ஆனந்தம்
தியானத்தில் ஆனந்தம்
சோணா பிக்கு
Joy in Meditation
Adapted from this YouTube Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
கேள்வி: தியானத்தின் போது மனத்தில் சோகமான அல்லது அச்ச உணர்ச்சிகள் அல்லது அதுபோன்ற அழுத்தமான பிற உணர்ச்சிகள் இருக்கும்போது எவ்வாறு ஆனந்தத்தோடு இருப்பது? 'ஆனந்தம்' என்று கூறுவதை விளக்கிக் கூறுங்கள்.
மனத்தில் சோகம் இருக்கையில், ஆனந்தமும் அதே சமயத்தில் இருக்க முடியாது. மனத்தில் சோகமோ அச்சமோ இருக்கலாம் அல்லது ஆனந்தம் இருக்கலாம் ஆனால் ஒரே சமயத்தில் இரண்டும் இருக்க முடியாது. எனவே சோகமோ, பயமோ அல்லது அதுபோன்ற அழுத்தமான உணர்ச்சிகள் மனத்தில் இருக்குமானால் ஒரு மாற்றம் உண்டாக்கப் பட வேண்டும்.
சாதாரண மக்கள் மனத்தில் ஒரு உணர்ச்சி உண்டாக ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதாவது உலகில் உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தங்கள் மனத்தில் மகிழ்ச்சியோ, சோகமோ, பயமோ உண்டாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் நாம் சொல்வது அதை நம்பினால், அதாவது முதலில் உலகில் எல்லாம் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கவனித்த பின்னரே நாம் மன அமைதி கொள்வோம் என்பதை நம்பினால், நாம் தியானம் செய்வதில் பயனே இல்லை.
தியானம் என்று கூறுவதைவிடப் பாவனை அதாவது மனத்தைப் பக்குவப் படுத்தல் என்பதே நமது பயிற்சி. முதலில் விவேகம் வேண்டும். அமைதி பற்றி யோசிப்பதற்கு முன்னர் சற்று நுண்ணறிவு வேண்டும். சுற்றுச் சூழலுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை, அதாவது புறச்சூழ்நிலைகளைப் பிரதிபலிக்குமாறு நமது உணர்ச்சிகள் இருக்க வேண்டும் என்ற நம் எண்ணத்தில் உள்ள தொடர்பை, அறுத்தெறிய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். புறச் சூழ்நிலைகளை, நமது உணர்ச்சிகள் பிரதிபலிக்கப் போவதில்லை. சூழ்நிலை எப்படி இருந்தாலும் நமது உணர்ச்சிகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவெடுக்க வேண்டும். நாம் எவ்வாறு ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிகின்றோமோ, அதேபோல நமது உணர்ச்சிகளையும் தேர்ந்தெடுக்கப் போகின்றோம். வீட்டைவிட்டு வெளியே சென்றபின் எப்படியாவது இலைகள் விழுந்து நம்மை மூடிக் கொள்ளும் என்று நாம் நினைப்பதில்லையே? அல்லது காற்று அடித்து எந்தப் பொருளாவது பறந்து வந்து நம்மை மூடிக் கொள்ளும் என்று நினைப்பதில்லையே? நாம் யோசித்து எதை உடுத்துவது என்பதைத் தீர்மானிக்கின்றோம். அதே போல ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் இன்றைக்கு எத்தகைய உணர்ச்சிகளை மேற்கொள்ளப் போகின்றோம் என்பதையும் நாமே தேர்ந்தெடுக்க வேண்டும். உலகம் நம்மை எப்படி உணரச் செய்யும் என்று நாம் கேட்கவில்லை. 'நான் இன்று எப்படி உணரப் போகின்றேன்,' என்பதை நாமே தீர்மானிக்கப் போகின்றோம்.
