பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - திரிபிடகம்

கௌதம புத்தர்

மயிலை சீனி. வேங்கடசாமி

பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு - இரண்டாம் பதிப்பு 1969

Lord Buddha's Life History - Mylai Seeni Vengatasamy 2nd Edition 1969

இணைப்பு 1

திரிபிடகம்

பௌத்தமத வேதங்களுக்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலி மொழியில் திபிடகம் என்று கூறுவர். அவற்றிற்கு விநயபிடகம், அபிதம்ம பிடகம், சூத்திர பிடகம் என்று பெயர். அவை பாலி மொழியிலே எழுதப்பட்டுள்ளன.

புத்தர் பெருமான் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்தபோதிலும் அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹீதைகளாகத் தொகுத்துப் பாராயணம் செய்து வந்தார்கள். அவற்றிற்கு விநய சம்ஹீதை, தர்ம சம்ஹீதை என்று பெயர். சம்ஹீதை என்றால் தொகுப்பு என்பது பொருள்.

பகவன் புத்தர் பரி நிர்வாண மோக்ஷம் அடைந்த சில தினங்களுக்குப் பிறகு, மகதநாட்டின் தலைநகரமான இராசகிருக நகரத்துக்கு அருகில் ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே கார்காலத்தைக் கழிக்கும்பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (பௌத்த துறவிகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பௌத்தர்களின் முதல் மாநாடு ஆகும். புத்தரின் முக்கிய சீடராகிய மகாகாசிபர் இந்த மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம்மகாநாட்டிலே, புத்தர் பெருமான் அருளிச்செய்த விநய போதனைகளை உபாலி என்னும் தேரர் எடுத்து ஓதினார். இதற்கு விநயபிடகம் என்று பெயரிட்டனர். மற்றொரு தேரராகிய ஆனந்தர், புத்தர் அருளிச்செய்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்கு தம்ம (அபிதம்ம) பிடகம் என்று பெயரிட்டனர். இவ்வாறு முதல் பௌத்த சங்கத்திலே, புத்தருடைய போதனைகள் இரண்டு பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன. (தம்ம - தர்ம)

பிற்காலத்திலே, அபிதம்ம பிடகத்திலிருந்து சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து அதற்குச் சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள். புத்தருடைய போதனைகள் இவ்வாறு மூன்று பிரிவாகத் தொகுக்கப்பட்டபடியினாலே இவற்றிற்குத் திரிபிடகம் என்று பெயர் உண்டாயிற்று.

புத்தர் திருவாக்குகள் திரிபிடகமாகத் தொகுக்கப்பட்ட பிறகும் அவை எழுதப்படாமல் எழுதாமறையாகவே இருந்தன. அவற்றைப் புத்தருடைய சீட பரம்பரையினர் வாய்மொழியாகவே ஓதிப் போற்றி வந்தனர். அவர்கள் வெவ்வேறு பிரிவாகப் பிரிந்து, பிடகங்களின் வெவ்வேறு பகுதிகளைக் குரு சிஷ்ய பரம்பரையாக ஓதி வந்தார்கள்.

விநயபிடகத்தை ஓதிய தேரர்கள் விநயதரர் என்றும், சூத்திரபிடகத்தை ஓதிவந்தவர் சூத்ரதந்திகர் என்றும், அபிதம்மபிடகத்தை ஓதிவந்தவர் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப்பட்டனர் . இப்பெரும் பிரிவுகளில் உட்பிரிவுகளும் உண்டு. அவர்களுக்கு அந்தந்தப் பிரிவுகளின் பெயர் வழங்கப்பட்டன. உதாரணம், தீக பாணகர், மஜ்ஜிம பாணகர், சம்யுத்த பாணகர், அங்குத்தர பாணகர், ஜாதக பாணகர், தம்மபதப் பாணகர் முதலியன.

பிற்காலத்திலே பௌத்த மதத்திலே சில பிரிவுகள் ஏற்பட்டன. இப்பிரிவுகளைப் பழைய பிரிவினர், புதிய பிரிவினர் என்று இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். பழைய பிரிவுக்குத் தேரவாத பௌத்தம் என்பது பெயர் (இதனை ஹீனயான பௌத்தம் என்று தவறாகப் பெயர் கூறப்படுகிறது). புதிய பிரிவுக்கு மகாயான பௌத்தம் என்பது பெயர்.

இலங்கைத் தீவிலே பழைய தேரவாத பௌத்த மதம் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. காலப்போக்கிலே இலங்கையிலேயும் புதிய பௌத்தக் கொள்கைகள் பரவத்தொடங்கின. அப்போது, பழைய தேரவாத மதத்தில் புதிய கொள்கைகள் புகாதபடிசெய்ய, திரிபிடங்களை எழுத்தில் எழுதிவைக்கத் தொடங்கினார்கள். இலங்கைத் தீவை கி.மு. முதல் நூற்றாண்டிலே (கி.மு. 88 முதல் 76 வரையில்) அரசாண்ட வட்டகாமினி என்னும் அரசன் காலத்தில், மலைய நாட்டிலே மாத்தளை என்னும் ஊரில் உள்ள அலு (ஆலோக) விகாரை என்னும் பௌத்தப் பள்ளியிலே, முன்பு வாய்மொழியாக ஓதப்பட்டு வந்த திரிபிடகம், நூல் வடிவமாக ஏட்டில் எழுதப்பட்டது.

திரிபிடக நூல்கள் பாலிமொழியில் எழுதப்பட்டுள்ளன. தேரவாத பௌத்த நூல்கள், உரைநூல்கள் உட்பட யாவும் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன (மகாயான பௌத்த நூல்கள் வடமொழியிலே எழுதப்பட்டுள்ளன). பிடக நூல்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:

பிடக நூலின் பெயர் உரைநூலின் பெயரும், உரையாசிரியர் பெயரும்

I.விநய பிடகம்

1. விநயபிடகம் ஆசாரிய புத்தகோஷர், சமந்தபாஸாதிக என்னும் உரையை எழுதினார்.

2. பாதிமோக்கம் ஆசாரிய புத்தகோஷர், கங்கா விதரணீ என்னும் உரையை எழுதினார்.

II. சூத்திர பிடகம்

1. தீக நிகாய ஆசாரிய புத்தகோஷர், ஸூமங்கள விலாஸினீ என்னும் உரையை எழுதினார்.

2. மஜ்ஜிம நிகாய ஆசாரிய புத்தகோஷர், பபஞ்சஸூடனீ என்னும் உரையை எழுதினார்.

3. சம்யுத்த நிகாய ஆசாரிய புத்தகோஷர், ஸாரத்த பகாஸினீ என்னும் உரையை எழுதினார்.

4. அங்குத்தர நிகாய ஆசாரிய புத்தகோஷர், மனோரதபூரணீ என்னும் உரையை எழுதினார்.

5. குட்டக நிகாய

5-1.குட்டக பாதம் ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்.

5-2. தம்ம பதம் ஆசாரிய புத்தகோஷர், தம்மபதாட்டகதா என்னும் உரையை எழுதினார்.

5-3. உதானம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-4. இதிவுத்தகம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-5. ஸத்தநி பாதம் ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்.

5-6. விமானவத்து ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-7. பேதவத்து ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-8. தேரகாதை ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-9. தேரிகாதை ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

5-10. ஜாதகம் ஆசாரிய புத்தகோஷர், ஜாதகாத்தகதா என்னும் உரையை எழுதினார்.

5-11. (மகா) நித்தேசம் உபசேனர், ஸத்தம பஜ்ஜோதிகா என்னும் உரையை எழுதினார்.

5-12. படிசம்ஹித மக்கம் மகாநாமர், ஸத்தம பகாஸினீ என்னும் உரையை எழுதினார்.

5-13. அபதானம் விஸூத்தஜன விலாஸினீ என்னும் உரை நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை.

5-14. புத்த வம்சம் ஆசாரிய புத்ததத் தேரர் மதுராத்த விலாஸினீ என்னும் உரையை எழுதினார். (இவர் சோழ நாட்டுத் தமிழர்)

5-15. சரியா பிடகம் ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ என்னும் உரையை எழுதினார்.

III. அபிதம்ம பிடகம்

1. தம்மஸங்கினீ ஆசாரிய புத்தகோஷர், அத்தஸாலினீ என்னும் உரையை எழுதினார்.

2. விபங்கம் ஆசாரிய புத்தகோஷர், ஸம்மோஹ வினோதனீ என்னும் உரையை எழுதினார்.

3. கதாவத்து ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.

4. புக்கல பஞ்ஞத்தி ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.

5. தாதுகதை ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.

6. யமகம் ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.

7. பட்டானம் ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்.

இவையன்றித் தேரவாத பௌத்தத்தில் வேறு சில நூல்கள் பாலிமொழியில் உள்ளன. விரிவஞ்சி அவற்றின் பெயரைக் கூறாது விடுகின்றோம். மகாயான பௌத்த மத நூல்களும் பல உள்ளன. அவைகளையும் இங்கு கூறாது விடுகின்றோம்.

* * * * *