தியானம் செய்வது எப்படி? முகப்பு
தியானம் செய்வது எப்படி?
புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி
யுத்ததம்மோ பிக்கு
How To Meditate:
A Beginner's Guide to Peace
Yuttadhammo Bhikkhu
அதிகாரம் நான்கு: அடிப்படைக் கோட்பாடுகள்
Chapter Four: Fundamentals
இந்த அத்தியாயத்தில் தியானம் செய்வதற்கு அத்தியாவசியமான நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறுகிறேன் [1]. தியானம் செய்வது என்பது முன்னும் பின்னும் நடப்பதும் அசையாமல் உட்கார்ந்திருப்பதும் பற்றியது மட்டும் அல்ல. தியானத்தினால் கிடைக்கும் பலன் நாம் எவ்வளவு நேரம் தியானம் செய்தோம் என்பது பற்றியதும் அல்ல. எந்த அளவு திறமையுடன் தியானித்தோம் என்பதை வைத்துத்தான் அதன் பலனைப் பெற முடியும்.
முதல் அடிப்படைக் கோட்பாடு தியானத்தை நிகழ்கின்ற கணத்தில் பயில வேண்டும் என்பதாகும். தியானத்தின் போது ஒவ்வொரு கணத்திலும் உள்ள அனுபவத்தின் மீது மனம் உன்னிப்பாக இருக்க வேண்டும். ஒருபோதும் கடந்த காலத்தைப் பற்றியும் அல்லது எதிர்காலத்தைப் பற்றியும் மனம் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. எவ்வளவு நேரம் தியானித்தோம் என்றோ, இன்னமும் எவ்வளவு நேரம் தியானிக்கப் போகிறோம் என்றோ மனம் எண்ணமிடக் கூடாது. நிகழ்கின்ற கணத்தில் மனத்தில் தோன்றும் பொருட்கள் மீதே கவனம் இருக்க வேண்டும். ஒரு போதும் இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் மனம் செல்லக் கூடாது.
நிகழ்காலத்தோடு மனம் தொடர்பில்லாமல் இருந்தால், அது நமது உண்மை அனுபவத்தோடு தொடர்பில்லாததற்கு ஒப்பாகும். ஒவ்வொரு அனுபவமும் ஒரு கணம் மட்டுமே நீடிப்பதால், அந்த அனுபவத்தை அந்தக் கணத்திலேயே அறிய வேண்டும். அனுபவங்கள் தோன்றி, நீடித்து, மறைவதை உள்ளது உள்ளபடியே மந்திர வார்த்தைகளால், மனம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு மட்டுமே உண்மை நிலவரத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது அடிப்படைக் கோட்பாடு தியானத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் என்பதே. மற்ற செயல்களில் பயிற்சி செய்வது போலவே தியானப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து பழக்கமாக்கிக் கொண்டால் மட்டுமே நமது திறனற்ற பற்றுகளையும், பிடிப்புகளையும் கைவிட முடியும். அவ்வப்போது தியானித்து மற்ற சமயங்களில் கடைப் பிடியில்லாமல் (கவனம் இல்லாமல்) இருந்து விட்டால் தியானத்தின் போது பெற்ற மனத்தெளிவு அதைத் தொடரும் மன உளைச்சலின் காரணமாகப் பலவீனமுற்று தியானப் பயிற்சி வீணானதாகத் தோன்றிவிடும். புதிதாகத் தியானிப்போருக்கு இது பெரும் ஏமாற்றத்தையும் செயல்குலைந்த நிலையையும் ஏற்படுத்தி விடும். தினசரி வாழ்க்கையிலும் வெவ்வேறு தியான நிலைகளிலும் தொடர்ந்து கடைப்பிடியோடு இருக்கப் பழகும் வரை புதிதாகத் தியானிப்போருக்குப் பிரச்சனையாக இருக்கும். தொடர்ந்து கடைப்பிடி உண்டானபின்னர் அவர்கள் மன ஒருக்கம் வலுப்பெற்று பயிற்சியின் உண்மையான பலனை அடைவார்கள்.