அட! இது நடக்கிற காரியமா? எனது உணர்ச்சிகளை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமா அல்லது உலகம் எனக்கு உணர்ச்சிகளைத் தருகிறதா? நான் ஒரு ஆய்வு செய்யப் போகிறேன். நான் ஒரு வெறுமையான அறையில் உட்காரப் போகிறேன். வெளியிலிருந்து எனது ஆய்வினைப் பாதிக்கும் வகையில் எதுவும் நிகழாது இருப்பதற்காக அந்த அறையின் கதவுகளும் மூடப்பட்டிருக்கின்றன. பின் எனது மனத்தில் ஒரு ஆனந்தமான உணர்ச்சியினை உருவாக்க முற்படுகின்றேன். ஆரம்பத்தில் இதற்குச் சற்று ஊக்கம் தேவைப் படலாம். ஆனந்தம் தரும் ஏதாவது பழைய நினைவோ அல்லது கற்பனையோ தேவைப் படலாம். ஆனால் ஆனந்தம் மனத்தில் எழுந்த பின் நான் நினைத்த நண்பனையோ அல்லது நான் கற்பனை செய்த ஒரு அழகான நிகழ்ச்சியையோ மறந்து விடலாம். ஆனந்தம் மனத்தில் உண்டான பின்பு அந்த நினைவையும் கற்பனையையும் விட்டு விட்டு, ஆனந்தமான உணர்ச்சியுடன் மட்டுமே இருந்து அதனை எவ்வளவு நேரம் மனத்தில் தங்க வைத்திருக்க முடியும் என்று பார்க்க வேண்டும். மனத்தை வேறு எப்படியும் திசை திருப்பாமல், அந்த உணர்ச்சியின் மீது மட்டும் கவனம் செலுத்தி அதனை நீடிக்க வைக்கலாம். இப்படித்தான் நமது உணர்ச்சிகளை உருவாக்க நாம் கற்றுக் கொள்கின்றோம். மேலும் முதலில் ஒரு பழைய நினைவின் அல்லது கற்பனையின் துணை தேவைப் படும். பின் அந்த உணர்ச்சியை உண்டாக்கத் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்ய வேண்டும். உலகத்திடம் நாம் எத்தகைய உணர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுப் பயிற்சி செய்யக் கூடாது. இப்படி அமர்ந்து பயிற்சி செய்யாத நேரத்தில் நமது மனத்தை உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். மற்ற நேரங்களில் நமது மனத்தைக் கவனிக்கும்போது தெளிவாவது என்னவெனில்: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றைப் பார்த்தால் நாம் விசனப்படுகிறோம். ஒரு குழந்தை அழுவதைக் கண்டு சோகப் படுகிறோம். பின் பூங்காவில் ஒரு நாய்குட்டி பந்தைப் பிடிக்க ஓடுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இதை உற்றுக் கவனியுங்கள். உலகத்தில் நடப்பதை நமது மனம் பிரதிபலிப்பதைக் கவனித்தீர்களா? அப்படி வாழ்க்கையை நடத்தக் கூடாது என்பதை உணருங்கள். அது திறமையான வழி இல்லை. எனவே அப்படி வாழ்வதை நிறுத்த வேண்டும். உலக நடவடிக்கைகளின் எதிர்த்தாக்குதல்களால் மனத்தில் உணர்ச்சிகள் உண்டாவதை மேலும் மேலும் அறிந்திருக்க வேண்டும்.
