நிற்க இடம் இல்லை
நிற்க இடம் இல்லை
அஜான் சா
No Abiding
A Dhamma Talk by Ajahn Chah
(வாட் பா நானாசாட் (Wat Pah Nanachat) விகாரையிலிருந்த துறவிகளும், இல்லற மக்களும் அஜான் சாவைப் பார்க்க வந்த போது, வாட் நோங் பா போங் (Wat Nong Pah Pong) விகாரையில் மழைக்காலத்தில், 1980ஆம் ஆண்டு தரப்பட்ட போதனை.)
நாம் அறத்தின் சில பகுதிகளைக் கேட்கும்போது அதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. நாம் அப்படி இருக்கக்கூடாது என்று நினைப்பதால், அவற்றைப் பின்பற்றுவதில்லை. ஆனால் இந்தப் போதனைகளுக்கெல்லாம் காரணம் இருக்கிறது. அப்படி இருக்ககூடாது என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் உட்கார்ந்து தியானம் செய்வதில் எனக்கும் நம்பிக்கை இல்லை. உட்கார்ந்தவாறு கண்களை மூடிக் கொள்வதால் என்ன பயன் கிடைக்கும் என்று நினைத்தேன். நடந்து தியானம் செய்வது ...இந்த மரத்திலிருந்து நடந்து சென்று, திரும்பி அதே மரத்திற்கு நடப்பது... "ஏன் இந்தத் தொல்லை? இப்படி நடப்பதால் என்ன பயன்?" என்று நான் நினைத்தேன். ஆனால் நடைத் தியானம் செய்வதிலும், உட்கார்ந்து தியானம் செய்வதிலும் பெரும் பயன் இருக்கிறது.
சிலர் இயல்பாக நடைத் தியானம் செய்வதையே விரும்புகின்றனர், வேறு சிலர் உட்கார்ந்து தியானம் செய்வதை விரும்புகின்றனர். ஆனால் இரண்டிலொன்றைப் பயன் படுத்தாமல் பயிற்சி செய்ய முடியாது. திரிபிடகத்தில் நான்கு உடல் நிலைகளைப் பற்றிக் கூறப்படுகிறது: நிற்பது, நடப்பது, உட்காருவது மற்றும் படுத்திருப்பது. இந்த நான்கு நிலைகளோடுதான் நாம் வாழ்கிறோம். அவற்றில் ஒன்றையோ மற்றதையோ நாம் விரும்பலாம். ஆனால் நான்கையும் பயன்படுத்தியாக வேண்டும்.
பயிற்சி இந்த நான்கு நிலைகளிலும் சமமாக இருக்க, இந்த நான்கு உடல் நிலைகளையும் சமமாகப் பயன்படுத்துமாறு கூறுகின்றனர். முதலில் இதை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. சமமாகப் பயன்படுத்துவது என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு, இரண்டு மணி நேரம் நின்றுகொண்டு, இரண்டு மணி நேரம் நடந்து கொண்டு... அப்படித்தானோ? அப்படிச் செய்ய முயன்றேன் - செய்ய முடிய வில்லை, செய்யச் சாத்தியமே இல்லை! இங்கு உடல் நிலைகளைச் சமமாக்குவது என்பது உடலைக் குறிப்பிட வில்லை. "உடல் நிலைகளைச் சமமாக்கவும்" என்பது மனத்தை, தெரிந்த நிலையைக் குறிக்கிறது. அதாவது மனத்தில் மெய்யறிவு தோன்ற வைப்பது, மனத்தை வெளிச்சமாக்குவது. இந்த மெய்யறிவு நான்கு உடல் நிலைகளிலும் இருக்க வேண்டும்என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும், அல்லது புரிந்து கொள்ள வேண்டும். நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் எல்லா மனநிலைகளும் நிலையற்றவை, திருப்தியற்றவை, நமதில்லை என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இது போல உடல் நிலைகளைச் சமமாக வைத்திருக்க முடியும். அது நடக்கக் கூடிய காரியம்தான். மனத்தில் பிடித்ததோ பிடிக்காததோ இருந்தாலும் நாம் நமது பயிற்சியை மறப்பதில்லை, தெரிந்த நிலையிலேயே இருக்கின்றோம்.
மனத்தை மையமாகக் கொண்டு தொடர்ந்து கவனத்தைச் செலுத்தினால் பயிற்சியின் சாராம்சத்தினை விளங்கிக் கொண்டிருக்கிறோம். உலகம் நல்லது கெட்டது என்று விவரிக்கும் மன நிலைமைகள் உண்டானால் நாம் நம்மையே மறந்து விடுவதில்லை. அந்த நல்லது கெட்டதில் மூழ்கித் தொலைந்துவிடுவதில்லை. நாம் நேராகச் செல்கிறோம். இது போல உடலின் நிலைகளை நிலையாக வைத்திருப்பது சாத்தியமானதே. இது போல நமது பயிற்சியில் நிலையாக இருந்தோமானால் அப்போது நம்மை யாராவது புகழ்ந்தால், அது வெறும் புகழ்ச்சி மட்டுமே; நம்மை யாராவது குறைகூறினாலும் அது வெறும் குறைகூறல் மட்டுமே. அவற்றின் காரணமாகப் பூரித்துப் போவதும் இல்லை, துயரம் கொள்வதும் இல்லை. உள்ள இடத்திலேயே இருக்கிறோம். ஏன்? ஏனென்றால் அவற்றில் உள்ளடங்கியுள்ள அபாயத்தை நாம் காண்கிறோம், அதனால் உண்டாகும் விளைவுகளை அறிந்திருக்கிறோம். நாம் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் உள்ள அபாயத்தை நன்கு தெரிந்திருக்கிறோம். பொதுவாக நாம் நல்ல மனோபாவத்துடன் இருக்கும் போது மனமும் நல்ல நிலையில் இருக்கிறது. அவை இரண்டையும் ஒன்றென நினைக்கிறோம். பிடிக்காத மனோ பாவம் இருக்கும் போது மனமும் கெட்டுவிடுகிறது, அது நமக்குப் பிடிப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை, இது சமமற்ற பயிற்சி.
நமது மனோபாவங்களைத் தெரிந்து, அவற்றோடு பற்றுக் கொண்டுள்ளதையும் தெரிந்த அளவிற்கு மட்டுமே நிலையாக இருந்தால் கூட, நாம் நல்ல நிலையில் இருப்போம். அதாவது நாம் தெரிந்த நிலையில் இருக்கிறோம், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துள்ளோம், ஆனால் இன்னமும் பற்றினை விட்டு விட முடியவில்லை. நாம் நல்லது கெட்டதோடு ஒட்டிக் கொண்டிருக்கிறோம். மேலும் இது (நாம் ஒட்டிகொண்டுள்ளோம் என்பது) நமக்குத் தெரிந்திருக்கிறது. நல்லதோடு பற்றுக் கொண்டாலும் அது சரியற்ற பயிற்சி என்பது தெரியும். ஆனாலும் நம்மால் விட முடியவில்லை. இது 50 அல்லது 70 சதவீதம் பயிற்சி செய்வது போல. விடுதலை கிடைக்கவில்லை என்றாலும் நாம் பற்றினை விட்டுவிடுவதுதான் அமைதிக்கான வழி என்பதை அறிந்திருக்கிறோம். இப்படியே பயிற்சியைத் தொடர்ந்து, நல்லது கெட்டது ஆகிய இரண்டிற்கும் சமமான தீய விளைவுகள் இருப்பதையும், புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சி ஆகிய இரண்டிற்கும் சமமான தீய விளைவுகள் இருப்பதையும், தொடர்ந்து அறிகிறோம். எது தோன்றினாலும் மனம் இவ்வாறு நிலையாக இருக்கிறது.
ஆனால் உலக நடைமுறையில் மக்கள், அவர்கள் குறை கூறப்பட்டால் மிகவும் நிலை குலைந்து விடுகின்றனர். அவர்களைப் புகழ்ந்தால் மிகவும் உற்சாகமடைகின்றனர், மிகவும் நல்லது என்று கூறி மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர். நமது பலதரப்பட்ட மனோபாவங்களின் உண்மையை அறிந்தால், புகழோடும் குறைபாட்டோடும் பற்றுக் கொள்வதினால் உண்டாகும் விளைவுகளைத் தெரிந்திருந்தால், எதனோடும் பற்றுகொள்வதில் உள்ள அபாயங்களைத் தெரிந்திருந்தால், நாம் நமது மனோபாவங்களை நுண்ணியமாகத் தெரிந்து கொள்வோம். அவற்றோடு பற்றுக் கொள்வது உண்மையிலேயே துக்கம் விளைவிக்கும் என்பதை அறிவோம். இந்தத் துக்கத்தைக் கவனிக்கும்போது, நமது பற்றுத்தான் அது தோன்றக் காரணம் என்பதையும் அறிவோம். நல்லதோடும் தீயதோடும் ஒட்டுதலும் பற்றும் ஏற்படுவதினால் உண்டாகும் விளைவுகளைக் காண்கிறோம், ஏனென்றால் நாம் முன்னரே இவ்வாறு பற்றுக் கொண்டு அதன் காரணமாக உண்டான விளைவுகளைப் பார்த்திருக்கிறோம் - அதில் உண்மையான மகிழ்ச்சி இல்லை. ஆகவே இப்போது நாம் விட்டு விடுவதற்கான வழியைத் தேடுகிறோம்.
எங்கு உள்ளது இந்த "விட்டு விடுவதற்கான வழி?” பௌத்தத்தில் நாம் "எதனோடும் பற்றுக் கொள்ள வேண்டாம்," என்கிறோம். இந்த "எதனோடும் பற்று கொள்ள வேண்டாம்," என்று நாம் கேட்பது நிற்பதே இல்லை. அப்படியென்றால் பிடிக்க வேண்டும், ஆனால் பற்றுகொள்ள வேண்டாம் என்று பொருள். இது இந்த மின்பந்தத்தைப் (டார்ச் லைட்) போல. நாம் நினைப்பது, "இது என்ன?" என்று. எனவே அதை எடுத்து, "ஓ, இது ஒரு மின்பந்தம்," என்பதை அறிந்து கீழே வைத்துவிடுகிறோம். இது போல சகஜமாக எடுக்கிறோம். எதையும் எடுக்க வில்லையென்றால், நாம் என்னதான் செய்ய முடியும்? நடை தியானமும் செய்ய முடியாது அல்லது எதையுமே செய்யமுடியாது. எனவே முதலில் ஒன்றைப் பிடிக்க வேண்டும். அதுவும் ஒரு வித ஆசை. உண்மை தான். ஆனால் அது பின்னால் பாரமீக்கு (நற்பண்பு அல்லது பிழையின்மை) இட்டுச் செல்லும். இங்கு வருவதற்கு ஆசைப் பட்டது போல. உதாரணமாக ... வணக்கத்துக்குரிய ஜகாரோ [22] வாட் பா போங் (விகாரையின் பெயர்) வந்தது போல. அவர் முதலில் வருவதற்கு ஆசைப் பட்டிருக்க வேண்டும். அந்த ஆசை இருந்திராவிட்டால் வந்திருக்க மாட்டார். எல்லோரும் இது போலத்தான். இங்கு வந்ததற்குக் காரணம், வருவதற்கு ஆசைப் பட்டது தான். ஆனால் ஆசை உண்டாகும்போது அதனோடு பற்றுக் கொள்ள வேண்டாம்! ஆகவே நீங்கள் வருகின்றீர்கள், பின் சென்று விடுகின்றீர்கள்... இது என்ன? அதை எடுக்கிறோம், பார்த்து, "ஓ, இது ஒரு மின்பந்தம்," என்று கூறிப் பின் அதை வைத்துவிடுகிறோம். இது தான் பிடித்தும், பற்றுகொள்ளாது விட்டு விடுவது என்பது. தெரிந்தபின் விட்டு விடுகிறோம். எளிமையாகச் சொல்லப் போனால், "தெரிந்து கொள்ளுங்கள், பின் விட்டு விடுங்கள்." பார்த்துக் கொண்டே இருங்கள், தெரிந்தபின் விட்டுவிடுங்கள். "இது, நல்லது என்கின்றார்கள்; இது, நல்லது இல்லை என்கின்றார்கள்" .... தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்த பின் விட்டு விடுங்கள். நல்லதோ, கெட்டதோ அவற்றை எல்லாம் தெரிந்திருக்கிறோம், ஆனால் விட்டு விடுகிறோம். நாம் முட்டாள்தனமான விஷயங்களோடு பற்றுக் கொள்வதில்லை, ஆனால் மெய்யறிவோடு "பிடிக்க" வேண்டும். இது போன்ற "நிலை"யோடு பயிற்சி செய்வதுதான் நிலையானதாக இருக்கமுடியும். இது போல நிலையாக இருக்கவேண்டும். மனத்தை இது போல இருக்கக் கற்பித்துக் கொள்ளுங்கள். மெய்யறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மனத்தில் மெய்யறிவு இருந்தால், வேறு எதைத் தேட வேண்டியிருக்கும்?
நாம் இங்கு என்ன செய்கிறோம் என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். எதற்காக வாழ்கிறோம், எந்த நோக்கத்தோடு வேலை செய்க்கிறோம்? உலகாயத வாழ்க்கையில் இந்த வெகுமதி அல்லது அந்த வெகுமதி கிடைக்கும் என்பதற்காக வேலை செய்கின்றனர். ஆனால் துறவிகள் அதைவிடச் சற்று ஆழமானதொன்றைக் கற்பிக்கின்றனர். நாம் எதைச் செய்தாலும், பலன் எதையும் கேட்பதில்லை. நாம் எந்தச் சன்மானத்துக்காகவும் வேலை செய்வதில்லை. உலக மக்கள் வேலைசெய்வது இது கிடைக்குமா அல்லது அது கிடைக்குமா என்பதற்காக. ஏனெறால் அவர்கள் ஏதாவது இலாபம் கிடைக்குமா என்று எதிர்பார்கின்றனர், ஆனால் புத்தர் வேலை செய்வதற்காக மட்டுமே வேலை செய்யச் சொன்னார், அதற்கு மேல் நாம் எதையும் கேட்பதில்லை.ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஒன்றைச் செய்தால் அது துக்கத்தை விளைவிக்கும். இதை நீங்களே பரிசோதித்துத் தெரிந்து கொள்ளலாம்! உங்கள் மனம் அமைதியடைய வேண்டுமென விரும்பித் தியானத்தில் உட்கார்ந்து, மனத்தை அமைதியாக்க முயற்சி செய்துபாருங்கள் - நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள்! செய்து பாருங்கள். நமது வழி மேலும் நுட்பமானது. நாம் செய்கிறோம், பின் விட்டு விடுகிறோம்; செய்கிறோம், பின் விட்டு விடுகிறோம்.
உயிர்ப் பலி செய்யும் பிராமணனைப் பாருங்கள்: அவன் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக உயிர்ப் பலி செய்கிறான். அந்தக் காரியங்களினால் துக்கத்தைக் கடந்து உன்னத நிலைக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் ஆசையின் காரணமாகச் செய்த காரியம் அது. நாம் முதலில் சற்று ஆசையின் காரணமாகப் பயிற்சியைத் தொடங்குகிறோம்; பயிற்சி செய்து கொண்டே இருக்கிறோம், ஆனால் நமது ஆசை நிறைவேறுவதில்லை. எனவே நாம் பயிற்சி ஒரு கட்டத்தை அடையும் வரை தொடர்கிறோம், அதன் பின் எந்த விளைவையும் எதிர்பார்க்காமல், விட்டு விடுவதற்காகப் பயிற்சி செய்கிறோம். இதை நாமாகவே தெரிந்து கொள்ளவேண்டும். இது மிகவும் ஆழமான கருத்து. நாம் நிர்வான நிலையை அடைவதற்காகப் பயிற்சி செய்தால் - அதோ அங்கேயே, நிர்வான நிலையை அடைய மாட்டீர்கள்! அமைதியை விரும்புவது இயற்கை தான், ஆனால் உண்மையில் சரியில்லா விருப்பம். நாம் எதையும் எதிர்பார்க்காமல் பயிற்சி செய்ய வேண்டும். நாம் எதையும் எதிர்பார்க்காவிட்டால், நமக்கு என்ன கிடைக்கும்? நமக்கு எதுவும் கிடைக்காது! எது கிடைத்தாலும் அது துக்கத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமாகிவிடும். எனவே எதுவும் கிடைக்கக் கூடாது என்று பயிற்சி செய்கிறோம்.
இது தான் "மனத்தை வெறுமையாக்குவது" என்பது. அது வெறுமையாக இருந்தாலும் அங்கு செயற்பாடுகள் உள்ளன. இந்த வெறுமையை மக்கள் பொதுவாகப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதை அடைந்தவர் அதன் மதிப்பை உணர்கின்றனர். எதுவும் இல்லாததால் உள்ள வெறுமை இல்லை, இருப்பதின் உள்ளே இருக்கும் வெறுமையைக் குறிக்கிறது. இந்த மின்பந்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: இதை வெறுமையென எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மின்பந்தத்தின் காரணமாக அங்கு வெறுமை இருக்கிறது. எதையும் பார்க்க முடியாததனால் உள்ள வெறுமையை இல்லை, அப்படிப் பட்டதே இல்லை. அவ்வாறு என்ணுபவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இருக்கும் பொருட்களுள் உள்ள வெறுமையை அறிய வேண்டும்.
யாரெல்லாம் விளைவு கிடைக்கும் என்ற நோக்கத்தோடு பயிற்சி செய்கின்றனரோ அவர்கள் உயிர்ப் பலி செய்தால் பலன் கிடைக்கும் என்றெண்ணிய பிராமணனைப் போல. என்னைப் பார்க்க வருபவர்கள் தங்கள் தலைமீது "புனித நீரைத்" தெளிக்குமாறு கூறுபவர்களைப் போல. அவர்களை நான், "இந்தப் 'புனித நீரை' எதற்காகத் தெளிக்க வேண்டும்?" என்று கேட்டால், அவர்கள், "நாங்கள் மகிழ்ச்சியாக வசதியாக வாழ, நோயில்லாமல் இருப்பதற்காக" என்பார்கள். அதோ! அவர்கள் என்றைக்கும் துக்கத்தைக் கடந்து உன்னத நிலைக்குச் செல்லப் போவதில்லை. உலகாதயம் என்பது சன்மானதுக்காக ஒன்றைச் செய்வது. ஏதாவது கிடைக்கும் என்பதற்காகச் செய்வது, ஆனால் பௌத்தத்தில் என்ன கிடைக்கும் என்ற எண்ணத்தோடு எந்தச் செயல்களையும் செய்வதில்லை. காரணமும் காரணத்தினால் உண்டாகும் விளைவின் மூலமாக நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்வது உலக வழக்கம், ஆனால் புத்தர் காரணத்துக்கு அப்பால், விளைவிற்கு அப்பால், பிறப்பிற்கு அப்பால், இறப்பிற்கு அப்பால், மகிழ்ச்சிக்கு அப்பால், துக்கத்திற்கு அப்பால் செல்லக் கற்பிக்கிறார். நினைத்துப் பாருங்கள்... எங்கும் இருப்பதற்கு இடமில்லை. நாம் ஒரு "வீட்டில்" வாழ்கிறோம். வீட்டைவிட்டு வீடு இல்லாத இடத்திற்குச் செல்வது.. அதை எப்படிச் செய்வது என்பது நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நாம் எப்போதும் பவத்தோடும், பற்றோடும் வாழ்கிறோம். பற்றில்லாவிட்டால் என்ன செய்வதென்று தெரிவதில்லை.
எனவே பெரும்பான்மையான மக்கள் நிப்பாணம் அடைய விரும்புவதில்லை. அங்கு ஏதும் இல்லை; ஒன்றுமே இல்லை. இங்குள்ள தரையையும், கூரையையும் பாருங்கள். மேல் எல்லையில் இருப்பது கூரை. அது ஒரு "நிற்க இடம்". கீழ் எல்லை தரை. அதுவும் ஒரு "நிற்க இடம்". ஆனால் இரண்டுக்கும் நடுவில் உள்ள வெறுமையான இடத்தில் நிற்க இடமேதும் இல்லை. கூரையின் மீது நிற்கலாம், தரையின் மீது நிற்கலாம் ஆனால் வெறுமையான இடத்தில் நிற்க முடியாது. எங்கு நிற்க இடமில்லையோ அங்குதான் வெறுமை உள்ளது, நேரடியாகச் சொல்வதென்றால், நிப்பாணம் தான் இந்த வெறுமை. மக்கள் இதைக் கேட்ட பிறகு பின்வாங்குகின்றனர், அங்கு செல்ல யாரும் விரும்புவதில்லை. தங்கள் மக்களையும் உறவினர்களையும் பார்க்க முடியாது என்று அஞ்சுகின்றனர்.
இதனால் தான் நாங்கள் இல்லறத்தாருக்கு ஆசி கூறும் போது, "நீண்ட நாள் வாழ்க! அழகும், மகிழ்ச்சியோடும், வலிமையோடும் வாழ்க!" என்கிறோம். இவ்வாறு சொன்னால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். "சாது!" [23] என்பார்கள். இது போன்றவை அவர்களுக்குப் பிடிக்கும். அவர்களிடம் வெறுமையைப் பற்றிச் சொன்னால் அவர்கள் விரும்புவதில்லை, அவர்கள் நிற்கும் இடத்தோடு பற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் வயதான ஒருவரிடம் அழகான பொலிவைக் கண்டிருக்கின்றீர்களா? வயதான ஒருவரிடம் பெரும் வலிமையையோ, பெரும் மகிழ்ச்சியையோ கண்டிருக்கின்றீர்களா? .. இல்லை.. ஆனால் நாங்கள் சொல்வது, "நீண்ட வாழ்வு, அழகு, மகிழ்ச்சி மற்றும் வலிமை". இதைக் கேட்ட பின் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள், ஒவ்வொருவரும் "சாது!" என்பார்கள். இது ஏதாவது விரும்பியது கிடைக்கும் என்பதற்காகப் பூசை செய்யும் பிராமணனைப் போல. நமது பயிற்சியில் நாம் "ஹோமங்கள் செய்வதில்லை," ஏதாவது கிடைக்கும் என்பதற்காக நாம் பயிற்சி செய்வதில்லை. நாம் எதையும் விரும்புவது இல்லை. நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அங்கு ஏதோ இன்னமும் இருக்கிறது என்று பொருள். மனத்தை அமைதியாக்கிவிட்டு முடித்து விடுங்கள்! ஆனால் நான் இப்படிப் பேசினால் உங்களுக்குக்கூட அது ஆறுதலாக இருக்காது. ஏனென்றால் நீங்கள் மறுபடியும் "பிறக்கவே" விரும்புகின்றீர்கள்.
ஆகவே இல்லற மக்களாகிய நீங்கள் துறவிகளுக்கு அருகில் வந்து அவர்களின் பயிற்சியைக் கவனிக்க வேண்டும். துறவிகளுக்கு அருகில் இருப்பதென்றால் புத்தருக்கு அருகில் இருப்பது போல, அறத்தின் அருகில் இருப்பது போல. புத்தர் கூறினார், "ஆனந்தா, பயிற்சி செய், பயிற்சியை வளர்த்துக் கொள்! அறத்தைக் காண்போர் என்னையும் காண்பது போல. என்னைக் காண்போர் அறத்தையும் காண்பது போல." புத்தர் எங்கு இருக்கிறார்? நாம் புத்தர் தோன்றி மறைந்து விட்டதாக நினைக்கிறோம். ஆனால் புத்தர் தான் அறம், வாய்மை. சிலர் இவ்வாறு கூற விரும்புவார்கள், "ஓ, புத்தரின் காலத்தில் நான் பிறந்திருந்தால் நிப்பாணம் அடைந்திருப்பேன்." முட்டாள் மனிதர்கள் தான் இப்படிப் பேசுவார்கள். புத்தர் இன்னமும் இங்கு தான் வாழ்கிறார். புத்தர் தான் வாய்மை. யார் பிறந்து இறந்தாலும் அறம் இங்கேயே தான் இருக்கிறது. வாய்மை உலகை விட்டுப் பிரிவதே இல்லை, எந்நேரமும் இருக்கிறது. ஒரு புத்தர் பிறந்தாலும் இல்லாவிட்டாலும், யாருக்காவது அது தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், வாய்மை இருந்து கொண்டே இருக்கிறது. எனவே புத்தருக்கு அருகில் இருக்க வேண்டும். அகத்தில் தேடி அறத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அறத்தை அடைந்தால் புத்தரை அடைவோம்; அறத்தைக் கண்டால் புத்தரைக் காண்பது போல. பின் சந்தேகங்களெல்லாம் கரைந்து விடும்.
எளிமையாகச் சொல்லப்போனால், அது ஆசிரியர் சூவைப் போல. [24] முதலில் அவர் ஆசிரியராகவில்லை, அவர் வெறும் திருவாளர் சூ வாக மட்டுமே இருந்தார். அவர் படித்து, வேண்டிய தேர்வுகளில் வெற்றி பெற்றபின் அவர் ஆசிரியர் ஆனார். பிறகு அவர் ஆசிரியர் சூ என்று அழைக்கப்பட்டார். அவர் எப்படி ஆசிரியர் ஆனார்? வேண்டிய படிப்புகளைப் படித்த பின் திருவாளர் சூ, ஆசிரியர் சூ வாக மாறினார். ஆசிரியர் சூ மறைந்த பின், ஆசிரியராகப் படிக்க வேண்டிய படிப்பு தொடர்ந்து இருக்கும். யாரெல்லாம் அதனைப் படிக்கின்றனரோ, அவரெல்லாம் ஆசிரியர் ஆவார்கள். அந்தப் படிப்பு எங்கும் மறைவதில்லை, வாய்மையைப் போல. வாய்மையைத் தெரிந்ததால் தான் புத்தர் புத்தரானார். எனவே புத்தர் இன்னமும் இருக்கிறார். யாரெல்லாம் பயிற்சிசெய்து அறத்தைக் காண்கின்றனரோ அவரெல்லாம் புத்தரைக் காண்கிறார்கள். இக்காலத்தில் மக்கள் எல்லோரும் தவறாகப் புரிந்து கொன்டுள்ளனர். அவர்களுக்குப் புத்தர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அவர்கள், "புத்தரின் காலத்தில் நான் பிறந்திருந்தால் நான் அவரது சீடனாகி ஞானம் பெற்றிருப்பேன்." என்பார்கள். இது போன்ற பேச்செல்லாம் மடத்தனமான பேச்சு. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மழைக்காலத்தின் பின் துறவறத்தை விட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். அப்படி நினைக்க வேண்டாம்! ஒரு கணத்தில் தீய எண்ணம் மனத்தில் எழுந்து, நீங்கள் யாரையாவது கொலை செய்து விடலாம். அதே போல ஒரு கணத்தில் ஒரு நல்ல எண்ணம் மனத்தில் தோன்றி, விடுதலையைக் கண்டு விடலாம். நீண்ட காலம் துறவறத்திற்குப் பின்பு தான் தியானம் செய்ய முடியும் என்று நினைக்க வேண்டாம். நல்ல பயிற்சி இருப்பது நாம் வினைகொண்ட செய்கையைச் செய்யும் ஒரு கணத்தில் தான். ஒரு கணத்தில் தீய எண்ணம் தோன்றி....உங்களுக்குத் தெரிவதற்கு முன்னே பெரும் கேடுள்ள செயலைச் செய்து விடுவீர்கள். அதே போலப் புத்தரின் பல சீடர்களும் நெடுங்காலம் பயிற்சி செய்தனர் ஆனால் ஞானம் பெறுவதற்குத் தேவைப்பட்ட நேரமோ ஒரு எண்ணம் தோன்றும் கண நேரத்தில் தான். எனவே சாதாரண விஷயங்களிலும் பொறுப்பற்று இருக்க வேண்டாம். கடுமையாக முயற்சித்துத் துறவிகள் அருகே சென்று, பிரதிபலித்தால் துறவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
சரி, நான் பேசியது போதுமா? நேரமாகிவிட்டது. சிலருக்குத் தூக்கம் வந்துவிட்டது போலத் தோன்றுகிறது. புத்தர் அறத்தைத் தூக்கக் கலக்கமுள்ளவருக்குப் போதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
* * * * * *
22. ஆஸ்திரேலியா நாட்டவரான போற்றுதற்குரிய ஜகாரோ, 'வாட் பா நானாசாட்'டின் (ஒரு விகாரையின் பெயர்) தலைமைத் துறவியாக அச்சமயத்தில் இருந்தார். அவரும் அவரோடு சேர்ந்தவர்களும் அஜான் சாவைப் பார்க்க வந்திருந்தனர்.
23. பாலி மரபில் "சாது" என்று சொல் துறவி யாராவது ஆசிர்வதித்த பின்னர் அல்லது ஒரு அற போதனை முடிந்த பின்னர் சொல்வது. அதன் பொருள் "நல்லது" அல்லது "அருமை"என்பதாகும்.
24. தாய்லாந்தில் "ஆசிரியர்" என்பது ஒருவரை அழைக்கும் பட்டப் பெயராகப் பயன்படுத்தப் படுகிறது. ஆங்கிலத்தில் "டாக்டர்" என்று சொல்வது போல. "ஆசிரியர் சூ" என்பவர் அச்சமயத்தில் மழைக்காலத்தின் போது விகாரையில் தங்கியிருந்த நான்கு பெரியவர்களில் ஒருவர். இந்தப் போதனையின் இறுதிப் பகுதி அவருக்காக வழங்கப்பட்டது.
* * * * * *
© Copyright
Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/