பௌத்தக் கதைகள் - மூன்று விருந்துகள்


பௌத்தக் கதைகள்
மயிலை சீனி. வேங்கடசாமி


மூன்று விருந்துகள்


I   பால் பாயசம்

    சுஜாதை ஒருநாள் காலை சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தாள். குடம் நிறையப் பாலைக் கறந்து நுரை பொங்கப் பொங்கப் குடத்தைச் சமையல் அறைக்குக் கொண்டுவந்தாள். தண்ணீர் இல்லாமலே, முழுதும் பாலினாலேயே பாயசம் சமைக்க முற்பட்டாள்.

    சுஜாதை சேனானி கிராமத்துத் தலைவனுடைய மகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தான் மணமாகாத கன்னிகையாக இருந்தபோது, தன் கிராம தேவதைக்கு அவள் பிரார்த்தனை செய்து கொண்டாள். தனக்கு உகந்த கணவன் வாய்த்து, முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்குமானால், அந்தத் தெய்வத்திற்குப் பால் பாயாசம் படைப்பதாக அவள் நேர்ந்து கொண்டாள். சேனானி கிராமத்துக்கு அருகிலே உள்ள அஜபால ஆலமரம் என்னும் ஆலமரத்தில் ஏதோ ஒரு தேவதை இருக்கிறதென்பதும், அதைப் பிரார்த்தித்துக் கொண்டால், அத்தேவதை தங்கள் குறைகளைத் தீர்த்து வேண்டிய வரங்களை அளிக்கும் என்பதும் அந்தக் கிராமத்து மக்கள் நம்பிக்கை. அந்தக் கருத்துப்படி சுஜாதையும் ஆலமரத்துத் தெய்வத்தை வேண்டினாள். அவள் எண்ணப்படியே அவளுக்கு உகந்த கணவன் வாய்த்துத் திருமணமும் முடிந்து அடுத்த ஆண்டிலே ஓர் ஆண்குழந்தையையும் பெற்றெடுத்தாள். தன் விருப்பம் நிறைவேறவே, அந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனையைச் செலுத்தப் பால் பாயாசம் சமைத்துக் கொண்டிருந்தாள். அன்று வைகாசித் திங்கள் முழு நிலா நாளாகிய வெள்ளுவா நாள்.

    நீர் கலவாமல் முழுதும் பாலினாலே பாயசத்தைச் சுவைபடச் சமைத்தாள். பிறகு, தன் தோழிகளையும் பணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு, பாயசப் பாத்திரத்தைத் தானே தன் கையில் ஏந்திக் கொண்டு அஜபால ஆலமரத்தை நாடிச் சென்றாள். அந்த மரம் கிராமத்திற்கு அப்பால் காட்டிற்கு அருகிலே இருந்தது.

    புத்த ஞானத்தை நாடி இல்லறத்தை விட்டுத் துறவறம் பூண்டு காடுகளையும் நாடுகளையும் சுற்றித் திரிந்த சித்தார்த்தர் அந்தக் காலத்தில் சேனானி கிராமத்தை அடுத்த காட்டிலே நேரஞ்சர ஆற்றுக்கு அருகில் தங்கியிருந்தார். அவர் அங்குச் சிலகாலம் வரையில் அப்பிரணத்தியானம் என்னும் மூச்சை நிறுத்தும் யோகத்தைச் செய்துகொண்டிருந்தார். உணவு கொள்ளாமலே அப்பிரணத்தியானத்தைக் கடுமையாகச் செய்து கொண்டிருந்தபடியினாலே, சித்தார்த்தத் துறவி  உடம்பு சுருங்கி வற்றிப் போயிற்று. அதனால் அவர் பெரிதும் துன்பப் பட்டார். ஆகவே, அந்த யோகத்தை நிறுத்திவிட்டார். அவர் உடம்பு மிகவும் இளைத்துக் களைப்படைந்திருந்தது. ஆனால் அன்று வைகாசித் திங்கள் வெள்ளுவா நாளில், தாம் புத்த ஞானம் அடைந்து புத்தராகப் போவதை அவர் அறிந்திருந்தார். அன்று காலை புத்திராகப் போகிற சித்தார்த்தர், காலைக்கடனை முடித்துக்கொண்டு தற்செயலாக அஜபால ஆலமரத்துக்குச் சென்று அதன் கீழே அமர்ந்து தமக்குப் புத்த ஞானம் கிடைக்கப் போவதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    முற்பகல் வேளை. பாயசத்தைப் படைக்க சுஜாதை தன் தோழிகளுடன் ஆலமரத்துக்கு வந்தாள். அந்த மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பதைக் கண்டாள். அவர் முகத்தில் ஒருவித தெய்வீக ஒளி தோன்றிற்று. அமைதியுள்ள சாந்த மூர்த்தியாகக் காணப்பட்டார். மனித இயல்பைக் கடந்த தெய்வீக புருஷனாகத் தோன்றினார். இவரைக் கண்ட சுஜாதை, அவரை ஆலமரத்தில் குடியிருக்கும் தெய்வம் என்று கருதினாள். தான் படைக்கப்போகும் பால் பாயசத்தை ஏற்றுக் கொள்வதற்காக அந்தத் தேவதை அங்கு எழுந்தருளியிருப்பதாக நம்பினாள். தோழிகளுடன் அருகில் சென்று பாயசப் பாத்திரத்தை அவர் எதிரில் வைத்து வணங்கினாள். பிறகு மூன்று முறை அவரைச் சுற்றி வலம் வந்தாள். "சுவாமி! இதைத் தங்களுக்கு அளிக்கிறேன். அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்," என்று வேண்டிப் பின் தன் தோழிகளுடன் கிராமத்திற்குப் போய் விட்டாள்.

    சித்தார்த்தருக்கு நல்ல பசி. அவர் சுஜாதை அளித்த பாயசப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நேரஞ்சர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கு சுப்ரத்திட்டை என்னும் துறையில் ஒரு மரத்தடியில் பாத்திரத்தை வைத்துவிட்டு, துறையில் இறங்கி நீராடினார். பிறகு கரைக்கு வந்து மரத்தின் நிழலிலே அமர்ந்து சுஜாதை கொடுத்த பால் பாயசத்தைச் சாப்பிட்டார்.

    இது சித்தார்த்தர் புத்தராவதற்கு முன்பு, அன்று பகலில் உட்கொண்ட இனிய பால் பாயசம்.

II  அரிசி அடை

    சித்தார்த்தர் போதிஞானம் அடைந்து புத்தரான பிறகு அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அந்தச் சீடர்களான பிக்ஷுக்களுடன் பகவன் புத்தர் நாடுகளிலும் நகரங்களிலும் சென்று தமது பௌத்தக் கொள்கையை மக்களுக்குப் போதித்து வந்தார்.

    ஒரு சமயம் ராஜகிருக நகரத்துக்கு அருகிலே ஒரு ஆராமத்திலே பகவன் புத்தர் சீடர்களான பிக்ஷுக்களுடன் தங்கியிருந்தார். அந்த நகரத்து அரசரும், செல்வர்களும், நிலக்கிழார்களும் பகவன் புத்தரையும் அவருடைய சீடர்களையும் தமது வீடுகளுக்கு அழைத்து உணவு கொடுத்தார்கள். யாரும் அழைக்காத நாட்களில் புத்தரும் சீடர்களும் நகரத்தில் வீடு வீடாகச் சென்று பிச்சை ஏற்று உணவு கொள்வார்கள்.

    அந்த நகரத்திலே பூரணை என்னும் பெயருள்ள அம்மையார் இருந்தார். இந்த அம்மையாருக்கு உற்றார் உறவினர் இலர். ஏழையாகிய இவர் வீடுகளில் குற்றேவல் செய்து தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார். ஒருநாள் பூரணைக்குக் கொஞ்சம் நொய் அரிசி கிடைத்தது. அதை மாவாக அரைத்து அடை சுட்டாள். அது வெல்லம், தேங்காய், எண்ணெய் சேராத வெறும் உப்பு அடை. அந்த அடையை அம்மையார் மடியில் வைத்துக் கொண்டு குடத்தை எடுத்துக் கொண்டு நீர் கொண்டுவர நகரத்துக்கு வெளியேயுள்ள ஆற்றுக்குச் சென்றார். ஆற்றங்கரையிலே மரத்தினடியில் உட்கார்ந்து அடையைத் தின்னலாம் என்று அம்மையார் எண்ணினார்.

    பூரணை நகரத்துக்கு வெளியே சாலைவழியாகச் செல்லும்போது, புத்தர் எதிரிலே நகரத்தை நோக்கிப் பிச்சைக்காக வந்து கொண்டிருந்தார். பகவன் புத்தரைக் கண்டதும் பூரணைக்கு, "புத்த பகவருக்குப் பிச்சை கொடுக்க வேண்டும் என்று பல நாளாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் வரும்போது என்னிடம் ஒன்றும் இருப்பதில்லை. ஏதாவது உணவு இருக்கும்போது அவர் வருவது இல்லை. இப்போது என்னிடம் அரிசி அடை இருக்கிறது. புத்தரும் எதிரிலே வருகிறார். இன்றைக்கு இதை இவருக்குக் கொடுக்க வேண்டும்," என்று எண்ணம் உண்டாயிற்று.

    இவ்வாறு தனக்குள் எண்ணிக்கொண்ட பூரணை, நீர்க்குடத்தைத் தெருவின் ஓரத்தில் ஒரு புறமாக வைத்து விட்டு அவரிடம் சென்று வணங்கினாள். மடியிலிருந்த அடையை எடுத்து, "பகவரே, இந்த அற்ப அடையை ஏற்றருள வேண்டும்," என்று வேண்டினாள்.

    பகவர், திரும்பிப் பின்னால் நின்ற ஆனந்தர் என்னும் அணுக்கத் தொண்டரை நோக்கினார். குறிப்பையறிந்த ஆனந்தர், தமது சீவர ஆடையில் மறைத்து வைத்திருந்த திருவோட்டை எடுத்துப் பகவர் கையில் கொடுத்தார். பகவர் திருவோட்டை வாங்கிப் பூரணையிடம் நீட்ட, பூரணை அதில் அடையை இட்டாள். அந்தத் திருவோடு பகவருக்கு ஒரு அரசன் அளித்தது. அரசன் அளித்த திருவோட்டிலே பரம ஏழையளித்த அடையைப் பகவர் ஏற்றுக் கொண்டார். பிச்சை ஏற்ற பகவர். தமது வழக்கப்படி, நன்றியறிதல் கூறுமுகத்தால் அம்மையாருக்குச்  சில அறவுரைகளை வழங்கினார். அவற்றைக் கேட்ட அம்மையார் அவரை வணங்கினார்.

    அப்போது பூரணைக்கு, "செல்வர்களும், சீமான்களும் தமது வீடுகளுக்கு அழைத்து அவர்கள் கொடுக்கும் நல்ல உணவுகளைச் சாப்பிடும் பகவர், இந்த அற்ப அரிசி அடையைச் சாப்பிடுவாரா!" என்ற ஐயம் உண்டாயிற்று.

    பகவன் புத்தர் ஆனந்தரிடம், மரத்தினடியில் உட்கார வேண்டும் என்று கூறினார். ஆனந்தர், ஒரு சீவர ஆடையை மடித்து மரத்தின் நிழலில் தரையில் விரித்தார். பகவர் அதில் அமர்ந்து அடையை  எடுத்து உண்ணத் தொடங்கினார். இதற்குள் ஆனந்தர் போய் ஆற்றிலிருந்து நீர் கொண்டுவந்து கொடுக்க அதைக் குடித்து விட்டுப் பகவர் எழுந்து நகரத்திற்கு வராமலே தமது ஆராமத்திற்குத் திரும்பிப் போய்விட்டார்.

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பூரணைக்கு மனத்திலே வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின. தான் அளித்த அற்ப உணவாகிய வறட்டு அடையை அவர் சாப்பிட்டது அம்மையாருக்குப் பெரிய வியப்பு. புத்தருக்கு உணவளிக்க வேண்டுமென்ற  தன் எண்ணம் நிறைவேறியது அவருக்குப் பெருமகிழ்ச்சி.

    பகவர் விருப்பு வெறுப்பு அற்ற உயர்நிலையையடைந்தவர். அவருக்கு அரசர் அளிக்கும் சுவைமிக்க பெருவிருந்துகளும் ஏழைகள் அளிக்கும் எளிய உணவுகளும் ஒரே தன்மையன.


III  இறைச்சி உணவு


    எண்பது வயது நிறைந்த முதிர்ந்த வயதிலே பகவன் புத்தர் பிக்ஷு சங்கத்துடன் பாவாபுரிக்குச் சென்றார். சென்று அந்நகரத்தை அடுத்ததோர் மாந்தோப்பில் தங்கினார். அந்த மாந்தோப்பிற்கு உரியவன் அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பவன். பகவன் புத்தர் தன்னுடைய மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதைக் கேள்விப்பட்ட சுந்தன் பகவரிடம் வந்து வணங்கி வரவேற்றான். அடுத்த நாள், தன் இல்லத்தில் பிக்ஷு சங்கத்தோடு உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். பகவர் அதற்கு உடன்பட்டார்.

    அடுத்த நாள் உணவுகொள்ளும் வேளைக்குப் பகவர் தமது பிக்ஷு   சங்கத்துடன் சுந்தன் இல்லம் சென்றார். சுந்தன் அவர்களை வரவேற்று எல்லோருக்கும் இருக்கை அளித்து உணவு பரிமாறினான். காட்டுப் பன்றி இறைச்சி உடல்நலத்துக்கு உகந்த உணவு என்பது அவன் என்ணம். ஆகவே, புத்தரும் பிக்ஷு  சங்கமும் உடல்நலத்தோடு இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இந்த இறைச்சியையும் சமைத்திருந்தான்.

    பகவன் புத்தர் இதனை அறிந்து கொண்டார். அதனை உட்கொண்டால் பிக்ஷுக்களுக்கும் தமக்கும் உடல்நலம் கெடும் என்பதைப் பகவர் அறிவார். ஆனால், சுந்தன் நிறைந்த உள்ளன்போடும் நல்லெண்ணத்தோடும் அளிக்க விரும்பிய உணவை விலக்கினால், அவனுக்கு மனவருத்தம் உண்டாகும் என்பதையும் பகவர் அறிவார். அவர் சுந்தனை அருகில் அழைத்து இவ்வாறு கூறினார்: "சுந்த! இறைச்சியைப் பிக்ஷுக்களுக்குப் பரிமாறாதே. எனக்கு மட்டும் பரிமாறு. மிகுதியை எடுத்துக் கொண்டுபோய்ப் பள்ளந்தோண்டி அதில் கொட்டிப் புதைத்துவிடு. பிக்ஷுக்களுக்கு வேறு உணவைப் பரிமாறு," என்று அருளிச் செய்தார். சுந்தன் அவர் கட்டளைப்படியே பிக்ஷுக்களுக்கு வேறு உணவைப் பரிமாறினான். இறைச்சியைப் புத்தருக்கு மட்டும் பரிமாறிவிட்டு மிகுந்ததைக் கொண்டுபோய்ப் பூமியில் பள்ளந்தோண்டிப் புதைத்துவிட்டு வந்தான்.