ஒரு கணத்திலிருந்து அடுத்த கணத்திற்குத் தொடர்ந்து பயிற்சி செய்ய முயல வேண்டும். முறையாகப் பயிற்சி செய்யும் போது, தியானத்துக்கென்று ஒதுக்கிய நேரத்தில் முழு நேரமும் நிகழ்காலத்தில் மனத்தை வைத்திருக்க முயல வேண்டும். ஒவ்வொரு கணத்திலும் ஒரு மந்திர வார்த்தையால் தெளிவான எண்ணத்தை உருவாக்க வேண்டும். நடக்கும் போது கவனத்தை ஒரு பாத அடியிலிருந்து அடுத்ததற்குத் தொடர்ச்சியாகச் செலுத்த வேண்டும். உட்கார்ந்து தியானிக்கும் போது வயிற்றின் உயர்வையும், தாழ்வையும் ஒவ்வொரு அசைவையும் இடைவிடாது கவனிக்க வேண்டும்.
மேலும் நடந்து தியானம் செய்து முடித்த பின்னர் உட்காரும் நிலைக்குச் செல்லும்போதும், அந்த நிலைமாற்றத்தின் ஒவ்வொரு படியையும் கவனித்து அதனை வார்த்தையால் , "குனிதல்", "தொடுதல்", "உட்காருதல்" என்று உடல் நிலை மாற்றதுக்குத் தேவையான உடல் அசைவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். உட்கார்ந்த பின் உடனே வயிறு உயர்வதையும், தாழ்வதையும் உட்கார்ந்திருக்கும் நேரம் முழுவதும் கவனிக்க வேண்டும். உட்கார்ந்து தியானித்து முடித்த பின்னரும் தொடர்ந்து நிகழ்காலத்தில் தினசரி வாழ்க்கையைத் தொடர வேண்டும். முடிந்த அளவு அடுத்துத் தியானிக்கத் துவங்கும் வரை அதே கடைப்பிடியைக் கொண்டிருக்க வேண்டும்.
தியானப்பயிற்சி என்பது மழை பொழிவதைப் போல. ஒவ்வொரு கணத்தையும் அறிந்திருப்பது என்பது ஒரு நீர்த்துளிக்குச் சமமாகும். ஒரு துளி என்பது பெரிதாகத் தோன்றவில்லையெனினும், தொடர்ந்து ஒவ்வொரு கணமும் அறிநிலையோடு இருக்கும்போது, இந்த ஒருக்கமுள்ள கணங்களெல்லாம் சேர்ந்து மிக வலிமையான மனஒருமுகப்பாட்டினை உருவாக்கி உண்மை நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும் - சிறு சிறு மழைத்துளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஏரியை நிரப்புவதைப்போலவும், ஒரு கிராமத்தையே வெள்ளம் சூழ்வதைப் போலத்தான் இதுவும்.
மூன்றாம் முக்கியக் கோட்பாடானது தெளிவான அறிநிலையை உருவாக்கும் முறை சம்பந்தப் பட்டது. சாதாரண மனத்தில் அனுபவங்களைப் பற்றிய தெளிவு குறைவாக இருக்கும். போதுமான அளவு உண்மை நிலையைத் தெளிவாக்காததன் காரணமாகத் திறனற்ற பழக்க வழக்கங் களையும், போக்குகளையும் மாற்ற முடியாது. தியானிக்காதோரிடமும், ஏன் விலங்குகளிடமும் உள்ளது சாதாரண அறிநிலை. தெளிவான அறிநிலையை மனத்தில் உருவாக்க வேண்டு மென்றால் மனத்தில் மூன்று பண்புகள் இருக்க வேண்டும்: [2]
1. முயற்சி - நடப்பதை நடக்கும் போதே அறிந்திருக்க வேண்டுமானால் "உயர்தல்", "தாழ்தல்" போன்ற வார்த்தைகளால் நடப்பதை வர்ணிப்பது மட்டும் போதாது. உண்மை நிலையை அறிந்து கொள்ள இது மட்டும் போதாது. மனத்தை அனுபவப் பொருளிடம் உற்சாகமாக அனுப்ப வேண்டும். அந்தப் பொருள் - அது எந்தப் பொருளானாலும் சரி - அது தோன்றி, தொடர்ந்து, மறையும் வரை மனத்தை அதனுடனே வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வயிற்றின் உயர்வு, தாழ்வைக் கவனிக்கும்போது வயிற்றையே கவனிக்க வேண்டும். ஒவ்வொரு கணத்திலும் அது உயர்ந்து தாழும் போது மனம் அதனோடேயே இருக்க வேண்டும். தலையிலோ, வாயிலோ மந்திர வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுவதற்குப் பதிலாக அனுபவம் நடைபெறும் இடத்திற்கே மனத்தை அனுப்பி அங்கேயே மந்திர வார்த்தையைக் குறிப்பிட வேண்டும்.
2. அறிவு - மனத்தைப் பொருளிடம் அனுப்பியபின்னர் பொருளை உணருமாறு மனத்திடம் கட்டளையிட வேண்டும். "உயர்வு", "தாழ்வு" என்று சொல்லிக் கொண்டே மனத்தைப் பொருள் மீது கண்மூடித்தனமாக கவனம் செலுத்தச் சொல்வதற்குப் பதிலாக அந்த அசைவு தோன்றுவதிலிருந்து மறையும் வரை அந்த அசைவுடனேயே மனம் இருக்க வேண்டும். அனுபவப் பொருள் உடல் வலியாக இருந்தால் தொடர்ந்து அந்த உடல் வலியையே கவனிக்க வேண்டும்; எண்ணமாக இருந்தால் அந்த எண்ணத்தைக் கவனிக்க வேண்டும், அந்த எண்ணம் சம்பந்தப்பட்ட செயல்களுள் தொலைந்து போய்விடக்கூடாது.
3. அறிந்ததை அறிவித்தல் - அனுபவப் பொருளை அறிந்த பின்னர், அந்த அனுபவத்தை உள்ளது உள்ளபடி குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதனோடு பற்றோ, வெறுப்போ கொள்ளக் கூடாது. மன உளைச்சல் ஏற்படுத்தும் எண்ணங்கள் - "இன்பம்", "துன்பம்", "நான்", "எனது" போன்ற திறனற்ற எண்ணங்களுக்குப் பதிலாக இருப்பது தான் அறிந்ததை அறிவிக்கும் மந்திரவார்த்தைகள். அனுபவப் பொருளைப் பற்றித் தீர்ப்புக் கூறாமல் அதன் உண்மை நிலையைப் பற்றி நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்கிறோம்.
நான்காவது முக்கியப் பண்பு மனத்தின் சிந்தனா சக்திகளைச் சமநிலையில் வைத்திருப்பதாகும். மரபுப்படி ஆன்மீக வளர்ச்சிக்கு மனத்தில் ஐந்து முக்கிய சிந்தனா சக்திகள் உள்ளதாகக் கருதப் படுகிறது.
அவை:
1. நம்பிக்கை
2. முயற்சி
3. கடைப்பிடி
4. ஒருக்கம்
5. விவேகம்.
இவை ஐந்தும் மனத்திற்கு மிகவும் உதவிகரமானவை. ஆனால் இவை ஒன்றுக் கொன்று சமநிலையில் இல்லாவிட்டால் நாம் விரும்பாத விளைவை ஏற்படுத்தி விடலாம். உதாரணமாக ஒருவருக்குப் பலமான நம்பிக்கை இருந்தும் விவேகம் குறைவாக இருக்கலாம். இதன் காரணமாக அவர் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்திருப்பதால், உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ளாமல் நம்பிக்கையின் காரணமாகவே செய்திகளை ஏற்றுக் கொள்கிறார். இதனால் உண்மையை உள்ளபடி அறிந்து கொள்ள முயற்சிசெய்யாமல் உண்மையோ, இல்லையோ செய்திகளை உண்மையென்று நம்பிக்கையின் காரணமாக ஏற்று கொண்டு வாழ்கிறார்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் நம்பிக்கைகளை உண்மை நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து தியானத்தினால் கிடைக்கும் விவேகத்தைப் பயன்படுத்தித் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் நம்பிக்கைகளின்படி உண்மை இதுதான் என்று ஊகித்துக் கொள்ளக் கூடாது. அப்படியே அவர்கள் நம்பிக்கை உண்மை நிலைக்கு ஒத்து இருந்தாலும் அது பலம் குன்றியதாகவே இருக்கும். ஏனென்றால் அவர்கள் அந்த உண்மையைத் தாங்களாகவே அறிந்து கொள்ள வில்லை. தாங்களாகவே அறிந்திருந்தால் அது ஆதரவோடு உள்ள நம்பிக்கையாக இருக்கும்.
அதே சமயம் வலுவான விவேகம் இருந்தும் நம்பிக்கை குறைவாக உள்ளவர்கள், தாங்கள் செல்லும் மார்க்கத்தின் மீது சந்தேகம் கொண்டு அந்த மார்க்கத்தைப் பின்பற்றப் போதுமான முயற்சி எடுக்க மாட்டார்கள். போதுமான விசாரணை செய்யும் வரை தங்கள் அவநம்பிக்கையை அவர்களால் கைவிட முடிவதில்லை. அதிகாரபூர்வமானவர்கள் மார்க்கத்தை விளக்கிக் கூறினாலும் அவர்கள் தாங்களே அறிந்து கொள்ள விசாரணை செய்யாமல் சநதேகத்திலும், விவாதத்திலும் ஈடுபடுவார்கள்.
இது போன்ற மனப்போக்கு, தியானத்தில் முன்னேறுவதற்குத் தடையாக இருக்கும். தியானிப்பவரின் அவநம்பிக்கையின் காரணமாக மனத்தை ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கும். அவர்கள் சந்தேகமும் அவநம்பிக்கையும் உண்மையாக விசாரணை செய்வதற்கு ஒரு தடையாக இருப்பதை உணர்ந்து முன்கூட்டியே ஒரு தீர்ப்புக்கு வந்து விடாமல் தியானத்தின் விளைவுகளுக்குப் போதுமான வாய்ப்புத்தர வேண்டும்.
அதேபோல, ஒருவர் கடும் முயற்சி செய்யக் கூடியவராக இருந்தும் மன ஒருக்கம் குறைவாக உள்ளவராக இருக்கலாம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு எதன்மீதும் அதிக நேரம் கவனம் செலுத்தமுடியாதவராக இருப்பார். ஒரு சிலர் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் அவர்களது பிரச்சனைகளைப் பற்றியும் மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதை விரும்புவார்கள். அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால் இவ்வாறு செயல்படுவதால் அழுத்தமும் துக்கமும் மனச் சஞ்சலமும் ஏற்படும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அப்படிப் பட்டவர்கள் தங்கள் மனச் சஞ்சலத்தின் காரணமாக நீண்ட நேரம் தியானத்தில் உட்கார முடிவதில்லை; தங்களுடனே நேர்மையாக இருந்தார்களென்றால் அவர்களின் துன்ப மனநிலை அவர்களின் எண்ணப்போக்கின் கரணமானதென்றும் அதற்குத் தியானம் காரணமல்ல என்பதையும் உணர்ந்து பொறுமையாக இந்தத் துர்ப்ழக்கத்திலிருந்து விடுபட்டு வாய்மையை உள்ளது உள்ளபடி காணப் பயிற்சிசெய்வார்கள். தினசரி வாழ்க்கையில் மன நடவடிக்கைகள் தேவை தான் என்றாலும், எப்படிப்பட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும். எல்லா எண்ணங்களுக்கும் இடம் கொடுத்தால் அது மன உளைச்சலுக்குக் காரணமாகிவிடும்.
இறுதியாக, ஒருவருக்கு உறுதியான மனஒருக்கம் இருந்து, ஆனால் பலவீனமான முயற்சி உடையவராக இருந்தால், அப்படிப்பட்டவர் தியானத்தின் போது சோம்பலும், தூக்க முடையவராகவும் இருப்பார். அப்படிப்பட்டவர் உண்மையைத் தெளிவாகப் பார்ப்பதில் தடங்கலுண்டாக்குபவர்களாக இருப்பார்கள். ஏனெனில் தியானத்தின் போது தூங்கி வழிவதிலேயே அவர்கள் மனநாட்டம் செல்லும். இந்த இயல்பு கொண்டவர்கள் களைப்பாய் உள்ள போது நின்று தியானம் செய்வதையும் அல்லது நடந்து தியானம் செய்வதையும், பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் ஊக்கம் அளிக்கப் பட்டு மனமும் உன்னிப்பான நிலையில் இருக்க உதவும்.
ஐந்தாம் பண்பான கடைப்பிடி என்பது தெளிவாக உள்ளதை உள்ளபடி குறித்துக் கொள்வதைக் குறிக்கும் மற்றொரு வார்த்தையாகும். இது சமநிலையான மனத்தைத் தெளிவு படுத்து கிறது. ஆக இது மற்ற இயல்புகளைச் சமநிலைப் படுத்துவது மட்டுமின்றி, அப்படிச் செய்வதன் விளைவாக ஏற்படும் பலன் என்றும் கூறலாம். கடைப்பிடி அதிகரிக்க, அதிகரிக்க நமது பயிற்சியும் மேன்மையுறும். எனவே மற்ற நான்கு இயல்புகளைச் சமநிலைப்படுத்தவும் எப்போதும் உண்மையை உள்ளபடி அறிவதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.