முதலில் இந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். உலகில் நமக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகள் நிகழ்வதால், நமது மனத்திலும் பிடிக்காத உணர்ச்சிகள் உண்டாக வேண்டுமென்பதில்லை. உலக நடவடிக்கைகளால் கெட்ட உணர்ச்சிகள் மனத்தில் உண்டாவது தேவையும் இல்லை. அது சரியானதோ, அறிவான வழியோ அல்ல. நமக்குப் பிடிக்காத நடவடிக்கைகள் உலகில் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் நாம் எப்போதும் சோகமாகவும், பயத்தோடும், விசனப்பட்டும் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் நாம் எப்போதும் அப்படி இருப்பதில்லையே, ஏன்? ஏனென்றால் நமது கவனம் எப்போதுமே அவற்றின் மீது செலுத்தப் படுவதில்லை. எனவே இவ்வாறு நாம் பிடிக்காத மன உணர்ச்சிகளைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. துன்ப நிகழ்ச்சிகளும், வேடிக்கையான நிகழ்ச்சிகளும் எப்போதும் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிலர் சிரிப்பதும், சிலர் அழுவதும் ஒரே சமயத்தில் உலகில் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கானோர், கோடிக்கணக்கானோர் இந்த இரண்டு எல்லைகளிலும் இருக்கின்றனர். எனவே இந்த உணர்ச்சிகளை நாமும் பிரதிபலிக்க வேண்டுமென நாம் ஏன் நினைக்க வேண்டும்? இது நல்ல கருத்து என்று நினைக்கின்றோமா? இப்படி உணர வேண்டும் என்று நினைக்கின்றோமா? இது உதவுமா? ஒரு நல்லவன் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோமா? இந்தக் காரணங்களையெல்லாம் நாம் ஆராய வேண்டும். ஒரு நல்ல மனிதன் உலகில் துன்பம் நிகழும் போது தானும் சோகமான உணர்ச்சிகளை உணர வேண்டும் என்பது உண்மையா? இது சரியா? இது அறிவுள்ள செயலா? இது தேவையா? இது உதவுமா? இந்தக் கேள்விகளை யெல்லாம் வேறு யாரும் உங்களைக் கேட்க முடியாது. நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல ஆரம்பம். அறிவுடன் இதனைத் தெரிந்து கொண்டபின் அதாவது உலகில் நடப்பதைக் கண்டு நாமும் பிடிக்காத உணர்ச்சிகளை மேற்கொள்வது திறமையானதல்ல என்பதை உணர்ந்த பின், நமது பார்வை உடனே மாறிவிடும் என்றும் சொல்ல முடியாது. இனிமேல் தான் நாம் கற்கும் செயற்றொடர் துவங்குகிறது.
இது காலப்போக்கில் கற்றுக் கொள்ள வேண்டியது. எனது வாழ்க்கையில் இது 30 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அத்தனை வருடங்களுக்குப் பின் தான் பலன் கிடைக்கும் என்று எண்ண வேண்டாம். ஆரம்பத்தில் 25% அல்லது 50% துக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். முதல் 50 சதவீதம் சற்றுச் சுலபமானது. அடுத்த 50 சதவீதம் சற்றுக் கடினம். அதிலும் கடைசி 10 சதவீதம் மிகவும் கடினம். ஆனால் உங்கள் துக்கம் 50% குறையும் என்பது ஒரு நல்ல செய்தி தானே? (சிரிப்பு). உங்கள் சோகம், சிக்கல், கவலை பயம் எல்லாம் 50% குறைவது மிகவும் அற்புதமான விஷயம் அல்லவா? இதற்குச் சில வருடங்கள் செலவிட வேண்டுமென்றால் அது பயனுள்ள வகையில் செலவு செய்யப்பட்ட காலம் தானே? உள்ளத்தின் பாரத்தைக் குறைப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்? ஏன் துன்பத்தோடு வாழவேண்டும்? துக்கத்துடன் மக்கள் வாழ்வதற்குக் காரணம் அவர்களுக்கு மாற்று வழி இருப்பது தெரியவில்லை என்பதால் தான். எனவேதான் தொடர்ந்து துக்கத்துடனேயே வாழ்கின்றனர்.
