அங்குலிமால சூத்திரம்
அங்குலிமால சூத்திரம்
அங்குலிமாலரைப் பற்றி.
பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வண. தனிசாரோ பிக்கு.
Angulimala Sutta: About Angulimala MN 86
translated from the Pali by Thanissaro Bhikkhu.
ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் எழுந்தருளியிருந்ததாகக் கேள்வியுற்றேன். அச்சமயம் பசேனதி மன்னன் இராஜ்ஜியத்தில் அங்குலிமாலன் என்ற கொடிய கொள்ளைக்காரன் இருந்தான்: அவன் கொடுமை மிக்கவன், இரத்தக்கறை படிந்தவன், கொலை செய்வதற்கும், பிறரை அழிப்பதற்குமே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். உயிரினங்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதவன். கிராமங்களைக் கிராமமற்றதாகவும், ஊர்களை ஊரற்றதாகவும், குடியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளைக் குடியில்லா நாட்டுப்புறப் பகுதிகளாகவும் ஆக்கியவன். பல உயிர்களைக் கொலைசெய்த அவன் கொலை செய்யப் பட்டவர்களின் கட்டைவிரல்களைக் (அங்குலி) கொண்ட மாலையை (மாலா) அணிந்திருந்தான்.
ஒரு நாள் அதி காலை பகவர் தம் சீவர ஆடைகளைச் சரி செய்து மேல் ஆடையையும், பிச்சாபாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்திக்கு உணவேற்கச் சென்றார். சாவத்தியில் சஞ்சரித்துப் பெற்ற உணவை உண்ட பின் திரும்ப அவர் இருப்பிடம் வந்து அதைச் சற்று ஒழுங்கு படுத்தினார். பின் மேலாடையையும் பாத்திரத்தையும் சுமந்தவராக அங்குலிமாலன் தங்கியிருந்த பகுதிக்குச் செல்லும் சாலை வழியாக நடக்கலானார்.
மாட்டிடையரும், ஆட்டிடையரும், குடியானவரும் அவர் அங்குலிமாலன் தங்கியிருக்கும் பகுதிக்குச் செல்லும் சாலை வழியாகப் போவதைக் கண்டு அவரிடம், "தியானியே, அந்தச் சாலை வழியாகப் போகாதீர். ஏனென்றால் அந்த சாலையில் அங்குலிமாலன் இருக்கின்றான்: கொடுமை மிக்கவன், இரத்தக்கரை படிந்தவன், கொலை செய்வதற்கும், அழிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். உயிரினங்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதவன். கிராமங்களைக் கிராமமற்றதாகவும், ஊர்களை ஊரற்றதாகவும், குடியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளைக் குடியில்லா நாட்டுப்புறப் பகுதிகளாகவும் ஆக்கியுள்ளான். பல உயிர்களைக் கொலை செய்த அவன் கொலை செய்தவர்களின் கட்டை விரல்களைக் கொண்ட மாலையை அணிந்துள்ளான். பத்து, இருபது, முப்பது, நாற்பது பேர் சேர்ந்த கூட்டமும் அந்தச் சாலை வழியே சென்று அங்குலிமாலன் கையில் சிக்கியுள்ளனர்." என்று கூறினர். இதைக் கேட்டும் பகவர் பதில் கூறாமல் மௌனமாக, தொடர்ந்து அந்தச் சாலை வழியாக நடந்தார்.
இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் மாட்டிடையரும், ஆட்டிடையரும், குடியானவரும் பகவரிடம், "துறவியே, அந்தச் சாலை வழியாகப் போகாதீர். பத்து, இருபது, முப்பது, நாற்பது பேர் சேர்ந்த கூட்டமும், அந்தச் சாலை வழியே சென்று அங்குலிமாலன் கையில் சிக்கியுள்ளனர்." என வற்புறுத்தியும் பகவர் மௌனமாகத் தொடர்ந்து அந்தச் சாலை வழியாக நடந்தார்.
