ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம்
(ஒரு நாள் சித்தார்த்தன் யசோதரையின் அந்தப்புரத்தில் அமர்ந்திருக்கிறான். அழகிய வீணையொன்று ஒருபுறத்தில் இருக்கிறது. காற்று வீசும்பொழுது அந்த வீணையிலிருந்து ஒலி உண்டாகிறது. அந்த ஒலியில் கலந்திருக்கும் தேவகீதம் சித்தார்த்தனுடைய செவிக்கு மட்டுமே கேட்கிறது. தேவகீதத்தில் பொதிந்துள்ள விஷயத்தைப் பின்வரும் பாடலில் காணலாம்.)
தேடும் இடங்களெல்லாம் - ஓய்வு
தேடியும் காணாமல்
ஓடிஓடி அலையும் - காற்றின்
ஒலியே நாங்கள், ஐயா! 59
ஆன்ற புவிவாழ்வும் - எண்ணில்
அற்ப வாழ்வேயாம்;
தோன்றும் ஒருமூச்சாம் - புயலாம்
சூறா வளியேயாம். 60
ஆன்ற புவிவாழ்வும்: ஆன்ற - அகன்ற, விசாலமான; அற்ப – இழிந்த,
தோன்றும் ஒருமூச்சாம் - புயலாம் சூறா வளியேயாம்
விளக்கம்: இப்புவி வாழ்வு காற்றைப் போல நிலையற்றது. அது மூச்சைப் போல மென்மையாக இருந்தாலும், புயலைப் போல வேகம் மிகுந்து காணப்பட்டாலும், சூறாவளியைப் போல சேதம் விளைவிக்கத் தக்கதாக இருந்தாலும் அனைத்துமே நிலையற்றவை தான். மனித வாழ்வும் அத்தகையதே.
இந்த உயிர்களெல்லாம் - பிறக்கும்
இடமும் எவ்விடமே?
இந்த உயிர்களெல்லாம் - மீள
ஏகும் இடம் எதுவோ? 61
மீள – மீண்டும்
ஏகும் – செல்லும், போகும்.
எங்கிருந்து வந்தோம்? - நாங்கள்
எதனுக் காகவந்தோம்?
இங்கிவ் உண்மையெலாம் - அறிவார்
எவரு மேயுண்டோ? 62
ஒத்த பிறப்பாகும் - நாங்களும்
உங்களைப் போல,
சுத்த சூனியத்தில் - நின்று
தோன்றிய ஆவிகளாம். 63
ஒத்த – சமமான
சூனியம் – ஏதும் இன்மை, Non-existence, vacuum, non-entity, nothingness
மாறி வருந்துயரால் - இன்ப
வாழ்வே நமக்கு இல்லை;
தேறும் அறிஞனே நீ - உண்மை
தெரியக் கூறுகின்றோம். 64
தேறும் - தெளிந்த
நித்திய ஆனந்தத்தை - அரசே!
நீயும் அடைவதுண்டோ?
சித்தத் தெளிவுடையாய் - சிறிது
சிந்தனை செய்திடுவாய். 65
நித்திய ஆனந்தத்தை – இன்ப துன்பங்களுக்கு அப்பால் உள்ள ஆனந்தம்
அன்பு இருக்குமெனில் - அதிலும்
அளவ றியவொண்ணா
இன்பம் எய்திடலாம் - ஐயம்
யாது மேயில்லை. 66
அளவறிய + ஒண்ணா - அளவிட முடியாத
ஒண்ணுதல் - இயலுதல், To be possible, feasible
எய்துதல் – அடைதல், To obtain, acquire, attain
கண்ட வாழ்விதுதான் - நிலையாக்
காற்றின் வாழ்வேயாம்;
கொண்ட தந்தியின்மேல் - எழும்
குரலே போன்றதுவாம். 67
தந்தி - யாழ் நரம்பு, string of a musical instrument
சால வேஉலகம் - துயரால்
தளர்ந்து வாடுதையா!
