பௌத்தக் கதைகள் - படசாரி

பௌத்தக் கதைகள் முகப்பு

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

படசாரி

காட்டின்வழியே கணவனும் மனைவியும் தனியே நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்டுப்பாதை சிராவத்தி நகரத்திற்குப் போகிறது. இவ்வழிப்போக்கரும் சிராவத்தி நகரத்திற்குத்தான் போகிறார்கள். நடையுடை பாவனைகளில் தொழிலாளி போலக் காணப்படும் அவள் கணவன், தூங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தையைத் தன் மார்பில் சார்த்திக் கொண்டு வழி நடக்கிறான். அவனுடன் செல்லும் அவன் மனைவி இளவயதுள்ளவள். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் போல் காணப்படுகிறாள். முழுக் கர்ப்பவதியாகையால் விரைந்து நடக்கமுடியாமல் மெல்ல நடக்கிறாள். கண்ணுக் கெட்டிய வரையில் நெடுந்தூரம் காடாக இருக்கும் இந்த இடத்திலே, மனிதரைக் காண முடியவில்லை. மரங்களில் காட்டுப் புறாக்களும் மைனா முதலிய பறவைகளும் பாடிக் கொண்டிருக்கின்றன.

திடீரென்று சூரியனை மேகங்கள் மறைத்து விட்டன. காற்று வீசத் தொடங்கியது. தூறல் தூறத்தொடங்கிற்று. இச்சமயத்தில் அப்பெண்மணி, தன் கணவனிடம் வயிறு வலிக்கிறது என்று கூறினாள். நன்றாக மழைபெய்யும்போல் தோன்றுகிறது. நடுக்காட்டில், மக்கள் நடமாடாத இடத்தில், மழை பெய்கிற வேளையில், அவளுக்குப் பிரசவகாலம் ஆரம்பித்து விட்டது. தங்குவதற்கு அங்கே இடம் இல்லை. இடம், காலம் இரண்டும் தனக்கு மாறுபட்டுப் பகையாக இருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தோன்றாமல் அவன் திகைத்தான். வீட்டிலேயே தங்கியிருந்தால் இந்தச் சங்கடம் ஒன்றுமில்லையே என்று எண்ணினான். அவன் மார்பில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தது. "சிறு குடிசை ஒன்றைக் கட்டுங்கள்," என்றாள் அவள். ஆம், அதைத் தவிர வேறு வழியில்லை. குழந்தையையும் அவளையும் ஒரு வேப்ப மரத்தடியில் விட்டுவிட்டு, குடிசை கட்டக் கிளைகளையும், புல்லையும் கொண்டுவர விரைந்து சென்றான். தூறலாக இருந்த மழை நன்றாகப் பெய்யத் தொடங்கிற்று.

