பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - நிர்வாணம்
பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு
வண. நாரத தேரர் அவர்கள்.
தமிழில்
செல்வி யசோதரா நடராசா
அத்தியாயம் 10 - நிர்வாணம்
இறப்பு, பிறப்பு என்ற செய்முறையைக் கொண்ட இவ்வாழ்வுச் சுழற்சி, பௌத்தர்களின் இறுதிக் குறிக்கோளான நிர்வாண தாதுவுக்கு உருமாற்றமடைந்தாலொழிய முடிவின்றி நடந்து கொண்டேயிருக்கும்.
பாளிச் சொல்லான நிப்பான, 'நி', 'பான' என்ற இரு உறுப்புக்கள் கொண்டது. 'நி' என்றால் இல்லை என்றும், 'பான' என்றால் வேட்கை என்று அர்த்தப்படும். ஆகவே, நிப்பாணம் (நிப்பான) வேட்கையினின்று விலகுதலைக்குறிக்கும். இன்னும் நேரடியாகக் கூறவேண்டுமானால், நிர்வாணம் பற்றற்ற தன்மையைக் குறிக்கும். வேட்கை, வெறுப்பு, அறியாமை முதலியவற்றின் அழிவு என்றும் அதற்கு வரைவிலக்கணம் கூறலாம். "உலகம் முழுவதும் நெருப்புச் சுவாலை பற்றிக்கொண்டது," என்றார் புத்தர். அது எந்தத் தீயினால் மூண்டது? வேட்கை, வெறுப்பினாலும், அறியாமை என்னும் நெருப்பினாலும், பிறப்பு, மூப்பு, மரணம், பிணி, அரற்றல், அவலம் என்ற தீயினாலும் மூட்டப்பட்டு எரிகிறது.
நமது உலக அறிவுக்கு எட்டாததனால், நிர்வாணத்தை ஒன்றுமில்லாத அல்லது அழிவான ஒரு நிலை என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. குருடனுக்கு வெளிச்சம் தெரியவில்லை என்பதற்காக இவ்வுலகில் வெளிச்சம் இல்லை எனக் கூறமுடியுமா? அதாவது மீன் கடலாமையுடன் விவாதித்துத் தரை என்று ஒன்றில்லை எனப் பெருமிதத்தோடு ஒரு முடிவுக்கு வந்த கதையைப் போன்றது.
பௌத்தத்தின் நிர்வாணம் வெறுமையான அல்லது அழிவான ஒரு நிலையே அன்று. ஆனால் அதை வார்த்தைகளினால் தெளிவாக விவரிக்கவும் முடியாது. "பிறவாத, மூலமற்ற, படைக்கப்படாத, உருவாகாத தம்மமே நிர்வாணம். ஆகவே அது நிலையானது (துவம்), விரும்பத்தக்கது (சுபம்), மகிழ்ச்சியானது (சுகம்).
துன்பத்தைத் தவிர, நிர்வாணத்தில் நிலையாக்கப் படுவதோ, அழிக்கப்படுவதோ இல்லை.
சில நூல்களின்படி நிர்வாணம் சோபாதிசேசம், அநுபாதிசேசம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இருவிதமான நிர்வாணத்தைக் குறிக்கவில்லை. ஒரே நிர்வாணத்துக்கு அது மரணத்திற்கு முன் அல்லது மரணத்தின் பின் அநுபவிக்கப்பட்டதா என்பதைக்கொண்டே இப்பெயர்கள் தரப்பட்டன.
நிர்வாணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படவில்லை. மேன்மையடைந்த அகங்காரமான உயிர்கள் வாழும் ஒரு சொர்க்கமுமல்ல. அது இவ்வுடம்பிலேயே தங்கியுள்ள ஒரு நிலையாகும். எல்லோருக்கும் எட்டக்கூடிய தம்மப்பேறு அது. நிர்வாணம் இப்பிறவியிலே அடையக்கூடிய, இவ்வுலகுக்கு அப்பாற்பட்ட தன்மையாகும். மரணத்தின்பின் மட்டுமே இந்நிலையை அடைய முடியுமெனப் பௌத்தம் கூறவில்லை. இதில்தான் பௌத்தத்துக்கும் மற்றைய சமயங்களுக்கும் இடையேயுள்ள முக்கிய வித்தியாசம் இருக்கிறது. இறப்புக்குப் பின் அல்லது மறுமையில் ஒன்றிய பின்னே நிலையான சொர்க்கத்தை அடையமுடியும் எனப் பிற (அன்னிய) சமயங்கள் கூறுகின்றன. இம்மையில் நிர்வாணத்தை அடைந்தால் அது சோபாதிசேச நிர்வாண-தாது எனப்படும். உடம்பு சிதைவுற்றபின், உடம்பற்ற நிலையில் ஒரு அரகத்து பரிநிர்வாணத்தை அடையும்போது அநுபாதிசேச நிர்வாண-தாது எனப்படும்.
ஸர் எட்வின் ஆர்னால்டின்படி,
"நிர்வாணம் என்பது முடிவைக் குறிக்கும் என்று யாராவது கூறினால் அவருக்கு அது பொய்யெனக்கூறு."
"நிர்வாணம் என்பது வாழ்வைக் குறிக்கும் என்று யாராவது கூறினால் அவருக்கு அது
பிழையெனக்கூறு."
மறைபொருளாராய்ச்சி ரீதியாக நிர்வாணம், துன்பத்திலிருந்து நிவாரணம் பெறுவதைக் குறிக்கும். மனோதத்துவ ரீதியாக அது ஆனவத்தின் அழிவை குறிக்கும். நெறிமுறை ரீதியாக வேட்கை, வெறுப்பு, அறியாமை என்பவற்றின் அழிவைக் குறிக்கும்.
இறப்புக்குப்பின் அரகத்து நிலைத்திருப்பாரா, இல்லையா? "பஞ்சஸ்கந்தங்களாகிய ஐந்தொகுதிகளிலிருந்து விடுபட்ட அரகத்து அளவிடமுடியாத கடலின் ஆழத்தையுடையவர். அவர் மீண்டும் பிறந்தார் எனக் கூறுவது தகுந்ததாக இராது. ஆனால் அவர் மீண்டும் பிறக்கவில்லை அல்லது பிறக்காமல் இருக்கவில்லை என்று சொல்வதும் தப்பாகும்," எனப் புத்தர் பதிலளிக்கிறார்.
மறுபிறபை நிர்ணயிக்கும் எல்லா வேட்கைகளும் களையப்பட்டபடியினால், அரகத்து திரும்பவும் பிறக்கிறார் என்று சொல்லமுடியாது. அழிவுறுவதற்கு ஒன்றும் இல்லாத படியால், அவர் அழிவுற்றார் என்று சொல்லவும் முடியாது.
ராபர்ட் ஒபன் ஹேமர் என்ற விஞ்ஞானி, "மின்னணு அதே மாதிரியாக இருக்குமா எனக் கேட்டால் இல்லையென்றே கூறவேண்டும். காலத்தோடு மின்னணுவின் நிலையும் மாறுமா எனக் கேட்டால் அதற்கும் இல்லையென்றே கூறவேண்டும். மின்னணு தரித்து இருக்குமா எனக் கேட்டால் இல்லையென்றே கூறவேண்டும். மின்னணு அசைந்து கொண்டிருக்கிறதா எனக் கேட்டால் அதற்கும் இல்லையென்றே கூறவேண்டும்," என்று எழுதியுள்ளார்.
மனிதனின் மரணத்திற்குப்பின் வாழ்வு பற்றிக் கேட்கப்பட்டபோது இப்படிப்பட்ட பதில்களையே புத்தர் கொடுத்தார். * ஆனால் இப்பதில்கள் 17ம், 18ம் நூற்றாண்டின் விஞ்ஞான முறைக்குப் பழக்கப்பட்டவையாக இருக்கவில்லை.
* இந்த இடத்தில் ஆசிரியர் ஒரு அரகத்தின் மரணத்தின் பின் இருக்கும் நிலையையே கருதுகிறார்.
* * * * *