வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
I ஆம் அத்தியாயம்
பௌத்த எண்ணப் போக்கு
உலகத்துச் சமயத் தாபகர்களுள் புத்தபகவான் ஒருவர் தாம் தம்மை ஒரு சாதாரண மனிதன் என ஒப்புக் கொண்டவர். சமயத்தாபகர் என்று அவரைக் கூறுவதானால் பொது வழக்கிலுள்ள சாதாரண அர்த்தத்திலே தான் அவ்வாறு கூறலாம். ஏனைய சமயத்தாபகர்கள் தம்மைக் கடவுளாகவோ, கடவுளின் பல வடிவு கொண்ட அவதாரமாகவோ, கடவுளின் அருள் பெற்றவராகவோ கருதினர். புத்தர் தாம் சாதாரண மனிதப் பிறவியென ஒப்புக் கொண்டது மாத்திரமன்றி, எந்தத் தெய்வத்தின் அருளோ, எந்த விதமான புறச்சக்தியின் ஆற்றலோ தமக்கிருந்ததாகக் கூறிக் கொள்ளவில்லை. மனிதமுயற்சியையும் மனித விவேகத்தையும் கொண்டே தாம் சாதித்த சாதனைகளும் பெற்ற பேறுகளும் தமக்கு வாய்த்தனவென்று கூறினார். மனித நிலையில் உள்ள ஒருவனே புத்தப்பேற்றை அடைய முடியும். திடசங்கற்பத்தோடு முயலும் எந்த மனிதனும் புத்த நிலையை அடையக் கூடிய திறமை உடையவனாயிருக்கிறான். அதனால் புத்தர் மனிதருள் மிகச் சிறந்தவர் என்று கூறலாம். அவரிடத்துப் பூரணமான மனிதப் பண்பு நிறைந்திருந்தபடியால் பிற்காலத்தில் சமயபக்தியுடையவர்கள் அவரை 'அதி மனிதன்' எனக் கொண்டாடினர்.
பௌத்தக் கோட்பாட்டின் படி மனிதனே மிக உயர்ந்தபடியில் உள்ளவன். தனக்குத்தானே தலைவனாயிருப்பவன் மனிதன். அவனுடைய விதியை நிர்ணயிக்க அவனைவிட மேலான சக்தி எங்குமில்லை.
'தானே தனக்குச் சரண். வேறுயார்தனக்குச் சரணாயிருக்க முடியும்?' என்று பகவான் கூறியிருக்கிறார். 'நீங்கள் உங்களுக்குச் சரணாயிருங்கள், வேறு எந்தத் இடத்திலும் சரண்புக வேண்டியதுமில்லை, வேறு எவரிடமும் உதவிதேட வேண்டியதுமில்லை', என அவர் தமது சீடர்க்கு அறிவுரை கூறினார்.
மனிதன் தன் முயற்சியாலும் விவேகத்தினாலும் தன்னைப் பந்தித்த தளைகளை யெல்லாம் அறுக்கும் திறமுடையவனென்பதால் அவன் தன்னை வளர்த்துக் கொள்ளுமாறு பகவான் மனிதனுக்கு அறிவுரை வழங்கி உற்சாகமூட்டித் தூண்டினார். 'நீங்கள் உங்கள் கருமங்களை நீங்களே செய்ய வேண்டும். ததாகதர்கள் [1] உங்களுக்கு வழியை மாத்திரம் கட்டுவார்கள்.' என்று புத்தபகவான் கூறியுள்ளார்.
புத்தரை 'ரட்சகர்' என்று குறிப்பிடுவதானால் இந்த அர்த்தத்திலேதான் குறிப்பிடலாம். அதாவது நிர்வாணமென்ற விடுதலைக்கு வழியைக் கண்டு காட்டியவர் என்ற வகையில். ஆனால் அந்த வழியில் நாங்களே நடந்து விடுதலை பெற வேண்டுமேயன்றி எங்களுக்காக இன்னொருவர் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
இது தனிப்படவர்களுடைய பொறுப்பு. இக் கோட்பாட்டின்படிதான் புத்தர் தம் சீடர்க்குச் சுதந்திரம் வழங்கியுள்ளார். சங்கத்தை [2] , 'நான் கட்டுப்படுத்திப் பரிபாலிக்க எக்காலத்திலும் நினைத்ததில்லை, அல்லது சங்கம் என்னில் தங்கியிருக்க வேண்டுமென எண்ணவில்லை' என 'மஹா பரி நிப்பாணசுத்தத்தில்' பகவான் கூறியுள்ளார். தமது போதனையில், சிலருக்கு மாத்திரம் சொல்லிக் கொடுக்கக் கூடிய மறைபொருள் ஒன்றுமில்லை யென்றும், தான் எதையும் மற்றவர்க்குக் காட்டாது கையில் பொத்தி வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.
இதனைப் பௌத்தத்தில் 'ஆசாரிய முத்தி' (கையில் பிறர் காணாது பொத்தி வைத்திருத்தல்) என்பர்.
புத்தர் வழங்கிய இத்தகைய சமய சுதந்திரம் சமய வரலாறுகளில் யாண்டும் காணப்படாததொன்று.
புத்தருடைய கொள்கைப்படி மனிதன் தானாகவே தன் விடுதலையைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்குத் தானாகவே உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தத் தெய்வத்தின் அருளினாலும் அது கிடைக்கக் கூடியதன்று. எந்தப் புறச் சக்தியும் நல்ல பிள்ளையாயிருப்பதற்கு பிரதி உபகாரமாக இதனை வழங்கமாட்டாது.
ஒரு முறை புத்தர் கோசல ராச்சியத்திலுள்ள கேசபுத்த என்ற ஒரு சிறு பட்டணத்துக்குப் போயிருந்தார். இந்நகரவாசிகள் காலாமர் என்றழைக்கப்பட்டனர். புத்தர் தம் நகருக்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவர்கள் அவரைத் தரிசிக்கச் சென்று பின்வருமாறு கூறினர்:
'கேசபுத்த நகருக்குச் சில பரிவிராசகரும், தாபசரும், பிராமணரும் வருகிறார்கள். அவர்கள் தங்கள் மதங்களையே விளக்கி மற்ற மதங்களைக் கண்டித்து ஏளனம் செய்கிறார்கள். பின்னர் அவர்களைத் தொடர்ந்து வேறு தாபசரும், பிராமணரும் வருகிறார்கள். அவர்களும் தம் மதத்தையே விளக்கி மற்ற மதத்தவரைக் கண்டித்து ஏளனஞ் செய்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஐயமும் மயக்கமும் உண்டாகிறது. இவர்களுள் யார் உண்மையைக் கூறுகிறார்கள் யார் பொய் சொல்லுகிறார்கள் எனத் தெரியவில்லை.'
அப்போது புத்தபகவான் சமயங்களின் வரலாற்றிலேயே இணையற்ற இந்த அறிவுரையைக் கூறினார்:
'ஆம், காலாமர்களே, இவ்வாறு சந்தேகமும், மயக்கமும் உண்டாவது இயல்பே. ஐயத்துக்குரிய விஷயத்தில் ஐயமுண்டாகியிருக்கிறது. காலாமர்களே கேளுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டோ, மரபுபற்றி வந்ததென்பதாலோ, சனங்கள் சொல்லுகிறார்கள் என்பதாலோ ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். சமய நூல்கள் கூறுகின்றன என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். தர்க்கத்துக்கோ அனுமானத்துக்கோ பொருத்தமாயிருப்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். தோற்றத்தைக் கொண்டு சரியெனக் கொள்ளவேண்டாம். கற்பனைக்கு விருந்தாயிருக்கிறதென்பதற்காகவோ, உயர்ந்த கருத்துக்கு இடமளிக்குமென்ற எண்ணத்தினாலோ, எமது குரு கூறிவிட்டார் என்பதாலோ ஏற்றுக்கொள்ள வேண்டாம். காலாமரே! சில விஷயங்கள் தீமை தருவன (அகுசலங்கள்) என்றும் அவை தவறானவை, கெட்டவை என்றும் நீங்களே உணர்ந்தால் அவற்றைக் கை விட்டுவிடுங்கள்... சில விஷயங்கள் நன்மை பயப்பன (குசலங்கள்) என்று நீங்களாகவே உணர்ந்தால் அவற்றை ஏற்று அவற்றைக் கடைப்பிடியுங்கள்.'
புத்தர் இவ்வளவோடு நிற்கவில்லை. நாம் பின்பற்றும் ஆச்சாரியர் உண்மையானவரா என்பதை அறியவும் அவரின் தகைமையை மதிப்பிட்டுக் கொள்ளவும் ததாகதரைக் கூடப் (புத்தரைக்கூட) பரீட்சித்துப் பார்க்குமாறு பிக்குகளுக்குக் கூறுகிறார். [3]
உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும், ஆன்மீக முன்னேற்றத்துக்கும் தடையாயிருக்கும் ஐந்து நீவரணங்களுள் [4] அவற்றின் சந்தேகமும் (விசிகிச்சா) ஒன்றெனப் பௌத்தம் கூறுகிறது. எந்த விதமான முன்னேற்றத்துக்கும் ஐயம் ஒரு தடை எனலாம். அது ஒரு பாபமன்று. ஏனெனில் சமயத்தினரால் வகுத்துக் கொள்ளப்பட்ட கொள்கைக் கூறுகள் பௌத்தத்தில் கிடையா. வேறு சில சமயங்கள் பாபம் என்ற சொல்லுக்குக் கொடுக்கும் கருத்தைப் போலப் பௌத்தத்தில் பாவமென ஒன்றில்லை. சகல தீமைகளுக்கும் மூலகாரணமாயுள்ளது அறியாமையும் (அவித்தை) தவறான காட்சியுமே (மிச்சாதிட்டி). சந்தேகம், மயக்கம், சஞ்சலபுத்தி என்பன இருக்கும்வரை முன்னேற்றத்துக்கு இடமில்லை. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் ஒருவரின் அறிவு தெளிவு பெறும் வரை ஐயப்படும் குணம் இருக்கவே வேண்டும். ஐயங்களை நீக்கினால் தான் முன்னேறலாம். காட்சி தெளிவடைந்தால் தான் ஐயம் நீங்கும்.
ஒருவர் ஐயப்படக் கூடாது, அவர் நம்பிக்கை உடையவராயிருக்க வேண்டும் என்று கூறுவதில் அர்த்தமில்லை. நான் நம்புகிறேன் என்று சொல்வதானால் எனக்கு விளக்கமுண்டு; அறிவுண்டு என்பது அர்த்தமன்று. மாணாக்கன் ஒருவன் கணக்கொன்றைச் செய்யும் போது புரியாத ஒரு கட்டம் வரும். ஐயமும் மேலே போகமுடியாத ஒரு கஷ்டமும் உண்டாகும். இந்த மயக்க நிலையில் அவன் மேலே செல்லமுடியாதிருக்கிறான். இதைக் கடந்து செல்வதானால் அவனுக்குண்டான ஐயத்தை மாற்ற வேண்டும். அதற்கும் பல வழிகளுண்டு. 'நான் நம்புகிறேன், எனக்கு ஐயமில்லை' என்று சொல்லுவதால் பிரச்சினை தீரமாட்டாது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் பலாத்காரமாக ஏற்றுக்கொள்ள வைத்தல் அரசியல் போக்குடையதன்றி, ஆத்மீகப் போக்குடையதன்று. விவேகப் போக்குடையதன்று.
புத்தபகவான் ஐயத்தைப் போக்குவதில் எப்பொழுதும் ஆர்வமுடையவராயிருந்தார். அவர் இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் கூட, ஐயங்களைத் தீர்க்காது விட்டுவிடுவோமோ எனப் பின்னர் பச்சாத்தாபப்படாதிருக்கும் வகையில் தாம் போதித்தவற்றில் ஏதாவது ஐயங்களிருந்தால் அவற்றை இப்பொழுதாவது தீர்த்துக்கொள்ளுமாறு சீடர்களைக் கேட்டார். சீடரெல்லாம் பேசாதிருந்தார்கள். அப்பொழுது அவர் மனத்தைத் தொடக்கூடியமுறையில் 'குருவுக்கு மரியாதை செலுத்தவேண்டுமென்ற நோக்கத்தால் நீங்கள் நேரே சொல்ல விரும்பாவிட்டால் நண்பர்களிடம் கேட்கச் சொல்லுங்கள்', என்று கூறினார்.
பகவான் சிந்தனைச் சுதந்திரம் அளித்ததோடல்லாமல் சகிப்புத் தன்மை உடையவராயுமிருந்தமை சமயங்களின் வரலாற்றை ஆராயும் மாணவர்க்கு இறும்பூது அளிக்கக் கூடியதாகும்.
ஒரு முறை நாலந்தையில் நிகண்ட நாத புத்த என்னும் ஜைனமகாவீரர் தமது உபாசகரும், செல்வமும் சிறப்பும் மிக்கவருமான உபாலி என்னும் இல்லறத்தவரை புத்தரிடம் அனுப்பினார். கன்மம் பற்றி மகாவீரர் [5] கொண்ட கொள்கை புத்தருடைய கொள்கையிலிருந்து வேறுபட்டிருந்தபடியால் புத்தரோடு விவாதம் நடத்தி அவரை வென்று வருமாறு மகாவீரர் அவரை அனுப்பினார். [6]
உபாலி வாதம் நடத்தினார். ஈற்றில் பகவான் கூறியவை சரி என்றும் தன்னுடைய குருவின் வாதம் தவறானதென்றும் உணர்ந்தார். எனவே தம்மை உபாசகராக ஏற்றுக் கொள்ளுமாறு பகவானை உபாலி இரந்து கேட்டார். 'உங்கள் தீர்மானத்தைப் புனராலோசனை செய்து பாருங்கள். அவசர பட வேண்டாம்', என்று கூறி 'உங்களைப் போன்ற பிரசித்தமானவர்கள் இதனை நன்றாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது' எனச் சொன்னார். உபாலி மறு படியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவருடைய பழைய மதாசாரியர்களைக் கௌரவித்து வழக்கம் போல அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு பணித்தார்.
கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவை ஆண்ட பௌத்தப் பேரரசரான அசோகன் பகவானுடைய இந்த உயர்ந்த சகிப்புத் தன்மையையும் நல்லிணக்கத்தையும் பின் பற்றித் தனது பரந்து விரிந்த இராச்சியத்திலுள்ள சகலமதத்தவரையும் கௌரவித்து ஆதரித்தான். கற்பாறையில் செதுக்கப்பட்ட அவனுடைய கற்சாசனமொன்றிலே அசோகசக்கரவர்த்தி பின் வருமாறு கூறி யுள்ளார். இக்கற்சாசனத்தை அதன் மூல வடிவில் இன்றும் காணலாம். 'ஒருவன் மற்றவர்களுடைய மதத்தை நிந்தித்துத் தன்னுடைய மதத்தை மாத்திரம் போற்றக் கூடாது. ஏதோ ஒரு காரணம் பற்றி அவன் மற்றைச் சமயங்களையும் கௌரவிக்க வேண்டும். இதனால் அவன் தன் மதத்தின் வளர்ச்சிக்கே துணைபுரிவதோடு மற்றைச் சமயங்களையும் வளர்க்கிறான். இதற்கு மாறாக நடப்பானானால் அவன் தன் மதத்துக்கே குழிதோண்டுவதோடு மற்றைச் சமயங்களுக்கும் அழிவுதேடுகிறான். தன் மதத்தைப் போற்றி மற்றை மதங்களை இழிவுபடுத்துபவன் "நான் என் மதத்துக்கு மகிமை தேடுகிறேன்." என்ற ஆர்வத்தினால் அவ்வாறு செய்கிறான். ஆனால் உண்மையில் அவன் தன் மதத்துக்கே பெருந்தீங்குவிளைக்கிறான். எனவே இணக்கமே நன்று. மற்ற மதத்தவர் கூறும் கோட்பாடுகளைக் கேட்க விருப்பமுடையவராயிருப்பதோடு அவற்றைக் கேட்பாராக.'
இத்தகைய நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும் சமய விஷயங்களில் மாத்திரமன்றி வேறு துறைகளிலும் அனுசரிக்கபட வேண்டிய தொன்றாகும்.
இந்த நல்லெண்ணமும் சகிப்புத் தன்மையும் ஆரம்பத்திலிருந்தே பௌத்தப் பண்பாடும் நாகரிகமும் உவந்து ஏற்றுக் கொண்ட இலட்சியங்களுள் ஒன்றாகும். 2500 வருடமாக பௌத்தம் மக்களை இம்சை செய்யாமாலும் ஒரு துளி இரத்தங் கூடச் சிந்தாமலும் சமயமாற்றஞ் செய்து வந்தது. ஆசியாக்கண்டம் முழுவதிலும் அது சமாதானமாகப் பரவி இன்று ஐம்பது கோடி மக்களைத் தன்னகத்துக் கொண்டிருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த வகையிலும் பலாத்காரத்தை மேற்கொள்ளக் கூடாதென்பதே பௌத்த மதத்தின் போதனையாகும்.
பௌத்தம் ஒரு சமயமா? தத்துவமா என்று அடிக்கடி கேட்கப்படுகிறது. அது எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. என்ன பெயர் அதற்குக் கொடுத்தாலும் அது பௌத்தமாகவே இருந்து வருகிறது. புத்தர் போதித்த நெறிக்குப் பௌத்தம் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறோம். அதுவும் அத்துணை முக்கியமன்று. கொடுக்கப்பட்ட பெயர் முக்கியமன்று. பெயரில் என்ன இருக்கிறது? ரோசாமலருக்கு வேறு பெயரைக் கொடுத்தாலும் அது தன் நறுமணம் மாறுமா? அவ்வாறே சத்தியத்துக்கு அடைமொழிப் பெயர் தேவையில்லை. சத்தியம் பௌத்தச் சார்புடையதுமன்று கிறிஸ்தவச் சார்போ, இஸ்லாமியச் சார்போ, இந்து சமயச் சார்போ உடைய தன்று. அது எவருக்கும் ஏகபோக உரிமை உடையதன்று. சத்தியத்தைத் தனிப்பட்ட முறையில் அறிவதானால் பக்கச் சார்பான அடைமொழிப் பெயர்கள் தடையாயிருக்கும். அதனால் மக்கள் மனத்திலே பாதகமான மனக்காழ்ப்பு உண்டாகும்.
விவேகமயமான விஷயங்களிலும் ஆன்மார்த்த விஷயங்களிலும் மாத்திரமன்றி மனிதத் தொடர்புகள் பற்றிய விஷயங்களைப் பொறுத்த வரையிலும் கூட இது பொருந்தும். உதாரணமாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது அவர் மனிதர் என்ற முறையில் பார்ப்பதில்லை. அவர் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர், ஜெர்மானியர், அமெரிக்கர், யூதர் என்ற அடைமொழி அட்டைப் பெயரை அவர் மீது மாட்டி, அந்த அட்டைப்பெயர் எம்மனதில் முன்னரே உண்டாக்கிய தப்பெண்ணத்தைக் கொண்டு அவரைப் பார்க்கிறோம். இருந்தும் நம் மனத்தில் படிந்த தப்பெண்ணம் அவரிடத்துச் சிறிதுமில்லாதிருக்கலாம்.
இத்தகைய பாகுபாட்டின் பயனாக அடைமொழிப்பெயர்களைச் சார்த்திப் பார்ப்பது மனிதர்க்கு மிகப் பரிச்சயமானதொரு பண்பானபடியால், மனிதரிடம் பொதுப்படையாகக் காணும் பண்புகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இந்த அடைமொழிப் பெயரைச் சூட்டுகிறோம். எனவே `பெருந்தன்மை` என்ற பொதுப் பண்பைக்கூடப் பௌத்தப் பெருந்தன்மை, கிறிஸ்தவப் பெருந்தன்மையென்றெல்லாம் பாகு படுத்துகிறோம். மற்றை வகையான பெருந்தன்மைகளை இழிந்தவையெனக் கருதுகிறோம்.
ஆனால் பெருந்தன்மையில் விதம்விதமான பெருந்தன்மை உண்டா? அது கிறிஸ்தவமுமன்று, பௌத்தமுமன்று, இந்துவுமன்று, இஸ்லாமுமன்று. குழந்தையிடத்துத் தாய்க்கிருக்கும் அன்பு எங்கும் ஒரே பண்பையுடையது. அது பௌத்தத்தாயன்புமன்று, கிறிஸ்தவத்தாயன்புமன்று. அது தாயன்பே. அன்பு, பெருந்தன்மை, கருணை, சகிப்புத்தன்மை, பொறுமை, நட்பு, விருப்பு, வெறுப்பு, இணக்கம், அறியாமை, அகங்காரம் முதலிய மனிதப் பண்புகளும் உணர்ச்சிகளும் எல்லாரிடத்தும் ஒரே வகையானவை. அவற்றில் வித்தியாசம் கிடையாது. அவை சமயச்சார்பாக வேறுபட்டவையல்ல. எந்த ஒரு சமயத்துக்கும் சொந்தமானவையல்ல.
சத்திய நாட்டமுள்ளவர்க்கு ஒரு கருத்து எங்கிருந்து வருகிறதென்பதில் அக்கறையில்லை. ஆராய்ச்சியிலீடுபட்டவர்க்கு ஒரு கருத்து எங்கே தோன்றி எவ்வாறு வளர்ந்தது என்பது முக்கியமான தாயிருக்கலாம். சத்தியத்தை உணர்ந்து கொள்வதானால் அது புத்தர் கூறியதா வேறு ஒருவர் அருளியதா என்பதை அறிந்துகொள்வதே அவசியமில்லை. எது அவசியமென்றால் உண்மையைக் காணுதல், அதைப்புரிந்து கொள்ளுதல்; மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரத்தில் இதனை நிதரிசனப்படுத்தும் ஒரு முக்கியமான கதை உண்டு.