    உடல்நலத்துக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும் சுந்தனுடைய அன்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்றுக் கொள்வதற்காகப் பகவர் அவ்விறைச்சி உணவைத் தாம் மட்டும் உண்டருளினார். பகவன் புத்தர் கடைசியாக அருந்திய உணவு இதுவே.

"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்."

    என்னும் வாக்குப்படி, தமக்கு ஒவ்வாத உணவு என்று அறிந்தும் அருள் உள்ளத்தோடு உண்டருளினார். அதனால், அவருக்குப் பொறுக்கமுடியாத வயிற்றுவலியும், வேதனையும் உண்டாயின. அவர் அவற்றை வெளிக்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டார். பிறகு, நன்றி  கூறுமுகத்தான் பகவர் சுந்தனுக்கு அறவுரைகளைக் கூறிய பிறகு அவ்விடத்தை விட்டு புறப்பட்டார்.

    அவருக்கு வயிற்றிலே பொறுக்கமுடியாத வேதனையும் குடல்வலியும் அதிகப் பட்டது. மரணவேதனை போன்ற வலி ஏற்பட்டது. "ஆனந்த! குசிநகரம் போவோம்," என்று கூறி வழிநடந்தார். வேதனையையும் வலியையும் பொறுத்துக் கொண்டு வழி நடந்தார். இளைப்பும் களைப்பும் மேலிட்டது. "ஆனந்த! படுக்கையை விரி," என்றார். ஆனந்தர் சீவர ஆடையை நான்காக மடித்து வழியிலிருந்த ஒரு மரத்தின் நிழலிலே விரித்தார். சற்றுநேரம் அங்குப் படுத்தார் பகவன். பிறகு நீர்விடாய் உண்டாயிற்று. ஆனந்தர் நீர் கொண்டு வந்து கொடுக்க அதனை அருந்தினார். மறுபடியும் எழுந்து வழிநடந்தார். இடைவழியிலே சுகுந்தர என்னும் ஆறு இருந்தது. அதில் இறங்கி நீராடினார். அருகிலே இருந்த ஒரு மாஞ்சோலைக்குச் சென்றார். வயிற்றுவலியும் வேதனையும் அதிகமாகவே இருந்தது. மாமர நிழலிலே ஆனந்ததேரர் சீவர ஆடையை விரித்தார். அதன்மேல் பகவன் புத்தர் படுத்தார். தாம் பரிநிர்வாணம் அடையும் காலம் அணுகிவிட்டது என்பதை அறிந்தார். அப்போது ஆனந்தரிடம் இவ்வாறு கூறினார்.

    "ஆனந்த! சுந்தன் அளித்த உணவினாலே புத்தர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று சிலர் கூறுவார்கள். அது தவறு. 'சுந்த! நீ கொடுத்த உணவுதான் புத்தர் அருந்திய கடைசி உணவு. அவ்வுணவை உட்கொண்ட பிறகு பகவான் பரிநிர்வாணம் அடைந்தார். ஆகையினாலே, நீ புண்ணியவான். புத்தருடைய வாயினாலே இவ்வாறு கூறியதை நான் காதால் கேட்டேன்,' என்று நீ சுந்தனிடம் கூறு.

    "ஆனந்த! இரண்டு உணவுகள் ததாகதருக்குத் துணைபுரிந்தன. அவற்றில் முதலாவது, ததாகதர் போதி ஞானத்தை அடைவதற்கு முன்பு சுஜாதையளித்த பால் பாயசம். இரண்டாவது, ததாகதர் பரிநிர்வாணம் பெறுவதற்கு முன்பு சுந்தன் அளித்த இந்த விருந்து. இந்த இரண்டு விருந்துகளையும் ததாகதர் ஒன்றுபோல மதித்தார் என்று சுந்தனுக்குக் கூறு," என்று அருளினார்.


Comments