தூரத்திலிருந்து பகவர் வருவதைக் கண்ட அங்குலிமாலனுக்கு இந்த எண்ணம் தோன்றியது: "என்ன அதிசயம்! வியப்பாக இருக்கிறதே! பத்து, இருபது, முப்பது, நாற்பது பேர் சேர்ந்த கூட்டமும், இந்தச் சாலை வழியே வந்து என்னிடம் சிக்கியுள்ளனர். இருந்தும் இந்தத் தியானி தனியாக, துணைக்கு யாரும் இல்லாமல் என்னைத் தாக்க வருகிறாரே? அவரை ஏன் கொல்லக் கூடாது?" எனவே அங்குலிமாலன் தன் வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, வில்லையும் அம்புக் கூட்டையும் மாட்டிக் கொண்டு பகவரின் பின் தொடர்ந்தான்.
பின் பகவர் தன் அரிய சித்த வித்தை ஒன்றைக் காட்டினார். அது என்னவெனில், பகவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தாலும், அங்குலிமாலன் தன் சக்தி அனைத்தையும் திரட்டிப் பயன்படுத்தியும் அவரைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அங்குலிமாலனுக்கு இந்த எண்ணம் தோன்றியது: "என்ன அதிசயம்! வியப்பாக இருக்கிறதே! முன்பு நான் வேகமாக ஓடும் யானையையும், வேகமாக ஓடும் குதிரையையும், வேகமாகச் செல்லும் இரதத்தையும், வேகமாக ஓடும் மான்களையும் கூடத் துரத்திப் பிடித்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் முழு முயற்சி செய்து ஓடியும் சாதாரண வேகத்தில் நடக்கும் இந்தத் தியானியைப் பிடிக்க முடியவில்லையே." எனவே அவன் ஓடுவதை நிறுத்தி, பகவரை நோக்கிக் கூச்சலிட்டான், "நில், தியானியே! நில்!"
"நான் நின்று விட்டேன் அங்குலிமாலனே. நீ நில்."
அங்குலிமாலனுக்கு இந்த எண்ணம் தோன்றியது: "இந்தச் சாக்கிய தியானிகள் உண்மையே பேசுபவர்கள், உண்மையை உறுதிப்ப டுத்துபவர்கள். இருந்தும் இந்தத் தியானி தான் நடந்து கொண்டிருக்கையில், 'நான் நின்று விட்டேன், அங்குலிமாலனே. நீ நில்,' என்கிறார். அவரை இது பற்றிக் கேட்க வேண்டும்."
எனவே அங்குலிமாலன் என்ற கொள்ளைக்காரன் பாடல் வடிவில் பகவரிடம் கேட்டான்.:
[அங்குலிமாலன்]
"தியானியே, நீர் நடந்து கொண்டிருக்கையில்,
'நான் நின்று விட்டேன்,' என்கின்றீர்.
ஆனால் நான் நின்ற பிறகும்
நான் நிற்கவில்லை என்கின்றீர்.
இதன் பொருள் என்ன?
நீர் எப்படி நின்றவராவீர்?
நான் எப்படி நிற்காதவனாவேன்?"
[புத்தர்]
"நான் முடிவாக நிறுத்தி விட்டேன்,
அங்குலிமாலனே
எல்லா உயிர்களிடத்தும்
தீங்கு செய்வதை விட்டு விட்டேன்.
ஆனால் நீயோ மற்ற உயிரினங்களிடத்தில்
வரையரையின்றி நடந்து கொள்கிறாய்.
அதனால் தான் நான் நின்று விட்டேன்,
நீ நிற்கவில்லை என்கிறேன்."
[அங்குலிமாலன்]
"கடைசியாக ஒரு போற்றப்பட்ட தீர்க்கத்தரிசி
எனக்காக
இந்தப் பெரும் வனத்திற்கு வந்திருக்கிறார்.
தம்மத்துக்கு ஒத்திருக்கும் வகையில்
நீங்கள் கூறியதைக் கேட்டபின்
நான் கேடு செய்வதை
நிறுத்தி நடந்து கொள்வேன்."
இவ்வாறு கூறிய அந்தக் கொள்ளையன்
தன் வாளையும், ஆயுதங்களையும்
ஒரு செங்குத்தான பாறையிலிருந்து
அகல பாதளக் குழியில் வீசி எறிந்தான்.
பின் அந்தக் கொள்ளையன்
ததாகதரின் திருவடிகளைத் தொழுது
அப்போதே துறவறம் மேற்கொள்ள அனுமதி கேட்டான்.
அந்த விழிப்புற்றவர்,
கருணையுள்ள பெரும் தீர்க்கதரிசி,
தேவர்களும் அடங்கிய உலகிற்கு ஆசான்,
அவனிடம்:
"வாரும் பிக்குவே," என்றழைத்தார்.
அந்த வார்த்தைகளே அவனைச் சங்கத்தில்
ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம்.
பின் பகவர், போற்றுதற்குரிய அங்குலிமாலர் அவருக்குப் பணிவிடை செய்யும் துறவியாக அவருடன் இருக்க, சாவத்தி நோக்கிச் சென்றார். படிப்படியாகப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பகவர் சாவத்தி சென்றடைந்தார். பின் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் எழுந்தருளியிருந்தார்.
அச்சமயத்தில் கோசலத்தில் பசேனதி மன்னனின் உட்புற அரண்மனையின் நுழைவாயிலில் ஒரு பெருங்கூட்டம் கூச்சலிட்டபடி கூடியிருந்தனர். அவர்கள் மன்னனுக்குக் கேட்கும்படி "உங்கள் இராஜ்ஜியத்தில் அங்குலிமாலன் என்ற பெயர் கொண்ட கொள்ளைக்காரன் ஒருவன் இருக்கின்றான். ஐயா! அவன் கொடுமை மிக்கவன், இரத்தக்கறை படிந்தவன், கொலை செய்வதற்கும் அழிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், உயிரினங்களின் மேல் கொஞ்சமும் கருணை காட்டாதவன். கிராமங்களைக் கிராம மற்றதாகவும், ஊர்களை ஊரற்றதாகவும், குடியுள்ள நாட்டுப்புறப் பகுதிகளை குடியில்லா நாட்டுப்புறப் பகுதிகளாகவும் ஆக்குகிறான். பல உயிர்களை கொலை செய்த அவன், கொலை செய்யப்பட்டவரின் கட்டைவிரல்களைக் கொண்ட மாலையை அணிந்திருக்கிறான். மன்னர் அவனை அடக்கி, ஒடுக்க வேண்டும்!"
பின் அரசன் பசேனதி கோசலன் சுமார் ஐநூறு குதிரைப் படையினருடன், சாவத்தியிலிந்து புறப்பட்டு அனந்தபிண்டிகரின் விஹாரையைச் சென்றடைந்தான். இரதங்கள் போகக்கூடிய தூரம்வரை சென்றபின், இரதத்திலிருந்து இறங்கி, பகவர் இருப்பிடம் நோக்கிக் கால்நடையாகச் சென்றான். பின், அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தான். அப்போது, பகவர் அரசனிடம், "என்ன மன்னரே? மகத நாட்டுச் சேனிய பிம்பிசார மன்னன் உங்களைத் தூண்டுகிறாரா? அல்லது வைசாலி நாட்டு லிச்சாவியர்களோ வேறு எதேனும் பகையுள்ள மன்னனோ உங்களைத் தூண்டு கின்றார்களா?"
