பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - பாரமி

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அநுபந்தம் 3 - முழுநிறைவானவை (பாரமி)

Perfections ( Parami)

1. நான் தான தர்மமுடையவனாகவும் உதவியளிப்பவனாகவும் இருப்பேனாக! (தான - பெருந்தன்மை)

2. நான் நல்ல கட்டுப்பாடுடையவனாகவும் மேன்மையான ஒழுக்கத்தையுடையவனாகவும் இருப்பேனாக! நான் எனது காரியங்களில் தூய்மையாகவும் துப்பரவாகவும் இருப்பேனாக! எனது மனம், வாக்கு, காயம் பரிசுத்தமாக இருக்கட்டும்! (சீலம் - ஒழுக்கம்)

3. நான் சுயநலக்காரனாகவும், தன்னுடையாளனாகவும் இருக்காமல் தன்னலமற்றவனாக இருப்பேனாக! நான் மற்றவர்களுக்காக எனது சுகங்களைத் தியாகம் செய்யக் கூடியவனாக இருப்பேனாக! (நேக்கம்ம - துறத்தல்)

4. நான் விவேகமுள்ளவனாகவும் பொருள்களின் உண்மை - நிலையை அறியக்கூடியவனாகவும் இருப்பேனாக! நான் மெய்யொளியைக்கண்டு மற்றவரை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இட்டுச் செல்வேனாக! நான் மெய்யறிவு பெற்று மற்றவரை மெய்யறிவு பெறச் செய்வேனாக! எனது அறிவின் பலன்களை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடியவனாக இருப்பேனாக! (பஞ்ஞா-ஞானம்)

5. நான் சுறுசுறுப்பாகவும், வீரயமாகவும், விடா முயற்சியோடும் இருப்பேனாக! நான் எனது குறிக்கோளை அடையும்வரை விடாமுயற்சியோடு பாடுபடுவேனாக. நான் அபாயங்களைப் பயமில்லாமல் எதிர்த்து, எல்லாத் தடைகளையும் துணிவோடு வெல்லுபவனாக இருப்பேனாக! நான் மற்றவர்களுக்கு எனது திறமைக்கேற்றபடி திறம்பட பணியாற்றுவேனாக! (வீரிய-வீரியம்)

6. நான் எப்போதும் பொறுமையாக இருப்பேனாக! நான் மற்றவர்களின் தவறுகளைப் பொறுத்திருந்து தாங்குவேனாக! நான் எப்போதும் சகிப்புத்தன்மை மிக்கவனாக இருந்து எல்லாவற்றிலும் நன்மையையும் எழிலையும் பார்ப்பேனாக! (கந்தீ - பொறுமை)

7. நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேனாக! இங்கிதத்துக்காக உண்மையை மறக்காமல் இருப்பேனாக! நான் என்றும் உண்மை எனும் பாதையிலிருந்து புரளாமல் இருப்பேனாக! (சச்ச- உண்மை)

8. நான் வலுவாகவும், மன உறுதியாகவும், இரும்பைப் போன்ற திடகாத்திரம் உடையவனாகவும் இருப்பேனாக! நான் மலரைப்போன்று மென்மையாகவும், பாறையைப் போன்று உறுதியாகவும் இருப்பேனாக! நான் என்றும் உயர் கொள்கைகளை உடையவனாக இருப்பேனாக! (அதித்தான - உறுதிப்பாடு)

9. நான் என்றும் கனிவாக, அன்பாக, கருணையோடு இருப்பேனாக! நான் எல்லோரையும் எனது சகோதர, சகோதரிகளாகவும் எல்லாரோடும் ஒன்றுபட்டும் வாழ்வேனாக! (மெத்தா- ஈன-இரக்கம்)

10. நான் என்றும் அமைதியாக, சாந்தமாக, சமாதானமாக, கலக்கமின்றி இருப்பேனாக! நான் ஒரு சமநிலையான மனதைப் பெறுவேனாக! நான் பரிபூரண உள்ளமைதி உடையவனாக இருப்பேனாக! (உபேக்க - உள்ளமைதி)

நான் பரிபூரணமாகத் தொண்டாற்றுவேனாக!

நான் தொண்டாற்றப் பரிபூரணமாக இருப்பேனாக!

* * * * *