கடைப்பிடிதான் மற்ற இயல்புகளை சமநிலைபடுத்துவதற்கு உகந்தது; அதிகத் தன்னம்பிக்கையினால் அவாவோ, வெறுப்போ ஏற்பட்டால் அதனை "ஆசை, ஆசை" அல்லது "வெறுப்பு, வெறுப்பு" என்று கூறுவதால் நமது விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொள்ள முடியும். சந்தேகம் உண்டானால் "சந்தேகம், சந்தேகம்" என்று குறிப்பிட வேண்டும்; மனஉளைச்சல் இருந்தால், "மனஉளைச்சல், மனஉளைச்சல்" என்று குறிப்பிட வேண்டும்; தூக்கமிருந்தால், "தூக்கம், தூக்கம்" என்று குறிப்பிட வேண்டும்; இதன் மூலம் அந்த நிலை எந்த விசேட முயற்சியும் இல்லாமல் கடைப்பிடி சமநிலைக்கு கொண்டுவரும் இயல்பின் காரணமாகத் தானாகவே சரியாகி விடும்.
மனத்தின் இயல்புகளையும், பண்புகளையும் சமநிலைக்குக் கொண்டுவந்தபின், எந்தச் செயல்களையும் - அதைப்பற்றித் தீர்ப்புச் சொல்லாமல் - அவை தோன்றி மறைவதை மனம் காணும். இதனால் பற்றுகளனைத்தையும் கைவிட்டு மனம் துன்பமின்றித் துக்கத்திலிருந்து விடுபடுகிறது. இரும்பினாலான கடப்பாரையை வலுவான ஒருவரால் எப்படி வளைக்க முடிகிறதோ, அதே போல வலுவான மனத்தையுடையவர்கள் மனத்தை வளைத்து, உருமாற்றி இறுதியாக நேர்படுத்தி ஆரோக்கியமற்ற அனைத்து நிலைகளிலிருந்தும், திறனற்ற நிலைகளிலிருந்தும் மனத்தை விடுவிக்க முடியும். சமநிலையிலுள்ள மனத்தின் காரணமாக ஒருவர் இயற்கையான அமைதி, மகிழ்ச்சி நிலைகளைக் கண்டு எல்லாவிதத் துன்பங்களிலிருந்தும், அழுத்தங்களிலிருந் தும் விடுபடுகின்றார்.
ஆக இதுவே தியானப்பயிற்சியின் முக்கியமான அடிப்படை இயல்புகளின் விளக்கம்.
சுருக்கமாக:
1. தியானத்தை நிகழ்கின்ற கணத்தில் பயில வேண்டும்.
2. தொடர்ந்து பயில வேண்டும்.
3. முயற்சி, அறிவு, அறிந்ததை அறிவித்தல் ஆகியவற்றோடு, தெளிவான எண்ணத்தையும் உண்டாக்க வேண்டும்.
4. மனத்தின் இயல்புகளைச் சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
தியானப் பயிற்சியின் செயல்முறைக்கு இந்தப் பாடம் ஒரு முக்கிய சேர்க்கையாகும். தியானத்தின் பலன் அதன் தரத்திலிருந்தே வருகிறது. எனவே அதன் பலன் எவ்வளவு நேரம் தியானம் செய்தோம் என்பதைப் பொருத்ததில்லை.
உங்கள் பயிற்சியில் இந்தப் போதனைகள் பயன்பட வேண்டும் என்பது எனது மனப்பூர்வமான விருப்பம். அதன் விளைவாக நீங்கள் முழுமையான அமைதியும், மகிழ்ச்சியும் துன்பத்திலிருந்து விடுதலையும் பெற வேண்டும். தியானம் செய்வதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு நன்றி.
விளக்கம்:
[1] எனது ஆசிரியர் அஜான் தோங் சிரிமங்களோவிடமிருந்து நான் இந்த நான்கு தியான இயல்புகளைக் கற்றுக் கொண்டேன்.
[2] மஜ்ஜிம நிகாய (MN10) சதிபத்தான சூத்திரத்திலிருந்து இந்த மூன்று இயல்புகள் தொகுக்கப் பட்டுள்ளன.
* * *