நமது உண்மையான வீடு
அஜான் சா
Our Real Home
A Dhamma talk by Ajahn Chah
(மரணத்தின் விளிம்பில் இருந்த தனது தாயாருக்கு உற்சாகம் தரும் வகையில் ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு கேட்ட தனது சீடர் ஒருவருக்கு எதிர்பாராத விதமாக ஒரு நீண்ட அற போதனையையே தந்தார் அஜான் சா. 'தாய்' மொழியில் நிகழ்த்திய அவர் பேச்சு, பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது.)
இப்போது உங்கள் மனத்தை மிக மரியாதையுடன் அறத்தைக் கேட்க முடிவு செய்து கொள்ளுங்கள். நான் பேசும் போது புத்தரே உங்கள் அருகில் அமர்ந்திருப்பதாக நினைத்து மிகக் கவனமாகக் கேளுங்கள். கண்களை மூடிக்கொண்டு வசதியாக இருக்கப் பாருங்கள். மனதை ஒருமுகப் படுத்திக் கொள்ளுங்கள். மும்மணிகளான மெய்யறிவு (புத்தர்), வாய்மை (தம்மம்/அறம்) மற்றும் உள்ளத் தூய்மையை (சங்கம்) புத்தருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உங்கள் உள்ளத்தில் நினைவுறுத்திக் கொள்ளுங்கள்.
இன்று நான் உங்களுக்குத் தருவதற்குப் பொருள் ஏதும் கொண்டுவரவில்லை. புத்தரின் போதனைகளான அறத்தை மட்டுமே கொண்டுவந்திருக்கிறேன். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவோ புண்ணியம் சேர்த்த புத்தரும்கூடத் தன் உடலின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை. அவர் முதுமை அடைந்தவுடன் தன் உடலை நீத்துப் பாரத்தை இறக்கி விட்டார். அதே போல நீங்களும் இதுவரை உங்கள் உடலைச் சார்ந்து வாழ்ந்த பல ஆண்டுகளுடன் திருப்தியடைய வேண்டும். இது போதும் என்று நினைக்க வேண்டும்.
நீண்ட காலம் வைத்திருந்த பாத்திரங்கள் - கிண்ணம், தட்டு, செம்பு போன்றவை - வாங்கிய புதிதில் சுத்தமாகவும் மினுமினுப்புடனும் இருந்தன. ஆனால் இப்போது பயன்பாட்டின் காரணமாக அவை பழுதடைந்து விட்டன, சில உடைந்து விட்டன, சில காணாமல் போய் விட்டன, மீதம் இருப்பவை ஒடுங்கி உருக்குலைந்து விட்டன. அவற்றிற்கு உறுதியான மாறாத தோற்றம் இல்லை. அப்படித் தோற்றங்கள் மாறுவது அந்தப் பாத்திரங்களின் இயல்பு. உங்கள் உடம்பும் அப்படித்தான்...நீங்கள் பிறந்த நாளிலிருந்து அது தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம் எல்லாம் கடந்து இன்று முதுமை அடைந்துவிட்டது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலைமைகள், அவை அகம், உடல் சம்பந்தப்பட்டவையானாலும் சரி, புறம் சம்பந்தப்பட்டவையானாலும் சரி அவற்றை 'நாம்' என்றோ 'நமது' என்றோ நினைக்கக்கூடாது, அவை மாறும் இயல்பு கொண்டவை என்று புத்தர் கூறினார். இந்த உண்மையைத் தெளிவாக எண்ணிப் பாருங்கள்.
இங்கே கால ஓட்டத்தால் தளர்ந்து சரிந்திருக்கும் சதையின் திரட்சி - இந்த உடல் - இது இயற்கை நியதி [1]. உடலின் இருக்கும் நிலைதான் நிச்சயம் என்பது புத்தரின் முக்காலத்திற்கும் பொருந்தும் போதனை. புத்தர் இதைப் பிரதிபலித்து இந்த உடலின் இயற்கைக் குணத்தோடு ஒத்துப்போகச் சொன்னார். இந்த உடல் எந்த நிலையில் இருந்தாலும் அதனோடு ஒன்றி நிம்மதியாக இருக்க வேண்டும். உடல் மட்டுமே சிறையில் அடைக்கப்பட வேண்டும், அதனோடு மனத்தையும் சிறையில் அடைத்துவிடக் கூடாதென்று புத்தர் கற்பித்தார். உங்கள் உடல் தளர்ந்து பழுதாகிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் அதனோடு போராடாதீர்கள். அதே நேரம் உடலின் தளர்ச்சிக்கேற்ப மனத்தையும் தளர விட்டுவிட வேண்டாம். மனத்தைத் தனியாக வைத்திருங்கள். நிலைமைகளின் உண்மையான இயல்பை உணர்ந்து மனதிற்கு ஊக்கம் அளியுங்கள். உடலின் இயற்கை நியதி இது தான், அது வேறு எப்படியும் இருக்க முடியாது என்று புத்தர் கற்றுத் தந்தார். பிறந்து விட்டதால் அது முதுமை அடைகிறது, நோய் வாய்ப்படுகிறது, பின் மரணம் எய்துகிறது. இந்தப் பேருண்மையை நீங்கள் இக்கணத்தில் கவனித்தவண்ணம் இருக்கின்றீர்கள். உடலை மெய்யறிவோடு பார்த்து இதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் வெள்ளம் புகுந்து விட்டாலும் அல்லது வீடு தீப்பற்றி முற்றாக அழிந்திருந்தாலும் அல்லது வேறு எந்த ஆபத்து வந்தாலும் அது வீட்டைப் பற்றிய விவகாரமாக மட்டுமே இருக்கட்டும். வெள்ளம் வந்தால் அது உங்கள் மனத்தையும் அடித்துக்கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள். தீப் பிடித்தால் அது உங்கள் உள்ளத்தையும் எரிக்க விட வேண்டாம். வீட்டோடு மட்டுமே அந்தப் பிரச்சினைகள் இருக்கட்டும். உங்களுக்குப் புறத்தில் உள்ள வீட்டை மட்டுமே அவை பாதிக்கின்றன. உலகப் பற்றுகளையெல்லாம் விட்டு விட உங்கள் மனதிற்கு அனுமதி அளிக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் நீண்ட காலம் உயிர்வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் கண்கள் பல உருவங்களையும் நிறங்களையும் பார்த்திருக்கின்றன, உங்கள் காதுகள் பல ஒலிகளைக் கேட்டிருக்கின்றன, உங்களுக்குப் பல அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன. இவை எல்லாம் வேறொன்றும் இல்லை, வெறும் அனுபவங்களே. நீங்கள் பல சுவையான உணவை உண்டிருக்கின்றீர்கள். அவை எல்லாம் நல்ல சுவை மட்டுமே. வேறு ஏதும் இல்லை. சுவையற்ற உணவும் சுவையற்ற உணவு தான். வேறு ஏதும் இல்லை. உங்கள் கண்கள் ஒரு அழகான உருவத்தைப் பார்த்திருந்தால் அது ஒரு அழகான உருவம் மட்டுமே. அழகற்ற உருவமும் அழகற்ற உருவம் மட்டுமே. காது இனிமையான, மென்மையான ஒலியைக் கேட்கும் போது அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை. அபசுரமான ஒலியும் அதுபோலத்தான்.