அவளுக்கும் பிள்ளைப்பேறு தொடங்கிவிட்டது. வயிறு நொந்தது. அந்தோ பாவம்! உதவி செய்ய அருகில் ஒருவரும் இலர். காற்றடித்தால் என்ன? மழை பெய்தால் என்ன? காட்டில் உதவியில்லாமல் மரத்தடியில் இருந்தால்தான் என்ன? இவற்றை எல்லாம் இயற்கை என்ணிப் பார்க்கிறதா? பிரசவ வேதனை மும்முரமாக இருந்தது. காட்டில் சென்ற கணவன் இன்னும் வரவில்லை. மழையும் விடவில்லை. பிரசவ நோய் பலப்பட்டுக் கடைசியாகப் பிள்ளைப்பேறும் உண்டாயிற்று. பிறந்த பச்சிளங்குழந்தையை மழையில் நனையாதபடி மார்பில் அணைத்துக்கொண்டு மற்றக் குழந்தையையும் அருகில் அணைத்துக்கொண்டு கவிழ்ந்து குனிந்து கொண்டாள். மழை கொட்டு கொட்டு என்று கொட்டிக் கொண்டிருந்தது. போன ஆள் இன்னும் திரும்பி வரவில்லை. அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டதா? அல்லது அவளைக் கைவிட்டு எங்கேனும் போய்விட்டானா? தான் நேசித்த தன் கணவன் தன்னை இந்நிலையில் கைவிட்டுப் போய் விட்டிருந்தால்...? இதை நினைக்கும்போது அவளுக்குக் கழுத்தைக் கத்தி கொண்டறுப்பது போலத் தோன்றியது. ஆதரவு அற்ற நிலையில், நடுக்காட்டில், இரவு வேளையில்,காற்று மழையில் நனைந்துகொண்டு பிரசவம் செய்யும் கொடுந் துன்பத்தைவிட மிகமிகக் கொடுந்துன்பமாகத் தோன்றியது, அவன் அவளைக் கைவிட்டான் என்னும் எண்ணம். அவள் உடம்பைக் காற்றும் மழையும் தாக்கியது அவளுக்குத் துன்பமாகத் தோன்றவில்லை. தன் கணவன் தன்னைக் கைவிட்டானோ என்னும் ஐயம், அவள் மனத்திலே பெரும்புயலை வீசி அவளைப் பெருந்துன்பத்திற்குள்ளாக்கிற்று. இந்த நிலையிலே உறக்கமின்றிக் காற்றிலும் மழையிலும் நனைந்துகொண்டு, பறவை குஞ்சுகளைச் சிறகுகளால் அணைத்துக் கொள்வது போலத் தன் குழந்தைகளை மார்பில் அணைத்துக் கொண்டு, இரவைக் கழித்தாள். கடைசியாக அந்த நீண்ட இரவு கழிந்து, பொழுது விடியத் தொடங்கிற்று. மழையும் ஓய்ந்து நின்றது. ஆனால் காற்று சில்லென்று வீசிற்று.

தன் கணவன் திரும்பி வராதது அவள் மனத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல இருந்தது. காலை வெளிச்சத்தில் அவள் குழந்தைகளுடன் அவனைத் தேடத் தொடங்கினாள். அவன் சென்ற திசையாகச் சென்று தேடினாள். சிறிது தூரத்திலே ஒரு மேட்டின் மேல் ஒரு ஆள் விழுந்து கிடப்பதைக் கண்டாள். ஓடோடி அருகில் சென்று பார்த்தாள். அந்தோ! தன் கணவன் பிணமாகக் கிடப்பதைக் கண்டாள். அவன் பக்கத்தில் புல் கட்டுகள் கிடந்தன. வெட்டிப் போடப்பட்ட சில கிளைகளும் கிடந்தன. அவன் காலில் இரத்தம் வடிந்திருந்தது. அருகில் இருக்கும் புற்றிலிருந்து பாம்பு அவனைக் கடித்திருக்க வேண்டும். ஆகவே அவன் விஷம் ஏறிப் பிணமாய்க் கிடக்கிறான். இந்தக் காட்சியைக் கண்டவுடன் அவளுக்குச் சந்தோஷமும் துக்கமும் கலந்து அவள் உள்ளத்தைத் தாக்கின. அவள் கணவன் அவளைக் கைவிடவில்லை, என்று நினைக்கும்போது உண்டானது சந்தோஷம். அவன் குடிசை கட்டப் புல்லையும் கிளைகளையும் வெட்டி இருப்பதே அவளை அவன் கைவிடவில்லை என்பதற்குச் சான்று. பாம்பு கடித்து இறந்ததற்காக உண்டானது துக்கம். அவள் மனம் பொறாமல் அவன்மேல் விழுந்து அழுதாள். ஓவென்று கதறினாள். காடும் கரையும்படி அழுது புலம்பினாள். இந்த நடுக்காட்டில் இவளுக்கு ஆறுதல் கூற ஒருவரும் இலர். நன்றாகப் பொழுது புலர்ந்துவிட்டது. வெயில் காயத் தொடங்கிற்று. இப்போது வானத்தில் மேகங்கள் இல்லை.

மனத்துயரம் தாங்கமுடியாமல், தான் இருக்கும் திக்கற்ற நிலையை நினைத்து நெஞ்சுருகினாள். தான் இப்போது செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தாள். சிராவத்தி நகரம் சென்று தன் உறவினரை அழைத்துக் கொண்டு வந்து இறந்தவனை அடக்கம் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று எண்ணினாள். ஆகவே குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியே நடந்தாள்.

