வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழித்தல்
சப்பாசவ சுத்தம்
Sabbasava Sutta
நான் இவ்வாறு கேள்வியுற்றேன். பகவான் ஒருமுறை சாவத்தியில் உள்ள ஜேதவனத்தில், அனாத பிண்டிகனுடைய ஆச்சிரமத்தில் எழுந்தருளியிருந்த பொழுது, பிக்குகளை நோக்கி 'பிக்குகளே' என்றார். அவர்கள் 'சுவாமி' என்றார்கள். பகவான், பின்வருமாறு கூறினார். சகல கவலைகளையும் துன்பங்களையும் ஒழிக்கும் மார்க்கத்தை உங்களுக்கு விளக்குகிறேன். நன்கு கேட்டுச் சிந்தியுங்கள். உங்களுக்குச் சொல்லுகிறேன்.
'ஆம், சுவாமி' என்று பகவானுக்கு அவர்கள் விடை கூறினர்.
அவர் பின்வருமாறு மேலும் கூறினார்: அறிந்து உணர்ந்து கொள்பவனுக்கே கவலைகளையும் துன்பங்களையும் ஒழிக்க முடியும். அறியாதவனுக்கும் உணராதவனுக்கும் அது முடியாது. கவலைகளையும் துன்பங்களையும் நீக்குவதற்கு எதை அறியவேண்டும், எதை உணரவேண்டும்? இவை சாதுரியமான சிந்தனையும், சாதுரியமற்ற சிந்தனையுமாகும். சாதுரியமின்றிச் சிந்திப்பவனிடம், இதுவரை உண்டாகாத கவலையும் துன்பங்களுமுண்டாகும். அத்துடன் ஏற்கனவே உண்டானவை மேலும் அதிகரிக்கும் [1] . சாதுரியமாகச் சிந்திப்பவனுக்கு இதுவரை உண்டாகாத கவலையும் துன்பங்களும் உண்டாகமாட்டா. மேலும் ஏற்கனவே உண்டானவை மறைந்துவிடும்.
பிக்குகளே (1) அகக்காட்சியால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (2) தன்னடக்கத்தால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (3) பழக்கத்தினால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (4) பொறுமையினால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (5) தவிர்ப்பதால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (6) கலையச் செய்வதால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு. (7) பயிற்சியினால் ஒழிக்கப்பட வேண்டிய கவலைகளும் துன்பங்களுமுண்டு.
(1) பிக்குகளே, அகக்காட்சியால் ஒழிக்க வேண்டிய கவலைகளும் துன்பங்களும் எவை? கல்வியில்லாத பொது ஜனங்கள், அருகதரைத் தரிசிக்காதவர்கள், அருகதருடைய உபதேசங்களைக் கேளாதவர்கள், அருகதருடைய உபதேசங்களில் பயிற்சியில்லாதவர்கள், நல்லவர்களைக் காணாதவர்கள், நல்லவர்களின் உபதேசங்களைக் கேளாதவர்கள், நல்லவர்களின் உபதேசங்களில் பயிற்சியில்லாதவர்கள், சிந்தனை செய்யவேண்டிய விஷயங்களெவை, சிந்தனை செய்ய வேண்டாத விஷயங்களெவை, என்பதைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
இனி பிக்குகளே, அவன் சிந்தனை செய்து கொண்டிருக்கும், சிந்தனை செய்ய வேண்டாத விஷயங்களெவை? சில விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் ஏற்கனவே உண்டாகாத காம ஆசவங்கள் எழுமானால், அதனோடு அவனிடம் ஏற்கனவே எழுந்த காம ஆசவங்கள் விருத்தியாகுமானால், உயிர் வாழும் ஆசவமும், பவ ஆசவமும் ... ஏற்கனவே உண்டாகாத அவித்தை என்ற ஆசவம் உண்டாவதோடு ஏற்கனவே உண்டான அவித்தை ஆசவம் விருத்தியடையுமானால், அவன் சிந்தனை செய்யக்கூடாத விஷயங்கள் இவையே. இவற்றை அவன் சிந்திப்பான்.
