தியானம் செய்வது எப்படி? முன்னுரை
தியானம் செய்வது எப்படி? முகப்பு
தியானம் செய்வது எப்படி?
புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி.
யுத்ததம்மோ பிக்கு
How To Meditate:
A Beginner's Guide to Peace.
Yuttadhammo Bhikkhu
முன்னுரை
Introduction
இந்தச் சிறு நூல் எனது ஆறு பாகங்கள் கொண்ட யூ-டியூப் (you-tube) வீடியோ தொடரிலிருந்து (http://www.youtube.com/yuttadhammo) தொகுக்கப் பட்டது. லோஸ்-ஏஞ்சலீஸ் (Los Angeles) மத்தியச் சிறைச்சாலையில் விடியோக்கள் அனுமதிக்கப் படுவதில்லையாதலால் அங்கு பயன் படுத்துவதற்காக இந்நூல் தொகுக்கப் பட்டது. வீடியோக்கள் பயனுள்ளவையாக இருந்தாலும் அவற்றில் இருப்பதைவிட இந்த நூலில் மேலும் விளக்கங்களும், விரிவாக்கங்களும் தரப்பட்டுள்ளன. தற்போது தியான முறையைப் புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நூலையே பயன்படுத்துகிறேன்.
தியானத்துக்குப் புதியவர், படிப்படியாகக் கற்றுக் கொள்ள நான் எதிர் பார்க்கும் முறையிலேயே பாடங்களை வரிசைப் படுத்தியுள்ளேன். இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் அத்தியாயங்கள் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைக்கு மாறாக வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அதற்குக் காரணம் புதிதாகப் பயிற்சி செய்வோர் ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்வதையே விரும்புவார்கள். தியானத்தின் நோக்கமும் கருத்துக்களும் நன்கு புரிந்து கொள்ளப் பட்டபின் அவர்கள் பயிற்சியை விரிவாக்கி நடைத் தியானத்தையும், விருப்பப்பட்டால் மனக்கவனத்துடன் சாஸ்டாங்கமாகக் குனிந்து வணங்குவதையும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த நூலைத் தொகுப்பதற்கான ஒரே நோக்கம் தியானப்பயிற்சியினால் மக்கள் மேன்மேலும் பயன்பெற வேண்டும் என்பதே. அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ விரும்புவோர்க்கிடையே இந்த உலகில் மேலும் அமைதியும் மகிழ்ச்சியும் பரவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
இந்த நூல் உருவானதற்கு உதவிய பலருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன்: எனது பெற்றோர், கடந்த கால ஆசிரியர்கள், எனது நிகழ்கால ஆசிரியரும் உபாத்தியாயருமான அஜான் தோங் சிரிமங்களோ (Ajahn Tong Sirimangalo) மற்றும் விடியோக்களிலிருந்து எழுத்துவடிவமாக்க உதவிய பல அன்பான நெஞ்சங்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.
அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியோடு வாழுமாக!
யுத்ததம்மோ பிக்கு