ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
2. அருள் உரிமை
உலகம் முழுதும் ஒருகுடை யின்கீழ்
ஆளும் அண்ணல் அரண்மனை யருகில்,
மலர்ந்த மலர்கள் மணமிக வீசப்
பொறிவண்டு ஆடும் பூம்பொழில் மீது,
வடதிசை இமய மாமலை அமர்ந்த
அருள் உரிமை – கருணையால் வரும் உரிமை; அருள் – கருணை
பொறிவண்டு – புள்ளிகள் கொண்ட வண்ண வண்டு; பூம்பொழில் - பூந்தோட்டம்
வாழிடம் நோக்கி, வளரும் அன்பால்
உருகிய உள்ளம் ஒழுகிய தென்னப்
பாடியே அன்னப் பறவைகள், வான
வீதி வழியே விரைந்து சென்றன.
செல்வது கண்டு, தேவ தத்தன் -
அன்பால் உருகிய உள்ளம் ஒழுகியது தென்னப் பாடியே - உள்ளத்தில் அன்பொழுகப் பாடிக்கொண்டு
அன்னம் – அன்னப் பறவை, Swan;
அரசிளங் குமரற்கு அண்டிய உறவினன் -
வில்லினை வளைத்து வெய்யதோர் பாணம்
எய்து நின்றனன். எய்தஅப் பாணம்
முதன்முத லாக முன்னர்ச் சென்ற
அன்னப் பறவையின் அகன்சிறை யதினில்
அண்டிய - நெருங்கிய
வெய்யதோர் பாணம் - கொடுமையான பாணம்
வெய்ய – கொடிய, being cruel; பாணம் - அம்பு Arrow
அகன்சிறை - அகன்ற இறகு; அகன் – பரந்த, அகன்ற, சிறை - இறகு
படவே; ரத்தம் பாயப் பறவையும்
தளர்ந்து சுருண்டு தரையில் விழுந்தது.
விழுந்த அப்பறவை, மேனி முழுதும்
ஒழுகி ஓடும் உதிரம் புரளத்
துள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு,
சிந்தை கனிந்து, திருமா மன்னரின்,
செல்வக் குமரன் சித்தார்த் தன்போய்,
மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும்
தண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து,
மடியில் வைத்து மார்போடு அணைத்துத்
உதிரம் – இரத்தம்; புரள் - நிரம்பி வழிதல்
கனிதல் – இரங்குதல், உருகுதல்; சிந்தை - மனம்
தண்ணிய - மென்மையான
குருத்து - முற்றும் விரியாத வாழை இலை Sprout; white tender leaves of a banana tree
மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும் மென்மையான கரங்களால்
தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினான்.
அப்பால்,
இடக்கையிற் பறவையை ஏந்தி, அம்பினை
வலக்கை யதனால் வாங்கி, வடிந்த
உதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில்
தளர்ச்சி – களைப்பு
வாங்கி – இழுத்தல்; உதிரம் மாற்றி - உதிரம் கசிவதை நிறுத்தி
மாற்றி – நீக்குதல், மாற்றுதல்
தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து
பூசியே வருத்தம் போக்கினன். ஆங்கே
இத்தனை அன்பு காட்டினன் எனினும்
அவன்,
நோவு நொம்பலம் நோயின் தன்மை
இந்நாள் வரையிலும் யாதுஎன அறியான்.
ஆதலின்,
பறவையின் மீது பாய்ந்த அம்பின்
முனையைத் தனது முழங்கை யதனில்
அமுக்கிப் பார்த்தனன்; ‘ஐயோ!’ என்றனன்;
பரிந்து பின்னும் பறவையை எடுத்துத்
தாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன்.
தளிர் - முற்றாத இலை
நோவு, நொம்பலம், நோயினால் ஏற்படும் துன்பம் எதனையும் இதுவரை அறியாதவன் ஆதலால்.
பரிதல் - இரங்குதல் To sympathise
In the Royal garden on a day of spring,
A flock of wild swans passed, voyaging north
To their nest-places on Himàla’s breast.
Galling in love-notes down their snowy line
The bright birds flew, by fond love piloted;
And Devadatta, cousin of the Prince,
Pointed his bow, and loosed a wilful shaft
Which found the wide wing of the foremost swan
Broad-spread to glide upon the free blue road,
So that it fell, the bitter arrow fixed,
Bright scarlet blood-gouts staining the pure plumes.
Which seeing, Prince Siddhàrtha took the bird
Tenderly up, rested it in his lap
Sitting with knees crossed, as Lord Buddha sits
And, soothing with a touch the wild thing’s fright,
Composed its ruffled vans, calmed its quick heart,
Caressed it into peace with light kind palms
As soft as plantain-leaves an hour unrolled;
And while the left hand held, the right hand drew
The cruel steel forth from the wound, and laid
Cool leaves and healing honey on the smart.