சிராவத்தி நகரத்திலே பெரிய பிரபு ஒருவர் இருந்தார். அந்தப் பிரபுவுக்கு ஒரே பெண்ணும் ஒரே மகனும் ஆக இரண்டு மக்கள் இருந்தனர். மகள் பெரியவளாக வளர்ந்து மணம் செய்யும் வயதடைந்தாள். வயதடைந்திருந்த அவள், அந்த மாளிகையில் வேலை செய்யும் ஏவலாளர்களில் ஒரு வாலிபனுடன் கூடாவொழுக்கம் கொண்டாள். பிரபு, அவளுக்குத் தக்க இடத்திலே திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையறிந்த அந்தப் பெண், தன் காதலனாகிய வேலைக்காரனுடன் ஒருவரும் அறியாமல் புறப்பட்டு ஒரு கிராமத்திற்குப் போய்விட்டாள். கிராமத்திலே, அப்பிரபுவின் மகள் அவனுடன் வாழ்ந்து வந்தாள். அவன் ஏதோ தொழில் செய்து அவளைக் காப்பாற்றி வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவள் வயிறு வாய்த்தாள். சூல் முதிர முதிர அவள், தனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லாததை அறிந்து, தன்னைத் தன் பெற்றோர் வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படி, தன் கணவனிடம் கூறினாள். பெற்ற மனம் பித்து என்பார்களே! தன் குற்றத்தைத் தன் பெற்றோர் மன்னித்துத் தன்னுடைய பிள்ளைப்பேறு காலத்தில் தன்னைக் கவனிப்பார்கள் என்று அவள் அவனிடம் சொன்னாள். ஆனால் அவனுக்கு அழைத்துச் செல்ல மனமில்லை. ஆகவே நாளைக்காகட்டும், பிறகு ஆகட்டும் என்று காலங் கடத்திக் கொண்டிருந்தான். பிரசவகாலம் நெருங்கிவிட்டதையும், தன் கணவன் தன்னைத் தாய் வீட்டுக்கழைத்துக் கொண்டு போக மனமில்லாமலிருப்பதையும் அறிந்த அவள், தன் தாய் வீட்டிற்கு (சிராவத்தி நகரத்திற்கு) போவதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத் தன்னந்தனியே புறபட்டுச் சென்றாள். செல்லும் வழியில் ஒரு கிராமத்தையடைந்தபோது அவளுக்குப் பிரசவவேதனை உண்டாயிற்று. அந்தக் கிராமத்திலே ஒரு வீட்டிலே தங்கி ஒரு குழந்தையைப் பெற்றாள். பிள்ளைப்பேறு உண்டாகி விட்டபடியால் இனி, தன் தாய்வீடு போவது பயனற்றது என்று கருதி அவள் குழந்தையுடன் தன் கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தாள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அவள் வயிறு வாய்த்துச் சூல் கொண்டாள். ஒன்பது மாதம் நிறைந்து பத்தாவது மாதம் ஆனபோது, தன் தாய்வீட்டில் போய் பிள்ளைப்பேறு பெறவேண்டுமென்று விரும்பினாள். தன் விருப்பத்தைக் கணவனிடம் கூறினாள். அவளை அவள் பெற்றோரிடம் அனுப்ப அவனுக்கு விருப்பந்தான். ஆனால், அவர்கள் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டான். ஆகட்டும், ஆகட்டும் என்று சில நாட்களைக் கழித்தான். பிரசவ காலம் நெருங்கவே அவன் அவளைச் சிராவத்தி நகரம் அழைத்துக்கொண்டு போக உடன்பட்டுக் குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு போனான். ஏழை ஆகையால் வண்டியில் போக முடியாமல் கால்நடையாகவே அழைத்துச் சென்றான். பல கிராமங்களைக் கடந்து, சிராவத்தி நகரத்திற்கு மூன்றுகல் தூரத்தையடைந்தான்; அவ்விடம் காட்டு வழி. அக்காட்டு வழியைக் கடந்தால் சிராவத்தி நகரத்தையடையலாம். காட்டு வழியாக வரும்போது தான் மேலே கூறியபடி விடாமழை பிடித்துக்கொண்டது. பிரசவ வேதனையும் உண்டாயிற்று. அவள் தங்கிப் பிள்ளைப்பேறு பெறுவதற்காகச் சிறு குடிசை ஒன்றைக் கட்டுவதற்காகக் காட்டில் சென்றான். சென்று கிளையை வெட்டும்போது பாம்பு கடித்து இறந்து விட்டான். அவளும் மழையிலும் காற்றிலும் நனைந்து கொண்டு மரத்தடியில் நள்ளிரவில் தன்னந் தனியாளாய்ப் பிள்ளையைப் பெற்றாள். பொழுது விடிந்ததும் அவனைத் தேடிக் கொண்டு போய், பாம்பு கடித்து இறந்து கிடப்பதைக் கண்டாள்.

