மார்க்க பகுப்பாய்வு
மக்க விபங்க சூத்திரம்: மார்க்க பகுப்பாய்வு
Magga-vibhanga Sutta: An Analysis of the Path
(translated from the Pali by Thanissaro Bhikkhu)
ஒரு முறை புத்தர் சாவத்தி நகரில், ஜேதா வனத்தில், அனந்த பிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அங்கிருந்த பிக்குமார்களுக்குப் புத்தர் இவ்வாறு உரை நிகழ்த்தினார், "துறவிகளே!"
"சொல்லுங்கள், பிரபு," என்று துறவிகள் பதில் அளித்தனர்.
"மேன்மையான எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதையை ஆராய்ந்து உங்களுக்குப் போதிக்கப் போகிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்று புத்தர் கூறினார்.
"கேட்கிறோம், பிரபு," என்று துறவிகள் பதில் அளித்தனர்.
புத்தர் கூறினார், "துறவிகளே மேன்மையான எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை என்றால் என்ன?
நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செயல், நல் வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல் ஒருக்கம் (மன ஒருமைப்பாடு) என்பவையே அவை.
"துறவிகளே, நற்காட்சி என்றால் என்ன?
துக்கத்தைப் பற்றிய அறிவும், துக்கத்தை உண்டாக்கும் காரணத்தைப் பற்றிய அறிவும், துக்கத்தை தவிர்க்க முடியும் என்பதைப் பற்றிய அறிவும், துக்கத்தை முடிக்கும் மார்க்கத்தைப் பற்றிய அறிவும் ஆகிய இவையே நற்காட்சி என்பதாகும்."
"நல்லூற்றம் என்பதென்ன?
உள்ளத் துறவு, பற்று நீங்குதல், கைவிடுகை பற்றிய தீர்மானம், தீய எண்ணங்களிருந்தும், தீங்கு செய்வதிலிருந்தும் விடுதலை பெறுவது: இதுவே நல்லூற்றம்."
"நல்வாய்மை என்பதென்ன?
பொய் சொல்வது, பிரித்துப் பேசுவது, கடுமையாகப் பேசுவது, வெட்டிப் பேச்சு ஆகியவற்றைத் தவிர்ப்பது. இதுவே நல்வாய்மை".
"துறவிகளே, நற்செயல் என்பதென்ன?
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்ப்பதும், கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்ப்பதும், பாலியல் உறவுகள் கொள்ளாது இருப்பதும் ஆகியவையே நற்செயல் என்பதாகும்." (இல்லற மக்கள் தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல் வேண்டும்.)
"துறவிகளே, நல் வாழ்க்கை என்பதென்ன?
மேன்மையானோரின் சீடர்கள் நேர்மையற்ற தொழில்களைக் கைவிட்ட பிறகு, தங்கள் வாழ்வை நேர்மையான தொழில் செய்து நடத்துகின்றனர். இதுவே நல் வாழ்க்கை என்பதாகும்."
"துறவிகளே, நல்லூக்கம் என்பதென்ன?
(i) இதுவரை எழாத தீய, பயனற்ற பண்புகள் மற்றும் மனநிலைகள் எழாமல் இருக்க, ஒருவர் அதற்கான விருப்பத்தை உண்டாக்கி, நிலையாகத் தொடர்ந்து முயற்சித்து, ஊக்கத்துடனும் உறுதியுடனும் செயற்படுவதாகும்.
(ii) ஏற்கனவே தோன்றிவிட்ட தீய, பயனற்ற பண்புகள் மற்றும் மனநிலைகளைக் கைவிட, ஒருவர் அதற்கான விருப்பத்தை உண்டாக்கி, நிலையாகத் தொடர்ந்து முயற்சித்து, ஊக்கத்துடனும், உறுதியுடனும் செயற்படுவதாகும்.
(iii) இதுவரை எழாத நல்ல, பயனுள்ள பண்புகள் மற்றும் மனநிலைகள் இனிமேல் எழுவதற்கு ஒருவர் அதற்கான விருப்பத்தை உண்டாக்கி, நிலையாகத் தொடர்ந்து முயற்சித்து, ஊக்கத்துடனும், உறுதியுடனும் செயற்படுவதாகும்.
(iv) ஏற்கனவே தோன்றிவிட்ட நல்ல, பயனுள்ள பண்புகள் மற்றும் மனநிலைகளை மேம்படுத்த, வளர்க்க, ஒருவர் அதற்கான விருப்பத்தை உண்டாக்கி, நிலையாகத் தொடர்ந்து முயற்சித்து, ஊக்கத்துடனும், உறுதியுடனும் செயற்படுவதாகும்.
துறவிகளே, இவையே நல்லூக்கம் என்பதாகும்."
"துறவிகளே, நற்கடைப்பிடி என்பதென்ன?
(i) ஒருவர் உடல் மீது மட்டும் - வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல் @ - ஆர்வத்துடனும், அறிநிலையோடும், கருத்தோடும் கவனம் செலுத்தி உலகின் மீது உள்ள விருப்பங்களையும், வெறுப்புகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
(ii) அவர் உணர்ச்சிகள் மீது மட்டும் - வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல் - ஆர்வத்துடனும், அறிநிலையோடும், கருத்தோடும் கவனம் செலுத்தி உலகின் மீது உள்ள விருப்பங்களையும் வெறுப்புகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
(iii) அவர் மனத்தின் (விஞ்ஞானத்தின்) மீது மட்டும் - வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல் - ஆர்வத்துடனும், அறிநிலையோடும், கருத்தோடும் கவனம் செலுத்தி உலகின் மீது உள்ள விருப்பங்களையும், வெறுப்புகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
(iv) அவர் மனத்தின் இயல்புகள் (தம்மங்கள், போதனைகள்) மீது மட்டும் - வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல் - ஆர்வத்துடனும், அறிநிலையோடும், கருத்தோடும் கவனம் செலுத்தி உலகின் மீது உள்ள விருப்பங்களையும், வெறுப்புகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
துறவிகளே, இவையே நற்கடைப்பிடி என்பதாகும்."
"துறவிகளே, நல் ஒருக்கம் (மன ஒருமைப்பாடு) என்பதென்ன?
ஒருவர் - புலனடக்கத்துடனும், திறமையற்ற மனநிலைகளிடமிருந்தும் விடுபட்டு,
(i) முதல் ஜான (Jhana) நிலையில் நுழைந்து அங்கேயே இருக்கிறார்:
முதலாவது தியான நிலையில் இச்சைகளும், புலன்வரும் இன்ப வேட்கைகளும், குரோத நினைவுகளும், மடிமையும், கவலையும், சஞ்சலமும், சந்தேகங்களும், இவை போன்ற அசுப நினைவுகளும் மனத்தை விட்டு நீங்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் சித்தத்தில் நிரம்பியிருக்கும், சித்த விருத்திகள் சில நிலவும். * (திரு. நவாலியூர் சோ. நடராசன் மொழிபெயர்ப்பு )
(ii) அடுத்து இரண்டாம் ஜான நிலையில் நுழைந்து அங்கேயே இருக்கிறார்:
இரண்டாவது தியான நிலையில் புத்தி சார்ந்த செயற்பாடுகளெல்லாம் ஒடுக்கப்படும். அமைதியும் ஏகாக்கிரசித்தமும் வளரும்; மனத்தில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நீங்காதிருக்கும்.
(iii) அடுத்து மூன்றாம் ஜான நிலையில் நுழைந்து அங்கேயே இருக்கிறார்:
மூன்றாவது தியான நிலையில் ஆனந்தம் நீங்க மகிழ்ச்சியும், உபேக்கா என்ற பற்றற்ற நிலையும் நிலவும்.
(iv) அடுத்து நான்காம் ஜான நிலையில் நுழைந்து அங்கேயே இருக்கிறார்:
நான்காவது தியான நிலையில் எல்லா உணர்வுகளும் இன்ப துன்பம், சுக துக்கம் என்ற வேதனைகளும் மறைந்து விடும். தூய உபேக்கையும், விழிப்புணர்ச்சியும் மாத்திரம் மிஞ்சியிருக்கும்.
துறவிகளே, இதுவே நல் ஒருக்கம் என்பதாகும்."
புத்தர் இவ்வாறு கூறினார். இதைக் கேட்ட பிக்குக்கள் மகிழ்வுற்றனர்.
* * * * * *
@ "வேறு எதையும் கருத்தில் கொள்ளாமல்" என்று சொல்வதற்கு காரணம், (உதாரணமாக) உடலின் மீது கவனம் செலுத்தும் வேலையில், மனத்தில் உள்ள இன்ப துன்பமான உணர்ச்சிகள் பற்றியோ வேறு ஏதாவது கருத்துகள் மீதோ கவனம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
in and of itself = without considering anything else / considered alone
* ‘நல் ஒருக்கம்’ சம்பந்தப்பட்ட நான்கு தியான நிலைகளின் விவரிப்பும் திரு. நவாலியூர் சோ. நடராசன் மொழிபெயர்த்த "புத்த பகவான் அருளிய போதனை" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது.