preface

முன்னுரை

"எவரொருவர் புத்த பெருமானின் எண்ணற்ற போதனைகளில் சிலவற்றைக் கவனத்துடன் படிக்கின்றாரோ, அவர் அவற்றுள் ஒரு இசைவும், நிறைமதியும், அருள் நிலையும், புன்னகையுடனான மேம்பட்ட நிலையும் இருப்பதை உணர்வார். ஒரு முழுமையான அசைக்க முடியாத உறுதியும், நிலையான அருட்குணமும், எல்லையற்ற பொறுமையும் இருப்பதைக் காண்பர். இந்த ஆன்மீக உள்ள அமைதிக்கான அப்போதனைகளில் அறிவுரையும், முதுமொழியும், நினைவூட்டுச் செய்திகளும், நிரம்பியவைகளாக இருக்கின்றன."

ஹெர்மன் ஹெஸ்ஸே

ஜெர்மானிய/சுவிஸ் எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்

புத்த பெருமானின் போதனைகளின் குறிக்கோள் விடுதலையே. பேராசையிலிருந்து விடுதலை, நமது அறியாமையால் நாமே உருவாக்கிக்கொள்ளும் துன்பத்திலிருந்து விடுதலை, இறுதியாகப் பிறப்பு இறப்பு என்னும்சுழற்சியிலிருந்தும் விடுதலை - அதாவது நிருவாண நிலை. தூரத்திலிருக்கும் மலைகளின் உச்சியில் கண்கூசும் ஒளியுடன் மின்னும் பனி. அதனைப் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறோம். ஆனால் இன்னும் தொட்டதில்லை. அதேபோல, நிருவாண நிலை என்னும் விடுதலை ஒரு பாட்டையின் முடிவிலிருக்கிறது. அதுவே மேன்மைமிக்க எட்டுவழிப் பாட்டை. ஆனால் அப்பாட்டையோ நீண்டது. சில சமயங்களில் தடங்களில்லாமலும், சில சமயங்களில் கரடு, முரடானதாகவும், பல சுழற்சிகளும் திருப்பங்களும் உடையது. அவ்வழியில் நாம் நடக்க வேண்டுமானால் ஓரங்கட்டாமல் கவனமாக அடி எடுத்து வைப்பதற்கு நமக்கு உதவி வேண்டும்.

பௌத்தர்களுக்கு இவ்வுதவி மூன்று புகலிடங்கள் மூலமாகக் கிடைக்கிறது. புத்த, தம்ம, சங்கம் என்னும் மூன்றே அவைகளாம். புத்த பெருமானே ஒரு புகலிடமாம். ஏனென்றால் அவருடைய வாழ்க்கையும் சாதனைகளும் பேரறிவு, அடையக் கூடியது என்பதற்கான வாழும் சான்றுகளாம். முழுமையான மனித வாழ்க்கையே உண்மையான வாழ்க்கையின் இலட்சியமாம். சமயஞ்சார்ந்த முதிர்ச்சியைத் தரும் பலருக்கு அவரே உச்சக்கட்ட மூலப்படிவமாம். புத்த பெருமானின் வாழ்க்கையும், சான்றுகளும் பிரதிபலித்து நம்மை ஊக்கத்துடன் அந்த வழியில் நடத்திச் செல்கிறது.

தம்மம் என்னும் அறமாகிய புத்த பெருமானின் போதனைகளும் ஒரு புகலிடமே. ஏனென்றால் அவை நமக்குப் புறவாய்மை வழுவாத, கண்கூடான மற்றும் உண்மைத் தோற்றத்தின் முழு விளக்கத்தையும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விவரித்துக் கூறுகிறது.

