guidedmeditation
தியானம் - ஒரு வழிகாட்டி
தணிசாரோ பிக்கு
Guided Meditation - Thanissaro Bhikkhu
English Version Notes within () brackets in the Tamil translation were taken from this article.
தமிழில் / Translation:
பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading
திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
வசதியாக உட்காருங்கள். முன், பின், இடம், வலம் என்று எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நிமிர்ந்து உட்காருங்கள் (ஒரு சிப்பாயைப்போல விறைப்பாக இருக்க வேண்டாம்). கண்களை மூடிக்கொண்டு நட்புணர்வான எண்ணங்களை நினையுங்கள். முதலில் இந்த நட்புணர்வான எண்ணங்களை உங்களுக்கே செலுத்தவேண்டும். ஏனென்றால் உங்களுக்காக நட்புணர்வான எண்ணங்கள் தோன்றாவிட்டால் - உங்கள் மகிழ்ச்சிக்காக ஆழமான ஒரு விருப்பத்தை உணர முடியாவிட்டால் - மற்றவர் மகிழ்ச்சி அடையவேண்டும் என்ற எண்ணம் உண்மையில் உங்களுக்குத் தோன்ற வாய்ப்பே இல்லை. எனவே உங்களுக்காகச் சொல்லிக் கொள்ளுங்கள், "நான் உண்மையான மகிழ்ச்சியைக் காண்பேனாக." உண்மையான மகிழ்ச்சி அகத்திலிருந்து தான் வரும் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். (புறத்தில் உள்ள காட்சி, சத்தம், வாசனை, உணர்ச்சிகள், மக்கள், பொருட்கள் போன்றவற்றை நம்பி உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைத்தால் ஏமாற்றத்திற்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் இவையெல்லாம் மாறக்கூடியவை. இது அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் மலைப் பகுதியில் வீட்டைக்கட்டுவதற்கு ஒப்பாகும்.) எனவே இது ஒரு சுயநல எண்ணம் இல்லை. உங்களுக்குள் உண்மையான மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடிய உபாயங்களைக் கண்டு பிடித்து வளர்த்துக் கொள்வீர்களென்றால், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களிடமும் பிரகாசிக்கச் செய்யலாம். இந்த உண்மையான மகிழ்ச்சியை அடைய மற்றவரிடமிருந்து எதனையும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. (தியானம் ஒரு புதையலைத் தேடுவது போல. எதைத் தேடுகிறோம்? மாறாத, கெட்டியான, மேன்மையானதொன்றை, மரணத்தால்கூடத் தொட முடியாதவொன்றை மனதில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.)
அடுத்து நட்புணர்வான எண்ணங்களை மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும். முதலில் உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு இந்த எண்ணங்களைப் பரப்புங்கள் - உங்கள் குடும்பம், பெற்றோர், நெருங்கிய நண்பர்கள்: அவர்களும் உண்மையான மகிழ்ச்சியைக் காண்பார்களாக. பின் நல் எண்ணங்களை மேன்மேலும் விசாலமான வட்டங்களாகப் பரவச் செய்யவேண்டும்: உங்களுக்கு நன்கு அறிமுகமான மக்கள், அதிகம் தெரியாதவர், உங்களுக்குப் பிடித்தவர், உங்களுக்கு விருப்போ வெறுப்போ இல்லாத தெரிந்தவர்கள், ஏன் உங்களுக்குப் பிடிக்காதவர்களிடமும் நல் எண்ணங்களை பரவச் செய்ய வேண்டும். உங்கள் நல் எண்ணங்களுக்குத் தடை வைக்காதீர்கள். அப்படி வைத்தால் உங்கள் உள்ளத்திற்குத் தடை வைத்தார்ப்போல ஆகிவிடும். அடுத்து நல்ல எண்ணங்களை உங்களுக்குத் தெரியாதோர்க்கும் பரப்புங்கள். மக்கள் மட்டும் இல்லாமல் எல்லா உயிர்கட்கும் எல்லாத் திசைகளிலும் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல்,கீழ் என்று எல்லாத் திசைகளிலும், எல்லையில்லாத் தூரத்திற்கு உங்கள் நல்ல எண்ணங்களைப் பரப்புங்கள். அனைவரும் உண்மையான மகிழ்ச்சியைக் காண்பார்களாக. (இந்த எண்ணங்களைப் பேணி வளர்க்காமல் உங்கள் புற வெறுப்புகளையும் கோபங்களையும் தியானத்திற்குக் கொண்டுவந்தால், உள்ளத்தை நோக்கும் போது இந்த வெறுப்புகளையும், கோபத்தையும் தான் காணமுடியும். நல்ல எண்ணங்களைப் பரவச் செய்வதால் புற விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மூச்சின் மீது கவனம் செலுத்த முடியும்.)
பின் உங்கள் எண்ணங்களை மீண்டும் நிகழ்காலத்திற்குக் கொண்டு வாருங்கள். உண்மையான மகிழ்ச்சி வேண்டுமென்றால் அதை நிகழ்காலத்தில் தான் காண முடியும். இறந்த காலமோ முடிந்துவிட்டது. எதிர்காலம் உறுதியற்றது. எனவே நிகழ் காலத்தில் இழைக்கப்பட்டு இருக்க வேண்டும். இங்கே உங்களிடம் என்ன இருக்கிறது? உடகார்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இந்த உடல் இருக்கிறது. எண்ணும், கவனிக்கும் இயல்பு கொண்ட மனம் இருக்கிறது. ஆக இவற்றை ஒன்று சேருங்கள். மூச்சைப்பற்றி நினைத்துக் கொண்டு உள் மூச்சையும் வெளி மூச்சையும் கவனியுங்கள். உங்கள் எண்ணங்களை மூச்சின் மீதே வைத்திருங்கள். அது தான் மனதில் வைத்திருத்தல் என்பது. மூச்சு உள் வருவதையும் வெளியேறுவதையும் கவனியுங்கள். அது தான் கவனம், விழிப்புடன் இருத்தல் என்பது. இந்த இரண்டு மனதின் இயல்புகளையும் (மனதில் வைத்திருத்தல் மற்றும் விழிப்புடன் இருத்தல்) ஒன்றாக வைத்திருங்கள். வேண்டுமென்றால் மனதில் வைத்திருக்கும் ஆற்றலை வளர்க்க ஒரு தியான வார்த்தையைப் பயன்படுத்தலாம். "புத்தோ" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். "புத்தோ" என்றால் விழித்திருத்தல். உள் மூச்சின் போது "புத்-" என்ற தியான வார்த்தையின் முதல் பகுதியை நினைத்துக்கொள்ளுங்கள். வெளி மூச்சின் போது "தோ" என்ற பகுதியை நினைவில் கொள்ளுங்கள். (மூச்சை உடலின் எந்தப் பகுதியில் சுலபமாக உணரமுடிகிறதோ, எங்கு வசதியாகப் படுகிறதோ அங்கு கவனத்தைச் செலுத்துங்கள். இது மூக்கின் நுனியிலோ, மார்பிலோ, அடி வயிற்றிலோ அல்லது வேறு எதாவது ஒரு பகுதியிலோ இருக்கலாம். அந்த இடத்திலேயே கவனத்தைச் செலுத்துங்கள். மூச்சு விடும் போது அங்கு எந்தவிதமான உணர்ச்சிகள் தோன்றுகின்றன என்பதைக் கவனியுங்கள்.)