பணக்காரனோ ஏழையோ, இளைஞனோ முதியவரோ, மனிதனோ மிருகமோ இந்த உலகில் யாராலும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருக்க முடியாது என்று புத்தர் கூறினார். எல்லோரும் மாற்றத்தையும் இழப்பையும் அனுபவிக்கின்றனர். இது வாழ்க்கையின் ஒரு மாற்றமுடியாத உண்மை. ஆனால் புத்தர் உடலையும், மனதையும் பிரதிபலிக்கச் சொன்னார். அவை யாரொருவருக்கும் சொந்தமில்லை என்பதையும், அவை 'நாம்' இல்லை, ‘நமதும்’ இல்லை என்பதையும் அறியச் சொன்னார். அவை ஒரு காரண காரியத் தொடர்புடைய ஒரு செயல் தொடரின் ஒரு தற்காலிக நிலை மட்டுமே. இதோ இந்த வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுடையது என்று சொல்லிக் கொள்வது பெயரளவில் தான் சரி. அதை நீங்கள் எங்கும் எடுத்துக்கொண்டு போகமுடியாது. இதே போல உங்கள் செல்வம், உங்கள் சொத்து, உங்கள் குடும்பம் - அவை எல்லாம் பெயரளவில் மட்டுமே உங்களுடையவை. உண்மையில் அவை உங்களுடையன அல்ல. அவை இயற்கைக்குச் சொந்தமானவை.
மேலும் இந்த உண்மை உங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் இல்லை. எல்லோரும் அதே படகில் தான் இருக்கின்றனர். புத்தருக்கும் அவரது ஞானம் பெற்ற சீடர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். அவர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு, அவர்கள் உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கொண்டனர்; வேறு எப்படியும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தனர்.
எனவே புத்தர் நம்மை உள்ளங்காலில் இருந்து உச்சந் தலை வரையும், பின் மறுபடியும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையும் உடலை முற்றாக விசாரணை செய்யச் சொன்னார். ஆராயச் சொன்னார். உடலைச் சற்றுக் கவனியுங்கள். அதில் என்ன தான் பார்க்க முடிகிறது? அதில் அடிப்படையாகச் சுத்தமாக எதையாவது பார்க்க முடிகிறதா? அதில் நிரந்தரமான சாராம்சம் எதாவது தெரிகிறதா? இந்த உடல் தொடர்ந்து சீரழிந்து கொண்டிருக்கிறது. புத்தர் இந்த உடல் நமதில்லை என்பதை அறியச்சொன்னார். உடல் இப்படி இருப்பது இயற்கையே. ஏனென்றால் காரண காரியத் தொடர்பினால் தோன்றிய எவையும் மாற்றத்துக்குட்பட்டவை. வேறு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்? உண்மையில் உடல் உள்ள நிலையில் தவறேதும் இல்லை. உடல் நமக்குத் துன்பம் விளைவிக்கவில்லை. அப்படி நினைப்பது தவறான சிந்தனை. தவறான வழியில் நிகழ்வுகளைப் பார்த்தால் அங்கு குழப்பமே மிஞ்சும்.
ஆற்றின் நீரோட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாக நீர் பள்ளத்தை நோக்கித்தான் பாயும். எப்போதும் மேல் நோக்கிச் செல்லாது. அதன் இயற்கைக் குணம் அப்படி. ஒருவன் ஆற்றோரம் சென்று நீர் கீழிருந்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைப்பானானால் அவனை ஒரு முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் எங்கு சென்றாலும் அவனுடைய முட்டாள்தனம் அவனுக்கு நிம்மதியைக் கொடுக்காது, அவனுடைய தவறான பார்வையின் காரணமாக அவன் துக்கம் அனுபவிப்பான். அவனுக்குச் சரியான பார்வையிருந்தால் நீர் மேலிருந்து கீழ்நோக்கித் தான் போகமுடியும் என்பதை அறிவான். அப்படி அறியும் வரை அவன் குழப்பத்தோடும், செயல்குலைந்த நிலையிலும் தான் இருப்பான்.
ஆற்று நீர் எப்படி மேலிருந்து கீழ்நோக்கிச் செல்ல வேண்டுமோ அதே போலத் தான் நமது உடலும். இளமையாயிருந்த உடல் முதுமை அடைகிறது. மெதுவாகச் சுழன்று சுழன்று அதன் மரணத்தை நோக்கிச் செல்கிறது. அப்படி நடக்கக் கூடாது என்று விருப்பப்பட வேண்டாம். அதை நடத்தி வைக்கக் கூடிய சக்தியும் உங்களிடம் இல்லை. புத்தர் உள்ளதை உள்ளவாறே ஏற்றுக் கொண்டு அவற்றுடன் பற்றில்லாமல் இருக்கச் சொன்னார். பற்றில்லாமல் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு அடைக்கலம் கொள்ளுங்கள். உங்களுக்குக் களைப்பாக இருந்தாலும், கடுஞ் சோர்வாக இருந்தாலும் தியானம் (மனப் பாவனை) செய்து கொண்டிருங்கள். உங்கள் மனம் மூச்சோடு ஒன்றி இருக்கட்டும். ஆழமாக ஒரு சில மூச்செடுத்து, புத்-தோ என்ற தியான வார்த்தையைப் பயன்படுத்தி மூச்சின் மீதே கவனத்தை நிலைநிறுத்துங்கள் [2]. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு களைப்பு அதிகமாக அதிகமாக உங்கள் மன ஒருமைப்பாடும் அதற்கேற்றார்ப்போல நுட்பமானதாகவும் கூர்மையோடும் இருக்கட்டும். அப்படிச் செய்தால் உங்கள் உடலில் வேதனையான உணர்ச்சிகள் எழும் போது அவற்றைத் திறமையாகக் கையாள முடியும். நீங்கள் சோர்வடைந்தால் எல்லா எண்ணங்களையும் நிறுத்திவிடுங்கள். மூச்சைத் தெரிந்து கொள்வதில் மனத்தின் கவனத்தைச் செலுத்துங்கள். உள்ளுக்குள் புத் (உள் மூச்சின் போது)-தோ (வெளி மூச்சின் போது), புத்-தோ என்ற வார்த்தையையும் சொல்லிக் கொண்டே இருங்கள்.
