வெறுப்பை நீக்க ஐந்து வழிகள்

வெறுப்பை நீக்க ஐந்து வழிகள்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Five ways of removing a grudge

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

வெறுப்பை நீக்குவதற்கான ஐந்து வழிகளைக் கூற முடியுமா? ஒருவரை மனத்தில் நினைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விவரமாகக் கூற முடியுமா? நம்முடன் வேலை செய்பவராகவும், தினந்தோறும் நாம் சந்திப்பவராகவும் இருந்தால் அவர் நமக்குப் பிடிக்காதவராக இருந்தாலும் அவரை மனத்தில் நினைக்காமல் இருப்பது எப்படி?

இது புத்தரின் சுருக்கமான போதனைகளில் ஒன்று. அங்குத்தரா நிகாயா என்ற தொகுப்பில் அதாவது எண்களிடப்பட்ட போதனைகள் என்ற தொகுப்பில் இந்தப் போதனையும் அடங்கும். இந்தத் தொகுப்பில் எட்டு என்ற எண்ணைச் சேர்ந்தது அட்டாங்க மார்க்கப் போதனை, நான்கில் மனக்கவனத்திற்கான நான்கு அடித்தளங்கள், பதினொன்றின் கீழ் எல்லையற்ற அன்பின் பதினொரு அனுகூலங்கள் போன்ற போதனைகள் அடங்கியுள்ளன.

வெறுப்பை எப்படி நீக்குவது? துரதிர்ஷ்டவசமாக இது வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் ஒரு அனுபவம் இல்லையா? சில சமயம் ஒருவர் நமக்குப் பிடிக்காதவாறு நடந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் நாம் அவருக்குப் பிடிக்காதவாறு நடந்து கொள்ளலாம். அதன் பின் ஒரு கசப்பான, முடிவில்லாத, ஒரு கொந்தளிப்பான நிலை உருவாகி விடுகிறது. பின்னர் இது ஒரு வெறுப்பாகவும் உருவாகிவிடலாம். மனத்தில் வெறுப்பு இருப்பது ஒரு கசப்பான உணர்ச்சி. ஒருவர் மீது கோபமும், துவேஷமும் இருப்பது மகிழ்ச்சியற்ற நிலை. புத்தர் இந்த உணர்ச்சியை அகற்றச் சொல்கிறார். இது துறவிகளுக்குத் தரப்பட்ட போதனை: "ஐந்து வழிகளில் வெறுப்பை நீக்கலாம்." அப்படியென்றால் துறவிகளுக்கும் துவேஷம் இருக்கலாம் அல்லது அவர்கள் இல்லறமக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்த வழிகளைத் தெரிந்து கொள்வது நல்லது. ஐந்து முறைகளும் படிப்படியாக ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளன. முதல் முறையே மிகவும் விரும்பத்தக்க முறை. கடைசி முறை அவ்வளவு விரும்பத்தக்கது அன்று. நீங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு சூழ்நிலைக் கேற்ப உங்களுக்கு எது வசதியானது என்பதையறிந்து அந்த முறையைப் பின்பற்றலாம்.

முதல் வழி

முதல் வழி எல்லையற்ற அன்பு. நமக்குப் பிடிக்காத ஒருவர் மீது நட்புணர்வான எண்ணங்களைச் செலுத்துவதன் மூலம் விரோதமான எண்ணங்களை நீக்குவது. இதுவே சிறந்தமுறை. சினத்தை மாற்றி அன்பாக்குவது. சிலரிடம் இந்த முறையை எளிதாகப் பயன் படுத்தலாம். உங்கள் நான்கு வயது மகன் ஒரு கண்ணாடிக் குவளையைக் கீழே போட்டு உடைத்துவிடுகிறான். உங்களுக்குச் சட்டென்று கோபம் வருகிறது. ஆனால் நான்கு வயதுக் குழந்தைகள் செய்வதைத்தானே இவனும் செய்தான் என்பதை உணர்ந்தவுடன் நமது கோபம் மறைந்து அன்பாகி விடுகிறது. நமது நண்பர்களும் சில சமயம் நமது மனம் புண்படும்படி நடந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அவர்களிடம் பல நல்ல பண்புகள் இருப்பதால் (அதனால் தானே அவர்கள் நமது நண்பர்களாக இருக்கின்றனர்) அவர்கள் மீது உள்ள வெறுப்பை அன்பாக்கி விடலாம்.

ஆனால் வேறு சிலர் மீது அன்பு செலுத்துவது எளிதான காரியமன்று. இல்லாவிட்டால் நமது அன்பு செலுத்தும் திறனில் குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் மீது அன்பு செலுத்த முடியாமல் போகலாம்.

எல்லையற்ற அன்பு செலுத்துவது ஒரு திறன் வாய்ந்த செயல். அதைப் பயிற்சி செய்து வளர்த்துக் கொள்ள முடியும். இது ஒரு உயர்ந்த பயிற்சி முறை. சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கும் மனத்தை அன்பு கலந்த மனமாக உங்களால் உடனே மாற்ற முடியுமென்றால் நீங்கள் சிறப்பாகப் பயிற்சி செய்துள்ளீர்கள் என்று பொருள். ஆனால் புத்தர் இவ்வாறு எல்லோரும் செய்துவிட முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. அது அவ்வளவு எளிதான காரியமன்று. அப்படியென்றால் வேறு என்னதான் வழி?

இரண்டாம் வழி

அடுத்த வழி கருணை காட்டுவது. கருணை எல்லை இல்லா அன்பின் ஒரு வகை எனலாம். அது துக்கம் அனுபவிப்பவர் பால் நல்லெண்ணம் காட்டுவதாகும். இந்த நபர் உங்களுக்கு ஏதோ தொல்லை தந்து விட்டார், உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டார். அவருக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள் இருக்கும். அவரது வாழ்வில் அவர் அனுபவிக்கும் துக்கத்தை நினைக்கும் போது அவருக்கு அறியாமை இருக்கும் என்பதையும், அவருக்கு அந்நாளில் ஏதோ கெட்ட அனுபவம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ காரணத்தினால் அந்த நாள் அவருக்குச் சரியாக அமையவில்லையோ என்னவோ, அவர் சரியாகப் பயில்விக்கப் படவில்லை போன்ற காரணங்கள் இருக்கலாம். இத்தகைய துன்பங்களெல்லாம் அவருக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு நினைக்கும் போது உங்கள் உள்ளம் சற்று இளகி விடுமல்லவா? இப்போது கருணையைப் பயிற்சி செய்யலாம். ஆனால் இதுவும் சிலசமயம் பயனளிக்காது (அதாவது உங்களால் அவர் மீது இந்தச் சூழ்நிலையிலும் கருணை காட்ட முடியாமற் போகலாம்).

