தெரிந்தெடுக்கப்பட்ட சில சூத்திரங்கள்

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

தெரிந்தெடுக்கப்பட்ட சில சூத்திரங்கள்

மொழிபெயர்க்க இங்கே தெரிந்தெடுக்கப்பட்ட பாளிச்சூத்திரங்களின் நடை பற்றிச் சில விளக்கம் கூறவிரும்புகிறோம். இக்கால வாசகர் அவற்றைப் புரிந்து நயந்து கொள்வதற்கு அது அனுகூலமாயிருக்கும்.

புத்த பகவான் பரிநிர்வாணமெய்தி மூன்று மாதங்களுக்குப் பின்னர், அவரோடு நெருங்கி பழகிய சீடர்களின் கூட்டமொன்று கூடிற்று. அந்தக் கூட்டத்திலே அவர்கள் ஞாபகத்தில் வைத்திருந்த போதனைகள், உரையாடல்கள், விநய விதிகள் என்பன அனைத்தும் ஓதப்பட்டு அவை நிசமானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டு,. அவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இப்பிரிவுகள் நிகாயங்கள் எனப்பட்டன. இந்த நிகாயங்கள் திரிபிடகம் என வழங்கப்பட்டன. இத்தொகுதிகள் வெவ்வேறு தேரர்களிடமும் (ஸ்தவிரர்-முதியவர்) அவர்களுடைய சீடர் பரம்பரையிடமும் பிற்காலச் சந்ததியினரின் நன்மைக்காகக் கர்ண பரம்பரையாக வழங்குமாறு ஒப்படைக்கப்பட்டன.

இக்கேள்வி வழக்கு இடையற்றுப் போகாமலும், உண்மையான நிலை மாறாதிருப்பதற்காகவும், இவற்றைத் திட்டப்படி ஒழுங்காகப் பாராயானஞ் செய்தல் அவசியமாயிற்று. இத்தகைய பாராயணம் தனிப்பட்ட ஒருவரால் ஒப்புவிக்கப்படவில்லை. தொகுதியாகக் கூடிப்பாராயனஞ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூட்டாகப் பாராயணம் செய்வதன் நோக்கம் மூலபாடங்களில் மாற்றஞ்செய்யாமலும், அவற்றை உருமாற்றாமலும், இடையில் எவற்றையாவது புகுத்தாமலும் இருப்பதற்காகவே. கூட்டாகப் பாராயணஞ் செய்யும்போது ஒருவர் சொல்லை மறந்து போனால் மற்றொருவர் தம்முடைய ஞாபகத்திலிருந்து அதை நிரப்புவார். அல்லது ஒருவர் மூல பாடத்தை மாற்றி ஒரு சொல்லையோ சொற்றொடரையோ கூட்டியோ குறைத்தோ விட்டால் வேறொருவர் அதைத் திருத்திவிடுவார். இவ்வாறு மூலத்தில் மாற்றமோ, திரிபோ, கூட்டல் குறைத்தலோ இல்லாதிருக்குமென நம்பப்பட்டது. இங்ஙனம் இடையற்றுப்போகாது வந்த கேள்வி வழக்கு அந்தப் பாடத்தின் மூல ஆசிரியர் இறந்து பல ஆண்டுகளான பின்னர் தனிப்பட்ட ஒருவரால் பாடஞ் செய்யப்பட்டதைவிட நம்பத்தக்கதாகவும், உண்மைப் பாடமாகவுமிருக்குமென நம்பப்பட்டது. பகவானுடைய போதனைகள் முதன்முதலாக கி.மு. முதலாம் நூறாண்டில் பகவான் இறந்து பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையில் ஒரு சங்கம் கூடி அதில் எழுதப்பட்டன. அதுவரை திரிபிடகம் முழுவதும் தலைமுறை தலைமுறையாகக் கர்ணபரம்பரையாகவே வழங்கி வந்தது.

மூலபாடம் பாளி மொழியில் உள்ளது. இம்மொழி மென்மையும் இனிமையும் ஆற்றொழுக்குப்போன்ற லாகவமும் உடையது. கூறியதை அடிக்கடி திருப்பிக் கூறுவதும், உளங்கொளத்தக்க மெய்மை முழுவதையும் ஒன்று விடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக் கூறுகளும், கேள்வி முறை இடையற்றுப் போகாதிருப்பதற்கு அவசியமான ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, கவிதைப் பண்பையும் அழகையும் அவற்றுக்கு உதவுகின்றன. அவை கவிதைக்குரிய சந்தத்தைப் பயன்படுத்துவதால் கவிதை நயம் உடையனவாயிருக்கின்றன. வெப்ப மண்டலத்தைச் சேர்ந்த மரச் சோலைகளிலோ, பௌத்த மடங்களில் நிலவும் அமைதியான சூழ்நிலையிலிருந்து கொண்டோ பாளியிலுள்ள இந்தச் சூத்திரங்களை ஓதும்போது அழகிய அமைதிமிக்க சாந்த நிலை இன்றும் உண்டாகிறது. கம்பீரமான பாளிச் சொற்களின் பெருமிதமும், திருப்பித் திருப்பித் கூறப்படுவதால் உண்டாகும் பிரசித்தி பெற்ற ஒலிவண்ணமும் பொருள் தெரியாதவர் மனத்திலும் அந்நிய பாஷையில் ஓதப்படும் பயபக்தியுள்ள பண்ணிசை என்ற உணர்ச்சியை உள்ளத்தில் உண்டாக்கும். இத்தகைய பாராயணம் சம்பிரதாய முறையான இசை சார்ந்த ஒலிகள் உணர்ச்சியைக் கிளரச்செய்து சாந்தத்தையுண்டாக்குகின்றன. அதனால் சிலசமயம் வனதேவதைகள் கூடக் கவரப்பட்டதாகக் கதைகள் சில குறிப்பிடுகின்றன. இங்கே தெரிந்தெடுத்துத் தரப்படும் சூத்திரங்களிலே சில இடங்களில் மாத்திரம் மூல நூலிலுள்ள நடையை உணர்த்துவதற்காகப் புனருத்திகள் முற்றாய் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் அவை புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றன. இங்குள்ள மொழிபெயர்ப்பு மூலப்பாளிச் சூத்திரங்களை அதர்ப்பட யாத்து, பொருளுக்கும் தமிழ் [1] மரபுக்கும் குறைவேற்படாதவாறு புத்த பகவானுடைய சொற்களின் தொனி சிதையாமல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

* * *

[1] மொ. ஆ. கு. இந்நூல் ஆங்கிலத்தில் ஆசிரியரால் எழுதப்பட்டபடியால் 'இக்கால ஆங்கில மரபு' சிதையாமல் என ஆங்கிலப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி பெயர்ப்பாசிரியர் தமிழிலும் அவ்வாறே மூலத்தில் உள்ளபடி ஒல்லும் வகையால் மொழி பெயர்த்துள்ளார்.