பிக்குகளே, அவன் சிந்தனை செய்யாதவையும், சிந்தனை செய்ய வேண்டியவையுமான விஷயங்கள் எவை? ஒருவன் சில விஷயங்களைச் சிந்தனை செய்யும்போது அவனிடத்து உண்டாகாத காம ஆசவங்கள் உண்டாகா விட்டால், அதனோடு அவனிடத்து ஏற்கனவே உண்டான காம ஆசவம் மறைந்தால், பவ ஆசவங்களும், உயிரோடிருக்க வேண்டுமென்ற விருப்ப ஆசவங்களும் ... ஏற்கனவே உண்டாகாத ஆசவங்கள் உண்டாகா. ஏற்கனவே உண்டான ஆசவங்கள் மறையுமானால், இவ்விஷயங்களே சிந்திக்கப்பட வேண்டும். இவற்றை அவன் சிந்திப்பதில்லை.
சிந்திக்க வேண்டாத விஷயங்களைச் சிந்திப்பதாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களைச் சிந்தியாது விடுவதாலும், அவனிடத்துண்டாகாத ஆசவங்கள் உண்டாகும். ஏற்கனவே அவனிடத்துண்டான ஆசவங்கள் பெருகும். அப்போது அவன் சாதுரியமின்றிச் (அவசிய மின்றி) சிந்திக்கிறான்.
அது பின்வருமாறு:
1. நான் முன்னே இருந்தேனா?
2. நான் முன்னே இருக்கவில்லையா?
3. நான் முன்னே என்னவாயிருந்தேன்?
4. நான் முன்னே எப்படியிருந்தேன்?
5. என்னவாயிருந்து முன்னே என்னவாக மாறினேன்?
6. நான் எதிர்காலத்தில் இருப்பேனா?
7. நான் எதிர்காலத்தில் இருக்கமாட்டேனா?
8. நான் எதிர்காலத்தில் என்னவாயிருப்பேன்?
9. நான் எதிர்காலத்தில் எவ்வாறிருப்பேன்?
10. என்னவாயிருந்து நான் எதிர்காலத்தில் என்னவாவேன் ?
அல்லது நிகழ் காலத்தில் தன்னைப் பற்றிச் சந்தேகப்படுகிறான்:
11. நான் இருக்கிறேனா?
12. நான் இல்லையா?
13. நான் யார்?
14. நான் எவ்வாறிருக்கிறேன்?
15. இவன் எங்கிருந்து வந்தான்?
16. இவன் எங்கே போவான்?
இவ்வாறு சாதுரியமின்றிச் சிந்திக்கும் போது ஆறு தவறான காட்சிகளில் ஒன்று அவனிடத்துண்டாகும்.
1. எனக்கு ஆன்மா உண்டு. இக்காட்சி உண்மையானதாகவும் யதார்த்தமானதாகவும் அவனுக்குப் படும்.
2. எனக்கு ஆன்மா இல்லை. இக்காட்சி உண்மையானதாகவும் யதார்த்தமானதாகவும் அவனுக்குப் படும்.
3. ஆத்மாவினால் ஆத்மாவைக் காண்கிறேன். இந்தக் தரிசனம் அவனுக்கு யதார்த்த மாகவும் உண்மையாகவும் படுகிறது.
4. ஆத்மாவினால் அனாத்மாவைக் காண்கிறேன். இத் தரிசனம் அவனுக்கு யதார்த்த மாகவும் உண்மையாகவும் படுகிறது.
5. அனாத்மாவினால் ஆன்மாவைக் காண்கிறேன். இத் தரிசனம் அவனுக்கு யதார்த்த மாகவும் உண்மையாகவும் படுகிறது.