புற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுங்கள். உங்கள் மக்களைப் பற்றியும், உறவினர்களைப் பற்றியும் எழும் எண்ணங்களோடு பற்றுக் கொள்ள வேண்டாம். எதனோடும் பற்றுக் கொள்ள வேண்டாம். பற்றை விடுங்கள். மனதை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஒருமுகப்படுத்தப்பட்ட மனம் மூச்சோடு நிற்கட்டும். மூச்சைப் பற்றி மட்டுமே தெரிந்திருக்கட்டும். மனம் நுட்பமாக ஆகும் வரை, உணர்ச்சிகள் அற்பமாகும் வரை, அகத் தெளிவும், தெரிந்த நிலையும் எழும் வரை மனத்தை ஒருமுகப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு வேதனையான உணர்ச்சிகள் எழும் போது மெதுவாகத் தானாகவே அவை மறைந்துவிடும்.
இறுதியில் உங்கள் மூச்சை, உறவினர்கள் உங்களைச் சந்திக்க வருவது போல வரவேற்பீர்கள். உறவினர்கள் விடைபெரும் போது அவர்களைத் தொடர்ந்து வழி அனுப்பச் செல்வீர்கள் அல்லவா? அவர்கள் வீட்டுக்கு வெளியே உள்ள பாதையில் செல்வதைக் கவனித்துப் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்து விட்டு அதன் பின் உள்ளே செல்வீர்கள். அது போலவே மூச்சையும் கவனிக்க வேண்டும். மூச்சு சொரசொரப்பாக இருக்கும் போது அப்படிச் சொரசொரப்பாக இருப்பதைக் கவனிப்பீர்கள். நுட்பமானதாக இருந்தால் நுட்பமானதாக இருப்பதைக் கவனிப்பீர்கள். மூச்சு மென்மையாக ஆக ஆக அதைத் தொடர வேண்டும். அதே சமயம் மனத்தையும் விழிப்புறச் செய்ய வேண்டும். ஒரு காலக்கட்டத்தில் மூச்சே (மனத்துக்கு மூச்செடுப்பதே தெரியாத வண்ணம்) மறைந்து விடும். இருப்பதெல்லாம் அந்த விழிப்புடன் இருக்கும் நிலைதான். இதைத் தான் புத்தரைச் சந்திப்பது என்பது. நமக்கு அந்தத் தெளிந்த விழிப்புடன் இருக்கும் நிலை இருக்கிறது. அதைத்தான் புத்-தோ என்கிறோம், அந்தத் தெரிந்திருப்பவர், விழித்திருப்பவர், பிரகாசிப்பவர். அறிவோடும் தெளிவோடும் புத்தருடன் இருப்பது என்பது இதுதான். வரலாற்றுப் புத்தர் தான் மறைந்து விட்டார். உண்மையான புத்தர், அந்தத் தெளிவான, பிரகாசிக்கும், தெரிந்த புத்தர் இன்றும் இருப்பதை உணரலாம். அந்த நிலையை அடையலாம். அந்த நிலையை அடைகிற போது உள்ளமும் ஒன்று படுகிறது.
எனவே பற்றினை விடுங்கள். அந்தத் தெரிந்த நிலையைத் தவிர சுமைகள் எல்லாவற்றையும் இறக்கிவிடுங்கள். தியானத்தின் போது வெளிச்சமோ, சத்தமோ மனத்தில் எழுந்தால் அதைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம். அது போன்ற அனுபவங்களையும் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டாம். இறந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். மனதில் அசைவில்லாமல் இருந்தால் அந்த ஒரு உன்னதமான இடத்தை (மனநிலையை) அடையலாம். எப்படிப்பட்ட இடம் அது? அங்கு முன்னேறவும் வேண்டியதில்லை. பின் வாங்கவும் வேண்டியதில்லை. நிற்க வேண்டியதும் இல்லை. அங்கு பிடித்துக்கொள்ளவோ பற்றிக் கொள்ளவோ ஏதும் இல்லை. ஏன்? ஏனென்றால் அங்கு 'நான்' என்றோ 'எனது' என்றோ ஒன்றும் இல்லை. அது போன்ற நினைவுகளெல்லாம் மறைந்து விட்டன. இது போல உங்கள் சுமைகளை எல்லாம் துறந்துவிடச் சொன்னார் புத்தர். எதையும் சுமந்து கொண்டு இருக்க வேண்டாம் … தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்தவுடன் விட்டு விடுங்கள்.
அறம், அது பிறப்பு இறப்பு என்ற சுழலிலிருந்து விடுதலை தரும் பாதை. அறத்தைப் புரிந்து கொள்வதென்பது நாம் தனியாகச் செய்ய வேண்டிய கடமை. எனவே தொடர்ந்து பற்றிலிருந்து விடுபடவும் போதனைகளைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். அறத்தைப் பிரதிபலிப்பதில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். இந்தக் கணத்தில் அவர்கள் இருக்கின்ற நிலையில் இருக்கின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் உங்களைப் போல ஆவார்கள். இந்த நிலையிலிருந்து எவரும் தப்ப முடியாது. புத்தர் சாராம்சம் இல்லாத எதனுடனும் பற்றுக்கொள்ள வேண்டாம் என்றார். பாரங்களையெல்லாம் இறக்கிவிட்டால் உங்களுக்கு உண்மை விளங்கும். விடாவிட்டால் விளங்காது. அதுதான் அறத்தின் இயல்பு. உலகில் உள்ள எல்லோருக்கும் அதே நியதி தான். அதனால் எதனோடும் பற்றுக்கொள்ள வேண்டாம்.