சிராவத்தி நகரத்தில் தன் பெற்றோரிடம் சென்று யாரையேனும் அழைத்து வந்து இறந்த கணவனை அடக்கம் செய்யவேண்டும் என்பது அவளுடைய எண்ணம். அவள் தன் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வழிநடந்தாள். ஓட்டமும் நடையுமாக நடந்து நெடுந்தூரம் வந்தாள். காட்டு வழியைக் கடந்துவிட்டாள். வழியில் ஒரு சிற்றாறு குறுக்கிட்டது. சாதாரண காலத்தில் இதில் தண்ணீர் இருப்பது அருமை. எல்லோரும் காலால் நடந்தே இந்த ஆற்றைக் கடப்பது வழக்கம். ஆனால் நேற்று இரவு பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்திலும் கஷ்டத்தோடு ஓர் ஆள் இதைக் கடந்துவிடலாம். ஆனால் இரண்டு குழந்தைகளைக் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடக்க அவளால் முடியவில்லை. ஆகவே அவள் சற்றுச் சிந்தித்தாள். இரண்டு வயதுள்ள பெரிய குழந்தையை இக்கரையில் உட்கார வைத்துவிட்டு, அவள் கைக்குழந்தையுடன் வெள்ளத்தில் இறங்கி மெல்ல மெல்ல அக்கரைக்குச் சென்றாள். சென்று புல்லின்மேல் அக்குழந்தையைக் கிடத்திவிட்டுப் பெரிய குழந்தையை அழைத்துக்கொண்டு வருவதற்காக இக்கரைக்கு வரும் பொருட்டு வெள்ளத்தில் இறங்கினாள். இன்று பிறந்த இக்குழந்தையைத் தனியே கிடத்திவிட்டு வருவது அவளுக்கு மனம் தாழவில்லை. அடிக்கடி குழந்தையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடு ஆற்றண்டை வந்தாள். அப்போது, அந்தோ!.....

எங்கிருந்தோ ஒரு கழுகு வேகமாய்ப் பறந்து வந்து அக்குழந்தையைக் கால்களால் பற்றிக் கொண்டு பறந்தது. புதிதாகப் பிறந்து செக்கக் செவேலென்றிருந்த அக்குழந்தை கழுகின் கண்ணுக்கு மாமிசம்போல் காணப்பட்டது. நெடுந்தூரதிலிருந்தும் பார்க்கக்கூடிய கூர்மையான பார்வையுடைய கழுகு எங்கிருந்தோ இதைக் கண்டு வேகமாகப் பறந்துவந்து ஒரேயடியாய்க் கொண்டு போய்விட்டது. நட்டாற்றில் இருந்து இதைக்கண்ட தாய்க்கு மனம் துடித்தது. அவள் கைகளை வீசி "சூ..சூ..," என்று கூவித் துரத்தினாள். கழுகு குழந்தையைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. அவளுக்குக் குலை நடுங்கிற்று; மனம் பதறிற்று; உயிர் துடித்தது.

தன்னுடைய தாய் நட்டாற்றில் நின்று, "சூ...சூ.." என்று கூவிக் கைகளை வீசுவது கண்டு, அக்கரையிலிருந்த குழந்தை, தாய் என்னைக் கூப்பிடுகிறாள் என்று நினைத்துக்கொண்டு தாயிடம் செல்ல ஓடிவந்து தண்ணீரில் குதித்தது. பெருவெள்ளம் வேகமாய் ஓடி வருகிறபடியால், வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துக் கொண்டு போய்விட்டது. அது, "அம்மா! அம்மா!" என்று கத்துகிற ஓசையைக் கேட்டு அவள் எதிர்க்கரையைத் திரும்பிப் பார்த்தாள். கரையில் இருந்த குழந்தை காணப்படவில்லை. வெள்ளத்தில் குழந்தை அடித்துக்கொண்டு நெடுந்தூரம் போய்விட்டதைக் கண்டாள். அந்தோ! அவளுடைய இரண்டு குழந்தைகளும் போய்விட்டன! குழந்தையைப் பிடிக்க வெள்ளத்தில் தொடர்ந்து சென்றாள். குழந்தை வெள்ளத்தில் மறைந்துவிட்டது. அந்தோ! இந்தக் குழந்தையும் போய்விட்டது. அவளுக்கு இடிமேல் இடிவிழுந்தது போலாயிற்று. என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்தாள். அவள் பித்துப் பிடித்தவள் போலானாள். நிலைகொள்ளாத வெள்ளத்திலிருந்து ஒருவாறு சமாளித்துக் கரையேறினாள். கரைமேல் அடியற்ற மரம்போல் விழுந்து ஓ என்று அலறி அழுதாள். அவள் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. நெடுநேரம் வரையில் கோவென்று அலறி அழுதாள். அவளைத் தேற்றுவதற்கு அருகில் ஒருவரும் இலர். ஒன்றன்பின் ஒன்றாகத் தனக்கு நேர்ந்த துன்பங்களை எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள். முன்னாள் இரவில் கணவன் பாம்பு கடித்து இறந்தான். இன்று காலையில் ஒரு குழந்தையைக் கழுகு கொண்டு போய்விட்டது. மற்றொரு குழந்தையை வெள்ளம் அடித்துக் கொண்டு போயிற்று. அந்தோ, கொடுமை! கொடுமை! தன் ஊழ்வினையை நினைத்து ஒருவாறு தேறினாள். ஆனாலும் அவள் மனம் குழம்பியிருந்தது. சிராவத்தி நகரம் அண்மையில் தெரிந்தது. தன் பெற்றோரிடம் சென்று அவர்களைக் காணவேண்டும் என்று அவள் மனம் துடித்தது. இவளுடைய துன்பங்களைக் கேட்டால் இவள் தாயார் எவ்வளவு வேதனை அடைவாள்! தகப்பனார் எவ்வளவு துன்பம் அடைவார்! சகோதரன் எவ்வளவு வருந்துவான்! இவர்களைத் தவிர இவளுக்கு இந்த உலகத்தில் உறுதுணையாவார் யார்? அவள் உடம்பில் நடக்ககச் சக்தியில்லை. தன்னால் கூடுமானவரையில் விரைவாகவே நடந்தாள். கணவனையும் குழந்தைகளையும் ஒரே நாளில் இழந்து விட்டதை நினைத்து அவள் மனம் ஏங்கியது. நகர எல்லைக்கு அருகில் வந்துவிட்டாள். எதிரிலே நகரத்திலிருந்து வரும் ஓர் ஆள் எதிர்ப்பட்டான். தன்னந்தனியே வெகு தூரத்திலிருந்து கால்நடையாக வருகிற இவள் தோற்றத்தையும் முகவாட்டத்தையும் கண்ட அவன் மனம் இரங்கிற்று. தன்னையறியாமலே, "அம்மா! எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.

சிமான் பெயரைச் சொல்லி அவர் வீட்டுக்குப் போவதாகக் கூறினாள். அதைக் கேட்டதும் அந்த ஆளின் முகத்தில் வருத்தக்குறி காணப்பட்டது.

"அவர் வீட்டில் எல்லோருமே சுகந்தானே!" என்று கேட்டாள்.

"ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்..." என்று இழுத்தான் வருத்தத்துடன். அவளுக்கு மனம் துடித்தது. "என்ன? அவருக்கு ஒன்றும் இல்லையே! சௌக்கியமாக இருக்கிறாரா?" என்று கேட்டாள் ஆவலுடன்.

