும் கவனிக்கவும். எண்ணங்கள் தோன்றிய உடனேயே அவற்றைக் கவனித்து ஊக்கத்துடன் தியானப் பொருள் மீது திருப்பி விட்டால் மனம் அமைதியாகிக் கொண்டே இருக்கும். மனம் அமைதியாகவும் ஒருக்கத்தொடும் இருக்கும் போது தியானப்பொருளான மூச்சிடமிருந்து அதை விடுவித்துக் கொள்ளுங்கள். இப்போது ஐந்து கந்தங்களைக் கொண்ட உடலையும் மனத்தையும் ஆராயுங்கள்: சட உருவம், உணர்ச்சிகள், குறிப்புகள், மனத்தில் தோன்றுபவை மற்றும் விஞ்ஞானம் இந்த ஐந்து கந்தங்களும் தோன்றி மறைவதைப் பரிசோதித்துப் பாருங்கள். அவை நிரந்தரமற்றவை என்பதும், அதனால் அவை திருப்தியற்றவை என்பதும், விரும்பத்தகாதவை என்பதும், அவை தானாக வந்து செல்கின்றன - அதாவது அவற்றைக் கண்காணிக்கும் ஆத்மா என்று ஒன்றும் இல்லை - என்பதும் தெளிவாகத் தெரியவரும். காரணங்களினாலும் அவற்றின் விளைவுகளினாலும் இயற்கை செயல்படுகிறது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் நிலையற்ற, திருப்தியற்ற, நடத்துபவர் யாரும் இல்லாத இயல்புகளைக் கொண்டுள்ளன. எல்லாவற்றையும் இது போலக் காணும்போது ஐந்து கந்தங்கள் மீதான பற்றும், பிடிப்பும் படிப்படியாக விடுபடுகின்றன. ஏனென்றால் இந்த உலகின் உண்மையான இயல்புகள் தெளிவடைகின்றன. மெய்யறிவு தோன்றுவது என்பது இதுதான்.
மெய்யறிவு எழுவது
உடலின், மனத்தின் பல்வேறு தோற்றங்களின் உண்மையைக் காண்பதே மெய்யறிவு. நமது பயிற்சியளிக்கப்பட்ட, ஒருக்கப்பட்ட மனம் ஐந்து கந்தங்களை விசாரிக்கும் போது, மனமும், உடலும் நிலையற்றவை, திருப்தியற்றவை, அவற்றை நடத்துபவர் யாரும் இல்லை என்பது மிகவும் தெளிவாகிறது. காரணங்களால் உண்டான பொருட்களையெல்லாம் மெய்யறிவோடு பார்க்கும் போது நாம் பற்றுக் கொள்வதில்லை. நாம் எதைப் பெற்றாலும் மனக்கவனத்தோடு பெறுகிறோம். அதற்காக நாம் மிகையாக மகிழ்வதும் இல்லை. நமது பொருட்கள் உடைந்து மறையும் போது நாம் மகிழ்வற்றும் போவதில்லை. அதனால் நாம் துயரமான உணர்ச்சிகளை உணர்வதும் இல்லை - ஏனென்றால் பொருட்களின் நிலையற்ற தன்மையை நாம் அறிந்திருக்கிறோம். நாம் நோயையோ, வலியையோ சந்திக்கும் போது, நாம் நிதானமாக இருக்கிறோம், ஏனென்றால் நமது மனம் பக்குவப் படுத்தப்பட்டிருக்கிறது. பக்குவப் படுத்தப்பட்ட மனமே உண்மையான அடைக்கலம்.
பொருட்களின் உண்மையான இயல்பைத் தெரிந்திருப்பதையே மெய்யறிவு என்கிறோம். மெய்யறிவு மனக் கவனத்தினாலும் ஒருக்கத்தினாலும் எழுகிறது. ஒருக்கம், பண்பு அல்லது ஒழுக்கத்தின் அடித்தலத்திலிருந்து எழுகிறது. இவை மூன்றும் - ஒழுக்கம், ஒருக்கம் மற்றும் மெய்யறிவு - ஒன்றொடு ஒன்று நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றைப் பிரிக்க முடியாது. பயிற்சியின் போது இவ்வாறு இவற்றை நோக்கலாம்: முதலில் மூச்சைக் கவனித்து மனத்தைக் கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும். இதுவே பண்பின் எழுச்சி. மனம் அமைதியாகும் வரை மூச்சைக் கவனிப்பது தொடர்ந்து இருக்குமானால் ஒருக்கம் எழுகிறது. பின் விசாரணையின் மூலம் மூச்சு நிலையற்றது, திருப்தியற்றது, நமதில்லை என்பதையறிந்த பின் பற்றின்மையும் உண்டாகிறது. இவ்வாறு மெய்யறிவு எழுகிறது. ஆக மூச்சைக் கவனத்தோடு பார்ப்பது பண்பையும், ஒருக்கத்தையும், மெய்யறிவையும் வளர்க்க ஒரு வழி எனலாம். இவை எல்லாம் ஒன்று சேர்கின்றன.
பண்பும், ஒருக்கமும், மெய்யறிவும் வளரும் போது அஷ்டாங்க மார்க்கத்தைப் பயிற்சி செய்கிறோம். இதனையே புத்தர் துக்கத்திலிருந்து விடுபடும் வழியென நமக்குக் கற்பித்தார். அஷ்டாங்க மார்க்கம் எல்லாவற்றையும்விடச் சிறந்தது. ஏனென்றால் சரியாகப் பயின்றால் அது நம்மை நேராக நிப்பாணத்துக்கே, அமைதிக்கே அழைத்துச் செல்லும். இந்தப் பயிற்சி புத்த-தம்மத்திற்கு உறுதியாகவும் தவறின்றியும் எடுத்துச் செல்கிறது என்று சொல்லலாம்.
பயிற்சியினால் வரும் பலன்கள்
மேற்கூறிய வகையில் தியானப் பயிற்சி செய்தால், மூன்று நிலைகளில் பயிற்சியின் விளைவுகள் கிடைக்கும்:
"நம்பிக்கையின் காரணமாகப் பௌத்தர்கள்" என்ற மட்டத்தில் இருப்பவர்களுக்குப் புத்த, தம்ம, சங்கத்தில் அதிக நம்பிக்கை எழும். இந்த நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்துக்கும் உறுதுணையாக இருக்கும். மேலும் அவர்கள் அனைத்துப் பொருட்களுக்கும் உள்ள காரண காரியத் தொடர்பினை அறிவார்கள், நல்வினை நல்ல பலனைத் தரும் என்பதையும் தீவினை தீய பலனைத் தரும் என்பதையும் அறிவார்கள். அத்தகைய ஒருவருக்கு மகிழ்ச்சியும் மன அமைதியும் அதிகரிக்கும்.
இரண்டாவதாக, 'சோதாபத்தி' (பாதையில் தொடர்ந்து செல்வது, ஓடையில் நுழைவது) 'ஸகாதாகாமிதா' ('ஒரு முறை மட்டும் மறு பிறப்பெடுப்பவரின் நிலை'), 'அனாகாமிதா' (இவ்வுலகில் மறு பிறப்பெடுக்க மாட்டார்) ஆகிய மேன்மையான நிலைகளை அடைந்தோருக்குப் புத்த, தம்ம, சங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாகிறது. அவர்கள் ஆனந்தத்தோடு இருக்கின்றனர். நிப்பாணத்தை நோக்கி இழுக்கப்படுகின்றனர்.
மூன்றாவதாக அரஹந்தர்களுக்கு அல்லது முழுமையடைந்தோருக்கு துன்பமற்ற முழு மகிழ்ச்சி இருக்கும். அவர்களே உலகிடமிருந்து விடுதலை பெற்றோர், புனித வாழ்க்கையை முடித்து விட்ட புத்தர்கள்.
நாம் அனைவரும் மனிதப் பிறவியெடுத்துப் புத்தரின் போதனைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்துள்ள நல் அதிர்ஷ்டம் பெற்றவர்கள். கோடிக்கணக்கான உயிரினங்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது. எனவே கவனம் இல்லாமலோ அக்கரை இல்லாமலோ இருந்திட வேண்டாம். புண்ணியம் சேர்க்க அவசரம் காட்டுங்கள். நல்லது செய்து பயிற்சியின் ஆரம்ப, மத்திய, இறுதிப் படிகளைத் தொடருங்கள். காலத்தைப் பயன் படுத்தாமல், நோக்கமின்றி வீணாக்க வேண்டாம். புத்தரின் போதனைகளின் வாய்மையை அறிய இன்றே முயலுங்கள். லாவோ மொழிப் பாரம்பரியப் பழமொழி ஒன்றைக் கூறி முடித்துக் கொள்கிறேன்: "பல சுற்று ஆட்டமும், கொண்டாட்டமும் முடிந்தன, விரைவில் பொழுது மறையும். கண்ணீரில் போதையுண்டு, ஓய்வெடுத்துப் பாருங்கள், விரைவில் பயணத்தை முடிப்பதற்கு நேரமில்லாமல் போய்விடும்."
* * * * * *
© Copyright
Provenance: ©1982 The Sangha. Fourth impression, 1982. Transcribed from the print edition in January, 1997 by W.D. Savage with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1997–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Bodhinyana: A Collection of Dhamma Talks", by The Venerable Ajahn Chah, (Phra Bodhinyana Thera). Access to Insight, 6 July 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/bodhinyana.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/