அப்படியே நீங்கள் எண்ணமிட்டபடியே இருப்பதை உணர்ந்தால் அதுவும் சரி. நீங்கள் மெய்யறிவோடு எண்ணும்வரை அப்படி எண்ணமிடுவதும் சரியே. முட்டாள் தனமா எண்ணாதீர்கள். உங்கள் பிள்ளைகளைப் பற்றி நினைத்தால் மெய்யறிவோடு நினையுங்கள், முட்டாள்தனமாக நினைக்க வேண்டாம். மனம் எதைப் பற்றி நினைத்தாலும் மெய்யறிவோடு நினைக்க வேண்டும். நீங்கள் நினைப்பதன் இயற்கை இயல்பைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒன்றைப் பற்றி மெய்யறிவோடு தெரிந்து கொள்ளுதல் என்றால் அதனோடு பற்றுக் கொள்ளாமல் துன்பமடையாமல் இருப்பதுதான். மனம் பிரகாசமாகவும், மகிழ்ச்சியோடும் நிறைவோடும் இருக்கும். அது தடங்கல்களிடமிருந்து விடுபட்டுச் சிதறாமல் இருக்கும். இந்தக் கணத்தில் உங்களுக்கு உதவியாகவும், துணையாகவும் இருப்பது மூச்சு தான்.
இந்த வேலை உங்களுடையதே. வேறு எவருடையதும் அல்ல. மற்றவர்களை அவர்களுடைய வேலையைச் செய்ய விடுங்கள். உங்களுக்கென்று கடமையும் பொறுப்பும் இருக்கிறது. உங்கள் குடும்பத்தினரின் பொறுப்பினையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எதையும் சுமந்து கொண்டிருக்க வேண்டாம், எல்லா வற்றையும் இறக்கி விடுங்கள். இந்த இறக்கி விடுதல் உங்கள் மனத்தை அமைதியாக்கும். உங்கள் ஒரே கடமை உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதிக்கு கொண்டு வருவதுதான். மற்ற கடமைகளை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும். உருவங்கள், ஒலி, வாசனை, ருசி ... இவை எல்லாவற்றையும் மற்றவர்கள் கவனித்துக் கொள்வார்கள். எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள். மனதில் எது தோன்றினாலும், அது உடலில் வலி எடுக்கும் என்ற பயமாக இருந்தாலும் சரி, மரணத்தின் பயமாக இருந்தாலும் சரி, மற்றவர் பற்றிய கவலையாக இருந்தாலும் சரி அதனிடம் சொல்லிவிடுங்கள், "என்னைத் தொந்தரவு செய்யாதே. எனக்கு உன்மீது அக்கரை இல்லை." அது போன்ற தம்மங்கள் /எண்ணங்கள் தோன்றினால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.
தம்மா என்ற வார்த்தை எதனைக் குறிக்கிறது? எல்லாம் தம்மமே, தம்மமில்லாத எதுவும் இல்லை. "உலகம்" என்பது இதில் சேருமா? இந்தக் கணத்தில் உங்களை வதைக்கும் மன நிலைதான் இந்த உலகம். "என் மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ? நான் சென்ற பிறகு அவர்களை யார் கவனிப்பார்? அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்?" இவை எல்லாம் தான் இந்த "உலகம்". மரணத்திற்கும், உடல் வலிக்கும் அஞ்சும் எண்ணம் ஒன்று தோன்றுவதும் உலகம் தான். உலகத்தைத் தூக்கி எறியுங்கள்! உலகம் உள்ளது உள்ளவாறு இருக்கிறது. உங்கள் மனதை உலகம் ஆட்கொண்டு விட்டால் மனம் குழம்பித் தன்னைத் தானே பார்க்க முடிவதில்லை. எனவே மனதில் எது தோன்றினாலும், இதைச் சொல்லிக் கொள்ளுங்கள், "இது என் பொறுப்பில்லை. இது நிலையற்றது, திருப்தியற்றது, இது 'நான்' இல்லை, என்னுடையது இல்லை'"
நீங்கள் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்குத் துக்கம் உண்டாகும். மாறாக நீங்கள் உடனே இறந்துவிடவேண்டும் அல்லது விரைவில் இறந்துவிட வேண்டும் என்று நினைப்பதும் சரி அல்ல. அதுவும் துக்கம் தான். இல்லையா? நிலைமைகள் நமக்குச் சொந்தம் இல்லை. அவை இயற்கையின் நியதிகளைத் தொடர்ந்து செல்கின்றன. உடல் இருக்கும் நிலையை நீங்கள் மாற்றமுடியாது. ஏதோ கொஞ்சம் அழகு படுத்தலாம், கொஞ்சம் கவர்ச்சியூட்டலாம். சில நாட்களுக்குச் சுத்தமாக வைத்திருக்கலாம் - இளம் பெண்கள் தங்கள் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொள்வது போல, நகங்களை நீளமாக வளர்த்துக் கொள்வதுபோல. ஆனால் முதிய வயது வந்தவுடன் அனைவரும் ஒரே படகில் தான் பயணிக்கப் போகின்றார்கள். அது தான் உடலின் இயல்பு. அதை வேறு எப்படியும் இருக்க வைக்க முடியாது. நீங்கள் ஒன்றை மட்டுமே அழகு படுத்தி முன்னேற வைக்கலாம் - உங்கள் மனத்தை மட்டும்.
யார் வேண்டுமானாலும் மரத்தையும் செங்கல்லையும் பயன் படுத்தி ஒரு வீட்டைக் கட்டிவிடலாம். ஆனால் புத்தர் இது போன்ற வீடு நம் உண்மையான வீடல்ல என்கிறார். பெயரளவில் தான் அது நமது வீடு. இந்த உலகில் அது ஒரு வீடு. இந்த உலகின் வழியைத் தான் அதுவும் தொடர்கிறது. நமது உண்மையான வீடு உள்ளத்தின் அமைதி தான். பொருட்களால் கட்டப்பட்ட புற வீடு பார்க்க அழகாக இருக்கலாம் ஆனால் அதிலிருந்து அமைதி கிடைக்காது. இந்தக் கவலை, அந்தக் கவலை, இதைப் பழுது பார்க்க வேண்டும், அதைப் பழுது பார்க்க வேண்டும் என்பது போன்ற கவலைகள். அதனால் அதை நமது உண்மையான வீடென்று சொல்வதில்லை.அது நமக்குப் புறத்தில் உள்ளது. என்றாவது ஒரு நாள் அதை விட்டுக் கொடுக்க வேண்டிவரும். நிரந்தரமாகத் தங்கும் இடம் இல்லை இது. ஏனென்றால் உண்மையில் அது நமக்குச் சொந்தமானதில்லை. அது உலகுக்குச் சொந்தம். நம் உடலும் அது போலத்தான். அதை ஒரு ஆன்மா என்றும் 'நான்', 'எனது' என்றும் நினைக்கின்றோம். ஆனால் அது அப்படி இல்லை. அது உலகில் உள்ள இன்னொரு வீடு, அவ்வளவு தான். உங்கள் உடல் அதன் இயற்கை இயல்பைப் பிறந்ததிலிருந்து இன்று வயதாகி நோய்வாய்ப்பட்டிருக்கும் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. அதை உங்களால் தடுக்க இயலாது. இந்த உடல் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பது மூடத்தனம். வாத்து கோழியாக இருக்க வேண்டும் என்று நினைபதைப் போல. இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதை அறிவீர்களென்றால் - அதாவது வாத்து வாத்தாகத்தான் இருக்கவேண்டும், கோழி கோழியாகத்தான் இருக்க வேண்டும், உடல் வயதாகி மறையத்தான் வேண்டும் - என்பதை அறிவீர்களென்றால் உங்களுக்குத் தைரியமும் ஊக்கமும் பிறக்கும். நீங்கள் உடல் காலவரையின்றி தொடர்ந்து இருக்கவேண்டும் என்று எவ்வளவுதான் விரும்பினாலும் அது சாத்தியமாகாது.
புத்தர் கூறினார் [3]:
சங்கற்பங்கள் எல்லாம் நிலையற்றவை,
தோன்றி மறையும் தன்மையுடையவை.
தோன்றிய பின்னர் மறைகின்றன.
அவற்றைத் தோன்றாவண்ணம் செய்வதே அமைதி நிலை.
"சங்கற்பம்" என்ற வார்த்தை இந்த உடலையும் மனத்தையும் குறிக்கும். சங்கற்பங்கள் நிலையற்றவை, உறுதியற்றவை. அவை தோன்றிய பின் மறைகின்றன. ஆனாலும் அனைவரும் அவை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இது மடத்தனம். மூச்சைக் கவனித்துப் பாருங்கள். உள் சென்ற மூச்சு வெளிவருகிறது. அதன் இயற்கை இயல்பு அப்படி. அப்படித்தான் இருக்க வேண்டும். உள் மூச்சும் வெளி மூச்சும் மாறி மாறி வரவேண்டும். மாற்றம் இருந்தாக வேண்டும். நிலைமைகள் மாற்றத்தினால் தோன்றுகின்றன. அதைத் தடுக்க முடியாது. நினைத்துப் பாருங்கள் உள் மூச்சு எடுக்காமல் வெளிமூச்சு விடமுடியுமா? அது நல்ல உணர்வாக இருக்குமா? நாம் நிகழ்வுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம் ஆனால் அவை அப்படி இருக்க முடியாது. அது நடைமுறைக்குச் சாத்திய மற்றது. உள் மூச்செடுத்த பின்னர் வெளி மூச்சு விட்டாக வேண்டும். வெளியே சென்ற மூச்சு பின் உள்ளே வருகிறது. அது இயற்கை தான், இல்லையா? நாம் பிறந்துவிட்டதால் மூப்படைந்து மரணத்தைத் தழுவுகிறோம். இதுவும் இயற்கை. சாதாரண விஷயம். நிலைமைகள் தங்கள் கடமையைச் செய்து விட்டதாலும், உள்மூச்சும் வெளிமூச்சும் மாறி மாறி வருவதாலும் தான் மனித வர்க்கம் இன்றும் உலகில் நிலைத்திருக்கின்றது.
நாம் பிறந்த உடனேயே மரணமடைகிறோம். நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். இது ஒரு மரத்தைப்போல: வேர் இருக்கும் இடத்தில் கிளைகளும் இருக்கும், கிளைகள் இருக்கும் இடத்தில் வேர் இருக்கும். ஒன்றில்லாமல் மற்றது இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. இதை எவரும் தெளிவாகப் பார்ப்பதில்லை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. பிறந்ததால் தான் இறக்கிறோம். இறந்ததால் பிறக்கிறோம். கிளைகள் தான் வேர். வேர் தான் கிளை. அழவேண்டுமானால் வேர் அருகில் அழவேண்டும், பிறப்பின் போது அழவேண்டும். நன்கு சிந்தித்துப் பாருங்கள், பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு?
நிகழ்வுகளைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாதீர்கள். "நிகழ்வுகளின் இயல்பு இப்படித்தான் " என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் வேலை, உங்கள் கடமை. இச்சமயத்தில் உங்களுக்காக யாரும் உதவ முடியாது, உங்கள் குடும்பத்தினரும் உங்கள் செல்வங்களும் உங்களுக்கு உதவ முடியாது. உங்களுக்கு உதவக்கூடியதெல்லாம் உங்கள் தெளிவான தெரிந்த நிலைதான்.
எனவே தயங்க வேண்டாம். போக விடுங்கள். எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்.
