நல்லூக்கம்

நல்லூக்கம் (சம்மா வாயாம)

தணிசாரோ பிக்கு

Right Effort (samma vayamo)

Thanissaro Bhikkhu

In English

தியானம் என்பதற்குத் தாய் மொழில் (தாய்லாந்து நாட்டு மொழியில்) 'தம் குவாம் ஃபியன்' (tham khwaam phian) அதாவது 'முயற்சி செய்வது' என்ற மரபுச்சொல் (idiom) உண்டு.

முக்கியமாக அது சரியான முயற்சியாக இருக்க வேண்டும். முரட்டு முயற்சி நிப்பாண நிலைக்கு எடுத்துச் செல்லப் போவதில்லை. அஜான் ஃபுவாங் ஒருமுறை கூறினார்: 'முரட்டு முயற்சியால் மட்டுமே நிப்பாண நிலைக்குச் செல்ல முடியுமென்றால் இந்நேரம் நாம் அனைவரும் அந்நிலையை அடைந்திருப்போம்.' நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அது சரியான முயற்சியாகவும் இருக்க வேண்டும். இதில் மெய்ஞ்ஞானமும் விவேகமும் கலந்திருக்க வேண்டும்.

நன் முயற்சியை விவேகத்தோடு அணுகப் பல வழிகள் உள்ளன. அவைகளில் நாம் அனைவரும் அறிந்த ஒன்று, எந்த அளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதாகும். போற்றுதற்குரிய சோணா அவர்களைப் பற்றிய பிரபலமான கதை ஒன்று உண்டு. அவர் மிகவும் மென்மையாக வளர்க்கப் பட்டவர். எந்த அளவுக்கு என்றால் அவர் பாதங்கள் தரையிலேயே படாமல் வளர்க்கப் பட்டதால் அவைகளில் முடி வளர்ந்திருக்குமாம். அவ்வளவு மென்மையாக வளர்க்கப் பட்டவர் என்று சொல்லப்படுவதுண்டு. அவர் துறவறம் பூண்டார். கடுமையாகப் பயிற்சி செய்தார். பலமணி நேரம் நடந்தவாறே தியானம் செய்தார். அதனால் அவர் பாதங்களில் இரத்தம் கசியத் துவங்கியது. இதனால் அவர் மனம் சோர்வடைந்தது: "நான் இவ்வளவு முயற்சி செய்கிறேன். ஆனாலும் எனக்கு இன்னும் ஞானம் கிடைக்கவில்லை. நான் துறவறத்தை நீத்து இல்லற வாழ்க்கையை மீண்டும் தொடங்கினால் புண்ணியமாவது சேர்க்கலாம்,' என்று நினைத்தார். புத்தர் அவர் மனத்தை அறிந்து அவர் முன் தோன்றி, அவரிடம் கேட்டார், "முன்பு இல்லற வாழ்க்கையில் யாழ் வாசித்தபோது அதன் நரம்பு மிகவும் இறுக்கமாக இருந்தால் கேட்பதற்கு இசை எப்படி இருந்தது?" என்று கேட்டார். அது கேட்பதற்கு நன்றாகக இல்லை என்று பதிலளித்தார் போற்றுதற்குரிய சோணா. "நரம்பு மிகவும் தளர்ந்திருந்த போது?" அப்போதும் கேட்பதற்குச் சரியாகப் படவில்லை. "சரியான அளவுக்கு நரம்பின் இறுக்கம் இருந்தபோது?" அப்போதுதான் இசை கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

புத்தர் கூறினார்: "தியானமும் அதுபோலத்தான். உன் சக்திக்குத் தகுந்தார்ப்போல முயற்சி இருக்க வேண்டும்." யாழ் கருவிக்குச் சுருதி கூட்டும் (tune) போது முதலில் ஒரு நரம்புக்குச் சுருதி சேர்த்து விட்டுப் பின்னர் அதற்கேற்ப மற்ற நரம்புகளுக்கும் சுருதி கூட்ட வேண்டும். அதுபோலவே முதலில் உனது ஊக்கத்தைக் கவனித்துப் பின் அதற்கேற்ப மற்றைய இயல்புகளை - கடைப்பிடி, ஒருமைப்பாடு மற்றும் விவேகம் - உனது முயற்சிக்குத் தகுந்தார்ப்போலக் கவனிக்க வேண்டும். அப்போதுதான் உனது தியானமும் முன்னேறும்.

ஆகவே இந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வளவு முயற்சி செய்ய முடியும், நம் எல்லைக்கு மீறி முயற்சிக்கின்றோமா அல்லது போதுமான அளவு முயற்சிக்கவில்லையா என்பதை அறிவது நமது விவேகம் சம்பந்தப் பட்டது. உங்களுக்கு அது எப்படித் தெரிய வரும்? சக்திக்கு மீறி ஒரு காலகட்டத்துக்கு முயற்சி செய்யுங்கள். பின் அதன் விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள். பொதுவாக சோம்பேறித்தனமாக இருப்பதே நம் இயல்பாக உள்ளது. எளிதாகப் பயிற்சி செய்து விரைவான விளைவுகளைக் காணும் கூட்டதைச் சேர்ந்தவராகவே இருக்கப் பார்க்கிறோம். ஆனால் அப்படி எளிதாகப் பயிற்சி செய்து விரைவான விளைவுகளைக் கண்டோர் எல்லோரும் நிம்பாண நிலைக்குச் சென்று விட்டார்கள். மீதமிருப்பவர்கள் நாம் தான். எனவே நாம் முடிந்த அளவு நம்மை நாமே ஊக்குவித்து முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது என்பதை உணரும் வரை நாம் முயற்சிக்க வேண்டும். அதை உங்கள் அனுபவத்திலிருந்து நீங்களே தெரிந்து கொள்வீர்கள். ஒரு எல்லைக்குமேல் முயன்றால் மனம் சோர்வடைந்துவிடுவதைக் கவனிப்பீர்கள். கவனம் செலுத்துவதில் சிரமங்கள் இருக்கும். அப்போது நாம் நம் முயற்சியைச் சற்றுத் தளர்த்திக் கொள்ள வேண்டும். மறு எல்லைக்குச் சென்று, முயற்சி செய்வதே தவறு என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. சரியான அளவுள்ள முயற்சியுடன் மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும் நாம் எடுக்க வேண்டிய முயற்சியின் அளவு நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனையையும் பொருத்துள்ளது. சில மாசுகள், அவற்றைக் கவனித்தாலே மறைந்து விடும் என்கிறார் புத்தர். அவற்றை நுணுகி ஆராய வேண்டியதில்லை. பெரும் முயற்சி தேவை இல்லை. "இது ஒரு மாசு," என்று தெரிந்து கொண்டாலே போதும். அங்கு போகக்கூடாது என்று முடிவெடுத்து விடுவோம். பின் அது தானாகவே மறைந்து விடும். ஆனால் மற்ற மாசுகளைக் களையப் பல கட்டுமானங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்று புத்தர் கூறுகிறார்.

இங்கு "கட்டுமானம்" என்பதற்குப் பல இயல்புகள் உள்ளன: பேச்சில், மனத்தில் மற்றும் செய்கையில் கட்டுமானங்கள் செய்யலாம்.

செய்கையில் கட்டுமானம் என்பது மூச்சைக் குறிக்கும். மனத்தில் கோபமோ, மோகமோ, மாயமோ உண்டாகும் போது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், "இப்போது எனது மூச்சு எப்படி உள்ளது?" மூச்சைச் சற்று மாற்றுவதால் உங்கள் மன நிலையை மாற்ற முடியுமா என்று கவனித்துப் பாருங்கள்.