புத்தபகவான் ஒருமுறை ஒரு குயவனுடைய சாலையில் இரவைக்கழித்தார். [7] அதே சாலையில் ஏற்கனவே அங்குவந்து சேர்ந்த ஒரு இளஞ் சந்நியாசியுமிருந்தார். ஆனால் ஒருவரை இருவர் அறிந்து கொள்ளவில்லை. அந்தச் சந்நியாசியின் போக்கை அவதானித்த புத்தர் தம்முள் நினைக்கலானார். `இந்த இளவலின் நடத்தை நன்றாயிருக்கிறது. இவரைக் கேட்டறிந்துகொள்வது நல்லது.` புத்தர் அவனை: `ஓ பிக்குவே, [8] யாருடைய உபதேசத்தைக் கேட்டுச் சந்நியாசங்கொண்டீர்? உங்களுடைய ஆசிரியரின் பெயரென்ன? எவருடைய கொள்கையை நீர் மேற்கொள்ளுகிறீர்?` வாலிபன் கூறினான் `நண்பரே! கோதமர் என்ற சாக்கியச் செம்மல் துறவியாயிருக்கிறார். அவர் சாக்கியக் குடும்பத்தைத் துறந்து பிக்குவானார். அவர் பூரண ஞானம் பெற்ற அருகதர் என எங்கும் புகழ் பெற்றிருக்கிறார். அந்தப் பகவானுடைய பெயராலேயே நான் துறவு பூண்டேன். அவரே என் குரு. அவருடைய தருமத்தை நான் ஏற்றுக் கொண்டேன்.`
`இப்போது பூரண ஞானம் பெற்ற பகவானான, அந்த அருகதர் எங்கே இருக்கிறார்?`
`நண்பரே! வடக்கேயுள்ள நாட்டில் சிராவஸ்தி என்ற ஒரு நகரம் உண்டு. அங்கேதான் பூரணஞானம் பெற்ற அருகதரான பகவான் இப்போது வசிக்கிறார்.`
`அந்த பகவானை எப்போதாவது கண்டிருக்கிறீரா? நீர் அவரைக் கண்டால் இனங் கண்டு கொள்வீரா?`
`நான் அந்தப் பகவானைப் பார்த்ததில்லை. கண்டால் இவர்தான் என்று அறிந்து கொள்ளவும் மாட்டேன்.`
இந்த வாலிபன் இல்லறத்தைத் துறந்து சந்நியாசங் கொண்டது தம்முடைய தருமத்தைப் பின்பற்றியே என்பதைப் புத்தர் உணர்ந்தார். தான் இன்னார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் புத்தர், ஓ பிக்குவே, நான் தருமத்தைப் போதிக்கிறேன். நான் கூறுவதைக் கவனமாகக் கேட்பீராக.`
`நல்லது நண்பரே!` என வாலிபன் ஒப்புக்கொண்டான்.
பகவான் பின்னர் சத்தியம் என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சிறந்த உபதேசத்தைச் செய்தார். (இதன் சுறுக்கம் பின்னால் கூறப்பட்டுள்ளது. [9])
புக்குதாதி என்ற இந்தத் துறவி பகவானுடைய அறிவுரையை கேட்டு முடியுந் தறுவாயிலே தான், தனக்குத் தருமோபதேசஞ் செய்தவர் புத்தர் என்பதை உணர்ந்து, எழுந்து, புத்தர் முன் சென்று அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி, தெரியாமல் தான் அவரை நண்பன் [10] என்று மரியாதையின்றிக் கூறியதை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். பின்னர் சங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு இரந்து வேண்டினார்.
பிண்டபாத்திரமும் சீவர உடையும் (காஷாய) ஆயத்த மாயிருக்கின்றவனவா என்று புத்தர் அவனைக் கேட்டார். (பிக்குவிடம் மூன்று சீவர உடையும், பிச்சை எடுப்பதற்கு பிச்சா பாத்திரமும் இருக்க வேண்டியது அவசியம்) இல்லையென்று அவன் கூறியதும், பிண்டபாத்திரமும் சீவர ஆடையும் இல்லாதபோது அவர்களுக்குத் ததாகதர்கள் பிக்குவாக அபிஷேகம் செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உடனே புக்குசாதி பிண்டாபாத்திரமும் சீவரமும் தேடச் சென்றான். ஆனால் வழியில் ஒரு பசுவினால் கொல்லப்பட்டு இறந்தான். [11]
இத்துக்ககரமான சம்பவம் புத்தர் காதுக்கு எட்டியபோது புக்குதாசி ஞானிஎன்றும் அவர் சத்தியத்தை அறிந்து விட்டார் என்றும் நிர்வாணமடையும் மார்க்கத்தில் மூன்றாவது நிலையை அடைந்து விட்டார் என்றும் அருகத [12] நிலை அடையக்கூடிய ஓர் உலகில் அவர் பிறந்துள்ளார் என்றும் ஈற்றில் அவர் மீண்டும் வாரா நெறியை அடைவாரென்றும் கூறினார்.
புத்தர் கூறிய அறிவுரையைக் கேட்டு அதைப்புரிந்து கொண்டபோது புக்குசாதி தான் புத்தர் போதனையைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவோ, புத்தர் தன்முன் இருப்பதாகவோ உணர்ந்து கொள்ளவில்லை. அவர் உண்மையை மாத்திரம் கண்டார் என்பது இக்கதையிலிருந்து தெளிவாகிறது. மருந்து நல்ல மருந்தானால் வியாதியை நீக்கும். மருந்தை யார் தயார் செய்தார், அது எங்கிருந்து வந்ததென்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
சமயங்களெல்லாம் பெரும்பாலும் நம்பிக்கையில் (மூட நம்பிக்கையில் என்று கூறலாம்.) கட்டி எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் பௌத்தம் காணுதல், அறிதல், புரிந்து கொள்ளல் என்பவற்றை வற்புறுத்துகிறதேயன்றி நம்பிக்கையை வலியுறுத்தவில்லை. பௌத்தபிடகங்களிலே `சத்தா` என்ற வார்த்தை காணப்படுகிறது. இது சிரத்தை என்ற வடமொழியின் திரிபு. இது நம்பிக்கை என வழக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சிரத்தை என்பது மன உறுதியினால் பிறந்த பற்றுக்கோடு எனலாம். வெறும் நம்பிக்கையன்று. பொது மக்களிடையே வழங்குகிற பௌத்தத்திலும், சாதாரண வழக்கிலும் சிரத்தை என்பது புத்தம், தம்மம், சங்கமென்ற மும் மணிகளிடத்தும் பக்தி செய்தலைக் குறிக்கும்.
கி.பி. நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த தத்துவப் பேரறிஞரான அசங்கர் சிரத்தை மூன்று அமிசங்களைக் கொண்டதென்பர். முதலாவது, ஒரு பொருள் உண்டு என்ற பூரணமான உறுதி. இரண்டாவது, நற்குணங்களைக் கண்டு ஆனந்தமடைதல். மூன்றாவது, ஒரு இலட்சியத்தை நிறைவேற்றும் ஆர்வம்.
ஏனைய சமயத்தவர் கூறும் அர்த்தம் சிரத்தை என்ற வார்த்தைக்கு புத்த சமயத்தில் கிடையாது. அறிந்து கொள்ள முடியாத அதாவது கண்டு கொள்ள முடியாத விஷயம் சம்பந்தமாகத்தான் நம்பிக்கை என்ற பிரச்சினை எழுகிறது. எப்பொழுது ஒரு விஷயத்தைக் காண முற்படுகிறோமோ அப்போது நம்பிக்கை என்ற பிரச்சினைக்கு இடமில்லாமற்போகிறது. பொத்திய கைக்குள் ஒரு மாணிக்கமுண்டு என்று நான் உமக்குச் சொன்னால் நீங்கள் அதைக் கண்ணால் காணாத வரை நம்பிக்கை என்ற பிரச்சினை எழுகிறது - ஆனால் கையை விரித்து அந்த இரத்தினத்தைக் காட்டியதும் நீங்கள் அதைப் பிரத்தியட்சமாகக் காணுகிறீர்கள். அப்போது நம்பிக்கை என்ற பிரச்சினைக்கு இடமில்லாமற் போகிறது. எனவே பௌத்த நூல்களில் `உள்ளங்கை நெல்லிக்கனி போல அல்லது மாணிக்கம் போலத் தெளிவாகிறது` என்ற சொற்றொடர் காணப்படுகிறது.
புத்தரின் சீடரான முசீல என்பவர் மற்றொரு பிக்குவுக்குப் பின்வருமாறு கூறுகிறார்: `நண்ப சவிட்ட, பக்தி சிரத்தையின்றி [13], விருப்புச் சார்பின்றி, பரம்பரைக் கேள்வி ஞானத்தினாலன்றி பெரும் போக்கான காரணகாரிய ஆராய்ச்சியின்றி, கற்பனை வாதிகளின் பேச்சில் மயங்காமல் - பவம் அற்றுப் போவதே நிர்வாணம் - என்பதை நான் அறிந்து கொண்டேன், கண்டு கொண்டேன்.`
புத்தர் சொல்லுகிறார்: `ஓ பிக்குகளே, அகுசலங்களையும் களங்கங்களையும் நீக்குவது அறிவும் காட்சியுமுடையவர்க்கேயன்றி அறிவில்லாதவர்க்கும் காட்சியில்லாதவர்க்குமன்று.`
விஷயங்களை அறிந்து காணவேண்டுமேயன்றி அவற்றில் நம்பிக்கை வைப்பதன்று ஞானத்துக்கு வழி. புத்த தர்மத்துக்கு `ஏஹிபஸ்ஸிகோ` என்று ஒரு பெயர். அதாவது `வந்து பாருங்கள்`. வந்து நம்பிக்கை கொள்ளுங்கள் என்று பௌத்தம் எவரையும் அழைப்பதில்லை.
உண்மையை உணர்ந்தவர்கள் பற்றி புத்த பிடகங்கள் குறிப்பிடும் போது தூசியற்ற கண், களங்கமற்ற கண், `தம்மசக்கு` எழுந்தது எனக் கூறப்படுகிறது. `அவர் உண்மையைக் கண்டார். உண்மையை அடைந்தார், உண்மையை உணர்ந்தார், உண்மையை ஊடுருவிப் பார்த்தார், ஐயங்களில் நீங்கி அசைவற்றிருக்கிறார், சரியான ஞானத்தைக் கொண்டு அவர் யதாபூதஞானத்தைப் பெற்று விட்டார்`, எனக் காணலாம். தாம் ஞான விளக்கம் பெற்றதைப் பற்றிப் புத்தர்: `கண்பிறந்தது, ஞானம் பிறந்தது, அறிவு பிறந்தது, விஞ்ஞானம் பிறந்தது, ஒளி பிறந்தது` என்கிறார்.எப்பொழுதும் ஞானதர்சனம் குறிப்பிடப்படுகிறதேயன்றி நம்பிக்கை மூலம் சிரத்தை பெறுவதாகக் கூறப்படுவதில்லை.
வைதீகப் பிராமணர் தமது சம்பிரதாயத்தையும் பிரமாணத்தையும் ஆட்சேபமின்றி ஒரே உண்மையாக நம்பி ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்திய காலத்திலே இக்கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.
ஒரு முறை அறிவிற் சிறந்த பிரசித்தி பெற்ற ஓர் அந்தணர் கூட்டம் புத்தரைக் கண்டு வெகுநேரம் உரையாடிற்று. அக் கூட்டத்தைச் சேர்ந்த 16 வயதுள்ள காபடிக என்ற பெயருள்ளவனும், மிக்க விவேகி யென எல்லாராலும் மதிக்கப்பட்டவனுமான இளவல் புத்தரிடம் பின்வருமாறு கேட்டான். "வணக்கத்துக்குரிய கோதமரே, பரம்பரையாக வந்த வேத சுருதிகளிருக்கின்றனவே. அவற்றின் பிரகாரம், 'இதுவே சத்தியம், மற்றவையெல்லாம் பொய்' என்ற ஒரே முடிபுக்கு பிராமணர் வந்துள்ளனர். இதைப்பற்றி வணக்கத்துக்குரிய கோதமர் என்ன சொல்லுகிறார்?"
புத்தர் கேட்டார். பிராமணருள்ளே, `இதுவே சத்தியம், மற்றவையெல்லாம் பொய் என்று தனிப்பட்ட முறையில் கண்டு அறிந்த பிராமணர் ஒருவரேனும் இருக்கிறாரா?` அந்த இளவல் மனந்திறந்து பேசியவரானபடியால் `இல்லை`என்றார்.
`இதுவே சத்தியம். மற்றவையெல்லாம் பொய்.` என்று கண்டு அறிந்த ஓர் ஆசிரியர் இருக்கிறாரா? ஏழு தலைமுறையில் ஆசிரியர்க்கு ஆசிரியரான ஒருவர் இருக்கிறாரா? இதுவே உண்மை மற்றவையெல்லாம் பொய் என்று கண்டறிந்த அந்த வேதங்களின் ஆசிரியர்களில் ஒருவர் இருக்கிறாரா?`
`இல்லை.`
`அப்போது இது குருடர் குருடருக்கு வழிகாட்டுவது போன்றது. ஒவ்வோருவரும் மற்றவரைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். முதலில் போகிறவர் காணவில்லை. மத்தியில் போகிறவரும் காணவில்லை.கடைசியில் போகிறவரும் காணவில்லை. அப்போது பார்க்கப்போனால் இந்தப் பிரமாணரின் நிலை குருடர் வரிசையில் போகிறவர் நிலைபோலத்தான்.`
பின்னர் பகவான் அந்தப் பிராமணர் கூட்டத்தவர்க்கு மிக உயர்ந்த அறிவுரை வழங்கினார். உண்மையின் காவலனாயுள்ள அறிவாளி "இது தான் உண்மை, மற்றவை யெல்லாம் பொய் என்ற முடிபுக்கு வரக்கூடாது. அதாவது ஒருவன் தான் விரும்புவதை நம்பலாம். `நான் இதை நம்புகிறேன்` என்று சொல்லலாம். அந்த அளவில் உண்மையை மதிக்கிறான் எனலாம். ஆனால் தான் நம்புவதால் அதுவே சத்தியம், மற்றவை யெல்லாம் பொய் என்று கூறக் கூடாது."
`ஒரு கொள்கையில் பற்றுவைத்து மற்றைக் கொள்கைகள் தாழ்ந்தவை என அவமதித்தல் நீவரணம் (கட்டு, தடை) என அறிஞர் கூறுவர்` என்று புத்தர் சொல்லுகிறார்.
படிச்சசம்முபபாதம் என்ற காரண காரியத்தொடர்புக் கோட்பாட்டைத் தமது சீடர்களுக்கு பகவான் ஒருமுறை விளக்கினார். தாம் கண்டு தெளிவாக அறிந்து கொண்டதாக அவர்கள் கூறினர். அப்போது புத்தர் சொன்னார்: `தூயதும், தெளிவானதுமான இந்தக் கோட்பாட்டில் பிக்குகளே நீங்கள் பற்றுள்ளவராயிருந்தால், அதனோடு பரிச்சயமுற்று அதை மேலானதாகக் கருதி ஈடுபாடு கொள்வீரானால், தருமம் ஆற்றைக் கடக்கும் புணை போன்றது; கடந்ததும் அதைக் தோளிலே தூக்கிக் கொண்டு போகக் கூடாது, என்ற போதனையை அறியாதவராகிறீர்.` வேறோரிடத்தில் பகவான் போதனை, ஆற்றைக் கடக்கப் புணை போன்ற தென்றும், கடந்த பின் அதை தோளில் தூக்கிச் செல்லக் கூடாதென்றும் உவமையை விளக்கியுள்ளார்.
`ஓ பிக்குகளே! ஒருவன் பிரயாணஞ் செய்து கொண்டிருக்கிறான். அவன் ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. இக்கரை ஆபத்து நிறைந்ததாயிருக்கிறது. அக்கரை பாதுகாப்புள்ளதாகவும், ஆபத்தில்லாததாகவுமிருக்கிறது. அக்கரையை அடைய வள்ளமில்லை. ஆற்றைக் கடக்கப் பாலமுமில்லை. அவன் தனக்குள் நினைக்கிறான்: `ஆற்று நீர் விசாலமானதாயிருக்கிறது. இக்கரை ஆபத்துள்ளதாயிருக்கிறது. அக்கரை ஆபத்தின்றிப் பாதுகாப்புள்ளதாயிருக்கிறது. அக்கரை போவதற்கு ஓடமில்லை. ஆற்றைக்கடக்க பாலமுமில்லை. ஆனபடியால் புல்லும், மரமும், கிளையும், இலையும் சேகரித்து ஓர் ஓடம் கட்டினால் நல்லது. கையையும், காலையும் பயன்படுத்தி அந்த ஓடத்தின் மூலம் சுகமாக அக்கரை சேர்ந்து விடலாம்.` பின்னர் அம்மனிதன், ஓ பிக்குகளே, புல்லும், மரமும், கிளையும், இலையும் சேகரித்து ஓடம் செய்கிறான். அந்த ஓடத்தின் துணை கொண்டு பாதுகாப்பாக கைகால்களைப் பயன் படுத்தி அக்கரை செல்லுகிறான். அக்கரை அடைந்ததும் அவன் `இந்த ஓடம் எனக்குப் பெருந்துணையாயிருந்தது. என் கைகால்களைப் பயன்படுத்தி இதன் துணை கொண்டு சுகமாக இக்கரைவந்து சேர்ந்தேன். இந்த ஓடத்தை நான் போகுமிடமெங்கும் தலையிலோ தோளிலோ சுமந்து செல்வது நல்லது.` என்று நினைக்கிறான்.`
`இவ்வாறு செய்வது பொருந்துமா? பிக்குகளே, என்ன நினைக்கிறீர்கள்?`
`இல்லை, பிரபோ.
அப்போது அவன் ஓடத்தை என்ன செய்யவேண்டும்? அக்கரை சென்ற பின்னர் அந்த மனிதன் `இந்த ஓடம் எனக்குப் பெருந்துணையாயிருந்தது. இதன் துணையால் என் கைகால்களைப் பயன்படுத்திச் சுகமாக இக்கரை வந்து சேர்ந்தேன். இந்த ஓடத்தைக் கரையில் விட்டுவிட வேண்டும். அல்லது நீரில் மிதந்து கொண்டிருக்கும் படி கட்டிவிட வேண்டும்` என்று என்ணினான்.இவ்வாறு செய்வதே அந்த ஓடத்தைப் பொறுத்த வரையில் பொருத்தமான செயலாகும்.
`இவ்வாறே, ஓ பிக்குகளே, நானும் அந்த ஓடத்துக்கு உவமையான ஒரு கோட்பாட்டைப் போதித்துள்ளேன். இது ஆற்றைக் கடப்பதற்கு அன்றித் தோளில் எடுத்துச் செல்வதற்கன்று. இந்தத் தம்மம் ஓடம் போன்றது. ஓ, பிக்குகளே, நீங்கள் நல்ல கருமங்களைக் கூட (தம்ம) கைவிடவேண்டும். அப்போது தீயகருமங்களை எத்துணை தூரம் கைவிடவேண்டும் (அதம்மம்)?` [14]
புத்தருடைய போதனையின் நோக்கம் மனிதன் சுகம், சாந்தி, ஆனந்தம், சமாதானம் என்னும் நிர்வாண பதத்துக்கு இட்டுச் செல்வதே. புத்த தர்மத்தின் குறிக்கோள் நிர்வாணமே. விவேகத்தின் விடுப்பூக்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக அவர் எதையும் கூறவில்லை. அவருடைய போதனை காரிய பூர்வமானது. மனிதனுக்கு சாந்தியும் சமாதானமும் கொடுக்கக் கூடியவற்றை மாத்திரமே அவர் போதித்தார்.
அலாகாபாத்துக்குச் சமீபத்திலுள்ள கோசம்பி என்ற இடத்திலே ஒரு அசோகமரக் காட்டில் பகவான் வசித்துவந்தார். ஒரு சில அசோக இலைகளைக் கையிலே எடுத்து அவர் சீடர்களைப் பார்த்து `என்ன நினைக்கிறீர்கள் பிக்குகளே, என் கையிலுள்ள இலைகளா காட்டிலுள்ள இலைகளா எது அதிகம்?` என்று கேட்டார். `பகவான் கையிலுள்ள இலைகள் அற்பம். அசோகக் காட்டிலுள்ள இலைகள் எம்மடங்கு அதிகம்.`
`அதேபோல நான் அறிந்தவற்றுள் ஒரு சொற்பத்தையே உங்களுக்குக் கூறியுள்ளேன். நான் சொல்லாதது மிக அதிகம். ஏன் நான் அவற்றை உங்களுக்குக் கூறவில்லை? ஏனெனில் அவற்றால் உங்களுக்குப் பயனில்லை. அவை நிர்வாண சுகத்தைத் தரமாட்டா. அதனால் தான் நான் அவற்றைக் கூறவில்லை.`
புத்தர் அறிந்திருந்தும் எமக்குச் சொல்லாதவையென்ன என்பதையிட்டுச் சில அறிஞர் வீண் ஆராய்ச்சியில் ஈடுபடுவர். அவசியமற்ற அத்யாத்மவித்தை சம்பந்தமான தனிக் கற்பனையிலெழும் விஷயங்களைப் பற்றி புத்தர் அக்கறை கொள்ளவில்லை. இவை சிந்தனைக் காடு! என அவர் வருணித்தார். இத்தகைய மனோபாவம் அவருடைய சீடர்களிற் சிலருக்கே வெறுப்பையுண்டாக்கிற்று. இவர்களுள் மாலுங்கியப் புத்திரர் என்பவர் ஒருவர். அவர் அத்தியாத்ம வித்தை சம்பந்தமான பத்துப் பிரசித்தமான கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு விடை கூறுமாறு புத்தரை வேண்டினார்.
ஒரு நாள் மாலுங்கிய புத்திரர் மாலைத் தியானத்தை முடித்துக் கொண்டு பகவானை அணுகி வணங்கி ஒரு புறத்தில் இருந்து கூறினார். `பிரபோ, நான் தனியாயிருந்து தியானஞ் செய்த போது இந்த எண்ணம் என்மனத்தில் உண்டானது. பகவான் இந்தப் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுக்காமல் ஒரு புறத்தே ஒதுக்கித் தள்ளி விட்டீர்கள்:
1. இந்த உலகம் சாஸ்வதமானதா?
2. சாஸ்வதமற்றதா?
3. இது அநித்தியமானதா?
4. நித்தியமானதா?
5. உடல் தான் ஆன்மாவா?
6. அல்லது உடல் வேறு ஆன்மா வேறா?
7. மரணத்தின் பின்னர் ததாகதர் நிலைத்திருப்பாரா?
8. அழிந்து விடுவாரா?
