ஒரு வட்டத்தின் வடிவில்
அஜான் சா
In the Shape of a Circle
A Dhamma Talk by Ajahn Chah
(தமது பயிற்சியில் சோர்வடைவதாகக் கூறிய துறவி ஒருவருக்கு அஜான் சா தந்த போதனை.)
அறத்தைப் பொருத்த வரையில், இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்: நமது அபிப்பிராயங்கள் ஒரு விஷயம், ஆனால் அறமோ மாறுபட்ட வேறொன்று.
பயிற்சியைப் பொருத்தவரை, உங்கள் சகிப்புத் தன்மையை முதலில் நிலை நாட்டுங்கள். பின் பிரதிபலியுங்கள். உங்கள் நடவடிக்கைகளையும், மற்றும் வருவதையும் போவதையும் பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். எது தோன்றினாலும், புத்தர் அவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளுமாறு கற்பித்தார். எந்தத் திசையிலிருந்து வந்தாலும், அவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளச் சொன்னார். நமக்கு முழுமையாகத் தெரிந்தால் ஒரு திசையிலிருந்து எது வந்தாலும் அதைத் தெரிந்து கொள்வோம். வேறு திசையிலிருந்து எது வந்தாலும் அதையும் தெரிந்து கொள்வோம். சரியானதைத் தெரிந்து கொள்வோம். தவறானதையும் தெரிந்து கொள்வோம். மகிழ்ச்சியானதைத் தெரிந்து கொள்வோம். திருப்தியானதைத் தெரிந்து கொள்வோம். நாம் முழுமையாக அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
ஆனால் நமது மனம், அவற்றைப் பிரதிபலிக்கும் போது, இன்னும் முழுமையாக இருப்பதில்லை. நமக்கு ஒரு பக்கமே தெரிகிறது. மற்ற பக்கத்தைத் திறந்து விட்டுவிடுகிறோம். இது வயலையோ வீட்டையோ சுற்றி வேலி போடுவது போல. ஆனால் வீட்டைச் சுற்றி வேலி போடாமல் ஒரு பக்கம் மட்டுமே போட்டால், வேலி இல்லாத மறு பக்கத்திலிருந்து திருடர்கள் வரக்கூடும். ஏன் அப்படி? நமது வேலி சரியாகப் போடப் படவில்லை. வேலியில் உள்ள வாயிலை நாம் மூடவில்லை. திறந்திருப்பதால் திறந்த வழியில் திருடர்கள் வருவது நடக்கக் கூடியது தான். எனவே நாம் மேலும் பிரதிபலிக்க வேண்டும், மேலும் வேலியை ஒழுங்குபடுத்தி முழுமையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
வேலி போடுவதென்றால் மனக்கவனத்தை உறுதி செய்து விட்டு எப்போதும் தெரிந்த நிலையில் இருப்பதுதான். இவ்வாறு செய்தால் அறம் வேறு எங்கும் செல்லாது. இங்கேயே இருக்கும். நல்லதானாலும் தீயதானாலும், நாம் பார்க்க வேண்டிய அறம், தெரிந்து கொள்ள வேண்டிய அறம் இங்கேயே எழும்.
நாம் தெரியவேண்டாதவற்றைத் தற்போதைக்கு விட்டு விட வேண்டும். நம்மால் தூக்க முடியாத மரக்கட்டைகளைத் தூக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். ஒரு டிராக்டரோ, பெரிய லாரியோ கிடைக்கும் வரை காத்திருந்து பின் அந்த மரக்கட்டைகளை நகர்த்த முற்படலாம். தற்போதைக்கு உங்களால் தூக்க முடிபவை மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் சகிப்புத் தன்மையின் சக்தியைப் பயன்படுத்திப் படிப்படியாக முயற்சி செய்ய வேண்டும்.
இவற்றை விடாமல் தொடர்ந்தால், உங்கள் மகிழ்ச்சியான மனோபாவங்களும், விரக்தியான மனோ பாவங்களும், உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத மனோபாவங்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடும். அப்போது அவற்றைக் கவனிக்கலாம்.
உங்கள் மனோபாவங்களும், மன நடவடிக்கைகளும் ஒரு விஷயம்; மனமோ மாறுபட்ட வேறு விஷயம். அவை வெவ்வேறு விஷயங்கள். பொதுவாக ஒரு மனோபாவம் தோன்றும் போது, அது நமக்குப் பிடித்திருந்தால், அதைத் தொடர்ந்து ஓடுகிறோம். அது நமக்குப் பிடிக்காததாக இருந்தால், அவற்றிடமிருந்து விலகி விடுகிறோம். நடைமுறை இப்படி இருக்க, நாம் நமது மனத்தைப் பார்ப்பதில்லை. நமது மனோபாவங்களைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். மனோபாவம் மனோபாவந்தான்; மனம் மனம் தான். இவற்றைப் பிரித்து மனம் எப்படிப் பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். மனோ பாவம் எப்படிபட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.
நாம் இங்கே அமைதியாக உட்கார்ந்திருக்கும் போது: நாம் சுகமாக இருக்கிறோம். ஆனால் யாராவது இங்கு வந்து நம்மை இழிவு படுத்தினால், நாம் அதனால் தோன்றிய மனோபாவத்தை விரட்டிக் கொண்டு ஓடுகிறோம். நமது இடத்தை விட்டுவிடுகிறோம். மனோபாவத்தால் ஏமாறும் மனம் மனோபாவத்தைத் தொடர்கிறது. நாம் சோர்வுற்ற மனமுள்ளவராகிறோம், மனோபாவங்களை எப்பொழுதும் தேடிச்செல்வோராகிறோம்.
உங்கள் மனோபாவங்கள் பொய்யானவை என்பதை அறிய வேண்டும். அவற்றில் எந்த உண்மையும் இல்லை. அவை புத்தரின் போதனைகளுக்கு வெகு தொலைவில் உள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் புறங் கூறுவதைத் தவிர நாம் வேறேதும் செய்வதில்லை. புத்தர் அவற்றின் உண்மை நிலையைப் பற்றித் தியானிக்கச் சொன்னார் - இது உலகம் புகட்டும் உண்மை.
உலகம் தான் நமது மனோபாவங்கள், நமது மன நடவடிக்கைகள். நமது மன நடவடிக்கைகள் தான் உலகம். அறத்தைப் பற்றித் தெரியாவிட்டால், மனத்தைப் பற்றித் தெரியாவிட்டால், நமது மன நடவடிக்கைகளைப் பற்றித் தெரியாவிட்டால் நமது மனத்தையும் அதன் நடவடிக்கைகளையும் பற்றிக் கொள்கிறோம். பின் இவை எல்லாம் ஒன்றாக எண்ணிக் குழப்பிக் கொள்கிறோம். "அட, மனம் ஆறுதலோடு இல்லையே." பல மனங்கள் உங்களுக்கு இருப்பது போலவும், அவை எல்லாம் குழம்பிய நிலையில் இருப்பதாகவும் தோன்றுகிறது. உண்மையில் அப்படி இல்லை. உங்களுக்குப் பல மனங்கள் இல்லை. உங்களுள் பல மனோபாவங்களும், மன நடவடிக்கைகளுமே இருக்கின்றன. நமது மனத்தை நாம் தெரிந்து கொள்ளாததால் தான் நாம் மன நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஓடுகிறோம். தியானிக்கும் போது இத்தகைய மனநிலையில் இருந்தால், நிகழ்ச்சிகளும் அது போலவே சென்று கொண்டிருக்கும்.
புத்தர் நிகழ்ச்சிகளை அங்கேயே பார்க்கச் சொன்னார். தோன்றும் இடத்திலேயே பார்க்கச் சொன்னார். தோன்றும் போது, அவை நிலைத்திருப்பதில்லை. அவை கலைந்து விடுகின்றன. கலைந்துவிட்டுப் பின் மீண்டும் தோன்றுகின்றன. தோன்றியபின் மறைகின்றன - ஆனால் நாம் அவ்வாறு இருப்பதை விரும்புவதில்லை. மனம் அமைதியாக இருக்கும் போது தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். அது கிளர்ச்சி அடைவதை விரும்புவதில்லை. நாம் ஆறுதலோடு இருக்க விரும்புகிறோம். நமது கருத்து வாய்மைக்கு எதிரானது. புத்தர் இவற்றை எல்லாக் கோணங்களிலிருந்தும், முழுமையாகப் பார்க்கச் சொன்னார். அப்போதுதான் மனம் உண்மையிலேயே அமைதி அடையும், அசைவில்லாமல் இருக்கும். இவற்றைத் தெரிந்து கொள்ளாதவரை, நமது மனோபாவங்களைத் தெரிந்து கொள்ளாதவரை நாம் சோர்வுற்ற மனமுள்ளவராகவே இருப்போம். மனோபாவங்கள் நமது என்று எண்ணுகிறோம். இது பிடிவாத குணத்தையும் ஆணவத்தையும் வளர்க்கிறது.
இப்படி நடப்பதைப் பார்க்கும் போது புத்தர் நமது கவனத்தை இவற்றின் மீது செலுத்தச் சொன்னார்: "இது போன்ற எண்ணமே எண்ணுதல்; இது போன்ற தெரிந்திருத்தலே தெரிந்திருத்தல்; நிகழ்ச்சிகள் இப்படி இருந்தால், அவை இப்படித்தான் இருக்கும்." இவையெல்லாம் தங்கள் இயல்பைத் தொடர்ந்து செல்கின்றன என்று உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள். இப்படித்தான் மனோபாவங்கள் இருக்கின்றன. இப்படித்தான் மனம் உள்ளது. இப்படி நிகழ்ச்சிகள் இருக்கும் போது நீங்கள் ஆறுதலாக இருக்க என்ன செய்வது? ஆறுதலாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்? இதுபோலப் பிரதிபலியுங்கள்.
இவ்வாறு நிகழ்ச்சிகள் இருப்பதை நாம் விரும்புவதில்லை: அதனால் தான் நாம் நிம்மதியின்றி இருக்கிறோம், இவற்றை விட்டு ஓடுவதற்கு எங்கு சென்றாலும், அவை இருக்கும் நிலையிலேயே இருக்கின்றன. எனவே அவை தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப் போல உள்ளன என்பதை அறியவேண்டும், அவ்வளவு தான். இதுவே உண்மை. எளிமையாகச் சொல்லப் போனால், அதுவே புத்தர். ஆனால் நாம் அவரைப் பார்ப்பதில்லை. நாம் தேவதத்தனையே [1] காண்கிறோம், புத்தரை அல்ல.
அறத்தின் - நிலையாமை, துக்கம், தான் இன்மை: இவற்றில் தவறேதும் இல்லை. இது தான் வாய்மையின் இயல்பு. அவற்றிற்கு நாம் பல பெயர்களையும், நோக்கங்களையும் சூட்டுகிறோம். இவற்றைப் பார்க்க முடிந்தால், அது மிகவும் நல்லது.
எளிமையாகச் சொல்லப் போனால்: இன்று ஒருமைப்பாடு தியானம் செய்யும் போது மனம் அமைதியாக இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். “ஓ, இது மிகவும் இனிமையாக இருக்கிறது" என்று உங்களுக்குள் நினைத்துக் கொள்கின்றீர்கள். உட்கார்ந்திருப்பதோடு ஆறுதலாக இருக்கின்றீர்கள். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நல்ல அனுபவமாக இருக்கிறது. "ஆம், இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அடுத்த நாள் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் போது செவ்வெறும்புப் புற்றின் மீது உட்கார்ந்து இருப்பது போன்று தோன்றுகிறது. உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. எதுவும் வேலை செய்வதில்லை. நீங்கள் மிகவும் துக்கப்படுகின்றீர்கள். "ஏன் அன்று போல இன்றைய அனுபவம் இல்லை? அன்று ஏன் மிகவும் வசதியாக இருந்தது?" என்று உங்களையே கேட்டுக் கொள்கின்றீர்கள். அந்த நாளைப் பற்றி எண்ணாமலிருக்க முடியவில்லை. அன்று போல் இன்றும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றீர்கள். அந்தக் கணத்திலேயே நீங்கள் ஏமாந்தவராக இருக்கின்றீர்கள்.
மனத்தின் நடவடிக்கைகள் மாறக் கூடியவை. அவை நிலையானவையோ நிச்சயமானவையோ இல்லை; அவை உறுதியானவை இல்லை. தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் நடந்து கொள்கின்றன. புத்தர் அவை அப்படித்தான் இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளச் சொன்னார். எது மனத்தில் தோன்றினாலும் முன்னரே எழுந்து மறைந்து, மீண்டும் வந்துள்ள தோற்றம் தான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் அவற்றிற்குப் பெயர் சூட்டி விதிகளையும் உண்டாக்குகிறோம்: "இது எனக்குப் பிடித்தது, இது எனக்குப் பிடிக்காதது." நமக்குப் பிடித்தது நம்மை மகிழ்விக்கிறது - நமது ஏமாற்றத்தின் காரணமான மகிழ்ச்சி இது: நமது ஏமாற்றத்தின் காரணமான மகிழ்ச்சி இது. இது சரியானதென்பதால் உண்டான மகிழ்ச்சி இல்லை.
மனம் அமைதியாக இருக்கும் போது, அதனால் போதையடைந்துவிட வேண்டாம் என்கிறார் புத்தர். மனம் அமைதியற்று இருக்கும் போதும், அதனால் போதையடைந்து விடவேண்டாம் என்கிறார். நிகழ்ச்சிகள் பல வகைகளில் நடைபெறுகின்றன. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் பேர்தல் அனைத்துமே இருக்கின்றன. அப்படித்தான் எண்களைக் கணக்குப் போட முடியும். ஆனால் நாம் பெருக்கல் மட்டுமே வேண்டும் என்கிறோம். ஏனென்றால் நாம் பொருட்களை விரைவில் பெருமளவில் சேர்ப்பதற்கே விரும்புகிறோம். கூட்டல், கழித்தல், பேர்த்தலை ஒதுக்க விரும்புகிறோம் - இதனால் நமது கணக்கெல்லாம் முட்டாள் தனமாகவே இருக்கிறது. பெருக்கல் மட்டுமே இருந்தால் பொருட்களை வைப்பதற்கு இடம் இருக்குமா? இப்படிப்பட்ட எண்ணப் போக்கு இருந்தால் நாம் கிளர்ச்சியான மனநிலையோடே இருப்போம். புத்தர் அப்படிப்பட்ட எண்ணப் போக்கில் உன்னிப்பு இல்லை என்கிறார்.