எனவே, 'வேறு வழி உண்டு,' என்று உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு சிலர் தான் இதனைச் செய்திருப்பதாக நினைக்க வேண்டாம். இலட்சக் கணக்கானோர் இந்த உறுதிப்பாட்டுடன், சரியான பயிற்சியின் மூலம் தங்கள் துக்கத்தைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதனைச் செய்வதற்கு அயின்ஸ்டைன் (Einstein) போன்ற அறிஞர்களுக்கிருந்த புத்திக் கூர்மை தேவையில்லை. புத்தர் காலத்திலிருந்தே சாதாரண மக்களும் தங்கள் துக்கத்தை நீக்கியிருக்கின்றனர். சொல்லப்போனால் 99 சதவீதமானோருக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாது. இந்த பயிற்சியைச் செய்ய விரிந்த கருத்துக்கள் ஏதும் தேவையில்லை. சில எளிமையான கருத்துக்களைச் சிறிது நேரம் கேட்டாலே புரிந்து கொள்ளலாம். அந்தப் போதனைகளை வைத்துத் தங்கள் உள்ளங்களைப் பயிற்சி செய்து மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்குச் செலவு ஏதும் இல்லை. உண்மையில், இந்தப் பயிற்சி செய்யாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பெரும் நஷ்டம் உண்டாகி இருக்கும். திறமையான மன உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்க்கை பெரும் பாரமாக இருந்திருக்கும். மனத்தின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இலேசாகவும் பரந்த மனப்பாங்குடனும் இருப்பதைவிட வேறு எதற்கும் மதிப்பில்லை. நாம் உலகில் செய்யும் காரியங்கள் - வாழும் வீடு, செய்யும் தொழில் இவற்றை எல்லாம் உள்ளத்தின் விடுதலையோடு ஒப்பிடவே முடியாது. அவை எல்லாம் மிக அற்பமான விஷயங்கள். அதற்காக நாம் ஒரு குகையிலோ, வறுமையிலோ அல்லது பட்டினி கிடந்தோ வாழவேண்டும் என்பது இல்லை. தேவைக் கேற்பத் தொழில் இருக்க வேண்டும். அதைச் சரி செய்தபின் உள்ளத்தின் வாழ்வைத் தவிர நமக்கு வேறு என்ன முக்கியம்? வாழ்கையின் மீதி நாட்களை வேறு எப்படிக் கழிப்பது? ‘வாழ்க்கைகளின்’ என்று கூடச் சொல்லலாம். சிலர் மேலும் நாம் பிறவி எடுக்கக்கூடும் என்பதைப் பற்றி நினைப்பதே இல்லை.
ஒரு சிலருக்கு வாழ்க்கை மிகவும் பாரமானதாகத் தோன்றுகிறது. வாழ்க்கை முடிந்து விட்டால் போதும் என்று நினைக்கின்றனர். தூங்கப் போனபின் விழித்தெழாமல் இருந்துவிட மாட்டேனோ என்று நினைக்கின்றனர். அது போலப் பலரும் வாழ்கின்றனர். வாழ்க்கையை மேலும் தொடர்வதற்கு உற்சாகம் இல்லாமல் இருக்கின்றனர். வாழ்க்கையைப் பற்றிய அவர்களது பார்வையே இதற்குக் காரணம். ஆனால் இந்த உள்ளத்தை மேம்படுத்தும் வேலையில் ஈடுபட்டால் - இது ஒரு அழகான கிரியாசக்தியுடன் (creative) உண்டான படைப்பு. நாம் முழுமனத்துடன் ஈடுபடும் போது வாழ்வதற்கு நாம் மிகவும் துடிப்புடன் இருப்போம். இதில் ஒரே குறை என்னவெனில் வாழ்வின் மீது உள்ள பற்றின் காரணமாக, அது முடிந்துவிடுமோ என்று அச்சம் எழலாம். நமது பார்வை எவ்வாறானதாக இருக்க வேண்டுமென்றால் மரணிப்பதற்கும் அஞ்சக் கூடாது, வாழ்வதற்கும் அஞ்சக் கூடாது. வாழ்வதற்குப் பயந்தால் அது ஒரு நொறுங்கிப்போன அனுபவம். மரணத்திற்கு அஞ்சினாலும் அதுவும் ஒரு நொறுக்கப்பட்ட அனுபவமே. எனவே இவ்விரு அச்சங்களையும் தவிர்த்து