நற்செயல்
தணிசாரோ பிக்கு
Right Action
Thanissaro Bhikkhu
"நற்செயல் என்றால் என்ன? கொலை செய்வதைத் தவிர்த்தல், திருடுவதைத் தவிர்த்தல், தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடாமல் இருத்தல். இவையே நற்செயல்கள்."
— SN 45.8
"And what is right action? Abstaining from taking life, abstaining from stealing, abstaining from unchastity. This is called right action."
— SN 45.8
நற்செயல் (பாலி: சம்மா கம்மந்த)
இன்று ஒருவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர, ‘மனம் குழப்பத்திலும், சிக்கலான நிலையிலும் இருக்கும் போது தியானம் செய்ய அமர்வது நேரத்தை வீணடிப்பதாகும்’ என்றார்.
ஆனால் அவர் சொன்னது சரியான கூற்று அல்ல. அப்படிப்பட்ட நிலையிலும் நாம் தியானம் செய்வதால் குறைந்தது குழப்பதில் உள்ள மனம் எப்படிப் பட்டது என்பதையாவது அறிந்து கொள்ளலாம். ஏன், காலப் போக்கில் அப்படிப்பட்ட நிலையில் உள்ள மனம் உங்களைச் சலிப்படையச் செய்யலாம். பின் அதைச் சீர்ப்படுத்த எதையாவது செய்ய வேண்டும் என்று தோன்றலாம். எனது அனுபவத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்துக்குத் தியானம் செய்ய வேண்டும் என்று உறுதியாக முடிவெடுப்பது, நமது பயிற்சிக்கு ஒரு எழுச்சி ஏற்படுத்தும். ஆரம்பத்தில் தியானம் செய்வது கடினமாக இருக்கலாம். உங்களுக்கு அது பிடிக்காத அனுபவமாகவும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து தினமும் பயிற்சி செய்து வந்தால், 'சரி எப்படியும் பயிற்சியில் உட்காருவதென்று முடிவெடுத்து விட்டோம், அதைச் சரியாகச் செய்து விடுவதே நல்லது,' என்று நினைப்போம். இப்படித்தான் நழுவிக் கொண்டு ஓடும் மனத்தைக் கட்டுப் படுத்திப் பயிற்சியில் சிக்க வைக்க வேண்டும். பின் அது நம் வழிக்கு வந்து விடும்.
மேலும், நாம் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருக்கையில் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்வதில்லை. தவறான பேச்சிலும், தவறான செயலிலும், தவறான தொழிலிலும் ஈடுபடுவதில்லை. இவையெல்லாம் ஒரு சாதாரண விஷயம் இல்லை. எனவே குறைந்த பட்சம் நாம் யாருக்கும் தீமையேதும் செய்யாமல் இருக்கின்றோம்.
நற்செயல் பற்றிய போதனைகள்: இங்கு தியானம் செய்ய அமர்ந்திருக்கும் போது எவரும் யாரையும் கொலை செய்வதில்லை, யாரும் எதையும் திருடுவதில்லை, யாரும் தவறான பாலியல் உறவு கொள்வதில்லை - இவற்றை யாராவது மனதில் கற்பனை செய்து கொண்டிருக்கலாமேயொழியச் செயலில் செய்வதில்லை. நற்செயல் ஏன் மார்க்கத்தின் ஒருபகுதியாக இருக்கின்றது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது நற்காட்சி மற்றும் மனவுறுதியிலிருந்து தோன்றியது. உங்கள் செயல் மனத்தாலும், பேச்சாலும், நடத்தையாலும் தூய்மையாக இருப்பது மிக முக்கியம் என்பதை உணர்கின்றீர்கள். உங்களுக்கும், பிறருக்கும் தீமை உண்டாக்க விரும்புவதில்லை.
இந்த மூன்று செயல்களைச் செய்தால், அவை எப்போதும் தீமையே பயக்கும் என்று புத்தர் கூறினார். எனவே இம்மூன்று வகையான செயல்களும் ஐந்து ஒழுக்கங்களில் இடம் பெறுகின்றன. அதாவது எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்கள்:
1. யாரையும் கொல்லக் கூடாது. அதாவது கண்ணுக்குத் தெரியும் எந்த உயிரையும் கொல்லக் கூடாது.
2. எதையும் திருடக் கூடாது.
3. தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடக் கூடாது.