இது பேச்சுக் கட்டுமானத்தையும் உள்ளடக்கும்: இது தான் எண்ணங்களையும், விளைவுகளையும் ஆராய்வதும் ஆகும். ஆசைபட்ட ஒரு பொருளை நாம் பெற விரும்புவது பற்றிய மனப் பேச்சுக்களையும், ஒரு பொருளின் மீது உள்ள நமது கோபத்தைப் பற்றிய பிதற்றலையும் ஒதுக்கிவிட்டு, மூச்சைப் பற்றி மனத்தில் பேசத் துவங்குகிறோம். உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள், "இப்போது மூச்சு எப்படி உள்ளது? அதனை எப்படி உணர்கிறீர்கள்? அதை எப்படி மேலும் வசதியாக்குவது?" அதனை வசதியாக்கிக் கொண்ட பின் அதனை பரவச் செய்தால் நன்றாக இருக்குமே? உடல் முழுவதும் வசதியான மூச்சின் உணர்ச்சியை எப்படிப் பரப்புவது? இதுவும் நல் முயற்சியின் ஒரு அம்சம். எல்லைக்கு மீறி முயன்றால் ஆரம்பத்தில் இருந்த வசதியும் மறைந்து விடலாம். கேள்விகள் கேட்காவிட்டால், ஆர்வம் கொள்ளவில்லையென்றால் (மாசுகள் மறைவது) நடக்கப் போவதில்லை. ஆகவே மூச்சோடு சம்பந்தப்பட்டிருக்கும் போது சரியான முயற்சி இருக்க வேண்டும்.

இறுதியாக மனத்தின் கட்டுமானங்கள் உள்ளன. இது உணர்ச்சிகள், மனக் குறிப்புகள் சம்பந்தப் பட்டது. மூச்சு வசதியாகவும் இன்பகரமாகவும் இருக்கும் போது அதனை நமக்குப் பயனுள்ள வகையில் செயற்பட வைக்க வேண்டும். அந்த இன்பத்தில் மூழ்கித் தியானத்தில் அமர்ந்திருப்பது போதாது. உடல் முழுவதும் பரவச்செய்து, உடலை ஊடுருவச் செய்ய வேண்டும். இப்படி மனத்திற்கு வேலை தர வேண்டும். மனம் இன்பமான இடத்தில் இருக்கும்போது மாயமன ஒருமுகப்பாடு (delusion concentration) என்ற நிலைக்குச் செல்வது சுலபம். இந்த மன நிலையில் எல்லாம் இன்பமாக இருந்தாலும் தெளிவாக இருப்பதில்லை. நாம் மிகவும் அசைவில்லாமல் இருக்கிறோம். ஆனால் இந்த நிலையிலிருந்து வெளியே வரும் போது எங்கு இருந்தோம் என்பது தெளிவாகத் தெரிவதில்லை. மூச்சோடு இருந்தோமா? இல்லை. தூங்கிவிட்டோமா? அதுவும் இல்லை. ஆக இந்தத் தெளிவில்லா நிலையைத் தவிர்க்க வேண்டுமென்றால் அந்த இன்பமான உணர்ச்சியோடு வேலை செய்ய மனத்திற்கு வேலை கொடுக்க வேண்டும். புத்தரின் போதனைகளின் புரட்சிகரமான கருத்துக்களில் இதுவும் ஒன்று. அதாவது வசதியாக இருப்பது முடிவு அல்ல. அந்த நிலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அடுத்த படிக்குச் செல்ல வேண்டும்.

