பௌத்தக் கதைகள் - பேருண்டியாளன் பிரசேனஜித்து

பௌத்தக் கதைகள் முகப்பு

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

பேருண்டியாளன் பிரசேனஜித்து

பிரசேனஜித்து என்பவர் கோசல நாட்டின் மன்னர். அரச போகங்களைக் குறைவில்லாமல் நிறையப் பெற்றிருந்தும் இவர் வாழ்க்கை இவருக்கே துன்பமாகவே இருந்தது. உடல்நலம் என்பது இவருக்குச் சிறிதளவும் கிடையாது. உடல் நலம் இல்லாமல் போகவே, மனநலமும் இல்லை. எப்போதும் சோம்பலும் உறக்கமுமாக இருப்பார். படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டிருப்பார். மூக்குக்கு மேல் முன்கோபம் வரும். எல்லோரிடத்திலும் சிடுசிடு என்று சீறி விழுந்து கடுமையாகப் பேசுவார். எந்த வேலையிலும் மனம் செல்லுவதில்லை. அரச காரியங்களையும் கவனிப்பதில்லை. மயக்கமும் சோம்பலும் இவரை விட்டு அகலவில்லை.

இதற்கு காரணம் என்ன? பிரசேனஜித்து உணவு பிரியர். அறுசுவை உணவுகளை அளவுமீறி அதிகமாக உண்பார். மிதமாக உணவுகொள்ள அவர் பழகவில்லை. மீதூண் கொள்வதனாலே உடல்நலம் கெட்டு அதனால் சோம்பலும் உறக்கமும் மயக்கமும் ஏற்பட்டு வாழ்க்கையையே துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டார். உடம்பு அவருக்கு ஒரு பாரமாகத் தோன்றியது. "தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்," என்னும் பொன்மொழியை அவர் அறியவில்லை. மேலும், தாம் பேருண்டி கொள்வதுதான் தமது உடல் நோய்க்கும் உளநோய்க்கும் காரணம் என்பதை அவர் அறியவில்லை.

இவ்வாறு உடல்நலத்தையும் மனநலத்தையும் கெடுத்துக் கொண்டு வாழ்நாளை வீண்நாளாக்கிக் கொண்ட பிரசேனஜித்து, ஒருநாள் தம் மருகன் சுதர்சனன் என்பவரை அழைத்துக்கொண்டு, பகவன் புத்தர் தங்கியிருந்த விகாரைக்குச் சென்றார். சென்று பகவன் புத்தரை வணங்கினார். அப்போதும் அவருக்குச் சோம்பலும் மயக்கமும் உறக்கமும் மேலிட்டன. இவற்றைத் தடுத்துக்கொள்ள அவ்விடத்தில் உலாவினார். உலாவியும் மயக்கமும் உறக்கமும் மாறவில்லை. அவர் படுத்துக்கொள்ள வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். ஆனால், பெரியாராகிய பகவன் புத்தர் முன்னிலையில் அவ்வாறு செய்வது தவறு என்று கண்டு ஒருபுறமாக அமர்ந்தார். அரசருடைய நிலைமையைக் கண்ட புத்த பகவான், "அரசே! தூக்கமில்லாமல் கண் விழித்திருக்கிறீர்கள் போல் தோன்றுகிறது," என்று கூறினார்.

"எனக்கு எப்போதும் இப்படித்தான். சாப்பிட்ட பிறகு சோம்பலும், தூக்கமும், மயக்கமுமாக இருக்கிறது. எதிலும் மனம் செல்லுவதில்லை," என்று விடையளித்தார் அரசர்.

பகவருக்கு உண்மை விளங்கிவிட்டது. அரசருக்குத் தேகசுகம் கெட்டிருப்பதன் காரணத்தை அறிந்தார். உடல் நலம் பெறுவதற்குரிய வழியை அருள்செய்ய எண்ணங்கொண்டார். ஆகவே, பகவர் இவ்வாறு அருளிச் செய்தார்: "அரசே! அளவுமீறி உணவு கொள்கிறவர்களுக்கு எப்போதும் இதுபோன்ற துன்பங்களும் இன்னல்களும் உண்டாகின்றன. சோம்பலுக்கு இடங்கொடுத்து மிதமிஞ்சி உணவு கொள்கிற பேருண்டிக்காரர்கள், கூழ்வார்த்து வளர்க்கப்படுகிற பன்றிகளைப் போல, மயக்கங்கொண்டு படுத்துப் புரண்டு தூங்கியே காலங்கள் கழிப்பார்கள். இத்தகைய பேதைமக்கள் மறுமையிலும் வீடுபேறடைய மாட்டார்கள்."

அரசர், முயற்சியோடு உறக்கத்தைத் தடுத்துக் கொண்டு மனத்தை ஒருவழிப் படுத்திப் பகவர் அருளிய மொழிகளைச் செவிசாய்த்துக் கேட்டார். பகவர் மேலும் அருளிச் செய்தார். "சாப்பிடும்போது விழிப்புடன் இருந்து மிதமாக உணவு கொள்ளவேண்டும். உணவை அளவோடு சாப்பிடுகிறவர்களுக்கு எப்போதும் உடல்நலம் நன்றாக இருக்கும். இதை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.

சாப்பிடும்போது விழிப்பாக இருந்து மிதமாக உணவு கொள்கிறவர்கள், உடம்பில் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள். மேலும் நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்."

பிறகு பகவன் புத்தர், அரசர் அருகில் இருந்து தம் அறவுரைகளைச் செவிசாய்த்து ஊக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்த சுதர்சன குமாரனை அழைத்து, தாம் கூறியதை மனத்தில் வைத்துக்கொண்டு அரசர் உணவு கொள்ளும் போதெல்லாம் அருகில் அமர்ந்து அரசர் காதில் கேட்கும்படி பாராயணம் செய்துவரக் கட்டளையிட்டார். சுதர்சன குமாரனும் அவ்வாறு செய்வதாக உறுதி கூறினான்.

அன்று முதல், பிரசேனஜித்து அரசர் உணவு கொள்ளும் நேரங்களில், சுதர்சன குமாரன் அரசன் அருகில் அமர்ந்து பகவன் புத்தர் அருளிய வாக்கியத்தைப் பாராயணம் செய்துவந்தான்.

"சாப்பிடும்போது விழிப்பாக இருந்து மிதமாக உணவு கொள்கிறவர்கள் நோயில்லாமல் இருப்பார்கள். அன்றியும், விரைவில் மூப்படைய மாட்டார்கள். மேலும் நெடுநாள் உயிர் வாழ்ந்திருப்பார்கள்."

இந்தச் சொல்லைக் கேட்கும் போது அரசர் அதிகமாக உணவு கொள்வதை நிறுத்திவிட்டார். இவ்வாறு ஓதுதல் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால், நாள்தோறும் மட்டாக உணவு கொள்ளும் வழக்கம் அரசருக்கு ஏற்பட்டது. இதனால் நாளடைவில் அவருக்குத் தேகநலம் உண்டாயிற்று. முன்பிருந்த சோம்பலும் தூக்கமும் மந்தமும் அவரைவிட்டு அகன்றன. சுறுசுறுப்பும் ஊக்கமும் மனமகிழ்ச்சியும் ஏற்பட்டன. சிடுசிடுப்பும் முன்கோபமும் பறந்தோடின. அரச காரியங்களிலும் மற்றக் காரியங்களிலும் மனம் செலுத்தித் தமது கடமைகளைக் செவ்வனே செய்யத் தொடங்கினார். எல்லோரிடத்திலும் அன்பாகவும் பெருந்தன்மையாகவும் நடந்து கொண்டார். இவ்வித மாறுதல் தமக்கு ஏற்பட்டதை அரசர் தாமே உணர்ந்தார். அவருக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று. பேருண்டி அருந்திய காலத்தில் தம் உடம்பிலும் மனத்திலும் அடைந்த துன்பங்களையும், அளவு உணவினால் இப்போது தாம் அடைந்துள்ள இன்பங்களையும் கண்கூடாகக் கண்ட அவர் பேருவகையடைந்தார். இனிய வாழ்க்கை பெற்றதற்காக மனம் மகிழ்ந்து, பெரும்பொருளை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்தார்.

பின்னர், பகவன் புத்தருக்குத் தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள அவரிடம் சென்றார். சென்று வணங்கி, "பகவரே, தங்கள் அருள்மொழிப்படி நடந்து அளவு உணவு கொண்டபடியினாலே இப்போது சோம்பலும், தூக்கமும், மயக்கமும், முன் சினமும் என்னைவிட்டுப் போய்விட்டன. இப்போது தேக நலம் பெற்றுச் சுறுசுறுப்பாகவும் ஊக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்," என்று கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது பகவன் புத்தர் அரசனுக்கு இதனை அருளிச் செய்தார்:

"உடல் நலத்தோடிருப்பது பெரும் பேறாகும். மனநிறைவுடன் இருப்பது பெருஞ்செல்வம் பெற்றதற்குச் சமம் ஆகும். மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது, நல்ல உறவினரைப் பெற்றது போலாகும்: (மோக்ஷம்) வீடுபேறு பெறுவது இவை எல்லாவற்றிலும் பேரின்பம் தருவதாகும்."

குறிப்பு: புத்தர் பெருமான், உணவு கொள்ளும் அளவைப்பற்றி அருளிச் செய்த பொன்மொழியோடு திருவள்ளுவர் அருளிச்செய்த பொன்மொழிகளையும் மனத்திற் கொள்வது பயனுடையது. அப்பொன் மொழிகளாவன:

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய்.

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபா டில்லை உயிர்க்கு.