பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - பௌத்தம் ஒரு சமயமா?

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 3: பௌத்தம் ஒரு சமயமா?

Is it a Religion?

மதம் என்ற சொல்லின் பொதுவான கருத்துக்கு இயைந்ததாகப் பௌத்தமதம் இல்லை. ஏனெனில் "அது எந்தவிதப் பரம்பொருளுக்குங் கட்டுப்பட்டு நம்பிக்கை வைத்தும் வழிபாடு செய்துகொண்டுமிருக்க வில்லை."

அதனைச் சார்ந்தவரிடமிருந்து பௌத்தம் கண்மூடித்தனமான நம்பிக்கையை எதிர்பார்க்கவில்லை. இதில் மனிதனின் நம்பிக்கை அகற்றப்பட்டு அறிவினை அடிப்படையாகக் கொண்ட பூரண நம்பிக்கையினால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. இது பாளிமொழியில் 'சத்தா' எனப்படும். புத்த தேவரிடம் அவரைப் பின்பற்றும் ஒருவன் கொண்டுள்ள பூரண நம்பிக்கையை, ஒரு பிரசித்த வைத்தியனிடம் ஒரு

நோயாளி வைத்திருக்கும் நம்பிக்கையை அல்லது ஆசானிடம் மாணாக்கன் வைத்துள்ள நம்பிக்கையைப் போன்றதாகும். பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவன் புத்த தேவரிடம் அடைக்கலம் புகுவதற்குக் காரணம் அவரே விடுதலைக்கு வழியைக் கண்டு பிடித்தவராவார்.

ஒரு பௌத்தன் தான் புத்ததேவரின் பரிசுத்த தன்மையால் காக்கப்படலாம் என்று

நம்பி அவரிடம் அடைக்கலம் புகுவதில்லை. அப்படிப்பட்ட ஓர் உத்தரவாதத்தை

புத்தபிரான் எவருக்கும் தரவில்லை. பிறருடைய களங்கத்தை அகற்ற உதவுவது புத்த தேவரின் சத்திக்கு அப்பாற்பட்டது. ஒருவனைப் பரிசுத்தப்படுத்தவோ, களங்கப்படுத்தவோ இன்னொருவனால் முடியாது.

புத்ததேவர் எமக்கு ஓர் ஆசானாகப் போதிப்பார். ஆனால் எமது பரிசுத்தத்துக்கு நாமே நேரிடைப் பொறுப்பாளிகளாகின்றோம்.

பௌத்தன் ஒருவன் புத்த பகவானிடம் அடைக்கலம் புகுந்தாலும் அவன்

அவரிடத்தில் தன்னை முற்றும் சமர்ப்பித்துச் சரணாகதியடைவதில்லை. புத்தரைப் பின்பற்றுவோனாக மாறிய பின்பும், தனது சிந்தனையின் சுதந்திரத்தைத் தியாகஞ் செய்வதில்லை. தன் சுய விருப்பத்தை உபயோகித்து ஒருவன் வித்தராகும் அளவுக்குத் தனது அறிவை விருத்தி செய்ய முடியும்.

பௌத்தத்தின் ஆரம்ப நிலை சம்மாதிட்டி எனப்படும். பகுத்தறிதல் அல்லது

விளங்கிக் கொள்ளல் என்னும் நிலை ஆகும்.

உண்மையை நாடுபவர்களுக்கு புத்ததேவர் கூறுகின்றார்: "கேள்விப்பட்டு எதையும் ஏற்றுக்கொள்ளாதே (அதாவது நீண்டகாலமாக இதைக் கேட்டுக் கொண்டிருந்தோன் என்ற நினைப்பில்). வெறும் பாரம்பரியத்துக்காக எதையும் ஏற்றுக்கொள்ளாதே (அதாவது பரம்பரை பரம்பரையாக இவை வந்தவை என்ற நினைப்பில்). வெறும் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டு எதையும் ஏற்றுக்கொள்ளாதே (அதாவது எவ்வித விசாரணையுமின்றி வேதவாக்கு என்று எதையும் ஏற்றுக்கொள்ளாதே). வெறும் அநுமானத்தினால் எதையும் ஏற்றுக்கொள்ளாதே. வெறுமனே காரணங்களை எண்ணிப் பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளாதே. வெறும் தீர்மானத்தால் எதையும் ஏற்றுக்கொள்ளாதே. உன்னுடைய முன் கற்பனை செய்யப்பட்ட எண்ணங்களோடு ஒத்துப்போகின்றது

என்று எதையும் ஏற்றுக்கொள்ளாதே. ஏற்றுக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது என்று எதையும் ஏற்றுக்கொள்ளாதே (அதாவது, இதைச் செல்பவர் நல்லவர், அதனால் அவர் கூற்றை நம்பலாம் என்ற நினைப்பில்). துறவிகள் எம்மால் மதிக்கப்படுகின்றவர்கள், ஆனபடியால் அவர்கள் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாதே."

"ஆனால் இக்காரியங்கள் நெறியற்றவை, இவை குற்றத்துக்குரியவை, இவை

பெரியோர்களினால் கண்டிக்கப் பட்டவை, இவற்றை மேற்கொண்டால் அல்லது செய்தால் இவை அழிவையும் துயரத்தையும் விளைவிப்பன என்று நீங்களே அறியும் பொழுது, இக்காரியங்களை விலக்கிவிட வேண்டும்."

"இக்காரியங்கள் ஒழுக்கமானவை, குற்றமற்றவை, பெரியோர்களினால் போற்றப்பட்டவை, இவற்றைச் செய்தால் அல்லது மேற்கொண்டால் இவை

நற்கதியையும் மகிழ்ச்சியையும் விளைவிப்பன என்று நீங்களே அறியும் போது நீங்கள் அவற்றுக்கேற்ப நடந்து கொள்ளல் வேண்டும்."

புத்தத் தேவரின் இத் தெய்வீக உணர்ச்சி நிறைந்த வார்த்தைகள் இன்னும்

அவற்றின் பழைய ஆற்றலையும் பசுமையையும் கொண்டுள்ளன.

கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லாவிடினும், உருவச் சிலைகளின் வழிபாடு

பௌத்தத்தில் இல்லையா, என்று ஒருவர் தர்க்கம் புரியலாம்.

இலௌகீக அல்லது ஆத்மீக வரங்களை எதிர்பார்த்து உருவச் சிலைகளைப்

பௌத்தர் வழிபடுவதில்லை. ஆனால் அவை எதற்கு அறிகுறியாக இருக்கின்றனவோ அதற்கு மரியாதையும் வணக்கமும் செலுத்துகின்றனர்.

நிறைய மலர்களையும் சுகந்த தூபத்தையும் ஒரு உருவச் சிலைக்கு முன்னால்

சமர்ப்பிப்பதன் மூலம் ஒரு பௌத்தன் புத்த தேவரின் முன்னிலையில் இருப்பதாக உணர்ந்து கொள்ளுகிறான். அதனால் புத்தபகவானின் உயரிய மாட்சிமை மிகுந்த பண்பிலிருந்து உணர்வூக்கம் பெற்று அவருடைய எல்லையில்லாக் கருணையையும் ஆழ்ந்து அநுபவிக்கின்றான். புத்த தேவரின் உயரிய முன் மாதிரியைப் பின்பற்றி நடக்க முற்படுகின்றான்.

அரசமரம் பூரண ஞானோதயத்தின் சின்னமாகும். வணக்கத்துக்குரிய இப்புறப்பொருள்கள் மிக அத்தியாவசிய மானவையல்ல. ஆனால் அவை ஒருவனுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தும் தியான நிலைக்கு உபகாரமாக

இருக்கும்.

ஆனால் சிந்தனாசத்தியுள்ள ஒருவன் இவற்றின் துணை இல்லாமல் தன்

சிந்தனைகளை ஒருமுகப்படுத்திப் புத்த தேவரை அகக்கண்ணால் தரிசனஞ் செய்வான்.

எமது சொந்த நலத்துக்காகவும், நன்றியுணர்வோடும் நாம் இவ்வளவு வெளி

மரியாதையைச் செலுத்துகிறோம். ஆனால் புத்த தேவர் தமது சீடரிடமிருந்து எதிர்பார்ப்பது வெளிய நுட்டானங்கலிலும் பார்க்கத் தமது போதனைகளைச் சாதனையில் பின்பற்றுவதையேயாம். "எனது போதனைகளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவனே எனக்கு மிகுந்த மதிப்பைத் தருபவனாவான். தம்மத்தைப் புரிந்து கொள்பவனாவான்," என்று புத்த தேவரே கூறியுள்ளார்.

"புத்த பெருமானின் உருவச்சிலையைப் போலக் கண்ணையும் கருத்தையுங்

கவரக்கூடிய வேறு எதனையும் இவ்வுலகில் நான் கண்டதில்லை. அது நாம் கண்ணாற்காணும் உலகினில், ஆன்மீகத்தின் மிகப்பரிபூரண நிலையை விளக்கும் திருவுருவாகும்," என்று கேவ்சர்லிங் பெருமான் கூறியுள்ளார்.

மேலும் மன்றாடி அல்லது பரிந்து வேண்டிக்கொள்ளும் பிராத்தனைகள்

பௌத்தத்தில் இல்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயமாகும். நாம் எவ்வளவுதான் புத்த பகவானை வழிபட்டாலும், நாம் காக்கப்படமாட்டோம். தம்மை வழிபடுவோருக்குப் புத்தபிரான் வரமளிப்பதில்லை. பௌத்தம் மன்றாடிப் பரிந்து வேண்டும் வழிபாட்டுக்குப் பதிலாகத் தன்னடக்கம், சுத்தி, ஞானம் ஆகியவற்றைத் தரும் தியான மார்க்கத்தைக் கொண்டது. தியானம் என்பது ஒரு கற்பனையோ அல்லது மனத்தை வெறிதாக்கும் முறையோ அன்று. அது ஒரு சுறுசுறுப்பான

முயற்சியாம். அது இதயத்துக்கும் மனதுக்கும் வலிமைதரும் அமிர்த சஞ்சீவியாகும். புத்த தேவர் பிரார்த்தனைகளை மேற்கொள்வதின் பயனற்றதன்மையை மட்டுமல்லாமல் அடிமை மனப்பான்மையையும் இழித்துரைத்தார். மீட்கப்படுவதற்காக ஒரு பௌத்தன் பிரார்த்தனை செய்யக்கூடாது. ஆனால் அவன் தன்னையே நம்பித்தான் தன் சுதந்தரத்தைப் பெறவேண்டும்.

"பிரார்த்தனைகள் கடவுளுடன் சுயநலமான பண்டமாற்று அல்லது அந்தரங்க

தொடர்புகளைப் போன்றவையாகும். அவை உலகப்பேராசைமிக்க நோக்கங்களைத் தேடவும், நான் என்ற ஆணவமுனைப்பை மிகுவிக்கவும் செய்கின்றன. அதற்குப் பதிலாகத் தியானம் சுயமாற்றமாகும்." என்று திரு இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மற்றச் சமயங்களில் இருப்பது போலப், பௌத்த சமயத்திலும் ஒரு

பயப்பாட்டுக்கும் கீழ்ப்படிவுக்கும் உரிய ஒரு சர்வவல்லமையுள்ள இறைவன் இல்லை. புத்த தேவர் எங்கும் வியாபித்த முற்றுமுணர்ந்த ஒரு அண்டசராசரப்பொருளில் நம்பிக்கை வைக்கவில்லை. பௌத்தத்தில் தேவரோ தேவதூதர்களோ இல்லை. ஆகவே ஒருவரின் விதியை நிர்ணயித்துத் தண்டனைகளையும் பரிசில்களையும் வழங்கும் ஒரு உயர்ந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திக்கு ஒரு பௌத்தன் அடிமையல்லன். புத்தசமயத்தவர் தெய்வீக தரிசனங்களில் நம்பிக்கை வைக்காததால், உண்மை தங்களது தனியுரிமை யென்று கோரவில்லை. மற்றசமயங்களையும் குறைகூறுவதில்லை. ஆனால் பௌத்தம் மனிதனுள் மறைந்திருக்கும் அளவிலா உள்ளாற்றலை ஏற்றுக்கொள்கின்றது. திரும்பவும் அது, தெய்வத்தின் அல்லது மதகுருக்களின் உதவி எதுவுமின்றித் தன்சுயமுயற்சியின் மூலம் துக்கத்தினின்றும் நிவாரணம் பெற முடியுமெனப் போதிக்கின்றது.

பௌத்தத்தில் நம்பிக்கையும் வழிபாடும் பிரார்த்தனையும் இல்லாததினாலும்,

"மனிதன் தங்கள் வெளியரங்கமான செயல்களினால், தமது விதியை நிர்ணயிக்கும், கீழ்ப்படிவு, சேவை, மகிமை, இவற்றிற்குரிய ஒரு தெய்வம் அல்லது தெய்வங்கள் இருக்கின்றன," என்று நிருபிக்கும் தன்மை இல்லாமையாலும், இது ஒரு சமயம் அன்று.

சமயம் என்பது, "வாழ்க்கையை மேலெழுந்த வாரியாக நோக்குவதிலும் அதனை

ஊடுருவி அவதானிப்பதாகவும், வாழ்க்கையைச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பதிலும் அதன் ஏற்றத்தாழ்வுகளை அவதானிப்பதாகவும்,

போதனைகளின் படி வாழ்க்கையை நடத்த மக்கட்கு ஒரு வழிகாட்டியாகவும், சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கையைத் துணிவோடும் மனவுறுதியோடும் நடாத்த அச்சமயிகளுக்கு நம்பிக்கை தருவதாகவும், மரணத்தை அமைதியோடு ஏற்றுக்கொள்ளும் மனவுறுதியை உதவுவதாகவும், வாழ்க்கைத் துன்பங்களை நீக்கக்கூடிய வழிகளைக் கொண்டுள்ளதாகவும்," இருக்குமானால் அதுவே உண்மையான சமயமாகும் என்று உறுதியாகக் கூறலாம்.

* * * * *