எளிமை

எளிமை

தணிசாரோ பிக்கு

Simplify

Thanissaro Bhikkhu

In English

அறம், அத்தியாவசியச் செயல்களைத் தவிர மற்றவற்றை ஒதுக்கி வைத்து விடுகிறது. ஏன்? பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யத் தொடங்கினால் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாமல் போய் விடும் என்பதை உணர்ந்திருப்பதால்தான். துறத்தல் என்ற கோட்பாடு இது சம்பந்தப் பட்டது தான்: அதாவது, சில பிரச்சனைகள் மற்றவற்றைவிட முக்கியமானவை என்பதையும், அது போலவே சில தீர்வுகள் மற்றவற்றை விட அவசியமானவை என்பதையும் உணர்ந்து கொள்வதாகும். சில வகையான மகிழ்ச்சிகளும் மற்றவற்றை விட நீடித்திருக்கின்றன.

ஆகவே நாம் வரையறைக்குட்பட்ட சக்தி தான் நம்மிடம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது சக்தியைப் பல திசைகளிலும் சிதற விட்டால் எதிலுமே நாம் வெற்றி காண முடியாமல் போய் விடும். நமது நேரத்திற்கும், சக்திக்கும் வரையறை உள்ளதை உணர்ந்து, அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல மாற்றங்களை உண்டாக்கத் தக்க செயல்களில் கவனத்தைச் செலுத்தவும், முக்கியமற்ற செயல்களைக் கைவிடவும் நாம் தயங்கக் கூடாது. நமக்கு வேண்டியதனைத்தையும் நிறைவு செய்ய முடியுமானால் நல்லதுதான். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமானதல்ல. ஆங்கிலத்தில், 'கேக்கைச் சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் முழுமமையாக வைத்துக் கொள்ளவும் வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அது நடவாத காரியம் அல்லவா? அது போல நாம் விரும்புவதனைத்தையும் பெறுவதென்பதும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று தான். நம்மிடம் அதற்கு வேண்டிய நேரமும் இல்லை, சக்தியும் இல்லை.

நாம் துறத்தல் என்பதை எளிமைப் படுத்தும் ஒரு நெறிமுறை என்று வைத்துக் கொள்ளலாம். எளிமை என்ற வார்த்தை இன்று அனைவரும் விரும்பத் தக்க வார்த்தையாக உள்ளது. தேவையற்ற சிக்கல்களை வெட்டியெறிந்து விட்டு நமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள நாம் விரும்புகிறோம். துறத்தல் என்றும், எளிமையென்றும் எப்படிப் பார்த்தாலும் சில கடினமான தெரிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். ஒன்றை விட்டுக் கொடுத்து மற்றொன்றைப் பெறுவதான பண்டமாற்று வணிகம் போன்று இதனை நினைப்பது நல்லது. உங்கள் நேரத்தை உடனடியாகப் பலன் தரும், ஆனால் நீண்ட நாள் நீடிக்காத விளைவுகளைத் தரும் செயல்களில் செலுத்தலாம் அல்லது அதிக முயற்சியும், அதிக நேரமும், மிகுந்த பொறுமையும், அதி நுட்பமும் தேவைப்படும், ஆனால் நீண்ட கால விளைவுகளைத்தரும் செயல்களிலும் செலவிடலாம். முடிவில் சிறந்த பயனுள்ள வணிகமென்பது குறுகிய காலத்திற்குப் பயன் தரும் சிறுசிறு மகிழ்வுகளை விட்டுக் கொடுத்து நீண்ட காலம் நீடித்து, வாழ்க்கையின் ஆழமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பெரும் மகிழ்வுகளை நாடுவதே சரியானது என்பதை நாம் உணர்கிறோம்.