Yet all so little knew the boy of pain
That curiously into his wrist he pressed
The arrow’s barb, and winced to feel it sting,
And turned with tears to soothe his bird again.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the First
சிறிது நேரம் சென்றபின், அங்கோர்
சேவகன் வந்து தெண்டனிட்டு, 'எங்கள்
அரச குமரன்ஓர் அன்னப் பறவையை
எய்து வீழ்த்தினன்; வீழ்ந்த இடமும்
மலர்மிகு ரோஜா வனமிது வேயாம்;
யாதும் தாமத மின்றி அவனிடம்
அன்னப் பறவையை அனுப்பிடு மாறுஇங்கு
என்னை உன்பால் ஏவினன்' என்றனன்.
சேவகன் மொழிஎலாம் சித்தார்த்தன் கேட்டு,
இயம்பிய மறுமொழி இயம்பக் கேண்மின்: 39
சேவகன் - ஊழியஞ்செய் வோன் Servant, peon, attendant
தெண்டனிட்டு – அடிபணிந்து, To do homage by prostration
ஏவல் – பணி செய்ய ஏவுதல்; இயம்பு - சொல்
வேறு
"எய்த அம்பினால் - பறவை
இறந்து வீழ்ந்திடுமேல்,
எய்த வர்க்காகும் - உரிமை
யாதும் ஐயமில்லை. 40
எய்தல் - அம்பு விடுதல், To discharge arrows
நீண்ட சிறகினிலே - விசைதான்
நின்றி ருப்பதல்லால்,
மாண்ட தில்லைஅன்னம் - உயிர்த்து
வாழு கின்றதப்பா! 41
விசைதான் நின்றி ருப்பதல்லால் : அம்பு பாய்ந்திருப்பதன்றி அன்னம் இறக்க வில்லை.
விசை – பொறி, (இங்கு அம்பபைக் குறிக்கும்)
சந்தேகம் வேண்டாம் - அதனைத்
தரமு டியாதப்பா!
எந்த உயிரையும் - காப்பது
என் கடமையப்பா! 42
சாற்றும் உரைகேட்டுத் - தேவ
தத்தனும் ஓடிவந்து,
சீற்றம் எழுந்தவனாய் - நின்று
செப்பும் மொழியிதுவாம்; 43
சாற்றுதல் - சொல்லுதல்; செப்புதல் - சொல்லுதல்
"மடிய நேர்ந்தாலும் உயிர்த்து
வாழ நேர்ந்தாலும்,
படியில் வீழ்ந்திடுமேல் - பறவை
பாணம் எய்ந்தவர்க்காம். 44
மடிதல் – சாதல், அழிதல் To perish, to be destroyed
படியில் - பூமியில்
என்கை அம்பினால் - விழுந்த
இப்ப றவையினை,
சங்கை இல்லாமல் - இங்கே
தந்திடுவாய், ஐயா!" 45
சங்கை - ஐயம் Doubt, hesitation, suspicion
சொன்ன மொழிகேட்டான் - ஐயன்
துன்பம் மிகஅடைந்தான்;
அன்னப் பறவையினைக் - கன்னத்தோடு
அணைத்து வைத்துக் கொண்டான். 46
பாரில் உயிரையெல்லாம் - அருளால்
பாது காக்க வந்தோன்,
சீரிய நன்மொழிகள் - உள்ளம்
தெளிந்து கூறுகின்றான்; 47
சீரிய - சிறப்பான Of surpassing excellence
"இல்லை இல்லை ஐயா! - பறவை
என்பறவை, ஐயா!
வல்லடி வழக்கு - நீயும்
வளர்க்க வேண்டாம், ஐயா! 48
வல்லடிவழக்கு - பிடிவாத வழக்கு, துறட்டு வழக்கு, Troublesome dispute
தொல்லு லகமெல்லாம் - அருளால்
சொந்த மாக்கவந்தேன்;
வெல்லும் பொருள்களில் - முதலில்
வென்ற பொருளிதாம். 49
தொல் – பழைமையான
எம்ம னிதருமே - உளத்தில்
இரக்க முற்றிடயான்,
செம்மை நெறியினை - நன்கு
தெரிந்து கூறிடுவேன். 50
உளம் – மனம், Mind, heart
இரக்க முற்றிடயான் - இரக்கம் + உற்றிட (அடைய) + நான் – இரக்கம் கொள்ள
துன்பம் அண்டாமல் - அதனைத்
துரத்தி ஓட்டிடுவேன்;
இன்பம் இவ்வுலகில் - நிலைக்க
என்றும் வென்றிடுவேன்! 51
மனிதர் மட்டுமல்ல - உலகில்
வாழும் எவ்வுயிரும்,
இனிய வாழ்வடையும் - வழியை
இனிது காட்டிடுவேன். 52
என்னு ரைகளை நீ - மறுக்கின்,
இன்றே இப்போழுதே,
மன்னும் நீதிமன்றம் - ஏறி
வழக்கு ரைப்போம், ஐயா! 53
மன்னும் - நிலைத்திருக்கும், பொருந்தும்
வேறு
இருவரும் அப்பால் இசையா ராகி,
அறநூல் கற்றோர் அறிவிற் பெரியோர்,
நடுநிலை நீதி நன்கு கண்டோர்
கூடிய மன்றில் குறைகொண்டு ஏகினர்.
ஏகவே,
இசை - இசைவு Union, agreement, harmony
Then some one came who said, “My Prince hath shot
A swan, which fell among the roses here,
He bids me pray you send it. Will you send?”
“Nay,” quoth Siddhàrtha, “if the bird were dead
To send it to the slayer might be well,
But the swan lives; my cousin hath but killed
The god-like speed which throbbed in this white wing.”
And Devadatta answered, “The wild thing,
Living or dead, is his who fetched it down;
’Twas no man’s in the clouds but fall’n ’tis mine,
Give me my prize, fair Cousin.” Then our Lord
Laid the swan’s neck beside his own smooth cheek
And gravely spake. “Say no! the bird is mine,
The first of myriad things which shall be mine
By right of mercy and love’s lordliness.
For now I know, by what within me stirs,
That I shall teach compassion unto men
And be a speechless world’s interpreter,
Abating this accursed flood of woe,
Not man’s alone; but, if the Prince disputes,
Let him submit this matter to the wise
And we will wait their word.” So was it done;
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the First
வழுவற இருதலை வழக்கும் கேட்டு,
மன்றுளோர் தம்முள் வாதம் செய்தனர்;
இதுவே நீதியென்று இயம்பினர் சிலரே
அதுவே நீதியென்று அறைந்தனர் சிலரே;
யாதும் துணியாது இருந்தனர் சிலரே;
முடிவில்,
வழுவற - வழு + அற = குற்றம் இல்லாமல் - சரிசமமாக
இயம்பு - சொல்
அறைதல் - சொல்லுதல்
துணிதல் - நிச்சயித்தல் To resolve, determine, ascertain; to conclude
இந்நாள் வரையிலும் எவருமே அறியாப்
புலமை மிக்க புரோகிதன் ஒருவன்,
எழுந்து நின்று, யாவருங் கேட்க, 54
புரோகிதன் - சடங்கு செய்விப்போன், priest
வேறு
"உயிரைக் கொன்றிடவே - முயலும்
ஒருவ னுக்குஅந்த
உயிரின் மேலேதும் - உரிமை
உண்டோ? கூறும் ஐயா! 55
உயிரைக் காப்பவனே - என்றும்
உயிர்க்கு உடையவனாம்;
அயர்வு வேண்டாம், ஐயா! - இதுவே
அறநூல் விதி ஐயா! 56
இன்னும் வீண்வாதம் - பேசி
இருப்பதேன்? ஐயா!
அன்னம் சித்தார்த்தன் - பொருளாம்
ஐய மில்லை, ஐயா!" 57
வேறு
என்று நீதி எடுத்துண ரச்செய்து
மன்றி லிருந்து மாய மாக
மறைந்து போயினன்; மறையும் அந்நேரம்,
பையர வொன்று பதுங்கி அவ்வழி
ஊர்ந்து செல்வதை ஒருவன் கண்டனன்;
சிற்சில காலை தேவரும் இந்த
வடிவந் தாங்கி வருவதுண்டு என்பரால்!
யாதோ உண்மை? யாவரே அறிவார்? 58
பையரவு + ஒன்று, பையரவு – படம் எடுக்கும் நாகம் Hooded cobra
காலை – நேரம், பொழுது
என்பரால் - என்று சான்றோர் கூறுவர்
In full divan the business had debate,
And many thought this thing and many that;
Till there arose an unknown priest who said,
“If life be aught, the saviour of a life
Owns more the living thing than he can own
Who sought to slay
the slayer spoils and wastes,
The cherisher sustains, give him the bird:”
The judgment all found just; but when the King
Sought out the sage for honour, he was gone;
And some one saw a hooded snake glide forth,
The gods come oft-times thus! So our Lord Buddha
Began his works of mercy.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the First
* * * * * *