சிகாலனுக்கு அறவுரை

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

சிகாலனுக்கு அறவுரை

இல்லறக் கடமைகளும் சமூகக் கடமைகளும்

(சிகாலோ வாத சுத்தம்)

(சுருக்கம்)

Sigalovada Sutta (Abridged)

நான் இவ்வாறு கேள்வியுற்றேன். பகவான் ஒரு முறை ராஜகிருகத்திலே வேலுவனத்திலுள்ள கலந்தக நிவாபத்தில் இருந்தார். இந்தச்சமயம் சிகாலன் என்ற இல்லத்தலைவனின் மகன், நேரத்தோடு எழுந்து, ராஜகிருகத்தை விட்டுவெளியே சென்றான். நனைந்த வஸ்திரமும், நனைந்த தலைமயிரும், கூப்பிய கையுமுடையவனாய் ஒவ்வொரு திசையையும் நோக்கி வணங்கினான். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும், கீழ் மேல் திசைகளையும் நோக்கி வழிபாடியற்றினான் [1]. அதே காலை பகவான் சீவர ஆடை அணிந்து பிண்ட பாத்திரந்தாங்கி, பிச்சை ஏற்பதற்காக ராஜகிருகத்தில் பிரவேசித்தார். அப்போது சிகாலன், வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு பின்வருமாறு கூறினார்.

'கிருகபதி புத்திரனே! நேரத்தோடு எழுந்து ராஜகிருகத்தை விட்டுப் புறப்பட்டு நனைந்த தலைமயிரும் ஆடையும் உடையவனாய் பூமியிலும் வானத்திலுமுள்ள பல்திசையையும் ஏன் வணங்குகிறாய்? '

'சுவாமீ, என் தந்தை இறக்கும்போது "அன்புள்ள மகனே, வானத்திலும் பூமியிலுமுள்ள திசைகளை நீ வணங்க வேண்டும்" என்று எனக்குச் சொன்னார். அதனால் சுவாமீ நான் என் தந்தையின் வார்த்தையைக் கௌரவித்துப் போற்றி, பாராட்டி அவற்றைப் புனிதமாகக் கொண்டு அதிகாலையில் எழுந்து, ராஜகிருகத்தை விட்டு வெளிவந்து, இவ்வாறு வழிபாடு செய்கிறேன்'.

'ஆனால் ஆரியர் விநயப்படி ஓ கிருகபதி புத்திரனே, ஆறுதிசைகளை இவ்வாறு வழிபடக்கூடாது'.

'அப்படியானால் சுவாமீ, ஆரியர் விநயப்படி ஆறுதிசைகளை எவ்வாறு வழிபடவேண்டுமென்பதை பகவான் உபதேசித்தருளினால் நன்றாயிருக்கும்'.

'நல்லது கிருகபதி புத்திரனே கேட்பாயாக, மனங்கொண்டு கேட்பாயாக. நான் சொல்லுகிறேன்'.

'ஆம் பிரபோ' என்று கிருகபதி புத்திரன் கூற பகவான் சொல்லியருளினார். 'கிருகபதி புத்திரனே, எவ்வளவுக்கு ஆரிய சிராவகன் கர்மக் கிலேசங்கள் நான்கையும் கைவிடுகிறானே, நாலு காரணங்களை உத்தேசித்து பாவ கர்மங்களைச் செய்யாது விடுகிறானோ, சம்பத்து அழிந்து போகும் ஆறு வாசல்களில் செல்லாதிருக்கிறானோ, இவ்வாறு இந்த 14 தீய கருமங்களைக் கைவிட்டுவிடுவானானால், அவன் ஆறு திசைகளின் பாலகன் (திக்குப்பாலகன்) ஆவான். இரு உலகையும் வெற்றிக்கொள்ளும்பாதையில் அவன் செல்லுகிறான். இம்மையிலும் மறுமையிலும் அவன் சித்தியெய்துகிறான். உடல் அழிந்ததும் மரணத்தின்பின்னர், சுவர்க்கத்தில் நற்கதி அடைவான்.

அவன் கைவிட்ட நான்கு காமக்கிலேசங்கள் எவை? உயிர்களைக் கொல்லல், களவெடுத்தல், பிறர் மனை நயத்தல், பொய் பேசுதல். இந்த நான்கு கர்மக்கிலேசங்களை அவன் கைவிட்டு விட்டான்.