9. இறந்த பின் ஒரே நேரத்தில் இருந்தும் இல்லாமலுமிருக்கிறாரா?
10. ஒரே நேரத்தில் இல்லாமலும், இல்லாமல் அல்லாமலும் இருக்கிறாரா?
இவற்றை பகவான் எனக்கு விளக்கவில்லை. அத்தகைய மனோபாவம் எனக்குப்பிடிக்கவில்லை. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பகவானிடம் போய் இவ்விஷயத்தைக் கேட்பேன். பகவான் இவற்றை எனக்கு விளக்குவாரானால் அவரின் சீடனாயிருந்து என் துறவு வாழ்வைத் தொடர்ந்து நடத்துவேன். பகவான் விளக்காவிட்டால் சங்கத்தை விட்டு விலகுவேன். உலகம் சாசுவத மானதென பகவான் அறிந்திருதால் அதை அவ்வாறே எனக்கு அவர் விளக்கவேண்டும். உலகம் சாசுவதமற்றதென்று பகவான் அறிந்திருந்தால் அவ்வாறே எனக்குச் சொல்ல வேண்டும். உலகம் சாசுவதமா இல்லையா என்பதை பகவான் அறிந்திராவிட்டால் அவ்வாறு அறியாதவர் நேரே `எனக்குச் தெரியாது, நான் அதைக் காணவில்லை என்று நேரடியாகச் சொல்ல வேண்டும்.`
இத்தகைய அத்தியாத்ம ஆராய்ச்சிகளில் தமது அருமையான காலத்தை வீணாக்கி மனச் சாந்தியைக் குலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்தர் மாலுங்கிய புத்தரருக்குக் கூறிய விடை நன்மை பயக்கும்.
`வாருங்கள் மாலுங்கிய புத்திரனே; உங்கள் துறவு வாழ்க்கையை என் கீழ் நடத்துங்கள், நான் இப்பிரச்சினைகளை விளக்கி வைக்கிறேன் என்று எப்போதாவது உங்களுக்குக் கூறினேனா?`
`இல்லை, பிரபோ.`
"`சுவாமீ! பகவானிடத்திருந்தே துறவு வாழ்வை நடத்துவேன், பகவான் இந்தப் பிரச்சினைகளை எனக்கு விளக்க வேண்டு` மென்றும் மாலுங்கிய புத்திரனே நீங்களாவது எனக்குச் சொன்னீர்களா?"
`இல்லை சுவாமீ.`
"`வந்து என் கீழ் துறவு வாழ்வை நடத்துவீராக, மாலுங்கிய புத்திரனே, இக்கேள்விகளுக்கு விடைதருகிறேன்.` என்று இப்பொழுது கூட நான் உங்களுக்குக் கூறவில்லையே. `சுவாமி, நான் துறவு நெறியை பகவான் கீழிருந்து நடத்தப் போகிறேன், அவர் கேள்விகளுக்கு விளக்கம் தருவார்` என்று நீங்கள் கூறியதில்லையே. இப்போது, அறிவில்லாதவரே! யார் யாருக்கு விளக்கம் தர மறுக்கிறார்?" [15]
"`இந்தக் கேள்விகளுக்கு விடைதரும்வரை பகவான் உபதேசப்படி நான் துறவு வாழ்வை நடத்துவதில்லை` என்று மாலுங்கிய புத்திரனே எவராவது சொல்வாரானால் ததாகதரின் பதில் இன்றி அவர் இறக்க வேண்டியதே. ஒரு மனிதன் நஞ்சூட்டிய அம்பினால் காய மடைந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வாய், மாலுங்கிய புத்திர, அவருடைய நண்பர்களும், சுற்றத்தவரும் அவனை ஒரு சத்திர வைத்தியரிடம் கொண்டு போகிறார்கள். அப்போது அம்மனிதன் `யார் என் மீது அம்பு எய்தார்கள், அவன் சத்திரியனா, பிராமணனா, வைசியனா, சூத்திரனா, அவனுடைய பெயரென்ன? கோத்திரமென்ன? அவன் நெட்டையனா, கட்டையனா, நடுத்தரமானவனா? அவனுடைய நிறம் கறுப்பா, கபிலமா, பொன்னிறமா? அவன் எந்தக் கிராமம், நகரம், பட்டினம்? இவற்றை அறியும்வரை என் உடலிற் பாய்ந்த அம்பை எடுக்கவிடமாட்டேன். மேலும் எத்தகைய வில்லினால் அவன் என்னை எய்தான், வில்லின் நாண் எத்தகையது? எத்தகைய அம்பை எய்தான், அம்பிலே சேர்க்கப்பட்ட சிறகு எத்தகையது, அம்பின் அலகு என்ன உலோகத்தினால் செய்யப்பட்டது? இவற்றை அறியும்வரை அம்பை எடுக்க விடமாட்டேன்` என்று கூறுகிறான். இக் கேள்விகளுக்குப் பதில் பெறாமலே அந்த மனிதன் இறந்து விடுவான், மாலுங்கிய புத்திர. அவ்வாறே, மாலுங்கிய புத்தர, இந்த உலகம் சாசுவதமானதா முதலிய கேள்விகளுக்கு பகவான் விடை தரும்வரை பகவானுடைய சீடனாய் துறவு வாழ்வை நடத்தமாட்டேன் என்று ஒருவன் கூறுவானானால், ததாகதரின் பதில் கிடைக்காமலே இறந்து விடுவான்.
துறவு வாழ்க்கை இந்த அபிப்பிராயங்களில் தங்கியிருக்கவில்லை. என்றாலும் இக் கேள்விகளுக்கு எவ்விதப் பதிலை ஒருவர் கூறினாலும் எவ்விதக் கருத்தை உடையவராயிருந்தாலும் உலகில் பிறப்பு, மூப்பு, பிணி, சாக்காடு, அவலக் கவலைக் கையாறு என்பன உண்டு. அவற்றிலிருந்து இப்பிறவியிலேயே நீங்குவதற்கு வழியையே, நிர்வாணத்தையே நான் போதிக்கிறேன்.
ஆனபடியால் மாலுங்கிய புத்திரனே, நான் விளக்கியவற்றை விளக்கியவையாகவும், விளக்காதவற்றை விளக்காதவையாகவும் கொள்வாயாக. நான் விளக்காதவை எவை? உலகம் சாசுவதமானதா அல்லவா முதலிய 10 கருத்துக்களை நான் விளக்கவில்லை. ஏன் மாலுங்கிய புத்திர அவற்றை நான் விளக்கவில்லை? ஏனென்றால் அவை பயனற்ற ஆராய்ச்சிகள். துறவு வாழ்வோடு அவை அடிப்படைத் தொடர்புடையவையல்ல, வைராக்கியம், பற்றற்றநிலை, ஆசையற்றநிலை, சாந்தம், ஆழ்ந்த காட்சி, பூரண அனுபவம், நிர்வாணம் என்பவற்றுக்குத் துணை புரிவனவில்லை. அதனால் தான் அவற்றைப் பற்றி நான் உங்களுக்கு கூறவில்லை.
அப்போது மாலுங்ய புத்திரரே, நான் விளக்கியது என்ன? துக்கம் உண்டென விளக்கினேன். துக்க உற்பத்தியை விளக்கினேன், துக்க நிவாரணத்தை விளக்கினேன், துக்க நிவாரண மார்க்கத்தை விளக்கினேன். [16]
எதற்காக இவற்றை நான் விளக்கினேன்? இது பயனுடையதென்பதால், துறவு நெறிக்கு அவசியமானபடியால், வைராக்கியம், பற்றற்ற நிலை, ஆசையறுத்தல், சாந்தம், ஆழமான காட்சி, பூரண அனுபவம், நிர்வாணம் என்பவற்றுக்குத் துணை புரிவதால், அதனால் நான் அவற்றை விளக்கினேன். [17]
புத்தர் மாலுங்கிய புத்திரருக்குக் கூறிய நான்கு உயர் வாய்மைகளை ஆராய்வோம்.