இவை நீங்களாகவே எடுத்துக் கொள்ளும் சபதங்கள். நற்செயலை நல்ல செயல்கள் என்று சொல்வதற்கு காரணம் அவை திறமையான செயல்கள் என்பதால் தான். உங்களுக்கு நீங்கள் தீமை செய்து கொள்ளவில்லை யென்றால் மற்றவருக்கும் தீமை செய்ய மாட்டீர்கள். அதனால் அவர்கள் பயன் பெறுவார்கள், நீங்களும் பயன் பெறுவீர்கள். தியானம் செய்வதும் சிறப்படையும். மேலும் மனதில் தேவையில்லா எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை. ஏனென்றால் இச்செயல்களைச் செய்யப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு விட்டீர்கள். அவற்றைச் செய்ய முடியாதபோது அவற்றைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும்? இவ்வாறு நாம் ஒரு சுவரை எழுப்பி விடுகிறோம். பொதுவாகச் சுவர் என்றால் அதை ஒரு தடையாகவே நினைக்கத் தோன்றும். ஆனால் இங்கு சுவர் என்பது ஒரு பாதுகாப்பு.
நற்செயல்களைத் தகர்க்க மனம் பல சுலபமான வழிகளில் நம்மிடம் நியாயம் பேசும். சீலங்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருப்பதற்குக் காரணம், நம் மனம் அவற்றை முறிக்கக் காரணம் தேடும் போது சீலங்கள் முக்கியமானதாகின்றன. உங்கள் உயிர் ஆபத்திலிருக்கும் போதும், உங்கள் அன்புக்குரியவர்களின் உயிர் ஆபத்திலிருக்கும் போதும் நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது, 'கொல்லாதே!' ஆபத்தை நீக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - கொல்வதைத்தவிர. அதுபோலவே மற்ற சீலங்களையும் அணுக வேண்டும்.
இத்தகைய தவறான செயல்கள் கிலேசங்களோடு சம்பந்தப் பட்டவை. புத்தர் கூறியது போல கிலேசங்கள் வலுப்பெற்று இருக்கும் போதும், புலன் இன்பங்களில் ஈடுபடத் தோன்றும் போதும் அல்லது துவேஷ எண்ணங்கள் தோன்றும் போதும், அமைதியில்லாமல் அல்லது கவலையோடு இருக்கும்போதும், இவை யெல்லாம் திறமையற்ற எண்ணங்கள் என்பதை நாம் அறிவதில்லை. இது ஒரு தலையாய பிரச்சனை. சீலங்கள் இருப்பதால் இச்செயல்கள் எந்நேரத்திலும் எங்கும் திறமையற்றவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆகவே நீங்கள் அச்செயல்களைச் செய்யாமல் தடுத்து விடுகிறது. நீங்களே, 'இது போன்ற நடத்தைக்கு இடமே இல்லை' என்று உங்களுக்கு ஒரு சிவப்புக் கொடி காட்டிக் கொள்கின்றீர்கள்.
அதே சமயம் நல்வாய்மையைப் போலவே நற்செயலையும் தியானத்துக்கான ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு நிலையில் அவை கிலேசங்களைக் குறிக்கின்றன. நீங்கள் நினைப்பது, 'சரி. கொல்வது கூடாது.' இது நேரடியாகத் துவேஷம் என்ற கிலேசத்தைக் குறிக்கிறது. திருடக் கூடாது. தவறான பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது. இவை நமது நோக்கத்தைப் பொருத்துத் துவஷத்தை அல்லது புலன் இன்பங்களை நாடும் கிலேசங்களைக் குறிக்கலாம். பொருட்களின் மீது ஆசைப் படுவதால் அதைத் திருடலாம். அல்லது ஒருவர் மீது உள்ள கோபத்தின் காரணமாகத் திருடலாம். திருடுவதால் அவர்கள் அந்தப் பொருளை இழந்து விட்டுத் தவிப்பார்கள் என்ற நோக்கம். இது துவேஷம் என்ற கிலேசத்தைக் குறிக்கிறது. தவறான பாலியல் உறவும் பேராசை அல்லது துவேஷத்தின் காரணமாக இருக்கலாம். ஆகவே இதுவும் இரண்டு பெரிய கிலேசங்களைக் குறிக்கும். எனவே அங்கு நீங்கள் போகக் கூடாது என்று நினைவூட்டுகிறது. மனம் ஒருமுகப்பட வேண்டுமென்றால் புலன் ஆசை களுக்கும், திறமையற்ற மன நிலைகளுக்கும் அப்பால் போக வேண்டும்.