அந்த நிகழ்ச்சிகள் எவை? முதலில் நாம் இடையறாது செயற்படுகிற உயிரினங்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து எதையாவது செய்துகொண்டிருக்க முற்படுகிறோம்; இடைவிடாது எதையாவது செய்ய முயற்சிக்கிறோம். எனவே அந்த முயற்சியை எப்படிச் சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதே கேள்வி. நாம் ஏதாவது ஒரு திசையில் முயற்சித்துக் கொண்டிருக்கும்வரை, அந்த முயற்சி குறுகியதாக இருந்தாலும், விளைவுகள் நீண்ட நாள் நீடிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். அந்த முயற்சியில் நாம் செலவிடும் சக்திக்கு ஈடாகச் - சில வேளைகளில் நாம் அடையும் துன்பங்களுக்கும், அழுத்தங்களுக்கும் ஈடாகவும் - சிறந்த பயனுள்ள விளைவுகளை எதிர்பார்க்கின்றோம். அதன் விளைவாக வாழ்க்கையின் கடந்த காலத்தை நாம் திரும்ப நோக்கும்போது நாம் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்ற மனநிறைவு ஏற்பட வேண்டும் அல்லவா? நாம் மேற்கொண்ட முயற்சிக்குத் தகுந்த வாழ்க்கையாக அமைய வேண்டுமென விரும்புகிறோம். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், நமது வாழ்க்கை மிகச் சுருங்கியதாகத் தோன்றும் – மனித வாழ்வு குறுகியதாகவே உள்ளது. ஆகவே அதனை வீணாக்காமல் சிறப்பாக வாழ வேண்டும்.

சாமான்கள் வைத்துள்ள அறையைச் சுத்தம் செய்யும் போது, நம்முடைய பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ள வேண்டிய சாமான்கள் எவை, தூக்கி எறிய வேண்டிய தேவையற்றவை எவை என்று முடிவு செய்வதைப் போல, வாழ்க்கையையும் அணுக வேண்டும். ஒரு பெரிய வீட்டிலிருந்து சிறிய வீட்டிற்கு குடியேறுகின்றீர்களென வைத்துக் கொள்வோம். புதிய வீடு சிறியதென்பதால் இடத்துக்குத் தக்க அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே அங்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனால் பழைய வீட்டிலுள்ள சில பொருட்களைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. அதுபோலவே எது மிக முக்கியமானதோ, எது ஒரு மாற்றத்தை உண்டாக்கத் தக்கதோ, எது பயனுள்ள விளைவுகளைத் தரத்தக்கதோ அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டுமானால் நீங்கள் செய்கின்ற தேவையற்ற சில செயல்களைக் கைவிட வேண்டியிருக்கும். துறத்தல் பற்றிய போதனைகளுக்கு இந்த நுண்ணறிவு அடித்தலமாக அமைகிறது.

சிந்தித்துப் பார்த்தால் நல்ல பண்புகளை மனத்தில் வளர்த்துக் கொள்ள நாம் செலவிட்ட நேரமே சிறப்பாகச் பயன்படுத்திய நேரம் என்பதை அறிகிறோம். ஏனென்றால் அவை எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்குப் பயன்படத்தக்கவையாக இருக்கின்றன. உங்கள் உடம்பை வலிமையோடும், ஆரோக்கிய மாகவும் வைத்திருக்கச் சற்று நேரத்தைச் செலவிடுவதும் அவசியம். ஆனால் உடம்பைப் பொருத்தவரையில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அதன் பயன்பாடு குறையத் துவங்குகிறது. ஓரளவுக்கு மேல் உடல் நலனுக்காக செலவிடும் நேரம் வீணாகி விடுகிறது. எவ்வளவுதான் உடலைக் கவனிக்க நேரத்தைச் செலவிட்டாலும், இறுதியில் அது உங்களை விட்டுப் பிரிந்து போகும் நாள் வரத்தானே போகிறது? சில சமயம் அது நல்ல முறையில் நம்மை விட்டுச் செல்வதுமில்லை. மிகவும் குழப்பமான முறையில் பிரிவு ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் உங்கள் மனத்தைப் பயில்விப்பதற்கு நீங்கள் அதிக நேரத்தைச் செலவிட்டதற்காக மகிழ்ச்சியடைவீர்கள். ஏனென்றால் அதுவே (மோட்சமாகிய) வீடு பேற்றுக்கு அருகில் உள்ளது. அதே சமயம் வளர்ச்சியடைந்த மனத்தின் உறுதி உடலின் வலிமையை நம்பி இருப்பதில்லை. உடல் மறைந்தாலும் மனம் மறைவதில்லை.