மாலை மாலையாக் - கண்ணீர்
வடிய விடுகுதையா! 68
சாலவே - நிச்சயமாக, உருதியாக
மாலை - வரிசை (தொடர்ந்து), Line, row
வாழ்வு மாயமெனும் - உண்மை
மனத்திற் கொள்ளாமல்,
நாளும் நைந்திடுதல் - எமக்கு
நகைப்பே தருகுதய்யா! 70
நைந்திடுதல் – வருந்துதல், To be deeply afflicted
நைதல் - தளர்தல் To droop, languish, faint
நீல மேகந்தான் -ஆணையால்
நிலையில் நின்றிடுமோ?
தாலத் தோடும்நதி - கையால்
தடுக்க மாறிடுமோ? 71
தாலத் தோடும் - நிலத்தில் ஓடும்
தாலம் - பூமி
துன்பச் சுழியிலே - விழுந்து
சுழலும் உலகத்தை
இன்பக் கரையேற்ற - நீயும்
இரங்கிட வேண்டும். 72
சுழி - நீர்ச்சுழி Whirl, vortex, eddy
வையம் முழுவதையும் - காக்க
வந்திங் கவதரித்த
ஐயனே! ஆளுதற்குக் - காலம்
அணுகி வருகுதையா! 73
'என்று வந்திடுவான் - ரக்ஷகன்
எவ்விடம் தோன்றிடுவான்'
என்றுஇப் புவியெலாம் - நோக்கி
எதிரே நிற்குதையா! 74
ரக்ஷகன் - இரட்சகன் – காப்பாற்றுவோன் Saviour, Protector.
கண்ணிலா உலகம் - இடறிக்
கவிழ்ந்து வீழாமல்,
அண்ண லேஎழுந்து - விரைவில்
அருள வேண்டுகின்றோம். 75
இன்னும் தூங்காமல் - வெளியில்
இறங்கி வந்திடுவாய்
அன்னை மாயைதரும் - இனிய
அரசிளங் குமார! 76
ஓய்வு கண்டிடவே - எமைப்போல்
ஓடி ஓடி அலைவாய்;
தாயும் தந்தையுமாய் - உலகைத்
தாங்க வந்தோனே! 77
உலகின் உண்மையை நீ - இன்னும்
உணர்ந்திட வில்லை,
அலகில் கருணையால் - உயிரை
ஆள வந்தோனே! 78
அலகில் - அளவில்லாத
அன்ப ருக்காக - ஆசை
அறுத்திட வேண்டும்;
துன்பம் நீங்கிடவே - அரசும்
துறந்திட வேண்டும். 79
மாயப் பொய்மைகளைக் - கண்டு
மயங்கி டாதே, ஐயா!
நேய மாகஉண்மை - நாங்கள்
நிகழ்த்த வந்தோம், ஐயா! 80
நேயம் - 1. அன்பு 2. ஈரம்
... .....................but once they set
A stringed gourd on the sill, there where the wind
Could linger o’er its notes and play at will
Wild music makes the wind on silver strings
And those who lay around heard only that;
But Prince Siddhàrtha heard the Devas play,
And to his ears they sang such words as these:
We are the voices of the wandering wind,
Which moan for rest and rest can never find;
Lo! as the wind is, so is mortal life,
A moan, a sigh, a sob, storm, a strife.
Wherefore and whence we are ye cannot know,
Nor where life springs, nor whither life doth go;
We are as ye are, ghosts from the inane,
What pleasure have we of our changeful pain?
What pleasure hast thou of thy changeless bliss?
Nay, if love lasted, there were joy in this;
But life’s way is the wind’s way, all these things
Are but brief voices breathed on shifting strings.
O Màyà’s son! because we roam the earth
Moan we upon these strings; we make no mirth,
So many woes we see in many lands,
So many streaming eyes and wringing hands.
Yet mock we while we wail, for, could they know,
This life they cling to is but empty show;
’Twere all as well to bid a cloud to stand,
Or hold a running river with the hand.
But thou that art to save, thine hour is nigh!
The sad world waiteth in its misery,
The blind world stumbleth on its round of pain;
Rise, Màyà’s child! wake! slumber not again!
We are the voices of the wandering wind:
Wander thou, too, O Prince, thy rest to find;
Leave love for love of lovers for woe’s sake
Quit state for sorrow, and deliverance make.
So sigh we, passing o’er the silver strings,
To thee who know’st not yet of earthly things;
So say we; mocking, as we pass away,
These lovely shadows wherewith thou dost play.
-- Sir Edwin Arnold. Light of Asia - Book the Third
* * * * * *