சவுகரியமாக மூச்சு விட முயலுங்கள். இதோ இந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருக்க ஒரு உறுதியான வழி வசதியாக மூச்சு விடுவதுதான். அதே சமயத்தில் உங்கள் கவனத்தையும் திடப் படுத்தலாம். இச்சமயத்தில் உங்கள் உடலுக்கு எந்த விதமான மூச்சு வசதியாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பாருங்கள். அது நீண்ட மூச்சாகவோ (உள் மூச்சும் வெளி மூச்சும் நீண்டது), குறுகிய மூச்சாகவோ, நீண்ட உள் மூச்சும் குறுகிய வெளிமூச்சாகவும் அல்லது குறுகிய உள்மூச்சும் நீண்ட வெளி மூச்சாகவும் இருக்கலாம். பாரமான மூச்சாகவோ அல்லது மெல்லிய மூச்சாகவோ, வேகமானதாகவோ மெதுவான மூச்சாகவோ, ஆழமற்ற அல்லது ஆழமான மூச்சாகவோ இருக்கலாம். எந்தத் தாளலயம் உங்களுக்கு வசதியாகப் படுகிறதோ அதைச் சற்று நேரம் தொடருங்கள். மூச்சின் உணர்ச்சியை இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பொதுவாக மூச்சு எந்த அளவு சமதளமாக இருக்கிறதோ அந்த அளவு நல்லது. மூச்சை நுரையீரலுக்குச் சென்று வெளிவரும் காற்று என்று மட்டும் நினைக்காமல், உடல் முழுவதும் ஓடும் சக்தி ஓட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (ஒவ்வொரு மூச்சிலும் உடல் முழுதும் ஒரு ஊக்க ஓட்டத்தை உணரலாம். இந்த ஓட்டத்தைக் கவனித்து அந்தச் சக்தியைத் தடையின்றியும் சமமாகவும் ஓடவைத்தால் நம் உடலின் இயக்கம் நல்ல படியாக இருக்க உதவும். மேலும் வலியைக் கையாள மனத்திற்கு ஒரு கைப்பிடி கிடைக்கிறது.) அந்தச் சக்தியின் ஓட்டத்தை நுண்ணியமாகக் கவனியுங்கள். சற்று நேரத்தின் பின் உடல் நிலை மாறுவதைக் கவனிக்கலாம். ஒரு சமயத்தில் வசதியாகப் பட்ட மூச்சின் தாளலயம் இப்போது வசதியாகப் படவில்லை. ஆக மூச்சின் தாளலயத்தை உடலின் நிலைக்குத் தகுந்தார்ப்போல மாற்றிக் கொள்ளலாம். இந்தநேரத்தில் உடல் உங்களுக்கு என்ன சொல்கிறது என்பதைக் கேட்டு அதன்படி நடக்கத் தெரிந்து கொள்ளுங்கள். எத்தகைய மூச்சின் ஊக்கம் உடலுக்குத் தேவைபடுகிறது? நீங்கள் அந்த ஊக்கத்தை எப்படித் தரமுடியும்? உடல் சோர்வாக இருந்தால் உணர்ச்சியூட்டும் வகையில் மூச்சு விட்டுப் பாருங்கள். உடல் விறைப்பாக இருந்தால் இளக்கிவிடும் வகையில் மூச்சு விட்டுப்பாருங்கள்.
மனம் அலைந்து திரிய ஆரம்பித்தால் பொறுமையுடன் உடனே மீண்டும் திரும்ப மூச்சுக்கு கொண்டுவந்துவிடுங்கள். பத்து முறை அலையச் சென்றால், நூறு முறை அலையச் சென்றால் பத்து முறையும், நூறு முறையும் திரும்பக் கொண்டுவந்து விடுங்கள். விட்டுக் கொடுத்து விடவேண்டாம். (நீங்கள் விடப் போவதில்லை என்று மனதுக்குத் தெரிய வேண்டும். இறுதியில் அது உங்கள் விருப்பத்திற்கு இணங்கி வந்து விடும்.) இந்த இயல்புதான் ஆர்வம் என்பது. மனம் அலைந்து விட்டதை அறிந்த உடனே அதைத் திரும்பக் கொண்டு வந்து விட வேண்டும். குறிக்கோள் அற்று, பூக்களை முகர்ந்து கொண்டும், ஆகாயத்தைப் பார்த்த வண்ணமும், பறவைகளின் ஒலியைக் கேட்டுக் கொண்டும் நேரத்தை வீண் செய்ய வேண்டாம். உங்களுக்குச் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது: மூச்சை வசதியாக விடக் கற்றுக்கொள்ள வேண்டிய வேலை இருக்கிறது. மனதை ஒரு நல்ல இடத்தில், இக்கணத்தில் அமைதியடையச் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
மூச்சு வசதிப்படத் துவங்கியவுடன், உடலின் மற்ற பகுதிகளிலும் மூச்செடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை ஆராய ஆரம்பிக்கலாம். வசதியான மூச்சுடன் குறுகிய எல்லைக்குள் மட்டுமே இருந்தால் உங்களுக்குத் தூக்கம் வந்துவிடக்கூடும். எனவே தெரிந்தே உங்கள் உணரும் நிலையை விரிவாக்குங்கள். முதலில் உங்கள் தொப்புள் பகுதியில் கவனத்தை செலுத்தலாம். உள் மூச்சின் போது அவ்விடத்தில் எவ்வாறான உணர்ச்சி தோன்றுகிறது? வெளி மூச்சின் போது எவ்வாறான உணர்ச்சி தோன்றுகிறது? ஒரு சில மூச்சுகளுக்கு இப்படிக் கவனத்தைச் செலுத்துங்கள். அப்பகுதியில் உள் மூச்சின் போதோ வெளி மூச்சின் போதோ எந்த விதமான விறைப்போ இறுக்கமோ உள்ளதா? உள் மூச்சின் போது அவ்விடம் இறுக்கமாகிறதா? வெளி மூச்சின் போது அந்த இறுக்கத்தை விடாமல் வைத்திருக்கின்றீர்களா? வெளி மூச்சின் போது அதிக பலத்தைப் பயன்படுத்துகின்றீர்களா? இவை எவற்றையாவது நீங்கள் கவனித்தால் இளக்கிக்கொள்ளுங்கள். உள் மூச்சின் உணர்ச்சியின் போதும் வெளிமூச்சின் உணர்ச்சியின் போதும் அந்த இறுக்கம் கலைந்துவிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் மூச்சு சக்தி அந்தத் தொப்புள் பகுதியிலேயே உடலுக்குள் நுழைவதாக நினைத்து இறுக்கமும் விறைப்பும் இருந்தால் அவற்றைக் கலைப்பதாக நினைத்துக் கொள்ளலாம்...
அடுத்து உங்கள் கவனத்தை வயிற்றின் வலது பக்கமாக நகர்த்துங்கள், அதாவது அடிவயிற்றின் வலது பக்கம். பின் முன்கூறிய மூன்று படிகளைத் தொடருங்கள். 1) அந்த உடல் பகுதியை உணருங்கள். 2) அவ்விடத்தில் உள் மூச்சின் போதும் வெளி மூச்சின் போதும் எவ்வாறான உணர்ச்சிகள் தோன்றுகின்றன? (மூச்சின் போது அந்த இடத்தில் அசைவு இருக்கிறதா? அசைவு இல்லையென்றால் அசைவு இல்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். அசைவு இருந்தால் அசைவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.) 3) மூச்சில் இறுக்கமோ விறைப்போ இருந்தால் அதனை இளக்கிக் கொள்ளுங்கள்.... அடுத்து இடது பக்கம் கவனத்தைத் திருப்புங்கள், அடி வயிற்றின் இடது பக்கம். மேல் கூறிய மூன்று படிகளைத் தொடருங்கள்.
அடுத்து கவனத்தை தொப்புளின் மேல் பகுதிக்கு (விலா எலும்புக்குக் கீழ்) கொண்டு வாருங்கள்... பின் அதன் வலது பக்கம்... வலது பக்கத்தின் எல்லை.. இடது பக்கத்தின் எல்லை.. மார்பின் மத்தியில்.. சற்று நேரத்தின் பின் தொண்டையின் அடிப்பகுதி.. பின் தலையின் மையத்தில். தலைப்பகுதியில்... மூச்சின் சக்தியோடு கவனமாக இருக்க வேண்டும். மிக அமைதியாக மூச்சு உள் வருவதாக நினைத்துக் கொள்ளுங்கள். மூக்கு வழியாக மட்டுமில்லாமல், கண் வழியாகவும், காதின் வழியாகவும், உச்சந்தலை வழியாகவும், கழுத்தின் பின்பகுதியிலிருந்தும் வருவதாக நினைத்துக்கொள்ளுங்கள். எங்கு விறைப்போ இறுக்கமோ இருந்தாலும் -அது தாடைப் பகுதியில், கழுத்தின் பின்புறம், கண்களைச் சுற்றி அல்லது முகத்தைச் சுற்றி எங்கு இருந்தாலும் - அதை மெதுவாகக் கலைய விடுங்கள்....
அங்கிருந்து கவனத்தை மெதுவாக முதுகுப் பகுதியிலிருந்து கீழாக, கால்களுக்குச் சென்று, கால்விரல்களுக்குச் சென்று, கால் விரல் சந்துக்களிலும் செலுத்துங்கள். முன் செய்தது போலவே குறிப்பிட்ட உடல் பகுதியில் கவனம் செலுத்துங்கள். உள் மூச்சின் போதும் வெளி மூச்சின் போதும் அவ்விடத்தில் தோன்றும் உணர்ச்சிகளைக் கவனியுங்கள். எந்த வித இறுக்கமோ விறைப்போ அவ்விடத்தில் இருந்தால் அதனை இளக்கிக் கொள்ளுங்கள். மூச்சின் சக்தி சுலபமாக ஓடும் வகையில் இளக்கிக் கொள்ளுங்கள். பின் இதே படிகளை கழுத்தின் பின் பகுதியில் தொடங்கி தோள் பட்டை வழியாகக் கைகளுக்கும், மணிக்கட்டு, கைவிரல் வழியாக மூச்சுச் சக்தி வெளியேறும் வரை தொடருங்கள்.
இவ்வாறு எத்தனை முறையேனும் மனம் சற்று அமைதியாகும் வரை உடலைக் கண்ணோட்டம் விடலாம். (உங்களுக்கு உள்ள நேரத்தைப் பொறுத்து உடல் கண்ணோட்டப் பயிற்சியைச் சுருக்கியோ விரித்தோ கொள்ளலாம்.)
பின் கவனத்தை உடலின் இயற்கையாகப் படியும் இடம் ஒன்றில் செலுத்துங்கள். (ஏற்கனவே சொன்னது போல அது மூக்கின் நுனியிலோ, மார்பிலோ, அடி வயிற்றிலோ அல்லது வேறு எதாவது ஒரு பகுதியிலோ இருக்கலாம்.) உங்கள் கவனத்தை அந்த இடத்தில் மூச்சோடு ஒன்றாகப் படிய விடுங்கள். அதே சமயம் நீங்கள் தெரிந்திருக்கும் நிலையின் எல்லையை விரிவாக்கி உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள். உதாரணமாக, இது ஒரு அறையின் மத்தியில் உள்ள மெழுகுவத்தியின் ஒளியைப் போல. அந்த நெருப்பு ஓர் இடத்தில் தான் உள்ளது. ஆனால் ஒளியோ அறை முழுவதும் பரவியிருக்கிறது. மற்றொரு எடுத்துக்காட்டு சிலந்திக் கூட்டின் மத்தியில் உள்ள சிலந்தியைப் போல. சிலந்தி ஏதாவது ஓர் இடத்தில் தான் இருக்கும். ஆனால் கூட்டின் எல்லாப் பகுதிகளையும் அது உணர்ந்திருக்கிறது. கூட்டின் எந்த பகுதியை ஒரு பூச்சி தொட்டாலும் சிலந்திக்கு அது உடனே தெரியவரும். அதுபோல விரிவான உணரும் நிலையைப் பராமரிக்க முயல வேண்டும். இல்லையென்றால் அது சுருங்கிவிடக்கூடும் - காற்றுள்ள பலூனில் ஒரு சிறு துவாரம் செய்தால் அது எப்படிச் சுருங்கி விடுமோ - அது போல, பராமரிக்க வில்லையென்றால் உணரும் நிலை சுருங்கி விடும். இவ்வாறு நினைக்க வேண்டும்: "உடல் முழுதும் உணர், உடல் முழுதும் உணர், உச்சத்தலையிலிருந்து கால் விரல் வரை உடல் முழுதும் உள் மூச்செடு." மூச்சோடு வரும் சக்தி உடலின் ஒவ்வொரு மிக நுண்ணிய துவாரம் மூலமாகவும் வருவதாகவும் வெளிச் செல்வதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். இந்த ஓர் இடத்தில் உள்ள கவனத்தையும், உடல் முழுவதும் பரவியுள்ள உணர்ந்த நிலையிலும் முடிந்த அளவு இருக்கப் பாருங்கள். வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை. வேறு எங்கும் செல்வதற்கில்லை. வேறு ஏதும் செய்வதற்கில்லை. இந்த ஓர் இடத்தில் உள்ள கவனத்தையும் உடல் முழுவதும் பரவியுள்ள உணர்ந்த நிலையில் இருந்தால் போதும் ...
தியானத்தை விட்டுச் செல்லும் நேரம் வரும் போது அதையும் ஒரு சாமர்த்தியமான முறையில் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது அப்படியே வெளியே குதித்துவிடக் கூடாது. என்னுடைய ஆசிரியரான அஜான் ஃபுவாங் ஒருமுறை சொன்னார்: 'பெரும்பான்மையான மக்கள் தியானம் செய்யும் போது ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடிக்குப் படிக்கட்டில் ஏறுவது போலப் படிப்படியாக ஏறுகின்றனர். ஆனால் இரண்டாம் மாடி வந்தவுடன் ஜன்னல் வழியாகக் குதித்து விடுகின்றனர். நீங்களும் அப்படிச் செய்து விட வேண்டாம். எவ்வளவு முயற்சி செய்து மனதை ஒரு முகப்படுத்தியிருப்பதை நினைத்துப்பாருங்கள். அதனைத் தூக்கி எறிந்து விட வேண்டாம்.'
தியானத்தை விட்டுச் செல்ல, முதற்படியாக உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு நட்பான எண்ணங்களைப் பரப்புங்கள். அடுத்து கண்களைத் திறக்கும் முன் கண்களைத் திறக்கப் போகிறோம் என்றாலும் உங்கள் கவனம் எப்போதும் உடல் மற்றும் மூச்சில் மையமாக இருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள். முடிந்த அளவு - எழும் போதும், நடக்கும் போதும், பேசும் போதும், கேட்கும் போதும் எதைச் செய்தாலும் - அந்த மையத்தைப் பராமரிக்க முயலுங்கள். ஆக தியானத்தை விட்டுச் செல்ல வேண்டிய சாமர்த்தியம் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும், அதை எப்படி விட்டுச் செல்லக்கூடாது என்பதைக் கற்பதில் உள்ளது. மூச்சில் மையமாக உள்ள கவனத்தின் உறுதியோடு எதையும் செய்ய வேண்டும். இவ்வாறு உங்கள் மனத்தை மையப்படுத்திக் கொண்டால் அதன் இயக்கத்தை, நடமாட்டத்தை, அகத்திலும் புறத்திலும் நடக்கும் சம்பவங்களினால் மனதில் ஏற்படும் அசைவை அளவிட முடியும். இவ்வாறு ஒரு திடமான மையம் இருந்தால் தான் மனதின் நடமாட்டத்தை நாம் அறிந்துகொண்டு அதிலிருந்து மெய்யறிவு பெற முடியும்.
* * * * * *