நீங்கள் தியானம் செய்யும் போது தெரிந்து கொண்டதில் இதுவும் ஒன்று. பொதுவாக மக்கள் களைப்படையும் போது தாழ்ந்த மனநிலையில் இருப்பார்கள். அப்போது அவர்களுக்குத் தாங்கள் அடக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். ஆனால் நீங்கள் பரந்த மனப்பான்மையையும், நல்வாழ்வுக்கான கடமை உணர்வையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைக் கற்றுக் கொண்டால், மேற்கூறிய சலிப்படைந்த உணர்ச்சிகள், உடலின் வலிமையைப் பொறுத்ததே அல்ல என்பதைக் காலப்போக்கில் உணர்வீர்கள். மனம் தனக்குள்ளேயே தேவையான ஊட்டத்தை பெற்றுக் கொள்ளத் தொடங்குவதோடு, அது குறையும் போது நிறைவு செய்யும் மார்க்கத்தையும் தனக்குள்ளேயே அமைத்துக் கொள்கிறது.

இதனால் தான் நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து தியானம் பயில்கிறோம். மனத்தின் அறிந்த நிலை, கவனம், ஒருமுகப்பாடு, விவேகம் போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறோம். இது போன்ற பண்புகளே மனம் எந்தச் சூழ்நிலைகளையும் சமாளிக்க நமக்கு உதவுகின்றன. மக்களில் சிலர் இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க முடியாமல் சோர்ந்து விடுகிறார்கள். ஏன்? இந்த நற்பண்புகளை அவர்கள் கற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள். மனத்தின் அறிந்த நிலையை, கவனத்தை, மன ஒருமுகப்பாட்டினை, விவேகத்தை ஒதுக்கி விடுகிறார்கள். ஆகவே இது போன்ற பண்புகளை நாம் வளர்த்து உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். இது போன்ற பண்புகளை வளர்க்க நாம் செலவிட்ட நேரமே பயனுள்ள முறையில் செலவிட்ட நேரமாகும்.

அறத்திடம் அடைக்கலம் புகுவது என்பதற்கு இதுவே பொருள்: இந்தச் சில செயல்களின் மீது கவனம் செலுத்தினால், மற்றவற்றைப் பற்றி நாம் அக்கறை கொள்ளத் தேவையே இல்லை. உங்கள் பயிற்சியே உங்களைக் கரையேற்றி விடும் என்பதை நம்பலாம். நாம் எல்லாவற்றிலும் நம் மூக்கை நுழைக்கப் பார்க்கிறோம். ஏனென்றால் ஒன்று நமக்கு உதவாவிட்டாலும் மற்றது உதவுமே என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம். நாம் ஏதாவது ஒரு வழியை முடிவு செய்து அதை மட்டும் தொடரத் தயங்குகிறோம். அது முழுமையாக நம்மை வீடு கொண்டு சேர்க்குமா என்று அஞ்சுவதே அத்தயக்கத்துக்குக் காரணம். இது குதிரைப் பந்தயத்தில் ஓடும் எல்லாக் குதிரைகளின் மீதும் பணம் கட்டுவது போன்றது. ஆனால் உண்மையான பாதுகாப்புத் தருவதற்குப் பதிலாக, இத்தகைய எண்ணப் போக்கு இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று உதிரிகளை மட்டுமே நமது வாழ்க்கையில் மிஞ்ச வைக்கின்றன: இதில் சில பகுதிகள், அதில் சில துளிகள், சிறிதளவு அமைதி, கொஞ்சம் செல்வம், கொஞ்சம் உடல் நலம் எனத் துண்டு துண்டாகக் கிடைப்பதன்றி எதுவும் முழுமையாகக் கிடைப்பதில்லை.