மேலும் அஜான் லீ நல்வாய்மை மற்றும் நற்செயல் சம்பந்தப்பட்ட போதனைகளை வேறொரு விதத்திலும் நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். கொலையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நன்மையைக் கொல்லாதீர்கள் என்கிறார். உங்கள் நன்மை எங்கிருந்து வந்தது? விவேகத்தினால் உண்டானது தான் நன்மை. புத்தர் விவேகமற்று இருப்பது இறப்பதற்குச் சமம் என்றார். விவேகமற்று இருப்பதால் உங்களையே கொன்று விடுகின்றீர்கள். மனத்தின் நன்மையைக் கொன்று விடுகின்றீர்கள். இருக்கும் நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ‘நான் முயற்சி செய்யத் தேவையில்லை’ என்று நினைப்பது உங்களையே கொல்வதுபோல. பயிற்சியைக் கொன்று விடுகிறது. ஆகவே பயிற்சியைக் கொல்லாமல் இருக்க வேண்டும். உங்கள் நன்மையைக் கொன்றுவிட வேண்டாம். எந்நேரமும் விவேகத்தோடு இருக்க வேண்டும். நீங்கள் செய்யும் பயிற்சி முக்கியமானது என்ற நம்பிகை உங்களிடம் இருக்கவேண்டும். இன்னும் இவ்வளவு காலத்திற்குத் திறமையான செயல்களைச் செய்ய முடியும் என்று அறுதியிட்டுச் சொல்வது இயலாது. எனவே எவ்வளவுக்கெவ்வளவு திறமையான செயல்களை வளர்ர்த்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது அவற்றை இப்போதே செய்யவேண்டும்.
புத்தர் தமது சீடர்களுக்கு மரணத்தைப் பற்றி உணர்ந்திருப்பது (மரணாசத்தி) பயனுள்ள தியான முறை என்று அறிவுறுத்தினார். துறவிகள் ஒவ்வொருவரும் தாங்கள் இதனை எப்படி வளர்த்துக் கொண்டோம் என்பதைப் பற்றிப் பேசினார்கள். ஒரு துறவி தான் ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்ந்தால், அந்த ஒரு நாளில் புத்தரின் போதனைகளைப் பயின்று அதிலிருந்து மேலான நன்மைகளைப் பெறலாம் என்று நினைப்பதாகக் கூறினார். இன்னொருவர் தான் அடுத்த அரை நாளாவது உயிரோடு இருந்தால் அறத்தைப் பயின்று பயன் பெறலாம் என்ற எண்ணம் தனக்குத் தோன்றுவதாகவும் கூறினார். இவ்வாறே ஒவ்வொருவரும் கூற, மீதமிருந்த இருவரில் ஒருவர், 'நான் அடுத்த ஒரு உள் மூச்சும், வெளி மூச்சும் எடுக்கும் காலக்கட்டத்துக்கு மட்டுமே வாழ்ந்தால், அந்த நேரத்தில் திறமையாக நடந்து கொண்டு பயன் பெறலாம்,' என்று நினைப்பதாகவும், மற்றவர், 'நான் உண்ணும்போது அடுத்த ஒரு கவளம் உணவை மென்று விழுங்கும் நேரம் உயிரோடு இருக்க விருப்பப் படுவதாகவும், அந்த நேரத்தில் பயனுள்ள விளைவுகளைப் பெற விரும்புவதாகவும் கூறினார். அனைவரின் பேச்சுக்களையும் கேட்ட புத்தர், ‘இறுதியில் பேசிய இருவரும் தான் விவேகத்துடன் இருப்பவர்கள் என்று கூறினார்.
சரி, இதோ இங்கே நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். இதோ இப்போது விடும் மூச்சோடு இருந்து திறமையை வளர்க்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இப்படித்தான் உங்கள் தியானத்தைக் கொல்லாமல் இருக்கவேண்டும். உங்கள் நன்மையைக் கொல்லாமல் இருக்க வேண்டும்.