நீங்கள் விடவில்லையென்றாலும் ஒவ்வொன்றும் உங்களை விட்டுப் பிரியத் தொடங்கி விட்டன. உங்கள் உடலின் பல பகுதிகளும் உங்களை விட்டு நழுவிச் செல்வது உங்களுக்குத் தெரிகிறதா? உங்கள் தலை முடியை எடுத்துக் கொள்ளுங்கள். இளம் வயதில் அது அடர்த்தியாகவும் கருமையாகவும் இருந்தது. இப்போது அது உதிரத் தொடங்கிவிட்டது. அது உங்களை விட்டுச் செல்கிறது. முன்பு உங்கள் கண்களால் கூர்மையாகப் பார்க்க முடிந்தது. இப்போது வலிமையற்றுப் பார்வை மங்கி விட்டது. உங்கள் உடல் உறுப்புகள் விட்டுச் செல்லத் தொடங்கி விட்டன இந்த உடல் அவற்றின் வீடல்ல. இளமையாக இருந்த போது உங்கள் பற்கள் நல்ல நிலையில் உறுதியாக இருந்தன. இப்போது அசைகின்றன அல்லது பொய்ப் பல் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்கள் கண்கள், காது, மூக்கு, நாக்கு எல்லாம் உங்களை விட்டுச் செல்லப் பார்க்கின்றன. ஏனென்றால் இந்த உடல் அவற்றின் வீடல்ல. நிலைமைகளால் நிரந்தர வீட்டைக் கட்ட முடியாது. சில காலம் இருந்து விட்டுப் பின் வேறு இடம் செல்ல வேண்டும். வாடகைக்கு இருப்பவர் தன் சின்னஞ் சிறிய வீட்டை மங்கும் கண்களுடன் பார்ப்பது போலத்தான். அவர் பற்களும் சரியில்லை, கண்களும் சரியில்லை, உடலும் நல்ல நிலையில் இல்லை. எல்லாம் விட்டுச் செல்லும் நிலையில் இருக்கின்றன.
எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் இது உங்கள் உண்மையான வீடல்ல. தற்காலிகமாகத் தங்க ஓர் இடம். இந்த உலகில் தோன்றிய பிறகு அதன் இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும். உலகில் உள்ள அனைத்தும் மறையத் தயாராகின்றன. உங்கள் உடலைப் பாருங்களேன். ஆரம்பத்தில் இருந்த நிலையில் ஏதேனும் இருக்கிறதா? உங்கள் தோல் முன்பிருந்ததைப்போல இருக்கிறதா? உங்கள் உரோமம்? அவை முன் போல் இல்லையே? எங்கு சென்றன எல்லாம்? இதுதான் இயற்கை. அதன் இயல்பு அப்படி. நேரம் வரும் போது நிலைமைகள் அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் செல்கின்றன. இந்த உலகில் ஒன்றை நம்பிச் சார்ந்து இருக்க எதுவும் இல்லை. முடியாத தொடராகத் தொந்தரவுகளும் இன்னல்களும், இன்பமும் துன்பமும் தான் இருக்கின்றன. அமைதியைக் காண இயலாது.
நமக்கு ஓர் உண்மையான வீடு இல்லாவிட்டால் சாலையில் செல்லும் குறிக்கோளற்ற பயணியைப் போல இங்கும் அங்கும் செல்வது, ஓர் இடத்தில் சில நாள் தங்குவது பின் மீண்டும் புறப்படுவது போலத்தான். ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விட்டுச் சென்றதும் ஒன்றும் புரியாமல் தடுமாறுவதும், வீடு வந்து சேர்ந்த பின்னரே ஓய்வெடுத்து அமைதியாக இருக்க முடிவதைப் போல, நாம் நமது உண்மையானவீடு வந்து சேரும் வரை நமக்குக் குழப்பமாகவே இருக்கும்.
இந்த உலகில் உண்மையான அமைதியை எங்குமே காணமுடிவதில்லை. ஏழைக்கும் அமைதி இல்லை. பணக்காரனுக்கும் அமைதி இல்லை; பெரியவருக்கும் அமைதியில்லை. பெரும் படிப்புப் படித்தவர்க்கும் அமைதி இல்லை. எங்கும் அமைதி இல்லை. இது தான் உலகின் இயல்பு. குறைந்த சொத்துக் கொண்டவரும் துன்புறுகின்றார், மிகுந்த சொத்து உள்ளவரும் துன்புறுகின்றார். குழந்தைகள், பெரியோர், முதியோர், சிறுவர்... எல்லோரும் துக்கம் அனுபவிக்கின்றனர். வயதானதால் உள்ள துக்கம், இளமையினால் விளையும் துக்கம், பணக்காரராக இருப்பதின் துக்கம், ஏழையாய் இருப்பவருக்கு உள்ள துக்கம்...துக்கத்தைத் தவிர வேறு ஏதும் இல்லை.
இவ்வாறு நீங்கள் பிரதிபலித்தீர்களென்றால் நீங்கள் அனிச்சம் அதாவது நிலையாமையையும் மற்றும் துக்கம் அதாவது திருப்தியற்ற நிலை இரண்டையும் காணலாம். விஷயங்கள் ஏன் நிலையற்றவை, திருப்தியற்றவை? ஏனென்றால் இவை அனத்தா அதாவது ஏதும் 'நமது' இல்லை, 'நாம்' இல்லை.
நோயுடனும் துன்பப்பட்டுக் கொண்டுள்ள உங்கள் உடலும், அந்த நோயையும் துன்பத்தையும் தெரிந்துள்ள உங்கள் மனமும் தம்மா என்றழைக்கப்படும். உருவற்ற எண்ணங்களும், உணர்ச்சிகளும், குறிப்புகளும் நாமதம்மா என்றழைக்கப்படும். நோயும், வேதனையும் கொண்ட உருதான் ரூபதம்மா. பொருள் உள்ளதும் தம்மா பொருளற்றதும் தம்மா. எனவே நாம் தம்மத்துடன், தம்மத்தில், தம்மமாக வாழ்கிறோம். உண்மையில் ஆத்மா என்று எதையும் காணமுடியாது. தம்மங்கள் மட்டுமே உள. அவற்றின் இயல்பு தோன்றி மறைவதுதான். ஒவ்வொரு கணத்திலும் நாம் பிறந்து இறக்கின்றோம். இதுதான் தம்மங்களின் இயல்பு.
புத்தரைப் பற்றி நினைக்கும் போது, அவர் வாய்மையை எப்படி விளக்கினார் என்பதை எண்ணும் போது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதைக்கும் அவர் மீதான பக்திக்குமான காரணத்தை அறிகிறோம். ஒருவேலை அறத்தை நாம் பயிலவில்லை என்றாலும் ஒன்றின் உண்மையான இயல்பை நாம் அறியும் போது புத்தரின் போதனைகளை நாம் காண்கிறோம். ஆனால் அவரின் போதனைகளை எவ்வளவுதான் அறிந்திருந்தாலும், படித்துப் பயிற்சி செய்திருந்தாலும் உண்மையை அறியவில்லையென்றால் நாம் இன்னமும் வீடற்றவராகத்தான் இருக்கின்றோம்.
எனவே இதைப் புரிந்து கொள்ளவேண்டும். எல்லா மக்களும், எல்லா உயிரினங்களும் புறப்படத் தயாராகின்றனர். உயிர்கள் உரிய காலம் வாழ்ந்தபின் தங்கள் வழியில் செல்லத்தான் வேண்டும். பணக்காரர், ஏழை, இளையோர், முதியோர் எல்லோரும் இந்த மாற்றத்தை உணர்வார்கள்.
இது தான் உலகின் இயல்பு என்பதை அறிந்து கொண்டீர்களென்றால் உலகம் ஓர் அயர்வான இடமாகத் தோன்றும். உலகில் நீங்கள் நம்பிக்கை வைக்கக் கணிசமான மெய்யானதொன்றும் இல்லாததை உணரும் போது நீங்கள் களைப்புற்றுப் பற்றில்லாதவராகவும் ஆவீர்கள். பற்றில்லாமல் இருப்பதென்பது வெறுப்போடு இருப்பதென்று இல்லை. மனம் தெளிந்திருக்கிறது. தவறான கருத்தை மனத்திலிருந்து அகற்றி விட்டீர்கள். அதற்குத் தெரியும் இந்த நிலைமையை மாற்ற ஒன்றும் செய்ய முடியாதென்று. உலகத்தின் இயல்பு அப்படித்தான். இதைத் தெரிந்து கொண்டால் பற்றை விட்டு விடலாம். மகிழ்ச்சியோடும் இல்லாத, சோகமாகவும் இல்லாத மனத்தோடு பற்றினை விடலாம். ஆனால் அந்த மனம் நிலைமைகளோடு ஒத்து, நிலைமைகளின் மாறும் தன்மையை மெய்யறிவோடு கவனித்து அமைதியோடு இருக்கிறது. சங்கற்பங்கள் (நிலைமைகள்) எல்லாம் நிலையற்றவை.
சுருக்கமாகச் சொல்லப்போனால் நிலையாமைதான் புத்தர். உண்மையில் ஒரு நிலையற்ற நிலைமையைப் பார்த்தோமானால் நமக்கு அது நிலையானதென்பது தெரிகிறது. அதாவது தொடர்ந்து மாற்றம் நடைபெறுவது நிலைத்திருக்கிறது. இந்த நிலையான தன்மையைத்தான் உயிரினங்கள் கொண்டுள்ளன. மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சிறு வயதிலிருந்து முதுமைப் பிராயம் வரை மாற்றங்கள் தொடர்கின்றன. இந்த மாறும் இயல்பு தான் நிரந்தரமானது. இவ்வாறு பார்க்கும் போது உங்கள் உள்ளம் அமைதி அடையும். நீங்கள் மட்டும் மாற்றங்களை அனுபவிக்கவில்லை. அனைவரும் அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு பிரதிபலிக்கும் போது உலக நிலைகளைக் கண்டு களைத்துப் போவீர்கள். பற்றின்மை எழும். புலன் ஆசைகள் மீதான குதூகலம் தணியும், மறையும். நீங்கள் நிறையச் சொத்து வைத்திருந்தால் நிறைய விட்டுச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்வீர்கள். குறைவான சொத்து வைத்திருந்தால் குறைவாக விட்டுச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிவீர்கள். செல்வம் வெறும் செல்வம் தான். நீண்ட வாழ்வு வெறும் நீண்ட வாழ்வு தான். ... அவற்றுக்குச் சிறப்பம்சம் ஏதும் இல்லை.
இதில் என்ன முக்கியமானது என்றால், நான் இதுவரை உங்களுக்கு விளக்கிய முறையில் புத்தர் வழியில் நமது வீட்டைக் கட்ட வேண்டும். உங்கள் வீட்டைக் கட்டுங்கள். கைவிடுங்கள். முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தும், பின்வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தும், ஓர் இடத்தில் ஆடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தும் விடுதலை பெற்று மனதில் அமைதி காணும் வரை பற்றினை விட்டு விடுங்கள். இன்பம் உங்கள் வீடல்ல. துன்பம் உங்கள் வீடல்ல. இன்பமும் துன்பமும் குறைந்து மறைந்து விடுகின்றன.
அந்தப் பெரும் ஆசிரியர் நிலைமைகளெல்லாம் நிலையற்றவை என்பதை அறிந்து நம்மை அதனிடம் பற்றுக் கொள்ளாமல் இருக்கக் கற்றுத் தந்தார். நாம் வாழ்வின் இறுதியை நெருங்கும் போது பற்றுக் கொண்டாலும் பயனில்லை. எப்படியும் நம்மோடு எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது. அதனால் முன்னரே பற்றினை விட்டுவிடுவது நல்லதல்லவா? அவை ஒரு சுமையைத் தூக்கிச்செல்வது போலத்தான். எனவே அதனை இப்போதே ஏன் தூக்கி எறியக் கூடாது? ஏன் அவற்றை இழுத்துக் கொண்டு போக வேண்டும்? விடுங்கள். ஓய்வெடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களைக் கவனித்துக் கொள்ள விடுங்கள்.
நோய்வாய்ப் பட்டோரைக் கவனிப்போரும், பண்பிலும் நற்குணத்திலும் வளர்கின்றனர். இந்த வாய்ப்பை அவர்களுக்குத் தரும் நோயாளியும் அவர்களுக்குக் கஷ்டங்களைத் தரக் கூடாது. உங்களுக்கு உடல் வலியோ வேறு ஏதாவது பிரச்சினையோ இருந்தால் அவர்களிடம் சொல்லுங்கள். அதே சமயம் மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோரைக் கவனிப்போரும் தங்கள் மனத்தினை அன்புடனும் நல் எண்ணத்தோடும் வைத்திருக்க வேண்டும். அருவருப்புடன் இருக்கக் கூடாது. இதோ இந்த நேரத்தில் உங்கள் கடனை திருப்பிக் கொடுக்க ஒரு வாய்ப்பு. பிறந்ததிலிருந்து சிறுவயதிலும் வளரும் போதும் நீங்கள் உங்கள் பெற்றோரைச் சார்ந்து இருந்தீர்கள். நீங்கள் இங்கு இருக்கின்றீர்களென்றால் அது உங்கள் தாயும் தந்தையும் உங்களுக்குச் செய்த பல உதவிகளால் தான். நீங்கள் அவர்களுக்குப் பெரும் அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கின்றீர்கள்.
எனவே இன்றைக்கு அவரது பிள்ளைகளும் அவரின் உறவினர்களும் இங்கு கூடியிருக்கின்றீர்கள். உங்கள் தாய் இப்போது எப்படி உங்கள் குழந்தையாக மாறி விட்டார் என்பதைக் கவனியுங்கள். முதலில் நீங்கள் அவருடைய குழந்தைகளாக இருந்தீர்கள். இப்போது அவர் உங்கள் குழந்தையாகி விட்டார். அவர் வயதாக வயதாக மீண்டும் குழந்தையாகிவிட்டார். அவர் நினைவு மாறுகிறது. பார்வை தெளிவாகத் தெரிவதில்லை, காது சரியாகக் கேட்பதில்லை. சில சமயம் வார்த்தைகள் தெளிவற்றுக் குழறுகிறது. ஆனால் இதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. நோய்வாய்ப் பட்டோரைக் கவனிக்கும் நீங்களும் எவ்வாறு விட்டு விட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நடந்தவற்றோடு பற்றுக் கொள்ளாதீர்கள். சிறு குழந்தைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்காவிட்டாலும் சிலவேளையில் பெற்றோர்கள் அமைதியைக் காப்பாற்றுவதற்காகவும் குழந்தையின் மகிழ்ச்சிக்காகவும் அதன் போக்கில் விட்டுவிடுவதைப்போல, உங்கள் தாயாரின் விருப்பம் போல இருக்க விடுங்கள். இப்போது உங்கள் தாயும் அந்த குழந்தையைப் போலத்தான். அவரின் நினைவும், மனக் குறிப்புகளும் குழம்பிவிட்டது. சில சமயம் உங்கள் பெயர்களைக்கூட குழப்பிக் கொள்ளலாம், அல்லது தட்டை கேட்பதற்குப் பதில் ஒரு கோப்பையைக் கேட்கலாம். அது சராசரி நடப்பது தான். அதனால் துயர் கொள்ள வேண்டாம்.
நோயாளியும் தன்னைக் கவனிப்பவரின் அன்பை மனத்தில் கொள்ள வேண்டும். உடல் வலிகளைப் பொறுமையோடு பொறுத்து ஏற்றுக் கொள்ளுங்கள். மனத்தை உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள். மனதில் எதையாவது நினைத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்களைக் கவனிப்போருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். நோயாளியைக் கவனிப்போர் தங்கள் மனத்தை அன்பாலும் பண்பாலும் நிறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலையின் கவர்ச்சியற்ற நேரங்களில் - அதாவது சளி, எச்சில், சிறுநீர், மலம் போன்றவற்றால் - அருவருப்படைய வேண்டாம். உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். குடும்பத்தில் அனைவரும் கை கொடுங்கள்.
உங்களுக்குள்ள ஒரே தாய் அவர் தான். உங்களுக்கு உயிர் கொடுத்தார். உங்களுக்கு ஆசிரியையாய், வைத்தியராய், ஆயாவாக இருந்தார். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்தார். உங்களை வளர்த்து, சொத்துக்களைப் பகிர்ந்தளித்து உங்களை வாரிசாக்கியதெல்லாம் பெற்றோரிடம் நாம் பெற்ற பெரும் பாக்கியம். அதனால் தான் புத்தர் 'கட்டானு' மற்றும் 'கதவேடி' என்ற இரண்டு விதமான பண்புகளைக் கற்றுத் தந்தார். 'கட்டானு' என்றால் நன்றிக் கடன் அறிதல். 'கதவேடி' என்றால் அந்த கடனுக்காகப் பரிகாரம் செய்வது, அதைத் திருப்பித் தருவது. இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகும் பண்புகள். நம் பெற்றோருக்கு ஏதாவது தேவைப்பட்டால், உடல் நலமில்லாமல் இருந்தால் அல்லது கஷ்டத்தில் இருந்தால் நாம் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இது தான் கட்டானு-கதவேடி. இந்தப் பண்பு தான் உலகைத் தாங்கி நிற்கிறது. குடும்பங்கள் பிரியாமல் இருக்கச் செய்கிறது. குடும்பங்கள் நிலையாயிருக்கவும் முரண்பாடில்லாமல் இருக்கவும் செய்கிறது.
இன்று நீங்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது இந்த அறபோதனையை ஓர் அன்பளிப்பாகக் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்குப் பொருளாகக் கொடுக்க எதுவும் என்னிடம் இல்லை. இந்த வீட்டில் பொருட்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. எனவே உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ள, உங்களால் என்றைக்கும் தீர்க்க முடியாத அன்பளிப்பைக் கொண்டு வந்திருக்கின்றேன். இந்த அன்பளிப்பை வாங்கியபின் அதனை எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தரலாம். அது குறையவே குறையாது. வாய்மையின் இயல்பு இது. உங்களுக்கு இந்தத் தம்ம தானத்தைத் தருவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த அன்பளிப்பு உங்களுக்கு மனத்தின், உடலின் துன்பங்களைச் சமாளிக்க ஊக்கம் தரும் என நம்புகிறேன்.
* * * * * *
[1] சச்ச தம்மா, இயற்கை நீதி
[2] "புத்தோ" என்றால் விழித்திருத்தல். உள் மூச்சின் போது "புத்-" என்ற தியான வார்த்தையின் முதல் பகுதியை நினைத்துக்கொள்ளுங்கள். வெளி மூச்சின் போது "தோ" என்ற பகுதியை நினைவில் கொள்ளுங்கள்.
[3] இறந்த வீட்டில் பொதுவாக ஓதப்படும் திருப்பா
© Copyright
Provenance: 1992 The Sangha at Wat Pah Nanachat. First impression, 1992. Transcribed from the print edition in 1994 by David Savage under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Living Dhamma", by Venerable Ajahn Chah, translated from the Thai by The Sangha at Wat Pah Nanachat. Access to Insight, 1 December 2012,
http://www.accesstoinsight.org/lib/thai/chah/living.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/