இரண்டாவது உயர் வாய்மை - துக்க உற்பத்தி

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

III ஆம் அத்தியாயம்

இரண்டாவது உயர் வாய்மை

சமுதய - துக்க உற்பத்தி

The Second Noble Truth : Samudaya : 'The Arising of Dukka'

இரண்டாவது உயர் வாய்மை துக்க உற்பத்தி. அதாவது துக்கம் எவ்வாறு உண்டாகிறது (துக்க சமுதய அரிய சச்ச) என்பது பற்றியது. மூலக்கிரந்தங்களிலே பல இடங்களில் காணப்படும் மிகச் சனரஞ்சகமானதும் பிரசித்தமானதுமான வரைவிலக்கணம் பின்வருமாறு.

இந்த 'விடாய்' (வேட்கை, தன்ஹா) தான் பிறவியை, புனர்ப்பவத்தை (பொனோ பவிதா) உண்டாக்குகிறது. இது இடையறாத விருப்போடு சேர்ந்தது. (நந்திராகசக கதா) இப்போது இங்கேயும் பின்னர் அங்கேயும் புதுப்புது இன்பங்களைக் காண்பது. (தத்ரதத்ராபிநந்தநீ) உதாரணமாக (1) புலன்வரும் இன்பவேட்கை (காமதன்ஹா) (2) உயிரோடிருக்க வேண்டும். மேலும் மேலும் பிறக்கவேண்டும் (பவதன்ஹா) (3) உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்னும் வேட்கை (விபவதன்ஹா).

இந்த விடாய், ஆசை, விருப்பம், வேட்கை தான் பல வடிவங்களில் தோன்றிப் பல வகையான துன்பங்களுக்கும் ஏதுவாயிருக்கிறது - பிறவி நீடிப்பதற்கு இதுவே காரணம். இதனை முதற் காரணமாகக் கொள்ளக் கூடாது. பௌத்தத்தில் எல்லாம் சார்புடையனவாய் பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கி இருப்பதால் முதல் காரணமென்று ஒன்று சாத்தியமில்லை. துக்கத்துக்குக் காரணமான இந்த வேட்கையும் (தன்ஹா) வேதனையென வேறொன்றிலிருந்து உண்டாகிறது. இந்தத் தோற்றம் சமுதயம் எனப்படும் (சமுதய) வேதனை பரிசத்தால் (பஸ்ஸ) உண்டாகிறது. இவ்வாறு இக்காரணகாரியத் தொடர் செல்கிறது. இதற்கு 'படிச்ச சமுப்பாதம்' என்று பெயர். இது பின்னர் விளக்கப்படும். [1]

எனவே துக்க உற்பத்திக்கு வேட்கை முதற் காரணமுமன்று. ஒரேயொரு காரணமுமன்று. ஆனால் அதுவே எளிதில் அறியக்கூடிய அண்மையிலுள்ள காரணம்: அதுவே 'பிரதானமான பொருள்'. எங்கும் வியாபகமான பொருள். அதனால் மூலப்பாளிக் கிரந்தங்களில் துக்க சமுதயத்துக்கு வரைவிலக்கணம் கூறும்போது கிலேசங்கள், களங்கங்கள் என (கிலேசா, சாசவாதம்மா) என்ற வேறு மாசுகளும் வேட்கையோடு சேர்த்துக் கூறப்படுகின்றன. ஆனால் வேட்கைக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. இங்கே இவற்றை ஆராய முடியாவிட்டாலும் வேட்கைக்கு இருப்பிடமாயுள்ளது அவித்தையினால் பிறந்த 'தான் ஆன்மா' என்ற போலிக் கோட்பாடாகும்.