திருடுவது பற்றி அஜான் லீ கூறுகையில், அது மற்றவர் விஷயங்களைத் திருடுவது சம்பந்தப்பட்டது என்கிறார். 'அவன் சரியில்லை, இவன் மோசக்காரன்,' என்று நாம் நினைப்பதும் திருடுவதற்குச் சமம் தான் என்கிறார். அவர்கள் அனுமதியைக் கேட்டு, அவர்கள் தீயகுணங்களைப் பற்றி நாம் நினைக்கவில்லையே? அதனால் இதுவும் அவர்கள் பொருளைத் திருடு வதற்குச் சமம் என்கிறார். நீங்கள் எதைத் திருடுகின்றீர்கள்? அவர்கள் குப்பையைத் திருடுகின்றீர்கள். இன்னொருவர் பொருளைத் திருட வேண்டுமென்றால் அவர்களது நற்குணங்களைத் திருடுங்கள். உங்களுக்குச் சற்று ஊக்கமாவது கிடைக்கும்.
புத்தர் ஒரு உவமானம் தருகிறார்: நீண்ட பாலைவனத்தைக் கடந்து ஒருவன் வருகிறான். களைப்படைந்து, வெப்பத்தினால் நடுங்கிக்கொண்டும், தாகத்தால் தவித்துக் கொண்டும் வருகிறான். வழியில் ஒரு மாட்டின் கால்பதிவில் கொஞ்சம் நீர் இருப்பதைக் காண்கிறான். அப்போது அவன் நினைப்பது, 'இதோ நான் களைப்போடும், நடுங்கிக் கொண்டும், தாகத்தால் தவித்துக் கொண்டும் இருக்கிறேன். எனக்கு இந்தத் தண்ணீர் தேவை. என்கைகளால் அள்ளி எடுக்க முயன்றால் நீர் கலங்கி விடும்.' என்ன செய்வது? அவன் மண்டியிட்டுக் குனிந்து, நீரை அந்த மாட்டுக் கால்பதிவிலிருந்து உறிஞ்சிக் குடிக்கின்றான். அது போலவே மற்றவருக்கு நாம் நன்மை செய்யும்போதும் அந்த அளவு முயற்சி நமக்குத் தேவைபடுகின்றது என்கிறார் புத்தர்.
மற்றவரது தீய குணங்களை மட்டுமே பார்க்க முடிந்தால், நன்மை செய்வதற்கான ஊக்கம் உங்களுக்குக் குறைந்துவிடும். மற்றவர்கள் அனைவரும் ஏமாற்றிக் கொண்டிருக்கும்வரை நானும் ஏமாற்றுவதில் தவறில்லை என்று நினைக்கின்றோம். சமுதாயத்தில் இப்படி நினைப்பவர்கள் ஏராளமானோர். அப்படி நினைப்பது உங்கள் நன்மையைக் குலைத்து விடும். ஆகவே மற்றவர் தீய பழக்கங்களைத் திருட வேண்டாம். மற்றவரின் நல்ல பழக்கங்களை நினைத்துக் கொள்ளுங்கள். புகழ்பெற்ற அஜான்களையும் (பௌத்த ஆச்சாரியர்கள்), உபாசிகா கீ (Upasika Kee - புகழ்பெற்ற பௌத்த இல்லறப் பெண்) நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயிற்சிக்கென உயிரையே கொடுத்தார்கள். அதனால் உலகம் பெரும் பலன் பெற்றது. நீங்களும் அப்படிச் செய்யலாம். அவர்களும் மனிதர்கள் தான். மனித சக்திக்கு அப்பால் அவர்கள் ஒன்றும் செய்துவிடவில்லை. அவர்களின் நற்பழக்கங்களை நினைக்கும் போது உங்களுடைய தற்போதைய பிரச்சனைகளை அவர்கள் எப்படிச் சமாளித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்படி உங்களை நீங்கள் ஊக்குவித்துக் கொள்ளலாம். அஜான் லீ சொன்னது போலத் திருட வேண்டு மென்றால் அவர்களது பொக்கிஷங்களைத் திருடுங்கள், குப்பையைத் திருட வேண்டாம். ஆனால் இறுதியில் திருடாமல் இருப்பதே நல்லது. அதற்கு உங்களை நீங்களே உக்குவிக்கக் கூடிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களிடம் உள்ள உபாயங்கள் எவை? உடலின் நான்கு இயல்புகள் உள்ளன (நிலம், நீர், நெருப்பு, காற்று). மூச்சு உள்ளது. நல்ல மனநிலைகள் உள்ளன. அவற்றை வளர்த்துக் கொள்ளலாம். இப்படி உங்கள் உபாயங்களை வளர்த்துக் கொண்டால் போதுமான செல்வம் உங்களுக்குள்ளேயே இருப்பதை உணர்வீர்கள். பின் மற்றவர்களிடத்திலிருந்து நல்லதோ, கெட்டதோ எதையும் நீங்கள் திருட வேண்டிய அவசியமில்லை.