மூன்றாம் வழி

மூன்றாவது வழி உபேக்கை. சம மன நிலையோடு இருத்தல். தொலைநோக்கோடு இந்தப் பிரச்சனையை அணுகுதல். திருசெங்கோடு மலை உச்சிக்குச் சென்று நகரைப் பார்ப்பது போல. உங்கள் வீடு வெகுதொலைவில் சிறிதாகத் தெரிகிறது. இலட்சக்கணக்கான மக்களின் வீடுகளுக்கு மத்தியில் உங்கள் வீடும் ஒன்று. உங்கள் இருவரிடையே நிகழ்ந்த சிறு நிகழ்ச்சியைப் (பிரச்சனையைப்) போல இலட்சக் கணக்கான, கோடிக் கணக்கான மனிதர்களிடையே தினந்தோறும் தொடர்புகள் நிகழ்கின்றன. இவ்வாறு இந்த நிகழ்ச்சியைத் தொலை நோக்கோடு பார்ப்பது கோபத்தைச் சற்றுத் தணித்துக் குளிர்ச்சியடையச் செய்யும். இப்போது சம மனநிலையோடு இருப்பது நல்லது என்பதை உணர்வீர்கள். அவர்கள் நம்மைப் புகழ்ந்திருக்கலாம் அல்லது இகழ்ந்திருக்கலாம். பொதுவாக நமக்குக் கோபம் வந்ததென்றால் நம்மை இகழ்ந்திருப்பார்கள். சரி! உங்களை இகழ்ந்திருக்கலாம் அல்லது போதுமான அளவு உங்களைப் பாராட்டவில்லையோ என்னவோ? உங்களிடமிருந்து எதையோ எடுத்துச் சென்றிருக்கலாம். உங்கள் வெற்றிக்கோ லாபத்திற்கோ தடையாய் இருந்திருக்கலாம். உங்கள் நற்பெயர்மீது களங்கம் கற்பித்திருக்கலாம். உங்களைப் பற்றி வேறு ஒருவரிடம் கோள் சொன்னதால் அந்த மூன்றாமவருக்கு உங்கள் மீதான நல்லெண்ணம் மாறி இருக்கலாம். உங்கள் கீர்த்தியைக் குறைத்திருக்கலாம். வாழ்க்கையில் சந்திக்கும் இந்த நான்கு மேடு பள்ளங்கள் நம்மை நிலை குலைய வைக்கும்: அவை புகழ்ச்சியும் இகழ்ச்சியும், வெற்றியும் தோல்வியும், கீர்த்தியும் அபகீர்த்தியும், லாபமும் நஷ்டமும். வாழ்க்கையில் இந்தக் காற்று எப்படி வேண்டுமானாலும் வீசும். இது போல உயர்ந்தும் தாழ்ந்தும் உள்ள வாழ்க்கை அனுபவங்களைச் சந்திக்கும் போது உபேக்கையுடன் நடு நிலையில் இருப்பது நல்லது. புகழ் வரும் போது அதனால் பாதிக்கப் பட்டால், நாம் இகழப்படும் போதும் பாதிக்கப் படுவோம். வெற்றியினால் பாதிக்கப்பட்டால் தோல்வியும் நம்மைப் பாதிக்கும். ஆகவே வாழ்க்கையின் மேடு பள்ளங்களைச் சம நிலையில் இருந்து சமாளிக்க வேண்டும். இது தான் சம மன நிலை என்பது. உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் நாம் நடுநிலையில் இருப்பதே நல்லது. உபேக்கை என்பது இவ்வாறு நினைப்பது: "சில சமயம் நான் புகழப்படுகிறேன், சில சமயம் நான் இகழப்படுகிறேன். சில சமயம் நான் வெற்றி பெறுவேன், சில சமயம் நான் தோல்வி அடைவேன். சில சமயம் என்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பிற சமயத்தில் என்னை யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் இது போன்ற மேடு பள்ளங்களைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். இவற்றோடு பற்றுக் கொள்ளக் கூடாது.” ஆக சில சமயம் உபேக்கை வெறுப்பை நீக்கி விட உதவும்.

