உட்கார்ந்து தியானம் செய்தல்

தியானம் செய்வது எப்படி? முகப்பு

தியானம் செய்வது எப்படி?

புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி

யுத்ததம்மோ பிக்கு

How To Meditate:

A Beginner's Guide to Peace

Yuttadhammo Bhikkhu

அதிகாரம் இரண்டு: உட்கார்ந்து தியானம் செய்தல்

Chapter Two: Sitting Meditation

English Version Video

முதல் அத்தியாயத்தில் கற்றதை முறையாக உட்கார்ந்து தியானம் செய்யும்போது எவ்வாறு பயன்படுத்துவதென்று இந்த அத்தியாயத்தில் நான் விளக்கப் போகிறேன். உட்கார்ந்து தியானம் செய்வதென்பது ஒரு எளிமையான தியானப்பயிற்சி. இதனைச் சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்தும் செய்யலாம் அல்லது ஒரு நாற்காலியில் அல்லது பலகையில் உட்கார்ந்தும் செய்யலாம். உட்காரவே முடியாதோருக்கு இதேமுறையைப் பயன்படுத்திப் படுத்த நிலையிலும் தியானம் செய்யலாம்.

நமது அனுபவத்தை குறைந்த பொருட்களோடு சம்பந்தப் படுத்தி மனம் வேறு திசையில் திருப்பப் படாமலும் குழப்பப் படாமலும் எளிதாகக் கவனிக்கும் நிலையில் இருப்பதற்காகவே நாம் முறையான தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறோம். அசையாமல் உட்கார்ந்திருக்கும் போது முழு உடலும் அசைவின்றி அமைதியடைகிறது. உடலுள் மூச்சு வந்து போவது மட்டுமே ஒரே அசைவாக இருக்கும். மூச்சு உடலுள் நுழையும் போது அடிவயிறு சற்று உயர்வதைக் காணலாம். அதே போல மூச்சு வெளியேறும்போது அடிவயிறு சற்றுத் தாழ்வதைக் காணலாம். அந்த அசைவை நாம் உணர முடியாவிட்டால் அதை உணரும் வரை கையை வயிற்றின் மீது வைத்திருப்பதன் மூலம் அதை உணரலாம்.

கையை வயிற்றின் மேல் வைத்தும் அதன் அசைவு தென்படவில்லையென்றால், அந்த அசைவு தெரியும் வரை படுத்திருக்கலாம். பொதுவாக உட்கார்ந்திருக்கும் போது அடிவயிறு விரிந்து, தாழ்வது தெரியாததற்குக் காரணம் மனதில் உள்ள சஞ்சலமும், கவலையுமே; பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் பயிற்சியைத் தொடரும்போது மனமும் உடலும் இளைப்பாறி, படுத்திருக்கும் போது உள்ளது போலவே உட்கார்ந்திருக்கும் போதும் இயற்கையாக மூச்சு வந்து போகும்.

முக்கியமாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது, மூச்சை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முயலாமல் அதன் மீது அழுத்தம் கொடுக்காமல் அதன் இயற்கை நிலையிலேயே அதைக் கவனிக்க வேண்டும் என்பதுதான். ஆரம்பத்தில் மூச்சு ஆழமில்லாததாகவும், அசௌகரியமாகவும் இருக்கலாம். ஆனால் கட்டுப்படுத்த முயல்வதை மனம் விட்டு விட்ட பின்னர் அடிவயிறு உயர்ந்து தாழ்வது தெளிவாகி அதை வசதியாகக் கவனிக்கலாம்.

இப்படி வயிறு உயர்ந்து தாழ்வதையே நாம் முதல் தியானப் பொருளாகப் பயன்படுத்துவோம். இதைச் சுலபமாகக் கவனிக்கக் கற்றுக் கொண்ட பின்னர், எப்போது வேண்டுமானாலும் திரும்பி வந்து கவனிக்கும் நிரந்தரத் தியானப் பொருளாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முறையாக உட்கார்ந்து தியானம் செய்யும்போது கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்: [1]

1. சம்மாணமிட்டு (அட்டணைக்காலிட்டு) உட்காரவும். ஒரு கால் மற்றதன் முன்னாலும், ஒன்றன் மேல் ஒன்றாக இல்லாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை அசௌகரிகமாக இருக்குமானால் அடி வயிற்றைக் கவனிக்க எது வசதியான நிலையோ அப்படி அமர்ந்து கொள்ளலாம்.

2. அமர்ந்திருக்கும்போது ஒரு கை மற்றதன் மேல் உள்ளங்கை மேற்புறமாக இருக்குமாறு மடியின் மீது வைத்திருக்க வேண்டும்.

3. முதுகை நேராக வைத்திருக்கவும். அசௌகரியமாக இருந்தால் முதுகு மிகவும் நேராக இருக்க வேண்டிய அவசியமில்லை; அடிவயிற்றின் அசைவு தெளிவாகத் தெரியும் எந்த உடல் நிலையிலும் இருக்கலாம்.

4. கண்களை மூடிக் கொள்ளுங்கள். நமது கவனம் வயிற்றின் மீது பதிந்திருப்பதால் கண்கள் திறந்திருந்தால் கவனம் திசை திருப்பப்பட்டு விடக் கூடும்.

5. மனக்கவனத்தை அடிவயிற்றில் பதிய வையுங்கள்; அடிவயிறு உயரும் போது இந்தத் தெளிவான எண்ணத்துக்கு இடம் கொடுங்கள்; மனதில் அமைதியாக, "உயர்கிறது" என்றும் அடிவயிறு தாழும் போது "தாழ்கிறது" என்றும் கூறிக் கொள்ளுங்கள். இந்தப் பயிற்சியை மனம் திசை திருப்பப்படும் வரை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்.

இந்தத் தெளிவான, "உயர்கிறது" அல்லது "தாழ்கிறது" என்ற எண்ணம் அடிவயிற்றில் கவனம் செலுத்தும்போது மனதில் இருக்க வேண்டியது மிக முக்கியம். அடிவயிற்றோடு பேசுவது போலத் தோன்ற வேண்டும். முடிந்தால் இந்தப் பயிற்சியை ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குத் தொடரலாம்.

அடுத்த படியாக, 1. உடல், 2. உணர்ச்சி, 3. மனம் மற்றும் 4. தம்மங்கள் ஆகிய நான்கு அடித்தலங்களையும் தியானப்பயிற்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும். உடலைப்பொருத்தவரையில் புதிதாகத் தியானிப்பவருக்கு வயிறு உயர்ந்து தாழ்வதைக் கவனிப்பதே போதுமானது. சில சமயம் உடலின் நிலையையும் குறிப்பிட்டுக் கொள்ளலாம். அதாவது உட்கார்ந்திருக்கும் போது "உட்கார்ந்திருத்தல், உட்கார்ந்திருத்தல்" என்றும், படுத்திருக்கும்போது "படுத்திருத்தல், படுத்திருத்தல்" என்றும் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

உணர்ச்சிகளைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் ஒரு உணர்ச்சி தோன்றினால், அடி வயிற்றின் மீதுள்ள மனதின் கவனத்தை அந்த உணர்ச்சியின் மீது திருப்ப வேண்டும். உடலில் வலி தோன்றினால் அந்த வலியையே தியானப் பொருளாக ஆக்கிக் கொள்ளலாம்.

நான்கு அடித்தலங்களும் எதார்த்தத்தின் அம்சங்களாக இருப்பதால் அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தியானப் பொருளாகக் கொள்ளலாம். அடிவயிற்றின் உயர்வையும், தாழ்வையும் மட்டும் கவனிக்க வேண்டும் என்பதில்லை. உடலில் வலி தோன்றினால் இந்தப் புதிய பொருள் மீது கவனம் செலுத்தி அதைத் தெளிவாகக் காண வேண்டும். அதன் மீது தீர்ப்புக் கூறக் கூடாது. முன்பு கூறியபடி அந்த வலியின் மீது கவனம் செலுத்தி "வலி.., வலி.., வலி.., வலி.." என்ற இந்தத் தெளிவான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அது மறையும் வரை அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். வலியினால் பாதிக்கப்படாமல் (ஏன் தோன்றியது, ஏன் எனக்குத் தோன்றியது என்று ஆராயாமல்) அதை வலி என்று மட்டும் தெரிந்து கொண்டு அதைக் கைவிட வேண்டும்.

மனதில் மகிழ்ச்சி தோன்றினால் தெளிவாக "மகிழ்ச்சி, மகிழ்ச்சி" என்று நினைத்துக் கொள்ள வேண்டும். சாந்தம் நிலவினால் “சாந்தம், சாந்தம்’’ என்றும், அமைதி நிலவினால் "அமைதி, அமைதி" என்றும் அந்த உணர்ச்சி மறையும் வரை நினைத்துக் கொள்ள வேண்டும். இங்கு நமது குறிக்கோள் அந்த உணர்ச்சியோடு பற்றுக் கொள்ளமல் விலகி இருப்பதே. இல்லாவிட்டால் அதைச் சார்ந்து இருந்து விடுவோம். நல்ல உணர்ச்சிகளை நம்பி இருந்தோமென்றால் அதுமறையும் போது நாம் ஏமாற்றமே காண்போம்.