6. அல்லது சக்காயதிட்டி அவனிடம் பின்வருமாறு உண்டாகிறது. இந்த என் ஆத்மாவே பேசுகிறது, உணர்கிறது. இப்போதும் பின்பும் நன்மை தீமைகளின் பயனை அனுபவிக்கிறது. இந்த ஆத்மா நிரந்தரமானது, நிலையானது, சாஸ்வதமானது, மாறுபாடற்றது, எப்பொழுதும் எக்காலமும் ஒரேமாதிரி இருக்கிறது.
பிக்குகளே, இது தான் தரிசனங்கள் என்ற வலையில் சிக்கிக் கொள்ளுதல் எனப்படுவது. தரிசனக்காடுகள், தரிசனங்கள் என்ற ஆரணியம், தரிசனங்களில் திக்குமுக்காடல், தரிசனங்களில் கலவரமடைதல், தரிசனபந்தங்கள். பிக்குகளே, கல்வியில்லாத சாதாரண மனிதன், தரிசனபந்தங்களில் சிக்குண்டு, பிறப்பு, மூப்பு, சாக்காடு, அவலக்கவலைக் கையாறுகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதில்லையென்று கூறுகிறேன்.
மேலும் பிக்குகளே, உயர்ந்தவர்களின் தரிசனம் பெற்றவர், உயர்ந்தவர்களின் போதனையில் பயிற்சியுடையவர், உயர்ந்தவர்களின் போதனைகளில் நன்கு பயிற்சி பெற்றவர், நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டவர், நல்லவர்களின் அறவுரைகளில் நன்கு பயிற்சி பெற்றவர், கல்வியறிவு பெற்றவரான உயர் சீடர் எதனைச் சிந்திக்க வேண்டும், எதனைச் சிந்திக்கக்கூடாது என அறிவர். எந்த விஷயங்களைச் சிந்திக்க வேண்டும், எதனைச் சிந்திக்கக்கூடாது என உணர்ந்து, சிந்திக்க வேண்டா விஷயங்களைச் சிந்திக்க மாட்டார். சிந்திக்க வேண்டிய விஷயங்களைச் சிந்திப்பார்.
இனி, பிக்குகளே, அவன் சிந்திக்காத, சிந்திக்க வேண்டா விஷயங்கள் எவை? ஒருவன் சில விஷயங்களைச் சிந்திக்கும்போது அவனிடம் இதுவரை உண்டாகாத காம ஆசவங்களுண்டாகுமானல் அதனோடு அவனிடம் ஏற்கனவேயுள்ள காம ஆசவங்கள் பெருகுமானால், பவ ஆசவங்களும், உயிரோடிருக்க வேண்டுமென்ற ஆசவங்களும்... இதுவரை அவனிடமுண்டாகாத அவித்யா ஆசவமும் உண்டாகுமானால், அவனிடம் ஏற்கனவேயுள்ள அவித்தை ஆசவம் பெருகுமானால், இவ்விஷயங்கள் சிந்திக்கப்படத் தக்கனவல்ல, இவற்றில் அவன் சிந்தனை செலுத்துவதில்லை.
பிக்குகளே அவன் சிந்தனை செலுத்தும் விஷயங்களென்ன? சிந்திக்கப்படவேண்டிய விஷயங்களென்ன? ஒருவன் சில விஷயங்களைச் சிந்திக்கும் போது இதுவரை உண்டாகாத காம ஆசவங்கள் எழாது விட்டால் அத்துடன் அதுவரை உண்டான காம ஆசவங்கள் மறைந்து போனால், பவ ஆசவமும் உயிரோடிருக்க வேண்டுமென்ற ஆசவமும்... அதுவரை அவனிடம் உண்டாகாத அவித்தியா ஆசவமும் உண்டாகா. அத்துடன் அவனிடம் ஏற்கனவே உண்டான அவித்தியா ஆசவமும் மறைந்துவிடும். இவ்விஷயங்களே சிந்திக்கப்படவேண்டியவை. இவற்றிலே தான் அவன் சிந்தனை செலுத்துவான்.