அறத்தின் மீது அடைக்கலம் கொள்வதென்பது, மனத்தை வளர்ச்சியடையச் செய்தால், அது நிகழக்கூடிய எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்துவிடும் என்ற உறுதியான நம்பிக்கை மீது அடைக்கலம் கொள்வதற்கு ஒப்பாகும். ஒழுக்கம், மன ஒருமுகப்பாடு, விவேகம் - இவை எல்லாம் மகிழ்ச்சிக்கான விதைகள் – ஆகியவை இங்கேயே இருப்பதால், காரியத்தை எளிதாக்குகிறது. மேலும் நமது முழுச் சக்தியையும் எது முக்கியமோ அச்செயல்களுக்காகப் பயன்படுத்த நமக்கு அனுமதியளிக்கிறது.

வெளியிலிருந்து பார்க்கும் போது, அறத்தைப் பயில்வோர் பல இன்னல்களை அடைவதாகத் தெரிந்தாலும், ஏராளமானவற்றைத் துறப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுமே இல்லாமல் இருப்பதாகத் தெரிந்தாலும் அது ஒரு வறுமையான வாழ்க்கை இல்லை. உண்மையான செல்வம் உள்ளத்தில் தான் உருவாகிறது.

என்னை முதன் முதலில் அறத்திடம் ஈர்க்கக் காரணமாக இருந்தது எனது ஆசிரியர், அஜான் ஃபூவாங் அவர்களின் எளிமையான வாழ்க்கை தான் - ராயோங் மலைகளில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய விஹாரை, அங்கு சில குடிசைகள். மாணவர்களும் அதிகம் இல்லை. ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரிடம் நலவாழ்வு வாழ்வதற்கான ஒரு பொலிவு தென்பட்டது. அது அவரது பொருட் செல்வத்தால் ஏற்படவில்லை, அவரின் புகழாலும் ஏற்படவில்லை, அல்லது அவருக்குப் பல மாணவர்களும், நண்பர்களும் இருப்பதாலும் அப்பொலிவு ஏற்படவில்லை என்பதை அறிய முடிந்தது. அவர் தனது மனத்துக்குத் தக்க பயிற்சி யளித்திருந்தார். அவ்வளவுதான். அவர் சொன்னது போல, அவர் பிறக்கும்போது அவ்வாறு பிறக்கவில்லை. அவர் மனத்தில் வளர்த்திருந்த மன நிம்மதி எல்லாம் பயிற்சியின் மூலம் தோன்றியதே. பயிற்சியைப் பற்றி அறிய அறிய, அறத்தைப் பற்றி அறிய அறிய அது எந்த அளவு எல்லாவற்றையும் ஒருங்கிணத்திருக்கிறது என்பதை உணர்கிறோம். இந்தப் பண்புகள் மனத்தில் வளர்ந்தவுடன் அவை எல்லாச் சூழ் நிலைகளையும், சிக்கல்களையும் சமாளிக்கின்றன. மனத்தின் அறிந்தநிலை, கவனம், விவேகம் மற்றும் மன ஒருமைப்பாடு ஆகிய பண்புகள் எந்த திறமைக்கும் அடிப்படையாகத் தேவையானவை. எந்தச் சூழ்நிலைகளையும் சமாளிக்க அவை வேண்டியவை. ஆக இந்தச் சில பண்புகளின் மீது கவனம் செலுத்துவதால் நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் சந்திக்க ஆயத்தமாகிவிடுகிறோம். அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கொள்கின்றன.