எந்த நாலு காரணங்களால் அவன் பாவகர்மங்களைச் செய்யாது விடுகிறான்?

விருப்பு, வெறுப்பு, மோகம், பயம் என்ற காரணங்களினாலே பாவங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் ஆரிய சாவகன் (பிக்கு) இந்த நாலுகாரணங்கள் அவனைத் தவறான வழியில் செலுத்த முடியாதபடியால் இவை காரணமாக அவன் பாவ கர்மங்கள் செய்வதில்லை.

செல்வம் கரைந்து போவதற்கு ஆறு வாயிலாய் அமைந்தவை எவை?

மதுபானம் அருந்துதல், அகாலத்தில் வீதிகளில் திரிதல், நாட்டியம், விழா என்பன பார்க்கச் செல்லுதல், சூதாட்டம், தீய நண்பரோடு சேருதல், சோம்பல் என்பன.

கிருகபதி புத்திரனே, மதுபானத்தினால் உண்டாகும் ஆறு ஆபத்துக்களிவை. தனம் நாசமாதல், சண்டை சச்சரவு அதிகரித்தல், நோய் பிணி உண்டாதல், கெட்ட பெயரெடுத்தல், நாணமற்ற செயலில் ஈடுபடுதல் (மறைக்கப்படவேண்டிய உறுப்புக்களை மறையாதுவிடுதல்), புத்திஞானக் கெடுதல்.

அகால நேரத்தில் வீதிகளில் அலைந்து திரிவதால் கிருகபதி புத்திரனே, ஆறுவகையான அபாயங்கள் உண்டாகும். ஒருவனுக்குப் பாதுகாப்பில்லாமற் போகிறது. அவனுடைய மனைவி மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாமற் போகிறது. அவனுடைய சொத்து தனம் என்பவற்றுக்கும் பாதுகாப்பில்லாது போகிறது. கண்டுபிடிக்கப்படாத குற்றங்களுக்கு இவனே பாத்திரமானவனென்று சந்தேகிக்கப் படுவான். வீண் பழியை மக்கள் இவன் மீது ஏற்றுவார்கள். தொந்தரவுகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

விழாக்கள் பார்க்கக் செல்வதால் ஆறுவகையான ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. நாட்டியம், பாட்டுக் கச்சேரி, சங்கீதம், கதாப்பிரசங்கம், தாளவாத்தியக் கச்சேரி, கடவாத்தியம் என்பன எங்கே உண்டு என ஒருவன் தேடித் திரிவான்.

சூதாட்டத்தினால் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன. சூதாட்டத்தில் ஒருவன் வெற்றி பெற்றால் அவனை வெறுப்பார்கள், அவன் தொல்வியடைந்தால் பணத்தை இழந்துவிட்டேன் என்று பிரலாபிப்பான். பொருள் வீணாகிறது, சபையில் அல்லது நீதி மன்றத்தில் அவன் பேச்சுக்கு மதிப்பில்லை. நண்பரும், சகாக்களும் அவனை அவமதிப்பார்கள். அவனுக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் சூதாடுபவன் நல்ல கணவனாக மாட்டான் என மக்கள் கூறுவர்.

தீய நண்பரோடு சேருவதால் ஆறுவகையான தீமைகள் உண்டு. ஏனெனில் சூதாட்டக்காரரும், காமுகரும், குடிகாரரும், கபடிகளும், மோசடிகாரரும், தடியடி மிண்டர்களும் அவனோடு கூட்டாளிகளாயிருப்பர்.

சோம்பலினால் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன. மிகக் குளிராயிருக்கிறதென்று சொல்லி வேலை செய்யாதிருத்தல், மிக வெப்பமாய் இருக்கிறதென்று சொல்லி வேலை செய்யாதிருத்தல், மிக நேரத்தோடு வந்துவிட்டோம்....மிக நேரமாகிவிட்டது என்று சொல்லி வேலை செய்யாதிருத்தல், எனக்கு மிகப் பசியாய் இருகிறதென்று சொல்லி வேலை செய்யாதிருக்கிறான். நன்றாகச் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லி வேலை செய்யாதிருக்கிறான். இவ்வாறு அவன் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாதிருக்கின்றன. அதனால் அவனுடைய வருமானம் குன்றி இருக்கிற செல்வமும் தேய்ந்து போகிறது.

* * *

நண்பர் வடிவத்தில் பகைவராயிருப்போர் நாலு வகையினர்: கொள்ளையடிக்கும் பாங்குடையவன், நண்பன் போலப் பாசாங்கு செய்பவன், இச்சகம் பேசுவோன், ஊதாரி.

இவர்களுள் முதாலாவது வகையைச் சேர்ந்தவன், நாலு காரணத்தினால் நண்பன் வடிவிலுள்ள பகைவனாவான். அவன் கொள்ளையடிக்கும் சுபாவமுள்ளவன், கொஞ்சம் கொடுத்து அதிகம் எதிர்பார்ப்பவன், செய்ய வேண்டிய கடமையைப் பயத்தினால் செய்வான். தன்னலத்தையே கவனிப்பான்.

வாயால் மாத்திரம் பேசிக்கொண்டு செயலில் ஒன்றுஞ் செய்யாத ஒரு நண்பனை நண்பன் வடிவிலுள்ள பகைவனாகக் கவனிக்க வேண்டும். அதற்கு நான்கு காரணங்களுண்டு. இறந்த காலத்தைப் பற்றிப் பேசித் தான் நண்பனாயிருந்தால் செய்திருப்பேன் எனப் பாசாங்கு செய்வான். எதிர்காலத்தில் என்ன வெல்லாமோ செய்யப்போவதாக ஆசை காட்டுவான். அவனுடைய பேச்செல்லாம் வெட்டிப் பேச்சாயிருக்கும். உண்மையில் உதவி செய்ய வேண்டிய காலம் வந்ததும் கைவிட்டு விடுவான்.

இச்சகம் பேசுவோர் நண்பர் வடிவில் உள்ள பகைவரே. அதற்கு நாலு காரணமுண்டு. நீங்கள் செய்யும் பாவச் செயல்களையும் அவர்கள் ஆமோதிப்பர். நற்செயல்களையும் ஆமோதிப்பர். முகத்துக்கு முன்னால் உங்களைப் புகழ்ந்து பேசுவர். போகவிட்டுப் புறங் கூறித்திரிவர்.

ஊதாரியாயிருப்பவனை நாலு காரணங்களைக் கொண்டு நண்பர் வடிவில் உள்ள பகைவராகக் கொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்தச் செல்லும்போதும், அகாலவேளையில் வீதியில் சுற்றித்திரியும் போதும், விழாக்களுக்கும், நாட்டியக் கச்சேரிகளுக்கும் போகும்போதும், சூதாடும் போதும் இவன் உங்கள் கூட்டாளியாக இருப்பான்.

* * *

நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் நாலு வகைப்படுவர்: உபகாரம் செய்யும் நண்பன், இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலையில் இருக்கும் நண்பன், நல்லதைச் சொல்லும் நண்பன், அனுதாபம் காட்டும் நண்பன்.

உபகாரம் செய்யும் நண்பன், நாலு காரணத்தினால் நல்ல நண்பனாகக் கொள்ளப்படுவான். தேவையான காலத்தில் உதவிபுரிவான். நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் உடமைகளைப் பாதுகாக்கிறான். பயந்த வேளையில் உங்களுக்கு அபயம் அளிக்கிறான். நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில், உங்களுக்கு இரண்டு மடங்கு உதவி புரிகிறான்.

இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே நிலையில் நிற்கும் நண்பன் நாலு காரணங்களால் கல்யாணமித்திரனாகிறான். அவன் தன்னுடைய இரகசியங்களை உங்களுக்குச் சொல்லுகிறான். உங்கள் இரகசியங்களை அம்பலப்படுத்த மாட்டான். துன்பம் வருங்காலத்தில் கைவிடமாட்டான், உங்களுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்வான்.

உள்ளதைச் சொல்லும் நண்பன்..... நாலு காரணங்களுக்காக நல்ல நண்பனாகிறான். நீங்கள் தவறு செய்வதைத் தடுப்பான். சரியானதைச் செய்யவே தூண்டுவான். அவனிடமிருந்து நீங்கள் முன் அறிந்திராத நல்லவிஷங்களை அறியக்கூடியதாயிருக்கும், அவன் சுவர்க்கத்துக்கு வழி காட்டுவான்.

அனுதாபமுள்ள நண்பன் நாலு காரணங்களால் நல்ல நண்பனாகக் கணிக்கப்படத்தக்கவன். உங்களுக்குண்டாகும் துர்ப்பாக்கியத்தைக் கண்டு அவன் சந்தோஷப்படமாட்டான். உங்கள் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்ச்சியடைவான். உங்களைப் பற்றி இழிவாகப் பேசுவோரைத் தடுப்பான். உங்களைப் பற்றிப் புகழ்வோரை ஆதரிப்பான்.

* * *

கிருகபதி புத்திரனே, ஆரிய சாவகர் எவ்வாறு ஆறு திசைகளையும் காவல் செய்கின்றனர்? [2]

திக்குகளுக்குரியவர் என்போர்: கிழக்கிலே பெற்றோர், தெற்கிலே ஆசிரியன்மார், வடக்கிலே நண்பரும் கூட்டாளிகளும், மேற்கிலே மனைவி மக்கள், கீழ் திசையிலே வேலைக்காரரும் பணியாட்களும், உச்சித்திசையிலே துறவிகளும் பிராமணரும்.

கிழக்குத் திசைக்குரியவரான பெற்றோரை மக்கள் ஐந்து வகையில் வழிபடவேண்டும். 'என்னை ஒரு காலத்தில் பெற்றோர் ஆதரித்தார்கள். இப்போது நான் அவர்களுக்கு ஆதாரமாயிருப்பேன். அவர்கள் செய்த கடமைகளை நான் அவர்களுக்குச் செய்வேன். என் குடும்பத்தின் சந்ததியையும் மரபையும் நான் காப்பாற்றுவேன். எனக்குரிய பிதிரார்ச்சிதங்களை நான் பரிபாலிப்பேன். அவர்கள் இறந்தால் பிதிர்க்கடமைகளை நான் செய்வேன்.

இவ்வாறு மக்களால் பரிபாலிக்கப்பட்ட பெற்றோர் கிழக்குத் திசைக்குரியவராக பாலகராகத் தம்மக்களுக்கு ஐந்து வகையில் அன்பு காட்டுவர். தீய வழியில் பிள்ளைகள் செல்ல விடாது காப்பாற்றுவர். நல்ல வழியில் அவர்களைச் செலுத்துவர். தொழில்துறையில் அவர்களுக்குப் \பயிற்சியளிப்பர். அவர்களுக்கு நல்லவிவாகங்களை ஒழுங்குசெய்வர். காலப்போக்கில் தம் சொத்துக்களை வழங்குவர்.

இவ்வாறு கிழக்குத்திசையிலிருந்து ஆபத்து வராமல் பாதுகாப்பளிக்கப்படுகிறது.

தெற்குத் திசைக்குரியவரானவர் ஆசிரியர், குருமார். இவர்களை ஐந்து வகையாகப் போற்றலாம். இருக்கைவிட்டெழுந்து அவர்களை வணங்க வேண்டும். அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களிடம் கற்க ஆவலுடையவராயிருக்க வேண்டும். அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். அவர்கள் கூறும் பாடங்கள் மரியாதையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தெற்குத் திசைக்குரியவராய் மாணாக்கரால் ஆராதிக்கப்பட்ட ஆசிரியர்மார், மாணாக்கர் மீதுள்ள அன்பை ஐந்து வகையில் காட்டுவார். மாணாக்கனுக்கு நல்ல பயிற்சி அளிப்பர், படித்ததை நன்கு கிரகிக்கச் செய்வர், சகல கலைகளிலும் நல்ல பயிற்சி அளிப்பர். தம்முடைய நண்பருக்கும் கூட்டாளிகளுக்கும் மாணாக்கனை அறிமுகம் செய்து வைப்பர். அவனுடைய பாதுகாப்புக்கு எல்லா இடங்களிலும் வகை செய்வர்.

இவ்வாறு தெற்குத் திசையிலிருந்து ஆபத்து வராமல் பாதுகாக்கப் படுகிறது.

மேற்குத் திசைக்கு உரியவரான மனைவியை ஐந்து வகையாகக் கணவன் போற்றலாம். அவளுக்குக் கௌரவம் அளிக்க வேண்டும். நயமாக அவளோடு பழகவேண்டும். அவளுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும். அவளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். நகை நட்டுக்களை வழங்க வேண்டும்.

மேற்குத் திசையின் பாலகராக கணவனால் போற்றப்பட்ட மனைவி ஐந்து வகையில் தன் அன்பைக் காட்ட வேண்டும். தன் கடமையை நன்றாகச் செய்ய வேண்டும். பணியாட்கள் முதலியோரை உபசரிக்க வேண்டும். விசுவாசம் உடையவளாயிருக்க வேண்டும். கணவனுடைய சம்பாத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும். சகலவிதமான விவகாரங்களிலும் அவள் திறமையும் முயற்சியும் உடையவளாயிருக்க வேண்டும்.

இவ்வாறு மேற்குத் திசையிலிருந்து எந்தவித ஆபத்தும் வராமல் நன்கு பாதுகாப்புச் செய்யப்படுகிறது.

உத்திர திசைக்குரியவரான நண்பர்க்கும் கூட்டாளிகட்கும் குடும்பத்திலுள்ளவர், ஐந்து வகையில் சத்காரஞ் செய்யலாம். வள்ளன்மை, மரியாதை, கொடை, சம அந்தஸ்து வழங்கல் (தன்னைப் போல அவர்களையும் மதித்தல்), வாக்குறுதி தவறாதிருத்தல்.

வட திசைக்குரியவராகப் போற்றப்பட்ட நண்பரும் கூட்டாளிகளும் ஐந்து வகையில் தம் அன்பைக் காட்டுவர். பாதுகாப்பு அவசியமான காலத்திலேயே அவர்கள் அவனுக்குப் பாதுகாப்பளிப்பர். முடியாத காலத்தில் அவனுடைய சொத்துக்களைப் பரிபாலிப்பர். ஆபத்துக் காலத்தில் அவனுக்குச் சரணாயிருப்பர். கஷ்டம் வந்த காலத்தில் அவனைக் கைவிடமாட்டார். அவனுடைய சுற்றத்தவரிடம் கூட மரியாதை காட்டுவர்.

இவ்வாறு வட திசையிலிருந்து ஆபத்துவராமல் அவன் நன்கு பாதுகாக்கப்படுகிறான்.

கீழ்த்திசைக்குரியவராகப் பணியாட்களும் வேலைக்காரரும் எஜமானால் ஐந்து வகையில் போற்றப்படுகின்றனர். அவர்களின் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்றவாறு வேலை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவும் சம்பளமும் கொடுக்க வேண்டும். நோயுற்ற காலத்தில் அவர்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். விசேஷமான உணவை எஜமான் உண்டால் அதை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். பொருத்தமான காலங்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதோடு பரிசுகளும் வழங்க வேண்டும்.

இவ்வாறு போற்றப்படும் வேலைக்காரரும் பணியாட்களும் ஐந்து வகையில் தன் எஜமானருக்கு அன்பைத் தெரிவிக்கிறார்கள். எஜமான் துயில் விட்டெழுவதற்கு முன் எழுந்து விடுவார்கள். எஜமான் நித்திரைக்குச் சென்ற பின்னரே அவர்கள் நித்திரைக்குச் செல்லுகிறார்கள், கொடுத்ததை அவர்கள் ஏற்றுக் கொள்வர், வேலைகளைத் திறம்படச் செய்கிறார்கள். எஜமானைப் பற்றி நன்றாகப் புகழ்ந்து பேசி அவனுக்கு நல்ல பெயர் உண்டாக்குகிறார்கள்.

கீழ்த் திசையிலிருந்து எவ்வித ஆபத்தும் வராமல் இவ்வாறு பாதுகாப்பும், காவலும் உண்டாக்கப்படுகின்றன.

உச்ச திசைக்குரியவரான துறவிகளுக்கும் பிராமணர்க்கும் இல்லறத்திலுள்ளவன் ஐந்து வகையில் துணை செய்கிறான். அன்பான வகையில் உடலால் சேவை செய்தல் (மைத்திரி காயகர்ம).

அன்பான வகையில் வாக்கினால் சேவை செய்தல் (மைத்திரி வார்கர்ம)

அன்பான வகையில் மனத்தினால் சேவை செய்தல் (மைத்திரி மனோகர்ம). அவர்களை வரவேற்பதற்காக வாசலை எப்பொழுதும் திறந்தபடி வைத்திருத்தல்.

அவர்களுடைய லௌகீக தேவைகளைப் பூர்த்தி செய்தல் (அதாவது உணவு பானம் முதலியவற்றை வழங்குதல்).

இவ்வாறு மேல் திசைக்குரியவரென ஆராதிக்கப்பட்ட துறவிகளும் பிராமணரும் தம் அன்பை ஆறு வகையில் இல்வாழ்வானுக்குக் காட்டுகின்றனர். பாவச் செயல்களிலிருந்து அவனை விலக்குகிறார்கள், நல்வழியிற் செல்லுமாறு தூண்டுகிறார்கள். நல்ல மனத்தோடு அவனை ஆசீர்வதிக்கிறார்கள். தெரியாத விஷயங்களை அவர்கள் அவனுக்குப் படித்துக் கொடுக்கின்றனர். தெரிந்த விஷயங்களை மேலும் விளங்கப் படுத்திக் கல்வியை வளர்க்கிறார்கள். சுவர்க்கத்துக்குச் செல்லும் வழியைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இவ்வாறு மேல் திசையிலிருந்து எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாப்பும் காவலும் உண்டாக்கப்படுகிறது.

பகவான் இவ்வாறு கூறியருளியதும் கிருகபதி புத்திரனான சீகாலன் கூறினான். 'நன்று சுவாமீ நன்று, தலைகீழாக்கப்பட்டதை நேராக நிருத்தி விட்டீர்கள். மறைத்து வைக்கப்பட்டதை வெளிப்படுத்தி விட்டீர்கள். தவறான வழியிற் செல்பவனுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டீர்கள். இருட்டறையில் இருந்த பொருள்களைக் கண்ணுள்ளவர் காண்பதற்கு விளக்கைக் கொண்டு வந்தீர்கள். இவ்வாறு பல வகையாகத் தர்மத்தைப் பகவான் போதித்தருளினீர். நான் புத்த பகவானைச் சரண் அடைகிறேன். தருமத்தைச் சரண் அடைகிறேன். சங்கத்தைச் சரணடைகிறேன். என்னை இன்று தொட்டுச் சீவியகால பரியந்தம் பகவானுடைய உபாசகனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.'

* * *

[1] புற உலகின் பல திசைகளுக்கும் வழிபாடு செய்து அவ்வத் திசையிலுள்ள திக்குப் பாலகரின் பாதுகாப்பை வேண்டி வணங்கஞ் செலுத்துவது வேத சம்பிரதாயப்படியுள்ளதொரு பழைய பழக்கமாகும். புத்தபகவான் இத்தகைய கண்மூடி வழக்கங்களைக் கண்டித்து, எவரோடு இவை பற்றி உரையாடுகிறாரோ அவருக்கேற்றவாறு புதிய விளக்கங்களையும், கருத்துக்களையும் வழங்குகிறார். வஸ்திரம் பற்றிய கதை சிந்திக்கத்தக்கது. அதில் பகவான் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை விடுத்து, அந்தரங்க சுத்தி செய்ய வேண்டியதைப் பற்றி ஒரு பிராமணனுக்கு உபதேசஞ் செய்கிறார்.

[2] இங்கே பகவான் சிகாலனுக்கு ஆரிய விநயத்தின்படி ஆறுதிசைகள் எவை என்பதையும், அவற்றை எவ்வாறு வழிபடவேண்டுமென்பதையும், அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் கடப்பாடுகளையும் குறிப்பிடுகிறார். பழைய பிராமண சம்பிரதாயப்படி, திசைகளுக்குச் செய்யும் வழிபாடுகள் ஆரிய விநயத்துக்குப் பொருந்தாதவை என்பதையும் விளக்குகிறார். ஆரிய விநயம் என்பது பகவான் காட்டிய பயிற்சிமுறை. இம்முறைப்படி ஆறுதிசைகளையும் பாதுகாத்தால் அவற்றிலிருந்து எவ்வித தீமையும் அணுகாது. பிராமணரும் திசைகளை அதாவது புற உலகத்துத் திக்குப் பாலகரை அவர்களால் தீங்கு ஏற்படாதவாறு வழிபட்டனர்.