விட வேண்டும் - வாழ்வதின் மேல் உள்ள பயம் மரணத்தின் மீது உள்ள பயம். வாழப் பயப்படுவோரை நாம் சந்தித்திருக்கின்றோம். தற்கொலை செய்து கொள்ளப் பயப்படுகின்றனர் ஆனாலும் வாழ்க்கை முடிந்து விட்டால் போதும் என்றும் நினைக்கின்றனர். இது ஒரு மோசமான தெரிவு. மோசமான உள்ள நிலை. மறு எல்லையில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம். நோய் வாய்ப்பட்டு இறந்து விடுவோமோ என்ற அச்சம். இந்தப் பயத்துடன் வாழ்வதும் மோசமான தெரிவு. மூன்றாம் தெரிவு ஒன்று உள்ளதா? ஆம். மூன்றாம் தெரிவு: மரணத்திற்கும் பயம் இல்லை, வாழவும் பயம் இல்லை. அப்போது தான் நாம் உற்சாகமான வாழ்வு வாழலாம். மரணத்திற்குப் பயந்து அந்த உற்சாகத்தைக் கட்டுப் படுத்திக் கொள்வதில்லை. இப்போது நாம் ஒரு படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்வே ஒரு படைப்பாகி விடுகிறது. முழுவதும் அதன்மேல் கவனம் செலுத்தி அதனை முற்றாக வளர்க்கிறோம். ஏதோ பிழைத்தால் போதும் என்று வாழ்வதில்லை. இந்த வாழ்க்கையை எந்த அளவு மேம்படுத்தி அழகாக்க முடியும்? மனம் தான் உங்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது. வாழ்க்கை என்பது மனத்திற்கு மாற்று வார்த்தை. ஒரு கல்லுக்கு வாழ்க்கை இல்லை, ஏனென்றால் அதற்கு மனம் இல்லை. உங்களுக்கு வாழ்வு இருப்பதற்குக் காரணம் உங்களிடம் மனம் இருக்கிறது. எனவே உங்கள் மனம் தான் உங்கள் வாழ்க்கை.
"நான் சாதாரண மனிதன். உள்ளதோடு திருப்தியடைய வேண்டும்” என்று நாம் நினைக்கக் கூடாது. இது தவறான போக்கு. இப்படித் திருப்தி அடைய வேண்டாம். சாதாரண வாழ்க்கை போதுமான திறமையான வாழ்வு இல்லை. இவ்வாறு நினைக்கக் கூடாது. அதனோடு திருப்தி கொள்ள வேண்டாம். 'இருக்கும் நிலையோடு திருப்தியடைவோம். இல்லாவிட்டால் இன்னமும் மோசமாகப் போய் விடலாம்.' இப்படிப்பட்ட எண்ணத்தோடா ஒரு படைப்பை உருவாக்குவது? படைப்பு என்பது அன்பு. அன்பு என்பது வாழ்கையை முழுமையாக உணர்வது. இந்தக் கணத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவது. இதுவரை நீங்கள் செய்த திருப்திகரமான செயல்களை நினைத்துப் பாருங்கள். 'அந்தச் சமயத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். அப்போது செய்த அந்தச் செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.' அவற்றில் நேசம் இருந்ததைக் கவனித்தீர்களா? ஒரு செயலில் முழு ஈடுபாடு கொள்ளும்போது நேரம் என்பதே கணக்கில் இல்லை. அது காலவரையறையற்றது. சோர்வும் இல்லாதது. இருப்பது ஆனந்தம் மட்டுமே. இது ஒரு படைப்பு. இந்தச் செயலில், ஒவ்வொரு கணத்திலும் முழு மூச்சோடு உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.
மக்கள் படைத்தவனைத் தேடுகின்றனர். உங்கள் அகத்தில் தேடுங்கள். நீங்கள் தான் படைப்பவன். சங்காரங்கள், மனத்தின் முடிவெடுக்கும் இயல்பு. அது தான் படைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு படைப்பு இல்லை. தொடர்ந்து உருவாகும் செயற்றொடர். உங்களை நீங்களே உருவாக்குகின்றீர்கள். கிருத்துவ, யூத மரபில் படைத்தவன் வேறு, படைப்பு வேறு. நீங்கள் வேறு ஒருவனின் படைப்பு.