அசைவில்லா மனம் - சமாதி என்கிற அமைதி - என்பது நமது நடவடிக்கைகளிலிருந்து வெகு தூரம் தள்ளியிருப்பதால் உண்டாகிறது. அதிகம் இரைச்சலின்றி இருந்தால் மனம் அடங்கி அமைதியாகிறது. இதுபோன்ற அமைதி பெறுவதற்குத் தனிமையை நாடிப் போக வேண்டும். அமைதியான ஒரு இடத்துக்குப் போக வேண்டும். உங்களது மன நடவடிக்கை களிலிருந்து ஓய்வு கிடைத்தால், இதைப் பார்க்காமல், அதை பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் மனம் அடங்கிவிடும். ஆனால் இது ஒரு நோய். புற்று நோயைப்போல ஒரு நோய். ஒரு வீக்கம் உண்டாகிறது ஆனால் இன்னும் வலிப்பதில்லை. அது இன்னும் பெருமளவில் இம்சை செய்வதில்லை. நம்மைத் துன்புறுத்துவதில்லை. ஆகவே நாம் நலமாகவே இருப்பது போலத் தோன்றுகிறது - அதாவது மனத்தில் கிலேசங்கள் இல்லாதது போலத் தோன்றுகிறது.
அது போன்ற சமயங்களில் மனம் அப்படித்தான் இருக்கும். அந்தச் சூழலில் இருக்கும் வரை மனம் அமைதியாக இருக்கும். ஆனால் காட்சிகளைப் பார்க்க வெளியே வந்தவுடன், சப்தங்களைக் கேட்கத் துவங்கியவுடன் அதன் அமைதி முடிந்து விடுகிறது. ஆறுதலாக இல்லை. எப்படித் தனிமையாகவே காட்சிகளைப் பார்க்காமல், சப்தங்களைக் கேட்காமல், வாசனைகளை நுகராமல், சுவைகளைச் சுவைக்காமல், எதையும் தொட்டு உணராமல் இருப்பது? அவ்வாறு இருக்க எங்கே போவது? அது போன்ற இடம் உலகில் இல்லவே இல்லையே!
புத்தர் நம்மைக் காட்சிகளைப் பார்க்க, சப்தங்களைக் கேட்க, வாசனைகளை நுகர, சுவைகளைச் சுவைக்க, பொருட்களைத் தொட்டு உணரச் சொன்னார்: சூடு, குளிர், கெட்டி, மென்மை. இவற்றை எல்லாம் தெரிந்திருக்கச் சொன்னார். எதையும் விட்டுவிட்டு ஓடி ஒளிந்திருக்கச் சொல்லவில்லை. அவர் நம்மைப் பார்க்கச் சொன்னார், பார்த்த பின் அறியச் சொன்னார்: "ஓ, இவற்றின் இயல்பு இப்படித்தான்." என உணர்ந்து உன்னிப்பை வளர்த்துக் கொள்ளச் சொன்னார்.
உன்னிப்பை எப்படி வளர்ப்பது? புத்தர் அது அப்படி ஒன்றும் கடினமான செயல் இல்லை என்றார் - தொடர்ந்து முயற்சித்தால் கடினம் இல்லை. கவனத்தை ஈர்ப்பவை தோன்றும் போது: "ஓ, இவை உறுதியற்றவை. நிலையற்றவை." என்று உணரச் சொன்னார். "ஓ, இது உண்மையிலேயே இன்பமாகவும் அமைதியாகவும் இருக்கிறது." என்று மனம் அமைதியாக இருக்கும் போதும் சொல்லாதீர்கள், அதுவும் உறுதியில்லை. என்னை நம்பவில்லையென்றால், நீங்களே பரிசோதித்துப் பாருங்கள்.
உங்களுக்கு ஒரு வகையான உணவு பிடித்திருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். "ஆகா, எனக்கு இந்த உணவு மிகவும் பிடித்திருக்கிறது!" என்று உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்கின்றீர்கள். அதையே தினந்தோறும் சாப்பிட்டுப் பாருங்கள். எத்தனை மாதங்களுக்கு இதைத் தொடர்ந்து உண்ண முடியும்? "போதும், இது சலிப்பும், வெறுப்பும் உண்டாக்கிவிட்டது. தெரிகிறதா? இது சலிப்பும், வெறுப்பும் உண்டாக்கிவிட்டது." என்று நினைக்க நீண்ட நாள் ஆகாது. முன்பு உங்களுக்குப் பிடித்த ஒன்றின் மீது இப்போது சலிப்பும் வெறுப்பும் உண்டாகி விட்டது.
மாற்றங்களினால் தான் நாம் தொடர்ந்து வாழமுடிகிறது. எனவே எல்லாம் நிலையற்றதென்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்பமும் உறுதியில்லை, துன்பமும் உறுதியில்லை; மகிழ்ச்சியும் உறுதியில்லை, அமைதியும் உறுதியில்லை, கவனத்தைத் திசை திருப்புபவையும் உறுதியில்லை. எதை எடுத்துக் கொண்டாலும், அவை எல்லாம் உறுதியற்றவை. மனத்தில் என்ன தோன்றினாலும், அதனிடம் சொல்லிவிடுங்கள்: "என்னை ஏமாற்றப் பார்க்காதே. நீ உறுதியில்லை." அப்போது எதற்கும் மதிப்பில்லாமல் போய்விடுகிறது. இதுபோன்ற கருத்தை வளர்த்துக் கொண்டால், மிகவும் நல்லது. உங்களுக்குப் பிடிக்காதவை எல்லாம் உறுதியற்றவை. எதனோடு வந்தாலும் அவை உறுதியற்றவையே. இது, எதை எடுத்துக் கொண்டாலும் ஒரே விலை என்று கூறி உங்களிடம் பொருட்களை விற்க முயலும் வியாபாரியைப்போல.: அவை உறுதியற்றவை - எல்லா விதத்திலும் உறுதியற்றவை. வேறு வார்த்தையில் சொல்லப்போனால், அது நிலையற்றது. அது முன்னும் பின்னும் அசைந்து கொண்டே இருக்கிறது.
எளிமையாகச் சொல்லப்போனால், அதுவே புத்தர். நிலையற்றது என்றால் எதுவும் உறுதியற்றது. அதுவே உண்மை. நாம் ஏன் உண்மையைப் பார்ப்பதில்லை? ஏனென்றால் அதைத் தெளிவாகப் பார்க்க முயற்சிக்கவில்லை. "யாரெல்லாம் அறத்தைக் காண்கின்றனரோ, அவரெல்லாம் புத்தரைக் காண்கிறார்." ஒவ்வொன்றின் நிலையற்றதன்மையைப் பார்க்கும் போது, உங்களுள் 'நிப்பிதா' [2] எழுகிறது: அதாவது உலகின் மீதான மோகம் குறைகிறது. உலக நிகழ்வுகள் உங்களைக் களைப்படையச் செய்கின்றன (மெய்யறிவினால் ஏற்படும் திறமையான மாற்றம் இது). "அவ்வளவு தானா, இது பெரிய காரியம் இல்லை. அது அவ்வளவு தான், அது பெரிய காரியம் இல்லை." ஒருமுகப்பட்ட மனம் - அது பெரிய நிகழ்வு இல்லை.
இப்படிச் செய்ய முடிந்தால், பிரதிபலிப்பது இனிமேல் கடினமான வேலையாக இருக்காது. எந்த நடவடிக்கையானாலும், "இது பெரிய விஷயம் இல்லை," என்று மனத்தில் சொல்லிக் கொள்ளுங்கள். அது அங்கேயே நின்று விடும். எல்லாம் சாராம்சம் இல்லாமல் வீண் வேலையாகிவிடும்: நிச்சயமற்றதெல்லாம், நிலையற்றதெல்லாம். அவை அசைந்து கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்றன. அவை நிலையற்றவை, துக்கம் விளைவிப்பவை, நமதும் இல்லை. அவை உறுதியற்றவை.
இது சூடாக்கப்பட்ட சிவந்து அனல் பறக்கும் இரும்புத் துண்டைப் போல: அந்த இரும்புத் துண்டில் குளுமையான பகுதி எதாவது இருக்கிறதா? அதைத் தொட்டுப் பாருங்கள். மேலாகத் தொட்டால் சுடும். கீழ் பகுதியில் தொட்டால் சுடும். பக்கங்களில் தொட்டாலும் சுடும். அது ஏன் சூடாக இருக்கிறது? ஏனென்றால் அது முழுவதுமே சிவந்த சூடான இரும்புத் துண்டு. அதில் எங்கு குளுமையான பகுதி இருக்கமுடியும்? அதுதான் அதன் இயல்பு. அப்படி இருக்கும் போது அதைத் தொட்டுப் பார்க்க வேண்டியதில்லை. "இது நல்லது, எனக்குப் பிடித்திருக்கிறது," என்று நினைத்து உங்கள் உத்தரவாத முத்திரையை அளிக்க வேண்டாம். அது ஒரு மிகச் சூடான இரும்புத் துண்டு. அதை எங்கு தொட்டாலும், எங்கு பிடித்தாலும் உங்களை உடனே எல்லா விதத்திலும் சுட்டுவிடும்.
ஆகவே தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நிற்கும் போதும், நடக்கும் போதும் என்ன செய்து கொண்டிருந்தாலும் - கழிவரையில் இருக்கும் போதும் அல்லது உணவு கேட்கப் போகும் போதும்: சாப்பிடும் போது அதைப் பெரிய விஷயம் ஆக்கவேண்டாம். உணவு மறு முனையிலிருந்து வரும் போது அதைப் பெரிய விஷயம் ஆக்கவேண்டாம். எதுவாயிருந்தாலும், அது நிலையற்றது, அது நிச்சயமற்றது. எந்த விதத்திலும் வாய்மை இல்லாதது. அது ஒரு உலையிலே காய்ச்சப்பட்ட சூடான இரும்புத் துண்டைத் தொடுவது போல. அதை எங்கு தொடுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் அது முழுவதுமே சூடாக உள்ளது. எனவே அதைத் தொடுவதையே விட்டு விடுகிறோம். "இது நிலையற்றது. அது நிலையற்றது." எதுவும் உறுதியானது இல்லை.
நமது எண்ணங்களும் நிலையற்றவை, மாறிக்கொண்டே இருப்பவை. அவை ஏன் நிலையற்றவை? அவை நாம் இல்லை. அவை நமது இல்லை. அவை உள்ள நிலையில் இருக்க வேண்டும். அவை உறுதியற்றவை, நிலையற்றவை. எல்லாவற்றையும் இந்தக் கருத்துக்குக் கொண்டு வந்து விடுங்கள். உங்களுக்குப் பிடித்ததெல்லாம் உறுதியற்றது. அதை உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலும் அது உறுதியற்றது. உங்கள் மனத்தை ஆட்கொண்டிருப்பது எதுவாயிருந்தாலும், அதை உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலும், உங்களுக்கே நீங்கள் சொல்லிக் கொள்ள வேண்டும், "இது நிலையற்றது. இது திடமற்றது. இது நிரந்தரமற்றது." பின் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டே இருக்க வேண்டும் ....
இந்தக் கண்ணாடியைப் போல: பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அது உடையாமல் இருக்க ஒரு புறம் வைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். ஆனால் அது உறுதியற்றது. ஒரு நாள் அதை உங்கள் அருகிலேயே வைத்திருந்தும், எதையோ எடுக்கப் போகும் போது, அதைத் தட்டி விடுகின்றீர்கள். தரையில் விழுந்து உடைந்து விடுகிறது. அது உறுதியற்றது. இன்றைக்கு உடையவில்லையென்றால், நாளை உடைந்துவிடும். நாளை உடையவில்லை யென்றால், நாளை மறு நாள் உடைந்துவிடும் - ஏனென்றால் அது உடையும் தன்மை கொண்டது. இவற்றோடெல்லாம் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று நமக்குக் கற்பிக்கப் படுகிறது, ஏனென்றால் அவை நிலையற்றவை.
நிலையற்ற பொருட்கள்: புத்தர் அவற்றை வாய்மையென்றார். நினைத்துப் பாருங்கள். பொருட்களுக்கு வாய்மை (சாராம்சம்) இல்லை என்பதை உணர்ந்தால், அதுவே வாய்மை. அதுவே நிலையானது. உறுதியானது. பிறப்பு இருக்கும் இடத்தில், வயோதிகமும், நோயும், மரணமும் இருக்கும். இதுவே நிலையானதும் உறுதியானதுமாகும்.
நிலையானது, நிலையற்றதிலிருந்து தோன்றுகிறது. பொருட்கள் நிலையற்றதென்றும், உறுதியற்றதென்றும் சொல்கிறோம் --- அது எல்லாவற்றையும் திசை திருப்பி விடுகிறது. அதுவே நிலையானதும் உறுதியானதும். அது மாறுவதில்லை. அது எப்படி நிலையானது? மாறுவது பொருட்களின் இயல்பு என்பது நிலையான உண்மை. நீங்கள் நடுவில் புகுந்து அந்த மாற்றத்தைத் தடுக்கவும் முடியாது. பொருட்கள் தொடர்ந்து தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப்போலச் செல்கின்றன. தோன்றி மறைகின்றன, மறைந்த பின் தோன்றுகின்றன. நிலையற்றதின் இயல்பு அதுவே. அப்படித்தான் அது வாய்மை ஆகிறது. புத்தரும் அவரது சீடர்களும் எழுச்சி பெற்றதற்குக் காரணம் இந்த நிலையற்ற பொருட்களினால் தான்.
நிலையாமையைப் பார்த்தால் அதன் விளைவு 'நிப்பிதா': உலகின் மீதான மோகம் குறைகிறது. அப்படியென்றால் அருவருப்போ, வெறுப்போ இல்லை, தெரியுமா? உங்களுக்கு அருவருப்புத் தோன்றினால், அது தவறான வகையான மோகக் குறைவு. இந்த உலகின் மீதான மோகக் குறைவு என்பது நமது சாதாரணமான அருவருப்பில்லை. உதாரணமாக, உங்கள் மனைவியின் மீதோ பிள்ளைகள் மீதோ அவர்களைச் சகித்துக் கொள்ள முடியாத அளவு உங்களுக்குச் சலிப்பும் சோர்வும் ஏற்பட்டால் அது நிப்பிதா இல்லை. அது ஒரு பெரும் மனக்கிலேசம். அது உங்கள் உள்ளத்தை அழுத்துகிறது. இது போன்றவைகளிடமிருந்து ஓடி விட்டால், அது மனக்கிலேசங்களால் உண்டான சோர்வும் சலிப்பும் தான். அது நிப்பிதா இல்லை. அது பெரும் மனக்கிலேசம். ஆனால் அதை நாம் உலகின் மீதான மோகக் குறைவு என்று தவறாக நினைக்கின்றோம்.
