வஸ்திரம் பற்றிய கதை
வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
வஸ்திரம் பற்றிய கதை
வஸ்தூபம சுத்தம்
(சுருக்கம்)
இவ்வாறு நான் கேள்வியுற்றேன். சாவத்தியில் உள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகனுடைய ஆச்சிரமத்தில் ஒருமுறை பகவான் எழுந்தருளியிருந்த பொழுது, 'பிக்குகளே' என பிக்குகளை விழித்தார். அவர்கள் 'சுவாமி' என விடை பகர்ந்தனர். பகவான் அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்:
'அழுக்கடைந்த கறை கொண்ட துணியை வண்ணான், நீலம், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு ஆன எந்த நிறத்தில் தோய்த்தாலும் அதன் நிறம் தூய்மையற்றதாய் மங்கலாகவே இருக்கும். ஏன்? துணி சுத்தமாயில்லை. அவ்வாறே மனமும் அழுக்குடையதாயிருந்தால் எதிர்கால வாழ்வு கெட்டதாகவேயிருக்கும் என எதிர் பார்க்கலாம்.
தூய வெள்ளைத் துணியை நீலம், மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு ஆன எந்த நிறத்தில் தோய்த்தாலும் அது அழகிய தெளிவான நிறத்தைக் காட்டும். ஏன்? துணி தூய்மையாயிருப்பதால். அவ்வாறே மனமும் தூய்மையாயிருந்தால் எதிர்கால வாழ்வும் நல்லதாயிருக்குமென எதிர்பார்க்கலாம்.
மனத்தின் களங்கங்கள் எவை?
காமம் - அளவிறந்த ஆசை - இவை மனக் களங்கங்கள். அவ்வாறே பகைமை ...கோபம் ... மனக்காழ்ப்பு ... பாசாங்கு ...குரோதம் ... அழுக்காறு ... பேராசை ...தந்திரம் ... வஞ்சனை ... முரட்டுத்தனம் ... தற்பெருமை ... அகங்காரம் ... இறுமாப்பு .... வீம்பு ....சோம்பல். இவை மனக் களங்கங்கள்.
பிக்குகளே, பிக்கு ஒருவர் காமத்தையும் அளவு கடந்த ஆசையையும் மனத்திலுள்ள ஒரு களங்கமாக அறிந்தால் அதைக் கைவிடுகிறார். அவ்வாறே பகைமை ...கோபம் ... மனக்காழ்ப்பு ... பாசாங்கு ...குரோதம் ... அழுக்காறு ... பேராசை ...தந்திரம் ... வஞ்சனை ... முரட்டுத்தனம் ... தற்பெருமை ... அகங்காரம் ... இறுமாப்பு .... வீம்பு ... சோம்பல்.. என்பவற்றை மனக் களங்கமாக அறிந்தால் அவற்றைக் கைவிடுகிறார்.
அந்த பிக்கு காமத்தை-அளவுகடந்த ஆசையை மனக்களங்கமென உணர்ந்து கைவிட்டால் பகைமை ...கோபம் ... மனக்காழ்ப்பு ... பாசாங்கு ...குரோதம் ... அழுக்காறு ... பேராசை ...தந்திரம் ... வஞ்சனை ... முரட்டுத்தனம் ... தற்பெருமை ... அகங்காரம் ... இறுமாப்பு .... வீம்பு ... சோம்பல்.. என்பவற்றை மனக் களங்கமாக அறிந்தால் அவற்றைக் கைவிட்டதும் பகவானிடம் பிரீதி அடைகிறான்.
'அவர் பகவான், அருகதர், சம்மா சம்புத்தர், கல்வியும் ஞானமும் உடையவர், சுகதர், உலகங்களை அறிந்தவர், மக்களை நல்வழிப்படுத்துவதில் இணையற்றவர், தேவர், மனிதர் ஆகியோரின் குரு, புத்தர், பகவான்', என்பதை உணர்வார். தருமத்தில் பெரும் பிரீதி அடைகிறார். 'இத்தர்மம் பகவானால் நன்றாகக் கூறப்பட்டது. இந்த வாழ்விலேயே அதன் பலனைப் பெறலாம். அது உடனடியாகப் பலன் தருவது, மக்களை வந்து பரீட்சித்துப் பாருங்கள் என்று அழைப்பது, அது நிர்வாணமென்ற இலட்சியத்தைத் தருவது. அறிஞர் அதைத் தாமாகவே அறிந்து அனுபவிக்க வேண்டியது' என உணர்வார். அன்றியும் சங்கத்தில் பெரும் பிரீதி கொள்ளுகிறார். 'அச்சங்கத்தவர் நல்லொழுக்கமுடையவர், நேர்மையுடையவர், ஞானமுடையவர், கடமையைச் செய்பவர், மேலும் பகவானுடைய சங்கத்தவர் நாலு சோடியானவர், எட்டுப்பிரிவுடையவர் [1], இவர்கள் கொடை பெறுவதற்குத் தகுதி உடையவர், வணக்கம் பெறத் தகுதியுடையவர், உலகுக்கு ஒப்புயர்வற்ற புண்ணியத்தின் நாற்றுக்களம் போன்றவர்', என்பதை உணர்வர்.