"அண்ணலே, இல்லை, இல்லை. மகத நாட்டுச் சேனிய பிம்பிசார மன்னன் என்னைத் தூண்டவில்லை. வைசாலி நாட்டு லிச்சாவியர்களும், வேறு எந்தப் பகை மன்னனும் என்னைத் தூண்டி விடவில்லை. எனது இராஜ்ஜியத்தில் அங்குலிமாலன் என்ற கொள்ளைக்காரன் இருக்கிறான்: கொடுமை மிக்கவன், இரத்தக்கறை படிந்தவன், கொலை செய்வதற்கும், மக்களை அழிப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். உயிரினங்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதவன். கிராமங்களைக் கிராமமற்றதாகவும், ஊர்களை ஊரற்றதாகவும், குடியுள்ள நாட்டுபுறப் பகுதிகளைக் குடியில்லா நாட்டுப்புறப் பகுதிகளாகவும் ஆக்குகிறான். பல உயிர்களைக் கொலை செய்த அவன் கொலை செய்யப்பட்டவரின் கட்டைவிரல்களைக் கொண்ட மாலையை அணிந்திருக்கிறான். நான் அவனை தீர்த்துக் கட்ட வேண்டும்!"
"மாமன்னனே, அந்த அங்குலிமாலனை தலை மற்றும் தாடி முடிகளைக் களைந்தவனாக, சீவர ஆடையை உடுத்தியவனாக, வீடு துறந்த துறவியாக, உயிர்களைக் கொல்வதை நிறுத்தி விட்டு, கொடுக்காத பொருட்களை எடுக்காமல், பொய் பேசாமல், தினம் ஒரு வேளை மட்டுமே உண்ணும் புனித வாழ்க்கை வாழ்ந்து, ஒழுக்கமும், பண்புமுடையவனாகக் கண்டீர்களென்றால் அவனை என்ன செய்வீர்கள்?"
"அண்ணலே, நாங்கள் அவரைப் பணிவோம், அல்லது அவரை வரவேற்க எழுவோம் அல்லது அவருக்கு உட்கார இடம் கொடுப்போம், அல்லது உடுத்த ஆடைகளையும், உண்ண உணவும், தங்க இருப்பிடமும், பிணி உண்டானால் குணப்படுத்த மருந்தும் தருவோம்; அல்லது அவரைப் பாதுகாக்கச் சட்டரீதியான ஒரு காவலனை நியமிப்போம். ஆனால் அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட தீயவனிடத்தில் எப்படி இத்தகைய பண்பும் அடக்கமும் இருக்க முடியும்?"
அப்போது போற்றுதற்குரிய அங்குலிமாலர் பகவரின் மிக அருகிலேயே அவரின் பின்புறமாக அமர்ந்திருந்தார். பகவர் தனது வலதுகையால் சுட்டிக் காட்டி, அரசன் பசேனதி கோசலனிடம், "மாமன்னனே, இவர் தான் அங்குலிமாலன்." என்று கூறினார். அரசன் பசேனதி கோசலன் பயத்தால், பீதியடைந்து போனான். அவன் மயிர் சிலிர்த்தது. பகவர் மன்னனின் அச்சத்தையும் மயிர்ச்சிலிர்ப்பையும் கண்டு அவனிடம், "பயம் கொள்ள வேண்டாம் மன்னனே. பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு அவனிடமிருந்து இப்போது எந்த ஆபத்தும் இல்லை."
மன்னனின் பயமும், பீதியும், மயிர்ச்சிலிர்ப்பும் அடங்கியது. அவன் அங்குலிமாலர் அருகில் சென்று, "அய்யா, நீங்கள் தான் அங்குலிமாலனா?" என்று கேட்டான்.
"ஆம், மாமன்னனே."
"உங்களது தந்தையின் குலமென்ன? உங்கள் தாயின் குலமென்ன?"
"மாமன்னனே, எனது தந்தை ஒரு கக்கர், எனது தாய் மந்தானியர்."
"அப்படியானால் ஐயா, கக்கன் - மந்தானி புத்திரரே (புத்திரர் - மகன்) சந்தோஷப்படுங்கள் (இங்கு தங்க). உங்களின் தேவைகளான உடுப்புக்கும், உணவுக்கும், இருப்பிடத்திற்கும், நோயுண்டானால் தேவையான மருந்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன்."