நான்காம் வழி

நான்காம் வழி: எல்லையற்ற அன்பைப் பொழிந்து, கருணை காட்டி, உபேக்கையுடன் இருக்க முடியாவிட்டால் நான்காவது ஒரு வழி இருக்கிறது - அந்த நபரை மனத்தில் நினைக்காமல் இருத்தல். இன்றைய மனோதத்துவ இயலில் நம்பிக்கையுடையவராக இருந்தால் , 'அட! நான் விஷயங்களை கட்டுப் படுத்தி அடக்கி வைக்கக் கூடாதே, இல்லையா?' என்று நினைக்கலாம். ஆனால் புத்தர் இது மிகச் சிறந்த கருத்து என்கிறார். மனதில் உள்ளதை நீங்கள் தேர்ந்தெடுக்கின்றீர்கள். நீங்கள் விருப்பப் பட்டுத்தான் அந்த நபரை மனத்தில் கொண்டுவராமல் இருக்கின்றீர்கள். அவரை ஏன் மனத்தில் கொண்டுவர வேண்டும்? அவரை மனத்தில் கொண்டு வந்தால் ஒரு நல்ல மனோபாவத்தை உருவாக்க முடியவில்லை. தீய எண்ணம் தான் உண்டாகிறது. எனவே தேவையில்லை. மனத்தில் அவரைக் கொண்டு வந்து குறைந்தது உபேக்கையாவது தோன்றா விட்டால் அவரை மனத்தில் கொண்டு வரவே வேண்டாம். அவரோடு வேலை செய்வதாக இருந்தால், தினசரி சந்திக்க வேண்டி இருந்தால் எப்படி மனத்தில் கொண்டுவராமல் இருப்பது? அவரை மனத்தில் கொண்டுவராமல் இருக்க இதுவே ஒரு முக்கிய காரணம். அவர் ஏற்கனவே உங்கள் அலுவலகத்தில் இருக்கின்றார். அலுவலக இடைவழிகளில் நடக்கும் போது சந்திக்கின்றீர்கள். அலுவலக சிற்றுண்டிச் சாலையில் சந்திக்கின்றீர்கள். ஏன் அவர் உங்களோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்பவராகவும் இருக்கலாம் (கணவன் அல்லது மனைவியாகவும் இருக்கலாம்). ஆனால் அவர் உங்கள் மனத்திலும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது நீங்களாகவே உருவாக்குவது. உங்களுடன் வேலைசெய்பவராக இருந்தால் சற்றுக் கடினம் தான். ஆனால் அதனால் மனத்தில் கொண்டுவராமல் இருப்பது மேன்மேலும் அவசியமாகிறது.

அவர்களை உங்கள் மனத்தில் (நினைவில்) கொண்டுவராமல் இருக்க ஒரு சிறிய சடங்கு செய்யலாம். வீட்டுக்குச் சென்று ஒரு அழகான துண்டுத்தாளையும், ஒரு அஞ்சல் உறையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நமக்குக் கோபம் உண்டாக்கும் நபரின் பெயரை அந்தத் தாளில் எழுதித் தாளை மடித்து உறையில் போடுங்கள். அடுத்து உறையின் மீது ஒரு தேதியைக் குறிப்பிடுங்கள் - அந்தத் தேதி தாண்டிய பின்னர் தான் அந்த உறையைத் திறந்து அந்த நபரை உங்கள் மனத்தில் வரவழைத்துக் குறைந்தது உபேக்கையாவது அவர் மீது ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும். பிரச்சனை பெரிதாக இல்லாவிட்டால் அது ஒரு வாரமாகவோ, இருவாரங்களோ அல்லது ஒரு மாதமாகவோ இருக்கலாம். உங்களுக்கே சரியென்று தோன்றும் தேதியாக இருக்க வேண்டும். இந்தச் செய்கையோடு வேறு சில விசேடமான சமாச்சாரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் மனத்திடம் திடமாகச் சொல்லி விடுங்கள், 'அவரை என் மனத்தில் வரவழைக்கப்போவதில்லை!' மூன்று முறை புத்தரை வணங்கி, ஒரு விளக்கை ஏற்றுங்கள். 20 நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்திருங்கள். உங்கள் மனத்திடம் தெளிவாகக் கூறிவிட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. பின் உறையை ஒட்டி அதை ஒரு பெட்டியில் (ஒரு அழகிய நகைப் பெட்டியாக இருந்தாலும் நல்லது) வைத்துவிடுங்கள்.

பின் அடுத்த சில நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனத்தில் அந்த நபர் தோன்றினால் அவர் நினைப்பை விட்டு விடுங்கள். ‘மனத்தில் வரவேண்டாம், வரவேண்டாம்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள். பின் உங்களுக்கு அது பழக்கமாகிவிடும்.

அதே சமயம் ஒரு முக்கியமான மற்றொரு பயிற்சியும் செய்ய வேண்டும். உங்களுக்குச் சுலபமாக நல்லெண்ணம் பிறக்கக் கூடியவர் மீது எல்லையற்ற அன்பு பிரகாசிக்கச் செய்ய வேண்டும். உங்களுக்குள் நல்லெண்ணத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். உலகில் மற்றவர்களும் இருக்கின்றனர். இந்த அன்பான எண்ணங்களை உங்களுக்குப் பிடித்த மனிதரிடையே மட்டுமின்றி மற்ற ஜீவன்களுக்கும் பிரகாசிக்கலாம். அவை பூனைக்குட்டி, நாய், சிட்டுக் குருவியாகக் கூட இருக்கலாம். இவற்றுக்கு நல்லெண்ணம் பரப்புவது மிக இலகுவானது. இந்த உணர்ச்சிகளை நிலைப் படுத்தப் பாருங்கள். பின் அந்த உறையைத் திறந்து அந்த நபரை மனத்தில் அழைக்கும் நேரம் வரும் போது இந்த நல்லுணர்ச்சியோடு அழைப்பீர்கள். அதனால் நல்லெண்ணம் அந்த நபர் மீதும் தோன்றும். ஆனால் இதுவே ஒரு இருபது வருட மோசமான திருமண வாழ்க்கை போல் இருக்குமானால், அந்த நபரை மனத்தில் கொண்டு வர ஏழு ஆண்டுகள் கூட ஆகலாம். அப்படியும் நடக்கலாம். மிகவும் கொடுமையான உறவாக இருந்திருக்கலாம். அப்படி நீண்ட நாள் கொடுமை நடந்திருந்தால் அவர்களை மனத்தில் கொண்டுவருவது மிகவும் கடினம். அதே சமயம் மற்றவரிடத்தில் நல்லெண்ணங்கள் கொண்டு மனத்தை நிரப்புங்கள். இந்த வாழ்நாளில் கூட அவரை மனத்தில் கொண்டுவர முடியா விட்டாலும் பரவாயில்லை. தவறொன்றும் இல்லை. அவரை மனத்துக்குக் கொண்டுவந்து விட்டுக் கோபமாக இருப்பதில் பயனில்லை. கோபப்பட்டால் யார் துன்புறுவது? நீங்கள் தான். மேலும் கோபத்திற்குக் கன்மப் பலனும் உண்டு. கோபம் தணிந்தபின் அதன் கன்மப்பலனும் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் மேலும் சில விதைகளை விதைக்கின்றீர்கள். ஆகவே தீவினை எதிர்காலத்தில் தோன்றும். எனவே கோபத்தின் மீது மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அதைக் கண்டு பயப்பட வேண்டும். அதற்குத் தீய வினைகள் உண்டு. அதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மனத்தில் கொண்டுவரா விட்டால் அதுவே பெரிய உதவி. காலம் செல்லச் செல்ல அந்த நபர் உங்கள் மீது கொண்டுள்ள பாதிப்பும் குறைந்து விடும்.

ஐந்தாம் வழி

கடைசி வழி: மனத்தில் கொண்டுவர வேண்டாம் என்று விரும்பினாலும் தவிர்க்க முடியாமல் மனத்தில் தோன்றிக் கோபத்தைக் கிளறுகிறார் என்றால் இவ்வாறு நினைக்க வேண்டும்: 'எல்லா உயிர்களும் தங்கள் கன்மத்தின் (செய்கையின்) சொந்தக்காரர்கள்.' அதாவது உங்களுக்குக் கொடுமை செய்திருந்தால் அது அவர்கள் செய்த வினை. பிரபஞ்சம் சில நியதிகளின்படி செயற்படுகிறது. அதன்படி அவர் வினைக்கேற்பப் பயனை அனுபவிப்பார். ஆனால் நீங்களும் பிரதிபலிக்க வேண்டும். உங்களுக்கு வெறுப்பு இருந்தால் கன்மக்கோட்பாடு உங்களுக்கும் பொருந்தும். 'எல்லா உயிர்களும் தங்கள் செய்கையின் சொந்தக்காரர்கள்,' என்பது உங்களுக்கும் பொருந்தும் கோட்பாடு. சற்று அச்சம் தரும் கோட்பாடு. உங்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. இந்த வெறுப்பை மனத்தில் வைத்துக் கொண்டிருந்தீர்களென்றால் அதன் பயனை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். காந்திமகான் சொன்னது நினைவுக்கு வருகிறது: 'எல்லோரும் கண்ணுக்கு கண்ணும், பல்லுக்குப் பல்லும் வேண்டுமென்றால் உலகில் அனைவருமே குருடாகி விடுவார்கள். பல் இல்லாமல் போய் விடுவார்கள்.' ஆகவே இந்தப் பழி வாங்க வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும் போன்ற எண்ணங்களை எல்லாம் நிறுத்திக் கொள்வது நல்லது. குறைந்த பட்சம் வெறுப்பில்லாமல் இருக்க வேண்டும். நல்லெண்ணம் தோன்றாவிட்டாலும் வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