ஈற்றில் களங்கங்கள் முற்றாய் அகற்றப் பட்டதும், வெளியே உமிழப் பட்டதும், அப்புறப்படுத்தப் பட்டதும், கைவிடப் பட்டதும், பகவானிடத்துப் பிரீதியுடையவனென்ற எண்ணத்தோடு, அவர் போதித்த தர்மத்தில் பிரீதியுடையவர், அவருடைய சங்கத்தில் பிரீதி உடையவர் என்ற எண்ணத்தினால் உண்மையின் பொருள், உண்மை என்பவற்றில் உணர்ச்சி உண்டாகிறது. மகிழ்ச்சி உண்டானதும் பிரீதி உண்டாகிறது. பிரீதி உண்டானதும் உடல் ஓய்வடைகிறது. ஓய்வுண்டானதும் திருப்தி உண்டாகிறது. திருப்தியுடையவனுடைய மனம் சமாதியடைகிறது.
சீலத்திலேயும், சித்த விநயத்திலேயும், ஞானத்திலேயும் இத்தகைய நிலையை அடைந்த பிக்கு, ஆன்மீக வாழ்வுக்கு இடையூறின்றித் திறமாகப் பாகம் பண்ணப்பட்ட அன்னம், கறி முதலியவற்றை உண்ணலாம். அழுக்கேறிய துணியைத் தெளிந்த நீரில் தோய்த்தால் அது தூயதாகவும் அழுக்கற்றதாகவும் மாறுவது போல, தங்க மானது உருக்கினால் மாசிலாத் தங்கமாவது போல, சீலம், விநயம், ஞானம் என்பவற்றால் இந்நிலை அடைந்த பிக்குவானவர், தமது ஆன்மீக வாழ்வுக்குப் பங்கமின்றி அறுசுவை உண்டி சாப்பிடலாம்.
'மைத்திரீ, கருணை, முதிதா, உபேக்கா என்ற எண்ணங்களோடு உலகில் ஒரு திசையையும் இரண்டாவது திசையையும், மூன்றாவது திசையையும், நாலாவது திசையையும் மேற்றிசையையும், கீழ்த்திசையையும் எங்கும் இப்பரந்த உலகின் குறுக்கேயும் நெடுக்கேயும் பகையற்ற, துவேஷமில்லாத எல்லையில்லாத எல்லாவற்றையுமடக்கிய பரந்த மனத்தின் பிரகாசமான சிந்தனை பரவியிருக்கிறான்.
பின்னர் அவன் அறிகிறான். இது இருக்கிறது. கீழான ஒரு நிலையும் இருக்கிறது. இந்தக்காட்சிக்கு அப்பாலேதான் விமுக்தி உண்டு. இதை அறிந்து உணர்ந்து கொண்டால் காம ஆசவங்கள், பவ ஆசவங்கள்,அறியாமை என்ற களங்கங்களிலிருந்து விடுபடுகிறான். விடுதலை பெற்றதும் அவன் விடுதலைபெற்றான் என்ற அறிவு உண்டாகிறது. அப்போது அவனுக்கு அறிவுண்டாகிறது. பிறப்பு ஒழிந்தது, துறவு வாழ்வு வாழப்பட்டது, செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. பிக்குகளே! அத்தகைய பிக்கு உள்ளே தூய்மை அடைந்துள்ளான்.
அப்போது பக்கத்திலே சுந்தரிக பாரத்துவாஜா என்ற அந்தணன் இருந்தான். அவன் பகவானை 'பகவான் பாஹூக ஆற்றில் வணக்கத்துக்குரிய கோதமர் நீராடப் போகிறாரா?' என்று கேட்டான். 'பாஹூகா ஆற்றில் குளிப்பதால் என்ன பயன், அந்தணனே? அது என்ன நன்மையைச் செய்கிறது?'
'வணக்கத்துகுரிய கோதமரே, பாஹூக ஆறு பரிசுத்தஞ் செய்வதென்றும், புனிதமானதென்றும் பலர் கூறுகிறார்கள். பல மக்கள் அதிலே குளித்துத் தமது பாவங்களைப் போக்குகிறார்கள்.