சங்கம், புத்த பெருமானின் மாணவர்களின் ஒருங்கிணைப்புக் குழுவாகும். அது கடந்த கால, நிகழ்கால, பேரறிவு பெற்ற அல்லது பெறாத அவர்களுடைய பொதுவான பொறுப்பால் புத்தபெருமான் அடைந்ததை அடைவதற்காக வேண்டி இணைக்கப்பட்டவர்களின் குழு. சங்கமும் நமக்கு ஒரு புகலிடமாம். ஏனென்றால் நமக்கு முன் அவ்வழியில் நடந்தவர்கள், நமக்கு முன்னிருக்கும் பயணத்தைப் பற்றி அறிவுரை கூறுவார்கள். நம்முடன் நடப்பவர்கள் பயணத்தில் நமக்கு நண்பர்களாவார்கள். நாம் வேறுபட்டு வழி தவறிச்செல்லும்போது நம்மைத் திருப்பி நேர் வழிக்கே அழைத்து வருவர். தடுமாறி விழும்போது நமக்கு உதவுவர்.

புத்த பெருமான் அறத்தை உணர்ந்த பிறகே பிரகடனப் படுத்தினார். அறத்தைப் பின்பற்றிப் பயிற்சி செய்து சங்கத்தாரும் புத்த பெருமானைப் போல மாற்றம் காண விரும்பினர். ஆகையால், மூன்று புகலிடங்களிலும், தம்மம் என்னும் அறமே தலை சிறந்ததாம். புத்த பெருமான், அறத்தை நம்பியே அவர் வாழ்ந்ததாகவும் அறத்திற்குக் கௌரவமளித்து, மரியாதை கொடுத்துப் பணிவிரக்கம் காட்டி, அறத்தைத் தம் கொடியாகப் பிடித்து, ஏற்புடைச் சமயக்கோட்பாட்டு வாசகமாகக் கொண்டு அறத்தை மேலாண்மையராகக் கொண்டு தாம் வாழ்ந்ததாகக் கூறுகிறார். (AI 109)

புத்த பெருமான் பேரறிவு பெற்றது கி.மு 528 ஆம் ஆண்டு. அதன் பிறகே அவர் தாம் கண்ட வாய்மையை வாய் மூலமாகவும், தன் நடத்தையின் மூலமாகவும் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தார். அவர் வாய்வழி உதிர்ந்தபொழுது சொற்கள், ஏற்புடையதாகவும், தெளிவாகவும், நிறைந்த உவமைகளுடனும், விவரித்தும், மிகவும் பொருளுள்ளதாகவுமிருந்தன. அதனை நேராகக் கேட்கும் பேறு பெற்றவர்கள் அப்போதனைகளை மறவாது நெஞ்சில் பதித்துக் கொண்டனர். அவருடைய செயல்கள், மற்றவர்களை அவர் எதை வளர்த்துக் கொள்ள வலியுறுத்தினாரோ, அவை கருணையின் முழுமையான சொல் உணர்ச்சி முனைப்பாங்காக இருந்தது. அச்செயல்களும் நீண்ட நாள் நினைவில் வைக்கப்பட்டன. புத்தபெருமான் இறுதி நிர்வாண நிலையையடைந்து ஆறுமாதங்களுக்குப் பின்னர், பளிங்குப் பாசிமணிகளில் தங்க இழை நுழைவதைப் போன்று, அவர் போதனைகள் நினைவில் நிறுத்தப்பட்டு, வழிவழியாக வாய்மொழியாகவே ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டது. இவ்வாய்மொழி மரபு முடிவாக, ஏட்டில் எழுதி வைக்க முடிவெடுத்த போது, மூன்று பெரிய புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. அவை பெரிய மூன்று தொகுப்புகளாம். அவைகளே திரிபிடகமென அழைக்கப்பட்டன.

முதற்தொகுப்பு சுத்த பிடகம் எனப்படும். அதில் புத்த பெருமானின் போதனைகளும், புத்த பெருமானின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளும், பேரறிவு பெற்ற அவரது மாணவர்கள் சிலரது உரையும் உள. இரண்டாவது தொகுப்பான வினய பிடகத்தில், பௌத்த அறவணடிகளான துறவிகளுக்கான விதிகளும், நிர்வாக முறையும் விவரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தொகுப்பான அபிதம்ம பிடகம், உள இயல் தொடர்பான முறைகளின் பொது மெய்மை ஆய்வாக உள்ளது.

பல நூற்றாண்டுகளாகப் பௌத்தர்கள் திரிபிடகத்தின் மீது வைத்திருக்கும் பற்றைத் திரிபிடகத்தைத் தங்கத் தகடுகளில் பொறித்தும், அப்பக்கங்களை வைரங்கள் பதிக்கப்பட்ட அட்டைகளுக்கிடையில் வைத்தும், அவைகளடங்கிய முழுமையான அடங்கலேற்றைப் பெரிய பெரிய நூலகங்களில் வைத்தும் காப்பாற்றி வந்தனர். ஆனால் மிகமுக்கியத்துவமளித்துத் தங்கள் வாழ்க்கையைத் திரிபிடகத்திலிருக்கும் அறத்துடன் மையப்படுத்தி வாழ முயன்றனர். வழிகாட்டுதலுக்கும் அகத் தூண்டுதலுக்கும் அவைகளை (திரிபிடகத்தை) நம்பினர். மாறாகத் திரிபிடகம் அவர்களுக்கு மனநிம்மதியையும் உளத் தூய்மையையுமளித்து நிருவாண நிலை என்னும் முழு விடுதலையடைய வழிகாட்டியது. சமயஞ்சார்ந்த வாழ்வில் புத்த பெருமானின் சொற்களும் போதனைகளும் இன்றியமையாத புகழ் வாய்ந்தவையாம்.

பௌத்த சமய வாழ்க்கையின் மையம் தியானமாம். புத்த பெருமானால் போதிக்கப்பட்ட தியானப் பயிற்சியில் அறத்தை நினைவு கொள்வதே அதிமுக்கியமானது (தம்மானுசதி). தியானப் பயிற்சியிலேயே ஒரு சில பத்திகளைத் தெரிந்தெடுத்து அதன் பொருளை நினைவு கூர்தலும் ஒரு பகுதியாம். நாள்தோறும் தியானம் செய்யும் பொழுது ஏற்புத்திறனுடைய பணிவார்ந்த நோக்கும், அச்சொற்களின் பொருளை ஆழ்ந்து நினைப்பதால் அது உள்ளத்தில் மூழ்கி மிக ஆழ் நிலைக்குச் செல்ல உதவும். புத்த பெருமானின் சொற்களையும், போதனைகளையும் அவர் எப்படிப் போதித்தாரோ அப்படியே படிப்பதோ அல்லது படித்தவர்களிடமிருந்து கேட்பதோ, புத்தபெருமானுடனேயே நேரில் தொடர்பு கொண்டதற்குச் சமமாகும்.

இப்புத்தகம் பௌத்த அறத்தை நினைவுகூர்ந்து பயில்வோருக்காகத் தொகுக்கப்பட்டது. ஆனால் புத்தபெருமானின் போதனைகளில் நாட்டமுடையவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இப்புத்தகத்தில் திரிபிடகத்தில் காணும் சமயப் பேருரையின் சாரமும், புத்த பெருமானுக்குப் பிற்பட்ட திருச்சபை மரபு வழுவாத இலக்கியமும் சேர்க்கப்பட்டு, ஒரு முழு ஆண்டும், நாள் தோறும் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சாரங்கள் பாலி புத்தகச் சங்கதின் ஆங்கில மொழி பெயர்ப்புகளின் மறு பதிப்புகளாம். சில வாக்கியத் தொகுதிகள் புதிதாக மொழி மாற்றம் செய்யப்பட்டவை. பௌத்தப் புனித இலக்கியத்தில் பல அடிகள் அடிக்கடியும், திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளன. அது அறத்தை வாய்மொழியாகப் பரப்பிய பொழுது மிக அவசியமெனக் கருதப்பட்டது. ஆனால் அது கவனமாற்றம் செய்வதாக இக்கால வாசகர்கள் கருதுகின்றனர். அவை எங்கெங்கு பொருள்மாறவில்லையோ அவ்விடங்களிலெல்லாம் (திரும்பத் திரும்பக் கூறப்பட்ட அடிகள்) நீக்கப்பட்டுள்ளன அல்லது சுருக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகத் தயாரிப்பில் எனது மாணவர்களும் நண்பர்களுமான திரு பிலிப் டான், பால் ஃபெர்குசன், வின் கிலைன் ஆகியோர் முழு மூச்சுடன் தங்கள் நேரத்தையும் திறனையுந் தந்து உதவினர். நாம் எல்லாரும் இணைந்து இவ்வறத்தைப் பரிசாகக் கொடுப்பதில் கிடைக்கும் பெருமையைப் பகிர்ந்து கொள்வோம். இப்புத்தகத்தைப் படிப்பவர்கள் அனைவரும் அதனால் பயன் பெறுவார்களாக!

சிராவஸ்தி தம்மிகா

(புத்த வசனம் ஆங்கில மூலப் புத்தகத்திற்கு அறவண அடிகள் சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்கள் எழுதிய ஆங்கில முன்னுரையின் தமிழாக்கம்)

புத்தரைப் போற்றுதும்..

பேரன்புடையீர் வணக்கம்!

போதி மாதவராம் சித்தார்த்தக் கௌதமரின் மகாபரிநிர்வாணத்திற்குப் பிறகு, செவி வழியாக நினைவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அவருடைய போதனைகளை, அவர் காலத்தில், அண்ணலின் போதனைகளை நேராகவே கேட்ட சான்றோர்களின் உதவியுடன், மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துத் திரிபிடகமென எழுதிப் பாதுகாத்து வந்தனர். அவையே சுத்தபிடகம், வினயபிடகம், அபிதம்ம பிடகம் என்னும் பெரும் புத்தகங்களாம். இப்புதகங்களில் பல துணைப் பிரிவுகளுள. பௌத்தச் சான்றோர்களும் பௌத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டோரும் பயன் பெருவான் வேண்டியும், ஆண்டு முழுவதும் நாள்தோறும் படிப்பதற்கு எளிதாகவும், ஏற்றதாகவும், பிரித்து வணக்கத்திற்குரிய அறவண அடிகள் சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவர்கள் 'புத்தவசனம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்கள். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகம் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக அறவண அடிகளின் அனுமதியுடன் தமிழாக்கம் செய்துள்ளேன்.

இந்நூலைத் தமிழாக்கம் செய்யத் தூண்டிய அறவண அடிகள் சிராவஸ்தி தம்மிகா பாந்தே அவகளுக்கும், இத்துறையில் என்னை ஊக்குவித்து வரும் திரு லீ காங், புலவர் திரு தி. இராசகோபாலன் ஆகியோருக்கும் இப்புத்தகத்திற்குப் படி எடுப்பதில் உதவிய என் செல்வங்கள் திரு சு. கௌதமன், திரு சு. அண்ணாதுரை, திரு சு. அசோகன், செல்வி சு. சங்கமித்ரா, எனது நண்பர்கள் திரு ஏ. கோபால், திரு எஸ் பழனி ஆகியோருக்கும் இப்புத்தகத்தை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. மு. க. சுந்தரம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் கற்ற நல்லோர் இப்புத்தகத்தால் பயன் பெறுவார்களாக.

நன்றி.

அன்புடன்,

தி. சுகுணன்

சங்கமித்ரா,

13, 43/3, நெல்வயல் சாலை,

பெரம்பூர், சென்னை-600011

22-11-1992