அறத்தைப் பற்றிய நற்செய்திகளில் ஒன்று அது மிக விசாலமானது என்பதே. உங்கள் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணிக்கலாம். உங்களுக்குத் தேவையானதை அது கற்பிப்பதாலும், வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எந்தச் சிக்கலையும் சமாளிக்க அது உதவுவதோடு, மேலும் பலவற்றையும் உங்களுக்குக் கற்பிப்பதாலும் உங்கள் வாழ்க்கையை அறத்திற்காக அர்ப்பணிப்பது பயனுள்ளதே. வாழ்க்கையை எளிமையாக்குவதால் அது குறுகியதாகவும், சுருங்கினதாகவும் தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல. ஏனென்றால் குறுகிய, அற்பச் செயல்களில் மனத்தை ஈடு படுத்தாததால், அது மனத்தை விரிவடையச் செய்கிறது. வாழ்க்கையின் மிக முக்கிய அம்சங்களின் மீதே நாம் நமது கவனத்தைச் செலுத்துகிறோம்.

பல வருடங்களுக்கு முன்பு, நான் இளம் துறவியாக இருந்தபோது துறவிகளுக்கான தேர்வுகளை எடுக்க வேண்டியிருந்தது - தாய்லாந்தில் துறவிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். இது சம்பந்தமாக ஒவ்வொரு துறவியும் ஒரு சிறிய அற போதனை தர வேண்டும். திரிபிடகத்திலிருந்து ஒரு சொற்றொடர் அல்லது தம்மபதத்திலிருந்து ஒரு சில வரிகளைத் தருவார்கள். அதை விரிவுபடுத்தி மேலும் அதற்குச் சம்பந்தப்பட்ட வேறு சில திரிபிடகச் சொற்றொடர்களைச் சேர்த்து அற போதனையை முடிக்க வேண்டும். முதல் ஆண்டில் ஒரு சொற்றொடரையும், இரண்டாவது ஆண்டில் இரு சொற்றொடர்களையும், இறுதி ஆண்டில் மூன்று சொற்றொடர்களைக் கொண்ட போதனையை நிகழ்த்த வேண்டும். இதற்கு ஆயத்தம் செய்வதற்காக அவர்கள் அறம் சம்பந்தப்பட்ட பொன் மொழிகள் அடங்கிய ஒரு புத்தகத்தைத் தருவார்கள். அதில் தேர்ந்தெடுத்த பகுதிகளை மனனம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் வளர்ந்த எனக்கோ பள்ளியில் அதிகம் மனப்பாடம் செய்த பழக்கம் இல்லை. ஆனால் இங்குள்ள இளம் துறவிகள் அனைவரும் பக்கம் பக்கமாகப் பொன்மொழிகளை மனப்பாடம் செய்து விடுகிறார்கள். என்னால் அது முடியாததால் எந்தச் சூழ்நிலைக்கும் உகந்த ஒரு சில பொன் மொழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து மனப்பாடம் செய்வது நல்லது என்று தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த ஆண்டுதோறும் பயன்படத்தக்க பொன் மொழி தம்மபத்தில் காணப்படும்: 'சிற்றின்பத்தைக் கைவிடுவதால் பேரின்பம் கிடைப்பதானால், அப்பேரின்பத்தைப் பெறச் சிற்றின்பத்தைக் கைவிடத் தயங்க வேண்டாம்.' என்பதே.

இந்தக் கோட்பாடு எல்லாச் சூழ்நிலைகளுக்கும் உகந்தது. ‘துறத்தல்’ பற்றிய போதனைகளுக்கும் இது அடித்தலமாக உள்ளது. ஏன்? முழுப் பயிற்சிக்கும் இது அடித்தலமாக உள்ளது எனலாம்: நமது வாழ்க்கையில் முயற்சி செய்யும் வரை, அந்த முயற்சியின் காரணமாக ஏதாவது பயனுள்ளது மிஞ்சுவது நல்லது என்று நினைக்கிறோம். உங்களுக்குத் தெரிந்த எத்தனை பேர் சுறுசுறுப்பான உற்சாகமான வாழ்க்கை வாழ்ந்தும் கடைசியில் அந்த முயற்சிக்கு, துன்பத்துக்கெல்லாம் பிரதிபலனாகக் காட்டுவதற்கு தங்களிடம் ஏதும் மிஞ்சாததைக் குறிப்பிட்டுள்ளனர் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் நீங்கள் தேடிப் பார்த்தால் அந்தக் கூட்டத்தில் அறத்தைப் பயின்றுவருபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அறத்தைப் பயில எடுக்கும் முயற்சி நீண்டகாலம் பயனளிக்கிறது. மனத்தின் நற்பண்புகளை வளர்க்கிறது. நாம் நினைத்தும் பார்க்க முடியாத புதிய பார்வைகளை, எண்ணப் போக்குகளை நமக்குத் திறந்து காட்டுகிறது.

எனவே தான் அறம் உங்களைத் ‘துறந்து விட’ ஊக்குவிக்கும்போது இது ஒரு கொடுத்து, வாங்கும் பண்டமாற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிற்றின்பத்தை விட்டுப் பேரின்பத்தைப் பெறுகிறோம். நமது சக்தியைச் சிதறவிடும் பழக்கத்தை விட்டுவிட்டு மனத்தின் பண்புகள் மீது கவனம் செலுத்தும் நல்ல பழக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம். இது தான் எந்தச் சூழ்நிலைகளையும் சமாளிக்க வைத்து, அதற்கு மேலும் தாண்டிச் செல்ல உதவுகிறது.

எனவே தான் அவற்றின் முக்கியமான அம்சங்களைத் தவிர மற்றவற்றை அகற்றிவிட வேண்டும் என்பது மிக முக்கியம். இந்த முக்கிய அம்சங்கள் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் ஈடு செய்கிறது. உங்களுக்கு வேண்டிய புகலிடத்தையும் அது தருகிறது.

எனவே இது மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், இங்கு அமர்ந்துள்ள நாம் எதன் மீது கவனம் செலுத்துகிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். உள்ளே வரும், வெளியே செல்லும் மூச்சின் மீதே கவனம் செலுத்துகிறோம். இது மிகவும் ஆழமானதாகவோ, மனத்தைத் தூண்டுவதாகவோ இல்லாவிட்டாலும் இது ஒரு அத்தியாவசியமான செயலாகும். மூச்சின் மீது கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், அதன் மீது கவனம் செலுத்தும் போது நாம் வளர்க்கும் பழக்கங்களும், அதாவது மனத்தின் அறிந்த நிலை, கவனம், நிலையாகத் தொடர்ந்து செய்தல், மனத் தெளிவு ஆகியவற்றையும் வளர்த்துக் கொள்கின்றோம். வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ளும் திறமைகளுக்கெல்லாம் இவை அடிப்படையானவை. எனவே இவற்றை நன்கு கற்றுக் கொள்வது அவசியம். அவற்றை வளர்க்க நாம் செலவு செய்யும் நேரம் வீணானதல்ல. வேறு செயல்களைத் தவிர்த்து விட்டு இவற்றை வளர்க்க நேரத்தைச் செலவு செய்வது ஒரு அறிவுள்ள கைமாற்றம். இந்தப் பயிற்சியின் பின் உங்களிடம் இருப்பது மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாகும். நீங்கள் கைவிட்டதை விட மிக மதிப்புள்ளது. இதை நீங்கள் நம்பலாம், ஏனென்றால் இந்தப் பண்புகள் உங்களுக்கு நீங்களே உறுதுணையாக இருக்க உதவுகின்றன. "நீங்களே உங்களுக்கு அடைக்கலம்," என்ற பொன் மொழியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் பொருள், இறுதியில் உங்களுக்கு நீங்களே அடைக்கலமாக இருக்க வேண்டும் என்பதுதான். நீங்களே உங்களுக்குப் புகலிடமாக இருக்கும் முன் உங்களை நீங்களே நம்ப முடிய வேண்டும். அதற்கு இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். அவற்றை நம்பினால், இறுதியில் அவை உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க உதவும். இது ஒரு 2600 வருட உத்திரவாதத்துடன் வரும் சத்தியம்.

* * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

©2006 Thanissaro Bhikkhu.

"Meditations 2: Dhamma Talks", by Thanissaro Bhikkhu. Access to Insight (Legacy Edition), 30 November 2013, http://www.accesstoinsight.org/lib/authors/thanissaro/meditations2.html .