அடுத்து, மனக்குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இது பொருட்களுக்கு நாம் வைக்கும் பெயர்களைப் பற்றிய அனுபவ ஞானம் எனலாம். நினைவு சம்பந்தப்பட்டது, இருக்கும் வசதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் உங்களைப் பெரிதும் பாதிக்கும் மாசினை நுணுகி ஆராய்வது பற்றியும் அறிந்து கொள்வது. மனக்குறிப்புகளைப் பல வழிகளில் பயன்படுத்தலாம். உங்களுக்கு ஒருவர் மீது கோபம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது புத்தர் சொன்ன உவமானத்தை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும். அதில் களைப்பும், தாகமும், கதிரவனின் சூட்டில் வாடிப்போயும் இருக்கும் ஒருவன் பாலைவனத்தைக் கடந்து வந்து கொண்டிருக்கின்றான். அவனுக்குத் தண்ணீர் தேவைப் படுகிறது. அப்போது ஒரு மாட்டின் கால் சுவட்டில் கொஞ்சம் நீர் இருப்பதைக் காண்கிறான். அந்தக் கொஞ்ச நீரையும் சேதமின்றிப் பயன்படுத்த, மண்டியிட்டு வாயாலேயே அந்த நீரை உறிஞ்சிக் குடிக்க அவன் தயங்குவதில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு அச்சூழ்நிலையில் நீர் அவனுக்குத் தேவைப் படுகிறது. அதுபோலவே நாம் மற்றவர்களின் மீது கோபப்பட்டாலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதைத்தான். நாம் களைப்பாகவும், தாகத்தோடும் வெப்பத்தால் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றோம். நமது உள்ளத்தில் உள்ள நற்குணம் வலிவுள்ளதாக இல்லை. அதற்கு ஆகாரம் தேவைப்படுகிறது. மற்றவரின் தீய குணங்களை மட்டுமே பார்ப்பது நமது உள்ளத்தின் நற்குணத்துக்கு மேலும் போஷாக்குத் தரப்போவதில்லை. அப்படிச் செய்வது உங்களை மேலும் சூடாக்கவும், தாக மூட்டவும் தான் செய்யும். எனவே மற்றவரின் நற்குணங்கள் மீது தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். மண்டியிட்டு மாட்டின் கால்சுவட்டில் உள்ள சிறிது நீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டுமானால் அதையும் செய்யத் தயங்க வேண்டாம். இந்தக் குறிப்பை மனத்தில் வைத்திருங்கள். இப்படித்தான் மனக்குறிப்பைப் பயன்படுத்திச் சரியான மனநிலைக்கு வந்து மாசுகளைக் களைய வேண்டும்.

கட்டுமானங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது இது தான். ஆகவே உங்கள் விவேகத்தைப் பயன்படுத்தி, எத்தகைய மாசுகளை, அவைகளைக் கவனிப்பதால் மட்டுமே களைந்து விடலாம் என்பதையும், எத்தகைய மாசுகளை மேற்கூறிய மூன்று விதமான கட்டுமானங்களைப் பயன்படுத்தி களைய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

விவேகத்தைப் பொருத்தவரை நல்லூக்கத்திற்கு அது வேறு வழிகளிலும் துணை புரியும். புத்தர் நான்கு காரியங்களுக்கு நம் விருப்பத்தை “வளர்த்து, விடாப்பிடியாக எழுப்பி, நோக்கத்தை நிலைநிறுத்த" வேண்டும் என்றார். ஆனால் நல்லூக்கத்திற்குத் தேவையான நான்கு காரியங்களைச் செய்வதற்கு முன் அதற்கான நம்முடைய எண்ணப்போக்கைக் கவனிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த விருப்பத்தைச் செயற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் உங்கள் விருப்பத்தில் மெய்ஞ்ஞானமும், விவேகமும் கலந்திருக்க வேண்டும். நல்லூக்கத்தின் நான்கு தன்மைகளைப் பற்றிக் கேட்டு விட்டுத் தங்கள் தனித்தன்மையைப் (personality) பிடிக்காதவர்கள் அதை அழிக்கப் புத்தர் தங்களுக்குத் அனுமதி தந்து விட்டார் என்று தவறாக நினைக்கின்றனர். தனித்தன்மையை அழிக்க முயல்வது சரியான விருப்பமல்ல. ஆரோக்கியமான விருப்பம் என்று ஒன்று இருக்கிறது. விழிப்படைய வேண்டும் என்கிற விருப்பம் மற்ற விருப்பங்களை விட மேன்மையானது. ஆனால் அதைத் திறமையான வழியில் மெய்ஞ்ஞானத்துடன் இணைந்து செய்ய வேண்டும்.

அதாவது ஞானம் என்கிற விளைவை அடையக் காரணிகள் இருக்க வேண்டும். ஆகவே உங்கள் விருப்பத்தை முதலில் காரணிகளை உருவாக்குவதில் செலுத்த வேண்டும். பயிற்சியில் நற்கடைப்பிடி அதிகரிக்க வேண்டியிருக்கலாம். அப்போது அதனை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நற்கடைப்பிடிக்கான திறமையான விருப்பதை வளர்க்க வேண்டும். மனம் ஒருமுகப்பட வேண்டியிருந்தால் அதற்கான திறமையான விருப்பத்தை அதிகரிக்க வேண்டும். இங்கு "திறமையான" என்று சொல்வது மிக முக்கியமானது. தியானத்தை ஒரு திறமையான செயல் என்று எடுத்துக் கொள்ளுங்கள். கண்மூடித்தனமான முயற்சியோடு செய்ய வேண்டிய செயல் என்று நினைக்க வேண்டாம்.

