அசையாத நீரோட்டம்
அசையாத, நீரோட்டம்
அஜான் சா
Still, Flowing Water
A Dhamma Talk by Ajahn Chah
(வாட் தாம் சாயெங் ஃபேட் (Wat Tham Saeng Phet) என்ற விகாரையில் 1981 ஆம் ஆண்டு மழைக்காலத்தின் போது வழங்கப்பட்ட போதனை.)
சரி, அனைவரும் கவனமாகக் கேளுங்கள். மனத்தை இவர் மீதோ அவர் மீதோ செலுத்த வேண்டாம். இந்தக் கணத்தில் நீங்கள் ஒரு மலையிலோ, காட்டிலோ தனியாக அமர்ந்திருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். தனியாக உட்கார்ந்திருக்கையில் உங்களிடம் என்ன இருக்கிறது? உடலும் மனமும் மட்டுமே. வேறு ஏதும் இல்லை. இவை இரண்டு மட்டுமே இருக்கின்றன. இங்கு ஒரு குவியலாக உட்கார்ந்திருப்பது எல்லாம் "உடல்". புலன் உணர்வுகளை அறிந்திருக்கும், நிகழ் காலத்தில் சிந்தித்துக் கொண்டிருப்பது தான் "மனம்". இவை இரண்டையும் நாம ரூபம் என்றும் சொல்வதுண்டு. நாம என்றால் ரூபம் இல்லாததை அதாவது உருவம் இல்லாததைக் குறிக்கும். எல்லா எண்ணங்களும் உணர்ச்சிகளும், அதாவது உணர்வுகள், மனக் குறிப்புகள், எண்ணங்கள் (எண்ணங்களால் உண்டாகும் கட்டுக்கதைகள்), விஞ்ஞானம் (புலன்களின் காரணமாக உள்ள அறி நிலை) இவை எல்லாம் நாம என்பதில் அடங்கும். இவற்றிற்கு உருவம் இல்லை. கண்கள் உருவங்களைப் பார்க்கும் போது, அந்த உருவங்கள் தான் ரூபம். உருவங்களை அறிந்திருப்பது நாமம். ஒன்று சேர்த்து இவற்றை நாம ரூபம் என்கிறோம், அல்லது எளிமையாகச் சொல்வதென்றால் உடலும், மனமும் என்கிறோம்.
இந்தக் கணத்தில் இங்கு உட்கார்ந்திருப்பது உடலும், மனமும் மட்டுமே என்பதை அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் இவை இரண்டிலிருந்தே வருகின்றன. உங்களுக்கு அமைதி வேண்டுமானால் இவற்றை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். ஆனால் இச்சமயத்தில் மனத்திற்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை. அழுக்குப் படிந்துள்ளது. தூய்மையானதாக இல்லை. அது மூலாதாரமான மனம் இல்லை. அதை அவ்வப்போது அமைதியாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.
சிலர் மனத்தை ஒருமைப்படுத்த வேண்டுமானால் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையென்னவென்றால் நிற்பது, உட்காருவது, நடப்பது, படுப்பது எல்லாம் பயிற்சியினுள் அடங்கும். மன ஒருமைப்பாட்டினை எந்நேரமும் பயிலலாம் (எந்த உடல் நிலையிலும் பயிலலாம்). மன ஒருமைப்பாடு என்றால் "உறுதியான நோக்கம்." மன ஒருமைப்பாட்டினைப் பயில மனத்தைச் சிறை வைக்க வேண்டியதில்லை. சிலர் நினைப்பது, "நான் சற்று அமைதியைத் தேடிச் செல்ல வேண்டும், எந்தப் பிரச்சனையும் மனத்தில் எழாமல் இருக்க வேண்டும், முழு அமைதியோடு உட்கார வேண்டும்," ஆனால் அப்படிப் பட்டவர் பிணமாகத்தான் இருக்க முடியும். உயிருள்ளவர் அல்ல. மன ஒருமைப்பாட்டினைப் பயில்வதென்றால், அறிவு வளர இடம் கொடுப்பது, உன்னிப்பு வளர இடம் கொடுப்பது என்று பொருள்.
மன ஒருமைப்பாடு ஒரு உறுதியான நோக்கம். ஒரு பொருளின் மீது நம் கவனத்தை மையப் படுத்துவது. ஒரு பொருள் என்றால் எந்த மாதிரி பொருள்? சரியான பொருள். பொதுவாக நாம் முழு அமைதியில் இருக்க விரும்புகிறோம். மக்கள் சொல்வார்கள், "நான் மன ஒருமைப்பாட்டோடு உட்கார முயற்சிக்கிறேன். ஆனால் மனம் ஒர் இடத்தில் நிலைத்திருப்ப தில்லை. முதலில் ஒரு இடத்திற்கு ஓடுகிறது, பின் வேறு இடத்திற்கு ஓடிவிடுகிறது. அதை ஒரு இடத்தில் நிற்க வைப்பதற்குத் தெரியவில்லை." இது நிற்க வைக்கக் கூடிய செய்தி இல்லை. அதை ஓடாமல் நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் மனம் ஓடுவதால் தான் தன்னையே அறிந்த நிலையில் இருக்கிறது. மக்கள் குறையாக, "மனம் ஓடிவிடுகிறது, பின் அதை இழுத்துக் கொண்டு வருவேன்; பின் அது நடந்து சென்று விடுகிறது. மறுபடியும் அதை இழுத்துக் கொண்டு வருவேன் ..." ஆக அவர்கள் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போது இங்கேயும் அங்கேயும் மனதை இழுத்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றனர்.
அவர்கள் மனம் இங்கும் அங்கும் ஓடுவதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் ஓடுவதெல்லாம் நமது மனப் பதிவுகள் தான். உதாரணமாக இந்த மன்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: "ஆகா! எவ்வளவு பெரிய மன்றம்!" என்கின்றீர்கள். ஆனால் மன்றம் பெரிது இல்லை. அதைப் பற்றிய நாம் நினைப்பதுதான் அப்படி. உண்மையில் இந்த மன்றம் அதன் அளவில் தான் உள்ளது. பெரிதும் இல்லை, சிறிதும் இல்லை. ஆனால் அதைப் பற்றிய நமது எண்ணங்களோடு நாம் ஓடுகிறோம்.
அமைதி காணத் தியானிப்பது: நீங்கள் "அமைதி" என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாவிட்டால் அதைக் கண்டு பிடிக்க முடியாது. உதாரணமாக, விகாரைக்கு வரும் போது நீங்கள் ஒரு பேனாவைக் கொண்டு வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பேனா. விலை உயர்ந்தது. ஐந்நூறு அல்லது ஆயிரம் பாஹ்ட் [தாய்லாந்து நாட்டு நாணயம்] மதிப்புடையது. உங்கள் முன் சட்டைப்பையில் வைத்திருந்தீர்கள். ஆனால் ஏதோ காரணத்திற்காக அதை எடுத்து வேறு இடத்தில், பின் பாக்கெட்டில் வைத்துக் கொள்கின்றீர்கள். பின் உங்கள் சட்டைப்பையில் துழாவிப் பார்க்கும் போது பேனாவைக் காணவில்லை! பதட்டம் அடைகின்றீர்கள். பதட்டத்திற்குக் காரணம் நிகழ்வின் உண்மையை உணராததால் தான். மனம் துயரம் கொள்கிறது. நின்றாலும், நடந்தாலும், வந்தாலும் போனாலும் தொலைந்த பேனாவைப் பற்றிக் கவலைப் படாமல் இருக்க முடியவில்லை. தவறாகப் புரிந்து கொண்டதால் துக்கம் அனுபவிக்கின்றீர்கள்: 'அடடா! ஒரு சில நாட்களே வைத்திருந்தேன், இப்போது தொலைந்து விட்டது."
ஆனால் பின்னர் நினைவுக்கு வருகிறது, "ஓ, குளிக்கச் சென்ற போது, பேணாவைப் பின் பாக்கெட்டில் வைத்தேனே." இன்னமும் பேனாவைப் பார்க்கவில்லையென்றாலும், இது நினைவுக்கு வந்தவுடன் உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. தெரிகிறதா? உங்களுக்கு இப்போது மகிழ்ச்சி; பேனாவைப் பற்றிய கவலை நின்று விட்டது. இப்போது உறுதியாகத் தெரிந்து கொண்டீர்கள். நடந்து கொண்டே, கையைப் பின் பாக்கெட் மீது வைத்துப் பேனா இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்கின்றீர்கள். உங்கள் மனம் உங்களிடம் பொய் சொல்லியது. பேனா தொலைய வில்லை. தொலைந்து விட்டதாக உங்களிடம் பொய் சொல்லியது உங்கள் மனம் தான். உங்களுக்குத் தெரியாததால் துக்கம் அனுபவித்தீர்கள். இப்போது பேனாவைப் பார்த்தவுடன் உங்கள் சந்தேகங்கள் முடிந்து கவலை அடங்கி விட்டது. இது போன்ற அமைதியும், சாந்தமும் பிரச்சனையின் காரணத்தைத் தெரிந்து கொள்வதால் வருகிறது: 'சமுதயா', துக்கத்தின் காரணம். பின் பாக்கெட்டில் பேனா இருப்பது உறுதியானவுடன், அங்கு இருப்பது நிரோதா, துக்கத்தின் முடிவு.
ஆகவே அமைதியைக் காணப் பிரதிபலிக்க வேண்டும். பொதுவாக மக்கள் அமைதி என்று கூறுவது வெறும் மனம் அமைதியாவதைத்தான். மனக்கிலேசங்களை அமைதிப் படுத்துவதை அல்ல. நீங்கள் அந்த மனக்கிலேசங்கள் மீது உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள், புல்லின் மீது உள்ள பாறையைப் போல. பாறை அங்கு இருப்பதால் அந்த இடத்தில் புல் வளராது. மூன்று நான்கு நாட்களுக்குப் பின் அந்தப் பாறையை நகர்த்திய பின் அந்த இடத்தில் புல் மீண்டும் வளரும். புல் உண்மையில் சாகவில்லை. அது அழுத்தப் பட்டிருந்தது. இது போலத்தான் மன ஒருமைப்பாட்டோடு தியானிப்பதும்: மனம் அமைதி அடைகிறது, ஆனால் மனக் கிலேசங்கள் அமைதியாக வில்லை. அப்படியென்றால் மன ஒருமைப்பாடும் உறுதியானதில்லை. உண்மையான அமைதியைக் காணப் பிரதிபலிக்க வேண்டும். மன ஒருமைப்பாடு ஒருவகையான அமைதி, புல்லின் மீது பாறையை வைத்தார்ப் போல. எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் பாறையை எடுத்தவுடன் அங்கு புல் மீண்டும் வளர்கிறது. இது ஒரு தற்காலிகமான அமைதி தான். உன்னிப்பிலிருந்து (பிரதிபலித்து) வரும் அமைதியோ அந்தப் பாறையை எப்போதுமே எடுக்காதது போல. இருக்கும் இடத்திலேயே வைத்திருப்பது போல. புல் வளர வாய்ப்பே இல்லை. அதுதான் உண்மையான அமைதி. மனக்கிலேசங்களைச் சாந்தப் படுத்துவது, உறுதியானது. அதுவே உன்னிப்பு.
நாம் உன்னிப்பையும், மன ஒருமைப்பாட்டையும் வேறுபடுத்திப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் அவை இரண்டும் ஒன்றே. உன்னிப்பு மன ஒருமைப்பாட்டின் அசைவு தான். ஒரே மனத்திலிருந்து தோன்றி வெவ்வேறு திசைகளில் செல்கின்றன. வெவ்வேறு இயல்புகளோடு செல்கின்றன. இதோ இங்கிருக்கும் மாம்பழத்தைப் போல. ஒரு சிறு மாங்காய் வளர்ச்சியடைந்து பெரிதாகிப் பழுத்து விடுகிறது. எல்லாம் ஒரே மாங்காய் தான். வேறுபட்டவை இல்லை. சிறிதாக இருக்கும் போது இதோ இந்த மாங்காயைப் போல. பெரிதானவுடனும் இதோ இதே மாங்காய் தான். பழுத்தபின்பும் இதே மாங்காய் தான். அதன் இயல்புகள் மட்டுமே மாறுகின்றன. அறத்தைப் பயிலும் போது, ஒரு நிலைமையை மன ஒருமைப்பாடு என்கிறோம், பின் வரும் நிலைமையை உன்னிப்பு என்கிறோம், ஆனால் உண்மையில் பண்பு, ஒருமைப்பாடு மற்றும் உன்னிப்பு எல்லாம் ஒன்றே, இந்த மாங்காயைப் போல.
உண்மையில் அறத்தைப் பயிலும் போது எது நடந்தாலும் மனத்திலிருந்து தொடங்க வேண்டும். மனம் என்றால் என்னவென்று தெரியுமா? மனம் எப்படி இருக்கும்? அது என்ன? எங்கு இருக்கிறது? யாருக்கும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் நாம் இங்கு செல்ல அல்லது அங்கு செல்ல விரும்புகிறோம். இதுவோ, அதுவோ வேண்டும் என்று நினைக்கிறோம். மனம் இன்பம் அல்லது துன்பத்தை அனுபவிக்கிறது. ஆனால் மனத்தைப் பற்றி நம்மால் எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. மனம் என்றால் என்ன? "இது" தான் மனம் என்று எதுவும் இல்லை. மனம் நாமாக உருவாக்கியது. நல்லதோ கேட்டதோ, பதிவுகளை ஏற்கும் ஒன்றை நாம் "உள்ளம்" என்றும் "மனம்" என்றும் குறிப்பிடுகிறோம். ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரனைப் போல. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பவர் தான் வீட்டுக்குச் சொந்தக்காரர். விருந்தினர் வீட்டுக்காரரை வரவேற்க முடியாது. வீட்டுக்காரர் வீட்டிலேயே இருக்கிறார். விருந்தினர் அவரைச் சந்திக்க வந்தால் அவர் வருபவர்களை வரவேற்க வேண்டும். யார் புலன் பதிவுகளை ஏற்கிறார்? யார் புலன் பதிவுகளை விடுகிறார்? அதைத்தான் நாம் "மனம்" என்கிறோம். ஆனால் இதை நாம் தெரிந்து கொள்வதில்லை. எனவே சுற்றிச் சுற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோம். "மனம் என்பது என்ன? உள்ளம் என்பது என்ன?" இப்படி விஷயத்தைக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். பதிவுகளை ஏற்பது எது? சில பதிவுகளை நமக்குப் பிடிக்கிறது, வேறு சிலவற்றைப் பிடிப்பதில்லை. யார் அது? பிடித்துக் கொள்ளவும், பிடிக்காமல் இருக்கவும் ஏதாவது இருக்கிறதா? ஆம் இருக்கிறது. ஆனால் அது எப்படிபட்டது என்பது நமக்குத் தெரிவதில்லை. அதைத் தான் நாம் "மனம்" என்கிறோம். தெரிகிறதா? தூரத்தில் தேடிக் கொண்டு அலைய வேண்டாம்.
நமது பயிற்சியில், மன ஒருமைப்பாடு பற்றியோ விபாஸனா (அகப்பார்வை) பற்றியோ பேச வேண்டியதில்லை; அறத்தைப் பயில்வதாக மட்டுமே சொன்னால் போதும். பயிற்சியை உங்கள் மனத்திலிருந்தே தொடங்குங்கள். மனம் என்பது என்ன? எது பெறுகிறதோ, எது புலன் பதிவுகளைத் தெரிந்திருக்கிறதோ அதுவே மனம். சில புலன் பதிவுகள் இன்பமூட்டுகின்றன; மற்றவை துன்பமூட்டுகின்றன. பதிவுகளைப் பெறுவது நம்மை மகிழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது, துக்கத்துக்கும் எடுத்துச் செல்கிறது. சரியானதற்கும், தவறானதற்கும் எடுத்துச் செல்கிறது. ஆனால் அது ஒரு பொருள் அல்ல. நாம் சம்பிரதாயப் பழக்கமாக அதை ஒரு பொருளென எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அது வெறும் நாம-தம்மமே. நல்லது ஒரு பொருளா? தீயது? இன்பதுக்கும் துன்பதுக்கும் வடிவம் இருக்கிறதா? இல்லை. அவை வட்டமான வடிவம் கொண்டவையா அல்லது சதுர வடிவம் கொண்டவையா? குட்டையா, நெட்டையா? தெரியுமா உங்களுக்கு? அவை நாம- தம்மம். அவற்றைப் பொருட்களோடு ஒப்பிட முடியாது - ஆனால் அவை இருப்பது நமக்குத் தெரியும்.
எனவே பயிற்சியைத் தொடங்க மனதை அமைதியாக்க வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கப் படுகிறது. அதைத் தெரிந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். மனம் தெரிந்த நிலையில் இருந்தால் அது அமைதியாக இருக்கும். சிலர் தெரிந்த நிலையில் இருப்பதை விரும்புவதில்லை. அவர்கள் மன நடவடிக்கைகளே இல்லாதபோது உள்ள அமைதியை விரும்புகின்றனர் - ஆகவே அவர்கள் எதையும் கற்பதில்லை. இந்தத் "தெரிந்த நிலையில் இருப்பவர்" இல்லாவிட்டால், நமது பயிற்சிக்கு அடித்தலம் இல்லாமல் ஆகிவிடும் அல்லவா?
நெட்டை இல்லாதபோது, குட்டையும் இல்லை; சரியானது இல்லாத போது தவறானதும் இல்லை. இக்காலத்தில் மக்கள் படித்துக் கொண்டே இருக்கின்றனர், தவறு எது சரியானது எது என்று தெரிந்து கொள்ளப் படிக்கின்றனர், ஆனால் அவர்கள் இவை இரண்டும் இல்லா நிலையைத் தெரிந்து கொள்வதில்லை. அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதெல்லாம் எது சரியானதென்பதையும் எது தவறானதென்பதையும் தான்: "சரியானதை மட்டுமே எடுத்துக் கொள்வேன். தவறானதை எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏன் எடுக்க வேண்டும்?" சரியானதை மட்டுமே எடுத்துக் கொண்டால், சில நேரத்தில் அது தவறானதாகி விடும். தவறின் காரணமாக உள்ள சரியானது அது. மக்கள் சரியானதையும், தவறானதையும் தேடுகின்றனர், ஆனால் இரண்டும் இல்லாததைத் தேட முயற்சிப்பதில்லை. நல்லதைப் பற்றியும் தீயதைப் பற்றியும் படிக்கின்றனர். புண்ணியத்தையும், தீயதையும் தேடுகின்றனர். ஆனால் புண்ணியமும் இல்லாமல் தீயதும் இல்லாததைப் படிக்கும் அளவு செல்வதில்லை. நெட்டையையும், குட்டையையும் பற்றிப் படிக்கின்றனர் ஆனால் நெட்டையும் அல்லாத குட்டையும் அல்லாதைப் பற்றிப் படிப்பதில்லை.
இதோ இங்கு உள்ள கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கூர்முனை ஒரு பக்கம், மழுங்கிய விளிம்பு பின் பக்கம், அதற்குக் கைப்பிடியும் உள்ளது - எல்லாப் பாகங்களும் உள்ளன. அதை எடுக்கும் போது, அதன் கூர்மைப் பகுதியை மட்டும் எடுக்க முடியுமா? மழுங்கிய பகுதியை மட்டும் எடுக்க முடியுமா? அல்லது கைப்பிடியை மட்டும்? கைப்பிடி கத்தியின் கைப்பிடி. மழுங்கிய பகுதி கத்தியின் பின் பகுதி. கூர்மைப் பகுதி கத்தியின் கூர்மைப் பகுதி. கத்தியை எடுக்கும் போது கூர்ப்பகுதியும், பின் பகுதியும், கைப்பிடியும் சேர்ந்தே எடுக்கப் படுகிறது.
அதே போல, நல்லதை எடுக்க முயற்சிக்கும் போது, கெட்டதும் சேர்ந்தே வரும். நல்லது மட்டும் வேண்டும் என விருப்பப் படுகின்றீர்கள், கெட்டது வேண்டாம் என்கின்றீர்கள். நல்லது கெட்டது இரண்டும் இல்லாதைப் பற்றித் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது ஒரு முடிவுக்கே வரமுடியாது. நல்லதை எடுக்கும் போது கெட்டதும் சேர்ந்தே வரும். அவை எப்போதும் சேர்ந்தே வரும். இன்பத்தை விரும்பினால் துன்பமும் சேர்ந்தே வரும். அவை தொடர்புடையவை. நல்லதோடு பற்றுக் கொண்டு, தீயதை நிராகரிப்பது என்பது குழந்தைகளின் அறம், குழந்தைகள் விளையாடுவதற்கான அறம். வேண்டுமானால் இதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நல்லதை மட்டும் பிடித்துக் கொண்டால் தீயதும் தொடர்ந்து வரும். பாதையின் முடிவில் குழப்பமே மிஞ்சும். எனவே இது சரியில்லை.
ஒரு எளிமையான உதாரணம் தருகிறேன். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கின்றனர். நீங்கள் அன்பை மட்டும் ஏற்றுக் கொண்டு ,வெறுப்பை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இது, இவை இரண்டையும் அறியாதவரின் எண்ணப்போக்கு. அன்பை மட்டும் ஏற்றுக் கொண்டால், வெறுப்பு கூடவே ஓடி வரும். எனவே அறத்தைப் பயில்வதற்கு உள்ளத்தில் முடிவுசெய்த பின், உன்னிப்பைப் பயன்படுத்த வேண்டும். நல்லதைப் பற்றிப் பிரதிபலியுங்கள். அது எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தீயதைப் பற்றியும் முடிந்த அளவு பிரதிபலியுங்கள். இப்போது நல்லதையும் கெட்டதையும் தெரிந்தபின், எதை எடுத்துக் கொள்வீர்கள்? நல்லதை எடுத்துக் கொண்டால் தீயதும் அதன் பின் ஓடிவருகிறது. நல்லது இல்லாமலும் தீயது இல்லாமலும் இருப்பது பற்றிக் கற்க உங்களுக்கு விருப்பமில்லை. அதைக் கற்கத்தான் மக்களை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியதாக இருக்கிறது.
"நான் இப்படி இருக்கப் போகிறேன்," "நான் அப்படி இருக்கப் போகிறேன்" என்று சொல்லும் நாம் "நான் எதுவாகவும் இருக்கப் போவதில்லை ஏனென்றால் 'நான்' என்று யாரும் இல்லை" என்று எப்போதும் சொல்வதில்லை. நமக்கு நல்லது மட்டும் வேண்டும் என்று நினைக்கிறோம். நல்லது கிடைத்தாலும், நாம் அதை அறிந்து கொள்வதில்லை. நல்லது போதை உண்டாக்கி விடுகிறது. நிகழ்ச்சிகள் மிகவும் நல்லதாகிவிட்டால், அவை கெட்டதாக ஆரம்பித்துவிடும். ஆக இப்படியும் அப்படியும் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
நமது மனத்தை அமைதியாக்குவது, புலன் பதிவுகளை எது ஏற்கின்றதோ அதனோடு அறிமுகப் படுத்திக் கொள்வதற்காகத்தான். அது எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்வதற்காகத் தான். இதனால் தான் மனத்தை, "அந்தத் தெரிந்து கொண்டதை," அறிந்து கொள்ளுமாறு நமக்குச் சொல்லப் படுகிறது. மனத்தைத் தூய்மையாக்கப் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். எந்த அளவு தூய்மையாக்குவது? உண்மயாகவே தூய்மையடைந்திருந்தால் அது நல்லதற்கும் கெட்டதற்கும் அப்பால் இருக்கும். தூய்மைக்கும் மேலான தூய்மையாக இருக்கும். முடிந்தது. அப்போதுதான் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.
மன ஒருமைப்பாட்டுடன் தியானம் செய்வதால், ஒரு தற்காலிக அமைதி தான் கிடைக்கும். அமைதியாக இருக்கும் போது, மனத்தில் பிரச்சனைகள் எழும். ஒரு பிரச்சனை எழும் போது, அதைத் தெரிந்த ஒன்று உள்ளது. அது சோதிக்கிறது; கேள்வி கேட்கிறது; பிரச்சனையைத் தொடர்கிறது; அதை விசாரிக்கிறது. மனம் வெறுமையாக இருந்தால் எதுவும் நடக்காது. சிலர் மனத்தைச் சிறையிலிடு கின்றனர். அப்படிபட்ட அமைதி தான் சரியான பயிற்சி என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையான அமைதி மனத்தின் அமைதி மட்டும் இல்லை. அது போன்ற அமைதி மட்டும் இல்லை. "எனக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் மட்டுமே வேண்டும். அழுத்தமும், துக்கமும் வேண்டாம்." அது போன்ற அமைதியோடு இருந்தால், அதாவது, ஆறுதலும் மகிழ்ச்சியும் மட்டுமே எடுத்துக்கொள்ளும் அமைதியோடு இருந்தால், சில காலத்திற்குப் பின் அது அசௌகரியமாகிவிடுகிறது. வசதியில்லாத நிலை அதன் பின் உண்டாகிறது. மனத்தில் இன்பமும் இல்லாமல் துன்பமும் இல்லாத நிலையை உருவாக்குங்கள். அங்கு தான் உண்மையான அமைதி இருக்கிறது. இந்தத் தலைப்பை மக்கள் குறைவாகவே கற்கின்றனர். குறைவாகவே அறிகின்றனர்.
மனத்தைச் சரியான வழியில் பயில்விக்க, அதைப் பிரகாசிக்க வைக்க, உன்னிப்பை வளர்க்க: உட்கார்ந்து, மனத்தை அசையாமல் வைத்திருந்து சாதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். அது புல்லின் மீது உள்ள பாறையைப் போல. மக்கள் மன ஒருமைப்பாடு மட்டுமே தியானம் என்ற தவறான கருத்துக் கொண்டுள்ளனர். தியானம் மன ஒருமைபாட்டுக்கு ஒரு பெயர். ஆனால் உண்மையில் மனம் ஒருமைப்பட்டிருந்தால், நடப்பதும் ஒருமைப்பட்டிருக்கும், உட்காருவதும் ஒருமைப்பட்டிருக்கும் - நடக்கும் போதும் ஒருமைப்பாட்டுடன் இருக்கும், உட்காரும் போதும் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். நிற்கும் போதும், படுத்திருக்கும் போதும் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அதுவே பயிற்சி.
சிலர் இவ்வாறு குறை கூறுவர், "என்னால் தியானிக்க முடியவில்லை. அது மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. எப்போது உட்கார்ந்தாலும் இதையும் அதையும் பற்றி நினைக்கின்றேன். வீட்டைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி நினைவுகள் வருகின்றன. என்னால் தியானம் செய்ய முடியாது. நான் நிறையத் தீய செயல்களைச் செய்து விட்டேன். முதலில் தீவினைப் பயன்களை அனுபவித்து விட்ட பிறகு திரும்ப வந்து தியானிக்க முயற்சிக்கிறேன்." சரி. காத்திருங்கள். தீவினையின் பலன்களை அனுபவித்து முடிக்கும் வரை காத்திருக்க முயலுங்கள்.
இப்படித்தான் நாம் நினைக்கின்றோம். ஏன் இப்படி நினைக்கின்றோம்? அதைப்பற்றித் தான் நாம் படிக்கின்றோம். நாம் தியானிக்க உட்கார்ந்தவுடன், மனம் எங்கேயோ போய்விடுகிறது. அதை அறிந்த பின் அதைத் திரும்பக் கொண்டு வருகிறோம் - மறுபடியும் போய் விடுகிறது. அப்படித்தான் நாம் பயில வேண்டும். ஆனால் நம்மில் பலரும் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கப் பார்க்கிறோம். பள்ளிக்கூடம் போகாத, பாடங்களைப் படிக்காத மாணவனை நமக்குப் பிடிக்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருப்பதையும், துக்கம் அனுபவிப்பதையும் பார்க்க விருப்பமில்லை. அது மாறுவதைக் கவனிக்க விருப்பமில்லை, ஆனால் எதைத்தான் நாம் தெரிந்து கொள்வது? இது போல மாற்றங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இதனோடு அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்: "ஓ, மனம் இது போலத்தான். ஒரு கணம் அதைப் பற்றி யோசிக்கிறது, அடுத்த கணம் இதைப் பற்றி யோசிக்கிறது, அதன் சாதாரண இயற்கை நிலை அப்படித்தான்." அது யோசிக்கும் போது தெரிந்து கொள்ளுங்கள். அதன் எண்ணங்கள் நல்லதாக இருக்கும் போதும், தீயதாக இருக்கும் போதும், சரியாக, தவறாக இருக்கும் போதும் தெரிந்து கொள்ளுங்கள். எப்படிப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மனத்தின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டால் நாம் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதும், இதையோ, அதையோ நினைத்தாலும் மனம் ஒருமைப்பாட்டோடே இருக்கிறது. அதன் நடவடிக்கையைத் தெரிந்திருந்தால், நாம் எரிச்சல் கொள்வதில்லை அல்லது கவனம் திரும்பி விடுவது இல்லை.
உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். நீங்கள் வீட்டில் ஒரு குரங்கை வளர்க்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது ஓர் இடத்தில் நிற்பதில்லை. அதற்குக் குதித்துக் கொண்டு பொருட்களைப் பிடித்துக் கொள்ள விருப்பம். அப்படித்தான் குரங்குகள் நடந்து கொள்ளும். இப்போது நீங்கள் விகாரைக்கு வந்துள்ளீர்கள். இங்கும் ஒரு குரங்கு இருக்கிறது. இந்தக் குரங்கும் ஓர் இடத்தில் இருக்காது. உங்கள் வீட்டுக் குரங்கைப் போலவே, அதுவும் குதித்துக் கொண்டும் பொருட்களை எடுத்துக் கொண்டும் இருக்கிறது. ஆனால் இது உங்களை எரிச்சல் மூட்டுவ தில்லையே? ஏன்? ஏனென்றால் உங்களுக்கு ஏற்கனவே குரங்குகள் அறிமுகமாயிருக்கின்றன. குரங்கின் இயல்பு உங்களுக்குப் பழக்கமாகி விட்டது. உங்களுக்கு ஒரு குரங்கைப் பற்றித் தெரிந்தால், எங்கு சென்றாலும், எத்தனை குரங்குகளைப் பார்த்தாலும், அவை உங்களுக்கு எரிச்சல் ஊட்டுவதில்லை, சரியா? அவரே குரங்கை அறிந்த ஒருவர்.
குரங்குகளைப் பற்றி அறிந்திருந்தால் நாம் குரங்குகளாய் ஆக மாட்டோம். குரங்குகளை அறிந்திராவிட்டால் ஒரு குரங்கைப் பார்த்தவுடன் நாமும் குரங்காய் மாறி விடுவோம், சரிதானே? இதையும் அதையும் அது பிடித்து இழுக்கும் போது உங்களுக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாகிறது. "அந்த நாசமாய் போன குரங்கு!"இது குரங்கை அறியாத ஒருவரின் கூற்று. குரங்கை அறிந்தவரோ, வீட்டில் உள்ள குரங்கும், விகாரையில் உள்ள குரங்கும் ஒன்றே என்பதை அறிகிறார். ஆகவே அவர் ஏன் எரிச்சலடைய வேண்டும்? குரங்குகளின் இயல்பைத் தெரிந்திருந்தால், அதுவே போதும். நாம் அமைதியாக இருக்கலாம். குரங்கு ஓடிக் கொண்டிருந்தால், அது ஒரு ஓடிக் கொண்டு இருக்கும் குரங்கு, அவ்வளவுதான். அதனோடு சேர்ந்து நீங்களும் ஓட வேண்டும் என்பதில்லை. நீங்களும் குரங்காவதில்லை. உங்கள் முன்னாலும், பின்னாலும் குதித்தால், அந்தக் குரங்கைக் கண்டு எரிச்சல் அடைவதில்லை - ஏனென்றால் நீங்கள் குரங்கைப் பற்றி அறிந்தவர். எனவே நீங்களும் குரங்காவதில்லை. உங்களுக்குக் குரங்குகள் அறிமுகமாகாவிட்டால், நீங்களும் குரங்காகி விடுவீர்கள். புரிகிறதா? இப்படித்தான் நிகழ்ச்சிகள் சாந்தமடைகின்றன.