பிக்குகளே, சிந்திக்க வேண்டாத விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தாதிருப்பதாலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சிந்தனையைச் செலுத்துவதாலும், இதுவரை உண்டாகாத ஆசவங்கள் உண்டாகமாட்டா. அத்துடன் அவனிடத்து ஏற்கனவே உண்டான ஆசவங்கள் மறைந்துவிடும், அப்போது அவன் சாதுரியமாக இது துக்கம் என்று சிந்திக்கிறான். இது துக்க சமுதயம் என்று சாதுரியமாகச் சிந்திக்கிறான். இது துக்க நிரோதம் என்று சாதுரியமாகச் சிந்திக்கிறான். இது துக்க நிவாரணமார்க்கம் என்று சாதுரியமாகச் சிந்திக்கிறான். இவ்வாறு சாதுரியமாகச் சிந்திக்கும்போது மூன்று தளைகளான (சம்யோஜனங்கள்) ஆன்மா உண்டென்ற எண்ணம் (சக்காயத்ட்டி) சந்தேகம் (விசிகிச்சா) கிரியைகள் விரதங்களில் பற்று (சீலப் பதபராமாச) என்பன அகன்றுவிடுகின்றன. பிக்குகளே இவை ஆசவங்கள் (தளைகள்). அவற்றை அகக்காட்சியால் (விபஸ்ஸனையால்) நீக்க வேண்டும்.
(2) பிக்குகளே, அடக்கத்தினால் தவிர்க்கப்பட வேண்டிய கவலைகளும் ஆசவங்களும் எவை?
பிக்குகளே, சாதுரியமாகச் சிந்திக்கும் பிக்கு, கண்களை அடக்கிக் கொண்டு சீலிப்பான். கட்புலனை அடக்காமல் வாழும்போது அவனுக்கு ஆசவங்களும், துயரும் சங்கடங்களும் உண்டானால் கட்புலனை இவ்வாறு அடக்கினால் அவை அவனுக்கு உண்டாகா.
சாதுரியமாகச் சிந்தனை செய்து அவன் செவிப்புலனை அடக்கி ..... சுவைப்புலனை அடக்கி ..... உடலை அடக்கி ..... மனத்தை அடக்கி வாழ்வான். மனத்தை அடக்காமல் வாழ்வதால் ஆசவங்கள், துயர்கள், சங்கடங்கள் உண்டானால் இவ்வாறு மனத்தை அடக்கினால் அவை நீங்கும். பிக்குகளே இவை தாம் அடக்கத்தினால் நீக்கப்படும் கவலைகளும் ஆசவங்களுமாகும்.
(3) பிக்குகளே, பயன்படுத்துவதால் விலக்கப்பட வேண்டிய கவலைகளும் ஆசவங்களும் எவை?
பிக்கிகளே, பிக்கு ஒருவர் சாதுரியமாகச் சிந்தனை செய்து தன் சீவர ஆடையை குளிர், வெப்பம், இலையான், கொசு, காற்று, வெய்யில் ஊர்வன என்பவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றவே பயன்படுத்துவார். சாதுரியமாகவே சிந்தனை செய்து உணவை, இன்பத்துக்காகவோ, பேரூணுக்காகவோ (வெறி கொள்வதற்காகவோ) அழகுக்காகவோ அலங்காரத்துக்காகவோ பயன்படுத்தாமல் இந்த உடலைப் போஷிப்பதற்காகவும், இளைப்பின்றியிருப்பதற்காகவும், துறவு வாழ்வை நடத்துவதற்காகவும், பயன்படுத்தி உடலில் முன்னையே இருந்து வருகிற துன்பம் பசி என்பவற்றைப் போக்கிப், புதிய வேதனைகளை உண்டாக்காமல், என் வாழ்வைப் பழியின்றி (இடையூறின்றி) சௌகரியமாக வைத்துக் கொள்வேன் என்று நினைப்பான். சாதுரியமாகச் சிந்தனைசெய்து, குளிரை விலக்குவதற்காகவும், வெப்பத்திலிருந்து ஒதுங்குவதற்காகவும், உண்ணி, கொசு, காற்று, சூரியன், ஊர்வன என்பவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்காகவும், பருவ கால இடையூறுகளிலிருந்து நீங்குவதற்காகவும், தனித்து ஒதுங்கியிருப்பதற்காகவுமே உறைவிடத்தைப் பயன்படுத்துகிறான். சாதுரியமாகச் சிந்தனைசெய்து தனக்குள் நோக்காடு, பிணி என்பவற்றைப் போக்குவதற்காகவும் தன் உடல் நலத்தைப் பேணுவதற்காகவுமே மருந்து, மருத்துவ வசதிகள் என்பவற்றைப் பயன்படுத்துகிறான். பிக்குகளே, இத்தகைய ஆசவங்கள், சங்கடங்கள், துயர்கள் அவனுக்குண்டானால் இங்கே கூறியவாறு விஷயங்களைப் பயன்படுத்துவானானால் அவை நீங்கிவிடும். பிக்குகளே, பயன்படுத்தும் முறையினால் நீங்கக்கூடிய ஆசவங்கள், துயர்கள் இவைதாம்.
(4) பிக்குகளே, சகித்துக் கொள்வதால் நீக்கக்கூடிய துயரும், சங்கடங்களும் என்ன?
பிக்குகளே, பிக்கு ஒருவர் சாதுரியமாகச் சிந்தனை செய்து குளிர், வெப்பம், பசி, தாகம், உண்ணி, கொசு, காற்று சூரியன், ஊர்வன என்பவற்றினால் வரும் உபத்திரவங்களையும், அவமானமான வேதனை தரும் பேச்சு என்பவற்றையும் தாங்கிக் கொள்வாரானால், நோவுண்டாக்கும் கொடிய, கடு கடுப்பான, இனிமையற்ற, மனதுக்கொவ்வாத, கொல்வது போன்ற உடல் உணர்ச்சிகளைத் தாங்கிக்கொள்வதில் பழக்கமுண்டாகும். இவற்றைத் தாங்க முடியாது போகுமானால், இவ்வாறு தாங்குபவர்க்கு அவற்றால் வரும் கவலை, நோக்காடு, சங்கடம் என்பன இல்லாமற் போகும்.
(5) பிக்குகளே, தவிர்ப்பதனால் நீக்கப்பட வேண்டிய கவலைகளும் சங்கடங்களும் எவை?
பிக்குகளே, சாதுரியமாகச் சிந்தனை செய்யும் ஒரு பிக்குவானவர் மதங் கொண்ட யானை, கொடிய குதிரை, கொடிய எருது,வெறி கொண்ட நாய் என்பவற்றைத் தவிர்ப்பான். சர்ப்பம், மரக்குற்றி, முள்ளு வேலி, குழி, செங்குத்தான பாறை, மலக்குழி என்பவற்றைத் தவிர்ப்பான். சாதுரியமாகச் சிந்தனை செய்து துறவு வாழ்வில் ஈடுபட்டிருக்கும் விவேகிகள், இவன் தவறான வழியிற் செல்லுகிறான் என்று சொல்லக்கூடிய தகுதியற்ற இடங்களில் இருக்கக் கூடாது. தகுதியற்ற இடங்களை நாடக் கூடாது. கூடா நண்பரோடு சேரக்கூடாது. இத்தகைய விஷயகளைத் தவிர்ப்பானானால் அவனுக்கு இந்தத் தொல்லைகளும், கவலைகளும், தொந்தரவுகளுமுண்டாகமாட்டா. இவை தவிர்ப்பதனால் நீக்கப்பட வேண்டிய கவலைகள், தொந்தரவுகள் என வழங்கப்படும்.
(6) புறத்தே ஒதுக்கி விடவேண்டிய கவலைகளும் தொந்தரவுகளும் என்ன?
பிக்குகளே, சாதுரியமாகச் சிந்தனை செய்து ஓரு பிக்குவானவர் அவரிடத்தெழும் காம ஆசவங்கள் பற்றிய நினைவுகளை அணுகவிடாமல், விலக்கி விடவேண்டும். ஒதுக்கி அழித்துத் தனித்து விடவேண்டும். பகை உணர்ச்சியை மனதில் அணுகவிடக் கூடாது. பலாத்காரத்தை அணுகவிடக் கூடாது. உள்ளத்தில் எழும் அசுப எண்ணங்களை அணுகவிடாது தவிர்த்து, ஒதுக்கி, கழித்து, அழித்துத் தணித்துவிட வேண்டும். இத்தகைய தொந்தரவுகளையும், கவலைகளையும், தொல்லைகளையும் இவ்வாறு தவிர்த்தால் அவை அவரை அணுகமாட்டா. புறத்தே ஒதுக்கிவிடவேண்டிய கவலைகளும் தொந்தரவுகளும் இவையாகும்.
(7) பிக்குகளே, பாவனையினால் போக்கக்கூடிய துயரும் தொந்தரவுகளும் எவை?
பிக்குகளே, சாதுரியத்தோடு ஒரு பிக்குவானவர் பற்றின்மை, நிராசை, நிரோதம், துறவு என்பவற்றோடு தொடர்புடைய போதியங்கமான (அறிவொளி தரும் அங்கம்) கடைப்பிடி என்னும் சதியைப் பழகிக் கொள்ள வேண்டும். சாதுரியமாகச் சிந்தனை செய்து போதியங்கமான (தம்மவிசய) தர்ம ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். (வீரியம்) உற்சாகமென்ற போதி அங்கத்தை மேற்கொள்ள வேண்டும்... (பிரீதி) மகிழ்ச்சி என்ற போதி அங்கத்தை மேற்கொள்ள வேண்டும்... சாந்தி (பஸ்ஸத்தி) என்ற போதி அங்கத்தை ... (சமாதி) சமாதி என்ற போதி அங்கத்தை .... பற்றின்மை, நிராசை, நிரோதம், துறவு என்பவற்றோடு தொடர்புடைய (உபேக்க என்ற) நடுநிலை என்னும் போதி அங்கத்தை மேற்கொள்ள வேண்டும். பிக்குகளே, இவற்றில் ஒன்றையேனும் பாவனை செய்யாத பிக்குவுக்கு அந்த ஆசவங்களும், சங்கடங்களும், தொந்தரவுகளுமிருக்குமானால் அவற்றைப் பாவனை செய்வதால் அவை நீங்கும். தியானத்தினால் போக்கக் கூடிய துயரும் தொந்தரவுகளும் இவையாகும்.
பிக்குகளே அகக்காட்சியால் (விபஸ்ஸனை) அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், அடக்கத்தினால் அகற்ற வேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், பயன்படுத்துவதால் அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், சகிப்பினால் அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், தவிர்ப்பதால் அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் அகற்றியவர், ஒதுக்கிவிடுவதால் அகற்றவேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் ஒதுக்கியவர், பாவனையினால் ஒதுக்க வேண்டிய கவலைகளையும் ஆசவங்களையும் பாவனையினால் ஒதுக்கியவர், இத்தகைய பிக்குவே எல்லா கவலைகளையும் ஆசவங்களையும் அடக்கத்தினால் ஒதுக்கியவர் ஆவர். அவர் வேட்கையை ஒழித்தவர், தளைகளை (நீவரணங்களை) ஒழித்தவர், போலி மானத்தை (அகங்காரத்தை) அளந்தறிந்தவர். அவர் துக்கத்துக்கு முடிவு கண்டவர்.
இவ்வாறு பகவான் கூறியருள அங்குள்ள பிக்குகள் அவருடைய அருளுரை கேட்டு மகிழ்ந்து களிப்பெய்தினர்.
(மஜ்ஜிம நிகாய இல. 2)