* * *
[1] ததாகதர் என்றால் உண்மையை உணர்ந்தவர் (உண்மையைவந்தடைந்தவர்) அதாவது உண்மையைக் கண்டறிந்தவர். தம்மைப் பற்றியும் ஏனைய புத்தர்களைப் பற்றியும் குறிப்பிடும் போது புத்தர் "ததாகதர்: என்ற சொல்லால் குறிப்பிடுவார்.
[2] சங்கமென்றால் சமூகம். பௌத்தத்தில் இது பௌத்த பிக்குகள் கூட்டத்தையே குறிக்கும். புத்தம், தருமம், சங்கம் என்ற மூன்றும் பௌத்தத்தில் "திரிசரணம்" அல்லது "திரதன" (சமஸ்கிருதம் திரிரத்னம்) என வழங்கப்படும்.
[3] வீமம்சக சுத்த - மஜ்ஜிம நிகாயத்தின் 47 ஆம் சூத்திரம்.
[4] ஐந்து நீவாரணங்களாவன: காம இச்சை, துவேசம், கழிமடம் சோர்வு, சஞ்சலம், கவலை, ஐயம்
[5] ஜைனமதத் தாபகரான மகாவீரர் புத்தர் காலத்தினர். புத்தரின் சில வயது மூத்தவராயிருக்கலாம்.
[6] உபாலி சுத்த 56-மஜ்ஜிம
[7] இந்தியாவிலே குயவருடைய கொட்டகை மிக விசாலமானதாகவும் அமைதியானதாகவும் காணப்படும். அலைந்து திரியும் சமணர்களும் சந்நியாசிகளும் புத்தரும் கூட இத்தகைய கொட்டகைகளில் இரவைக் கழித்ததாகப் பாளிப்பிடகங்களில் காணப்படுகிறது.
[8] புத்தர் இந்தத் துறவியைப் `பிக்கு` என்று விளித்துக் கூறுவது கவனிக்கத் தக்கது. பிக்கு என்ற அடைமொழி புத்தசாவகரையே குறிக்கும். ஆனால் இவர் பிக்கு வல்லர் என்பதும் சங்கத்தைச் சேர்ந்த அடிகளல்லர் என்பதும் இந்த உரையாடலிலிருந்து தெரியவரும். தம்மைப் புத்த சங்கத்திலே சேர்த்துக் கொள்ளுமாறு பகவானைக் கேட்கிறார். ஒரு வேளை புத்தர் காலத்திலே `பிக்கு` என்றவழக்கு ஏனைய மதத்தைச் சேர்ந்த துறவிகளுக்கும் வழங்கப்பட்டதாயிருக்கலாம். அல்லது பிக்கு என்ற சொற்பிரயோகத்தை அவர் பாகுபாடின்றி வழங்கியிருக்கலாம். பிக்கு என்றால் பிச்சை ஏற்று உண்பவர். அதனால் அவ்வார்த்தை அதன் ஆரம்பக் கருத்தில் வழங்கப்பட்டிருக்கலாம். இன்று பிக்கு என்ற சொல் பௌத்த சாவகரையே குறிக்கும். இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போகியா, சிட்டகொங் போன்ற நாடுகளில் விசேடமாக இந்தக் கருத்திலேயே பயன்படுத்தபடுகிறது.
[9] மூன்றாவது உயர் வாய்மை பற்றிய அத்தியாயம் பார்க்க.
[10] இங்கே கூறப்பட்ட பாளிச் சொல் `ஆவுசோ` சமநிலையிலுள்ளவர்களை விளிக்கும் போது கௌரவமாகக் கூறப்படுகிறது. புத்தரை விளிக்கும்போது சீடர் இச்சொல்லை வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக `பந்தே` என்ற சொல்லை வழங்குவர். `பந்தே` என்றால் ஐயா அல்லது `பிரபு` எனப் பொருள்படும். புத்தர் காலத்திலே சங்கத்து அடிகள் ஒருவரை ஒருவர் `ஆவுசோ` நண்ப என்று விளிப்பர். புத்தர் இறப்பதற்கு முன்னர், இளைய பிக்குகள் முதியவர்களைப் `பந்தே` என்றோ (ஐயா) `அயஸ்மா` பிரபோ என்றோ விளித்துக் கூற வேண்டுமெனப் பணித்தார். மூத்தவர்கள் இளையவர்களைப் பெயர் சொல்லியோ அல்லது `ஆவுசோ` நண்ப என்றோ விளிக்கலாம். இந்த வழக்கம் இன்றுவரை சங்கத்தில் நிலவி வருகிறது.
[11] இந்தியாவில் பசுக்கள் வீதிகளில் அலைந்து திரிவதைச் சாதாரணமாகக் காணலாம். இது பழையதொரு வழக்கம் என்பது இக்குறிப்பிலிருந்து தெரிகிறது. ஆனால் இப்பசுக்கள் ஆபத்தானவையல்ல. அவை சாதுவான மிருகங்கள்.
[12] அருகதர் எனப்படுபவர் ஆசை, பகைமை, தீயஎண்ணம், அறியாமை, அகங்காரம் முதலிய மாசுகள் அற்றவர். நிர்வாண சுகம் பெறுவதற்கான நாலாவது படியான உயர்நிலை அடைந்தவர். அவரிடம் ஞானம் கருணை போன்ற உயர் குணங்கள் நிறைந்திருக்கும். புக்குசாதி அடைந்த நிலை மூன்றாவது நிலையான `அனாகாமி` நிலை. அதாவது இனிமேல் வந்து பிறவாதவர். இரண்டாவது படி `சகதாகாமி` நிலை. அதாவது இன்னும் ஒரு முறையே பிறவி எடுப்பவர். முதாலவது படி ஆற்றில் (தருமத்தில்) இறங்கியவர் எனப் பொருள்படும் `சோதாபன்னர்` நிலை.
[13] சிரத்தை என்ற வார்த்தை சாதாரண பத்தி சிரத்தை நம்பிக்கை என்ற அர்த்தத்தில் இங்கே காணப்படுகிறது.
[14] இங்கே தம்மம் என்பது உயர்ந்த ஆன்மீகப் பேற்றையும் தூய தரிசனங்களையும் கருத்துக்களையும் குறிக்கும். இவை எத்துணை உயர்ந்தனவானாலும் அவற்றில் பற்றுவைக்கக்கூடாது. எனவே தீயவற்றை எத்துணை தூரம் துறந்துவிட வேண்டும்.
[15] இருவரும் சுயாதீனவர்கள். இருவரில் எவரும் மற்றவருக்கு கடப்பாடுடையவரல்லர்.
[16] இந்த நான்கு உயர் வாய்மைகளும் அடுத்த நான்கு அத்தியாயங்களில் விளக்கப்படும்.
[17] புத்தருடைய இந்த அறிவுரை விரும்பிய பலனை மாலுங்கிய புத்திரனிடம் உண்டாக்கிறது. அவன் மறுபடியும் அறிவுரை பெறுவதற்காகப் புத்தரிடம் சென்றதாகவும் அதன் பலனாக அருகதநிலை அடைந்தததாகவும் வேறு இடங்களில் காணப்படுகிறது.