இங்கே 'வேட்கை' என்பது புலன் வருமின்பங்கள், செல்வம், அதிகாரம் என்பவற்றிலுள்ள பற்றை மாத்திரமன்றி கருத்துக்கள், இலட்சியங்கள், அபிப்பிராயங்கள், கோட்பாடுகள், கருதுகோள்கள், நம்பிக்கைகள் (தம்ம தன்ஹா) என்பனவற்றிலுள்ள பற்றையும் குறிக்கும். புத்தருடைய ஆராய்ச்சியின் படி உலகிலுள்ள எல்லாத் தொல்லைகளுக்கும் பிணக்குகளுக்கும் காரணம் இத் தன்னலம் கொண்ட வேட்கையே. குடும்பத்தில் தோன்றும் தனிப்பட்டவர் சண்டைகளிலிருந்து தேசங்களிடையே உண்டாகும் பெரிய யுத்தங்களுக்குக் கூட மூல காரணம் இத் தன்னல வேட்கையே. இந்த நோக்கத்தைக் கொண்டு ஆராயும் போது சகல பொருளாதார அரசியல் பிரச்சினைகளுக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணம் இந்தத் தன்னல வேட்கையே என்பது தெளிவாகும். சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயன்று கொண்டு யுத்தத்தைப் பற்றியும் சமாதானத்தைப் பற்றியும் பேசும் பெரிய அரசியல் மேதைகள் பொருளாதாரத்தையும் அரசியலையும் பற்றி மாத்திரமே பேசுவார்கள். பிரச்சினையின் அடிப்படைத் தன்மையை ஆராயாமல் மேலெழுந்தவாரியாக ஆராய்வார்கள். "உலகம் குறைபாடுடையது; வேணவாக்கொள்ளுகிறது. 'வேட்கைக்கு' அடிமையாகிவிட்டது" (தன்ஹாதாசோ) என்று பகவான் ரட்டபாலருக்குக் கூறினார்.

உலகிலுள்ள தீமைகளுக்கெல்லாம் காரணம் தன்னலங்கொண்ட ஆசையே. இதை யாரும் ஒப்புக்கொள்வர். இதைப் புரிந்து கொள்வது கஷ்டமன்று. ஆனால் இந்த வேட்கை எவ்வாறு மறுபிறப்பை, புனர் உற்பத்தியை (போனோபவிகா [2]) உண்டாக்குகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இரண்டாவது உயர் வாய்மையின் ஆழ்ந்த தத்துவார்த்தமான கருத்தை, முதல் உயர்வாய்மையின் தத்துவார்த்தத்துடன் பொருத்தமான கருத்தை ஒட்டி ஆராய வேண்டியிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் நாம் கன்மக் கோட்பாட்டைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிர்கள் நிலை பெறுவதற்கும் தொடர்ந்து நிலவுவதற்கும் காரணமாய் நான்கு ஊட்டங்கள் (ஆகார) பேசப்படுகின்றன. (1) சாதாரண பதார்த்த உணவு (கபலிங்கரகார ) (2) மனம் உட்பட்ட ஆறு புலன்களும் வெளியுலகோடு கொண்டுள்ள தொடர்பு (பஸ்ஸாகார (3) விஞ்ஞானம் (விஞ்ஞானாகார) (4) சங்கற்பத்தினால் (விருப்பத் துணிவினால்) ஆனது (மனோ சஞ்சேதனாஹார).

இவை நான்கினுள் கடைசியாகக் கூறப்பட்ட சங்கற்பம் (மனோசஞ்சேதனாஹார) என்பது உயிர் வாழ வேண்டும், பவம் வேண்டும், மறுபடியும் பவம் வேண்டும், தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்க வேண்டும், விருத்தியடைந்து பெருக வேண்டும் [3] என்று துணிவுறுதி கொள்ளூதல். இதுவே பவத்துக்கும், தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற எண்ணத்துக்கும் மூலவேர். நன்மை தீமை யென்ற வினைகளில் ஈடுபட்டு முன்னேறும் முயற்சி இதுவே. (குசலாகுசல கம்ம. நன்மை தீமையென்னும் குசல அகுசல கன்மங்கள்) இதுவே சேதனா என்னும் சங்கற்பம். சங்கற்பமே கன்மம் என பகவான் வரைவிலக்கணம் கூறினாரென்று முன்னர் குறிப்பிட்டோம். இங்கே குறிப்பிட்ட மனோ சஞ்சேதனாகாரத்தைப் பற்றிப் பகவான்பின்வருமாறு கூறுகிறார். மனோசஞ்சேதனாஹாரத்தைப் புரிந்து கொள்வோர் வேட்கையின் மூன்று தன்மைகளை அறிவார் [4]. எனவே வேட்கை சங்கற்பம், மனோசஞ்சேதனாஹார, கன்மம் என்பனவெல்லாம் ஒரே பொருளுடையன. இவை ஆசையை, பவசங்கற்பம், இருக்க வேண்டும் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும், மேலும் மேலும் விருத்தியடைய வேண்டும் என்பதையே கருதும். துக்கோற்பத்திக்கு இவையே காரணம். இது சங்காரக்கந்தத்தில், அதாவது ஓர் உயிரின் அங்கங்களான பஞ்சக்கந்தங்களில் ஒன்று.

புத்தருடைய போதனையில் மிக முக்கியமான அம்சத்தை இங்கே காணுகிறோம். துக்கத்தின் தோற்றத்துக்குக் காரணம் துக்கத்தினுள்ளே தான் அடங்கியிருக்கிறது. அதற்கு வெளியே இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதலை துக்கத்தின் அழிவும், துக்க நிவாரணமும் துக்கத்தின் அகத்திலே தான் அடங்கியிருக்கிறதென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பாளி மூலக்கிரந்தங்களிலே அடிக்கடி காணப்படும் 'தோற்றத் தன்மையுடையவையெல்லாம் அழிவுத் தன்மையைக் கொண்டுள்ளன' என்ற பிரசித்தி பெற்ற வாய்பாட்டின் ('யம்கிஞ்சி சமுதயதம்மம் சப்பம் தம் நிரோத தம்மம்') அர்த்தம் இதுதான். ஓர் உயிரோ பொருளோ, அமைப்போ தோற்றத் தன்மையைத் தன்னுள் கொண்டிருக்குமானால் அதன் அழிவுத்தன்மையும்முடிவும் அதில் அடங்கியுள்ளது. எனவே துக்கமென்ற பஞ்சக்கந்தம் தோன்றும் தன்மையைத் தன்னகத்துக் கொண்டிருப்பது போலவே அழிவுத்தன்மையையும் கொண்டிருக்கிறது. துக்க நிரோதம் என்ற மூன்றாவது உயர் வாய்மையை ஆராயும் போது இதனை மேலும் விளக்குவாம்.

கம்மம் என்ற பாளிச் சொல் வடமொழியில் கர்ம என வழங்கும் இதன் வினை அடி 'செய்' என்ற பொருளைத் தரும். 'கிறு' கம்மம் என்றால் கன்மம், வினை அல்லது செயல். ஆனால் பௌத்த கன்மக் கோட்பாட்டில் கன்மம் என்றால் எல்லா வினையையும் குறிக்காது விரும்பித் துணியும் சங்கற்ப பூர்வமான செயலையே குறிக்கும். கன்மம் என்பதற்குப் பலர் தவறாகக் கருதுவதுபோல வினைப்பயன் எனப் பொருள் கொள்ளக் கூடாது. பௌத்த பரிபாஷையில் கர்மம் என்ற சொல் கர்ம பலனைக் குறிப்பதில்லை. வினைப்பயன் கர்ம பலன் என்றும் கர்ம விபாகம் என்றும் வழங்கும். [4a]

சங்கற்பம் சார்புவகையில் நல்ல சங்கற்பமாகவோ தீய சங்கற்பமாகவோ இருக்கலாம். ஒரு விருப்பம் சார்புவகையில் நல்லதாகவோ தீயதாகவோ இருக்கலாம். நல்வினை (குசலம்) நல்ல பயனைக் கொடுக்கும். தீவினை (அகுசலம்) தீயபயனைக் கொடுக்கும். வேட்கைகள், சங்கற்பம், கர்மம் என்பன நல்லதாயிருந்தாலென்ன, தீயதாயிருந்தாலென்ன பயனளவில் ஒரு சக்தியையே உடையதாயிருக்கும். அதாவது நல்ல திசையிலோ தீய திசையிலோ செல்லும் சக்தியை உடையதாயிருக்கும். அது நல்வினையானாலென்ன தீவினையானாலென்ன சார்பியலானதாகவேயிருக்கும். அதற்குத் தனி நிலையில்லை. அது சம்சார வட்டத்தில் சேர்ந்ததே. அருகத நிலையிலுள்ளவர் வினைபுரிந்தாலும் அவருடைய கர்மம் சஞ்சிதமாவதில்லை. ஏனெனில் அருகதநிலையிலுள்ளவர் நான் செய்கிறேன் என்ற போலிக்கருத்தைத் துறந்தவராய், வேட்கை ஒழிந்தவராய் இருக்கிறார். தான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், விருத்தி அடைந்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையில்லாதவராயிருக்கிறார். ஏனைய களங்கங்களும், மாசுகளும் (கிலேசா, சாசவா தம்மா) இல்லாதவராயிருக்கிறார். அவருக்கு மேலும் பிறப்பில்லை.

நற்செயலுக்கு வெகுமானம், பாவத்துக்குத் தண்டனை என்ற கோட்பாடன்று கன்மக்கோட்பாடு; அது ஒருவனுடைய நடத்தையை மதிப்பிட்டுத்தீர்ப்பு வழங்கும் முறை. இதற்கு ஒரு கடவுள் வேண்டும். அவரே சட்டங்களைச் செய்து தண்டனையும் வெகுமதியும் வழங்குபவராயிருக்க வேண்டும். சரி எது பிழை எது என்பதைத் தீர்மானிப்பவர் அந்த உயர் கடவுளாயிருக்க வேண்டும். இது ஒழுக்க நீதி முறை. இத்தகைய நீதி எப்பொழுதும் ஐயப்பாட்டுக்கு இடந்தருவது, ஆபத்து நிறைந்தது. நீதியின் பெயரால் மனித இனம் நன்மையை விடத் தீமையையே அதிகம் பெறுகிறது. கன்மக் கோட்பாடு காரணகாரியத் தொடர்புடையது. செயலெல்லாம் எதிர்ச்செயலுடையன என்ற முறையிலமைந்தது. இது இயற்கை விதி. இதற்கும் நீதி என்ற கருத்துக்கும் சம்பந்தமில்லை. வெகுமானம், தண்டனை என்ற விவாகாரத்துக்கு இடமில்லை. துணிந்து சங்கற்பித்துச் செய்யும் செயல் எல்லாம் பிரதிபலனைக் கொண்டன. நல்ல செயல் நல்ல பயனையும் தீய செயல் தீய பயனையும் தந்தால் அங்கே நீதிக்கு எங்கே இடம்? இங்கே வெகுமானத்துக்கும் தண்டனைக்கும் இடமில்லை. எவரும் உங்கள் செயலை ஆராய்ந்து மதிப்பிடுவதில்லை. எந்தச் சக்தியும் தீர்ப்பு வழங்குவதில்லை. செயல் பிரதிச் செயலை உண்டாக்குவது இயற்கையின் நியதி. இதைப் புரிவது சிரமமன்று. ஆனால் ஒரு பிறப்பில் செய்த சேதனா பூர்வமான கன்மம் மறுபிறப்பில் பலனை அளிக்கிறதென்ற கருத்துத் தான் புரிந்து கொள்ளக் கஷ்டமாயிருக்கும். மரணத்தின் பின்னர் அந்தக் கன்ம பலன் பயனைக் கொடுக்கலாம். எனவே மரணம் என்றால் என்ன? பௌத்தம் அதை எவ்வாறு விளக்குகிறதென்பதைத் தெளிய வேண்டும். உயிர் என்பது சடமயமான சக்திகளும், மனோமயமான சக்திகளும் சேர்ந்த கூட்டுறவேயன்றி வேறல்ல என்பதை ஏற்கனவே கண்டோம். மரணமென்பது சடமயமான உடல் தொழிற்படாதிருத்தலே. உடல் தொழிற்படாது நின்று விட்டால் இந்தச் சக்திகளெல்லாம் நின்று விடுமா? 'இல்லை' என்கிறது பௌத்தம். சங்கற்பம் (சேதனா - சங்காரா) ஆசை, வாழவேண்டுமென்ற வேட்கை, தொடர்ந்து இவ்வாழ்வு நிலைக்க வேண்டும், அதி பல்கிப் பெருக வேண்டுமென்ற வேணவா; சீவராசிகளையும், பவசமூகங்களையும், அசைக்கும் மகத்தான சக்தி உலகம் முழுவதையுமே செயற்படச் செய்யும் வேகம். இதுவே மிகப் பெரிய ஆற்றல். உலகில் உள்ள பெரிய சக்தி, உடம்பு, அழிந்தாலும் இந்தப் பேராற்றல் ஓய்வதில்லை. மரணம் இந்த ஆற்றலை நிறுத்த மாட்டாது. இது வேறொரு வடிவில் தோற்றமளித்துப் புதிய பவத்தை, புதிய பிறப்பை உண்டாக்குகிறது என்பதே பௌத்தக் கொள்கை.

அப்போது மற்றொரு கேள்வி உண்டாகிறது. ஆன்மா என்ற மாறுபாடில்லாத அழிவற்ற நித்திய வஸ்து இல்லாவிட்டால் பிறப்பெடுப்பது எது என்ற பிரச்சினை. மரணத்தின் பின் மறுபிறப்பெடுப்பது எது? மரணத்தின் பின் இவ்வுயிர் என்ன ஆகிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கு முன்னர் இது எத்தகையது? எப்படி நிலவுகிறது என்பதை ஆராய்வோம். சீவன் என்பது பஞ்சக்கந்தத்தின் சேர்க்கை, அதாவது சட ஆற்றல்களும் மனச் சக்திகளும் சேர்ந்த கூட்டுறவு. இவை சதா மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு கணம் ஒரே மாதிரி மாறாமலிருபதில்லை. ஒவ்வொரு கணமும் தோன்றி மறைகின்றன. 'பஞ்சக்கந்தங்கள் தோன்றி சிதைந்து மடியும் போது, ஓ பிக்குவே, ஒவ்வொரு கணமும் நீ தோன்றிச் சிதைந்து மடிகிறாய் [5].' இவ்வாறு இப்பொழுதே இந்த வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் தோன்றி மரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது வாழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வாழ்விலே நித்தியமான மாற்றமில்லாத ஓர் ஆன்மா என்ற பதார்த்தமின்றியே நீடித்து நிற்கிறோமென்பதைப் புரியக்கூடியதாயிருக்கும்போது, அந்த ஆற்றல்கள், இந்த உடல் செயலற்ற பின் ஆன்மா என்ற ஆதாரமில்லாமலே நிலைத்திருக்குமென்பதை நாம் ஏன் புரிந்து கொள்ள முடியாது?

இந்தச் சடமான உடல் செயலற்ற பின்னர், அதிலுள்ள ஆற்றல்கள் வேறு வடிவத்தை எடுக்கின்றன. இதுவே மறுபிறப்பு எனப்படும். ஒரு குழந்தையிடம் உள்ள உடற்பலமும் மன விவேக ஆற்றல்களும் மிருதுவாகவும் பலமற்றனவாகவுமிருக்கின்றன. ஆனால் பூரண மனிதனாய் வளருதற்குரிய ஆற்றல் அவர்களிடத்து மலராது இருக்கின்றன. சீவன் என்றுசொல்லும் பொருளுக்கு சாதகமாயுள்ள சட ஆற்றலும் மன ஆற்றலும் புதிய உருவத்தை எடுத்துப் படிப்படியாய் வளர்ந்து பூரண சக்தி பெறும் தன்மையை தன்னகத்துக் கொண்டிருக்கின்றது.