'காமேசு' என்று சீலங்களில் சொல்வது தவறான புலன் இன்பங்கள் சம்பந்தப்பட்டது. தியானம் செய்து கொண்டிருக்கும் போது, மனம் அந்தப் பக்கமே போகாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு புலன் ஆசையும் ஒரு தீய விளைவுடனேயே வருகிறது. புத்தர் இது சம்பந்தமாகப் பல உவமானங்கள் கூறி உள்ளார்:
இறைச்சி இல்லாத எலும்பை நாய் கடிப்பது போல.
தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு காற்றுக்கு எதிர்த் திசையில் ஓடுவது போல. அதை வீசி எறியா விட்டால் தீப்பிழம்பு உங்கள் முகத்தை நிச்சயம் சுட்டு விடும்.
கடன் வாங்கிய பொருளைப் பயன்படுத்துவது போல. தவறான புலன் ஆசைகள் என்பது மற்றவர் கொடுத்த இன்பம். அவர்கள் எச்சமயத்திலும் அதைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
மரத்தில் ஏறிப் பழங்களைப் பறிப்பது போல. பழம் பறிக்க மற்றொருவர் வருகிறார். அவருக்கு மரம் ஏறத் தெரியாது. ஆனால் அவரிடம் கோடரி இருக்கிறது. மரத்தை வெட்ட முற்படுகிறார். முதலாமவர் உடனே கீழே இறங்காவிட்டால் அவருக்குப் படுகாயம் உண்டாவது திண்ணம்.
கத்திமுனையில் உள்ள ஒரு சொட்டுத் தேனை நக்குவது போல.
ஆகவே வேறொருவர் வந்து உங்களுக்கு இன்பம் தரும் பொருளை எளிதில் எடுத்துக் கொள்ளலாம். புலன் இன்பங்களில் மூழ்குவது உங்களை நீங்களே ஆபத்தான நிலைக்கு உள்ளாக்குவதற்குச் சமம். சில சமயம் ஜான (Jhana - ஆழமான மன அமைதி) நிலைகளின் மீது பற்று உண்டாவதன் ஆபத்தைப் பற்றிச் சிலர் எச்சரிப்பார்கள். அது மிகவும் மனத்தை வசப்படுத்துவதால் ஞானம் பெறும் அடுத்த படிக்குச் செல்வதற்குக் கூடச் சிலர் விரும்புவதில்லை. திரிபிடகத்திலும் ஓரிரு இடங்களில் ஜான நிலையின் மீது உள்ள பற்றின் அபாயத்தைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இந்த அபாயம் புலன் இன்பங்களின் மீது கொள்ளும் பற்றைவிட மிகக் குறைவானதே. புலன் ஆசைகளின் காரணமாகவே உலகில் போர்களும், மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும், தங்கள் செயல்களால் சாவுக்கு அவர்களே வழி வகுத்துக் கொள்வதும் நிகழ்கின்றன என்று புத்தர் கூறினார். இதனாலேயே திருட்டும், ஏமாற்றலும் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் புலன் ஆசைகள் மீதான மோகமே காரணம். எனக்குத் தெரிந்து ஜான நிலையில் உள்ள ஆனந்தத்தின் காரணமாக ஐந்து ஒழுக்கங்களை எவரும் மீறியதாகக் கேள்விப்பட்டதே இல்லை. ஆகவே ஜான நிலை ஒரு பாதுகாப்பான இடம். புலன் இன்பங்களில் மூழ்கி இருப்பது அபாயகரமான இடம். இதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். நற்செயலைக் கடைப் பிடிப்பதால் நாம் நமது உள்ளத்துச் செல்வங்களை மேலும் வளர்த்துக் கொள்கிறோம். பின் யாரிடமும் எதையும் திருடவேண்டியதில்லை. புறத்தில் மகிழ்ச்சியைத் தேடுவதில் உள்ள அபாயத்தையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டியதில்லை.
இப்படி விவேகத்துடன் செயற்பட்டால் நமது நன்மையை உயிர்ப்போடு வைத்திருக்கலாம். உங்களிடம் உள்ள பெரும் செல்வம் அதுவே.
* * * * * *
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode