வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
புத்தபகவானின் இறுதிவார்த்தைகள்
பின்னர் பகவான் ஆனந்ததேரருக்குக் கூறினார், 'உங்களில் சிலர் எங்கள் ஆசிரியர் இப்போது எங்களோடு இல்லை. மறைந்த அவர் கூறிய பிரவசனம் இருக்கிறது' என்று நினைக்கலாம். ஆனால் ஆனந்த, இந்த மாதிரி நினைக்கக்கூடாது. நான் மறைந்த பின்னர் என்னால் உபதேசிக்கப்பட்ட தம்மமும் விதிக்கப்பட்ட விநயமும் ஆனந்த உங்கள் ஆசிரியராய் இருக்கக் கடவது.
'ஆனந்த, இப்போது பிக்குகள் ஒருவரை ஒருவர் நண்பரே (ஆவுஸோ) என்று அழைக்கின்றனர். நான் போனபின்னர் அவ்வாறு செய்யக்கூடாது. முதிய பிக்குவானவர், ஆனந்த, இளைய பிக்குவை அவருடைய பெயரையும், கோத்திரப் பெயரை அல்லது நண்பன் என்ற சொல்லைச் சேர்த்து அழைக்கலாம். இளைய பிக்கு முதிய பிக்குவை 'சுவாமி' (பந்தே) என்றோ 'ஆயுஸ்மான்' (ஆயஸ்மா) என்றோ அழைக்கலாம்.
'சங்கத்துக்கு விருப்பமானால் ஆனந்த, நான் மறைந்தபின்னர் விநயத்திலே சிறியவையான முக்கியமல்லாத விதிகளை நீக்கி விடலாம். நான் மறைந்த பின்னர் ஆனந்த, சன்ன என்ற பிக்குவுக்கு பிரம்மதண்டம் (அதாவது கடுமையான தண்டம்) விதிக்க வேண்டும்.
'சுவாமீ, என்னவிதமான கடுந்தண்டனையை விதிப்போம்?'.
'ஆனந்த, பிக்கு என்னதான் விரும்பியதைச் சொல்லட்டும். மற்றப் பிக்குகள் அவரோடு பேசவுங்கூடாது, அவருக்கு ஆலோசனை கூறவுங்கூடாது. அவருக்குப் பரிந்து பேசவுங்கூடாது.'
பின்னர் பகவான் பிக்குகளை விழித்து 'பிக்குகளே, புத்தரைப் பற்றியோ தர்மத்தை பற்றியோ சங்கத்தைப் பற்றியோ மார்க்கத்தைப் பற்றியோ, விநயத்தைப்பற்றியோ ஒரு பிக்குவிடமாவது ஐயமோ, மயக்கமோ இருக்கக் கூடும். பிக்குகளே, இப்பொழுதே கேளுங்கள். 'எங்கள் ஆசிரியருக்கு முன்னால் இருந்தோம், பகவான் முன்னிலையில் நேருக்கு நேர் இருந்தபோதும் அவரைக் கேளாமல் விட்டோம்' என்று பின்னர் உங்களை நொந்து கொள்ளக் கூடாது', என்று சொன்னார்.
இவ்வாறு பகவான் சொன்னபோது பிக்குகள் ஒன்றும் பேசாது இருந்தனர்.
இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் பகவான் இவ்வாறு கேட்டார்.
மூன்றாம் முறையும் பிக்குகள் மௌனமாகவேயிருந்தனர்.
பின்னர் பகவான் அவர்களை விழித்து 'உங்கள் ஆசிரியர் என்ற மரியாதையினால் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள் போலும். அப்படியானால் பிக்குகளே நண்பர் நண்பரோடு பேசலாம் பிக்குகளே' என்றார் [4]. அப்பொழுதும் அப்பிக்குகள் ஒன்றும் பேசாதிருந்தனர்.
பின்னர் ஆயுஸ்மான் ஆனந்தர் பகவானிடம் கூறினார், 'சுவாமி, இது அற்புதம், இஃது ஆச்சரியம், சுவாமீ, இங்கே கூடியுள்ள பிக்குகளில் ஒருவருக்காவது, புத்தம், தர்மம், சங்கம், மார்க்கம், விநயம் என்பன பற்றி எவ்வித சந்தேகமோ விபரீதமோ கிடையாது என்பது என் நம்பிக்கை'.
'நீங்கள் நம்பிக்கையின் பேரில் பேசுகிறீர்கள், ஆனந்த. ஆனால் இந்த விஷயத்தில் ததாகதர் (புத்தர்) அறிவார், நிச்சயமாக அறிந்துள்ளார், இங்குள்ள பிக்குகள் சங்கத்திலே புத்தம், தர்மம், சங்கம், மார்க்கம், விநயம் பற்றிச் சந்தேக விபரீதம் உள்ள ஒரு பிக்குவைக் கூடக் காணமுடியாது. இந்த ஐந்நூறு பிக்குகளுள் குறைந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கூட சோதாபன்ன நிலையை அடைந்துள்ளனர். அவர் கீழ் நிலையில் விழக்கூடியவரல்லர். மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு அருகதையுடையவர், அது நிச்சயம்.'
இவ்வாறு கூறிய பின் பகவான் பிக்குகளை விழித்து 'இப்போது பிக்குகளே, உங்களுக்குக் கூறுகிறேன். காரணத்தில் தோன்றியவை எல்லாம் அழியும். உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற விழிப்புடன் இருங்கள்.'
ததாகதரின் கடைசிவார்த்தைகள் இவை.
(தீகநிகாய 16 வது சூத்திரமான, மஹா பரி நிப்பான சுத்தம்)
* * *
[1] 'அதீத சத்துகம்பாவசனம்' என்பதற்கு ரீஸ் டேவிட்ஸ், 'ஆசிரியருடைய வசனங்கள் முடிந்துவிட்டன' என்று மொழிபெயர்த்தார். ஆனால் இம்மொழிபெயர்ப்பு மூலபாடத்துக்கு ஏற்றதன்று.
[2] பிரம்மதண்டம் என்பது தெய்வங்கள் விதிக்கக்கூடிய மிகக்கடுமையான தண்டனை என்பதே சொல்லோடு பொருளான அர்த்தம்
[3] சித்தார்த்தர் புத்தர் நிலை அடைவதற்கு முன்னர் சன்ன அவருடைய நெருங்கிய நண்பராகவும் தேரோட்டியாகவுமிருந்தார். பின்னர் சங்கத்தில் சேர்ந்து பிக்குவானார். தான் புத்தருடைய நெருங்கிய நண்பன் என்று அகங்காரங் கொண்டார். தான் நினைத்தபடி நடக்க முற்பட்டார். நற் குழுப் பண்பு அற்றவரானார். அடிக்கடி தவறான வழியில் நடக்க முற்பட்டார். புத்தர் பரிநிர்வாணமடைந்த பின்னர் ஆனந்ததேரர் அவரிடம் சென்று அவர் சமூகத்திலிருந்து முற்றாகப் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அவருடைய அகங்காரம் மறைந்தது. அவர் விநயமுடையவரானார். கண்கள் திறந்து விட்டன. பின்னர் நல்வழியிற் சென்று அருகதநிலையடைந்தார். அவர் மீது விதிக்கப்பட்ட தண்டனை தானாகவே செயலற்றுப் போயிற்று.
[4] மரியாதையின் காரணமாக புத்த பகவானிடம் கேள்விகளைக் கேட்கமுடியா நிலையிருப்பின் தமது நண்பரிடம் கேட்கலாம். நண்பர் அக்கேள்வியை புத்தபகவானிடம் கேட்பார்.