நல்லூற்றம் (சம்மாசங்கப்ப)
Right Intention (Samma Sankappa)
நல்லூற்றம் மார்க்கத்தின் இரண்டாம் பிரிவாகும். பாலி மொழியில் இது சம்மாசங்கப்ப எனப்படும். 'சங்கப்ப' என்றால் கருத்து, நோக்கம், தீர்மானம், ஊற்றம் என்று பொருள்படும். நற்காட்சியின் பின் இயற்கையாக நல்லூற்றம் தொடர்கிறது. நற்காட்சி இருக்கும் போது வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்கிறோம். அதன் காரணமாக நமது வாழ்க்கையின் நோக்கங்களும், விருப்பங்களும் மாறி விடுகின்றன. ஆகவே நமது மனமும் தவறான விருப்பங்களைத் தவிர்த்து, சரியான விருப்பங்களைத் தேர்ந்து மாற்றமடைகிறது.
இந்தப் பிரிவைப் பகுத்தாய்ந்த புத்தர், மூன்று விதமான நல்லூற்றம் இருப்பதாகக் கூறுகிறார்:
1. துறவு, பற்று நீங்குதல், கைவிடுகை பற்றிய நோக்கம்.
2. வெறுப்புக் கொள்ளாமல் இருத்தல் அல்லது நட்புணர்வோடு இருத்தல் என்ற நோக்கம்.
3. தீமை செய்யாமல் இருத்தல் அல்லது கருணையோடு இருத்தல் என்ற நோக்கம்.
இவை மூன்றும் தவறான நோக்கங்களுக்கு எதிர்மறையானவை.
தவறான நோக்கங்களாவன:
1. புலன் ஆசைகள் மீதுள்ள பற்று,
2. வெறுப்புக் கொள்வது
3. தீங்கு செய்வது.
மேலே சொன்னது போல, நல்லூற்றம் என்பது இயற்கையாகவே நற்காட்சியிலிருந்து தோன்றுவது. நற்காட்சியைப் பற்றித் தெளிந்தபின், துக்கம் உள்ளது என்பதை அறிகிறோம். அதனால் பற்றுக்கள் மீதுள்ள விருப்பம் தணிகிறது. இன்பம், செல்வம், ஆதிக்கம், புகழ் போன்றவற்றின் மீது உள்ள விருப்பங்களைத் துறக்கின்றோம். அவற்றின் மீதுள்ள ஆசையை நாம் முயன்று அடக்க வேண்டியதில்லை. தானாகவே அந்த ஆசை விடுபட்டு விடுகிறது. நான்கு மேன்மையான உண்மைகள் என்ற கண்ணாடியின் மூலம் மற்ற உயிரினங்களைப் பார்க்கும் போது மற்றவர்களும் துக்கத்தில் சிக்கியிருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கருத்தினால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது அவர்களிடம் ஐக்கியம் உண்டாகிறது. இதன் காரணமாக நட்புணர்வும், கருணையும் பிறக்கிறது. இந்தப் பண்புகள் அனைத்தும் வளர வளர வெறுப்பையும், துவேஷத்தையும் கைவிடவும், வன்முறையையும் தீங்கிழைப்பதையும் தவிர்க்கவும் நாம் விரும்புகிறோம்.
இந்த இரண்டாம் பிரிவாகிய நல்லூற்றம் திறமையற்ற வேர்களான பேராசை மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்கிறது.
அடுத்துள்ள நல்வாய்மை, நற்செயல் மற்றும் நல்வாழ்க்கை என்ற மூன்று பிரிவுகளும் நல்லூற்றத்தினைச் செயற்படுத்த உதவுகின்றன.