அப்போது பகவான் சுந்தரிக பாரத்வாஜ ரென்ற அந்தணனுக்கு பின்வருமாறு கூறினார்.
பாஹூக ஆற்றிலும் ஆதிகக்கா ஆற்றிலும், காயாவிலும், சுந்தரிகாவிலும், சரஸ்ஸதியிலும், பயாகையிலும், பாஹுமதியிலும் பாவஞ்செய்த முட்டாள் தினமும் நீராடினாலும் அவன் மனத்திலுள்ள துவேஷமும் தீமையும் கழுவப்படமாட்டா. உள்ளத்தில் தூய்மையுள்ளவனுக்கு எல்லா நாளும் நல்ல நாளே, எல்லா நாளும் புனிதமானதே. அவன் தூய்மையுடைவனாய் தூய கருமங்களைச் செய்து எப்பொழுதும் விரதங்களைக் காப்பாற்றுகிறான். ஆனபடியால் பிராமணனே, இங்கே வந்து நீராடு: உயிர்களெல்லாவற்றுக்கும் அன்பு செய், பொய் சொல்லாதே, பிராணிகளைக் கொல்லாதே, களவெடாதே, பேராசையுள்ள லோபியாக இராதே, நம்பிக்கையோடு இரு. காயாவுக்கு ஏன் போகிறாய். உன் வீட்டிலுள்ள கிணறே காயாவுக்குச் சரி'.
இவ்வாறு கூறியதும் சுந்தரிக பாரத்வாஜர் பகவானுக்குக் கூறினான்: 'சாது! (நன்று, நன்று) வணக்கத்துக்குரிய கோதமரே சாது! தலைகீழாக்கப் பட்டதை நேராக நிமிர்த்தி வைத்தது போலிருக்கிறது. மறைத்து வைக்கப்பட்டதை வெளிப்படுத்தியது போலிருக்கிறது. வழி தவறிப் போனவருக்குவழி காட்டியது போலிருக்கிறது. இருட்டறையில் இருப்பவற்றைக் கண்ணுள்ளவர் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது போலிருக்கிறது. இவ்வாறு பல வகையில் வணக்கத்துக்குரிய கோதமர் தருமத்தை விளக்கியுள்ளார். நான் பகவான் புத்தரைச் சரணடைகிறேன். தர்மத்தைச் சரணடைகிறேன். சங்கத்தைச் சரணடைகிறேன். என்னைச் சங்கத்திலே சேர்த்து வணக்கத்துக்குரிய கோதமர் கையால் உயர் தீக்கை (உபசம்பதா) பெறுவேனாக.'
சுந்தரிக பாரத்வாஜர் என்ற பிராமணர் சங்கத்திலே சேர்க்கப்பட்டு உபசம்பதை அபிடேகம் பெற்றார். உபசம்பத பெற்ற சிலகாலத்தில் ஆயுஸ்மான் பாரத்வாஜர் தனித்து ஒதுங்கி வாழ்ந்தார். மிக்க ஊக்கமும், ஆர்வமும் திடசித்தமும் பூண்டவராய் உயர்வுற உயர்ந்த பெருநிலை அடைந்தார். உயர்குடிப் பிறந்த புத்திரர்கள் வீட்டு நிலையிலிருந்து வீடில்லா பரிவிராஜ நிலையை எதற்காக அடைகிறாரோ, அந்த உயர்நிலையை அடைந்தார். 'பிறப்பு ஒழிந்தது, துறவுவாழ்வு வாழப்பட்டது, செய்யவேண்டியது செய்யப்பட்டது, மேலுஞ் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை', என்ற உண்மையை உயர்ஞானத்தினால் அறிந்தார். இவ்வாறு ஆயுஸ்மான் பாரத்வாஜரும் அருகதரில் ஒருவரானார்.
(மஜ்ஜிம நிகாய சுத்த இல. 7)
* * *
[1] நான்கு சோடிகள் என்றால் சோதாபத்தி, சகதாகாமி, அநாகாமி, அருகதர் என்ற நான்கு நிலையின் மார்க்கத்தையும், அதனால் வரும் பலனையும் குறிக்கும். இவ்வாறு சோதாபத்தி நிலையில் மார்க்கம், பலம் எனவும், சகதாகாமி நிலையில் மார்க்கம் பலம் என்றும், அநாகாமி நிலையில் மார்க்கம் பலம் என்றும், அருகத நிலையில் நிலையில் மார்க்கம் பலம் என்றும் நாலு ஜோடியும் அதன்படி எட்டு பேரும் காணப்படுகின்றனர்.