நாம் புலன் பதிவுகளைத் தெரிந்திருக்க வேண்டும். புலன்களினால் தோன்றும் மனப் பதிவுகளைக் கவனிக்க வேண்டும். சில பிடித்தவையாக இருக்கும். சில அப்படி இருக்காது. அதனால் என்ன? அது அவற்றின் வேலை. அவற்றின் இயல்பு அப்படித்தான். குரங்குகளைப் போல. எல்லாக் குரங்குகளும் ஒரே குரங்கு தான். நமக்குப் புலன் பதிவுகள் தெரிந்திருக்கிறது. சில சமயம் அவை பிடித்தவையாக இருக்கின்றன. சில சமயம் பிடிக்காதவையாக இருக்கின்றன. அவற்றின் இயல்பு அப்படித்தான். அவற்றோடு அறிமுகமாகியிருக்க வேண்டும். அவற்றோடு அறிமுகமானபின் அவற்றை விட்டுவிட வேண்டும். புலன் பதிவுகள் உறுதியானவை இல்லை. அவை நிலையற்றவை, துக்கம் விளைவிப்பவை, நமதில்லை. இப்படித்தான் அவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும். கண்களும் காதும், மூக்கும், நாக்கும், உடலும் மனமும் புறத்தில் நடப்பனவற்றை ஏற்கும் போது, அவற்றைத் தெரிந்திருக்கிறோம், குரங்குகளைத் தெரிந்திருப்பதைப் போல. இந்தக் குரங்கும் வீட்டில் உள்ள குரங்கைப் போலத் தான். இதை அறிந்தால் நாம் அமைதியோடு இருக்கலாம்.
புலன்களால் உண்டாகும் மனப்பதிவுகள் உருவாகும் போது, அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றின் பின்னால் ஏன் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்? மனப்பதிவுகள் உறுதியற்றவை. ஒரு நிமிடம் ஒரு மாதிரி தோன்றும். மறு நிமிடம் வேறு போலத் தோன்றும். சில சமயம் முன் இருந்தது போலவே இருக்கும். அவை மாற்றத்தினால் தொடர்கின்றன. இங்கு உள்ள அனைவருமே மாற்றங்களின் காரணமாகத்தான் இருக்கிறோம். மூச்சு வெளியே சென்று, பின் உள்ளே வருகிறது. முச்சை உள்ளே மட்டுமே இழுத்துப் பாருங்கள்: அப்படிச் செய்ய முடியுமா? எத்தனை நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்? அல்லது வெளிமூச்சு மட்டும் விட்டு, உள் மூச்சு எடுக்காமல் இருந்து பாருங்கள். மாற்றம் இல்லாவிட்டால், உங்கள் உயிர் தொடர முடியுமா? உயிரோடு இருக்கவே முடியாது. உள் மூச்சும் தேவை, வெளி மூச்சும் தேவை. அப்போது தான் விகாரைக்கு நடந்து செல்ல முடியும். இங்கு வருகையில் உள் மூச்சை மட்டுமே இழுத்துப் பிடித்தவாறு வந்தீர்களென்றால், இந்நேரம் மாண்டிருப்பீர்கள். வந்து சேர்ந்திருக்க முடியாது. எனவே இந்த உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
புலன்களால் உண்டாகும் மனப்பதிவுகளும் இது போலத்தான். அவை இருந்தாக வேண்டும். அவை இல்லாவிட்டால் உங்களால் உன்னிப்பை வளர்க்க முடியாது. தவறேதும் இல்லாவிட்டால் சரியானதேதும் இருக்காது. முதலில் சரியானதாக இருந்தால் தான் தவறானது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அல்லது முதலில் தவறாக இருந்தபின் தான் சரியானதை அறிந்து கொள்ள முடியும். சாதாரணமாக அப்படித்தான் நடைமுறைகள் இருக்கின்றன.
மனதைப் படிக்கும் மாணவராக இருந்தால், புலன் பதிவுகள் அதிகமாக இருப்பது நல்லதே. ஆனால் புலன் பதிவுகளை உங்களுக்குப் பிடிக்காதென்றால், அவற்றோடு ஈடுபட விருப்பமில்லையென்றால் அது பள்ளிக்கூடம் போகாமல் இருக்கும் மாணவனைப் போல. அந்த மாணவனுக்குக் கற்றுக் கொள்ளவும் விருப்பமில்லை. ஆசிரியர் சொல்வதைக் கேட்கவும் விருப்பமில்லை. இந்தப் புலன் பதிவுகள் நமக்குக் கற்பிக்கின்றன. இதுபோலப் புலன் பதிவுகளைத் தெரிந்து கொண்டால், நாம் அறத்தைப் பயில்கிறோம். அவை சாந்தமாகும் போது எப்படிபட்டவை என்பதையும், அவற்றின் இயல்புகள் எப்படிப்படவை என்பதையும் தெரிந்துள்ளோம் - குரங்குகளைப் பார்ப்பது போல. வீட்டில் உள்ள குரங்கு உங்களுக்கு எரிச்சல் மூட்டுவதில்லை. இங்கு இருக்கும் குரங்கைப் பார்க்கும் போது அது உங்களை எரிச்சல் மூட்டுவது இல்லை - ஏனென்றால் உங்களுக்குக் குரங்குகள் அறிமுகமாகியிருக்கின்றன, சரிதானே? நீங்கள் ஆறுதலாக இருக்கலாம்.
அறத்தின் பயிற்சியும் இது போலத் தான். வெகு தூரத்தில் இல்லை. நம்முடனேயே இருக்கிறது. அறம் என்பது தேவர்கள் சம்பந்தபட்டதோ, அது போன்றதோ இல்லை. அது நம்மைப் பற்றியதே. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியது. உங்களையே பிரதிபலித்துக் கொள்ளுங்கள். சில சமயம் அங்கு மகிழ்ச்சி இருக்கும். சில சமயம் துக்கம் இருக்கும். சில சமயம் ஆறுதல் இருக்கும். சில சமயம் எரிச்சல் இருக்கும். சில சமயம் அந்த மனிதர் மீது அன்பு இருக்கும். சில சமயம அவர் மீது வெறுப்பு இருக்கும். இதுவே அறம். தெரிகிறதா?
இந்த அறத்தைத் தெரிந்து கொள்ள, உங்கள் புலன் பதிவுகளைப் படிக்க வேண்டும். அவற்றோடு அறிமுகமானபின்னர் தான் அவற்றை விட்டு விட முடியும். அவ்வாறு நீங்கள் ஆறுதலோடு இருக்கலாம். இந்த அறிவு உங்கள் மனத்தில் தோன்றும்: "ஓ, இது உறுதியற்றது." உங்கள் புலன்களால் உண்டான மனப்பதிவு மாறும் போது: "இது உறுதியற்றது." நீங்கள் ஆறுதலோடு இருக்கலாம், குரங்குகளைப் பார்க்கும் போது அமைதியாக இருப்பதைப் போல. உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்காது. நீங்கள் புலன் பதிவுகளோடு அறிமுகமாகியிருந்தால், அறத்தோடு அறிமுகமானவராகின்றீர். நீங்கள் புலன் பதிவுகளை விட்டு விடலாம். புலன் உணர்ச்சிகள் எந்த விதத்திலும் உறுதியானவை அல்ல. நீங்கள் எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றீர்களா? நீங்கள் எப்போதாவது சோகமாக இருந்திருக்கின்றீர்களா? நீங்கள் பதில் கூற வேண்டாம். நானே உங்களுக்காகச் சொல்லிவிடுகிறேன்:
"ஆம்."
இவை உறுதியானவையா?
"இல்லை."