"நேற்று இரவெல்லாம் நல்லமழை பெய்ததல்லவா?"

"ஆமாம்!"

"வீடு இடிந்து விழுந்து அவரும் அவர் மனைவியும் மகனும் இறந்து போனார்கள்." இதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்ததுபோல ஆனாள்.

"அதோ, புகைகிறது பார்! அவர்களைக் கொளுத்தும் புகைதான் அது!" என்று அந்தப் பக்கமாகக் கையைக் காட்டினான். அந்தப் பக்கமாகத் திரும்பினாள். சுடுகாட்டிலிருந்து பெரும் புகை எழும்பி வானத்தில் போகிறதைக் கண்டாள்.

"அவர்களுக்கும் இந்தக் கதியா!" என்று நினைத்தபோது அவள் மனம் பித்துப் பிடித்ததுபோல் ஆயிற்று. மூளை குழம்பிற்று. பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள். ஆடை நெகிழ்ந்து விட்டதையும் அவள் சரியாக உடுத்தவில்லை. பித்துக்கொள்ளிபோல், பைத்தியக்காரிபோல் ஆனாள். தன் நினைவை இழந்தாள். மனம் போனபடி தெருத்தெருவாகச் சுற்றியலைந்தாள். அவளைக் கண்டவர்கள் துரத்தி விரட்டினார்கள். "தூரப்போ! இங்கே வராதே! போ, போய்விடு," என்று துரத்தினார்கள். அவள் ஆடை விலகி நெகிழ்ந்திருந்தது. அது அவளுக்குத் தெரியவில்லை.

உணவையும் உறக்கத்தையும் மறந்தாள். இரவு பகல் என்று இல்லாமல் எப்போதும் திரிந்து அலைந்து கொண்டேயிருந்தாள். அவளை ஏன் என்று கேட்போர் இந்த உலகத்திலே ஒருவரும் இல்லை. அவள் ஏன் இந்த நிலையையடைந்தாள் என்று ஒருவரும் யோசிக்கவில்லை. இவளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இவ்வாறு பல திங்கள் கழிந்தன.

பகவன் புத்தர் சொற்பொழிவு செய்து கொண்டிருக்கிறார். பௌத்த பிக்குகளும் நகர மக்களும் அமர்ந்து பகவர் அருளும் அறமொழிகளைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்செயலாகப் * படசாரி அவ்விடத்தில் ஓடிவந்தாள். கூட்டத்தில் நுழையப் பார்க்கிறாள். அங்கிருந்தவர்கள், "இங்கே வராதே, அப்படிப் போ, எட்டிப் போ," என்று விரட்டினார்கள். புத்தர் பெருமான் கண்டார். அவள் மனம் துன்பத்தினால் குழப்பம் அடைந்திருப்பதை அறிந்தார். "அவளை விரட்டாதீர்கள். அவள் இங்கே வரட்டும்," என்று அருளினார். கூட்டத்தில் அவளுக்கு வழிவிட்டார்கள். கூட்டத்தில் புகுந்து வந்து "பேந்தப் பேந்த" விழித்தாள். கூட்டத்தில் அமைதி. என்ன நடக்கப்போகிறது என்றறியக் கூட்டத்தில் ஓர் ஆவல்.

(* அவளைப் படசாரி என்று கூறினார்கள். படம் அல்லது படாம் = துணி. நழுவின துணியோடு நடக்கிறவள் என்பது பொருள்.)

குழந்தாய்! உன் மனத்தைச் சிதறவிடாதே. மனத்தைத் தன் நிலையில் நிறுத்து," என்று உரத்த குரலாகவும் கம்பீரமாகவும் கணீரென்றும் அருளிச் செய்தார் பகவன் புத்தர். அவர் குரலில் ஏதோ மந்திரசக்தி பொருந்தியிருப்பதுபோல் தெரிந்தது. அக்குரலில் ஓர் ஆணை (கட்டளை) தொனித்தது.