அந்த உணர்ச்சி மறைந்த பின் மீண்டும் அடிவயிறு உயர்ந்து தாழ்வதன் மீது மனதின் கவனத்தைத் திருப்பி "உயர்வு", "தாழ்வு" என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

மனதைப் பொருத்தவரை தியானத்தின் போது பல்வேறு எண்ணங்கள் மனதில் தோன்றினால் அவற்றை "எண்ணங்கள்" என்று குறித்துக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் கடந்த காலத்தைப் பற்றியதாகவோ, எதிர்காலத்தைப் பற்றியதாகவோ இருக்கலாம் அல்லது நல்ல எண்ணங்களாகவோ, தீய எண்ணங்களாகவோ இருக்கலாம்; மனத்தை நினைத்தபடி அலைய விடாமல் எதார்த்தத்திலேயே நிலைநிறுத்தி வைக்க வேண்டும். எண்ணங்கள் மறைந்த பின் மீண்டும் அடிவயிறு உயர்ந்து தாழ்வதில் கவனத்தைச் செலுத்த வேண்டும், "உயர்வு", "தாழ்வு" .

தம்மங்களைப் பொருத்தவரை, ஒரு நல்ல அனுபவத்தின் காரணமாக மனதில் இன்பம் தோன்றினால் தெளிவாக "இன்பம், இன்பம்" என்றும், பிடிக்காத அனுபவம் உண்டானால் – வெறுப்பு, கோபம், சலிப்பு, செயல்குலைந்து போதல் போன்ற அனுபவங்கள் - தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டியது, "வெறுப்பு, வெறுப்பு", "கோபம், கோபம்", "சலிப்பு, சலிப்பு" அல்லது "செயல்குலைதல், செயல்குலைதல்" என்பதாகும். சோம்பலோ, தூக்கமோ தோன்றினால் நினைக்க வேண்டியது "சோம்பல், சோம்பல்" அல்லது "தூக்கம், தூக்கம்" என்றும் மன உலைச்சலோ கவலையோ தோன்றினால், "உலைச்சல், உலைச்சல்" அல்லது "கவலை, கவலை" என்றும் சந்தேகமோ, குழப்பமோ தோன்றினால் "சந்தேகம், சந்தேகம்" அல்லது "குழப்பம், குழப்பம்" என்றும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய தொல்லைகள் மறைந்த பின் மனம் திரும்ப வயிறு உயர்ந்து தாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும், "உயர்வு", "தாழ்வு".

முறையாகத் தியானப் பயிற்சி செய்வதில் பல அனுகூலங்கள் உள்ளன. [2]

முதலில் மனம் மகிழ்ச்சியும், அமைதியும் காண்கிறது. எதார்த்தத்தைத் தெளிவாகப் பார்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதால் மனம் மேலும் மகிழ்ச்சிகரமாகவும், இலகுவாகவும் மாறுகிறது. மேலும் பற்றுக் கொள்வதாலும், அனுபவங்கள் மீது தீர்ப்பளிப்பதாலும் உண்டாகும் அழுத்தங்களிலிருந்தும், துக்கத்திலிருந்தும் விடுபடுகிறது. பயிற்சியைச் சீராகத் தொடர்ந்து செய்யும் தியானிப்பவர்கள் சில நாட்களிலேயே பேரின்பத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர அனுபவிப்பார்கள். அப்படிபட்ட அனுபவங்கள் பயிற்சியின் விளைவுகளே என்பதை உணரவேண்டியது முக்கியம். ஆனால் அவை சரியான பயிற்சிக்கு மாற்றானவை அல்ல. மற்ற எந்த அனுபவத்தையும் போலவே இந்த அனுபவத்தையும் "மகிழ்ச்சி, மகிழ்ச்சி" அல்லது "அமைதி, அமைதி" என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பேரின்பமும், மகிழ்ச்சியும் தியானத்தினால் தோன்றியவை என்பதைக் குறுகிய காலப் பயிற்சியிலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாம் அனுகூலமாவது நம்மையும் நம்மைச் சுற்றியுமுள்ள உலகையும் அறிந்து கொள்ள முடிகிறது. தியானம் செய்யாமல் இப்படி அறிந்து கொள்வது சாத்தியமல்ல. நமது மனத்தின் துர்ப்பழக்கங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கின்றது என்பதைக் காணலாம்; மேலும் பிற செயல்களோடு நாம் பற்றுக் கொண்டாலொழிய அவை நமது துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாகாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மகிழ்ச்சியை மட்டும் நாம் விரும்பினாலும் துக்கம் ஏன் தோன்றுகிறது என்பதையும் அறியலாம்; ஆசையையும், வெறுப்பையும் தோற்றுவிக்கும் பொருட்கள் நிலையற்றவை, தொடர்ந்து தோன்றி மறையும் அனுபவங்கள் என்பதையும், அவற்றோடு பற்றுக் கொள்வதாலும் அவற்றைத் தொடர்வதாலும் எவ்விதப் பயனும் இல்லை என்பதையும் உணரலாம்.

மேலும் தியானம் செய்வதால் மற்றவர் மனத்தையும் இது போலவே அறிந்து கொள்ளலாம். தியானம் செய்யவில்லை யென்றால் மற்றவர் நடத்தையையும், பேச்சையும் வைத்து அவர்களைப் பற்றி உடனே தீர்ப்பளித்து விடுகிறோம். இதனால் அவர்கள்பால் இன்பம் அல்லது துன்பம், ஈர்ப்பு அல்லது வெறுப்பு தோன்றுகிறது. தியானப் பயிற்சியின் காரணமாக மற்றவரும் அவர்களது இன்ப, துன்பத்தைத் தங்களுக்கே எவ்வாறு ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பதை உணர்வதனால் அவர்கள் மீது தீர்ப்பளிக்காமல் அவர்கள் நிலைக்கேற்ப அவர்களை மன்னிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

பயிற்சியின் மூன்றாம் பலன், உலக நடவடிக்கைகளை மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும், அவற்றின் மீது அதிகக் கவனம் செலுத்தவும் முடிகிறது. தியானம் செய்யவில்லையென்றால் புரிந்து கொள்ளாமலேயே நாம் அன்றாடச் செயல்களை செய்கின்றோம். நமது நடத்தை, பேச்சு மற்றும் எண்ணங்களைத் தெளிவாக உணராமல் நடந்து கொள்கிறோம். தினசரி எதார்த்த அனுபவங்கள் தியானம் செய்வதனால் தெளிவாகிறது. இதனால் சிக்கலான சூழ்நிலைகள் தோன்றும் போது தெளிவான மனத்துடன் அவற்றைச் சந்திக்கவும், தோன்றிய சூழ்நிலையை உள்ளபடி ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இல்லாவிட்டால் அந்த அனுபவங்களால் இன்பம், துன்பம், பயம், கவலை, குழப்பம் போன்ற நிலைகளே தோன்றும். முரண்பாடுகளையும், நோய்களையும் ஏன் மரணத்தையும் தியானம் செய்வதனால் நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது.

நான்காம் அனுகூலமாவது, இதுவே தியானத்தின் உண்மையான நோக்கம், நமது மனத்தில் நமக்கும் பிறருக்கும் துக்கங்களைத் தோற்றுவிக்கும் தீய எண்ணங்களான கோபம், அவா, மாயை, வியாகூலம், கவலை, அழுத்தம், பயம், அகந்தை, அகம்பாவம் போன்றவற்றை விலக்கித் தவிர்க்க முடிகிறது. நமக்கும் பிறருக்கும் துன்பத்தையும் அழுத்தத்தையும் உணடாக்கும் மன நிலைகள் அனைத்தையும் தெளிவாகப் பார்த்துப் புரிந்து கொண்டு அவற்றைக் கைவிட முடிகிறது.

அடிப்படையான முறையான தியானப் பயிற்சி எவ்வாறு செய்வது என்பதையும் அதன் அனுகூலங்களையும் பற்றிய விளக்கம் இது. அடுத்து ஒரு முறையாவது இவ்வாறு பயிற்சி செய்த பின்னரே அடுத்த அத்தியாயத்தைப் படிக்க வேண்டும் அல்லது உங்கள் தினசரி வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும் என்பது எனது வேண்டுகோள். பொதுவாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு வசதிப்படுமாயின் எவ்வளவு நீண்ட நேரமும் பயிற்சி செய்யுங்கள். இங்கு படித்ததை மறப்பதற்கு முன் முறையாக இப்போதே பயிற்சி செய்யத் தொடங்குங்கள். உணவு விடுதியில் உணவுப் பதார்த்தப் பட்டியலைப் (menu) படிக்கும் நபரைப் போலன்றி, அதில் உள்ள உணவைச் சுவைப்பவரைப்போலத் தியானப் பயிற்சியின் பலனை நீங்களே அனுபவித்துப் பாருங்கள்.

தியானம் செய்யவதில் உங்களுக்குள்ள ஆர்வத்திற்கு நன்றி. இந்தப் போதனை வாழ்க்கையில் உங்களுக்கு நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் துன்பத்திலிருந்து விடுதலையும் தரவேண்டும் என்பதே எனது விருப்பம்.

விளக்கம்:

[1] முறையாக உட்காரும் இரண்டு உடல் நிலைகளைப் பின்னிணைப்பு வரைபடம் 41 இல் காண்க.

[2] கீழ்வரும் நான்கு அனுகூலங்களும் திக நிகாயம், சாங்கிதி சூத்திரத்திலிருந்து தொகுக்கப்பட்டவை (DN 33)

* * *