நீங்கள் மக்களிடம் அன்பாகப் பழகுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுகின்றீர்கள். அவர்கள் மேல் அனுதாபம் கொள்கின்றீர்கள். அவர்கள் அழகானவர்கள், அருமையானவர்கள் உங்களுக்கு நன்மை விளைவிப்பவர்கள் என்றே நினைக்கின்றீர்கள். அப்படி இருக்கும் போது உங்கள் மனக்கிலேசங்கள் வேறு திசையிலிருந்து வருகின்றன. கவனமாக இருக்கவேண்டும்! அது அறத்தின் வழியில் வந்த அன்பு இல்லை; அது சுயநல அன்பு. அவர்களிடம் எதையோ எதிர்பார்க்கும் காரணத்தால், அவர்களிடம் அன்பாகப் பழகுகின்றீர்கள்.
அது போலத்தான் உலகின் மீதான சலிப்பும். "இவற்றோடு களைப்பு உண்டாகி விட்டது. இனிமேல் அவர்களோடு இருக்கப் போவதில்லை. போதுமடா சாமி." இந்தப் போக்கு சரியானது இல்லை. இது ஒரு பெரிய மனக்கிலேசம். இது நிப்பிதா என்று சொல்வது பெயரளவில் தான்.
புத்தர் கற்றுத் தந்த உலகின் மீதான மோகக் குறைவு வேறு: உள்ளதை உள்ளவாறு விட்டு விடுவது, பாரத்தை இறக்கிவிடுவது. அவற்றைக் கொல்வதில்லை, அடிப்பதில்லை, தண்டிப்பதில்லை, அவற்றோடு கடுமையாக நடந்து கொள்வதில்லை. அவற்றை இறக்கி விட வேண்டும், அவ்வளவு தான். எல்லாவற்றையும் இறக்கி விடுங்கள். அது போலவே எல்லாவற்றோடும் நடந்து கொள்ளுங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் மனம் விட்டுவிட்டதெனச் சொல்ல முடியும். அதனுள் ஒன்றும் இல்லை: அதாவது பிடிப்பில்லை, பற்றில்லை.
வெறுமையானதென்றால் யாரும் இல்லை என்பதில்லை. இந்தக் கண்ணாடிப் பாத்திரத்தைப் போல: அது வெறுமையானது என்று சொல்வதற்கு அது இல்லாமல் இருக்க வேண்டியதில்லை. இந்த தர்மோஸ் இருக்கிறது; மக்கள் இருக்கின்றனர்; எல்லாம் இருக்கின்றன. ஆனால் அறிந்தவர் உணர்வது இவையே உண்மை என்று: அதாவது அவை உறுதியற்றவை, தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் தொடர்கின்றன: அவை தோன்றி மறையும் தம்மங்கள். அவ்வளவு தான்.
இந்த தர்மோஸை எடுத்துக் கொள்ளுங்கள்: அதைப் பிடித்திருந்தால், அதன் காரணமாக அதனிடம் இருந்து எந்தச் செயற்பாடும் காணமுடியாது அல்லது அது எதுவும் சொல்வதும் இல்லை. அந்த விருப்பம் முழுவதும் நமது சார்பில் தான். அதை வெறுத்துக் காட்டுக்குள் எறிந்துவிட்டாலும் அதனிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. ஏன்? ஏனென்றால் அதன் இயல்பு அப்படித்தான். அதை விரும்புவதும் விரும்பாததும் நமது பற்றின் காரணமாகவே. அது நல்லது என்றும் தீயது என்பதும் நாமே நினைப்பது தான். அது நல்லது என்று நினைத்தால் நமது உள்ளத்தில் ஒரு அழுத்தம் உருவாகிறது. அது தீயது என்று நினைத்தாலும் நமது உள்ளத்தில் ஒரு அழுத்தம் உண்டாகிறது. இரண்டுமே மனக்கிலேசங்கள் தான்.
ஆகவே இவற்றிடமிருந்து இது போல ஓட வேண்டியதில்லை. இந்தக் கோட்பாட்டை அறிந்து பிரதிபலிக்க வேன்டும். வேறு ஒன்றும் இல்லை. இவை ஏதும் பெரிய விஷயம் இல்லை என்பதை மனம் உணரும். உள்ளவை உள்ளவாறு இருக்கின்றன. அவற்றை வெறுத்தால் பதில் வருவதில்லை. அவற்றை விரும்பினாலும் பதில் வருவதில்லை. நாம் தான் பித்துப் பிடித்தவர். எதுவும் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் நாம் கிளர்ச்சி அடைகிறோம். அனைத்தையும் இவ்வாறு பார்க்க முயற்சிக்க வேண்டும்.
இது போலவே உடலும்; இது போலவே மனமும்; இது போலவே மனோபாவங்களும், மன நடவடிக்கைகளும்: இவற்றை நிலையற்றவை, துக்கமுண்டாக்குபவை, நமதில்லை என்று பார்க்க வேண்டும். அவை தங்கள் இயல்புக்குத் தகுந்தார்ப்போல இருக்கின்றன. அப்படி இருக்கக் கூடாது என்று நாம் நினைப்பதால் நாம் துக்கம் அனுபவிக்கின்றோம். நமக்குக் கிடைக்க முடியாதவற்றைக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
உங்களுக்கு ஏதாவது வேண்டும் என்று தோன்றுகிறதா?
"எனக்கு மன ஒருமைப்பாடு வேண்டும் போது, மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்."
சரி. அப்படி விரும்புவது உண்மை தான். ஆனால் உங்கள் மனம் அமைதியற்று இருப்பதற்கு என்ன காரணம்? புத்தர் எல்லாமே காரணங்களால் உண்டாகின்றன என்றார், ஆனால் நாம் விளைவுகளை மட்டுமே விரும்புகிறோம். கொம்மட்டியைச் (தர்ப்பூசினி என்றும் அழைக்கப்படும்) சாப்பிடுகிறோம் ஆனால் என்றும் கொம்மட்டியை விளைவித்தது இல்லை. அவை எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை. அது துண்டு செய்யப்பட்டுத் தட்டிலிருக்கும் போது பார்க்கச் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பது தெரிகிறது: "ஆகா, பார்க்கவே இனிப்பாக இருக்கிறது." அதைச் சுவைக்க முற்படுகிறோம். அது இனிப்பாகவும் சுவையுள்ளதாகவும் இருக்கிறது, ஆனால் அது மட்டுமே நமக்குத் தெரியும். கொம்மட்டி ஏன் அப்படி இருக்கிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.
அதற்குக் காரணம் நாம் முழுமையடைய வில்லை. எவ்வாறான முழுமை ? இது காய்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது போல. எங்கெல்லாம் தண்ணீர் விட வில்லையோ அங்கெல்லாம பயிர் விளையாது. எங்கெல்லாம உரம் போடவில்லையோ அங்கெல்லாம் வளராது. இந்தக் கோட்பாட்டைப் பிரதிபலித்தால் அது உன்னிப்புக்கு இடம் கொடுக்கும்.
புறம் சம்பந்தமான விஷயங்கள் முடிந்தபின், அகம் நோக்கிக் கவனிக்க வேண்டும். உடலின், மனத்தின் நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டும். நாம் பிறந்த பின் ஏன் துக்கம் அனுபவிக்கிறோம்? அதே பழைய செயல்களால் தான் நாம் துக்கம் அனுபவிக்கிறோம், ஆனால் அவற்றை முழுமையாக நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அவற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. நாம் துக்கம் அனுபவிக்கிறோம். ஆனால் துக்கத்தைப் பார்ப்பதில்லை. நாம் வீட்டில் வாழும் போது, நமது மனைவி, மக்களின் காரணமாகத் துக்கம் அனுபவிக்கிறோம். ஆனாலும் எவ்வளவுதான் துக்கம் அனுபவித்தாலும், நாம் உண்மையில் துக்கத்தைப் பார்ப்பதில்லை - ஆகையால் தொடர்ந்து துக்கம் அனுபவிக்கிறோம்.
அது போலத்தான் மனம் ஒருமைப்படாமல் இருக்கும் போதும். அது ஏன் ஒருமைப் படுவதில்லை என்பது தெரிவதில்லை. மனத்தில் என்ன எழுகிறது என்பதைக் கவனிப்பதில்லை. புத்தர் எழுவதின் காரணத்தைப் பார்க்கச் சொன்னார். எல்லாம் காரணங்களால்தான் உருவாகின்றன.
இது ஒரு புட்டியில் தண்ணீரை நிரப்பி ஒருவருக்குக் குடிக்கக் கொடுப்பதைப் போல. அதைக் குடித்து முடித்த பின் அவர் மீண்டும் தண்ணீர் கேட்க வரவேண்டும் - ஏனென்றால் அது அருவியிலிருந்து தொடர்ந்து வரும் தண்ணீரைப் போன்றதல்ல. அது ஒரு புட்டியில் இருக்கும் அளவான தண்ணீர். ஆனால் அவரிடம் அந்த அருவியைக் காட்டி அங்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளச் சொன்னால், அவர் அங்கு சென்று உட்கார்ந்து எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் குடிக்கலாம். மீண்டும் உங்களிடம் வந்து தண்ணீர் கேட்க வேண்டியதில்லை, ஏனென்றால் அருவியில் உள்ள தண்ணீர் வற்றப் போவதில்லை.
நிலையற்றதை, துக்கம் விளைவிப்பதை, நமதில்லாததைப் பார்க்கும் போதும் அது போலத்தான். அது ஆழமாகச் செல்வது. ஏனென்றால் நாம் உண்மையிலேயே அறிந்துள்ளோம், முழுமையாக அறிந்துள்ளோம். சாதாரண அறிவு முழுமையாக அறிவதில்லை. நாம் முழுமையாக அறிந்திருந்தால் எப்போதும் சலிப்படையப் போவதில்லை. எது எழுந்தாலும் அது சரியாகவே எழுந்துள்ளது. அது மறையும் போதும் சரியாகவே மறைந்துள்ளது. அதனால், அது எப்போதும் சரியானதே. அதற்கு முடிவே இல்லை.
"அதன் இயல்பு அப்படித்தான். அதன் இருக்கும் நிலை சரியானதே," என்று நீங்கள் கருதினால், அப்போது நீங்கள் விளங்கிக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள். அப்போது நீங்கள் திறமையுள்ளவராகவும், ஆறுதலோடும் இருக்கின்றீர்கள். நீங்கள் துக்கம் அனுபவிக்க வேண்டியதில்லை. நாம் உடன்பட்டிருக்கும், பற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளும் படிப்படியாக மறைந்துவிடும். புத்தர் கூறியதைப் போல, நிகழ்ச்சிகள் எழுவதையும் பின் மறைவதையும், மறைவதையும் பின் எழுவதையும், எழுவதையும் பின் மறைவதையும் மட்டும் பார்க்க வேண்டும். இந்த அறத்தைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும், தொடர்ந்து செய்ய வேண்டும், தொடர்ந்து வளர்க்க வேண்டும், தொடர்ந்து பேண வேண்டும். பின் உலகின் மீதான மோகம் குறைவதை நீங்கள் உணர்வீர்கள். எதனோடு மோகம் குறைகிறது? எல்லாவற்றோடும், எல்லாவிதமானதோடும் மோகம் குறைகிறது.
காதின் மூலமாக வரும் செய்திகளை, நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்; கண்கள் மூலமாக வருபனவற்றை ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம்; மூக்கின் மூலமாக வருபனவற்றையும் நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்; நாவின் மூலமாக வருபனவற்றையும் நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். மனத்தில் தோன்றுபவைகளைப் பற்றியும் நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்; அவை எல்லாம் ஒரே மாதிரியான செய்திகள் தான் - அனைத்துமே, ஒரே மாதிரியான செய்திகள் : 'ஏகோ தம்மோ', ஒரே அறம். இந்த அறம் (வாய்மை என்ற பொருளில்) நிலையற்றது, துக்கமானது, நமதில்லாதது. இவை எவற்றோடும் பற்றுக் கொள்ள வேண்டாம். இப்படித்தான், உலகின் மீதான மோகம் குறையும்.
கண்கள் உருவத்தைப் பார்க்கும் போது, அதை நீங்கள் ஏற்கனவே அறிந்து கொண்டீர்கள்; காது சப்தத்தைக் கேட்கும் போதும், நீங்கள் ஏற்கனவே அறிந்துகொண்டீர்கள்; உங்களுக்கு அவற்றைப் பற்றி எல்லாம் தெரியும். இவை எல்லாம் நம்மைச் சில சமயம் மகிழ்ச்சிக்குள்ளாக்கும், சில சமயம் சோகத்திற்குள்ளாக்கும், சில சமயம் அன்பை உணரச் செய்யும், சில சமயம் வெறுப்பை வளரச் செய்யும். இவற்றைப் பற்றியெல்லாம் ஏற்கனவே அறிந்து கொண்டுள்ளோம். அவற்றோடு பற்றுக் கொண்டால் அவை பிரச்சனைகளாகிவிடும். அவற்றை உள்ளவாறே விட்டு விட்டால் - உருவங்கள் உருவங்களின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் போகட்டும், சப்தங்கள் சப்தங்களின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் போகட்டும் - அவற்றைத் திருப்பி அனுப்பி அவற்றின் வழியில் போகவிட்டு விட்டால்: இந்த நிலையில் இருக்க முடிந்தால், புத்தர் நாம் நிலையாமையை நன்கு உணர்ந்து கொள்வோம் என்கிறார். மனத்தில் தோன்றும் எத்தகைய நடவடிக்கையும் வெறுமையானது, வீணானது. அவை எல்லாம் ஏமாற்றுபவை.
நம்மை ஏமாற்றுபவைகளை ஊடுருவி அறிந்து கொண்டால் - நாம் ஆறுதலோடும், கவனத்தோடும், தெரிந்த நிலையோடும், உன்னிப்போடும் இருக்கும் நோக்கம் இருந்தால் - வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை. எந்த நடவடிக்கை மனத்தில் தோன்றினாலும் அவை அவற்றின் இயல்புக்குத் தகுந்தார்ப்போல் நடந்து கொள்கின்றன என்பதைப் பார்க்கிறோம். நாம் தியானத்தில் நிலையாக உட்கார்ந்திருக்கும் போதும், மனம் இதையும் அதையும் நினைத்துக் கொண்டிருந்தாலும், அது பிரச்சனை இல்லை. அது எண்ணங்களின் விவகாரம். நினைத்துக் கொண்டிருப்பதை நாம் நம்ப வேண்டியதில்லை. மனம் அமைதியாக இருக்கும் போது நீங்கள், "ஆ, மிகவும் நன்றாகவும் அமைதியாகவும் இருக்கிறது," என்று நினைத்தாலும் அந்த அமைதியும் பெரிய செய்தியல்ல. அமைதியும் நிலையற்றது தான். நிலையற்றது தவிர வேறு எதுவும் இல்லை. நீங்கள் உட்கார்ந்து அறத்தை இங்கேயே கவனிக்கலாம். உன்னிப்பு எழுகிறது: துக்கம் அனுபவிக்க நாம் என்ன காரணம் கூற முடியும்?
முக்கியத்துவம் இல்லாதவற்றோடு நாம் துக்கம் அனுபவிக்கிறோம். நாம் இதை விரும்புகிறோம், நாம் அப்படி இருக்க விரும்புகிறோம். நாம் எதாவது ஆக வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் அரஹந்தராக (ஞானியாக) விரும்பினால், உடனே துக்கம் அனுபவிப்பீர்கள், இங்கேயே இப்போதே அனுபவிப்பீர்கள். அரஹந்தர்கள் இப்படி ஆக வேண்டும், அப்படி ஆக வேண்டும் என்று விருப்பப்படுவதை விட்டு விட்டனர். ஆனால் நாம் இது கிடைக்குமா, அது கிடைக்குமா என்றும், இப்படி ஆகவும் அப்படி ஆகவும் விரும்புகிறோம் - எனவே நாம் கண்டிப்பாகத் துக்கம் அனுபவிப்போம். இந்த இடம் நல்லதென்றோ அந்த இடம் மிகவும் நல்லதென்றோ நினைப்பதெல்லாம் நமக்குள்ளிருந்து வருபவை. உங்களையே பார்க்க முடிந்தால், இவ்வாறு சொல்லிக் கொள்வது முடிந்து விடுகிறது.
உங்களுக்கு ஒரு எளிமையான ஒப்பீடு தருகிறேன். இந்த உணவு நல்ல உணவு. இந்தத் தட்டு பல நூறு மதிப்புடையது; அந்தத் தட்டு, அதுவும் மதிப்புடையதே. இவை எல்லாம் நல்ல பொருட்கள். உணவு, தட்டுகளின் மீது இருக்கும் போது: "இது என்னுடையது. இது உங்களுடைய தட்டு," என்கிறோம். ஆனால் அது வயிற்றுக்குள் சென்று மறு முனையில் வெளி வந்த பிறகு, எவரும் எது யாருடையது என்று உரிமை கொண்டாடுவதில்லை, விவாதிப்பதில்லை - அல்லது நீங்கள் இன்னமும் விவாதிப்பீர்களா? அது போலத்தான். உள்ளதை உள்ளவாறு இருப்பதற்கு அனுமதித்தீர்களென்றால், இது போலத்தான் இருக்கும். நமக்கு விளங்கவில்லையென்றால், எது என்னுடையது எது உங்களுடையது என்று வாதிடுவோம். ஆனால் எல்லாம் ஒரே மாதிரியாக ஒன்று சேரும் போது யாரும் சொந்தம் கொண்டாடுவதில்லை. அவை அவற்றின் நிலைமைக்குத் தகுந்தார்ப்போல இருக்கின்றன. எவ்வளவுதான் அருமையான உணவாக இருந்தாலும், மறுமுனையிலிருந்து வந்த பிறகு, அதை உங்கள் கூடப் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு அன்பளிப்பாகத் தர விரும்பினால், யாரும் பெற்றுக் கொள்ள விரும்ப மாட்டார்கள் - அல்லது நீங்களே விரும்புவீர்களா? யாரும் அவற்றோடு சண்டை போட மாட்டார்கள்.
இதன் காரணமாக, நாம் அனைத்தையும் 'ஏகொ தம்மோ' - ஒரே தம்மம் - என்று ஒன்று கூட்டி, அவற்றின் இயல்புகளெல்லாம் ஒரே மாதிரியானவை என்பதைப் பார்க்கும் போது அது உலகின் மீதான மோகக் குறைவை உண்டாக்குகிறது. இது அருவருப்பில்லை. மனம் தனது பிடியை விடுகிறது. போதும் என்கிறது. வெறுமையாகிறது. அது போதையிலிருந்து தெளிந்துவிட்டது. அங்கு அன்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. எதனோடும் ஒட்டிக் கொள்வதுமில்லை. உங்களிடம் பொருட்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஆறுதலோடு இருக்கின்றீர்கள். அமைதியாக இருக்கின்றீர்கள்.
நிப்பாணம் பரமம் சுகம் நிப்பாணம் பரமம் சுஞ்ஞம்
நிப்பாணமே உயர்ந்த மகிழ்ச்சி. நிப்பாணமே உயர்ந்த அமைதி, வெறுமை. கவனமாகக் கேளுங்கள். உலக மகிழ்ச்சி, உயர்ந்த மகிழ்ச்சி இல்லை. உலக வெறுமை, உயர்ந்த வெறுமை இல்லை. உயர்ந்த வெறுமை என்பது பற்று இல்லாமல் இருப்பது. உயர்ந்த மகிழ்ச்சி என்பது அமைதி தான். அமைதி இருக்கிறது, வெறுமையும் இருக்கிறது, அதுவே உயர்ந்த வெறுமை. இந்தக் கணத்தில் மனம் அமைதியாக இருக்கிறது, ஆனால் அது உயர்ந்த அமைதி இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் அது உயர்ந்த மகிழ்ச்சி இல்லை.
எனவே தான் புத்தர் நிப்பாண நிலையை உயர்ந்த வெறுமை என்றும், அதன் மகிழ்ச்சியை உயர்ந்த மகிழ்ச்சி என்றும் விளக்கினார். அது மகிழ்ச்சியின் இயல்பை அமைதி என்றாக்கிவிடுகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் எந்தப் பொருளோடும் பற்றுக் கொள்வதில்லை. துயரம் இன்னமும் உள்ளது. ஆனால் துன்பங்களும் இன்பங்களும் சமமாக எழுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு ஒரே மதிப்பு. நமக்குப் பிடித்த பொருட்களும், பிடிக்காத பொருட்களும் சமமானவை.
ஆனால் நம்மைப் பொருத்தவரை தற்சமயத்துக்கு, இவை சமமானவை அல்ல. நமக்கு பிடித்த பொருட்கள் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன. நமக்குப் பிடிக்காத பொருட்களை உடைத்தெரிய விரும்புகிறோம். அப்படியென்றால் அவை சமமானவை அல்ல. ஆனால் அவற்றின் வாய்மையின்படி அவை சமமானவை. எனவே அவற்றைச் சமமானவை என்றவாறு நினைத்துப் பாருங்கள். அவை உறுதியற்றவை. அவை நிலையற்றவை - நான் குறிப்பிட்ட அந்த உணவைப் போல. "இது நன்றாக இருக்கிறது. அது அருமையாக இருக்கிறது." ஆனால் அவை அனைத்தையும் ஒன்று கூட்டும் போது, அவை சமமானவை. யாரும், "எனக்கு இன்னும் கொஞ்சம் தாருங்கள். எனக்குத் தந்தது போதவில்லை." என்று சொல்வதில்லை. அவை வாய்மைக்குத் தகுந்தார்ப்போல ஒன்று கூடிவிட்டன.
நிலையாமை, துக்கம், நமதின்மை ஆகிய கோட்பாடுகளைக் கைவிடாதவரை நாம் சரியான பாதையிலே செல்கிறோம். ஒவ்வொரு கணத்திலும் காண்கிறோம். கண்ணைக் காண்கிறோம், மனத்தைக் காண்கிறோம், உடலைக் காண்கிறோம்.
நீங்கள் தியானத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல. ஒரு கணத்தின் பின் மனம் எங்கோ ஓடி விடுகிறது, எனவே அதை இழுத்துக் கொண்டு வருகிறோம். நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு இடத்தில் இருப்பதில்லை. மூச்சை இழுத்துப் பிடித்துப் பாருங்கள். அப்போதும் மனம் ஓடி விடுகிறதா? அய்ய்ய்! போகிறது, ஆனால் அதிக தூரம் போவதில்லை. இப்போது போகப் போவதில்லை. இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது - ஏனென்றால் உங்கள் மனம் சாகப் போவதாக நினைக்கிறது.
இது போலத்தான் சப்தங்களும். ஒரு முறை என் காதுகளைத் தேனீக் கூட்டின் மெழுகை வைத்து அடைத்துக் கொண்டேன். சப்தங்கள் என்னைத் தொந்தரவு படுத்தின. எனவே என் காதுகளை அடைத்துக் கொண்டேன். காதினுள் உள்ள சப்தங்களைத் தவிர வேறு சப்தம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது. அப்படி ஏன் செய்தேன்? நான் செய்ததைப் பிரதிபலித்தேன்; என்னையே வதைத்துக்கொண்டிருந்தாலும் அது மூடத்தனமான காரணத்தினால் அல்ல. இந்தச் செயலைப் பற்றிச் சிந்தித்தேன். "ஓ, எதையையும் கேட்காததால், மக்கள் மேன்மையானோராகி விடலாம் என்றால் காது கேட்காதோரெல்லாம் மேன்மை யானோராகி யிருப்பார்கள். கண் பார்வையற்றோரெல்லாம் மேன்மையானோராகியிருப்பார்கள். அவர்களெல்லாம் அரஹந்தர்களாகி யிருப்பார்கள்." ஆகவே என் எண்ணங்களைக் கவனித்தேன். அதன் பின் - ஓ! உன்னிப்பு எழுந்தது.
"காதுகளை அடைப்பதால் ஏதாவது பயன் வந்ததா? கண்களை மூடுவதால்? நம்மையே வதைத்துக் கொள்கிறோம்." ஆனால் இதிலிருந்து நான் ஒன்று கற்றுக் கொண்டேன். கற்றுக் கொண்டு அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொண்டேன். உலகிடமிருந்து மறைந்து கொள்ள முயற்சிப்பதை நிறுத்தி விட்டேன்.
மற்போர் தொடுக்கவோ அல்லது கண்டனம் செய்யவோ வேண்டாம். ஏற்கனவே பட்டுப் போன மரங்களின் அடித் தண்டுகளை வெட்டிக் கொண்டிருக்க வேண்டாம். அது உங்களை எங்கும் எடுத்துச் செல்லாது. நீங்கள் அப்படிச் செய்தீர்களானால் சோர்வடைந்து முட்டாளைப் போல நின்று கொண்டிருப்பீர்கள்.
நான் தியானம் செய்த ஆரம்ப ஆண்டுகள் சில வீணாகிப் போய்விட்டன. அதை நினைக்கும் போது நான் உண்மையிலேயே ஏமாந்திருந்தேன் என்பதை உணர்கிறேன். புத்தர் தியானம் செய்வது துக்கத்திடமிருந்து தப்பிக்க என்று கற்பித்தார். நானோ துக்கத்தை வாரி வாரி எடுத்துக் கொண்டிருந்தேன். என்னால் நிம்மதியாக உட்கார முடியவில்லை, நிம்மதியாகப் படுத்திருக்க முடியவில்லை.
நாம் உடல் தனிமையோடு (காயா-விவேகா) இருப்பதற்குக் காரணம் மனத் தனிமையை (சித்த-விவேகா) அடைவதற்கே. அதாவது மனத்தைக் கிளர்ச்சி செய்யும் விஷயங்களிடமிருந்து தனிமைப் படுத்துவதற்கே. இவை இரண்டும் ஒன்றன் பின் ஒன்று தொடரும் ஒரே பொருள் கொண்டுள்ளவை. உபாதி-விவேகா என்பது மனக்கிலேசங்களிடமிருந்து தனிமை பெறுவது: எது என்ன என்பது தெரிந்திருந்தால், அவற்றிடமிருந்து வெளியேறி விடலாம்; நம் மனம் எந்த நிலையிலிருந்தாலும் அதிலிருந்து வெளியேறி விடலாம். இது தான் உடல் தனிமையின் ஒரே நோக்கம். உன்னிப்பில்லையென்றால், உடல் தனிமையிலிருக்கும் போது உங்களுக்கே பிரச்சனைகள் உண்டாக்கிக் கொள்ள முடியும்.
தனிமையாகக் காட்டுக்குள் செல்லும் போது, அந்தக் காட்டோடு பற்றுக் கொள்ள வேண்டாம். வனத்தோடு பற்றுக் கொண்டால், நீங்கள் குரங்காகி விடுவீர்கள். மரங்களைப் பார்க்கும் போது, மரங்கள் தெரிவதில்லை. முன்பிருந்தது போலவே இப்போதும் குரங்கைப் போலக் குதிக்க ஆரம்பித்து விடுவீர்கள். புத்தர் ‘இப்படி இரு, அப்படி இரு’ எனக் கற்பிக்கவில்லை. அமைதியான இடத்தில் வாழும் போது மனமும் அமைதியடைகிறது. "ஓ! அமைதி கிடைத்துவிட்டது. மனம் அமைதியாக இருக்கிறது." ஆனால் வனத்தை விட்டு வெளியேறிய பின், மனம் அமைதியாக இருக்கிறதா? இல்லையே. பின் என்ன செய்வது?
புத்தர் நம்மை வனத்திலேயே நிலையாக இருக்கச் சொல்லவில்லை. அவர் வனத்தைப் பயிற்சி செய்ய ஓர் இடமாக மட்டும் பயன் படுத்தச் சொன்னார். வனத்துக்குச் செல்வதால் சற்று அமைதி கிடைக்கிறது. அதனால் தியானம் வளர்ந்து, உன்னிப்பும் வளர்கிறது. பின் கிராமங்களுக்குச் செல்லும் போது, மக்களைச் சந்திக்கும் போது, காட்சிகளை, சப்தங்களை, நுகர்வுகளை, சுவைகளை, பரிசங்களோடு தொடர்பு உண்டாகும் போது உங்களுக்கு அவற்றைச் சமாளிக்க வலிமை இருக்கும். திறமை இருக்கும். உங்களுக்குப் பிரதிபலிக்க ஒர் உறுதியான அடித்தலம் இருக்கும். எல்லாமே உறுதியற்றது என்பதைப் பார்க்க முடியும். இது போல வனத்துக்குச் சென்று வாழ்வது உங்களுக்கு வலிமை தருவதற்கு உதவும். எங்கு வேண்டுமானாலும் வாழ முடியும் என்றோ, பலரோடும் வாழமுடியும் என்றோ நினைத்தால் அது இரு பக்கமும் கூர்மையான கத்தியைப் போல. மனத்தில் உறுதி இல்லையென்றால் உங்களுக்கே நீங்கள் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
இது அபிதம்மம் [3] படிக்கும் துறவிகளைப்போல. அபிதம்மம் படித்தால் எதனோடும் பற்றுக் கொள்ள வேண்டியதில்லை, எதையும் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் கூறுவார்கள். வசதியாகவும் எளிதாகவும் இருக்கிறது. ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. மனத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்படித்தான் அபிதம்மம் படிக்கும் துறவிகள் கூறுகின்றனர்.
"பெண்கள் அருகில் இருப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? பெண்கள் நமது தாய்மார்கள் போலத்தான். நாமே அங்குதானே பிறந்தோம்," என்பார்கள். இது மிகையான தற்பெருமைப் பேச்சு. நேற்றுத் துறவரம் பூண்டு விட்டுப் பெண்கள் அருகில் கவனமாகப் பழக மறுக்கின்றனர். அது உண்மையான அபிதம்மம் இல்லை. அபிதம்மத்தில் அப்படிச் சொல்லவில்லை.
ஆனால் அபிதம்மம் மனித நிலையைவிட ஒரு படி மேலான நிலை என்கின்றார்கள். "அவ்வளவு உயர்வாக இருக்கும் போது, யாராவது அருகில் இருக்கின்றார்களா, இல்லையா என்பது முக்கியம் இல்லை. அருகில், தொலைவில் என்பதெல்லாம் இல்லை. எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பெண்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்களையும் ஆண்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்தால் அவர்கள் அருகில் இருக்கலாம். அவர்களைத் தொடலாம். அவர்களை உணரலாம். ஆண்கள் என்று பாவனை செய்து கொள்ளுங்கள்," என்பார்கள்.
ஆனால் பாவனை செய்கிற விஷயமா இது? இது இரு முனையிலும் கூர்மையுள்ள கத்தியைப் போல. நாம் உண்மையான அபிதம்மத்தைப் பற்றிப் பேசினால் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த அபிதம்மம் போலியானது.
புத்தர் வனத்தில் இருக்க கற்றுத்தந்தார். இதை ஒழுங்கான முறையில் செய்வதானால் துறவி ஒருவர் காட்டுக்குள் செல்லும் போது, ஒரு அமைதியான இடம் தேடவேண்டும்; அமைதியான வனப்பகுதியில் நடமாட வேண்டும்; நண்பர், தோழர் விவகாரங்களில் ஈடுபட்டுக் கொள்ளக் கூடாது. இதுவே சரியான வழி. ஆனால் நம்முள் பலரும் சரியான வழியில் பயிற்சி செய்வதில்லை. நாம் அமைதியான இடத்தில் தங்கி அந்த அமைதியோடு பற்றுக் கொண்டு விடுகிறோம். பின் ஒரு உருவத்தைப் பார்த்தவுடன் மனக்கிலேசங்கள் உருவாகி விடுகிறது. காதில் கிலேசங்களைத் தவிர ஏதும் இல்லை. இது மிகையான செயல். உன்னிப்பில்லாச் செயல்.
எல்லாவற்றையும் ஒன்று கூட்டும் போது, அது அறத்தின் விழியில் ஒன்று கூடுகிறது - சரியான பாதை, அல்லது சரியான நோக்கம்- அங்கு தான் எல்லாம் ஒன்று கூடுகின்றன. சரியான நோக்கம் இருக்குமானால் நீங்கள் பலரின் மத்தியில் வாழ்ந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. சிலருடன் வாழ்ந்தாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. காட்டில் வாழ்ந்தாலும், குகைகளில் வாழ்ந்தாலும் பிரச்சனையேதும் இல்லை. ஆனால் முயற்சி எடுக்காமல் இந்தச் சரியான நோக்கத்தை அடைய முடியாது. அப்படித்தான் மனம் வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மனம் அறத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்த கொண்ட பின் மனம் அதைப் பார்க்கட்டும். அறத்தைப் பயிற்சி செய்து மனமே அறமாகட்டும். அறத்தைப் பற்றிப் பேசுவது மட்டும் போதாது. அது மிகவும் மாறுபட்ட ஒன்று என உணர வேண்டும். புத்தர் வாய்மைக்கு முழுமையாக வழி வகுத்தார். ஆனால் நாம் அரைகுறை முயற்சியோடு, பாதி வழி மட்டுமே செல்கிறோம். அதனால் தான் நாம் முன்னேறுவது கடினமாக இருக்கிறது.
நாம் வனத்தில் வாழ வரும்போது, நம்மால் பயிற்சி செய்ய முடிகிறது - நெல்லைப் பயிரிடக் கற்றுக் கொள்வதைப் போல. பயிர் செய்த பின் அது படிப்படியாக வளர்கிறது. அதைப் பிராணிகள் ஏதும் கடிக்காவிட்டால், தொந்தரவில்லை. ஆனால் என்ன நடக்கிறது? தானிய மணி தோன்றியவுடன் ஒரு எருமைக் கன்று அதை உண்ண வருகிறது. நாம் அதை விரட்டுகிறோம், ஆனால் மேலும் தானிய மணிகள் தோன்றத் தோன்ற, எருமைக் கன்றும் திரும்பத் திரும்ப வந்து சாப்பிட்டு விடுகிறது. தானிய மணிகள் தோன்றும் போதல்லாம் கன்றும் வந்து பயிர்களை மேய்ந்து விடுகிறது. அப்படி இருக்க நமக்கு அரிசி எங்கே கிடைக்கப் போகிறது?
உங்களுக்குத் தேவைப்படும் திறமைகள் எல்லாம் மனத்திலிருந்தே தோன்றுகின்றன. உன்னிப்புள்ளவர் தற்சுதந்திர அறிவு [4] பெறுகின்றனர். தற்சுதந்திர அறிவு உள்ளோர் உன்னிப்பை வளர்க்கின்றனர். நடப்பது அப்படித் தான். தற்சுதந்திர அறிவும் உன்னிப்பும் வேறுபட்டவையா? வெவ்வேறு இல்லை என்றால் ஏன் அவற்றிற்கு இரண்டு வார்த்தைகள் உள்ளன? ஒன்றைத் தற்சுதந்திர அறிவு என்றும் மற்றதை உன்னிப்பு என்றும் ஏன் கூறுகிறோம்? தற்சுதந்திர அறிவு மட்டும் இருக்க முடியுமா? முடியாது. உன்னிப்பும் இருக்க வேண்டும். உன்னிப்பு மட்டும் இருக்க முடியுமா? முடியாது. தற்சுதந்திர அறிவும் இருக்க வேண்டும். தற்சுதந்திர அறிவு உள்ளவர் உன்னிப்பை வளர்க்கிறார். இவை உங்கள் அனுபவங்களிலிருந்து எழுகின்றன. இவற்றைப் புத்தகங்களில் தேடிக் காண முடியாது. உங்கள் மனத்திலேயே எழுகின்றன. தயங்க வேண்டாம்.
நான் ஒரு முறை நமது புத்தர் போதிசத்துவராக [5] இருந்த போது அவரைப் பற்றிய ஜாதகக் கதை ஒன்றைப் படித்திருக்கிறேன். அவர் உங்களைப் போல இருந்தார்: அவர் துறவறம் பூண்டிருந்தார், பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால் துறவறத்தை விட்டுவிட நினைத்த போது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து அவருக்கு அவமானமாக இருந்தது - இத்தனை ஆண்டுகள் துறவறம் பூண்ட பிறகும் துறவறத்தை விட்டுவிட நினைக்கின்றாரே? இருந்தும் அவர் விரும்பியவாறு முன்னேற்றம் காணவில்லை. எனவே துறவறத்தை விட்டுவிட முடிவு செய்தார். அப்போது காற்றடித்ததால் கடலில் விழுந்துவிட்ட தன் குஞ்சைக் காப்பாற்ற முயற்சித்த ஓர் அணிலைச் சந்தித்தார். அந்த அணில் கடற்கரையோரம் சென்று திரும்பி வருவதைக் கவனித்தார். அது என்ன செய்கிறது என்பது அவருக்குப் புரியவில்லை. அது கடலுக்குள் சென்று தனது வாலைத் தண்ணீரில் நனைத்து, கரை ஏறிவந்து வாலை ஆட்டிற்று. பின் திரும்பத் தண்ணீரருகில் சென்று வாலைத் தண்ணீரில் நனைத்தது. அவர் அணிலைக் கேட்டார், "அணிலே, நீ என்ன செய்கிறாய்?"
"ஓ, என் குழந்தை நீரில் விழுந்து விட்டது. அதற்காக ஏங்குகிறேன், எனவே அதை மீட்டு வர விரும்புகிறேன்."
"நீ எப்படி மீட்கப் போகிறாய்?"
"என் வாலைப் பயன் படுத்தி இந்தக் கடலில் உள்ள தண்ணீரை வற்றச் செய்யப் போகிறேன். கடல் காய்ந்த பின் என் குழந்தையை மீட்கப் போகிறேன்.
"ஓஹோ, தண்ணீர் எப்போது வற்றும்?"
" தண்ணீர் எப்போது வற்றும் என்பது முக்கியமில்லை. பயிற்சி என்பது இப்படித்தான். நீரை வற்றச் செய்து கொண்டே இருக்க வேண்டும், காய்ந்து விடுமா என்பதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். புத்தராக நினைப்பவர், முயற்சியைக் கைவிடக் கூடாது."
புத்தர் இதைக் கேட்டவுடன், அவர் உள்ளத்தில் வெளிச்சம் தோன்றியது. எழுந்து தொடர்ந்து மென்மேலும் முயற்சித்தார். அவர் பின் வாங்க வில்லை. அப்படித்தான் அவர் புத்தர் ஆனார்.
நாமும் அதைப் போலத்தான். எப்போதெல்லாம் நிலைமை சரியாக இல்லையோ அப்போது தான் முன்னேற்றம் காண முடியும். நடைபெறாத இடத்தில் தான் நடைபெற வைக்க வேண்டும். எங்கெல்லாம் ஏமாற்றம் கொண்டுள்ளீர்களோ அங்கெல்லாம் அறிவு உதயமாகும். என்னை நம்பவில்லையா? சரி. இதோ இங்கே காரித் துப்புங்கள். இந்த இடம் அசிங்கமாகிவிட்டது. ஆனால் இதைத் துடைத்தால், அது இங்கேயே சுத்தமாகிவிடும் - எங்கு அழுக்காக இருக்கிறதோ அதே இடத்தில்தான் சுத்தமாகப் போகிறது. விகாரையின் சுற்றியுள்ள இடங்களில் சுத்தம் ஆகாது. இதே இடத்திற்குத் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருங்கள்.
அஜான் தொங்கார்ட் [6] என்னிடம் ஒரு முறை கூறினார், "சா, மரவாணிக்கு நேராக ஓட்டை போடவும்."
அவ்வளவு தான் அவர் சொன்னார். நான் அப்போது தான் பயிற்சியைத் தொடங்கியிருந்தேன். அதனால் அவர் சொன்னது எனக்கு விளங்கவில்லை.
"கீழாக வந்தால், அதன் தலைமேல் குதித்துவிடு," என்று அவர் சொன்னார்.
"மேலாக வந்தது என்றால், அடியில் நழுவிக் கொள்."
அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை. எனவே நான் தியானிக்கச் சென்று அவர் சொன்னதைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன்.
உண்மையில், அவர் எனது பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். "மரவாணிக்கு நேராகத் துளையைப் போடு!" என்றால், "எங்கு பிரச்சனை எழுகிறதோ அங்கேயே பிரதிபலி; எங்கு ஏமாந்து இருக்கிறோமோ அங்கு பிரதிபலிக்க வேண்டும். ஒரு காட்சியோடு பற்றுக் கொண்டால், அந்தக் காட்சியைப் பிரதிபலிக்க வேண்டும். அதைச் சுற்றி, அதனோடு பிரதிபலிக்கவேண்டும்." இது தான் அவர் சொன்னதன் பொருள். "மரவாணிக்கு நேராகத் துளையைப் போடு!" தள்ளிச் சென்று வேறு இடத்தில் துளையைப் போட வேண்டாம். மரவாணி சேரும் இடத்தில் துளையைப் போடு (மரவாணி இரண்டு மரக்கட்டைகளைச் இணைப்பதற்குப் பயன் படுகிறது).
இது ஒரு முள்ளின் மீது கால் வைப்பது போல. ஒரு ஊசியை எடுத்து காலில் முள் குத்திய இடத்தைச் சற்றுக் களைய வேண்டும். வேறு இடத்தில் ஆராய வேண்டாம். காலில் முள் குத்திய இடத்தில் ஆராய வேண்டும். ஊசியால் பெயர்க்கும் போது வலி ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். முள் உள்ள இடத்தைச் சுற்றி ஆராய்ந்த பிறகு முள்ளைப் பெயர்த்தெடுக்க வேண்டும். அதுதான் முள்ளை எடுக்கும் சரியான முறை. முள் காலில் குத்தியிருக்கும் போது, முதுகில் சோதித்துக் கொண்டிருந்தால் முள்ளை எப்படி எடுக்க முடியும்?
எனவே இதை நான் பிரதிபலித்தேன். "ஓ, ஆசிரியர்கள் தங்கள் மனத்தின் மொழிக்கு நிகராகத் தியானிக்கின்றனர். நம்மைப்போலப் புத்தகங்களில் படித்த கருத்துக்களோடு பிணைந்து தேடிக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் கருத்துக்கள் எதார்த்தத்துக்கு நிகராக உருவாகின்றன. "
சரி எது கீழாக வருகிறது, எது மேலாக வருகிறது?
"கீழாக வந்தால், அதன் தலைமேல் குதித்துவிடு. மேலாக வந்தால், அடியில் நழுவிவிடு." இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். இங்கு அவர் எனது மனோபாவங்களையும் மன நடவடிக்கைகள் பற்றியும் கூறுகிறார். சில கீழாக வருகின்றன, சில மேலாக வருகின்றன. அவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தால் அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று அறியலாம். கீழாக வரும் போது அவற்றின் தலை மேல் குதித்துவிடவேண்டும். மேலாக வந்தால் அடியில் புகுந்து செல்ல வேண்டும். அவை உங்களைப் பாதிக்காமல் இருக்கச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.
இது தான் பயிற்சி. எங்கு ஏமாந்திருக்கின்றீர்களோ அங்கு சிந்தனையைச் செலுத்துங்கள்.அப்படிச் செய்தால் அங்கு உண்மை தெரியவரும். மற்ற விவகாரங்களெல்லாம் வாத்துச் சாணமும் கோழிச் சாணமும் தான். அவற்றைத் தட்டித் தடவிக் கொண்டு போக வேண்டியதில்லை. அப்படித்தான் தியானத்தின் போது தோன்றும் விவகாரங்களை எடுத்து எதிர்கொள்ள வேண்டும்.
உண்மையில் இது எடுப்பது பற்றிய காரியம் இல்லை. அவற்றை எடுப்பதென்றால் அவற்றை விட்டுவிடுவது தான். மொழியின் வழக்கங்கள் எல்லாவற்றையும் தலைகீழாக்குவது இப்படித்தான். பற்றை விட்டுவிட வேண்டும். விட்டு விடுவதைப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் 'சோதாபத்தி' யாகவோ 'ஸகாதாகாமிதா' ஆகவோ [7] ஆகவேண்டியதில்லை. அது போன்ற எண்ணங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. எதாவது ஆக விரும்பினாலே அங்கு கிளர்ச்சி உண்டாகிறது. இப்படி இருந்தாலும் (இருப்பதாக நினைத்தாலும்) பிரச்சனை, அப்படி இருந்தாலும் பிரச்சனை. எனவே எதுவாகவும் இருக்க வேண்டாம். விட்டு விடுவதைத் தவிர ஏதும் இல்லை - விட்டு விட்டு உள்ளதை உள்ளவாறு அறிந்து அதன் படி நடப்பது. எல்லாவிதங்களிலும் உள்ளதை உள்ளவாறு தெரிந்திருந்தால், சந்தேகங்களே இருக்காது. மேலும் நீங்களும் எதுவாகவும் இருப்பதில்லை.
இதைப் பற்றி ஒரு எளிமையான முறையில் சிந்திக்கலாம். உங்களைப் பார்த்து யாராவது கத்தினால், நீங்களும் பதிலுக்குப் பதில் கத்தவில்லையென்றால் விஷயம் அத்தோடு முடிந்துவிடும். அது உங்களுக்குத் தொல்லை தருவதில்லை. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை விடாமல் பிடித்துக் கொண்டு சண்டையை வளர்த்தால் நீங்கள் மோசமான நிலையில் இருப்பீர்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஏன் உங்களுக்குள் நிரப்பிக் கொண்டு குழம்ப வேண்டும்? அவர்கள் சத்தம் போட்டால், அப்படியே விட்டுவிடுங்கள். ஆனால் அவர்கள் அங்குள்ள சபையில் உங்களைப் பார்த்து கத்தியிருந்தால், நீங்கள் அதைக் கேட்டுக் கொண்டு பேசாமலிருந்தால், உங்களுக்குத் துயர் கொள்வது பிடிக்கும் என்பது போல் ஆகிவிடும். துக்கத்தை அறிந்து கொள்ளாதது என்பது இதுதான். நீங்கள் உங்கள் எண்ணங்களால் நிகழ்ச்சிகளைக் கிளரி விட்டுப் பல வகையான பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றீர்கள்.
பயிற்சி உண்மையில் மிகவும் சுருக்கமானதே, நீண்டது இல்லை. நீங்கள் அது நீண்டது என்று சொன்னால் அது நீண்டதைவிட நீண்டது. சுருக்கமானது என்று சொன்னால் சுருக்கமானதைவிடச் சுருக்கமானது. பயிற்சியைப் பொருத்தவரை உங்கள் சாதாரண எண்ணப்போக்குப் பயன் தராது.
உங்களுக்குப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் தேவை. முயற்சி செய்ய வேண்டும். என்ன நடந்தாலும் அதை எடுத்துக் கொண்டு சுமந்து செல்ல வேண்டாம். நிகழ்ச்சிகள் ஒரு விதமாக இருந்தால், அவை அப்படித்தான் இருக்கும் வேறு பொருள் கொள்ளத் தேவையில்லை. அறத்தை இது போலத் தெரிந்து கொண்டால், நாம் எதனோடும் பற்றுக் கொள்ள மாட்டோம். இன்பம் நமக்குத் தெரியும். துன்பமும் நமக்குத் தெரியும்.
புத்தரும் அவரது அரஹந்த சீடர்களும், அவர்கள் எழுச்சி அடைந்த போது: அவர்களுக்குத் தேங்காய்ப் பாலில் செய்த இனிப்பு வகைகள் இனிக்காதென்று இல்லை. நாம் உணரும் இனிப்பைத்தான் அவர்களும் சுவைக்கும் போது உணர்வார்கள். மேன்மையானோர் ஒரு புளிப்பான புளியைச் சுவைத்தால் அவர்களும் கண்களை இறுக்கமாகச் சுருக்கி மூடிக்கொள்வார்கள். உங்களுக்குப் புரிகிறதா? முன்பிருந்தது போலத்தான் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் மேன்மையானோர் அவற்றோடு பற்றுக் கொள்வதில்லை, அவற்றோடு மோகம் கொள்வதில்லை. அவர்களிடம் புளி புளிப்பானது என்று விவாதித்தால், அவர்கள், "புளிப்பானாலும் சரி, இனிப்பானாலும் சரி நல்லதுதான். புளிப்பும் இல்லாமல், இனிப்பும் இல்லாமல் இருந்தாலும் நல்லதே" என்றுதான் சொல்வார்கள்.
அதே கோட்பாடுகள் இங்கும் பொருந்தும். மக்கள் இங்கு வந்து தவறானவற்றைச் சொன்னாலும், அவர்கள் சொல்வதைக் கேட்கலாம். அது நம்மைப் பாதிப்பதில்லை. அதோடு விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்ய முடிந்தால் நீங்கள் உங்களுக்கு இப்போது என்ன வயதாக இருந்தாலும், இளமையாக இருக்கலாம். மேலும் இளமையாகவும் ஆகிவிடலாம்.
இவற்றையெல்லாம் உங்கள் தோள்மீது சுமந்து கொண்டு செல்ல வேண்டியதில்லை. நான் சில வயாதான துறவிகள் 'துதங்க' [8] முறையில், நாடோடிகளாக அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எதற்காக அலைகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. பெரிய குடை கூடாரங்களைச் சுமந்து கொண்டு செல்கின்றனர். இளைய துறவிகளைப் போலச் சிறிய குடை கூடாரங்களை எடுத்துச் செல்வதில்லை. உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்குப் பெரிய குடை கூடாரங்களைக் கொண்டு செல்வதற்குத்தான் பிடிக்கும். விடிந்தவுடன் அவற்றை மடக்குன்றனர். சூரியன் உதித்தவுடன் கூடாரங்களை மடித்துக் கொள்கின்றனர். திறந்த இடங்களில் விட்டு வைத்திருந்தால் அந்தக் கூடாரங்கள் காற்றடித்தால் சாய்ந்துவிடும். எனவே அதை மடித்துக் காய்ச்சும் வெய்யிலில் சுமந்து கொண்டு செல்கின்றனர். மாலையில் மறுபடியும் கூடாரங்களை விரித்துக் கொள்கின்றனர். ஏன் என்று தெரியவில்லை - கதிரவன் மறைந்து விட்டது. அடுத்த நாள் விழித்தபின் கூடாரங்களை மடித்துக் கொண்டு மறுபடியும் கடும் வெய்யிலில் அவற்றைச் சுமந்து செல்கின்றனர்.
நானும் இதையே சலிப்படையும் வரை செய்தேன். நாடோடியாகச் செல்ல ஆசைப்பட்டு இறுதியில் வனத்தில் துயரத்தோடு இருந்ததுதான் மிச்சம். பின் வனத்தில் துயரத்தோடு இருப்பதற்காகப் புனித வாழ்வு இல்லை என்பதை நினைவு படுத்திக் கொண்டு காட்டிலிருந்து வெளியே செல்லும் வழியைத் தேடினேன். அப்படித்தான் காட்டிலிருந்து-வெளியே-செல்லும்-வழியைத்-தேடும் துறவியானேன் [9].
புத்தர் நம்மை வனத்துக்குச் செல்ல ஊக்குவித்ததற்குக் காரணம் நாம் உன்னிப்பை வளர்த்துக் கொள்ளத்தான். துக்கத்தைச் சந்திக்கின்றீர்கள். எதார்த்தத்தைச் சந்திக்கின்றீர்கள். பின் அதைப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். இறுதியில் அவற்றை உண்டாக்கும் காரணங்கள் மீது சலிப்படைந்து விடுவீர்கள். வனத்தில் வாழ்வது என்பது தவறான செயல் இல்லை. அது நல்லது தான். ஏனென்றால் அது உன்னிப்பு வளர்வதற்கு இடம் கொடுக்கிறது.
துதங்கத்தைப் பற்றிப் பேசுகையில், அது உங்கள் பிட்சாபாத்திரத்தையும் குடை கூடாரத்தையும் தோளின் மீது சுமந்து கொண்டு, காற்றிலும் வெயிலிலும், மரணத்தின் விளிம்பு வரை, மாடு மேய்ப்பவர் எருமை மாட்டைச் சந்தைக்கு நடத்திச் செல்லுவதைப் போலத் திரிவதென்பது இல்லை. அது பயிற்சி சம்பந்தப்பட்டது. இருப்பதை வைத்துத் திருப்தி அடையக் கற்றுக் கொள்கிறோம். மிதமாக உண்பது, மிதமாக உறங்குவதுபற்றிக் கற்றுக் கொள்கிறோம். உடல் மெலிகின்றீர்கள். தேவைக்கான பொருட்களைச் சுருக்குகின்றீர்கள், குறைக்கின்றீர்கள். நன்றாக ஒன்று கூட்டுகின்றீர்கள். இது மீன் பிடிக்க வலையை வீசுவதைப்போல. முதலில் வலையின் ஒரு முனையை இடுப்பில் உள்ள வாரில் இருக்கமாகச் செருகிக் கொண்டு, வலையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மெல்ல மெல்ல இழுக்க வேண்டும். ஒரு முனையைக் கட்டிவிட்டுப் பின் மீன் வலையில் சிக்கியது உறுதியானவுடன் மறு முனையையும் வேகமாக முடிச்சுப் போட வேண்டும். மீன் செவுளுக்குப் பின்னால் கட்டியவுடன் வேலை முடிந்தது.
வேறு எங்கும் பார்க்க வேண்டியதில்லை. பல புத்தககங்களைப் படிக்க வேண்டியதில்லை. உங்கள் மனத்தை மட்டுமே கவனிக்கவும். அடிப்படைக் கோட்பாடுகள் அங்கேயே இருக்கின்றன. இந்த வகையில் ஏமாறாமல் தியானம் செய்யலாம்.
உங்களிடம் பிடிக்காத வகையில் யாராவது பேசினால், அது உங்களுக்குச் சினமூட்டினால், உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள், "இது உறுதியற்றது, இது நிலையற்றது," என்று. சுவைமிக்கதொன்றை உண்டபின், "ஓ. மிகவும் சுவையாக உள்ளது," என்று நினைத்தால் உங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள், அது நிச்சமற்றதென்பதை. உங்களிடம் எது வந்தாலும், உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள், "இது உறுதியற்றது" என்று. ஏன்? ஏனென்றால், அங்கு தான் அறம் உள்ளது. அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள், புத்தரின் திசையில், நிலையற்றதன் திசையில். நிலையற்றது - விஷயங்கள் உறுதியற்றவை. அதுவே மன அளவில் உள்ள புத்தர்.
உண்மையிலேயே நிலையற்றதைப் பார்த்தீர்களென்றால், அறத்தையும் காண்பீர்கள். ஏன் காணமாட்டீர்கள்? - அங்குதான் வாய்மை இருக்கிறது. அறத்தைப் பார்த்தால் புத்தரையும் பார்ப்பது போல. இவை இரு திசைகளிலும் செல்கின்றன. புத்தரைப் பார்த்தால் அறத்தையும் பார்ப்பது போல. இவ்வாறு பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். உட்காரும் போது, புத்தர் உங்களுக்குப் போதனை வழங்குகிறார். படுக்கும் போதும் அவர் போதனை வழங்குகிறார். என்ன செய்தாலும் அவர் போதனை வழங்கிக் கொண்டிருக்கிறார். அறம் எழுந்தபின், அறத்தைப் பயில்வோரை அது கவனித்துக் கொள்கிறது. அவர்கள் தீய வழியில் செல்லாமல் பார்த்துக் கொள்கிறது.
அறம் முன்னிலையில் உள்ள போது, மனம் தெரிந்த நிலையிலேயே இருக்கிறது. அதற்குத் தெரியும் "இது தவறானது, இது சரியானது, இது தீயது, இது துக்கம், இது துக்கத்தின் காரணம், இது துக்கம் முடிந்த நிலை, இது துக்கத்தை முடிக்க எடுத்துச் செல்லும் வழி." என்று.
அதுவே பாதை. எல்லாம் பாதையில் வந்து ஒன்று சேர்கின்றன. பாதையை மேம்படுத்த மேம்படுத்த உங்கள் மனக்கிலேசங்களும் குறைகின்றன. மனக்கிலேசங்கள் ஒரு படையைப் போன்றது தெரியுமல்லவா! அவை அதிகரிக்க அதிகரிக்கப் பாதை குறைகிறது. பாதையை வலுப்படுத்தினால் மனக் கிலேசங்களும் படிப்படியாக மறைந்து விடுகின்றன. அவற்றின் வலு குறையும். சரியானவற்றோடு மட்டுமே இருப்பீர்கள். எது தவறானதாக இருந்தாலும், அதை விட்டு விடுவீர்கள். தவறான பாதையை விட்டு விடுவீர்கள்.
அப்போது தான் சரியான பயிற்சி நிலைநாட்டப் படுகிறது. பின் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் வாழலாம். பெறுவது இழந்ததைப்போல ஆகிறது; இழப்பதும் பெறுவதற்குச் சமமாகிறது. அதன் பின் பிரச்சனை ஏதும் இருப்பதில்லை. மனம் அமைதியாகிறது - இது உன்னிப்பினால் உண்டான அமைதி. இவ்வாறு பார்க்கும் போது எதனோடும் பற்றுக் கொள்வதில்லை. எவராவது உங்களிடம் பண்டமாற்றம் செய்ய, நான் இதைத் தருகிறேன், நீ அதைத் தா என்றால் உங்களுக்கு அதில் ஆர்வம் ஏற்படுவது இல்லை. அவர்களை நம்புவதில்லை. அப்போது தான் நிகழ்ச்சிகள் உறுதியாகின்றன. இந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
இது பழங்களைத் தெரிந்து கொள்வதைப்போல. இது ஆலிவ், இது கொய்யா, இது மாம்பழம். அவற்றைத் தெரிந்து கொண்டபின், அவற்றை எல்லாம் ஒரு தட்டில் குவித்து ஒருவர் ஒவ்வொன்றாக எடுத்து அது என்ன பழம் என்று கேட்கலாம்.
"இது என்ன?"
"கொய்யா."
"இது என்ன?"
"ஆலிவ்."
"இது என்ன?"
"மாம்பழம்."
கேட்பவர் நூறு தட்டுகள் அடங்கிய பழங்களைப் பற்றிக் கேட்டாலும், ஏன் ஆயிரம் தட்டுகள் கொண்ட பழங்களைப் பற்றிக் கேட்டாலும் நீங்கள் ஏமாறாமல் சரியாகப் பதில் கூறுவீர்கள். மாம்பழத்தை மாம்பழம் என உணர்கின்றீர்கள். கொய்யாயை கொய்யா என்று தெரிந்து இருக்கின்றீர்கள் - எதுவாக இருந்தாலும் அதனை உள்ளது உள்ளவாறு தெரிந்திருக்கின்றீர்கள். அப்போது தான் விஷயங்கள் உறுதியாகின்றன. யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. மார்க்கத்தை விட்டுச் செல்லமுடியாது. ஏனென்றால் மனத்தில் உள்ளது எல்லாம் சரியான பாதையே. உட்கார்ந்திருக்கும் போது சரியான நோக்கத்துடன் இருப்பீர்கள், நடக்கும் போது சரியான நோக்கத்துடன் இருப்பீர்கள், படுத்திருக்கும் போது சரியான நோக்கத்துடன் இருப்பீர்கள். மனம் ஒரே மாதிரியாகவே இருக்கும் எப்போதும் போலவே: ஆறுதலுடன், அமைதியாக. இது போன்றவற்றை விவரிப்பது கடினம்.
அறத்தின் உச்ச நிலை இன்பம் இல்லை. அமைதிதான். ஏனென்றால் அது இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப் படுவதில்லை. அது வெறுமையானது. தொடர்ந்து பிடிப்பில்லாமல், பற்றில்லாமல் இருக்கிறது. எங்கு சென்றாலும் அது அப்படியே இருக்கிறது.
உதாரணமாக, ஒருவருடைய மனோபாவம் உங்களைத் தாக்க வந்து - "போற்றுதற்குரிய ஐயா, நீங்கள் ஒரு நாயைப்போல இது தெரியுமா உங்களுக்கு." என்று சொன்னால் - நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். உங்களைப் பற்றி உறுதியாகத் தெரிந்து கொண்டதால், அப்படித்தான் இருப்பீர்கள். ஆனால் உங்களை நாய் என்று கூப்பிட்ட பின் நீங்களும் நாயாகிச் சொன்னவரைக் கடிக்கச் சென்றால், உங்களைப் பற்றி நீங்கள் உறுதியாகத் தெரிந்து கொள்ள வில்லை என்று பொருள். நீங்கள் உறுதியில்லாதவர். உங்களைப் பற்றி உறுதியாகத் தெரிந்து கொண்டால் நீங்கள் எதுவாகவும் இருப்பதில்லை. எதாவதாக இருக்க ஏன் விரும்பவேண்டும்? போற்றுதற்குரிய ஐயா சீ, போற்றுதற்குரிய ஐயா ஸா, போற்றுதற்குரிய ஐயா மா: இந்தப் பெயர்களையெல்லாம் நீங்கள் எப்போதுமே வைத்திருக்கவில்லை. சமீப காலத்தில் உங்களுக்குத் தரப்பட்ட பெயர்கள் தான் இவைகள்.
அதோ! அங்குள்ள எட்டு சீலங்களைக் கடைப் பிடிப்பவரைப்போல: அவர் எங்கிருந்து வந்தார்? அவர் பிறக்கும் போதே பெயருடன் பிறந்தாரா? அவரின் தாய் தந்தை கொஞ்ச காலத்திற்கு முன் அவருக்குப் பெயர் சூட்டினர். உங்களை மனிதா என்றழைத்தால் அதில் மகிழ்ச்சியடைய அப்படி என்ன இருக்கிறது? உங்களை நாய் என்றழைத்தாலும் அதில் கிளர்ச்சியடைய என்ன இருக்கிறது? அப்படிக் கிளர்ச்சியடைந்தால் நீங்கள் மோசமான நிலையிலிருப்பது தெளிவாகிறதில்லையா?
ஆகவே நாம் தொடர்ந்து பிரதிபலிக்க வேண்டும். தொடர்ந்து பார்க்கவேண்டும். சரியாக அறியும் வரை, சீராக அறியும் வரை தொடர வேண்டும். பின் உட்கார்ந்திருக்கும் போதும் சரியாக இருக்கும். படுத்திருக்கும் போதும் சரியாக இருக்கும். எது செய்தாலும் அது சரியாக இருக்கும். தொடர்ந்து சரியாக இருக்கும். ஆனால் அறத்தோடு விவாதிக்கத் தொடங்கினால், துக்கத்திலிருந்து விடுபட முடியாது.
இது சூடாக்கப்பட்ட இரும்புத் துண்டு எல்லாப் பக்கங்களிலும் சிவந்து அனல் பறப்பது போல: அந்த இரும்புத் துண்டில் குளுமையான பகுதி ஏதாவது இருக்கிறதா? அதைத் தொட்டுப் பாருங்கள். மேலாகத் தொட்டாலும் சுடும். கீழ்ப் பகுதியில் தொட்டாலும் சுடும். பக்கங்களில் தொட்டாலும் சுடும். அது ஏன் சூடாக இருக்கிறது? ஏனென்றால் அது முழுவதுமே அனல் பறக்கும் சிவந்த சூடான இரும்புத் துண்டு. அதில் எங்கு குளுமையான பகுதி இருக்கமுடியும்?
இங்கும் அதே போலத்தான். ஒன்றோடு பற்றுக் கொண்டால் - அது எதுவாக இருந்தாலும் சரி - உடனடியாக நீங்கள் தவறு செய்கின்றீர்கள். எல்லாம் தவறாகிறது. எல்லாம் துக்கம் விளைவிக்கிறது. தீயதுடன் பற்றுக் கொண்டால், நீங்கள் துன்புறுவீர்கள். நல்லதோடு பற்றுக் கொண்டாலும், நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள்.
பொதுவாக, நல்ல விஷயங்கள் தான் மக்களை ஏமாற்றத்துக்கு இழுத்துச் செல்கின்றன. அவர்கள் நல்லவற்றால் ஏமாறுகின்றார்கள். நல்லது சரியானதாக இல்லாவிட்டால், அது நல்லதில்லை தெரியுமா? இந்த வருடத்தில் பெய்த மழையைக் கவனித்தீர்களா? அது மிகவும் நல்லதாகத் தான் இருந்தது, ஆனால் சரியான அளவைத் தாண்டிச் சென்றவுடன், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. நல்லது மிகச் சரியானதைத் தாண்டியபின் இப்படித்தான் நடக்கும்.
புத்தர் நம்மை அறிவாளிகளாக இருக்கச் சொன்னார்.
"மேலாக வந்தது என்றால், அடியில் நழுவிக் கொள்."
"கீழாக வந்தால், அதன் தலைமேல் குதித்துவிடு."
"மரவாணிக்கு நேராக ஓட்டை போடு."
இந்த மூன்று கோட்பாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை மையமாக்கிக் கொள்ளுங்கள். அப்போது பிரச்சனை உங்களை விட்டுச் சென்று விடாது. இதுவே உண்மை. இப்படித்தான் இருக்கும். நீங்கள் வயதானவரா, இளையவரா, அல்லது எத்தனை பகலும் இரவும் கழிந்தன, அல்லது வாரத்தில் இது எந்த நாள் என்பதில் எல்லாம் கவனத்தைச் செலுத்த வேண்டாம். தொடர்ந்து மனத்தை இவ்வாறு பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
பயிற்சியின் போது, உட்கார்ந்துதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. அல்லது முன்னும் பின்னும் நடந்து கொண்டுதான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதுமில்லை. அப்படி நினைக்க வேண்டாம். தியானம் என்பது ஒரு பயிற்சி சம்பந்தபட்டது தான். போதனை தருபவராக இருந்தாலும், உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும், இங்கிருந்து விட்டுச் செல்பவராக இருந்தாலும், உள்ளத்தில் பயிற்சியைத் தொடர வேண்டும். எது சரியானது, எது சரியானது இல்லை என்பதைத் தெரிந்து கொள்வதில் அக்கறையோடிருங்கள்.
துதங்க பயிற்சிகளை மழைக் காலத்தில் ஒதுங்கி இருக்கும் [10] சமயங்களில் மட்டும் தொடர்ந்து விட்டு, ஒதுங்கி இருக்கும் சமயம் முடிந்த பின் அவற்றை விட்டு விடலாம் என்று முடிவெடுக்க வேண்டாம். அது சரியல்ல. அவ்வாறு நிகழ்வுகள் சமநிலையாவதில்லை. இது வயலில் களை யெடுப்பதைப் போல. நாம் களைகளை வெட்டிக் கொண்டிருக்கிறோம். களைப்பானவுடன் வெட்டுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கிறோம். அரிவாளை வைத்து விட்டு ஓரிரு மாதங்களுக்குப் பின் திரும்புகிறோம். ஆனால் இப்போது காட்டுச் செடிகள் முந்தையதைவிட வளர்ந்து விட்டன. நாம் ஏற்கனவே களை பிடிங்கிய இடத்தில் மீண்டும் துவங்க வேண்டியுள்ளது. நம்மால் சமாளிக்க முடிவதில்லை.
அஜான் முன் [11] நமது பயிற்சியை ஒரு வட்டத்தின் வடிவில் இருக்க வேண்டும் என்று சொன்னார். வட்டம் என்றும் முடிவதில்லை. தொடர்ந்து பயிற்சியை நிறுத்தாமல் செய்துகொண்டிருக்க வேண்டும். அவர் சொல்வதைக் கேட்டபின் நான் நினைத்தது, "இந்தப் போதனையைக் கேட்ட பின், நான் என்ன செய்ய வேண்டும்?"
இதற்குப் பதில் நமது தெரிந்த நிலையை 'அகாளிகோ': காலவரையற்றதாகச் செய்துவிட வேண்டும் என்பதே. மனத்திற்குச் சரி எது, தவறு எது என்பது எந்நேரத்திலும் தெரிந்திருக்க வேண்டும்.
இந்தக் கெண்டிகையில் உள்ள தண்ணீரைப்போல. அதைச் சாய்த்து நீண்ட இடைவெளிக்கிடையில் சொட்டுச் சொட்டாக அதன் வாயிலிருந்து நீர் விழுந்தால் - சொட்டு .....சொட்டு .....சொட்டு: அதை நீர்த் துளிகள் என்கிறோம். மேலும் கொஞ்சம் கெண்டிகையைச் சாய்த்தால், அந்த சொட்டுகள் அடிக்கடி விழுகின்றன. சொட்டு..சொட்டு..சொட்டு. அதற்கும் மேல் சாய்த்தால் நீரோட்டமாகத் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது. அந்தத் தொடர்ந்து வரும் நீர் எங்கிருந்து வந்தது? அது சொட்டுச் சொட்டாக வந்த நீர்த்துளிகளிலிருந்து வந்ததுதான். தொடர்ந்து வரவில்லையென்றால் அதை நீர்ச் சொட்டுகள் என்கிறோம்.
இங்கு தண்ணீர் நமது தெரிந்த நிலையைக் குறிக்கிறது. முயற்சியை வேகப்படுத்தினால், தெரிந்த நிலை தொடர்ந்து இருந்தால், மனக் கவனமும் முழுமையாகும். பகலிலும், இரவிலும் அப்படியே முழுமையாக இருக்கும். அது நீரோட்டம் போல ஆகும். மேன்மையானோருக்கு மனக் கவனம் தொடர்ந்து இருக்கிறது என்று நமக்குக் கற்பிக்கப்பட்டது. நீர் நீரோட்டமாக இருக்கிறது. உங்கள் தெரிந்த நிலையும் தொடர்ந்து இருக்கத் தெரிந்து கொள்ளுங்கள். ஏதாவது தவறாக இருந்தாலோ அல்லது குறைபாடாகத் தெரிந்தாலோ, உங்களுக்கு உடனே தெரிந்துவிடும். உங்கள் தெரிந்த நிலை வட்ட வடிவமாக, முழுமையாகிவிடும். பயிற்சியின் வடிவம் அதுவே.
நீங்கள் மிகவும் கடினமாக இருக்க வேண்டும் என்றில்லை. சிலர் ஒருமுகப்படுத்தத் தியானிக்கும் போது மிகவும் ஆவலுடன் தொடங்குவார்கள்: "எனது இரத்தம் வடியட்டும், எனது தோல் பிளக்கட்டும், நான் எழுச்சி பெறாவிட்டால், நான் சாகத் தயாராக இருக்கிறேன்." இந்த வசனத்தைப் புத்தரின் வாழ்க்கைக் கதையில் படித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் அப்படி முயற்சிக்கும் போது, உடல் வேதனை மண்டை ஓட்டின் அடிப்பகுதி வரை செல்கிறது. அவர்களின் ஆவலும் படிப்படியாகக் குறைந்து, மூடிக்கொண்டிருந்த கண்களைத் திறந்து அவர்கள் முன் உள்ள ஊதுபத்தி எரிவதைப் பார்க்கின்றனர்.
"அட, ஊதுபத்தி முழுவதும் எரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இன்னும் எவ்வளவோ எரிய வேண்டியிருக்கிறதே!"
எனவே ஒரு பெரு மூச்செடுத்து ஊதுபத்தி முழுவதும் எரியும் வரை தங்கள் கண்களைத் திறக்காமல் தியானிக்கப் போவதாக முடி வெடுக்கின்றனர். ஆனால் சிறிது நேரத்தின் பின் மீண்டும் உடல் வலி மண்டை ஒட்டின் கீழ் பகுதி வரை செல்கிறது. பொறுக்க முடியாமல் கண்களை மீண்டும் திறக்கின்றனர்.
"அய்யய்யோ, ஊதுபத்தி முழுவதும் எரிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் இன்னும் எவ்வளவோ மிஞ்சியிருக்கிறதே!"
இறுதியில் ஊதுபத்தி முற்றும் எரிந்து விடுவதற்கு முன்னரே முயல்வதை விட்டு விடுகின்றனர். பின் உட்கார்ந்தபடி , "நான் பரிதாபமான நிலையிலிருக்கிறேன்," என்று நினைக்கின்றனர். யார்மீது கோபப்படுவதென்று தெரியாமல் தங்கள் மீதே கோபப்பட்டுக் கொள்கின்றனர். "நான் நினைத்ததைச் சாதிக்க முடியாதவன்." என்று தங்களுக்குத் தாங்களே சாபமிட்டுக் கொள்கின்றனர்.
"எனக்கு விடிவு காலமே இல்லை. தீவினை நிறையச் செய்கிறேன், நான் நரகத்தில் வாழ்பவன்." இது போன்ற பல எண்ணங்கள்.
"இதைக் கூடச் செய்ய முடியவில்லையென்றால் நான் ஏன் துறவியாக இருக்க வேண்டும்? எனது தீவினைகளெல்லாம் எனது தலையைத் தின்றுவிடும்." பயிற்சியை விட்டு விடத் தங்களுக்கே காரணம் தந்து விடுகின்றனர்.
"பேசாமல் இல்லறத்தாராக வாழ்ந்து ஐந்து ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தல் மேலானது அல்லவா?" தங்களுக்குள்ளேயே இவ்வாறு நினைத்துக் கொண்டு யாரிடமும் சொல்வதில்லை. இதைப் பற்றி அதிகம் யோசிக்க யோசிக்க இதுவே சிறந்த வழி என்று தோன்றுகிறது.
இதுபோன்ற இலட்சியங்களை ஏன் நிர்ணயிக்க வேண்டும்? புத்தர் நாம் தியானிக்கும் போது நம்மைத் தெரிந்து கொள்ளச் சொன்னார். இது வியாபாரிகள் சரக்கை மாட்டு வண்டியில் ஏற்றுவது போல: அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கின்றனர் - எத்தனை எருதுகள் இருக்கின்றன, அவை எவ்வளவு பெரியவை, எவ்வளவு வலு உடையவை, வண்டி எவ்வளவு பெரியது. இது போன்ற விஷயங்களைத் தெரிந்திருக்கின்றனர்: ஒவ்வொரு வண்டியிலும் எத்தனை அரிசி மூட்டைகளை ஏற்ற முடியும். எருதுகளின், வண்டிகளின் வலுவிற்குத் தகுந்தார்ப் போல அதில் சாமன்களை ஏற்றுகின்றனர்.
பயிற்சி செய்யும் போதும் அது உங்களது சக்திக்குத் தகுந்தார்ப் போல இருக்க வேண்டும். இருப்பது ஒரே வண்டி, எருதோ உங்கள் கையளவு. ஆனால் வண்டி ஒரு பத்துச் சக்கர லாரியளவு சுமக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். சாலையில் பத்துச் சக்கர வண்டிகள் செல்வதைப் பார்த்து அவற்றைப் போல இருக்க ஆசைப் படுகின்றீர்கள். ஆனால் நீங்கள் பத்துச் சக்கர வண்டி இல்லை. நீங்களோ ஒரு மாட்டு வண்டி மட்டுமே. அவ்வளவு பாரம் ஏற்றினால் அது கண்டிப்பாக உடைந்துவிடும். உங்களைப் பாதி பழுக்கும் முன்னே பழுத்துவிட்ட பழம் எனலாம், சமைக்கும் முன்னேயே கரி பிடித்து விட்ட உணவு எனலாம்.
இறுதியில் ஆவலாக இருந்த தியானிப்பவர் துறவறத்தை விட்டுவிடுகின்றார். அப்படிச் செய்த பின் மறுபடியும் நினைக்கின்றார், "தெரியுமா உங்களுக்கு? நான் துறவியாக இருந்த போது இப்போதைவிட செயல்கள் சிறப்பாக இருந்தன. நான் திரும்பவும் துறவறம் பூண வேண்டும். அந்த மார்க்கம் வெளிச்சமாக இருந்தது. இப்போது இருக்கும் நிலையோ இருட்டாக இருக்கிறது." இதைச் சற்று யோசனை செய்த பின், திரும்பவும் துறவறம் பூணுகின்றனர். புதிதாகத் துவங்கு கின்றார். ஆரம்பத்தில் பயிற்சி சிறப்புறச் செல்கிறது. புதிதாக அரங்கில் நுழைந்த குத்துச் சண்டை வீரரைப் போல. அவர்களுக்கு இன்னமும் தண்ணீர் தேவைப் படவில்லை. வலு உள்ளவர்களா இருக்கின்றனர், ஊக்கமுடன் இருக்கின்றனர், சிறப்பாக முன்னேறுகின்றனர். ஆனால் படிப் படியாக அவர்கள் வலுவை இழக்கின்றனர்.
"மறுபடியும் தோல்வியைச் சந்திப்பவனாகத் தோன்றுகிறதே. இதுவோ இரண்டாம் முறை. இம்முறையும் சாதிக்கப் போவதில்லை போலத் தோன்றுகிறது. இம்முறை வீழ்ச்சி மேலும் பெரிதாக இருக்கும். பேசாமல் துறவு ஆடையைக் கழட்டி விடுகிறேன். முன்னேறுவதாகத் தோன்ற வில்லை. புத்தரின் சீடர்கள் சிலர் ஏழு முறை வரை துறவறம் தொடுத்து விட்டிருக்கின்றனர்." இப்போது ஏழு முறை துறவறம் கொண்டு விட்டவர்களைக் ஏற்றுக் கொள்ளத் தக்க உதாரணமாக வைத்துக் கொள்கின்றனர். சரியில்லா உதாரணங்களைப் பின் பற்ற வேண்டாம்.
"ஏழாவது முறை வரை காத்திருந்த பின்னரே அவர்கள் எழுச்சி அடைந்தனர். நானும் ஏழுமுறை விட்டுத் தொடங்கினால் அவர்களைப் போல எழுச்சி அடைவேனோ?" இது போலப் பிதற்றுகின்றனர்.
புத்தர் கற்பித்த அறத்தில் மனித முயற்சிக்கு அப்பால் எதுவும் இல்லை. சொர்க்கமோ, ஆகாயத்தில் இருக்கும் நிப்பாணமோ நாம் காண முடியாத ஒன்றின்மீது கவனம் செலுத்த வேண்டாம்:. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, பார்க்க வேண்டிய அறமெல்லாம் புத்தர் தெளிவாக விளக்கி விட்டார். பார்க்க முடியாதவைகளைக் கண்டு கொள்ள வேண்டாம். நிகழ்காலத்தைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துகின்றீர்கள்? துக்கம் எழுந்தால் எதனால் எழுகிறது? என்ன நடக்கிறது? பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது? எதனுள் சிக்கி உள்ளீர்கள்? இது பற்றும் ஒட்டுதலையும் பற்றியது. மற்றவர்களைவிடச் சிறந்தவர், மற்றவருக்கு நிகரானவர், அல்லது மற்றவரைவிடத் தாழ்வானவர் என்ற எண்ணத்தோடு பற்றுக் கொண்டு விட்டீர்கள். இது போன்று பல நிகழ்ச்சிகள். மற்றவருடன் வாழும் போது அவர்களோடு அருவருப்படைகின்றீர்கள். "இவர் மோசமாக நடந்து கொள்கிறார். அவர் மோசமாக நடந்து கொள்கிறார்." பின் தனியாக வாழச் சென்று விட்டு யாரோடு அருவருப் படைவதென்று தெரியாமல், உங்களோடேயே அருவருப்படைந்து விடுகின்றீர்கள்.
நீங்கள் சொன்னது போலவே.....
* * * * * *
குறிப்புகள்:
[1] தேவதத்தன், புத்தரின் மைத்துனன். அரச குடும்பத்தில் பிறந்தவன். புத்தரின் சீடராகத் துறவறம் பூண்டும் புத்தர் மீது பொறமைப் பட்டு அவருக்கு எதிராக வேலைசெய்தவன். புத்தரைப் பல முறை கொல்லவும் முற்பட்டவன்.
[2] 'நிப்பிதா': அதாவது உலகின் மீதான மோகம் குறைகிறது. உலக விஷயங்கள் உங்களைக் களைப்படையச் செய்கின்றன. (இது அருவருப்பு அல்ல. மெய்யறிவினால் ஏற்படும் திறமையான மாற்றம்.)
[3] அபிதம்மம்: திரிபிடகத்தின் மூன்றாம் பிரிவு.
அக, புறச் செயற்பாடுகளின் அடிப்படை இயற்கைக் கோட்பாடுகளை மிகவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் ஆராய்ந்து விவரிக்கிறது.
[4] உன்னிப்பும் (Discernment) இயற்கை (தற்சுதந்திர) அறிவும் (Intuition) Source
உன்னிப்பு என்பது தெளிவாக மதிப்பிடக்கூடிய, அறிந்து கொள்ளக் கூடிய திறமை. உள்ளதை உள்ளவாறு அறிவது; உண்மை எது, போலி எது என்பதைத் தெரிந்து கொள்ள முடிவது.
உன்னிப்பு என்பது தற்சுதந்திரமாக (இயற்கையாக) உண்டாகும் அறிவிலிருந்து துவங்கலாம். நேர்மையாக அவதானித்து, அக்கறையோடு, சமநிலையோடு நமது அறிவைப் பயன்படுத்தி உன்னிப்பைப் படிப்படியாக வளர்க்க வேண்டும். உன்னிப்போடு இருப்பவருக்கு இயற்கை அறிவும், மன உணர்ச்சிகளும், தர்க்கரீதியாக உணர்வதும் ஒன்றுக்கொன்று உதவும். நமது அனுபவம் வளர நமது உன்னிப்பும் வலுவடைந்து, அகப்பார்வையினால் மெய்யறிவை வளர்க்க முடிகிறது.
[5] போதிசத்துவர்
"எழுச்சிக்காகப் பாடுபடும் உயிரினம்" புத்தர் புத்தராவதற்கு முன்னால் இவ்வாறு குறிப்பிடப் படுகிறார். அவர் புத்தர் ஆக நினைத்ததிலிருந்து எழுச்சி அடைந்தவரையான காலக்கட்டம்.
மஹாயான பௌத்தத்தில் போதிசத்துவர் என்பதற்கு வேறு பொருள் உண்டு. கருணையின் காரணமாக எல்லா உயிரினங்களும் எழுச்சி பெறுவதற்கு உதவச் சபதம் எடுப்பவர் போதிசத்துவர் என அழைக்கப்படுவார்.
[6] அஜான் தொங்கார்ட்: அஜான் சாவின் மற்றோரு ஆசிரியர்.
[7] பௌத்தக் கொள்கைப்படி ஞானம் பெறும் பாதையில் நான்கு காலக் கட்டங்கள் உள்ளன.
முதலாவது 'சோதாபத்தி' (பாதையில் தொடர்ந்து செல்வது, ஓடையில் நுழைவது). இந்தக் கட்டத்தில் 'நிர்வான மோட்சம்' முதல் முறையாகக் கண நேரம் தெரிகிறது. நம்மை மறு பிறப்பெடுக்கச் செய்யும் சில இடையூறுகள் உடைகின்றன.)
இரண்டாவது 'ஸகாதாகாமிதா' ('ஒரு முறை மட்டும் மறு பிறப்பெடுப்பவரின் நிலை'). இந்தக் கட்டத்தை அடைந்தவர் இன்னும் ஒரு முறை மட்டுமே மறு பிறப்பெடுப்பார். அந்தப் பிறப்பில் ஞானம் பெறுவார்.
[8] துதங்கா என்றால் "சன்னி யாசி". துதங்கத் துறவி புத்தர் அனுமதித்த பதிமூன்று கடுமையான கட்டுபாடுகளில் சில வற்றைக் கடைப் பிடிப்பார். துதங்கத் துறவிகள் சம்பிரதாயப்படி அவர் நேரத்தை தியானத்திற்காக அமைதியான இடம் தேடி, அல்லது ஆசிரியர்களைத் தேடிப் பயணத்தில் (பொதுவாகக் கால் நடையாக) ஈடுபடுவார்கள்.
[9] இங்கு அஜான் சா மூன்று தாய் மொழி வார்தைகளோடு விளையாடுகிறார்.
தாய் மொழியில்:
துடோங் என்றால் துதங்கா "சன்னி யாசி"
துக்டோங் என்றால் வனத்தில் வதைப் படுவது
தாளுடோங் என்றால் வனத்தினுள் வழி தேடுவது
[10] மழைக்காலத்தில் துறவிகள் ஓர் இடத்திலேயே தங்கி இருப்பது புத்தரின் காலத்திலேயே தொடங்கிய வழக்கம்.
[11] அஜான் முன் (1870-1949) தாய்லாந்தில் பிறந்த பௌத்தத் துறவி. அவர் 1893 ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டதிலிருந்து தாய்லாந்து, பர்மா, லாவோஸ் ஆகிய நாடுகளில் நாடோடியாக அலைந்து, பெரும்பாலும் வனவாசியாக வாழ்ந்து, தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் பேரளவில் மாணவர்களை ஈர்த்தார். அவரும் அவரது ஆசிரியரான அஜான் ஸாவோ (1861-1941) வும் கம்மதானா (தியானம்) வன மரபினை நிறுவினர். அஜான் சாவின் மற்றொரு ஆசிரியர்.
* * * * * *
© Copyright
Provenance: 2011 Metta Forest Monastery. Transcribed from a file provided by the translator. This Access to Insight edition is ©2011–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"In the Shape of a Circle", by Venerable Ajahn Chah, translated from the Thai by Thanissaro Bhikkhu (Geoffrey DeGraff). Access to Insight, 1 December 2012, http://www.accesstoinsight.org/lib/thai/chah/shapeofacircle.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/