இந்தக் கட்டளை வந்த ஓசை வழியே படசாரி மெல்ல மெல்ல முகத்தைத் திருப்பினாள். அவள் கண்கள் பகவர் முகத்தில் பதிந்தன. இரண்டு நிமிடம் அவர் முகத்தையே அவள் பார்த்தாள். அந்த முகத்தில் எப்போதும் உள்ளது போல் சாந்தியும் தெய்வீக ஒளியும் காணப்பட்டன. எல்லோரும் அவளுடைய முகத்தையே பார்த்தனர். அவள் கண்களில் நிலைத்திருந்த பயங்கரத் தோற்றம் சிறிது சிறிதாக மறைந்துவிட்டது. முகம் சாந்தம் அடைந்தது. சிதறி உடைந்திருந்த அவள் மனம் குவிந்து இயற்கை நிலையை அடைந்தாள். தன் உணர்வு வரப் பெற்றாள். அப்போதுதான் பெருங்கூட்டத்தின் இடையிலே நிற்பதையும், தன் உடை கிழிந்து விலகி அரை நிர்வாணமாக இருப்பதையும் உணர்ந்தாள். உடனே வெட்கத்தினால் தலை குனிந்து உடம்பை இரண்டு கைகளினாலும் மூடிக் கொண்டு அவ்விடத்திலேயே உட்கார்ந்து கொண்டாள்.

கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் துணி ஒன்றை அவள் மேல் எறிந்தார். அதை எடுத்து அவள் உடம்பில் சுற்றிப் போர்த்திக் கொண்டு எழுந்தாள். நேரே சென்று பகவர் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்.

"குழந்தாய் எழுந்திரு," என்று அருளினார் பகவர். அவள் எழுந்து நின்று, தன் மனத்தில் பதிந்து கிடக்கும் துயரத்தை அவருக்குக் கூறினாள். தன் கணவர் பாம்பு கடித்து இறந்ததையும் ஒரு குழந்தையைக் கழுகு தூக்கிக் கொண்டு போனதையும், இன்னொரு குழந்தையை வெள்ளம் கொண்டு போனதையும், தன் தாயும் தந்தையும் தம்பியும் வீடு இடிந்து விழுந்து இறந்து போனதையும் அவள் அவரிடம் கூறிக் கண்ணீர் உகுத்து மனம் புழுங்கினாள்.

கனிவோடு கேட்ட பகவர் அருளினார்: "குழந்தாய்! நீயடைந்துள்ள துன்பம் பெரிதுதான். நீ சிந்திய கண்ணீரும் பெரிது. சற்றுச் சிந்தித்துப் பார்: பிறந்தவர் இறப்பது உலக இயற்கை. இதற்கு முந்திய பிறப்புகளில் நீ உன் சுற்றத்தாருக்காகச் சிந்திய கண்ணீரைக் கணக்குப் பார்த்தால் அது ஒரு கடலுக்குச் சமானம் ஆகும். மனம் கலங்காதே. அறிவைச் சிதறவிடாதே. உலக வாழ்வின் இயல்பைச் சிந்தித்துப் பார். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம். பிறவார் உறுவது பெரும் பேரின்பம். பிறவா நிலையாகிய வீடுபேற்றை அடைவதற்கு முயற்சி செய்வாயாக," என்று அருளிச் செய்தார்.

அவள் மனம் இயற்கை நிலையையடைந்தது. சிந்தித்துப் பார்த்துப் பகுத்தறியும் நிலையையடைந்தாள். அவளுக்கிருந்த பைத்தியம் - மனமருட்சி நீங்கிவிட்டது.

படசாரி அன்றுமுதல் நாள்தோறும் பகவன் புத்தர் அருளும் திருமொழிகளைச் சிரம் வணங்கிச் செவிசாய்த்துக் கேட்டு வந்தாள். ஒரு நாள் பகவரை வணங்கித் தன்னைப் பௌத்த சங்கத்தில் சேர்த்து அருளும்படி வேண்டினாள். புத்தர் பெருமான் படசாரியைத் தேரி சங்கத்தில் அனுப்பித் துறவு கொடுக்கச் சொன்னார். தேரியரிடம் துறவுபெற்ற படசாரி முழு ஞானம் அடைந்து பேர்போன பௌத்த பிக்குணியாக விளங்கினாள். இறுதியில் வீடுபேற்றையடைந்தாள்.

*******