ஆனால் நீங்கள் படைப்பவனும் இல்லை படைக்கப்பட்டதும் இல்லை. இவ்விரண்டும் இல்லை. படைத்துக் கொண்டிருக்கப்படும் ஒரு செயற்றொடர் மட்டுமே இங்கு உள்ளது. நிலையான முடிவற்ற படைப்பு மட்டுமே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. படைப்பு என்பது உணர்ச்சி சம்பந்தப்பட்டது. அறிவுக்கு ஒரு சதவீதமே மதிப்பு, உணர்ச்சிக்கு மீதமுள்ள 99 சதவீத மதிப்புத் தரவேண்டும். நீங்கள் எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், உங்கள் கருத்துக்கள் சிறந்ததாக இருந்தாலும் உங்கள் உள்ளம் சரியாக இல்லையென்றால் உங்களுக்குத் திருப்தி இருக்காது. வாழ்க்கையிலிருந்து எதுவும் கிடக்காது. ஆனால் உள்ளம் நிறைவாக இருக்கும் போது அறிவாற்றல் குறைந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.
ஆக இதுவே படைக்கும் செயற்றொடரில் அன்பைக் கலந்து செய்வதாகும். அன்பு எப்போதும் துக்கம் குறைவான இடத்தை நோக்கியும், மேலோங்கிய தயாளகுணத்தை, அன்பை, தெளிவை நோக்கியும் தான் செல்லும். இது நம் சம்பந்தப்பட்டது இல்லை. இயற்கை நியதியைத் தொடர்ந்து செல்லும் பாதை. மேலும் மேலும் உள்ளத்தூய்மையை நோக்கியே செல்கிறது.
முதலில் நமது அடையாளங்களையோ, கடந்த காலத்தையோ, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இப்பாதையில் செல்வது நமது உரிமை என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனந்தத்தை, ஆறுதலை, பயமின்றி இருப்பதை உணர நாம் அழைக்கப் பட்டிருக்கின்றோம். இப்போதே! இதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. முடிவு எடுத்து விட்டோம். யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. யாரும் உங்களுக்கு மன்னிப்புத் தரவேண்டியதும் இல்லை. புறத்திலிருந்து எதுவும் தேவை இல்லை. உங்களால் முடியும். அனைத்தும் உங்கள் கையில் தான் இருக்கிறது.
எனவே இதுவே வழி. இந்தச் செயற்றொடர் பல ஆண்டுகள் நடக்கலாம். ஆனால் ஒவ்வொரு படியில் அடி எடுத்து வைக்கும் போதும், குடுவையில், நீர்ச் சொட்டுக்களை விட்டுக் கொண்டே செல்கிறோம். இறுதியில் குடுவை நிறைந்து விடும்.
Transcribed from a Dhamma Talk by Ajahn Sona
How does one become joyful or feel 'beautiful' when meditating when feeling sadness or fear or other powerful feelings? What do you mean when you say joyful.
Well, infact one does not become joyful while feeling sadness. You are either sad/fearful or joyful but you are not both. So if are feeling sadness or fear or other powerful feelings then you have to make a transition.
Ordinary people feel like they need a reason to feel an emotion. In other words they need a set of situations in the world that tells them to produce happiness or sadness or fear. We are saying that if you believe that, that you have to check out everything in the world is OK before you feel OK, then there is no point in meditating. The English word meditation may be a bit misleading, what we are trying to do is cultivate the mind. First we need wisdom. Before we even start with serenity and peace we need a bit of wisdom. We have to decide to cut the cord between ourselves and the outside environment in terms of needing to mirrror the environment with our emotions. We are no longer going to mirror the environment with our emotions. We are going to choose our emotions in the midst of the environment. So we are going to decide as we do with clothes, what to wear. We don't walk out the door and hope that leaves fall upon us. Or that something will blow in the wind and cover us. We choose carefully what we will wear. When we wake up in the morning we should be choosing how we are going to feel today. We are not asking, how the world will make me feel today. We are saying, 'How shall I feel today,' and we are choosing.
That is interesting. Can I decide how I feel or do feelings get handed to me by the world? I will do an experiment. I will sit in an empty room, a closed empty room so there is no data disturbing our experiment and I will try to feel an emotion of joy. So perhaps at first I will need some stimulus. I will need either memory or imagination to give me an object which produces joy. But once the joy arises I can let go of the friend I remembered, the day I remembered, the imagination of some beautiful event. Once the feeling of joy is aroused then I can let go of that (the memory or imagination) and just stay with the feeling itself and see how long I can maintain that feeling. We maintain the feeling by focusing the mind and not being distracted, not let the mind wander. So what we are doing is teaching ourselves how to produce feelings. And usually at first we need memories and imagination or somesort of cues to arouse the emotion. Then we practice the emotion again and again. We practice not by asking the world how I should feel. So notice that is what you doing the rest of the time when you are not sitting there focusing. Rest of the time when you are walking around and you watch yourself and you notice that because you just saw a newscast tonight on TV you feel anxious, then you saw a picture of a child crying and you feel sad and then you saw a dog running in the park chasing frisbees and now you feel happy. Notice that. Notice that you are just being a mirror reflecting something in the world. And notice that that is not the way to live. That is not skillful. So we have to stop doing that. We have to be more conscious of this - how we are just reacting, just reacting.
First of all we have to intellectually ascent to something. It is not wise or profitable to feel negative emotions because there are negative events in the world. It is not necessary or appropriate or wise to feel these negative emotions simply because these events happen in the world. These events are always happening in the world. So you should always be sad, afraid, anxious becuase there is always such events happeing. But you aren't. It is only when it catches your attention, isn't it? So it is not necessary to feel this way. Tragedies and comedies are always going on at the same time in the world. Somebody is laughing their heads off and other persons are weeping their eyes out at the same time in this world. Thousands, millions are doing the opposite ends of the spectrum. Why would you choose to emulate either of those emotions? Why? Do you think it is a good idea? Do yo think you have to feel this way? Do yo think it helps? Do you think a good person should feel this way? These are all the reasons we should examine. Is it true that a good person feels sad when pain and suffering exists in the world? Is that true? Is that wise? is that necessary? Is that helpful? Is it true that a person always laughs when others laughs? Is it true? Is it wise? is it necessary? Is it helpful? Nobody can ask you to do this Unless you see it yourself. That is a good start. Once you intellectually agree that it is just pointless for me to feel negative emotions because of events in the world. Once you see that clearly you still cannot instantly snap you fingers and see differently. Now the learning process begins.
It is a learning curve. Certainly in my life it has been going on for 30 years. Doesn't mean that you won't getting any rewards for that long. In the begining you can reduce a lot of suffering 25%, 50% in a few years. The first 50% is the easiest. The next 50% is harder. The last 10% is very difficult to get rid off. Does it sound like a good think if you would suffer 50% less? (laughter) - If negative sadness, anxiety, worry, fear - all these things are reduced by 50%? Wow, that would be beautiful, extraordinary. What a lovely thing! And if was a project that takes a couple of year would that be big price to pay? I don't think so. Since there is no living with it. The option of living with suffering with negative emotions is just not an option. What else in a person's life do they have to do but free themselves from the heaviness of the heart. Why live this way? The reason why people live this way is, they don't believe they have an alternative. So they continue.
So you have to say, 'I do have an alternative'. it is not just a few people who have done this. But millions over the ages have done this by commitment, to careful practice. But this doesn't require Einstienian IQ. Not really about brilliant ideas. From the time of the Buddha we have seen very ordinary people, 99.9% of them were illiterate, do it. They couldn't even read. There is no fancy or elaborate ideas to this. There are some simple ideas that can be communicated to a person who is listening. A few minutes and there is enough information in there that you can take and work with to advance in the heart. It costs nothing. In fact, the cost of life without it is too expensive. Life without emotional skills is a price beyond comparision - it is infinetly expensive. Life with emotions under control, supportive, light, free - is worth everything. What we do out there in the world for a living, the house we live in etc. those drop way into the background. It is just not the point of the exercise. We don't have to live in a cave or in poverty or starvation. We need adequate livelihood and then once that is taken care of, the whole point of the exercise is the heart - the life of the heart. What do we do with the rest of our lives? Maybe it is plural. May be many lifetimes? Some people keep forgetting about the possibility of more lives.
Some people think – let’s get over with it. May be I will go to sleep and may be not wake up. Lots of people live like that. They are not enthusiastic anymore or even eager to go on. And that is because of their view of existence. But if you have this work to do - very creative, very beautiful, a work of art. When we are creative and involved and totally inmmersed in creative work we love to live. Love to be alive. Only mistake we can make is we love it so much we are afraid it will end. We have to get to the view where we are not afraid to die and we are not afraid to live. Because when you are afraid to live that is a crushing experience and when you are afraid to die that is a crushing experience. So both these fears have to be let go off. The fear of life and the fear of death. And you see people who have given up, they wish to die. They are too afraid to kill themselves but they'd be happy if it was over. That is a poor choice. Very poor emotional condition. The other one is desperate fear that something may go wrong. That they may get sick that they may die. That is a desperate fear to live with. These are the two extremes. So is there a third choice? The third choice is: Not aftraid to die and not afraid to live. Then you are alive and full of life and you are not impeding that by the fear of death. Now you are engaged in a work of art. Your life now is a work of art. What else is there to do with life but to make it a work of art. To commit and fully develop it - not just as something to just get by with. How beautiful can I make this thing? It is your mind that makes your life beautiful. Life is another word for mind. A stone does not have a life because it does not have a mind. You have a life because you have a mind. So your mind is your life.
We should not think, "Well I am ordinary person so I guess I should be happy." Bad attitude. It is not good enough. The ordinary life is not skillful and not good enough. So it is not good enough to remain getting by. It could be worse. That is not the way you make a work of art. 'It could be worse.' That is not a work of art. A work of art is Love. Love is the total immersion in the present moment and a fullness of a sense of life. And think back on anything you have ever done that you loved to do. "I loved that time of my life. I loved what I was doing." Now you got it. The best of you is coming out. When you love it there is no time, it is timeless. There is no fatigue. There is just joy. It is creative. Creativity around your own life and full immersion in this moment of the creation of your life.
People look for the creator. Look within. You are the creator. Sankara, the process of putting things together, the decision making of the mind is that which makes you, creates you. You are not a product. you are a continuous process of making and creating. You are creating itself. You are not a creature. In the Judeao-christian, there is a creator and there is a creature. Creator and a product. You are supposed to be the product of somebody elses creation.
You are not the creator and you are not the creature. You are neither of those. There is creation going on. There is constant and endless creation going on. There is no objects in there. It is a flow of art going on. And the art is emotional. Value of intellectual is 1%, 99% is emotional. No matter how brilliant you are, how brilliant your ideas are, if your heart is not well you don't care. You get nothing out of life. If the heart is full intellectual content is minimal doesn't matter.
So this is the infusing and imbubing the creative process with Love. And the Love always goes towards the least suffering, the greatest generosity, kindness and clarity. It always goes in that direction. There is nothing personal about it. It always goes out becasue it is following laws. Always moves towards greater and greater quality of being.
First we have to be utterly convinced that it is our right without regard to anything about our identity or our past. We are invited to experience joy, ease, fearlessness. Now. Without any conditions or strings attached. Done. You don't have to ask permission from anybody. You don't need forgiveness, you don't need anything external. You can do it. it is up to you.
So that is the process and it is a process that can go on for years but each step of the way it is like putting drops in a bottle. The bottle fills up.