நித்தியமான மாற்றமில்லாத ஒரு பொருள் இல்லாதபடியால் கணந்தோறும் மாறும் பொருளுமில்லை [5a]. எனவே ஒரு பிறவியிலிருந்து மறுபிறவிக்கு மாறும் (செல்லும்) நித்தியமான மாற்றமில்லாத பொருள் இல்லையென்பது சொல்லாமலே போதரும். இந்தத் தொடர் முறிவின்றித் தொடர்கின்றது. ஆனால் கணமும் பங்கமடைகிறது. இத்தொடர் உண்மையில் ஒரு சலனமே. இஃது இரவு முழுவதும் எரியும் விளக்குச்சுடர் போன்றது. அச்சுடர் ஒரே சுடருமன்று, வேறானதுமன்று. குழந்தையொன்று அறுபது வயதுள்ள வயோதிகனாக வளருகிறது. அறுபது வயதுள்ள கிழவன் அறுபது வருடத்துக்கு முந்தியிருந்த குழந்தையுமல்லன். வேறொரு ஆளுமல்லன். அவ்வாறே இங்கே மரித்த பின் வேறொரிடத்தில் புதிய பிறப்பெடுப்பவன், மரித்த அதே மனிதனுமல்லன். அவனில் வேறானவனுமல்லன் (நச சோ நச அஞ்ஞோ). ஒரே தொடரின் தொடர்ச்சியே அவன் பிறப்பு, இறப்பு, பிறப்பு என்பவற்றிடையேயுள்ள வித்தியாசம் நினைவு மாத்திரையானது. இவ்வாழ்வினுள்ள கடைசி நினைவுக் கணப்பொழுது அடுத்த பிறவியின் முதல் நினைவுக்காணப் பொழுதைப் பாதிக்கிறது. இது அதே தொடரின் தொடர்ச்சியே. இந்த வாழ்விலும் ஒரு நினைவுக் கணப்பொழுது அடுத்து நினைவுக் கணப்பொழுதைப் பாதிக்கிறது. எனவே பௌத்தக் கோட்பாட்டின்படி மரணத்தின் பின் உண்டாகும் வாழ்வு பெரிய மர்மமன்று. அதனால் மரணம் பௌத்தர்க்கு [6] ஒரு பிரச்சினையன்று. புலன்வருமின்பவேட்கையும், இருக்க வேண்டுமென்ற வெட்கையும் இருக்கும் வரை சம்சாரச் சக்கரம் இருந்துகொண்டேயிருக்கும். பரமார்த்தத்தையும் சத்திய தரிசனத்தையும் நிர்வாணத்தையும் புலனாகின்ற அறிவு என்னும் கருவியால் சம்சாரத்தொடர்ச்சி வேகம், அஃதாவது இந்த வேட்கை, அறுக்கப்பட்ட பின்னரே பிறப்பிறப்பு ஒழியும்.

* * *

[1] ஆறாம் அத்தியாயத்தைப் பார்க்கவும்

[2] போனோ பவிகா - புனர் பவம், மறுபடி பிறத்தல் (மொழி பெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு)

[3] இந்த மனோசேதனாகாரத்தை நவீன உளவியலில் பேசப்படும் லிபிடோவுடன் ஒப்பிடலாம் (லிபிடோ - பாலுணர்ச்ச்சியிண் உந்துதல், உயிர் வாழ் சக்தி)

[4] வேட்கையில் மூன்றாவன: காமதன்ஹா, பவதன்ஹா, விபவதன்ஹா

[4a] கர்மம் வேறு அதன் பலன் வேறு. கர்ம பலனையே கர்மம் என்று சொல்லக்கூடாது (2013 இணையதளப் பதிப்பின் போது சேர்தத குறிப்பு)

[5] இவ்வாக்கியம் பரமத்த ஜோதிர பாடியத்தில் புத்தர் வாக்கியமாகவே மேற்கோள் காட்டப்படுகிறது. இதுவரை நாம் இதன் மூலத்தைத் தேடிக் காணமுடியவில்லை.

[5a] ஒரு கணத்திலிருந்து அடுத்த கணத்திற்குச் செல்லும் மாறாத பொருளுமில்லை. (2013 இணையதளப் பதிப்பின் போது சேர்தத குறிப்பு)

[6] "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு" (திருக்குறள் 339) (மொழி பெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு)