பௌத்தக் கதைகள்
மயிலை சீனி. வேங்கடசாமி
ஆனந்தர்: அணுக்கத் தொண்டர்
கௌதம புத்தர் புத்தநிலையை அடைந்த பிறகு ஏறக்குறைய இருபது ஆண்டு வரையில், நிரந்தரமான அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவ்வப்போது ஒவ்வொரு சீடர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்து அவர் செல்லுமிடங்களுக்குத் திருஓட்டையும் சீவர ஆடையையும் எடுத்துச் செல்வார். இன்னொரு சமயம் நாகிதர் அணுக்கத் தொண்டராக இருப்பார். வேறொரு சமயம் உபவாணர், மற்றொரு சமயம் கனக்கதர். இவ்வாறே சுந்தர், சாகதர், மேகிதர் முதலானவர்கள் அவ்வக்காலங்களில் பகவரின் அணுக்கத் தொண்டராக இருந்தார்கள். பகவரும் இன்னார்தான் தமக்கு ஊழியராக இருக்கவேண்டும் என்று விரும்பவில்லை. இவ்வாறு ஆண்டுகள் பல கழிந்தன. கடைசியில், ஏறக்குறைய ஐம்பத்தைந்தாவது வயதில் நிரந்தரமான ஒரு அணுக்கத் தொண்டர் தமக்கு வேண்டுமென்று பகவன் புத்தருக்குத் தோன்றியது.
ஒருநாள் கந்தகுடி என்னும் அரங்கத்திலே பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சீடர்களான பிக்குகள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது பகவர் அவர்களை நோக்கி இவ்வாறு அருளிச் செய்தார்:
"பிக்குகாள்! எனக்கு வயதாகிறது. எனக்கு அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடை செய்கிற பிக்குகள், இந்தப் பக்கம் போ என்றால், இன்னொரு பக்கம் போகிறார்கள். சிலர் திருவோட்டையும், சீவரத்தையும் தவற விடுகிறார்கள். எனக்குத் துணை செய்யக்கூடிய நிரந்தரமான அணுக்கத் தொண்டர் வேண்டும். அணுக்கத் தொண்டராக இருக்க விருப்பம் உள்ளவர் கூறுங்கள்."
இதைக் கேட்டதும் பிக்குகளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. வணக்கத்திற்குரிய சாரி புத்திர தேரர் எழுந்து நின்று தாம் அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார். பகவர், அவரை வேண்டாமென்று மறுத்துவிட்டார். மொக்கல்லான தேரர் எழுந்து தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். இவ்வாறு அங்கிருந்த எல்லாப் பிக்குகளும் ஆர்வத்தோடு அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார்கள். அவர்கள் எல்லோரையும் பகவர் மறுத்துவிட்டார். ஆனந்த தேரர் மட்டும் ஒன்றும் பேசாமல் வாளா அமர்ந்திருந்தார். மற்றப் பிக்குகள் பேசாத அவரைப் பார்த்து, "பகவர் தங்களை ஏற்றுக் கொள்வார்; தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்," என்று சொன்னார்கள்.
அப்போது பகவர், "பிக்குகாள்! ஆனந்தருக்கு விருப்பம் இருந்தால் அவரே தமது விருப்பத்தைத் தெரிவிப்பார். நீங்கள் அவரைக் கட்டாயப் படுத்தாதீர்கள்," என்று அருளினார். அப்போதும் பிக்குகள், "அனந்தரே! எழுந்திரும். சொல்லும்," என்று கூறினார்கள்.
ஆனந்த தேரர் எழுந்து நின்று கூறினார். "பகவர் நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும், நான்கு பொருள்களை அளிக்கவும் அருள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். எனக்குப் பகவர் மறுக்கவேண்டிய நான்கு பொருள்கள் என்னவென்றால், 1. பகவருக்கு ஏதேனும் நல்ல உணவு கிடைக்குமானால் அதை அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது.
2. நல்ல ஆடைகள் கிடைத்தால் அதையும் அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது.
3. பகவருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற கந்தகுடி (ஆசனம்) அடியேனுக்குக் கொடுக்கக்கூடாது. 4. பகவரைப் பூசை செய்ய யாரேனும் அழைத்தால் அந்த இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போகக் கூடாது. இந்த நான்கையும் பகவர் எனக்கும் அளிப்பாரானால், மற்றவர்கள், நான் இவற்றைப் பெறுவதற்காகத்தான் அணுக்கத் தொண்டனாக அமர்ந்திருக்கிறேன் என்று சொல்லக்கூடும். ஆகையால் இந்த நான்கையும் பகவர் எனக்கு அளிப்பதில்லை என்று வரம் அருளவேண்டும்.
"பகவர் எனக்கு அருளவேண்டிய மற்ற நான்கு பொருள்கள் எவை என்றால்,
1. என்னைப் பூசை செய்ய யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக் கொள்ளவேண்டும். 2. பகவரைக் காண விரும்புகிறவர்களை, நான் அழைத்து வந்தால் அவர்களை மறுக்காமல் பகவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. நான் மனம் தடுமாறித் திகைக்கும்போது பகவர் என்னைத் தேற்றி வழிப்படுத்த வேண்டும். 4. நான் இல்லாத காலத்தில் மற்றவர்களுக்கு உபதேசித்த உபதேசங்களை, எனக்கும் போதித்தருள வேண்டும். இந்த வரங்களைப் பகவர் அருள்வாரானால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருந்து ஊழியம் செய்யச் சித்தமாயிருக்கிறேன்," என்று பணிவோடு கேட்டுக் கொண்டார்.
பகவன் புத்தர் அவர் கேட்ட எட்டு வரங்களையும் அளித்தார். ஆகவே, ஆனந்த தேரர் அன்று முதல் பகவருக்குப் பணிவிடை செய்து வந்தார். பல் தேய்க்கக் குச்சியும், கை கால் கழுவ நீரும் கொண்டுவந்து கொடுப்பார். செல்லும் இடங்களுக்கு உடன் செல்வார். பகவர் தங்கி இருக்கும் இடத்தைத் திருவலகு இட்டுச் சுத்தம் செய்வார். அருகிலே இருந்து குற்றேவல் செய்வார். இரவில் ஒன்பது தடவைகளில் தடியையும் விளக்கையும் எடுத்துக்கொண்டு கந்தகுடியைச் சுற்றி வருவார். கூப்பிடும் போதெல்லாம் ஏனென்று கேட்பார். இவ்வாறு ஆனந்ததேரர், பகவன் புத்தருக்குக் குற்றேவல் செய்யும் அணுக்கத் தொண்டராக இருந்தார். இவருடைய ஊழியத்தைப் பாராட்டிய பகவன் புத்தர் ஐந்து சிறந்த குணங்களையுடையவர் இவரென்று புகழ்ந்துள்ளார். கல்வியுடைமை, மனம் விழிப்போடிருத்தல், நடக்கும் ஆற்றல், உறுதியுடைமை, மறதியின்மை என்னும் ஐந்து குணங்கள் இவரிடம் உள்ளன என்று பகவன் புத்தர் இவரைப் பாராட்டினார்.
ஆனந்ததேரர், பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைகிறவரையில் அவர் உடனே இருந்து அவருக்குத் தொண்டு செய்து வந்தார்.
பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர் அவருடைய சீடர்களான தேரர்கள் ஐந்நூறு பேர், ராஜகிருஹ நகரத்துக்கு அருகிலேயிருந்த ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே ஒன்று கூடி முதலாவது பௌத்த மகாநாட்டை நடத்தினார்கள். புத்த பெருமான் அருளிச்செய்த உபதேசங்களைத் தொகுப்பதற்காக அந்த மகாநாடு கூட்டப்பட்டது. அந்த மகாநாட்டில் புத்தர் அருளிய தர்மபோதனைகளை அவருடைய அணுக்கத் தொண்டராயிருந்த ஆனந்ததேரர் ஓதினார். இவர் ஓதியவற்றை ஒன்று சேர்த்துத் தம்ம பிடகம் என்று பெயர் இட்டனர். பௌத்தர்களின் மூன்று மறைநூல்களில் தம்ம பிடகமும் (அபிதம்ம பிடகம்) ஒன்று.