* * * * * *

Transcribed from an audio tape available at birken.ca

Could you talk about the five ways of removing a grudge? Could you talk in depth about not bringing the person to mind. How do you do that if you work with them and see them every day and have to deal with them.

This is from a very short discourse by the Buddha in the numbered sayings, the Angutara Nikaya. It is a collection of talks that is numbered. the eight fold path would be under the eights, the four foundations of mindfulness under the four, the five faculties under five all the way up to eleven, the eleven benefits of loving kindness.

How to remove a grudge? This is a very common experience in human life, unfortunately. We get on the wrong side of somebody. They got on the wrong side of us. There is a left over feeling of unpleasant, unresolved tension. We call this in English a grudge. It is an unpleasant experience to have a grudge. Holding resentment and anger towards somebody. The Buddha says you really want to remove this feeling. The talk is addressed to Bhikkus: "There are five ways to remove a grudge," which means that even monks may have ill-will or they be dealing with this problem quite a bit when they talk to lay people so they should know some methods. These are five methods in graded order. It goes from first - most desirable to the last - least desirable and you are to look through these and find out which one works for you.

First method is loving kindness. So you remove feeling ill-will by radiating friendliness towards that person. That would be best. if you can transform this ill-will.. For some people it is quite easy. Your four year old child drops a glass on the floor. For a moment you are angry and then you realize this is the way four year old's are. Suddenly the anger turns into loving kindness. People who are your friends some times they do things (that hurt you) but because they have a lot of redeeming qualities you can easily transform it into goodwill. And then there are people who are more difficult or you are not so skillful (at radiating loving kindness). Loving kindness is quite advanced, quite virtuosic. You know if you are a very good practitioner if you can suddenly switch from this feeling of irritability over some transgression to good will. But the Buddha does not expect everybody to be able to just do that. It is not so easy. So then what?

Next option is to practice compassion. Compassion is sub category of loving kindness. It is good will for those who are suffering. This person who has done something to you, has irritated you, has caused you problems has suffering in their lives. And may be this ... remembrance that they have suffering, they have their ignorance, they just don't know any better, they have bad experiences, they had a bad day, they haven't been trained well etc...This is why they behave this way. Must be some suffering their. Maybe that softens up your heart. Now you can practice compassion. But then that may not work.

Third option is equanimity. Equanimity is: lets looks at this from a distant view. Lets go on top of Grouse mountain and look down on Vancouver. And see your house way in the distance there amongst million people. This little interaction we had is one of among millions, billions, trillions of human interactions like this. Get some distance from this and get some coolness because you are so far from this. You think it is good to be balanced. Maybe they praised me, may be they blamed me. Usually it is not a praise that gives you a grudge. Maybe they blamed you, may be they did not praise you when you should have been praised. Maybe they took something from you. Maybe they deprived you of some success or some gain etc. Maybe they impuned your reputation. They said something about you to someone else which made you not so famous in the eyes of others. Made you more obscure. These are the classic teeter totters over which we loose over balance. We are praised or we are blamed, we succeed and then we fail, we become well known and then we are obscure, we have good fortune and then bad fortune. These are the wordly winds that blow one way then the other way. And equanimity is the ability to stay right in the centre during both of the situations. if you really respond to praise you are going to respond to blame. If you respond to success you will respond to failure. So we must remain even and balanced in the middle of the teeter totter. That is what equanimity means. Either end goes you you stay here in the centre. Equanimity is thinking of these, 'You know sometimes I am praised, sometimes I am blamed. Sometimes I succeed, sometimes I fail. Sometimes I am well known, sometimes I am obscure. I have to reflect that this is going to happen in my whole life. I have to not get so caught up in these things.' So equanimity sometimes lets go of the grudge.

Fourth option: if you can't do loving kindness, if you can't do compassion, if you can't do equanimity then the fourth option is - Don't bring that person to mind. Do not bring that person to mind. If you are a fan of psychology you might think 'Oh, but I am not supposed to suppress things.. Am I?' The Buddha says, Yes, That is a perfectly good idea. You are the one who chooses the mental contents and it is not unconscious act, you are consciously not bringing that person to mind. Why would you? When you bring that person to mind you are unable to form a positive emotion. You are inflicting a negative emotion upon your self. It is not necessary. If you cannot bring them to mind without at least a sense of equanimity then don't bring them to mind at all. How do you do that if you work them, see them every day? All the more reason not to bring them into your mind. They are already in your office, they are already in your corridor with you, in the kitchen with you. They might even be in bed with you! But doesn't mean that they must be in your mind with you. That is your doing. Of course if they do work with you then it is going to be more difficult. But it is all the more necessary.

One way you can do (keep them out of your mind) is a little ritual. Go home get a beautiful piece of paper and an envelope . Write their name down and put it in the envelope. And write a date on the envelope - how long you think it will take before you can open that envelope and allow then to come into your mind and experience a minimum of equanimity. Now if it not a major thing it might be a week. You cannot really afford to think about them for a week. It might be 2 weeks, a month. Whatever realistic date you think. Now it should be accompanied by a significant kind of ceremony. You are telling your mind, 'I am not going to let them drift into my mind.' You might have to do three bows to the Buddha, you might have to get a special box. Light some candles. Sit there for 20 minutes. You got to inform your mind very clearly. This is not a casual thing. Do it very very clearly. And then you seal that envelope. And then specially for the first day you watch for any kind of arisings very closely. Let it go, not to come in. And then you get used to that. In the meantime you practice loving kindness to some people who are very easy to practice towards. So you are filling yourself with good will all this time. There are other people in the world. In the meantime you can keep cultivating this positive attitude of loving kindness but for people and creatures, beings , kittens, dogs, birds etc that are easy to. You keep working on this feeling. That will make it that much easier when you decide to open that envelope and carry that feeling over. The good feeling will splash over that person. But if this has been like a 20 year bad marriage it might be seven years before you can open that envelope. Could be. Could be a very abusive situation. Long term abusive situation that is very hard to get over. Don't bring that person to mind. Too hard. In the meantime cultivate this positive virtue towards other beings. If it means that you can't do it for this whole lifetime, so be it. That is all right. No point in bring this person up and having this ill-will. Guess who suffers. You. It is karmic as well. Anger is karmic. It doesn't just go. When you get over the anger it doesn't just disappear. You just planted some seeds actually. They will have negative results in the future. We really want to have a very high regard (fear) for anger. It has negative resultants. We really want to avoid it. Just remember just the mere avoidance of things helps. After a period of time their affects on you will diminish.

The last option: If they keep coming up to mind even if we don't want them to come up to mind, think 'All beings are the owners of their karma.' In other words if they have done terrible things to you, negative things, guess what. It is their karma. The universe has certain laws. It takes care of things. But also reflect. Karma applies to you too - If you have ill-will. All beings are the owners of their karma. A little scary. It is a little bit of a threat. Look if you keep this (ill-will) up there will be consequences. The saying by Gandhi: 'If every body follows this eye for an eye and tooth for a tooth then everybody will be blind.' So we better stop with this thought of revenge and stuff. At the very minimum we should not have ill-will. An absence of ill-will.

* * * * * *