இந்த உறுதியாக இல்லாதஇயல்பு தான் புத்தர். புத்தர் தான் அறம். அறம் தான் உறுதியாக இல்லாதது எதுவோ, அது. யாரெல்லாம் நிகழ்வுகள் உறுதியற்றவை என்பதை அறிகின்றனரோ, அவர்கள் நிகழ்வுகளின் இயல்பு அப்படித்தான் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்கின்றனர். உள்ளது உள்ளவாறு இருப்பது, வேறு எதுவாகவும் மாறாது. அதுதான் அவற்றின் இயல்பு. அப்படித்தான் அறமும் இருக்கும். அப்படித்தான் புத்தர் இருக்கிறார். அறத்தைக் கண்டால், புத்தரைக் கண்டது போல; புத்தரைக் கண்டால் அறத்தைக் காண்கின்றீர்கள். நிலையற்றது தெரிந்தால், உறுதியாக-இல்லாத இயல்பு தெரிந்தால், நீங்கள் நிகழ்ச்சிகளை அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல விட்டு விடுவீர்கள். அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
நீங்கள் இப்படிச் சொல்லலாம்: "எனது கண்ணாடித் தம்ளரை உடைத்து விடாதே!" என்று. ஆனால் உடையக்கூடிய தன்மை உடைய ஒன்றை உடையாமல் தடுக்க முடியுமா? இப்போது உடையவில்லையென்றால், பின் எப்போதாவது ஒரு சமயம் அது உடையும். நீங்கள் உடைக்கவில்லையென்றால், வேறுயாராவது உடைத்து விடுவார்கள். வேறு யாரும் உடைக்கவில்லையன்றால், இங்குள்ள கோழி உடைத்துவிடும்! புத்தர் இதனை ஏற்றுக் கொள்ளச் சொன்னார். அவர் இந்த நிகழ்ச்சியை ஊடுருவிக் கண்ணாடித் தம்ளர் ஏற்கனவே உடைந்துவிட்டதைக் கண்டார். உடையாத கண்ணாடித் தம்ளர், உடைந்துவிட்டதை அவர் ஏற்கனவே கண்டார். நீங்கள் கண்ணாடித் தம்ளரைத் தூக்கி, அதில் தண்ணீர் ஊற்றிக் குடித்து விட்டுக் கீழே வைத்தால், அவர் அது ஏற்கனவே உடைந்துவிட்டதைப் பார்க்கச் சொன்னார். புரிகிறதா? புத்தர் இவ்வாறு அறிந்திருந்தார். உடையாத கண்ணாடியில் உடைந்த கண்ணாடியைப் புத்தர் பார்த்தார். அதன் நேரம் வந்தவுடன் அது உடைந்துவிடும். இதுபோன்ற போக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடித் தம்ளரைப் பயன்படுத்துங்கள்; அதைக் கவனமாக வைத்திருங்கள். பின் ஒரு நாள் கை நழுவி அது விழுந்து உடைந்துவிடுகிறது: "டமார்!" பிரச்சனை ஏதும் இல்லை. ஏன் பிரச்சனை இல்லை? ஏனென்றால் அது உடைந்ததை உடையாத முன்னரே பார்த்து விட்டீர்கள்.
ஆனால் பொதுவாக மக்கள் கூறுவது, "இந்தக் கண்ணாடித் தம்ளரை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறேன். நீயும் அதை உடையாதவாறு பார்த்துக் கொள்." பின் ஒரு நாள் நாய் அதை உடைத்து விடுகிறது: "வெறுக்கத்தக்க அந்த நாயைக் கொன்று விடுவேன்!" உங்கள் தம்ளரை உடைத்தனால் அந்த நாய் மீது உங்களுக்கு வெறுப்பு. உங்கள் குழந்தை அதை உடைத்தாலும் அதன் மீதும் உங்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. யார் உடைத்திருந்தாலும் அவர் மீது வெறுப்பு உண்டாகிறது. ஏன்? நீங்கள் நீர் ஓடாத வண்ணம் உங்களுக்குள்ளேயே அணை கட்டி விட்டீர்கள். பெருவெள்ளம் வரும் போது தண்ணீர் வெளியேற வடிகால் அமைக்க வில்லை. தண்ணீர் பெருக்கெடுத்து வந்தால் அணை உடைந்து அழிந்து விடும், இல்லையா? அணையைக் கட்டினால், அதற்கு ஒரு வடிகாலும் அமைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேங்கியவுடன், அணைக்கு வரும் உபரி நீர் பாதுகாப்பாக வடிகால் வழியாக வெளியேறி விடும். தண்ணீர் அணையில் முழு அளவிற்குத் தேங்கிய உடன், வடிகால் வழியாக ஓடி விடும். இது போன்ற வடிகால் இருக்க வேண்டும். நிலையற்றதைக் காண்பதே மேன்மையானோரின் வடிகால் ஆகும். இது போல் பிரதிபலித்தால் நீங்கள் அமைதியோடு இருக்கலாம். அதுவே அறத்தின் பயிற்சி.
எனவே நான் நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் பயிற்சியைத் தொடர வேண்டும், மனத்தைப் பாதுகாக்க மனக் கவனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். அதுவே மன ஒருமைப்பாடு. அதுவே உன்னிப்பு. இவை இரண்டும் ஒன்றே. அவற்றின் இயல்புகளில் தான் வேறுபாடு உள்ளது.
நிகழ்ச்சிகள் உறுதியற்றவை என்ற நிலையாமையை உண்மையிலேயே கவனிக்க முடிந்தால், நிகழ்ச்சிகள் உறுதியற்றவை என்பதைத் தெளிவாக ஊடுருவிப் பார்க்கும் போது, நமது பார்வை உறுதியானதாகிறது. எந்த விதத்தில் உறுதியாகிறது? நிகழ்ச்சிகளின் இயல்பு அதுதான் என்பதில் உறுதியாகிறது. வேறு எப்படியும் மாறப் போவதில்லை. புரிகிறதா? இது மட்டுமே தெரிந்தால் நீங்கள் புத்தரைத் தெரிந்தவர் ஆவீர்கள். அவருக்கு மரியாதை அளித்துள்ளீர்கள். அவரது அறத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளீர்கள். இந்தக் கோட்பாட்டை எடுத்துக் கொண்டு பிரதிபலியுங்கள்.
புத்தரைக் கைவிடாத வரை நீங்கள் துக்கம் அனுபவிக்க மாட்டீர்கள். கைவிட்ட உடனேயே துக்கம் அனுபவிப்பீர்கள். நிலையாமை, துக்கம், நமதின்மை என்ற கோட்பாடுகளைக் கைவிட்ட உடனேயே துக்கம் அனுபவிப்பீர்கள்.
இதை மட்டும் பயிற்சி செய்தீர்களென்றாலே போதும். துக்கம் எழாது. எழுந்தாலும் அதை உடனே அணைத்து விடலாம். மேலும் எதிர்காலத்தில் துக்கம் எழாமல் இருக்க அது ஒரு காரணமாகிவிடும். துக்கம் எழாத இடத்தில் தான் நிகழ்ச்சிகள் முடிகின்றன. ஏன் துக்கம் எழுவதில்லை? ஏனென்றால் துக்கம் எழுவதற்கான காரணத்தின் (சமுதயா) சூழலில் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம்.
உதாரணமாக, இந்தக் கண்ணாடித் தம்ளர் உடைந்துவிட்டால் சாதாரணமாக நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள், சரியா? இந்தக் கண்ணாடித் தம்ளர் துக்கத்தின் காரணமாக இருக்கப் போவதைத் தெரிந்திருக்கிறோம். எனவே அந்தக் காரணத்தை விலக்கி விடுகிறோம். எல்லாத் தம்மங்களும் காரணத்தால் தோன்றுகின்றன. அவை மறைவதும் காரணத்தினால் தான். இப்போது இந்தக் கண்ணாடித் தம்ளரின் காரணமாகத் துக்கம் இருந்தால், நீங்கள் கோபப்பட்டு அதன் காரணமாகத் துக்கம் அனுபவித்தால்...அது உடைவதற்கு முன்னரே உடைந்துவிட்டதாகப் பிரதிபலித்தால், துக்கத்தை ஏற்படுத்தக் கூடிய காரணம் மறைந்து விடுகிறது. துக்கம் இல்லாவிட்டால், அது மறைந்துவிட்டது என்று பொருள். அதுவே நிரோதம்.
அவ்வளவே தான். இந்தக் கருத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டாம். இங்கேயே பயிற்சி செய்து கொண்டிருங்கள். இங்கேயே பிரதிபலியுங்கள். உங்கள் மனத்தைப் பிரதிபலிப்பதிலிருந்து துவக்குங்கள். எளிமையாகச் சொல்லப்போனால் எல்லோரும் ஐந்து ஒழுக்கங்களை அடித்தலமாக வைத்திருக்க வேண்டும். திரிபிடகத்தைப் படிக்க வேண்டும் என்பதில்லை. ஐந்து ஒழுக்கங்களைக் கவனிக்க வேண்டும். எப்போதுமே அவற்றோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். இதைக் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் தவறுகள் செய்வீர்கள். அதை அறிந்தவுடன், திரும்ப வந்து முதலில் இருந்து துவங்க வேண்டும். மறுபடியும் தவறு செய்யலாம். அதை அறிந்தவுடன் முதலில் இருந்து துவங்குங்கள், ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து ஆரம்பியுங்கள்.
ஒரு கெண்டிகையில் உள்ள தண்ணீரை ஊற்றுவது போல, உங்கள் மனக் கவனம் ஒரு படி உயர்ந்துவிடும். அதைச் சாய்த்து நீண்ட இடைவெளிக்கிடையில் சொட்டுச் சொட்டாக அதன் வாயிலிருந்து தண்ணீர் விழுந்தால் - சொட்டு .....சொட்டு .....சொட்டு: அதை நீர்த்துளிகள் என்கிறோம். மேலும் கொஞ்சம் சாய்த்தால், அந்தச் சொட்டுகள் அடிக்கடி விழுகின்றன. சொட்டு..சொட்டு..சொட்டு. அதற்கு மேலும் சாய்த்தால் நீரோட்டமாகத் தொடர்ந்து வருகிறது. சொட்டுத் தண்ணீர் மறைந்துவிடுகிறது. அது எங்கே போனது? எங்கேயும் போகவில்லை. தொடர்ந்து வரும் நீராக மாறிவிட்டது. அடிக்கடி சொட்டுச் சொட்டாக விழுந்ததால் ‘அடிக்கடி’ என்று சொல்வதை மீறிச் சென்றுவிடுகிறது. ஒன்றோடு ஒன்று சேர்ந்து தொடர் நீரோட்டமாகி விடுகிறது.
அறமும் இது போலத்தான். இணையானவற்றைப் பற்றிப் பேசுகிறோம். ஏனென்றால் அறத்தை விவரிக்கப் பொருட்கள் ஏதும் இல்லை. அது வட்ட வடிவம் கொண்டதல்ல. முனைகள் ஏதும் கொண்டதல்ல. அதனோடு அறிமுகமாவ தென்றால் இது போல உவமைகள் மூலமாகத் தான் செய்யமுடியும். இதைப் புரிந்து கொண்டால் அறத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அறம் உங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருப்பதாக நினைக்க வேண்டாம். அது உங்களுடனேயே இருக்கிறது; அது உங்களைப் பற்றியது தான். பாருங்கள். ஒரு நிமிடம் மகிழ்வு, மறு நிமிடம் சோகம், திருப்தியான நிலை, உடனே ஒருவர் மீது கோபம், மற்றொருவர் மீது வெறுப்பு: இது எல்லாமே அறம் தான்.
நீங்களே பாருங்கள். துக்கத்தை உருவாக்குவது எது? துக்கத்தை உருவாக்க நீங்கள் ஏதாவது செய்திருந்தால், திரும்பிச் சென்று அதைத் திருத்திக் கொள்ளுங்கள். உடனே திரும்பிச் சென்று அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அதைத் தெளிவாகப் பார்க்கவில்லை. அதைத் தெளிவாகப் பார்த்தால், அங்கு துக்கம் ஏதும் இருக்காது. துக்கத்தை விளைவிக்கும் காரணத்தை அழித்து விட்டோம். துக்கத்தின் காரணத்தை அழித்தபின், துக்கம் எழுவதற்கான நிலைமைகள் இல்லை. மேலும் துக்கம் எழுமானால், அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லையென்றால், அதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்: அது இன்னும் சரியாக வில்லை. எளிமையாகச் சொல்லப் போனால், நீங்கள் எப்போதெல்லாம் சிக்கலில் இருக்கிறீர்களோ, எங்கெல்லாம் துக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் நீங்கள் தவறு செய்திருக்கின்றீர்கள். நீங்கள் எப்போது மிக மகிழ்ச்சியாக இருந்தாலும், அப்போது மனம் பூரிப்படைந்தால் - அதோ: மறுபடியும் தவறு செய்து விட்டீர்கள்! எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பது முக்கியமில்லை. எல்லாவற்றையும் இந்தக் கருத்துடன் ஒன்று சேர்த்து மேலும் விசாரிக்க வேண்டும்.
இதுபோலப் பயிற்சி செய்தால், நீங்கள் நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும், படுத்திருந்தாலும், வந்து சென்று கொண்டிருந்தாலும், எது செய்து கொண்டிருந்தாலும் மனக் கவனத்தோடு இருப்பீர்கள். எப்போதும் கவனத்தோடும், தெரிந்த நிலையிலும் இருந்தால், தவறு எது, சரியானது எது என்பதையும், இன்பத்தையும், துன்பத்தையும் நிச்சயமாகத் தெரிந்துகொள்வீர்கள். இது போன்ற விஷயங்களைத் தெரிந்திருந்தால், அவற்றை நேர்ப்படுத்தித் துக்கம் எழாமல் இருக்கத் தெரிந்து கொள்வீர்கள். துக்கம் எழுவதைத் தடுத்து விடுவீர்கள்.
நான் மக்களுக்கு மன ஒருமைப்பாட்டினை இவ்வாறு கற்கச் சொல்கிறேன். தியானிக்கும் நேரம் வந்தால், அப்போது தியானம் செய்ய உட்காரலாம். அதில் தவறில்லை. அதையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மன ஒருமைப்பாடு என்பது உட்கார்ந்து தியானம் செய்வது என்பது மட்டும் இல்லை. மனத்தைப் பல நிகழ்ச்சிகளையும் சந்திக்க விட வேண்டும், பின் அவற்றை நினைவில் கொண்டு பிரதிபலிக்க வேண்டும். பிரதிபலித்து எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்? பிரதிபலித்து, "ஓ. அது நிலையற்றது, துக்கம் விளைவிப்பது, எனது இல்லை, உறுதியற்றது." எனத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நான் சொல்கிறேன், உறுதியானது எதுவுமே இல்லை.
"இது மிக அழகானது, எனக்குப் பிடித்தமானது." அதுவும் உறுதியானது இல்லை.
"எனக்கு இது பிடிக்கவே இல்லை." அதனிடம் சொல்லவும்: அதுவும் உறுதியானது இல்லை. சரியா? கண்டிப்பாக. தவறே இல்லை. ஆனால் நடப்பது என்ன? "இந்த முறை இதை நிச்சயமாகச் சரியாகச் செய்து விடுவேன்." இப்படி நினைத்தவுடனேயே நீங்கள் பாதையை விட்டு விலகிச் சென்றுவிட்டீர்கள். வேண்டாம். உங்களுக்கு ஒன்று எவ்வளவுதான் பிடித்திருந்தாலும், அது உறுதியற்றது என்பதைப் பிரதிபலித்துக் கொள்ளுங்கள்.
நாம் சில வகையான உணவைச் சாப்பிடும் போது, "ஆகா, என்ன சுவை? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என்று நினைக்கின்றோம். அது போன்ற உணர்ச்சி உள்ளத்தில் இருக்கலாம். ஆனால் இவ்வாறு பிரதிபலிக்க வேண்டும், "இது உறுதியானது இல்லை." உறுதியானது இல்லை என்பதைப் பரிசோதிக்க வேண்டுமா? உங்களுக்கு மிகப் பிடித்தமான உணவையே தினமும் சாப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டுப் பாருங்கள். சரியா? சில நாட்களிலேயே நீங்கள் குறைகூறுவீர்கள், "இது அப்படி ஒன்றும் சுவையாகத் தெரியவில்லை." "உண்மையில் எனக்கு இதைவிட அந்த உணவு பிடித்திருக்கிறது." என்று நினைப்பீர்கள். அதுவும் உறுதியானது இல்லை! எல்லாமே ஒன்றிலிருந்து மற்றதுக்குப் போக வேண்டும், உள் மூச்சிலிருந்து வெளிமூச்சுக்குச் செல்வது போல. நாம் உள் மூச்சையும் எடுக்க வேண்டும், வெளிமூச்சையும் விட வேண்டும். மாற்றங்களினால் தான் நாம் வாழ்கிறோம். எல்லாமே இதுபோல மாற்றங்களை நம்பியே இருக்கிறது.
இவையெல்லாம் நம்முடனேயே இருக்கின்றன, வேறு எங்கும் இல்லை. சந்தேகங்களே இல்லாவிட்டால், நாம் வசதியாக உட்காரலாம். வசதியாக நிற்கலாம். மன ஒருமைப்பாடென்பது தியானத்தில் உட்காருவது மட்டுமில்லை. சிலர் மயக்க நிலை அடையும் வரை தியானத்தில் உட்காருகின்றனர். அப்படி இருப்பவர்கள் இறந்து போவதே மேல். அவர்களுக்கு வடக்கு எது, தெற்கு எது என்றுகூடத் தெரியாது. தியானிப்பதை அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டாம். தூக்கமாக இருந்தால், நடக்கலாம். உடல் நிலையை மாற்றிக் கொள்ளலாம். உன்னிப்பைப் பயன்படுத்தலாம். மிகவும் தூக்கமாக இருந்தால் படுத்துக் கொள்ளலாம். பின் தூக்கம் கலைந்தவுடன் எழுந்து முயற்சியைத் தொடரலாம். படுத்திருக்கும் சுகத்தோடு பற்றுக் கொள்ள வேண்டாம். நீங்கள் தியானிப்பவராக இருந்தால் இப்படித் தான் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் செய்வதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உன்னிப்பு. அவதானம். அவதானமாக இல்லாமல் இருக்க முடியாது. நிகழ்ச்சிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே தெரிந்திருக்க முடியாது. வட்டத்தை முழுவதும் தெரிந்திருக்க வேண்டும்.
உங்கள் உடல் மற்றும் மனத்திலிருந்தே துவங்கி, அவை நிலையற்றவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மனமோ உடலோ உறுதியானவை இல்லை. எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அது உறுதியானது இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உணவு சுவையாகத் தோன்றினால் உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள்: "இது உறுதியானது இல்லை!" உங்களுக்குப் பிடித்தவைகளை முதலில் குட்ட வேண்டும். மனத்திற்குப் பிடித்தவைகளைப் பார்த்து அவற்றிடம் சொல்ல வேண்டும், "இது உறுதியானது இல்லை!" அதை முதலில் குட்டுங்கள். ஆனால் நடைமுறையில் இவைதான் உங்களை முதலில் குட்டுகின்றன. உங்களுக்கு ஒன்றைப் பிடிக்கவில்லையென்றால், அதனால் உங்களுக்குத் துக்கம் ஏற்பட்டால் அது உங்களைக் குட்டிவிட்டது என்று பொருள். "அவளுக்கு என்னைப் பிடித்திருந்தால், எனக்கு அவளைப் பிடிக்கும்": இங்கு உங்களை அது குட்டி விட்டது. ஆனால் நீங்கள் அதைக் குட்டவே இல்லை. இவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எது பிடித்திருந்தாலும், இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள், "இது உறுதியானது இல்லை!" உங்களுக்கு எதுவாவது பிடிக்கவில்லையென்றாலும், இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள், "இது உறுதியானது இல்லை!" இப்படியே தொடர்ந்தால் அறத்தைக் காண்பது உறுதி. இப்படித்தான் இருக்க வேண்டும்.
உட்கார்ந்த நிலையில், நிற்கும் நிலையில், நடக்கும் நிலையில், படுத்திருக்கும் நிலையில், எல்லா உடல் நிலைகளிலும் பயிற்சி செய்ய வேண்டும். கோபம் எல்லா உடல் நிலையிலும் வருகிறதல்லவா? நடக்கும் போது கோபத்தை உணரலாம், உட்காரும் போது கோபத்தை உணரலாம், படுத்திருக்கும் போது கோபத்தை உணரலாம். சில சமயம் படுத்திருக்கும் போது அவா உண்டாகிறது. நடக்கும் போதும், உட்காரும் போதும் அவா உண்டாகிறது. எனவே எல்லா உடல் நிலகளிலும் பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து, முன் பின் என்று இல்லாமல் இப்படியே பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் அறிவு முழுமை அடையும்.
மனத்தைச் சமாதானமாக்க உட்கார்ந்து தியானிக்கும் போது, உங்கள் மனத்தில் எதாவது ஒரு பிரச்சனை எழுந்து ஓடி வருகிறது. அது முடிவதற்கு முன்னால், வேறொரு பிரச்சனை ஓடிவருகிறது. இப்படிப் பிரச்ச்சனைகள் ஓடி வந்து கொண்டிருந்தால், நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்ளங்கள், "இது உறுதியானது இல்லை!" அது உங்களைக் குட்டுவதற்கு முன்னால் நீங்கள் அதைக் குட்டி விடுங்கள். "இது உறுதியானது இல்லை!" என்பதை வைத்துக் குட்டி விடுங்கள்.
அதன் பலவீனத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எல்லா விஷயங்களும் உறுதியற்றது என்பது தெரிந்தால், மனத்தில் தோன்றும் எண்ணங்களெல்லாம் படிப்படியாகக் கலைந்து விடும்; மெல்ல மெல்லக் கலைந்து விடும். அவற்றைப் பற்றி உறுதியானது என்னவென்றால் அவை உறுதியற்றவை என்பது தான். ஒன்றின் இயல்பு உறுதியற்றது என்பதை உணர்ந்த பின், எத்தனை நிகழ்வுகள் வந்து சென்றாலும் அவை எல்லாம் ஒன்றே. மீண்டும் ஒருநாள் நீங்கள் பிரதிபலிக்கும்போதும், அவை எல்லாம் ஒன்றாகவே தெரியும்.
நீரோட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? நிலையான நீரைப் பார்த்திருக்கின்றீர்களா? உங்கள் மனம் அமைதியாக இருந்தால் அது நிலையான, நீரோட்டத்தைப் போல. நிலையான நீரோட்டத்தைப் பார்த்திருக்கின்றீர்களா? ஆமாம்! நீங்கள் ஒடும் நீரையும், நிலையான நீரையும் மட்டுமே பார்த்திருக்கின்றீர்கள். நீங்கள் நிலையான நீரோட்டத்தைப் பார்த்ததில்லை. இங்கேயே, உங்கள் எண்ணங்களால் கொண்டு செல்ல முடியாத இடத்தில்: எங்கு மனம் நிலையாக இருந்து உன்னிப்பை வளர்க்கமுடிகிற இடத்தில், உங்கள் மனத்தைப் பார்க்கும் போது அது நீரோட்டமாகத் தெரியும், அதே சமயம் அது நிலையாகவும் இருக்கும். அது நிலையாக இருப்பதாகத் தோன்றும், அது ஓடுவதாகவும் தெரியும். எனவே அதை நிலையான நீரோட்டம் என்கிறோம். அப்படித்தான் இருக்கும். அங்குதான் உன்னிப்பு எழமுடியும்.
* * * * * *
© Copyright
Provenance: ©1990 The Sangha, Wat Pah Nanachat. Transcribed from a file provided by the translator This Access to Insight edition is ©2010–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Not for Sure: Two Dhamma Talks", by Ajahn Chah, translated from the Thai by Thanissaro Bhikkhu. Access to Insight, 1 December 2012, http://www.accesstoinsight.org/lib/thai/chah/not_for_sure.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/