பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - நிர்வாணத்தை அடையும் வழி

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 11 - நிர்வாணத்தை அடைவது எப்படி?

The Path to Nibbana

நற்காட்சி (சம்மா-திட்டி), நல்லூற்றம் (சம்மா-சங்கப்ப), நல்வாய்மை ( சம்மா-வாசா), நற்செய்கை (சம்மா-கம்மதா), நல்வாழ்க்கை (சம்மா-சஜீவ), நன்முயற்சி (சம்மா-வாயாம), நற்கடைப்பிடி (சம்மா-சதி), நல்லுளத்தோர் தலைப்பாடு (சம்மா-சமாதி) என்ற அட்டாங்க மார்க்கத்தின் வழி ஒழுகுவதன் மூலமே அதனை அடையலாம்.

1. நற்காட்சி - பௌத்தத்தின் அடிப்படைக் கருத்தான இது, நால்வகை வாய்மைகளைப் பற்றிய அறிவென விளக்கப்படுகிறது. நற்காட்சியென்றால் வெளித்தோற்றத்தை விட்டு, பொருள்களின் உண்மைத்தன்மையை அறிவதேயாகும். அதோடு முதலாவதாக ஒருவன் தன்னைத் தானே சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதையும் குறிக்கிறது. ரோகித சூத்திரம் கூறுவதுபோல், உணர்ச்சியுடைய ஆறடி நீளமான இவ்வுடம்பில்தான் நால்வகை வாய்மைகளும் தங்கியுள்ளன. இந்தச் சிறந்த எண்சாண் உடம்பில் முதலிலும் கடையிலும் நற்காட்சி இருக்கிறது. இவ்வுயரிய பாதையின் நடைமுறையில் குறைந்த அளவிலாவது நற்காட்சி இருக்கவேண்ட்ம். ஏனெனில் அதுதான் இவ்வுயரிய பாதையின் மற்ற ஏழுவகை அம்சங்களுக்கும் சரியான குறிக்கோளையும், சரியான வழியையும் காட்டுகிறது. இவ்வுயரிய பாதையைக் கைக்கொள்ளும்போது முடிவில் இந்த நற்காட்சி பரிபூரணமான, நுண்புல விவேகமாக (விப்பஸ்ஸனா-பஞ்ஞா) முதிர்ச்சி பெறும். இவ்விவேகம் பரிபூரண நிலைக்கு நேரடியாகக் கொண்டு செல்லும்.

2. நல்லூற்றம்

நற்காட்சி நல்லூற்றத்துக்கு வழி வகுக்கும். உயரிய பாதையின் இரண்டாவது கூறு நல்லூற்றம். இது தீய எண்ணங்களை விலக்கவும் நல்லெண்ணங்களை வளர்க்கவும் உதவுகிறது. இச் சரியான சிந்தனை மூவகைப்படும். அவையாவன,

(i). நேக்கம்ம - பற்று, சுயநலம், வாஞ்சை முதலியவற்றுக்கு எதிரான உலக இன்பங்களைத் துறத்தல் அல்லது தன்னலமற்ற தன்மை.

(ii). அவ்யாபாத - பகை, தீய எண்ணம், வெறுப்பு முதலியவற்றுக்கு எதிரான அன்பு, இரக்கம், நல்லெண்ணம் அல்லது அறம் முதலியன.

(iii). அவிஹிம்ஸா - கொடுமை, உணர்ச்சியற்ற தன்மை முதலியவற்றுக்கு எதிரான தீங்கு செய்யாமை அல்லது கருணை.

3. நல்வாய்மை - நல்லூற்றம் மூன்றாவது அம்சமான நல்வாய்மைக்கு வழி காட்டும். இது பொய்யாமை, அவதூறு, சுடுசொல், வீண்பேச்சு முதலியவற்றை விலக்குவதைக் குறிக்கும்.

4. நற்செய்கை - நான்காவது காரணியான நற்செய்கை, நல்வாய்மையைப் பின்தொடரும். இது கொலை, களவு, காமதுர்நடத்தை முதலியவற்றைத் தவிர்ப்பதைக் குறிக்கும்.

5. நல்வாழ்க்கை - தன்னுடைய மனம், வாக்கு, காயம் முதலியவற்றைத் தூய்மையாக்கிய ஒரு ஆத்மீக யாத்திரீகன் தன்னுடைய வாழ்க்கையைச் சாதாரண சீடர்களுக்குத் தடைசெய்யப்பட்ட ஐவகை வாணிகத்தைத் தவிர்ப்பதன் மூலம் தூய்மையாக்க முயற்சிக்கின்றான். இவ் ஐவகை வாணிகம் ஆவன: ஆயுதம், மனிதர், இறைச்சிக்காக மிருகங்கள், போதை தரும் பானம் மற்றும் போதைப்பொருட்கள், விஷம் முதலியவற்றில் வியாபாரம் செய்தல்.

பிக்குகளுக்குத் தகாத பிழைப்பு, கபட நடத்தை, துறவறத்துக்குரிய தேவைகளைத் தவறான வழிகளில் பெறுவது முதலியனவாகும்.

6. நன்முயற்சி - இது நால்வகைப்படும்.

(i) ஏற்கனவே எழுந்துள்ள தீமையைக் கைவிட முயற்சித்தல்.

(ii) இதுவரை எழாத தீமையைத் தடுக்க முயற்சித்தல்.

(iii) இதுவரை எழாத நன்மையை வளர்க்கும் முயற்சி.

(iv) ஏற்கனவே எழுந்துள்ள நன்மையை முன்னேற்றும் முயற்சி.

7. நற்கடைப்பிடி - இது உடல், உணர்வு, சிந்தனை, மனப் பொருள்கள் முதலியவற்றை இடைவிடாது கடைப்பிடித்தலைக் குறிக்கும்.

8. நல்லுளத்தோர் தலைப்பாடு - நன்முயற்சியும், நற்கடைப்பிடியும் நல்லுலத்தோர் தலைப்பாட்டுக்கு வழிகாட்டும். இது மனத்தை ஒரு முகப்படுத்தி இறுதியில் ஞானத்தினால் அல்லது தியானத்தினால் கிரகிக்கும் அமைதியில் முடிவுபெறும்.

இவ்வுயரிய பாதையின் 8 அம்சங்களில் முதலிரண்டும் விவேகம் (பஞ்ஞா) என்ற தலைப்பின் கீழும், அடுத்த மூன்றும் ஒழுக்கம் (சீலம்) என்றதின் கீழும், கடைசி மூன்றும் ஒருமுகபடுத்தல் (சமாதி) என்றதின் கீழும் இடம்பெறுகின்றன. ஆனால் விருத்தியின் வரிசைக் கிரமப்படி பின்வருமாறு ஒழுங்குபடுத்தப்படும்.

(i) ஒழுக்கம் (சீலம்) --> நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை

(ii) ஒருமுகப்படுத்தல் (சமாதி) --> நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு

(iii) ஞானம் (பஞ்ஞா) --> நற்காட்சி, நல்லூற்றம்

நிர்வாணத்தையடையும் இப்பாதையில் ஒழுக்கமே முதற்படியாகும். எந்த உயிருள்ள பிராணியையும் மனிதன் கொல்லாமலும் வதைக்காமலும், தன் பாதத்தண்டை ஊர்ந்து செல்லும் சிறு பிராணிக்கும் தயவு தாட்சண்யம் காட்டவேண்டும். அவன் களவைத் தவிர்த்துத் தனது காரியங்களிலெல்லாம் நேர்மையுடன் ஈடுபட வேண்டும். மனிதனின் உயர்ந்த மனிதப்பண்பை இழிவுபடுத்தும் காமத் துர்நடத்தையிலிருந்து அவன் விலகி, தூயவனாக இருக்க வேண்டும். அவன் பொய்யினை நீக்கி வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். கவனமற்ற நடத்தையைத் தூண்டும் கேடு விளைவிக்கும் பானங்களைத் தவிர்த்து அவன் அடக்கமாகச் சாதுவாக விடாமுயற்சியுடையவனாக இருக்க வேண்டும். நிர்வாணத்தின் அடிச்சுவட்டிற்கால் வைத்தவனுக்கு இந்த ஆரம்பக் கொள்கைகள் மிக முக்கியமானவை. இவற்றை மீறுவது இப்பாதையில் தடைகளை இடுவதற்கு ஒப்பாகும். இக்கொள்கைகளை அனுசரித்தால் இலகுவாகவும் உறுதியாகவும் இப்பாதையில் முன்னேறலாம்.

தனது பேச்சையும் செய்கைகளையும் கட்டுப்படுத்தும் ஆத்மீக யாத்திரீகன் அடுத்தபடியாகத் தனது புலன்களைக் கட்டுப்படுத்த முனையலாம். மட்டான பேச்சு, செய்கை முதலியவற்றோடும் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களோடும், மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுகின்ற அவனது கன்மவிசை உலக இன்பங்களைக் கைவிட்டு, துறவறத்தை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தலாம். அப்போது அவனிடத்தில் இவ்வகையான எண்ணம் எழும்:

"குடும்ப வாழ்க்கை ஒரு சச்சரவுள்ள குகை,

தேவையும் சிரமமும் மிகுந்தது;

வீடுவாசலற்றோர் வாழும் வாழ்க்கை

திறந்த வானத்தைப்போன்று சுதந்திரம் மிகுந்தது."

ஒருவன் தனது குறிக்கோளையடைய ஒரு பிக்குவாகவோ அல்லது பிரம்மச்சாரியாகவோ இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு பௌத்தன் ஓர் அரகத்து ஆக முடியுமென்றாலும், பிக்குவானால் அவனது ஆன்மீக வளர்ச்சி துரிதமாகிறது. பரிசுத்த நிலையின் மூன்றாவதுபடியை அடைந்தபின்பு பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொள்ளுகிறான்.

முன்னேற்றமடையும் ஒரு யாத்திரீகன் நெறி என்ற தரையில் உறுதியாகக் காலூன்றியபின் மனதின் பண்மையும் கட்டுப்பாட்டையும் தரும் சமாதி என்ற உயர்வான பயிற்சியை மேற்கொள்கிறான். இப்பாதையின் இரண்டாவது கட்டம் இது.

சமாதி, மனதின் ஒரு நிலையான தன்மை எனப் பொருள்படும். அது மற்றத்தேவையில்லா விஷயங்களை ஒதுக்கி ஒன்றிலேயே மனதை ஒருமுகப்படுத்துவதைக் குறிக்கும்.

தனிப்பட்டவர்களின் மனப்பாங்குக்கேற்ப அவர்கள் தியானிக்கும் விஷயம் வேறுபடுகின்றது. மிகச் சுலபமாக மனதின் ஒருநிலைத் தன்மையைப் பெறச் சுவாசித்தலின் மேல் தியானிப்பது உதவுகிறது. அன்பு இரக்கம் போன்றவற்றின்மேல் தியானிப்பது, மன அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் துணைபுரிவதால் மிகுந்த நன்மையைத் தரும்.

அன்பும், இரக்கமும் (மெத்தா), கருணை (கருணா), பரிவான களிப்பு (முதிதா), அமைதி (உபேக்கா) ஆகிய நான்கு உயரிய பாவனைகளைப் பேணி வளர்ப்பது மெச்சத்தக்கது.

ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயத்தை நன்றாக ஆராய்ந்துபின் தனது மனதிற்கேற்ற ஒன்றைத் தெரிவுசெய்ய வேண்டும். இப்படி ஒரு திருப்திகரமான முடிவுக்கு வந்ததன் பின் மனதை அதில் குவியச்செய்ய இடைவிடாது முயற்சிக்க வேண்டும். இம்முயற்சியை, இது காரணமாகவே மற்றச் சிந்தனைகளெல்லாம் ஒதுக்கப்பட்டு, அவன் தனது விஷயத்தில் ஒன்றி அதில் அக்கறை காட்டும்வரை கடைப்பிடிக்க வேண்டும். முன்னேற்றத்துக்குத் தடையாகவுள்ள புலன்-இச்சை, குரோதம், சோம்பல்-அசதி, அமைதியின்மை-விசனம், ஐயப்பாடு என்ற ஐந்தும் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இறுதியில் கழிபேருவகையான ஒருமுகப்படுதலையடைந்து, அவனது விவரிக்க முடியாத களிப்புக்கு, ஞானத்தினால் சூழப்பட்டு ஒரு நிலையான மனதின் அமைதியையும் சாந்தத்தையும் அநுபவிக்கின்றான்.

இப் பரிபூரணமான ஒருமனப்படுத்தலை அடையும் போது ஐந்து அசாதாரண சக்திகளையும் (அபிஞ்ஞா) ஒருவன் பெறமுடியும். அவையாவன, திவ்ய கண் (திப்ப சக்கு), திவ்ய செவி (திப்ப சோத), முற்பிறப்பை நினைவு கூறல் (புபெனிவாசானு சத்தி-ஞானம்), சிந்தனை வாசிப்பு (பரசித்த-விஜாநன), வேறான மனோசத்திகள் (இத்திவிதா). பரிசுத்த மாவதற்கு இவை அத்தியாவசியம் என எவரும் எண்ணக்கூடாது.

மனம் இப்போது தூய்மையாக்கப்பட்டாலும், அவனுள் இச்சைகளுக்கு இடம் கொடுக்கும் தன்மை உறங்கிக் கொண்டிருக்கும். ஏனெனில் ஒருமுகப்படுத்தலினால் இச்சைகள் தற்காலிகமாக நித்திரையில் ஆழ்த்தப்பட்டுள்ளன. அவை எதிர்பாராத சந்தர்ப்பங்களில் வெளிப்படக் கூடும்.

கட்டுப்பாடு, ஒருமுகப்படுத்தல் என்ற இரண்டும், இப்பாதையிலுள்ள தடைகளை நீக்க உதவுகின்றன. ஆனால் நுண்புலன் (விபஸ்ஸனா-பஞ்ஞா) மட்டுமே பொருள்களின் உண்மைநிலையை அறிய உதவும். இறுதியில் சமாதியினால் கட்டுப்படுத்தபட்ட இச்சைகளை முற்றாக அழித்து, குறிக்கோளான நிர்வாணத்தையடைய வழிவகுக்கின்றது. இது நிர்வாணத்தையடையும் பாதையின் மூன்றாவதும் இறுதியுமான நிலையாகும்.

வாழ்வைப் பற்றிய சரியான பாடத்தைப் பெற, பளபளக்கப்பட்ட முகக் கண்ணாடியை ஒத்திருக்கும் தனது ஒருமுகப்படுத்தப்பட்ட மனதைக் கொண்டு உலகைப் பார்க்கிறான். எங்கு திரும்பினாலும் அவன் மூன்று இயல்புகளை வெட்ட வெளிச்சமாகக் காண்கிறான். இம்முன்று இயல்புகளாவன: அனிச்ச (மாற்றம்), துக்க (துக்கம்), அனாத்மா (ஆத்துமமற்ற தன்மை) முதலியன. வாழ்வு இடைவிடாது மாறிக் கொண்டிருக்கிறதென்றும் எல்லா வரையறுக்கப்பட்ட பொருள்களும் நிலையற்றவையென்றும் அவன் புரிந்து கொள்கிறான். இம்மையிலோ அல்லது சொர்க்கத்திலோ அவன் உண்மையான இன்பத்தைக் காணமுடியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு இன்பமும் துன்பத்தின் முன்னோடியாக இருக்கிறது. ஆகவே நிலையற்ற தெல்லாம் துன்பமானவை. எங்கு மாற்றமும் துயரமும் மேலோங்கியுள்ளதோ அங்கு ஒரு நிலையான இறவாத ஆத்துமா இருக்கமுடியாது. ஆகவே இம்மூன்று இயல்புகளில் அவன் தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்து, நுண்புலனைக் கவனமாக வளர்க்கிறான். அதன் மூலமாக அவன் மூன்று விலங்குகள் எனப்படும் தன் மாயை (சக்காய தித்தி), ஐயம் (விசிகிச்சா), பிழையான சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் ஈடுபாடு (சீலம் பத்த பராமாச) முதலியவற்றை அழித்து, ஒரு சுபதினத்தில் முதன் முதலாக நிர்வாணப் பேற்றைப் பெறுவான்.

இக்கட்டத்தில் அவன் சோதாபன்ன (அருவியை அடைந்தவன்) - அதாவது நிர்வாணத்தை அடையும் அருவியுள் நுழைந்தவன் என அழைக்கப்படுகிறான். எல்லா விலங்குகளையும் களைந்தெறியாதபடியால் அவன் கூடியது ஏழுமுறை பூமியில் மீண்டும் பிறப்பான்.

நிர்வாணத்தின் இக் கணநேரத் தோற்றத்தின்விளைவாகப் புதிய தைரியத்தை வரவழைத்துக்கொண்டு யாத்திரீகன் துரித முன்னேற்றமடைந்து ஆழ்ந்த நுண்புலனை வளர்த்து, புலனிச்சை (காமராக) தீயஎண்ணம் (படிக்க) என்ற இன்னுமிரண்டு விலங்குகளைத் தளர்த்துவதால் ஒரு சாக்கதாகாமி (ஒருமுறை திரும்புபவன்) ஆகிறான். அவன் அரகத்துத் தன்மையை அடையாவிட்டால் மீண்டும் ஒரு முறைதான் பூமியில் பிறப்பான் என்றதனாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றான்.

பரிசுத்தநிலையின் மூன்றாம் கட்டத்தில்தான் அனாகாமி - ஒருபோதும் திரும்பிவராதவன் - தோன்றுகிறான். இப்போது அவன் முன் கூறப்பட்ட இரு விலங்குகளையும் முற்றாகத் தகர்க்கின்றான். அதன்பின் புலனுணர்ச்சி இன்பங்களின் மேல் அவனுக்கு நாட்டமில்லாதபடியால் மீண்டும் பூமிக்குத் திரும்புவதில்லை, மேலுலகங்களில் பிறப்பை எதிர்பார்ப்பதுமில்லை. இறப்புக்குப்பின் அவன் "தூய இருப்பிடங்கள்" (சுத்தா-வாச) என்ற சாதகமான பிரம்ம தலத்தில் மீண்டும் பிறந்து அரகத்து நிலையை அடையும்வரை இருப்பான்.

இப்போது இப்புனித யாத்திரீயன் தனது முயற்சியின் இதுவரை அடையா வெற்றியினால் உந்தப்பட்டுத் தனது கடைசி அடியை எடுத்து மற்ற விலங்குகளையும் தகர்த்தெறிய முற்படுகின்றான். உருவங்களின் ராச்சியம் (ரூப ராக), உருவமற்ற ராச்சியம் (அரூபராக), இறுமாப்பு (மான), அமைதியின்மை (உத்தச்ச), அறியாமை (அவிஜ்ஜா) என்பவையே இதில் எஞ்சிய விலங்குகளாகும். இவைகளை அழித்து அவன் ஒரு பரிபூரண ஞானி - ஒரு அரகத்து - ஒரு மேம்பட்டவன் - ஆக மாறுகிறான்.

நிறைவேற்ற வேண்டியவையெல்லாம், நிறைவேற்றபட்டன என்பதை அவன் இப்போது உணர்கிறான். அதோடு துன்பம் என்ற பெரிய பாரம் குறைந்ததையும், எவ்விதமான பற்றுக்களும் முற்றாக அழிக்கப்பட்டதையும், நிர்வாணப் பாதையைக் கடந்து விட்டதையும் உணர்கிறான். இம் மேம்பட்டவன் தெய்வீகத்தையடைந்தும் உயர்ந்த நிலையில் உலகின் கிளர்ச்சியான இச்சை, தீமை முதலியவற்றிலிருந்து வெகு தூரம் விலகியும், நிர்வாணத்தின் அளப்பரிய பேருவகையை உணர்ந்தும், திகழ்கின்றான். அப்போது முந்திய அரகத்துக்களைப்போல் இவ்வெற்றிக் களியாடலை நினைவு கூறுகிறான்.

"நல்லெண்ணம், விவேகம், ஒழுங்கு, பயிற்சிக்கப்பட்ட மனம், நன்னெறியை அடிப்படையாகக் கொண்ட உயர்நடத்தை இவைதாம் உயிர்களைப் பரிசுத்தமாக்குவனவே யன்றிச் செல்வமும் உயர் பதவியுமல்ல."

மேலைத்தேயக் கருத்தில் டி. எச். ஹக்ஸ்கி, "பௌத்தம் கடவுள் இல்லாதது. மனிதனுக்கு ஆன்மா ஒன்றில்லை எனக் கூறுகிறது. இறவாத்தன்மை பற்றிய நம்பிக்கையைத் தவறு என்கின்றது. வழிபாட்டுக்கும், தியாகத்துக்கும் எவ்வித பயனிறைவையும் மறுக்கிறது. கடைத்தேறலுக்குத் தன்னைத்தவிர வேறெதையும் நம்பாதே எனக் கூறுகிறது. உலகியல் சார்ந்தவற்றிலிருந்து எவ்வித உதவியையும் எதிர்பார்க்காதது. அதன் தொடக்கத் தூய்மையில் பணிவை வேண்டாதது. ஆயினும் அது உலகின் ஒரு பகுதியில் வியக்கத்தக்க வேகத்தோடு பரவியது. இன்றும் பௌத்தம் மனித குலத்தின் ஒரு பெரும் பகுதியினரின் மிகமுக்கிய சமயமாக உள்ளது."

முற்றும்.

* * * * *