ஆனால் அப்போது போற்றுதற்குரிய அங்குலிமாலர் காடுகளில் வசிப்பவராகவும், ஊருக்குள் திரிந்து உணவுப் பிச்சை கேட்பவராகவும், பிறருக்குப் பயனற்றது என வீசப்பட்ட துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூன்றடுக்கு ஆடைகளை மட்டும் அணிந்தவராக இருந்தாரென்பதால் அவர் அரசன் பசேனதி கோசலனிடம், "மாமன்னனே, போதும். எனது தேவைகள் நிறைவடைந்து விட்டன."
அரசன் பசேனதி கோசலன் பகவரிடம் சென்று அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தான். பின் பகவரிடம், "வியப்பாக இருக்கிறது அண்ணலே! பகவர், சாந்தப்படாதவரைச் சாந்தப்படுத்தி, அமைதி இல்லாதவரை அமைதியாக்கி, கட்டுப் பட்டவரை விடுவித்துள்ளீர்கள். எங்கள் கூர்மையான மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் அடக்க முடியாதவரையும் பகவர் கூர்மையான மற்றும் மழுங்கிய ஆயுதங்கள் இல்லாமல் அடக்கி விட்டீர்கள். இப்போது அண்ணலே, நாங்கள் புறப்பட வேண்டும். பல பொறுப்புகள் எங்களுக்குக் காத்திருக்கின்றன."
"அப்படியானால் மாமன்னரே, நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தைக் கவனியுங்கள்."
பின் அரசன் பசேனதி கோசலன் தன் இருக்கையிலிருந்து எழுந்து, பகவரை வணங்கி அவரை தன் வலது புறமாக வைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்.
போற்றுதற்குரிய அங்குலிமாலர், அதிகாலையில் தம் சீவர ஆடைகளைச் சரி செய்தபின் மேல் ஆடையையும் பிச்சா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்திக்கு உணவேற்கச் சென்றார். வீடு வீடாக உணவுக்குப் பிச்சை எடுக்கையில் ஒரு வீட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்தில் உண்டான பிரச்சனையின் காரணமாக வேதனையில் துன்புறுவதைக் கண்டார் (breech birth - குழந்தை வயிற்றில் தலை கீழாக இருப்பதற்குப் பதில் மாறி இருப்பதால் உண்டாகும் துன்பம்) . இதைக் கண்ட அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது: "உயிரினங்கள் எப்படியெல்லாம் துன்புறுகின்றனர்! உயிரினங்கள் எப்படியெல்லாம் துன்புறுகின்றனர்! ".
பின் சாவத்தியில் சஞ்சரித்துப் பெற்ற உணவை உண்ட பின் திரும்பி வந்தவர் புத்தரிடம் சென்று அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். பகவரிடம், "அண்ணலே காலையில் சீவர ஆடைகளைச் சரிசெய்து மேல் ஆடையையும் பிச்சாபாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்திக்கு உணவேற்கச் சென்றிருந்தேன். வீடுவீடாகச் செல்கையில் ஒரு பெண் சிக்கலான பிரசவத்தினால் துன்புறுவதைக்கண்டேன். அவளைப் பார்த்து எனக்கு இந்த எண்ணம் தோன்றியது: 'உயிரினங்கள் எப்படியெல்லாம் துன்புறுகின்றனர்! உயிரினங்கள் எப்படியெல்லாம் துன்புறுகின்றனர்!'"
"அப்படியானால் அங்குலிமாலா, நீ அங்கு சென்று, 'தங்கையே, நான் பிறந்ததிலிருந்து மனதறிய ஒரு உயிரையும் கொன்றதில்லை. இந்த வாய்மையின் காரணமாக நீ நன்றாக இருப்பாயாக! உனது வயிற்றில் உள்ள குழந்தையும் நன்றாக இருக்குமாக!' என்று வாழ்த்திவிட்டு வா. என்று பகவர் கூறினார்.
"ஆனால், அண்ணலே, என்னைப் பொறுத்தவரைக்கும் அது பொய்யாகாதா? ஏனென்றால் நான் மனம் அறிந்து பல உயிர்களைக் கொன்றிருக்கின்றேனே."
"அப்படியானால் அங்குலிமாலா, நீ அங்கு சென்று, 'தங்கையே, நான் மேன்மையான பிறப்பெடுத்ததிலிருந்து (துறவறம் ஏற்றதிலிருந்து) மனம் அறிய ஒரு உயிரையும் கொன்றதில்லை. இந்த வாய்மையின் காரணமாக நீ நன்றாக இருப்பாயாக! உனது வயிற்றில் உள்ள குழந்தையும் நன்றாக இருக்குமாக!' என்று வாழ்த்திவிட்டு வா.’ என்று பகவர் கூறினார்.
"தங்கள் சொற்படியே செய்கிறேன், அண்ணலே," என்று பகவரிடம் கூறி விட்டு, அங்குலிமாலர் அந்தப் பெண்ணின் இருப்பிடத்திற்குச் சென்று, அவளிடம், 'தங்கையே, நான் மேன்மையான பிறப்பெடுத்ததிலிருந்து மனம் அறிய ஒரு உயிரையும் கொன்றதில்லை. இந்த வாய்மையின் காரணமாக நீ நன்றாக இருப்பாயாக! உனது வயிற்றில் உள்ள குழந்தையும் நன்றாக இருக்குமாக!' என்று வாழ்த்தினார். " இதனால் அந்தப் பெண்ணின் துன்பம் நீங்கியது. குழந்தையும் துன்பமின்றிப் பிறந்தது.
பின் போற்றுதலுக்குரிய அங்குலிமாலர் தனிமையிலும், விலகியும் வாழ்ந்து, ஊக்கமுடனும், ஆர்வத்துடனும், உறுதியுடனும் அந்தத் 'தன்னிகரில்லா நிலையை' அடைந்தார். அதுவே ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள். இதன் காரணமாகத்தான் மக்கள் இல்லறத்திலிருந்து துறவியாகின்றனர். அவரது உயர்ந்த அறிவினால் அவருக்குத் தெரிந்தது: 'பிறப்பு தீர்ந்தது. ஆன்மிக வாழ்வு முடிந்தது. செய்ய வேண்டியது செய்யப்பட்டு விட்டது. மேலும் இதன் காரணமாகச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.' இவ்வாறு போற்றுதலுக்குரிய அங்குலிமாலர் ஒரு அறஹந்தரானார்.
பின் போற்றுதற்குரிய அங்குலிமாலர், அதி காலையில் தம் சீவர ஆடைகளைச் சரி செய்து மேல் ஆடையையும் பிச்சா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு சாவத்திக்குச் சஞ்சரிக்கச் சென்றார். அப்போது ஒருவன் வீசிய மண்கட்டி போற்றுதற்குரிய அங்குலிமாலர் தலையில் பட்டது. இன்னொருவன் எறிந்த கல் அவர் உடம்பிலும், வேறொருவன் வீசிய மட்கலவோடு மீண்டும் அவர் உடலிலும் பட்டது. இவ்வாறு போற்றுதற்குரிய அங்குலிமாலர் - தலையில் அடிபட்டு இரத்தம் சொட்ட, அவர் பிச்சா பாத்திரம் உடைபட்டு, ஆடை கிழிந்தவராக - பகவரிடம் சென்றார். பகவர் அவர் வருவதைக் கண்டு அருகில் வந்தவுடன் அவரிடம், "பொறுத்துக் கொள் பிராமணா! பொறுத்துக் கொள்! உனது முன்வினையின் பலனால் நீ பல வருடங்களுக்கு, பல நூற்றாண்டுகளுக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, நரகத்தில் சுட்டெரிக்கப் பட்டிருப்பாய். ஆனால் (திருந்தி விட்டமையால்) அதன் பலனை இங்கேயே இப்போதே அனுபவித்து உன் கடனைத் தீர்த்துக் கொள்ளப் போகின்றாய்!" [3]
பின், போற்றுதற்குரிய அங்குலிமாலர் தனிமையில் சென்று வீடுபேறு என்னும் பேரின்பத்தை அனுபவித்தார். அப்போது அவர் கூறியது:
முன்பு கவன மில்லாமல் இருந்தவர், [4]
ஆனால் பிறகு விவேகத்தோடு இருப்பவர்,
மேகங்களால் மறையுண்டிருந்த வெண்ணிலா,
அதை விட்டு வெளிப்பட்டதும் பிரகாசிப்பது போல,
பிரகாசிக்கிறார்.
தீய செயல்களை விட்டுவிட்டு
திறமையான செயல்களைச் செய்பவர்
மேகங்களால் மறையுண்டிருந்த வெண்ணிலா,
அதை விட்டு வெளிப்பட்டதும் பிரகாசிப்பது போல,
பிரகாசிக்கிறார்.
புத்தரின் கூற்றின்படி தன்னை
அர்ப்பணித்துக் கொள்ளும்
ஒரு இளைய துறவி:
மேகங்களால் மறையுண்டிருந்த வெண்ணிலா,
அதை விட்டு வெளிப்பட்டதும் பிரகாசிப்பது போல,
பிரகாசிக்கிறார்.
எனது எதிரிகளும் கூட
தம்மத்தைக் கேட்கட்டும்.
எனது எதிரிகளும்கூட
புத்தரின் கூற்றின்படி
தங்களை அர்ப்பணித்துக் கொள்ளட்டும்.
எனது எதிரிகளும்கூட
மற்றவரைத் தம்ம வழிக்கு ஈர்க்கும்
- அமைதியான, நல்ல -
மனிதருடன் தங்களை இணைத்துக் கொள்ளட்டும்.
எனது எதிரிகளும்கூட
சகிப்புத்தன்மையை, பொறுமையைப் போற்றி
தம்மத்தைத் திரும்பத் திரும்பக் கேட்கட்டும்.
பின் கேட்டபடி நடந்து கொள்ளட்டும்.
ஏனென்றால், கண்டிப்பாக அவர்
என்னையோ அல்லது மற்றவர்களையோ
துன்புறுத்த மாட்டார்;
அவர்கள் மேலான அமைதியைப் பெறுவார்கள்,
பலவீனமானவர்களையும்,
பலம் வாய்ந்தவர்களையும்
பாதுகாப்பார்கள்.
பாசனம் செய்வோர் நீரை வழிப்படுத்திப் பயிர் செய்கிறார்கள்.
அம்பு செய்வோர், அம்புகளைக் கோணல் இல்லாமல் செவ்விதாகச் செய்கிறார்கள்
தச்சர் மரங்களைத் தேவைக்கேற்ப வடிவமைக்கிறார்கள்
அறிஞர்கள் தம்மைத் தாமே அடக்கி ஆள்கிறார்கள்.
சிலர் மழுங்கிய தடியாலும்,
கொக்கிகளாலும், சாட்டைகளாலும் பழக்குகின்றனர்.
ஆனால் மழுங்கிய அல்லது கூர்மையான ஆயுதங்கள் இல்லாமல் ததாகதரால்
நான் அடக்கப் பட்டேன்.
"தீங்கு செய்யாதவன்" என்பது எனது பெயர்,
ஆனால் முன்பு தீங்கு செய்தவன்.
இப்போது என் பெயருக்கேற்ப
நான் நடந்து கொள்கின்றேன்
ஏனென்றால் நான் எவருக்கும்
இப்போது தீமை செய்வதில்லை.
ஒரு கொள்ளைக்காரனாக
நான் இருந்தேன்,
அங்குலிமாலன் என்று
புகழ் பெற்றிருந்தேன்.
பெருவெள்ளத்தால் இழுக்கப்பட்டு
நான் புத்தரிடம் அடைக்கலம் சென்றேன்.
இரத்தக் கறை படிந்தவனாக
நான் இருந்தேன்,
அங்குலிமாலன் என்று
புகழ் பெற்றிருந்தேன்.
நான் அடைக்கலம் செல்வதைக் கவனியுங்கள்!
பவத்தின் காரணம் [பற்றுள்ளம்]
களையப் பட்டிருக்கிறது.
கொடிய மறுமைக்கு இட்டுச்செல்லும் வினைகளைச் செய்த நான்
அந்த வினையின் பயனை அனுபவித்து
கடனற்றவனாக, நான் என் உணவை உண்கின்றேன். [7]
அறிவற்ற மூடர்கள் கவனமின்மைக்கு
இடங் கொடுக்கிறார்கள். [8]
அறிவுள்ளவர்கள் விழிப்புத்தன்மையை,
விலையுயர்ந்த செல்வத்தைப் போலப் போற்றுகிறார்கள்.
கவனமின்மைக்கு இடம் கொடுக்காதீர்கள்; [9]
காம சுகங்களில் மூழ்காதீர்கள்.
தியானத்தில் மனத்தைச் செலுத்தி
விழிப்புடன் இருப்பவர்
பேரின்பத்தை அடையப் பெறுகிறார் .
இது [10] நன்றாக வளர்க்கப்பட்டது,
மறைந்து போவதுமில்லை,
சீராக எண்ணாமல் வந்ததல்ல இது.
பல பண்புகளை நுணுகி ஆராய்ந்த பின்னரே
நான் மிக உயர்வானதைப் பெற்றுள்ளேன்.
இது நன்றாக வளர்க்கப் பட்டது,
மறைந்து போவதுமில்லை,
சீராக எண்ணாமல் வந்ததல்ல இது.
மூன்று அறிவுகளையும் [11]
பெற்று விட்டேன்;
புத்தர் கொடுத்த பணி
நிறைவுற்றது.
* * *
Notes
விளக்கங்கள் :
2. This blessing is often chanted at house blessings in Theravada countries.
தேராவாத நாடுகளில், வீடுகளுக்குச் சென்று அடிக்கடி ஓதப்படும் மங்கலம்.
3. This incident illustrates the kammic principle stated in AN 3.99.
அங்குத்தர நிகாயம் 3.99 வரும் வினைப்பயன் கொள்கைக் கேற்றபடி கூறப் பட்டிருக்கிறது.
4. This verse = Dhp 172. தம்மபதம் 172
5. This verse = Dhp 173. தம்மபதம் 173
6. This verse = Dhp 80. தம்மபதம் 80
7. This verse is another illustration of the principle stated in AN 3.99. மீண்டும் அங்குத்தர நிகாயம் 3.99 வரும் கருத்துக்கேற்றபடி
கூறப்பட்டிருக்கிறது.
8. This verse = Dhp 26. தம்மபதம் 26
9. This verse = Dhp 27. தம்மபதம் 27
10. "This" apparently refers to the abundant bliss mentioned in the previous verse.
"இது" என்பது இதற்கு முன்னர் வரும் அடிகளில் குறிப்பிடப்பட்ட பேரின்பத்தைக் குறிக்கின்றது போலும்.
11. "The three knowledges have been attained" (tisso vijjaa anuppattaa). The triple knowledge consists of retrocognition (pubbenivaasaanussati~naa.na),
clairvoyance (dibbacakkhu), and the knowledge of the destruction of defilements (aasavakkhaya~naa.na).
With the first two knowledges one obtains personal verification of the doctrines of rebirth and kamma respectively. With the destruction of intoxicants one
realizes the causal origination of all phenomena and egolessness.
Source: https://www.accesstoinsight.org/lib/authors/desilva/wheel407.html
அறஹந்தர்கள் அடையும் மூன்று அறிவுகள்.
1. முற்பிறவி பற்றிய அறிவு.
2. பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி/ஞானம்; சிந்தைவிளக்கு
3. மனமாசுகள் மறைந்துவிட்டன என்ற அறிவு
* * *