மனம் அமைதியாக இருக்க எத்தகைய திறமைகள் தேவைப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். மனம் அமைதியான பின் தியானத்தை முடித்து விட்டு எழும்போது அந்த அமைதியைத் தொடர்ந்து எப்படி நிலைநாட்டுவது? இது தலையில் ஒரு எண்ணெய் நிறைந்த பாத்திரத்தைச் சுமந்து செல்வது போன்றது. கவனம் சிதறிப் போகாமல் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டும். எப்படி அதைச் செய்வது? அதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்தச் சவாலைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இப்போது அந்த விருப்பம் ஒரு நல்ல விருப்பமாக மாறி விடும். ஞானம் பெறுவதென்ற பெரும் வேலையை, சமாளிக்கக் கூடிய சிறு சிறு வேலைகளாகப் பிரித்துக் கொண்டு, தியானம் செய்வதற்கான பல திறமைகளையும் வளர்த்துக் கொண்டு அதைச் செய்ய வேண்டும். கோபம் வரும்போது மனத்தை எப்படி அமைதிப் படுத்துவது, சோம்பல்வரும் போது எப்படி ஊக்கப் படுத்துவது, சலிப்பாக இருக்கும் போது எப்படி உற்சாகப் படுத்துவது, அமைதியற்று இருக்கும் போது எப்படி நிதானம் கொள்வது, இவை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள்.

ஆகவே ஞானம் பெற வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற அங்கு நம்மை எடுத்துச் செல்லும் படிகள் மீது முதலில் நம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்தப் படிகள் மெல்ல மெல்ல விளைவுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதையும், நமக்கு கிடைக்கும் விளைவு, நாம் எடுக்கும் படிகளின் சேர்க்கையைவிடப் பெரிதும் மேன்மையானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தர் பாதையை ஞானம் பெறுவதற்கான நோக்கத்தோடு கற்பித்தார். மனம் சிக்கலான விஷயம் என்பதால் கட்டுமானம் இல்லாத ஓர் இடத்துக்கு நிர்மாணிக்கப் பட்ட படிகள் எடுத்துச் செல்கின்றன. ஆகவே நல்லூக்கத்தின் மீது நமக்குச் சரியான மனப்போக்கு இருக்க வேண்டும். இதற்கு மெய்ஞ்ஞானமும் தேவை.

நல்லூக்கத்தில் இந்த நான்கு செயற்பாடுகள் உள்ளன:

(i) ஏற்கனவே தோன்றியுள்ள தீய, பயனற்ற குணங்களைக் கைவிட வேண்டும்.

(ii) இதுவரை எழாத தீய, பயனற்ற குணங்களைத் இனிமேலும் தோன்றாமல் தடுக்க வேண்டும்.

(iii) இதுவரை எழாத நல்ல, பயனுள்ள குணங்களை இனிமேல் தோன்றச் செய்ய வேண்டும்.

(iv) ஏற்கனவே தோன்றியுள்ள நல்ல, பயனுள்ள குணங்களை மேம்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை நான்கு விதமான வேறுபட்ட முயற்சிகளாகும். முதலில் சூழ்நிலையை மனத்தில் ஆராய வேண்டும்: இப்போது என்ன செய்யவேண்டும்? திறமையற்ற பக்கத்தில் கவனம் செலுத்துவதா அல்லது திறமையை வளர்க்கும் பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமா? இவ்வாறு ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்கு தெரிந்து கொண்டால் சூழ்நிலைக்குத் தகுந்தார்ப்போலச் சரியான முயற்சியினை மேற்கொள்ளலாம்.

ஆகவே, எல்லாம் முயற்சியின் மீது உள்ள உங்கள் மனப்போக்கினைப் பொருத்தும், எத்தகைய முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பொருத்தும் உள்ளது. எந்த அளவு முயற்சிக்க வேண்டும் என்பது தற்போது உள்ள உங்கள் சக்தியையும், உங்களின் தற்போதைய பிரச்சனையில் உள்ள சிக்கலையும் பொருத்தது. சில பிரச்சனைகளுக்கு அதிக முயற்சி தேவைப் படலாம். சிலவற்றைக் கவனித்தாலே போதும். அது மறைந்து விடும்.

ஆகவே இந்த இயல்புகளெல்லாம் சேர்ந்ததுதான் நல்லூக்கம். முயற்சி செய்யும்போது அது பெருமளவு விவேகம் சம்பந்தப்பட்டது என்பதையும், அதை அறிந்து கொள்வது, அதன்மேல் விருப்பம் கொள்வது, அதற்குத் தேவையான முயற்சியில் ஈடுபடுவது ஆகியவற்றைப் பொருத்தது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சில சமயம் ஒரு பிரச்சனையைச் சமாளிக்க கடினமான முயற்சி எடுக்க வேண்டியிருக்கும், மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். மனம் நிதானம் இழக்கலாம். மூச்சைக் கவனிக்கச் சென்றால் அது இருப்பதாகவே தெரியவில்லை. மூச்சுத் திணருகிறது. உடனே நீங்கள் பீதி கொள்ள வேண்டாம். உங்களிடமே நீங்கள், "மூச்சு எப்படி இல்லாமல் போக முடியும்? அது இல்லாவிட்டால் நான் இறந்திருப்பேனல்லவா?" என்று சொல்லிக் கொள்ளுங்கள். அல்லது மூச்சு இருப்பது தெரிந்தும் அது சௌகரியமாக இல்லாமல் இருக்கலாம். அதனோடு பொறுமையாக இருங்கள். ஒரு அழும் குழந்தையை ஆறுதல் படுத்துவதைப் போல அதை ஆறுதல் படுத்துங்கள். பின் உங்கள் பொறுமை அந்த மூச்சை அமைதிப் படுத்தி வசதியாக்கி விடும்.

ஆகவே எம்மாதிரியான முயற்சி தேவைப்பட்டாலும் - அது ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து இருப்பதானாலும் சரி அல்லது ஒரு திசையில் போக வேண்டியதாக இருந்தாலும் சரி - தேவையான முயற்சியை எடுக்கத் தயங்கக் கூடாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தமாதிரி முயற்சி எது என்பதைக் கண்டறிய, விவேகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களையே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளுக்கும் தகுந்த ஒரு நுண்ணறிவுள்ள செயல் எதுவும் இல்லை. பாலியில் பஞ்ஞா - மெய்ஞ்ஞானம் - என்றால் விவேகம் என்று பொருள். அதாவது சூழ்நிலைகளின் வேறுபாடுகளைத் தெரிந்திருப்பது. சில சமயம் எதுவும் செய்ய முடியாதென்றால் சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற சமயங்களில், 'நாம் மேலும் முயற்சிக்க வேண்டும்," என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இவையெல்லாம் ஒன்று கூடும் போதுதான் நாம் செய்யும் நல் முயற்சி மார்க்கத்தின் ஒரு பகுதியாகிறது. ‘நல் முயற்சி எவ்வளவு முக்கியமான தென்றால், அதன் நான்கு பகுதிகளையும் மார்க்கத்துக்கு ஈடாகச் சொல்லலாம்’ என்று புத்தர் கூறினார். எனவே நல்லூக்கத்தைச் சாதாரண விஷயமாக நினைத்துவிட வேண்டாம். அது சிக்கலான விஷயம். அதே சமயம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவு சிக்கலானது இல்லை. நேரமும் நமது கவனமுமே அதனைப் புரிந்து கொள்ள வைக்கும். புத்தர் ஒருமுறை, ‘ஒரு மனிதரின் பண்பினைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடன் சிலகாலம் பழகி அவர் செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ என்றார். அதே கருத்து மனதுக்கும் பொருந்தும். மனத்தைக் கவனிப்பதற்கும், அதனோடு நேரம் செலவிடுவதற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கு நேரமும், முயற்சியும் ஒதுக்க வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே என்ன தேவைப் படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்குச் செலவிட்ட நேரமும், முயற்சியும் என்றும் வீண் போகாது.

* * * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode