ஆசிய ஜோதி முகப்பு

ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

8. புத்தரும் சுஜாதையும்

விளக்கம்: துறவறம் பூண்டு ஆறு வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தும் அவர் விடுதலை பெரும் வழியைக் காண முடியவில்லை. இளவரசனாக இருந்த போது உலக இன்பங்களில் மூழ்கி இருந்தார். ஆனால் அரண்மனை வாழ்வும் அவருக்கு மன நிறைவு தரவில்லை. கானகத்தில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தும், பல நாட்கள் உணவின்றிப் பட்டினி கிடந்து தவமியற்றியும் உலக மக்களை உய்விக்கும் வழியை அவரால் காண இயலவில்லை. எனவே சித்தார்த்தர் உணவு கொள்ளாமல் கடுந் தவம் செய்து உடலை வருத்திக் கொள்வதனால் பயனேதும் இல்லை என்றுணர்ந்து, இனி உயிர்வாழத் தேவையான அளவு உணவு உண்ணுவதே சரி என்று முடிவு எடுத்தார். இதனாலேயே பௌத்த வழி மத்திய வழி என்று கூறப் படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் தவறாது நடுநிலையில் இருக்க வேண்டும்; இன்பம் வரும் போது அதில் மூழ்கித் திளைக்காமலும், துன்பம் நேரும் போது நொந்து புலம்பாமலும் வாழ வேண்டும் என்பதே பௌத்தம் கற்பிக்கும் மத்திய நெறியாகும்.

பன்னாட்கள் உணவின்றி நோன்பிருந்த போது சித்தார்த்தர் இருந்த நிலை, கீழ்க்காணும் சிற்பத்தில் வடிக்கப் பட்டுள்ளது.

பார்புகழ் கங்கை பாயும்நன் னாட்டில்
ஆட்டின் மந்தையோடு ஆனிரை பலவும்
ஆளும் அடிமையும் அளவிடற்கு அரிய
நிதியும் பண்ணை நிலங்களு முடையோன்,
பக்தியில் சிறந்தோன் பரம தயாளன்,

ஆனிரை - பசுக் கூட்டம், Herd of cows

தன்னிக ரில்லாத் தலைவன் ஒருவன்
வாழ்ந்து வந்தனன். வாழ்ந்தவன் இருந்த
திருப்பதி யதனைச் 'சேனானி' என்னும்
அவன்குடிப் பெயரால் அழைத்தனர் எவரும்.
வள்ளல் இவற்கு வாய்த்த மனைவி -

உண்மையும் அறிவும் உறையும் உளத்தினள்;
எளிமையும் பொறுமையும் இரக்கமும் உடையவள்;
எவர்க்கும் இன்னுரை இயம்பும் இயல்பினள்;
பூத்த தாமரை பொலிவுறு முகத்தினள்;
அங்கையற் கண்ணி, அழகின் செல்வி;

உறைதல் – வசித்தல், வாழ்தல், To reside, dwell
இன்னுரை - இனிய உரை
அங்கையற் கண்ணி - (அம் + கயல் + கண்ணி) – அழகிய மீன் போன்ற கண்ணுடையவள்,
(அன்னை மதுரை மீனாட்சி போன்றவள்)

மங்கையர் மாமணி, மாசறு மடந்தை -
சுஜாதை என்னும் சுகுணசுந் தரியாம்.
செப்புதற்கு அரிய செல்வம் படைத்திவர்
இருவரும் இல்லறம் இனிது நடாத்தி
வாழும் நாளில், மைந்தன் இல்லாக்
குறையொன்று அவருளும் குடிகொண் டிருந்தது

மாசறு - மாசு + அறு - குற்றமற்ற, To be blameless
மடந்தை – பெண், Woman, lady
சுகுணசுந்தரி – நற்குணமும் அழகும் உள்ள பெண்.
சுகுணம் – நற்குணம், Good nature, noble character
சுந்தரி - அழகுள்ள பெண், Beautiful woman

அதனால்,
தேவி சுஜாதை தினந்தினந் தவறாது
அரசு சுற்றினள், ஆலயம் தொழுதனள்,
நோன்புகள் பற்பல நோற்று வந்தனள்.

அரசு சுற்றினள் - அரசமரத்தைச் சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்பது ஐதிகம்

அன்ன சத்திரம், ஆதுலர் சாலை,
தண்ணீர்ப் பந்தல், சாவடி யாதிய
அறநிலை யங்கள் ஆங்காங்கு அமைத்தனள்;
'உம்பரும் விரும்பி உண்பதற் குரிய
பண்டம் பலவும் பக்குவம் செய்து

ஆதுலர்சாலை - சக்தியற்றோர்க்கும், வறியவர்க்கும் உண்டியும்,
        உறைவிடமும் அமைக்குஞ் சாலை, Rest-house for giving food and shelter to the disabled and the destitute

சாவடி யாதிய - சாவடி முதலான
சாவடி - வழிப் போக்கர் தங்குமிடம், choultry;
உம்பர் – தேவர்

பொற்றா லங்கள் பொலிவுற எடுத்து
வனத்தின் தெய்வம் வாழ்மரத் தடியில்
வைத்து நின்று வணங்குவேன்' என்றொரு
நேர்த்திக் கடனும் நேர்ந்தி ருந்தனள்.
அப்பால்,

பொற்றா லங்கள் - பொன்னால் செய்த தட்டுகள்
நேர்த்திக்கடன் - நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை, Vow made to a deity
நேர்தல் – உடன்படுதல், To agree, consent

திருவரு ளாலொரு செல்வக் குமரனைப்
பெண்மணி யவளும் பெற்றனள்; பெற்று
மூன்று மாதம் முற்றிய பின்னர்,
ஒருகை,
மைந்தனை யேந்தி மார்போடு அணைக்க,

ஒருகை,
தேவினுக் குரிய தீஞ்சுவை யமுது
தாங்கிய கலசத்தைத் தாங்க, ஒருநாள்
அடவியில் அமைந்த ஆலயம் நோக்கி
அன்ன மெனஅவள் அசைந்து சென்றனள்.

தேவினுக் குரிய - தெய்வத்துக்குரிய
தேவு – தெய்வம்.
தீஞ்சுவை - இனிய சுவை
அடவி – காடு, Forest, jungle

அசைந்து செலவே, அந்நாட் காலையில்
தூர்ந்து மெழுகித் துப்புர வாக்கி
மரத்தின் அடியில் மஞ்சள் பூசி
மங்கல நூலை வரிவரி யாக
வரிந்து சுற்றி வைத்திட ஏகிய

செல்வி இராதை, திரும்பி வந்து
காணாக் காட்சி கண்டவ ளாகி,
"அதிசயம், அதிசயம், அம்மா அதிசயம்!
மலர்கள் மலர்ந்து மழையெனப் பொழியும்
மரத்தின் அடியில் மௌன மெய்தி,

சோதி மண்டலம் சூழ்ந்து பொலிய
முழங்கை மடக்கி முட்டில் அமர்த்தி
வனத்தில் வாழும் மாபெருந் தெய்வம்
அருள்வடி வாகி அமர்வது பாராய்!
சாந்தம் உருவாய்த் தழைப்பது காணாய்!

விரிதா மரையை வென்ற விழிகளில்
தெய்வத் தன்மை திகழ்வது நோக்காய்!
பாக்கியம், பாக்கியம், பாக்கியம் அம்மா!
கண்ணிற் காணாக் கடவுளை இந்த
மண்ணிற் கண்டு வணங்கப் பெறுதலே!"

என்று பலவும் இயம்பி நின்றனள்.
சுகுண சுந்தரி சுஜாதை கேட்டு,
நெஞ்சில் அன்பு நிறைந்தவ ளாகி,
வனத்தில் வந்து, மலர்மழை பொழியும்
மரத்தின் அடியில் வையகம் வாழ
மாதவம் செய்யும் வள்ளலைக் கண்டனள்.             178

வேறு

கண்ணெதிர் காட்சி தந்த
கடவுளே இவரென்று எண்ணி
மண்ணுற வணங்கிச் செந்தா
மரைமல ரடிகள் போற்றி,                                              179

'பண்ணியஞ் சிறிது யானும்
பக்குவம் செய்து வந்தேன்,
அண்ணலே! அருந்தி நீயும்
அருள்செய வேண்டும்,' என்றாள்.                                  180

பண்ணியம் – பலகாரங்கள்.

என்றவள் படிகக் கிண்ணம்
ஏந்திய வாச நீரை
அன்றவன் திருக்க ரங்கள்
அலம்பிட அளித்து,அப் பாலோர்                                      181

படிகம் - பளிங்கு

பொன்தரு கலத்தில் பண்டம்
பொலிவுறப் பெய்து நின்றாள்;
ஒன்றிய கருணை மூர்த்தி
உம்பர்நாட் டமுதின் உண்டான்.                                         182

பொன்தரு கலத்தில் பண்டம் பொலிவுறப்பெய்து -
        பொன்னால் செய்த பாத்திரத்தில் பலகாரங்களை அழகுறப் படைத்தாள்.

வேறு

உண்ட அமுதின் உறுகுண மெல்லாம்
ஏழைஎன் நாவால் இயம்புதல் எளிதோ?
இரவும் பகலும் இடைவி டாமல்
ஊணும் உறக்கமும் இன்றி, உரவோன்
தீவிர மாகச் செய்த தவத்தால்

வாடி இளைத்து வருத்திய களைப்பெலாம்
கனவு போலக் கழிந்து போயது;
உயிரும் உணவை உண்டது போல
ஊக்கமும் ஒளியும் ஒருங்கு பெற்றது;
வேனில் வெயிலில் வெந்தெரி வேளையில்

உறு – மிக்க, Much, abundant, copious
ஊண் – உணவு, Food
உரவோன் – அறிஞர், முனிவர்,

பாலை வனத்தில் பறந்து பறந்து
தளர்ந்த பறவையோர் தடாகங் கண்டு
குளித்துக் குடித்துக் குதுகலிப் பதுபோல்
ஆரமு துண்ட அரும்பய னாக
ஆவியும் பேரா னந்த மடைந்து, அவ்
வண்ணல் முகமும் அழகு பொலிந்தது;

தடாகம் - குளம், Pond, pool, tank

அண்ணல் முகம் பொலி வடையஅடைய
மங்கை சுஜாதை மனங்களிப் புற்றுத்
தொழுது போற்றித் துதித்து நின்றனள்;

துதித்தல் - தொழுதல். To worship;

'காணற் கரிய கடவுள்நீ தானோ?
படைத்த உணவைப் பருகினை நீயும்
இன்புற் றனையோ?' என்று வினவினள்.
ஐயனும்,
'இன்றுநீ அன்பின் எனக்குப் படைத்தது
எவ்வகை உணவாம்? இயம்புக!' என்றனன்.

'பாலொறு நூறு பசுக்கள் கறந்ததை
ஐம்பது பசுக்கள் அருந்த வைத்தனன்;
ஐம்பது பசுக்கள் அளித்த பாலினை
இருபத் தைந்து பசுக்களுக்கு ஈந்தேன்;
இருப தைந்தும் இறக்கிய பாலினைப்

ஈந்தேன் – கொடுத்தேன், To give, grant, supply;

பன்னிரு பசுக்கள் பருகிடச் செய்தேன்;
பன்னிரு பசுக்களின் பாலையும் ஏந்திப்
பண்ணையி லுள்ள பசுக்களில் சிறந்த
ஆறு பசுக்கள் அருந்திடக் கொடுத்தேன்
ஆறு பசுக்களும் அளித்த பாலை

வெண்பொற் கமலம் விளக்கி, அதனில்
புத்தம் புதிய புலங்கண் டுழுது,
முரம்பு தட்டி, முக்கனி யிட்டுத்
தெரிந்த விதையைத் திருந்த விதைத்து
விளைந்த நெல்லை, வீசித் தூற்றிக்

கொழித்து நாவிக் குற்றி எடுத்த
அணிமுத் தனைய அரிசியை யிட்டுப்
பக்குவம் செய்த பாலமுது இதுவாம்.

வெண்பொற் கமலம் – வெள்ளியினால் செய்த செம்பு. அச்செம்பில் அப்பாலை வாங்கி.
வெண்பொன் – வெள்ளி, Silver
கமலம் - பாத்திரம்
புத்தம் புதிய புலங்கண்டுழுது - புத்தம் புதிய நிலம் கண்டு உழுது
முரம்பு தட்டி : பண்படுத்தி
கனியிட்டு – கரை அமைத்து, வரப்பு அமைத்து
தெரிந்த விதையைத் திருந்த விதைத்து – தேர்ந்தெடுத்த விதை நெல்லைச் சீராக விதைத்து
கொழித்து நாவிக் குற்றி
கொழித்து - முறத்தில் புடைத்து
குற்றி - உரலிலிட்டு உலக்கையால் குத்துவது
அணிமுத் தனைய - முத்து போன்ற சிறப்பான,

புத்தம் புதிய நிலத்தைத் தேர்ந்து, அதை உழுது பண்படுத்தி, தேர்ந்தெடுத்த விதையை அதில் விதைத்து விளைந்த நெல்லைத் தூற்றிப் புடைத்து உரலிலிட்டுக் குற்றி முத்துப் போன்ற அரிசியாக்கி அதை வெள்ளிச் செம்பிலுள்ள பாலில் கலந்து பக்குவமாகச் சமைத்த பாலமுதாகும்.

பிள்ளை பிறந்தால் பெருந்திரு அமுது
வனத்தின் கடவுள் வாழ்மரத் தடியில்
வைத்து நின்று வணங்குவேன் என்றொரு
நேர்த்திக் கடன்முன் நேர்ந்தி ருந்தனன்.
இன்று,
மைந்தனைப் பெற்ற மகிழ்ச்சியால், அந்த
நேர்த்திக் கடனை நிரப்பிட வந்தேன்;

இனியென் வாழ்வெலாம் இனியநல் வாழ்வாம்;
யாதும் ஐயம் இலை'எனக் கூறினள்.
அப்பால்,
மதலையைப் பொதிந்த மஞ்சள் நிறத்தனை
ஆடையை மெல்ல அகற்றி, நம் அண்ணல்

உவந்திவ் வுலகெலாம் உய்ய உழைக்கும்
திருக்கரங் களை அதன் சிரசின் மீது
வைத்து நின்று, 'மங்கையே உனக்கு
மனத்தில் இன்பம் வளர்ந்து வருக!
மைந்த னிவனும் மாநில மீது
வருந்தாது இனிய வாழ்வு வாழ்க!

பொதிந்த - போர்த்து இருந்த
நிறத்தனை - நிறத்து அனைய
உவந்து, - மகிழ்ந்து
சிரசின் மீது – தலையின் மீது

காணுதற் கரிய கடவுள் யானலன்;
மண்ணிற் பிறந்தஓர் மனிதனே அம்மா!
ஆதியில் உலகாள் அரசிளங் குமரன்!
இந்நாள்,

வையக மாந்தர் மனஇருள் போக்கும்
உண்மை ஞான ஒளியினைத் தேடி
ஆறாண் டாக அல்லும் பகலும்
அலைந்து திரியும் ஆண்டியும் ஆவேன்;
உண்மை ஞான ஒளியினை யானும்

அடைவேன்; அதற்கோர் ஐய மேயிலை.
பிறப்பும் பற்பல பிறந்து பிறந்து
பாவம் போக்கிப் படிப்படி யாக
மேலாம் பிறப்பை மேவிடும் உயிர்போல்,
உயிர்மே லுயிருக்கு ஊட்டி யூட்டி

மேவிடும், மேவுதல் - அடைதல், To join; to reach

வடித்து வடித்து மாசு நீக்கிய
ஒப்பிலாச் சுத்த உணவாம் இதனை
உண்டு தெளிந்த உடலைக் கண்டபின்
உண்மையை அறிவதும் உறுதி யாம்எனச்
சிந்தையில் நன்கு தெரிந்து கொண்டனன்.

விளக்கம்: பாலை எப்படிப் படிப்படியாக சுஜாதை தூய்மைபடுத்தினாலோ அதே போலப் போதிசத்துவரும் பல பிறப்புகளில் தனது மனமாசுகளைக் களைந்தார்.

மாதே! நீவெறும் வாழ்க்கையி னால்இவ்
உலகில் இன்பம் உண்மை யாக
அடைகின் றனையோ? அறியச் சொல்வாய்!
பெற்ற வாழ்க்கையும் பேணிய அன்பும்
புவியில் உனக்குப் போதுமோ அம்மா!"
என்று வினவினன்.

பெற்ற வாழ்க்கையும் பேணிய அன்பும்
பேணுதல் - போற்றுதல்

ஏந்திழை அதுகேட்டு,
'அகிலம் புகழும் அண்ணலே! தொழுதேன்.
சிறிதாம் என்னுளம், சின்னஞ் சிறிய
ஆம்பல் இதழினும் அறவே சிறிதாம்;
தரணி மீது தழைத்து அது வளரச்
சிந்திப் பெய்யும் சிறுமழை போதும்.

ஏந்திழை - பெண்
ஆம்பல் - அல்லி மலர், Water-lily

கணவன் உள்ளக் கருணையும், என்றன்
மதலையின் முகத்தில் மலர்புன் சிரிப்பும்
உயிரை ஊட்டும் உதய பானுவாய்
உதவிடும், ஐயா! உண்மை இதுவாம்.

உதய பானு - உதய சூரியன்

காலையி லெழுந்து கடவுளைத் தொழுவேன்;
தானியம் அளந்து தானஞ் செய்வேன்;
வெள்ளாட் டிகட்டு வேலைகள் விதிப்பேன்;

வெள்ளாட்டிகட்கு – பணிப் பெண்களுக்கு,
வெள்ளாட்டி – பணிப்பெண்

அப்பால்,
நண்பகல் வேளைஎன் நாயகன் அயர்ந்து

மடியில் தலையை வைத்து நித்திரை
செய்ய, யானும் சிந்தை மகிழ்ந்தே
இதமாய் இனிய இசைகள் பாடி
விசிறி எடுத்து வீசி யிருப்பேன்;
அப்பால்,

மாலையிற் கதிரோன் மறைந்திடு வேளை,
கணவன் உண்டு களித்திடச் சுவைதரு
பண்டம் பலவும் பரிமாறி நிற்பேன்;
அப்பால்,
விண்மீன் வானில் விளக்கிடு நேரம்

விண்மீன் - நட்சத்திரம் Star

ஆலயம் தொழுவேன்; அன்பு நிறைந்த
நண்பர் பலரோடு நல்லுரை யாடுவேன்;
ஈசன் அருளால் இத்தனை பேறும்
பெற்ற எனக்கினிப் பெரும்பேறு ஒன்று
பெறுதற் குளதோ? பிள்ளை இவனால்

பேறு – பாக்கியம், வரம், Fortune, blessing

தந்தையின் ஆன்மா தனிவிசும் பதனை
அடைவதில் ஏதும் ஐயம் உண்டோ?

தனிவிசும் பதனை - தனி + விசும்பு + அதனை
தனி – ஒப்பற்ற. விசும்பு – மேலுலகம், சுவர்க்கம்
தந்தையின் ஆன்மா சுவர்க்கத்தை அடையும் என்பதில் ஐயமில்லை.

வேனில் வெயிலில் வெந்தெரி வேளையில்
நீள்வழிச் செல்வோர் நிழலிற் செல்ல
சாலை மரங்கள் தழைத்திட வைப்போர்,

ஆறு குளங்கள் ஆங்காங்கு அமைப்போர்,
அன்ன சத்திரம் ஆலயம் எடுப்போர்,
பொன்போல் இனிய புதல்வரைப் பெறுவோர்,
யாவரும், மரணம் எய்திய பின்னர்,
மேவுதற் கரிய மேற்கதி அடைவர்,
எனவே மறைகள் இயம்பிடு கின்றன.

மேவுதற் கரிய மேற்கதி - கிடைப்பதற்கரிய மோட்சலோகம். மேற்கதி – மோட்சம்
இயம்பு - சொல்
மறை - வேதம் The Vēdas,

நன்மை தீமை நாடி யுணர்ந்தோர்
உண்மை ஞான முடைய உரவோர்
வேத சாத்திரம் விதிமுறை தெரிந்தோர்
கண்ணாற் கடவுளைக் கண்ட பெரியோர்

முன்னை முனிவர் மொழிந்த மொழியெலாம்
(அவரினும் சிறந்த அறிவிலேன் ஆதலின்)
மெய்ம்மொழி யாக மேற்கொண்டு ஒழுகுவேன்.
எவர்க்கு மெவர்க்கும் இவ்வுலகு இதனில்
என்று மென்றும் எங்கணு மெங்கணும்

எங்கணு மெங்கணும் - எங்கெங்கும்
எங்கணும் – எங்கும், Everywhere

நன்மை விதைத்தால் நன்மையே விளையும்;
தீமை விதைத்தால் தீமையே விளையும்;
கரும்பில் வேம்பு காய்ப்பது முண்டோ?
வேம்பில் கரும்பு விளைவது முன்டோ?
வெறுப்பா லாவது வீண்பகை யேயாம்.
அன்பா லனைவரும் நண்பரே யாவர்.

வேம்பு – வேப்பமரம், Neem

பொறுமையால் இந்தப் புவிமீது என்றும்
அழியா அமைதி அடைவதும் எளிதாம்.
இறந்த பின்னரும் இதுபோல் இன்னொரு
நற்கா லந்தான் நண்ணுதல் அரிதோ?

நண்ணுதல் – கிட்டுதல்,

இதினினும் சிறந்த இனிய காலம்
அணுகும் என்பதில் ஐய மேயில்லை.
நிலத்தில் விழுந்த நெல்விதை யொன்று
வாய்த்து வளர்ந்து மணிநெல் ஐம்பது
தாங்கும் கதிரைத் தருவது மிலையோ?

தேம்பொழி சோலைச் செண்பகத் தருவில்
மலரின் அழகும் மணமும் நிறமும்
முகிழ்க்கும் சிறிய முகையுள் அடங்கி
வசந்தம் வரவெளி வருவது மிலையோ?
ஆயினும்,

தேம்பொழி சோலைச் செண்பகத் தருவில்:
தேம்பொழி – தேன் பொழியும்
சோலை - பலவகை மரங்கள் செறிந்து நிழல் தரும் இடம், Flower garden, grove
தரு - மரம். Tree;
முகிழ்க்கும் சிறிய முகையுள் அடங்கி -
மலரின் அழகு, மணம், நிறம் எல்லாம் மொக்கினுள் அடங்கியிருக்கிறது. முகை விரிந்த பின் தான் அழகு, மணம், நிறம் எல்லாம் வெளிவரும்.
வசந்தம் - இளவேனில் காலம்
முகிழ் - அரும்பு Bud
முகைதல்: அரும்புதல். To bud;

தாங்கொணாத் துயரும் தரணியில் உண்டென
ஐயனே! யானும் அறிவேன் அறிவேன்.
என்கண் காண இச்சிறு மதலை
மடிந்து வீழின் வாழ்வனோ ஐயா?
கணவன் காலம் கழியுமக் கடைநாள்

தாங்கொணாத் துயரும் தரணியில் உண்டென -
தாங்க முடியாத துயரமும் உலகில் உண்டென
ஒணா – ஒண்ணா, முடியாத

நித்தம் நித்தம் நிகழ்வது போல்என்
மடிமீது அவர்தம் முடியினை ஏந்தி
ஈமக் கட்டையில் யானும் இருப்பேன்,
வானுற ஓங்கி வளருந் தீயில்
மூச்சு முட்ட மூடும் புகையில்

மயக்கம் கொள்ளேன், மகிழ்ச்சி அடைவேன்,
கணவன் உயிர்போங் காலையில் அவனைப்
பற்றித் தொடரும் பத்தினிப் பெண்டிர்
கோதி வளர்த்த கூந்தலின் மயிர்கள்
எத்தனை யுண்டோ அத்தனை கோடி

ஆண்டுகள் அவனும் அழியாச் சொர்க்கம்
வாழ்குவன் என்று மறைகள் கூறிடும்;
ஆதலின், சிறிதும் அஞ்சிடேன் ஐயா!
அஞ்சிடே னாயினும், அருட்பெருங் கடலே!
உண்ண உணவும் உடுக்கத் துணியும்

இல்லை யாகி இரந்திடு வோரும்
நோயில் விழுந்து நொந்து நொந்து
பாயில் கிடந்து பரிதவிப் போரும்,
தீய நெறியில் திரிந்து பொல்லாப்
பாதக ராகிப் பழிசெய் வோரும்,
உலகில் உண்டெனும் உண்மை மறவேன்.

பாதகம் - பெரும்பாவம் Grievous sin,

என்வாழ்வு என்றும் இனிய வாழ்வாம்.
நன்மையை நிதமும் நாடி நிற்பேன்.
இயன்றதை எண்ணி இனிது முடிப்பேன்.
வேண்டிய யாவும் விதிமுறை செய்வேன்.

நிதமும் - தினமும், Daily

வரும்விதி வரினும் வருவது முற்றும்
நன்மை வருமென நம்பி வாழ்வேன்.'
என்று கூறினள், யாவையும் கேட்டபின்
உலகெலாம் புகழும் ஒருதனி முனிவன்,
"அறிவிற் பெரிய ஆசிரி யர்க்கும்

அறிவு புகட்டும்நல் அறிவுடை யவள்நீ!
உண்மை ஞானியும் உணரா உண்மைஉன்
இனிய கதையில் எளிது விளங்கிடும்;
நீதி நெறியும் நினக்குறு கடமையும்
உள்ள வாறுநீ உணர்ந்திருக் கின்றனை!

நினக்குறு - நினக்கு + உறும்
உறுதல் - நேர்தல்

அம்மா! நீயும் அறிந்த தமையும்
இனிநீ அறிவதற்கு யாது மேயிலை.
வளர்க, வாச வல்லியே வளர்க!
இனத்துடன் ஓங்கி இனிது வளர்க!
தண்ணிழ லின்கீழ் தழைத்து வளர்க!

அறிந்த தமையும் - அறிந்தது அமையும்
வாச வல்லியே - இனிய பெண்ணே
தண்ணிழல் – குளிர்ந்த நிழல், (அருள் நிழல்) Grace, favour, benignity;

உண்மையின் வெங்கதிர் ஒளிஇவ் வுலகில்
இளந்தளிர் வளர்ந்திடற்கு இசைந்த தன்றாம்.
இளந்தளிர் என்றும் இளவெயி லதனில்
வாய்த்து வளர்ந்து வானுற ஓங்கிப்
பூத்துக் காய்த்துப் பொலிவுற் றிடுமால்!

வெங்கதிர் – வெம்மை மிகுந்த கதிரவன்.
இளந்தளிர் வளர்ந்திடற்கு இசைந்த தன்றாம் -
சூடான வெப்பம் இளந்தளிர் வளர ஏற்றதல்ல.

என்னை வணங்கிய ஏந்திழாய்! யானும் இங்கு
உன்னை வணங்கி உளங்களிப் புற்றேன்.
செல்விஉன் னுள்ளந் தெளிந்த உள்ளமாம்.
அன்பே துணையாய் அடையுங் கூட்டினைச்
சென்று சேரும் சிறுபுறா என்ன

ஏந்திழாய் - ஏந்திழை, பெண்

அறியா தனைத்தும் அறிந்து கொண்டனை.
நிலையா வுலகை நிலையென நம்பி
மனித வாழ்வு வாழ்வதன் காரணம்,
அன்னையே! நின்னை அறிந்தவர் எவரும்
இன்ன தாமென எளிதின் அறிகுவர்.

இன்ன தாமென எளிதின் அறிகுவர் -
உன்னை அறிந்தோர் அனைவரும் உலக வாழ்வு இத்தகையது என்று எளிதாக உணர்ந்து கொள்வார்கள்.

இல்லறச் சகடம் இனிது நடாத்தக்
கருவியும் ஈதெனக் கண்டு கொள்வர்.
சந்ததம் நின்னுளம் சாந்தி யடைக!
வாழ்க வாழ்க வளர்ந்துநீ வாழ்க!
வாழ்நா ளெல்லாம் மகிழ்வொடு வாழ்க!

சகடம் - வண்டி,
வண்டிச் சக்கரம் - வாழ்க்கையைக் குறிக்கிறது
சந்ததம் நின்னுளம் – எப்பொழுதும் உன் உள்ளம்

நின்விருப் பெல்லாம் நீபெறு வதுபோல்
என்விருப் பெல்லாம் யானும் பெறுக!
கடவுள் என்றுநீ கருதிய மனிதன்
எளிதின் இதனை எய்திடு மாறு
மாதே! நீயும் வாழ்த்திடுவாய்" என

வேண்டி நின்றனன். வேண்டுதல் கேட்டவள்
மதலையின் மீதுகண் வைத்த வண்ணமே,
'சிந்தையில் எண்ணம் சித்தி யாகுக'
என்று வாழ்த்தினள். ஏந்திய மதலை,

சிந்தையில் எண்ணம் சித்தி யாகுக - நினைத்தது நடக்கட்டும்
சித்தி – கைகூடுதல், Success, realisation, attainment

(அறச்சிறு மதலைகள் அறிஞரும் அறியொணா
அரிய உண்மைகள் அறிந்திடும் என்பர்)
கடவுள் முனிவனைக் கண்டுதன் கரங்களை
நீட்டிய அதிசயம் நினைத்தற்கு அரியதாம்!
ஐயனும்,

அறியொணா - அறிய முடியாத
கடவுள் முனிவனைக் கண்டுதன் கரங்களை
நீட்டிய அதிசயம் - பொதுவாக முனிவர்கள் தான் கடவுளிடம் கை நீட்டுவர். இங்கு நடக்கும் அரிய செயல் சித்தார்த்தர் சுஜாதையிடம் வாழ்த்துக் கேட்பது.

உண்ட உணவால் உடல்வலி வுற்றுச்
சிந்தை முற்றும் தெளிந்தவ னாகி,
வாடா மலர்கள் மலர்ந்து சொரியும்
போதி விருட்சம் பொலிபூங் காவினை
நாடிச் சென்றனன் ஞானம் பெறவே.                                          183

வலிவுற்று – வலிமை பெற்று, Strength.
சொரிதல் – பொழிதல், உதிர்தல்.
போதி விருட்சம் – போதி மரம்.


    *    *    *    *    *    *   


Now, by that river dwelt a landholder
Pious and rich, master of many herds,
A goodly chief, the friend of all the poor;
And from his house the village drew its name—
“Senàni.” Pleasant and in peace he lived,
Having for wife Sujàta, loveliest
Of all the dark-eyed daughters of the plain;
Gentle and true, simple and kind was she,
Noble of mien, with gracious speech to all
And gladsome looks—a pearl of womanhood—
Passing calm years of household happiness
Beside her lord in that still Indian home,
Save that no male child blessed their wedded love.
Wherefore, with many prayers she had besought
Lakshmi, and many nights as full-moon gone
Round the great Lingam, nine times nine, with gifts
Of rice and jasmine wreaths and sandal oil
Praying a boy; also Sujàta vowed—
If this should be—an offering of food
Unto the Wood-God, plenteous, delicate,
Set in a bowl of gold under his tree,
Such as the lips of Devs may taste and take.
And this had been: for there was born to her
A beauteous boy, now three months old, who lay
Between Sujata’s breasts, while she did pace
With grateful footsteps to the Wood-God’s shrine,
One arm clasping her crimson sari close
To wrap the babe, that jewel of her joys,
The other lifted high in comely curve
To steady on her head the bowl and dish
Which held the dainty victuals for the God.

But Radha, sent before to sweep the ground
And tie the scarlet threads around the tree,
Came eager, crying, “Ah, dear Mistress! look!
There is the Wood-God sitting in his place,
Revealed, with folded hands upon his knees.
See how the light shines round about his brow!
How mild and great he seems, with heavenly eyes!
Good fortune is it thus to meet the gods.”
So,—thinking him divine,—Sujàta drew
Tremblingly nigh, and kissed the earth and said,
With sweet face bent, “Would that the Holy One
Inhabiting his grove, Giver of good,
Merciful unto me his handmaiden,
Vouchsafing now his presence, might accept
These our poor gifts of snowy curds, fresh made,
With milk as white as new-carved ivory!”
Therewith into the golden bowl she poured
The curds and milk, and on the hands of Buddha
Dropped attar from a crystal flask—distilled
Out of the hearts of roses; and he ate,
Speaking no word, while the glad mother stood
In reverence apart. But of that meal
So wondrous was the virtue that our Lord
Felt strength and life return as though the nights
Of watching and the days of fast had passed
In dream, as though the spirit with the flesh
Shared that fine meat and plumed its wings anew,
Like some delighted bird at sudden streams
Weary with flight o’er endless wastes of sand,
Which laves the desert dust from neck and crest.
And more Sujàta worshipped, seeing our Lord
Grow fairer and his countenance more bright:
“Art thou indeed the God?” she lowly asked,
“And hath my gift found favour?”
But Buddha said,
“What is it thou dost bring me?”
“Holy one!”
Answered Sujàta, “from our droves I took
Milk of a hundred mothers, newly-calved,
And with that milk I fed fifty white cows,
And with their milk twenty-and-five, and then
With theirs twelve more, and yet again with theirs
The six noblest and best of all our herds.
That yield I boiled with sandal and fine spice
In silver lotas, adding rice, well grown
From chosen seed, set in new-broken ground,
So picked that every grain was like a pearl.
This did I of true heart, because I vowed,
Under thy tree, if I should bear a boy
I would make offering for my joy, and now
I have my son, and all my life is bliss!”

Softly our Lord drew down the crimson fold,
And, laying on the little head those hands
Which help the worlds, he said, “Long be the bliss!
And lightly fall on him the load of life!
For thou hast holpen me who am no God,
But one, thy Brother; heretofore a Prince
And now a wanderer, seeking night and day
These six hard years that light which somewhere shines
To lighten all men’s darkness, if they knew!
And I shall find the light; yea, now it dawned
Glorious and helpful, when my weak flesh failed
Which this pure food fair Sister, hath restored,
Drawn manifold through lives to quicken life
As life itself passes by many births
To happier heights and purging off of sins.
Yet dost thou truly find it sweet enough
Only to live? Can life and love suffice?”

Answered Sujàta: “Worshipful! my heart
Is little, and a little rain will fill
The lily’s cup which hardly moists the field.
It is enough for me to feel life’s sun
Shine in my Lord’s grace and my baby’s smile,
Making the loving summer of our home.
Pleasant my days pass filled with household cares
From sunrise when I wake to praise the gods,
And give forth grain, and trim the tulsi-plant,
And set my handmaids to their tasks, till noon
When my Lord lays his head upon my lap
Lulled by soft songs and wavings of the fan;
And so to supper-time at quiet eve,
When by his side I stand and serve the cakes.
Then the stars light their silver lamps for sleep,
After the temple and the talk with friends.
How should I not be happy, blest so much,
And bearing him this boy whose tiny hand
Shall lead his soul to Swarga, if it need?

For holy books teach when a man shall plant
Trees for the travellers’ shade, and dig a well
For the folks’s comfort, and beget a son,
It shall be good such after their death;
And what the books say, that I humbly take,
Being not wiser than those great of old
Who spake with gods, and knew the hymns and charms,
And all the ways of virtue and of peace.
Also I think that good must come of good
And ill of evil—surely—unto all—
In every place and time—seeing sweet fruit
Groweth from wholesome roots, and bitter things
From poison-stocks; yea seeing, too, how spite
Breeds hate, and kindness friends, and patience peace
Even while we live; and when ’tis willed we die
Shall there not be as good a ‘Then’ as ‘Now’?
Haply much better! since one grain of rice
Shoots a green feather gemmed with fifty pearls,
And all the starry champak’s white and gold
Lurks in those little, naked, grey spring-buds.
Ah, Sir! I know there might be woes to bear
Would lay fond Patience with her face in dust;
If this my babe pass first I think my heart
Would break—almost I hope my heart would break!
That I might clasp him dead and wait my lord—
In whatsoever world holds faithful wives—
Duteous, attending till his hour should come.
But if Death called Senáni, I should mount
The pile and lay that dear head in my lap,
My daily way, rejoicing when the torch
Lit the quick flame and rolled the choking smoke.
For it is written if an Indian wife
Die so, her love shall give her husband’s soul
For every hair upon her head a crore
Of years inSwarga. Therefore fear I not.
And therefore, Holy Sir! my life is glad,
Nowise forgetting yet those other lives
Painful and poor, wicked and miserable,
Whereon the gods grant pity! But for me,
What good I see humbly I seek to do,
And live obedient to the law, in trust
That what will come, and must come, shall come well.”

Then spake our Lord: “Thou teachest them who teach,
Wiser than wisdom in thy simple lore.
Be thou content to know not, knowing thus
Thy way of right and duty: grow, thou flower
With thy sweet kind in peaceful shade—the light
Of Truth’s high noon is not for tender leaves
Which must spread broad in other suns, and lift
In later lives a crowned head to the sky.
Thou who hast worshipped me, I worship thee!
Excellent heart! learned unknowingly,
As the dove is which flieth home by love.
In thee is seen why there is hope for man
And where we hold the wheel of life at will.
Peace go with thee, and comfort all thy days!
As thou accomplishest, may I achieve!
He whom thou thoughtest God bids thee wish this.”

“Mayest thou achieve,” she said, with earnest eyes
Bent on her babe, who reached its tender hands
To Buddha—knowing, belike, as children know,
More than we deem, and reverencing our Lord;
But he arose—made strong with that pure meat—
And bent his footsteps where a great Tree grew,
The Bõdhi-tree (thenceforward in all years
Never to fade, and ever to be kept
In homage of the world), beneath whose leaves
It was ordained the Truth should come to Buddha:
Which now the Master knew; wherefore he went
With measured pace, steadfast, majestical,
Unto the Tree of Wisdom. Oh, ye Worlds!

        “Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Sixth