பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - பௌத்த தம்மம்

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 2. பௌத்த தம்மம்: பௌத்தம் ஒரு தத்துவமா?

The Dhamma: Is it a Philosophy?

புத்தரால் விளக்கப்பட்ட கட்டாயமில்லாத, ஒழுக்கமான, தத்துவ ஒழுங்கமைப்பு

அதனைப் பின்பற்றுவோரிடமிருந்து கண்மூடித்தனமான நம்பிக்கையை எதிர்பார்க்கவில்லை. இவ்வொழுங்கமைப்பு பிடிவாதக் கொள்கைகளை உருவாக்கவில்லை. மூடநம்பிக்கை நிறைந்த சடங்குகளுக்கும், ஆசாரங்களுக்கும் ஆதரவு அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக ஒரு சீடன் தூய வாழ்க்கையினாலும் தூய சிந்தனையினாலும் மேலானவொரு ஞானத்தையும், எல்லாத் தீமைகளினின்று விடுதலைபெறும் நிலையையும் அடைய ஒரு பொன்னான வழியை எடுத்துக் கூறுகிறது. இப்பொன்னான வழியே பௌத்தம் என்று பொதுவாக கூறப்படும் தம்மம் ஆகும்.

அளவிலாக் கருணை நிறைந்த புத்ததேவர் மறைந்து விட்டாலும், அவர்

மானுடவர்க்கத்திற்கு விட்டுச் சென்ற தெய்வீகக் கருத்துக்களைக்கொண்ட தம்மம் இன்றும் அதன் பழம்பெருந் தூய நிலையில் நிலவுகின்றது.

புத்த பெருமான் அவரது போதனைகளை எழுத்தில் வடிக்காவிட்டாலும், அவரது

பெருமைவாய்ந்த சீடர்கள் அவற்றை மனப்பாடம்மூலம் பாதுகாத்து வாழையடி வாழையாக ஓதி ஒப்புவித்துவந்தனர். புத்தரின் மறைவுக்குப்பின் தம்மத்திலும் விநயத்திலும் புலமைசான்ற ஐந்நூறு அரகத்துகள் ஒன்றுசேர்ந்து புத்ததேவரின் சித்தாந்தத்தை அவர் முதன்முதலில் கூறியபடி நினைவுகூர ஒரு மகாநாடு கூட்டினர்.

புத்ததேவரின் போதனைகள் அனைத்தும் நேரில் செவிமடுக்கும் பெரும்

பாக்கியம்பெற்ற வணக்கத்துக்குரிய ஆநந்த தேரர் தம்மவாசகத்தையும், வணக்கத்துக்குரிய உபாலி தேரர் விநயவாசகத்தையும் ஓதினார்கள்.

திரிபிடகம், இப்போது காணப்படுகிற உருவத்தில், பண்டைய அரகத்துகளினால்

தொகுக்கப்பட்டதேயாகும். கி.மு. 83 ஆம் ஆண்டளவில் ஆட்சிசெய்த பக்திமிக்க சிங்கள அரசனாகிய வட்டகாமி அபயனின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பௌத்தமத வரலாற்றில் முதன்முறையாகத் திரிபிடகம் எழுத்துவடிவில் ஏட்டில் பதிக்கப்பட்டது.

புத்ததேவரின் போதனைகளின் சாரம் அடங்கிய மிகப் பாரிய நூலாகிய திரிபிடகம்

விவிலிய நூலினும் பதினெரு மடங்கு பெரியது என மதிக்கப்பட்டிருக்கிறது. திரிபிடகத்துக்கும், விவிலிய நூலுக்குமிடையிலுள்ள முக்கிய வேற்றுமை

விவிலியநூலைப்போல் திரிபிடகம் முறையாக எழுதப்பட்டு வளர்ச்சியும், நிறைவும் அடையவில்லை.

திரிபிடகம் என்ற சொல் கருதுவதுபோல, அது மூன்று கூடைகள் கொண்டது.

இம்மூன்று கூடைகளாவன:

1. ஒழுங்குக் கட்டுப்பாட்டுக் கூடை (விநய பிடகம்)

2. அறவுரைக் கூடை (சுத்த பிடகம்)

3. சித்தாந்தத்தின் எல்லைக் கூடை (அபித்தம்ம பிடகம்)

வரலாற்றிலே தொன்மை மிக்கது என்னும் புகழைப் பெற்ற பிரம்மசரிய துறவுக்

குழுவான சங்கத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்படுகின்ற விநயபிடகம், பிக்குகளும் பிக்குணிகளும் எதிர்காலத்தில் ஒழுக்கமாக வாழப் புத்ததேவர் காலத்துக்குக் காலம் சந்தர்ப்பம் ஏற்பட்டபொழுதெல்லாம் வெளிப்படுத்திய விதிகளையும் சட்டங்களையும் கொண்டுள்ளது. இது சாசனத்தில் படிப்படியான வளர்ச்சியை மிக விபரமாகச் சித்தரிக்கின்றது. மேலும் அது புத்ததேவரின்

வாழ்வுபற்றியும், அவரது தொண்டுபற்றியும் செய்திகள் பலவற்றைத் தருகின்றது.

விநயபிடகம் பண்டை வரலாறு, இந்தியப் பழக்கவழக்கங்கள், கலைகள், விஞ்ஞானம் முதலியவற்றையும் பற்றிச் சில முக்கியமான சுவையான தகவல்களையும் மறைமுகமாகத் தருகின்றது.

விநயபிடகம் பின் வரும் ஐந்து நூல்களைக் கொண்டுள்ளது:

1. பாராஜீகபாலி - பெரிய குற்றங்கள் (விபாங்கம்)

2. பாசிட்டியபாலி - சிறிய குற்றங்கள் (விபாங்கம்)

3. மகாவாக்கியபாலி - பெரிய பகுதி (கந்தக்கம்)

4. சுல்லவாக்கபாலி - சிறிய பகுதி (கந்தக்கம்)

5. பரிவாரபாலி - விநயத்தின் பொழிப்பு

கந்தபிடகம் முக்கியமாக, புத்ததேவர் தாமே பல சந்தர்ப்பங்களில் வழங்கிய

அறவுரைகளைக் கொண்டது. அதோடு புத்ததேவரின் சிறந்த சீடர்களான சங்கைக்குரிய சாரிபுத்த, ஆநந்த, முகலான தேரர்கள் ஆகியோரின் அறவுரைகள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு மக்களின் மனப்பாங்குக்கேற்ப இப்பிரசங்கங்கள் ஆற்றப்பட்டமையால் இது ஒரு அறிவுரை நூலை ஒத்திருக்கின்றது. ஒன்றுக்கொன்று முரணானவைபோன்ற வாசகங்கள் இருந்தாலும் அவற்றைப்பற்றித் தப்பான அபிப்பிராயங்கள் கொள்ளக்கூடாது. ஏனெனில் அவை புத்ததேவரால் சமயோசிதமாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை யடையக் கூறப்பட்டவையாகும். உதாரணமாகச் சிறிதேனும் புத்தியில்லாமல் அங்கலாய்க்கும் ஒருவன் கேட்ட கேள்விக்கு மௌனம் சாதித்தும், அதே கேள்விக்கு மெய்யான அக்கறையோடு கேட்பவன் கேட்டபோது மிக விபரமாகவும் பதிலளிப்பர். பெரும் பாலான அறவுரைகள் பிக்குகளின் நன்மைக்காகவே வழங்கப்பட்டவை யாதலால், அவை தூய வாழ்க்கை, சித்தாந்த விளக்கம் முதலியற்றோடு சம்பந்தப்பட்டதாக உள்ளன. மேலும் பொதுமக்களாகிய உபாசகர்களின் இலௌகீக ஆத்மீக வளர்ச்சிக் கேதுவான வேறுபல அறவுரைகளும் காணப்படுகின்றன.

சுத்தபிடகம் ஐந்து நிகாயங்களை அல்லது தொகுப்புக்களைக் கொண்டுள்ளது.

அவை:

1. தீக நிகாயம (நீண்ட அறவுரைகளின் தொகுப்பு)

2. மஜ்ஜிம நிகாயம் (நடுத்தர அறவுரைகளின் தொகுப்பு)

3. சன்யுத்த நிகாயம் (தொடர்பான பழமொழிகளின் தொகுப்பு)

4. அங்குத்தர நிகாயம் (எண்வரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட அறவுரைகளின் தொகுப்பு)

5. குத்தக நிகாயம் (சிறிய தொகுப்பு)

ஐந்தாவது தொகுப்பான குத்தக நிகாயம் மேலும் 15 நூல்களாகப்

பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

1. குத்தகபாதா (சிறிய மூலவாசம்)

2. தம்மபாத (வாய்மைவழி)

3. உதானம் (ஆநந்தத்தின் வெற்றிப் பாடல்கள்)

4. இதிவுத்தக ("இப்படிச் சொல்லப்பட்டது" அறவுரைகள்)

5. சுத்தநிபாத (தொகுக்கப்பட்ட அறவுரைகள்)

6. விமானவத்து (மோட்சத்தைப்பற்றிய கதைகள்)

7. பேதவத்து (பேதர்கள் பற்றிய கதைகள்)

8. தேரகாதா (சகோதரர்களின் இசைப்பாக்கள்)

9. தேரிகாதா (சகோதரிகளின் இசைப்பாக்கள்)

10. ஜாதக (பிறப்புப் பற்றிய கதைகள்)

11. நிதேச (விளக்கவுரைகள்)

12. பட்டிசம்பிதாமாக (நுண்ணறிவின் ஆராய்ச்சி)

13. அபதான (அரகத்துக்களின் வாழ்க்கை)

14. புத்தவம்சம் (புத்தரின் வரலாறு)

15. சரியாபிடகம் (ஒழுக்க முறைகள்)

மூன்று பிடகங்களில் அபித்தம்ம பிடகம்தான் மிக முக்கியமானதும்

சுவையுள்ளதும் ஆகும். எளிமையும் தெளிவும் செறிந்த அறவுரைகளைக் கொண்ட சுத்த பிடகத்துக்கு எதிர்மாறாக இது புத்தபோதனையின் ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டுள்ளது.

பாரம்பரியமான போதனைகள் (வோகார தேசனா) சுத்த பிடகத்திலும் முடிந்த

முடிவான போதனைகள் (பரமத்த தேசனா) அபித்தம்ம பிடகத்திலும் காணப்படுகின்றன.

அபித்தம்மம் ஞானிகளுக்கு இன்றியமையா வழிகாட்டியாகவும், ஆன்மஈடேற்றம் பெற்றவரின் அறிவுக்கு விருந்தாகவும், ஆராய்ச்சியாளரின் சிந்தனைக்கு விருந்தாகவும் இருக்கின்றது.

அபிதம்மத்தில் உணர்ச்சிக்கு வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. சிந்தனைகள் பெரும்பாலும் ஒழுக்கநெறி பற்றியே பகுத்து வகுக்கப்பட்டுள்ளன. மனநிலைகள்

வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொருவகை உணர்ச்சியின் அமைப்பும் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சிந்தனைகள் எப்படி எழுகின்றன என்பது மிக நுட்பமாக அபித்தம்மத்திலே விரித்துரைக்கப்படுகின்றது. இந்நூலிலிருந்து மனிதனைத் தூய்மைப்படுத்துவதற்கு உபகாரமாயில்லாமல் அவனுடைய மனதைக் கவரும் பொருத்தமில்லா வாழ்க்கைச் சிக்கல்கள் மிக்க கவனத்துடன் ஒதுக்கப்பட்டுள்ளன.

சடப்பொருள்பற்றிச் சுருக்கமாக அபித்தம்மத்தில் விவாதிக்கப்படுகின்றது. சடப்பொருளின் அடிப்படை அலகுகளும், இயல்புகளும், தோற்றுமிடம் போன்றவையும் சடப்பொருளுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்புகளும் விளக்கப்பட்டுள்ளன.

உருவம் என்ற அமைப்பை உண்டாக்கும் மனம், பொருள் என்னும் இரு கூட்டுப்

பொருள்பற்றியும் இந்த அபித்தம்மம் அலசியாராய்ந்து, உலக நிகழ்ச்சிகளின் உண்மைத் தன்மைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இவ்வடிப்படையில் ஒரு தத்துவதரிசனமே தோன்றி வளர்ந்துள்ளது. இத்தத்துவதரிசனத்தை ஆதாரமாகக்கொண்டு மேலான இலட்சியமாகிய நிர்வாண நிலையை அடைய ஒரு அறநெறி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அபித்தம்ம பிடகம் ஏழு நூல்களைக் கொண்டுள்ளது. அவையாவன:

1. தம்மசங்கணி (தம்மங்களின் வகைகள்)

2. விபங்கம் (பிரிவுகள் பற்றிய நூல்)

3. கதாவத்து (கருத்து மாறுபாட்டு வகைகள்)

4. புக்கல பஞ்ஞத்தி (தனியாட்கள் பற்றிய விளக்கவுரை)

5. தாது கதா (மூலங்கங்களைப்பற்றிய உரையாடல்)

6. யமக (சோடிகள் பற்றிய நூல்)

7. பட்டான (உறவு பற்றிய நூல்)

புத்தர் தமது சித்தாந்தத்தை பொதுமக்களுக்கும், கற்றோருக்கும் ஏற்ப

போதித்தபடியால், திரிபிடகத்தில் பாலர்க்குப் பாலும் புலவர்க்குப் புலமையும் உண்டு. திரிபிடகத்தின் புனித வாசகங்களில் பதிக்கப்பட்டுள்ள உயரிய தெய்வீக தம்மத்தில், சத்து சித்து ஆகியன விளக்கப்பட்டுள்ளன. இன்று ஆழ்ந்த உண்மை

என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு நாளை தூக்கியெறியப்படும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பற்றித் தம்மம் அக்கரைப்படவில்லை. புத்தர் எங்களுக்கு ஆச்சரியப்படத் தக்க தத்துவக் கோட்பாடுகளைத் தரவில்லை. ஏதும் புதிய சடப்பொருள் விஞ்ஞானத்தையும் உருவாக்க முன்வரவில்லை. எங்கள் ஆன்ம ஈடேற்றத்தைப் பொறுத்த வரையில் அகத்தும், புறத்தும் உள்ளவற்றை விளக்கி, பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்ட சாந்நித்திய நிலையை அடைய ஏற்றவொரு

பாதையை வகுத்து விளக்கியுரைத்தார். இது இணையற்ற, உன்னதமான ஒரு தனிச்செயலாகும், இதனால் அவர் பல நவீன விஞ்ஞானிகளுக்கும், தத்துவஞானிகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கினார்.

ஷொப்பினோர், துன்பத்தின் உண்மையையும் அதன் காரணத்தையும் மேனாட்டுப்

போர்வையிற் கொண்ட தன், "சித்தமும் கருத்துமாகிய உலகம்," என்னும் நூலில் தந்துள்ளார். இஸ்பினோசா, ஒரு நிரந்தரமான சத்துப் பொருளின் உளதாம் தன்மையை மறுக்காவிட்டாலும் எல்லாச் சடப்பொருளும் நிலைபேறில்லாதன என்று உறுதியாகக் கூறியுள்ளார். "நிலையுள்ள, மாறாத, நிரந்தரமான, நிலைபெற்ற, முடிவில்லாத ஓர் அறிவுப் பொருளைக் கண்டடைவதன் மூலம் துயரத்தை வெல்ல முடியும், என்பது அவர் கருத்து.

பிரிக்க முடியாதது என்று சொல்லப்படும் அணு ஒரு புலனறிவுக்கப்பாற்பட்ட கற்பனைப் பொருள் என்று பெர்க்லி நிருபித்தார். மனதைப் பற்றிய கடுமையான பகுப்பாராய்ச்சிக்குப் பின் ஹியூமும் விழிப்புணர்ச்சி, மின்வேகத்தில் தோன்றி மறையும் மனநிலைகளைக் கொண்டது என்று முடிவு செய்தார். மாறுதல் பற்றிய சித்தாந்தத்தைப் பெர்க்சன் ஆதரித்தார். விழிப்புணர்ச்சியென்பது ஒரு சிற்றாறு என்ற

கருத்தைப் பேராசிரியர் ஜேம்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

புத்ததேவர் மாறுதல் (அநித்தம்), துயரம் (துக்கம்), ஆன்மாவற்ற நிலை (அனாத்தா)

என்ற மூன்று சித்தாந்தங்களையும் 2500 ஆண்டுகளுக்கு முன் கங்கை நதிப்பள்ளப் பிரதேசத்தில் சுற்றித் திரிந்த காலத்தில் விளக்கி நிறுவினார்.

பகவான் புத்தர் தாம் அறிந்து கொண்ட அனைத்தையும் மக்கட்குப் போதிக்கவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சமயம், அவர் ஒரு வனத்துக்கூடாகச் செல்லும் போது ஒரு கையளவு இலைகளை எடுத்துத் தன்

சீடர்களைப் பார்த்து, "பிக்குகளே! நான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது என் கையிலிருக்கும் இவ்விலைகளுக்கு ஒப்பானதே. நான் கற்றுக் கொடுக்காதது இந்த வனத்திலிருக்கும் இலைகளின் தொகைக்குச் சமமானது," என்று சொன்னார்.

ஒருவனின் உளத் தூய்மைக்கு மிக அத்தியாவசியமானது என்று தாம் கருதியவைகளை மட்டுமே பகவான் போதித்தார். அவரது போதனைகளில் மறையுரை அல்லது ஒளிவு மறைவற்ற உரை என்று வித்தியாசம் காண முடியாது. அவருடைய உயரிய வாழ்க்கைப் பணியோடு தொடர்பில்லாத விஷயங்களில் அவர் மௌனத்தையே அநுசரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

பௌத்தம் விஞ்ஞானத்தோடு இணக்கமுடையது என்பதில் ஐயமில்லாவிட்டாலும் இவ்விரண்டையும், ஒத்த போதனைகளெனக் கருதல் வேண்டும். ஏனெனில் விஞ்ஞானம் உலகவியல் உண்மைகளைப் பற்றியது. பௌத்தம், ஒழுக்க ஆத்மீக உண்மைகளை ஆராய்கின்றது. இவையிரண்டினதும் பொருள்கள் வேறுபடுகின்றன.

புத்தபிரான் கற்றுக்கொடுத்த தம்மம் ஏட்டில்மட்டும் பாதுகாக்கப்படவேண்டிய

போதனையன்று. வரலாற்று அல்லது இலக்கிய நோக்குடன் பயிலவேண்டிய பாடமுமன்று. இதற்கு மாறாகப் பௌத்த தம்மம் கற்கப்பட்டு, ஒருவனின் அன்றாட

வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஏனெனில் நாளாந்த வாழ்க்கையில் சாதனை செய்தாலன்றி உண்மை புலப்படமாட்டாது. ஆகவே தம்மம் ஓதப்படுதல் வேண்டும். ஓதலினினும் சிறந்தது, அதனை அநுட்டித்தல். அதனினும் சிறந்தது அதனைத் தெளிதல். தெளிந்து நிட்டைகூடுதலே அதன் முடிவான குறிக்கோளாகும். பிறப்பு இறப்புக்களைத் கொண்ட சம்சார சாகரத்திலிருந்து கடைத்தேறும் ஒரே நோக்கத்துக்காகவேதான் பௌத்த தம்மம் ஒரு படகுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பௌத்தம் ஒரு தத்துவம் என்று திட்டவட்டமாகக் கூற இயலாது.

ஏனெனில், பௌத்த மெய்ஞ்ஞானத்தை நாடிப் பின்செல்லத் தூண்டும் ஒரு பத்திமார்க்கம் மாத்திரமன்று. பௌத்தம் ஒரு தத்துவத்தை ஒத்திருக்கலாம். ஆனால், அது தத்துவத்தினும் பார்க்க விரிவாகப் பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

தத்துவம் சாதனைகளில் அதிகம் ஈடுபாடுகொள்ளாதது, பெரும்பாலும் அறிவோடு

மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் பௌத்தமோ சாதனை, நிட்டை கூடுதல் என்பனவற்றைச் சிறப்பாக வலியுறுத்துகின்றது.

* * * * *