உள்ளத்தின் மத்திய வழி - அஜான் சா

உள்ளத்தின் மத்திய வழி

அஜான் சா

The Middle Way Within

A Dhamma talk by Ajahn Chah

English

(தாய்லாந்தின் வட கிழக்குப் பகுதியில் வழக்கில் உள்ள மொழியில் 1970 ஆம் ஆண்டு துறவிகளும், இல்லற மக்களும் அடங்கிய கூட்டத்திற்கு வழங்கப்பட்ட போதனை.)

பௌத்தம் கற்பிப்பது தீயதை விட்டு விடுவதையும், நல்லதைப் பயில்வதையும் தான். தீயதைக் களைந்து விட்டு நல்லதை நிலை நாட்டிய பின்னர், நாம் அவ்விரண்டையும் விட்டு விட வேண்டும். நாம் நல்ல வழிக்கு இட்டுச் செல்லும் நிலைமைகள் பற்றியும், தீய வழிக்குக் கொண்டு செல்லும் நிலைமைகள் பற்றியும் ஏற்கனவே நிறையக் கேள்விப் பட்டு ஓர் அளவுக்குப் புரிந்து கொண்டுமுள்ளதால் நான் மத்திய வழியைப் பற்றிப் பேச விரும்புகின்றேன். அதாவது இவ்விரண்டிடமிருந்தும் தப்பிச் செல்லும் பாதை இது.

புத்தர் கற்பித்த எல்லாவற்றுக்கும், அவர் போதனைகள் அனைத்துக்கும் ஒரே குறிக்கோள் தான் - இதுவரை தப்பிச் செல்லாதோர்க்குத் துக்கத்திலிருந்து தப்பிக்கும் வழியைக் காட்டுவதே. சரியாகப் புரிந்துகொள்வதற்கு உதவத்தான் போதனைகள் தரப்பட்டன. சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றால் நாம் அமைதி அடைய ­முடியாது.

பல புத்தர்களும் ஞானம் பெற்ற பின் தந்த முதல் போதனைகளில், மையத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள இவ்விரண்டு எல்லைகளைப் பற்றி எச்சரித்துப் பேசினார்கள், அவை - இன்பத்துக்கு விருப்பம் போல இடம் கொடுத்தல் மற்றும் துன்பத்தில் மூழ்கியிருப்பது. இவை இரண்டும் மோகங் கொள்ளும் வழிகள். புலன் ஆசைகளில் மூழ்கியிருப்போர் இந்த இரண்டு நிலைகளுக்கிடையே மாறிமாறிச் சென்று கொண்டிருக்க வேண்டும். அமைதி நிலைக்கே வருவதில்லை. இந்த வழிகள் சம்சாரச் சக்கரத்தில் சுற்றிச் சுழல வைக்கிறது.

அந்த ஞானம் பெற்றவர் (புத்தர்) எல்லா உயிரினங்களும், இந்த இரண்டு எதிரெதிர் எல்லைகளில் சிக்கியிருப்பதைக் கவனித்தார். மத்திய வழியான அறத்தை அவர்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. எனவே இவற்றில் உள்ள ஆபத்தைச் சுட்டிக் காட்டினார். ஆனால் நாம் இன்னும் இவற்றில் சிக்கிச் சுழல்வதால், நாம் குறைபாடோடிருப்பதால் மீண்டும் மீண்டும் இவற்றின் வழியிலேயே வாழ்கிறோம். புத்தர் இவை இரண்டும் போதை தரும் வழிகள், தியானிப்பவர் வழி இல்லை, அமைதிக்கான வழியும் இல்லை என்றார். இந்த வழிகள் இன்பத்தில் முழ்கியிருப்பது மற்றும் துன்பத்தில் ஆழ்ந்திருப்பது. எளிமையாகச் சொல்லப்போனால் மகிழ்ச்சிக்கு விருப்பம் போல இடம் கொடுப்பது தளர்வான வழி, துன்பத்துக்கு விருப்பம் போல இடம் கொடுப்பது இறுக்கமான வழி. உள்ளத்தைக் கவனித்தீர்களென்றால், கணத்துக்குக் கணம் கவனித்தீர்களென்றால் இறுக்கமான வழி கோபம் என்பதையும், சோகத்தின் வழி என்பதையும் அறிவீர்கள். இவ்வழியில் சென்றால் மிஞ்சுவது துன்பமும், துயரமும் தான். இன்பத்தில் மூழ்கியிருப்பதிலிருந்து தப்பித்து விட்டால் நீங்கள் மகிழ்ச்சியிடமிருந்து தப்பித்துவிட்டீர்கள். இந்த இரு வழிகள், இன்பமும், துன்பமும் இரண்டுமே அமைதியான நிலைகள் இல்லை. புத்தர் இரண்டையும் விட்டு விடச் சொன்னார். இது தான் சரியான பயிற்சி. இதுவே மத்திய வழி.

"மத்திய வழி" என்பது உடலையும், பேச்சையும் குறிப்பதில்லை. மனத்தைக் குறிக்கிறது. நமக்குப் பிடிக்காத மன உணர்ச்சி உருவானால் அது மனத்தைப் பாதித்துக் குழப்பம் உண்டாக்குகிறது. மனம் குழும்பிய நிலையில், அது "பலவீனப்படுத்தப்பட்ட" நிலையில் இருந்தால் அது சரியான வழியில்லை. நமக்குப் பிடித்த மன உணர்ச்சி உருவானால் மனம் இன்பத்தில் மூழ்கிவிடுகிறது - அதுவும் சரியான வழியில்லை.

மனிதர்களாகிய நாம் துக்கத்தைத் தவிர்க்கப் பார்க்கிறோம். மகிழ்ச்சியையே விரும்புகிறோம். ஆனால் மகிழ்ச்சி, துக்கத்தின் சுத்திகரிக்கப்பட்ட ஒரு வடிவம் தான். துக்கம் கரடுமுரடான வடிவத்தில் உள்ளது. இதனை ஒரு பாம்போடு ஒப்பிடலாம். பாம்பின் தலைதான் மகிழ்ச்சியற்ற நிலை. பாம்பின் வால் மகிழ்ச்சியான நிலை. பாம்பின் தலை ஆபத்தானது, ஏனென்றால் பாம்பின் விஷப்பல் தலையில் உள்ளது. அதைத் தொட்டால் பாம்பு உடனே கடித்துவிடக் கூடும். சரி, தலையை விடுங்கள். பாம்பின் வாலைத் தொட்டாலும் அது தன் உடலைத் திருப்பிக் கொண்டு எப்படியும் உங்களைக் கடிக்கத்தான் போகிறது. ஏனென்றால் தலையும் வாலும் ஒரே பாம்பிற்குச் சொந்தமானவை தான்.

அது போலவே, மகிழ்ச்சியும், மகிழ்வற்ற நிலையும் அல்லது இன்பமும், துன்பமும் ஒரே இடத்திலிருந்து பிறந்தவை - அது தான் அவா. ஆக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் மனம் அமைதியாக இருப்பதில்லை. ஆம். இது உண்மையல்லவா? உதாரணமாக நாம் விருப்பப் படுவது நமக்குக் கிடைத்தால், அது செல்வமாக இருக்கலாம், கௌரவம், புகழ், பாராட்டு அல்லது மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் அது கிடைத்தவுடன் அதன் காரணமாக நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனாலும் மனத்தில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் கிடைத்ததை இழந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக. பின் அதை இழக்கவும் நேரிட்டால் நாம் உண்மையிலேயே துக்கத்தை அனுபவிக்கிறோம். ஆக நீங்கள் உணர்ந்த, தெரிந்த நிலையில் இல்லாவிட்டால், மகிழ்ச்சியான நேரத்திலும், துக்கம் அருகிலேயே இருக்கிறது. இது பாம்பின் வாலைப் பிடிப்பதைப்போலத்தான். அதை விட வில்லையென்றால் அது கடித்துவிடும். எனவே பாம்பின் தலையானலும் சரி வாலானாலும் சரி, அதாவது நல்லதுக்கு ஏதுவான நிலைமைகளானாலும் சரி அல்லது தீயதுக்கு ஏதுவான நிலைமைகளானாலும் சரி இவை எல்லாம் சம்சார சக்கரத்தின் இயல்புகளே. எல்லையில்லா மாற்றங்கள் கொண்டவை.

புத்தர் ஒழுக்கம் (சீலம்), சமாதி (தியானம்) மற்றும் மெய்யறிவு ஆகியவற்றை அமைதிக்குக் கொண்டு செல்லும் மார்க்கம், ஞானத்திற்குக் கொண்டு செல்லும் வழி என்று நிர்ணயித்தார். ஆனால் உண்மையில் இவை எல்லாம் பௌத்தத்தின் சாரம் இல்லை. இவை வெறும் வழிகள் தான். புத்தர் இவற்றை "மக்கா" என்றார், அப்படியென்றால் "மார்க்கம்." பௌத்தத்தின் சாரம் அமைதி. அந்த அமைதி பொருட்களின் இயற்கை இயல்பை உண்மையிலேயே தெரிந்து கொள்வதே. கவனமாக ஆராய்ந்தால், அமைதி என்பது மகிழ்ச்சியும் இல்லை துன்பமும் இல்லை என்பதை அறிவோம். இவை இரண்டுமே வாய்மை இல்லை.

மனிதனின் மனம், புத்தர் நாம் தெரிந்து கொள்ள விசாரணை செய்ய நம்மை ஊக்குவித்த மனம், அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் நடவடிக்கையிலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான "புராதனமான மனம்" என்பதை அளவிட அளவுகோல் ஏதும் இல்லை, அதை எதை வைத்தும் தெரிந்து கொள்ள முடியாது. அதன் இயற்கை நிலையில் அது குலுக்கலற்றது, அசைவற்றது. மகிழ்ச்சி நிலை உண்டாகும் போது மனம் அந்த உணர்ச்சியில் தொலைந்து விடுகிறது. அங்கு அசைவு ஏற்படுகிறது. அவ்வளவுதான். இப்படி மனம் அசையும் போது, அவற்றோடு (மகிழ்ச்சி நிலையோடு) ஒட்டுதலும் பற்றும் பிறக்கிறது.

புத்தர் பயிற்சி வழியைத் தெளிவாகவும் முழுமையாகவும் தீர்மானித்திருக்கிறார், ஆனால் நாம் இன்னும் பயிற்சி செய்யவில்லை. அல்லது பயிற்சி செய்திருந்தாலும் அது சொல்லளவில் தான் செய்திருக்கிறோம். மனமும் சொல்லும் ஐக்கியமாகவில்லை. நாம் வெட்டிப் பேச்சில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். ஆனால் பௌத்தத்தின் அடிப்படையைப் பற்றிப் பேசினால் மட்டும், யூகித்தால் மட்டும் போதாது. பௌத்தத்தின் உண்மையான அடிப்படை, ஒன்றின் உண்மையான நிலையை முழுமையாக அறிவது தான். இந்த உண்மை தெரிந்து விட்டால் போதனைகளே தேவையில்லை. இந்த உண்மையை ஒருவர் தெரிந்துகொள்ளாவிட்டால், அவர் போதனைகளுக்குச் செவி சாய்த்தாலும் அவருக்குக் கேட்பதில்லை. அதனால் தான் புத்தர் சொன்னார், "ஞானம் பெற்றவர் வழியை மட்டுமே காண்பிக்கிறார்." அவர் உங்களுக்காக பயிற்சியைச் செய்ய முடியாது. ஏனென்றால் வாய்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதைப் பிறருக்கு வழங்கவும் முடியாது.

போதனைகள் எல்லாம் வெறும் உவமைகளும் ஒப்பீடுகளும் மட்டுமே. அவை மனத்தை வாய்மையைக் காண்பதற்கு உதவுகின்றன. வாய்மையைக் காணாவிட்டால் நாம் துக்கம் அனுபவிப்போம். உதாரணமாக நாம் உடலைக் குறிப்பிடும் போது "சங்கற்பங்கள்" [8] என்கிறோம். யார் வேண்டுமானாலும் இதைச் சொல்லலாம். உண்மையில் நமக்குப் பிரச்சினைகள் இருப்பதற்குக் காரணம் இந்தச் சங்கற்பங்களின் வாய்மையை நாம் தெரிந்து கொள்ளாததால் அவற்றோடு பற்றுக் கொள்வதுதான். உடலைப் பற்றிய உண்மை தெரியாததால் நாம் துக்கம் அனுபவிக்கிறோம்.

ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு காலைப் பொழுதில் நீங்கள் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றீர்கள். அப்போது தெருவின் மறுபுறத்திலிருந்து உங்களை ஒருவன் வசைபாடுகிறான், ஏசுகிறான். அவன் ஏசுவதைக் கேட்டவுடன் சாதாரணமாக இருந்த உங்கள் மனத்தின் நிலை மாறுகிறது. உங்களுக்கு வருத்தம் உண்டாகிறது. கோபம் எழுகிறது. மனம் புண்படுகிறது. அந்த மனிதனோ அல்லும் பகலுமாக உங்களை ஏசிக் கொண்டே இருக்கிறான். அதைக் கேட்கும் போது உங்களுக்குக் கோபம் கொப்புளித்துக் கொண்டு வருகிறது. வீடு திரும்பிய பின்னும் உங்களின் கோபம் தணியவில்லை. ஏனென்றால் பழிவாங்கும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.

சில நாட்கள் கழித்து இன்னொருவன் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களிடம் சொல்கிறான், "ஐயா! உங்களை அன்று நிந்தித்தானே, அவன் ஒரு பைத்தியக்காரன், பித்துப் பிடித்தவன். வருடக் கணக்காக அவன் அப்படித்தான் இருந்திருக்கிறான். எல்லோரையும் அவன் அப்படித்தான் நிந்தித்திருக்கிறான். அவன் சொல்வதை எவரும் மனதில் கொள்வதில்லை." இதைக் கேட்டவுடன் திடீரென்று நீங்கள் நிவாரணம் பெறுகின்றீர்கள். பல நாட்களாக அடக்கி வைந்திருந்த கோபமும் புண்பட்ட நிலையும் முழுமையாகக் கரைந்து விடுகிறது. ஏன்? ஏனென்றால் நிலைமையின் உண்மை உங்களுக்குத் தெரிந்து விட்டது. முன்பு உங்களுக்கு இந்த உண்மை தெரியாது. அந்த மனிதன் சாதாரணமானவன் என்று எண்ணியதால் அவன் மீது உங்களுக்குக் கோபம் இருந்தது. அப்படிப் புரிந்து கொண்டதால் நீங்கள் துக்கம் அனுபவித்தீர்கள். உண்மை தெரிந்த பின் எல்லாம் மாறிவிட்டது: "ஓ, அவன் பித்துப் பிடித்தவன்! எல்லாம் விளங்கிவிட்டது!" இதைப் புரிந்த பின் மனக்குழப்பம் நீங்கியது. ஏனென்றால் நீங்களே உண்மையைத் தெரிந்து கொண்டீர்கள். தெரிந்த பின் விட்டு விடலாம். உண்மை தெரியாதவரை அங்கு பற்று இருந்தது. அந்த மனிதன் சாதாரணமானவன் என்றெண்ணியபோது அவனைக் கொலை செய்யக் கூடத் தோன்றியது. ஆனால் உண்மை தெரிந்த பின், அவன் பைத்தியம் என்று தெரிந்த பின் உங்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படுகிறது. இது தான் வாய்மையை அறிவதென்பது.

அறத்தை அறியும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அனுபவம் உண்டாகிறது. பற்றும், வெறுப்பும், மாயமும் மறையும் போது அவை ஒரே வழியில் தான் மறைகின்றன. இவற்றை அறியாத வரை நாம் நினைப்பது, "நான் என்ன செய்ய? எனக்கு அளவுக்கதிகமாக ஆசையும் வெறுப்பும் உள்ளதே." இது தெளிவான அறிவு இல்லை. இது அந்தப் பித்துப் பிடித்தவன் விவேகமானவன் என்று நினைத்தைப் போல. அவன் ஒரு நீண்ட நாள் பைத்தியக்காரன் என்பது தெரிந்த பின் நமக்குக் கவலையிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. இதை யாரும் காட்ட முடியாது. மனம் தானாகத் தெரிந்து கொண்டபின் தான் இந்தப் பற்றை விட முடியும்.

அதே போலத்தான் சங்கற்பங்கள் என்று நாம் அழைக்கும் இந்த உடலும். புத்தர் ஏற்கனவே இந்த உடலுக்குச் சாரம்சம் ஏதும் இல்லை, அது ஒரு நிலையான ஆன்மா என்று கொண்டது இல்லை என்பதை விளக்கியும் நாம் அதை ஏற்றுகொள்ளத் தயாராக இல்லை. உடலோடு பற்றுக்கொண்டு இருக்கிறோம். பேச முடிந்தால் உடல் நம்மிடம் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும், "நீ என் சொந்தக்காரன் இல்லை, தெரியுமா?" என்று. உண்மையில் அது என்னேரமும் நமக்கு இதைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. ‘தரும' மொழியில் சொல்வதால் நமக்குத்தான் அது விளங்குவதில்லை. எடுத்துக்காட்டாகப் புலன் உறுப்புகளான கண்ணும், காதும், மூக்கும், நாக்கும், உடலும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் அவை நம்மிடம் அனுமதி கேட்டதை ஒருமுறையும் பார்த்ததில்லை! நமக்குத் தலைவலியோ, வயிற்றுவலியோ இருக்கும் போது - உடல் நம்மைக் கேட்டதா என்ன? இல்லையே. அதன் இயற்கைக் குணத்துக்கு ஏற்றார்ப்போல வலியை ஏற்படுத்தி விடுகிறது. இதிலிருந்து உடல் யாரையும் தன் சொந்தக்காரனாக இருப்பதற்கு அனுமதிப்பதில்லை என்பது தெரிகிறது. அதற்குச் சொந்தக்காரன் இல்லை. புத்தர் அதைச் சாரம்சம் இல்லாக் காலியான பொருள் என்று வர்ணித்தார்.

நாம் அறத்தைப் புரிந்துகொள்ளாததால் இந்தச் சங்கற்பங்களையும் புரிந்துகொள்வதில்லை; அவற்றை ‘நாம்’ என்று நினைக்கிறோம். நமது என்றோ மற்றவரது என்றோ நினைக்கிறோம். இதனால் பற்று உண்டாகிறது. பற்று உண்டாகும் போது, "பவம்" தொடர்கிறது. பவத்தினால் பிறப்பு உண்டாகிறது. பிறப்பதனால் மூப்பு, பிணி, சாக்காடு .. துக்கம் உண்டாகிறது. இது தான் 'படிச்ச-சமுபாதா' [9]. பேதமையின் காரணமாகச் செய்கை உண்டாகிறது, அதனால் உணர்ச்சி உண்டாகிறது மற்றும் மற்ற சார்புகள் உண்டாகின்றன என்று சொல்கிறோம். இவை எல்லாம் மனதில் நடைபெறும் சம்பவங்கள் தான். நமக்குப் பிடிக்காத ஒன்றுடன் தொடர்பு கொள்ளும் போது, நமக்கு அச்சமயத்தில் கவனம் இல்லாவிட்டால், தெரிந்த நிலையில் இல்லாவிட்டால், அறியாமை இருக்கிறது. உடனே துக்கம் எழுகிறது. மனம் இந்தப் பன்னிரண்டு சார்புகள் வழியாகப் படு வேகமாகச் செல்வதால் நம்மால் அவற்றைக் கவனிக்க முடிவதில்லை. இது ஒரு மரத்திலிருந்து விழுவதைப் போலத் தான். உங்களுக்குத் தெரிவதற்கு முன் - "படார்" - நிலத்தில் விழுந்து கிடக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் மரத்தின் கிளைகள், இலைகளை எல்லாம் தாண்டித் தான் தரையை அடைந்திருக்க முடியும் ஆனால் அவற்றைத் தாண்டிச் சென்றதை நினைவில் கொள்ள முடிவதில்லை. விழுகின்றீர்கள், அடுத்தது "படார்!"

படிச்ச சமுபாதா இது போன்றது தான். திரிபிடகத்தில் கூறியிருப்பத்தைப்போல நாம் அதைப் பகுதிகளாகப் பிரித்தால், அவித்தையிலிருந்து சங்கற்பங்கள் உண்டாகின்றன, சங்கற்பங்களிலிருந்து விஞ்ஞானம் உண்டாகிறது, விஞ்ஞானத்திலிருந்து நாமரூபங்களுண்டாகின்றன, நாம ரூபங்களிலிருந்து ஆறுபுலன்களுண்டாகின்றன, ஆறுபுலன்களிலிருந்து பரிசம் உண்டாகிறது, பரிசத்திலிருந்து வேதனை உண்டாகிறது, வேதனையிலிருந்து வேட்கை (அவா) உண்டாகிறது, வேட்கையிலிருந்து பற்று உண்டாகிறது, பற்றினால் பவம் உண்டாகிறது, பவத்தினால் பிறப்பு உண்டாகிறது (பவம் என்பது உண்டாகும் தன்மை), பிறப்பிலிருந்து மூப்பு, பிணி, சாக்காடு, அவலக்கவலைக்கையாறு உண்டாகிறது என்கிறோம் [10] . ஆனால் உண்மையில் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றுடன் தொடர்பு கொண்டால் துக்கம் உடனே எழுகிறது! அந்தத் துக்க உணர்ச்சி படிச்ச சமுபாதாவின் அனைத்துத் (பன்னிரண்டு) தொடர் சார்புகளினால் உண்டானது. இதனால் தான் புத்தர் தனது சீடர்களைத் தங்கள் மனத்தை முழுமையாக ஆராய்ந்து பார்க்கச் சொன்னார்.

மக்கள் உலகில் பிறக்கும் போது அவர்களுக்குப் பெயர் ஏதும் இல்லை - பிறந்த பின், அவர்களுக்குப் பெயர் சூட்டுகிறோம். இது மரபு. ஒருவருக்கொருவர் அழைப்பதற்கு வசதியாக இருப்பதால் வசதிக்காகப் பெயர் சூட்டுகிறோம். எதார்த்தத்தைச் சுலபமாக ஆராய எல்லாவற்றையும் பிரித்து வகைப் படுத்துகிறோம். இதைப்போலவே எளிதாகச் சொல்லப் போனால் எல்லாம் சங்கற்பங்கள் தான். அவற்றின் மூல இயல்பு நிலைமைகளால் பிறந்தவற்றின் இயல்பு மட்டுமே. புத்தர் அவற்றை நிலையற்றவை, திருப்தியற்றவை, நம்முடையவையும் அல்ல என்றார். அவை உறுதியற்றவை. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, நேராக அறிந்துகொள்ளவில்லை, எனவே நாம் தவறான பார்வை கொண்டுள்ளோம். இந்தத் தவறான பார்வையானது சங்கற்பங்கள் தான் நாம், நாம் தான் சங்கற்பங்கள், அல்லது இன்பமும் துன்பமும் நாம், நாம் தான் இன்பமும் துன்பமும் என்று நினைப்பதாகும். இவ்வாறு பார்ப்பது முழுமையற்ற பார்வை. பொருட்களின் உண்மையான இயல்பை நாம் தெளிவாக அறியவில்லை. உண்மையென்னவென்றால் இவற்றையெல்லாம் நமது ஆசைக்குத் தகுந்தார்ப்போல் நடக்கக் கட்டாயப் படுத்த முடியாது. அவை தங்கள் இயற்கை இயல்பைத் தொடர்ந்தே செல்கின்றன.

ஒரு எளிமையான ஒப்பீடு இதோ: ஒரு நெடுஞ்சாலையின் மத்தியில் சென்று உட்கார்ந்து கொள்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாகனங்களும், லாரிகளும் உங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அப்போது நீங்கள் வாகனங்களைப் பார்த்துக் கோபப்பட்டுக் கத்தமுடியாது, "இங்கே ஓட்டாதீர்! இங்கே ஓட்டாதீர்!". இது ஒரு நெடுஞ்சாலை. அவர்களிடம் இப்படிக் கூறுவது சரியில்லை! நீங்கள் என்ன செய்ய முடியும்? சாலையை விட்டு நகருங்கள்! சாலை வாகனங்கள் ஓடுவதற்கு. அங்கு வாகனங்கள் ஓடவேண்டாம் என்று நினைத்தீர்களென்றால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள்.

சங்கற்பங்களும் அது போலத்தான். அது நம்மைத் தொந்தரவு செய்வதாகக் கூறுகிறோம், தியானம் செய்யும் போது ஒரு சத்தத்தைக் கேட்பது போல. நாம் நினைக்கிறோம், "ஓ, அந்தச் சத்தம் என்னைத் தொந்தரவு செய்கிறது." சத்தம் நம்மைத் தொந்தரவு செய்வதாக நினைத்தால் அதற்குத் தகுந்தார்ப்போல் துக்கம் அனுபவிப்போம். கொஞ்சம் ஆழமாக விசாரணை செய்தால், நாம் தான் அந்தச் சத்தத்திடம் சென்று அதைத் தொந்தரவு செய்வது தெரியவரும்! சத்தம் சத்தம் மட்டுமே. இவ்வாறு அறிந்தோம் என்றால் இதற்கு மேல் ஒன்றும் இல்லை, அதை இருந்த நிலையில் விட்டு விடுவோம். சத்தம் வேறு, நாம் வேறு என்பதை அறிவோம். சத்தம் நம்மை வந்து தொந்தரவு செய்ய வந்ததாக நினைப்பவன், தன்னையே சரியாகப் புரிந்து கொள்ளாதவன். உண்மை தான்! நீங்களே அறிந்தபின், நீங்கள் அமைதி பெருவீர்கள். சத்தம் சத்தம் தான், ஏன் அங்கு சென்று அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்? நீங்கள் தான் அங்கு சென்று சத்தத்தைத் தொந்தரவு செய்ததைப் பார்க்கலாம். இது தான் வாய்மை பற்றிய உண்மையான அறிவு. இரு புறத்தையும் பார்த்ததால் அமைதி உண்டாகிறது. ஒரு புறம் மட்டுமே பார்த்தால் துக்கம் உண்டாகும். இரு புறமும் பார்த்த பின், நீங்கள் மத்திய வழியைப் பின் தொடர்கின்றீர்கள். இது தான் மனதுக்குத் தரும் சரியான பயிற்சி. இது தான் "நமது தெரிந்து கொள்ளுதலை நேர்ப் படுத்துவது" என்பது.

இது போலவே சங்கற்பங்களின் இயற்கை இயல்பு நிலையற்ற தன்மையும், மரணமும் தான். ஆனால் அதனை நாம் பிடித்துக் கொள்ளப் பார்க்கிறோம், தூக்கிக் கொண்டு திரிகிறோம். அவற்றோடு ஆவலுடன் விருப்பம் கொள்கிறோம். வாய்மை இல்லாதவற்றுள் வாய்மையைத் தேடுகிறோம்! எவரொருவர் இவ்வாறு எண்ணிச் சங்கற்பங்களோடு பற்றுக் கொண்டு அவற்றைத் ‘தான்’ என்று நினைக்கின்றாரோ அவர் துக்கம் அனுபவிப்பார். நம்மைப் புத்தர் இதைத் தான் சிந்திக்கச் சொன்னார்.

அறத்தைப் பயில்வது நீங்கள் - துறவி, துறவியாக இருக்கப் பயிற்சி பெறுபவர் அல்லது இல்லறத்தார் - இப்படி எவராக இருப்பதையும் பொருத்தது இல்லை; உங்கள் அறிந்து கொள்வதை நேர்ப் படுத்துவதைப் பொருத்ததே. நாம் அறிந்திருப்பது சரியாக இருந்தால், நாம் அமைதிக்கு வருவோம். துறவறம் பூண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று தான். அனைவரும் அறத்தைப் பயில, பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றையே பிரதிபலிக்கிறோம் - எல்லாம் ஒரே அமைதி தான்; அனைவருக்கும் ஒரே மார்க்கம் தான்; ஒரே மாதிரியான முறைகள் தான்.

ஆகவே புத்தர் இல்லறத்தாருக்கும், துறவிகளுக்கும் இடையே பாகுபாடு காட்டவில்லை. அவர் அனைத்து மக்களுக்கும் சங்கற்பங்களின் உண்மையைத் தெரிந்து கொள்ளப் பயிற்சியளித்தார். இந்த உண்மை தெரிந்தவுடன், அவற்றை விட்டு விடுகிறோம். உண்மை தெரிந்தால் மேலும் பவம் இல்லை, பிறப்பும் இல்லை. எப்படிப் பிறப்பில்லை? சங்கற்பங்களின் உண்மை தெரிந்து விட்டதால் பிறப்புக்கு வழியே இல்லை. இந்த உண்மையை முழுமையாகத் தெரிந்து கொண்டால் அமைதி இருக்கும். இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஒன்று தான். இலாபமும் நஷ்டமும் ஒன்றுதான். புத்தர் இதைத் தெரிந்துகொள்ள நமக்கு ஊக்கமளித்தார். இது தான் அமைதி, மகிழ்ச்சியிலிருந்து, மகிழ்ச்சியற்றதிலிருந்து, இன்பத்திலிருந்து, துக்கத்திலிருந்து வந்த அமைதி.

பிறப்பெடுக்கக் காரணத்துக்கு இடம் கொடுக்காமல் நாம் இருக்க வேண்டும். எவ்வாறான பிறப்பு? இன்பத்தில் பிறப்பது: நமக்குப் பிடித்த ஒன்று கிடைத்தால் அதனால் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த மகிழ்ச்சியோடு பற்றில்லாமல் இருந்தால் அங்கு பிறப்பில்லை; பற்றிருந்தால், இதனைப் "பிறப்பு", என்கிறோம். ஆகவே நமக்கு ஏதாவது கிடைத்தால், நாம் (இன்பத்துள்) பிறப்பெடுப்பதில்லை. ஒன்றை இழந்தால், நாம் (துக்கத்துள்) பிறப்பெடுப்பதில்லை. இது தான் பிறப்பில்லாமலும், இறப்பில்லாமலும் இருப்பதென்பது. சங்கற்பங்களோடு பற்றுக் கொண்டு அவற்றைப் போற்றுவதில் பிறப்பும் இறப்பும் உண்டாகின்றன.

எனவே புத்தர் கூறினார். "இனி எனக்குப் பவம் இல்லை, புனித வாழ்க்கை முடிந்தது, இதுவே எனது கடைசிப் பிறப்பு." அதோ! அவர் பிறப்பில்லா இறப்பில்லா நிலையைத் தெரிந்திருந்தார்! இதைத்தான் புத்தர் தனது சீடர்கள் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து ஊக்கமளித்தார். இதுவே சரியான பயிற்சி. இதை அடையாவிட்டால், மத்திய வழியை அடையாவிட்டால், நீங்கள் துக்கத்துக்கு அப்பால் செல்ல முடியாது.

* * * * * *

[8] In the Thai language the word "sungkahn," from the Pali word sankhara (the name given to all conditioned phenomena), is a commonly used term for the body. The Venerable Ajahn uses the word in both ways.

தாய் மொழியில் சங்கற்பம் என்ற வார்த்தை உடலைக் குறிக்கவும் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. அஜான் சா இரு விதத்திலும் இவ்வார்த்தையைப் பயன்படுத்தினார்.

[9] Paticcasamuppada — The Chain of Conditioned Arising, one of the central doctrines of Buddhist philosophy.

படிச்ச சமுப்பாத. இது பன்னிரண்டு நிதானங்களையுடையது. பௌத்தத்தின் ஒரு முக்கியக் கோட்பாடு.

[10] இந்தப் பத்தியை மொழிபெயர்த்தது திரு. நவாலியூர் சோ. நடராசன் - புத்த பகவான் அருளிய போதனை - புத்தகத்திலிருந்து.

* * * * * *

© Copyright

Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.

Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.

"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

http://bautham.net/