மூச்சு தியானம்

மூச்சு தியானம்

தணிசாரோ பிக்கு

Breath Meditation

Thanissaro Bhikkhu

English version follows Tamil translation

நான்கு உன்னத மனோநிலைகள் - The Sublime Attitudes

நல்லெண்ணம்/அன்பு (பாலியில்: மெத்தா) - Loving Kindness

கருணை (கருணா) - Compassion

மற்றவர் வெற்றியைப் பாராட்டல் (முதிதா) - Sympathetic Joy or Appreciation

மன நிதானம்/அமைதி (உபேக்கா) - Equanimity

மூச்சைத் தியானப் பொருளாக வைத்துக் கொள்வதில் உள்ள ஒரு வசதி, நாம் எங்கு போனாலும் அது நம்முடனேயே இருக்கும். அதை நாம் எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக நாம் மூச்சு எப்போதும் நம்முடனேயே இருப்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். நமது 'உலகங்களில்' தொலைந்துவிடக் கூடாது. எந்த உலகங்களைப் பற்றிப் பேசுகிறோம்? யோசனை உலகங்கள். மனோசலன உலகங்கள். கடந்த காலப் பிரச்சனைகள் அல்லது நிகழ்காலப் பிரச்சனைகள் அடங்கிய உலகங்கள். ஆனால் நமது வாழ்வில் வெவ்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் மூச்சு எப்போதும் நம்முடனேயே இருக்கிறது, உங்களுக்காகக் காத்துக் கொண்டிருகிறது. எனவே மனத்தைச் சாந்தப் படுத்த நாம் எப்போது விரும்பினாலும் மூச்சு நம் அருகிலேயே உள்ளது.

நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மூச்சோடு எப்படிப்பட்ட உறவை நாம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான். மூச்சோடு நட்புணர்வான உறவு வைத்திருப்பது நல்லது. பல நேரங்களில் தியானப் பொருள்களின் மீது மக்கள் ஒரு முரண்பாடான உறவையே வைத்துக் கொள்கின்றனர். மூச்சோடு ஒரு முரண்பட்ட உறவை வைத்திருந்தால் அது சரிவராது. எனவே மூச்சு உயிர் சக்தியைக் கொடுக்கின்றது என்பதை நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். மூச்சு தான் உடலையும் மனத்தையும் ஒன்றாக வைத்திருக்கிறது. எனவே மூச்சு சரியான நிலையில் இருந்தால் வாழ்க்கையில் மற்ற விஷயங்களும் சரியான நிலையில் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மூச்சு வசதியாக இருக்கும் போது மனமும் ஒரு நல்ல இடத்தில் தங்கியிருக்கும். எனவே மூச்சைத் தெரிந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அதனுடன் நட்புணர்வான உறவை வைத்திருங்கள்.

சொல்லப்போனால் உன்னதமான நான்கு மன நிலைகளையும் மூச்சின் மீது காட்டி அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். மூச்சின் மீது இந்த நான்கையும் பழக்கிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் அவை வெறும் கருத்துக்களாகவே இருக்கும். நல்லெண்ணம்/அன்பு (பாலியில்: மெத்தா), கருணை (கருணா), மற்றவர் வெற்றியைப் பாராட்டல் (முதிதா), மன நிதானம்/அமைதி (உபேக்கா) ஆகிய நான்கு உன்னத மன நிலைகளையும் மூச்சிடம் காட்டலாம்.

இந்த நான்கில் ஒன்றைச் சமயத்திற்கேற்ப மூச்சோடு பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். நட்புணர்வைக் காட்டுவது நல்லது. மூச்சு சரியாக வந்து போகவில்லையென்றால் அதன் மேல் கருணை காட்டலாம். கஷ்டப்பட்டு மூச்சு விடும் இந்த நிலையை எப்படிச் சமாளிப்பது? மூச்சை வசதியாக்க நாம் எப்படி உதவுவது? அதை இருக்கும் நிலையிலேயே விட்டுவிட வேண்டும் என்பதில்லை. மூச்சு ஏன் வசதியாக இல்லை என்பதை விசாரிக்க வேண்டும். ஏதேனும் உடல் பிரச்சனையா அல்லது மனப் பிரச்சனையா? மூச்சு வசதியாகப் போய்வர அதற்குக் கொஞ்சம் இடம் கொடுங்கள். அதை இறுக்கி அடக்கி வைத்திருக்க வேண்டாம். அதற்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். நாம் மூச்சைத் தேவையானபடி மாற்றிக் கொள்ளச் சொல்லும் போது சிலர் ஜவ்வு மிட்டாயை இழுப்பதுபோல அதை இங்கேயும் அங்கேயும் இறுக்கி இழுத்துத் தள்ளிப் பார்ப்பார்கள். ஆனால் பெரும்பாலும் நாம் நீண்ட மூச்சு என்றோ அல்லது குறுகிய மூச்சு என்றோ அல்லது உடல் முழுவதும் பரவும் மூச்சு என்றோ நினைத்தாலே போதும். எண்ணத்தின் சக்தியால் மூச்சு நாம் நினைத்தபடியே நடந்து கொள்ளும்.

மற்றவர் வெற்றியைப் பாராட்டல் (முதிதா) என்பதைப் பொருத்தவரையில் அது மூச்சு நன்றாக வந்து போகும் போது அப்படிப்பட்ட மகிழ்வான எண்ணம் நம்முள் தோன்ற வேண்டும். மூச்சுக்குத் தேவையான இடம் தர வேண்டும். அது மேலும் நன்றாக இருக்க அதற்கு உதவ வேண்டும். மூச்சுக்கு வேண்டிய இடம் கொடுத்தால் அது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. வெளியூர் சென்றாலும், 'இன்று நான் வீட்டில் இல்லை' என்று நினைக்க வேண்டாம். தியானத்திற்கென நேரம் ஒதுக்குங்கள். தியானத்தை முடிக்கும் நேரத்தில் மூச்சை விட்டு விட்டுச் செல்ல வேண்டாம். அதையும் கூட்டிக் கொண்டே போக வேண்டும். மூச்சு வசதியாக இருக்கும் போது நாம் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களின் மத்தியிலும் நாம் வசதியாக மூச்சு விடுவதைக் கவனிக்கலாம். உங்களுக்கென ஒரு நண்பன் சிக்கல்களின் மத்தியிலும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு எப்போதும் உதவக் கூடியவன் அவன். எனவே உங்களுக்குச் செய்யக் கூடிய நல்லதை நினைத்து அதன் அருமை பெருமைகளைப் பாராட்ட வேண்டும். மூச்சு நன்றாக இருக்கும் போது நாம் உட்கொள்வதற்கு நம்மிடம் நல்லது ஒன்று இருக்கிறது.

நாம் மனதில் மகிழ்ச்சி உண்டாக்க அதற்குப் போஷாக்கான உணவை வாழ்க்கையில் தேடுகிறோம். வேறொரு மனிதரின் வார்த்தைகளை உட்கொள்கிறோம். அவர் நம்மைப் பற்றி நல்லது சொல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். அல்லது நாம் செய்யும் செயல்கள் நன்றாக அமைந்தால் அவற்றில் மனத்திருப்தி தேடுகிறோம். ஆனால் பல சமயங்களிலும் அப்படி நடைபெறுவதில்லை. எனவே மற்றவர் வார்த்தைகளை உட்கொள்ள நினைக்கும் போது, பொதுவாகச் சில சமயங்களில் அவர்களின் குப்பை கூலங்களை உட்கொண்டு விடுகிறோம். அஜான் லீ சொல்வது போல அவர்கள் துப்பிய வார்த்தைகளை உட்கொண்டு விடுகிறோம். ஆனால் மூச்சு வசதியாக இருக்குமானால் அச்சமயங்களில் அந்த மூச்சினால் உண்டாகும் வசதியான உணர்ச்சிகளை உட்கொள்ளலாம். அப்போது அவர்கள் துப்பிய வார்த்தைகள் (அவதூறான வார்த்தைகள்) தரையில் கிடக்கின்றன. நாம் அதை வழித்தெடுத்து விழுங்க வேண்டியதில்லை. பொதுவாகக் குப்பை இழுக்கும் இயந்திரத்தைப் (vacuum cleaner ) போல மனம் தன்னைச் சுற்றியுள்ள குப்பைகளையே தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அப்படி நடந்து கொள்ள அதனை விட்டுவிட வேண்டாம். ஏனென்றால் நாம் உட்கொள்ள வசதியான மூச்சினால் கிடைக்கும் ‘சாந்தம்’ இருக்கிறது.

நிதானத்தைப் (உபேக்கை) பொருத்தவரை சில சமயம் மூச்சை நம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் என்னதான் செய்தாலும் அது வசதியாவதில்லை. அந்நிலையில் தான் நாம் நிதானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரி, மூச்சு இருக்கும் நிலையிலேயே இருக்கட்டும். அதற்குச் சற்று அவகாசம் தருவோம். அதுவே தானாக வசதியாகிக் கொள்ளட்டும்.

ஆச்சரியம் என்னவென்றால் இது போல மூச்சின் மேல் நாம் காட்டும் உன்னதமான மனப்போக்குகள் மனத்தின் மற்ற பகுதிகளிடமும் நல்ல விதமாக அணுகும் வழிகளை வளர்த்துக் கொள்கிறது. மக்கள் தங்களைத் தாங்களே கடுமையாக விமர்சித்துக் கொள்வதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். ஏன் அவ்வாறு நடப்பதை நீங்களே கூடக் கவனித்து இருப்பீர்கள். கெடுதல் விளைவிக்கும் வகையில் அவர்கள் தங்களிடமே கடுமையாக இருப்பார்கள். ஆனால் மூச்சைப் பயன்படுத்தி மனத்தின் பல பகுதிகளையும் அணுகும் போது உங்களிடம் உபயோகிக்க ஒரு கருவி இருக்கிறது. உங்களுக்கு உதவ ஒரு நண்பன் அருகிலேயே இருக்கின்றான். மூச்சு, உங்களுக்கு எப்போது அன்பு காட்ட வேண்டும், எப்போது கருணை காட்ட வேண்டும், எப்போது மற்றவர் வெற்றி கண்டு மகிழ வேண்டும், எப்போது நிதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் கற்றுத் தருகிறது. இந்தத் திறமைகளையெல்லாம் மூச்சிடம் வளர்த்துக் கொள்வோமென்றால், அவற்றை நமது மற்ற மன உணர்ச்சிகளுடனும், பிறருடன் உள்ள நமது உறவுகளிலும் அதே திறமைகளைப் பயன்படுத்தலாம். எப்போது செயலில் ஈடுபடவேண்டும், எப்போது அடங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற மனத்தின் கருத்துக்களில் இந்தத் திறமைகளெல்லாம் இணைந்து விடுகின்றன. நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் வழிகளில் எப்படி நடந்து கொள்வது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். மூச்சுடன் இவ்வாறு பழகிக் கொள்ளும் போது இந்தத் திறமைகளெல்லாம் நம்மிடம் எப்போதும் இருக்கின்றன. இந்தப் பயிற்சியினால் நாம் கற்றுக் கொண்ட மென்மை, உலகத்தோடு நாம் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் போது பயன்படுகிறது. எனவே மூச்சைக் கவனிப்பது ஒளிந்து கொள்வதற்கு நாம் முற்படுகிறோம் என்று நினைக்க வேண்டாம். மூச்சோடு ஈடுபடும் போது நாம் திறமைகளை, உன்னதமான எண்ணப்போக்குகளை வளர்த்துக் கொள்கிறோம். இது நமது வாழ்க்கையின் பல இடங்களிலும் பயன்தருவதாகும். இதற்குப் போதுமான நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும்.

"Breath Meditation" by Thanissaro Bhikkhu

Transcribed from an audio recording

One of the convenient things about the breath as a meditation topic is that it is with you where ever you go. It is always there to tap into. Important thing is that you remember to tap into it. It is easy to get lost in the worlds. Worlds of thought. Wolds of emotion. Issues of the past or present. But the breath is always there, waiting for you. So whenever you feel the need to let the mind settle down it is always at hand. Important thing is the relationship you develop to the breath. To begin with it is good to be on friendly terms with it. All too often people develop an adversarial relationship with their meditation object. And if you are on bad terms with your breath you are really bad off. So keep reminding yourself this is the breath of life. This is what keeps the mind and body together and it always stands to reason that if the breath is in good shape other things will go well in life as well. In other words the body will feel good. The mind will have a good place to stay when the breath is comfortable. So learn to get to know the breath. Be on friendly terms with it.

In fact you can develop all four of those, what they call sublime attitudes, towards your breath. And it is good to have them right there in your breath. Because otherwise they become abstractions, they are words. I once heard about some people talking about the problems they had with equanimity but it was really the problems they had with the idea of equanimity. But if you can learn how to embody equanimity along with friendliness and compassion and what they call sympathetic joy with your breath or appreciation with your breath then you don't have to worry about your reactions to the abstract now. You start learning when which of the four is appropriate in your relationship to your breath. The attitude of friendliness is always a good one. Compassion can translate into when the breath is not going well. How do you deal with it. How do you help it. We don't just leave it on its own. Try to figure out why the breath is uncomfortable. is it a physical cause or is it more of a mental cause. And allow the breath some space to come in comfortably and go out comfortably. Don't keep it tight and constricted. And don't force it too much. When we talk about adjusting the breath some people tend to get down there and squeeze it here and squeeze it there and push it like it were a taffy - push it pull it. Many times all you have to do is think longer or think shorter or think all throughout the body. And simply the power of the thought will allow the breath to move in those ways.

As for appreciation or sympathetic joy that is when the breath is going well. Maintain it. Give it the space to keep on going well. Help it along to see if it can go better. And if you are taking time out of your daily schedule when you are away from the monastery don't begrudge the breath that I am out of town. Because remember that if you let the breath have its space then it can be healing both for the body and mind. And when you leave meditation don't leave the breath, take it with you. You find that when you are breathing comfortably and you go through the events of life you learn to breath comfortably even in the midst of difficult situation. You have got you ally here. Someone who can help you. So develop some appreciation for the breath for what it can do. So when then if you got a good breath going you got something good to feed on. Most often we go through our lives looking for nourishment to make the mind feel good. Feed on this persons words. We hope that person will praise us. Or feed on our projects going well. But a lot of times it just doesn't happen. So when you are trying to feed off what other people say we end up feeding off their garbage. As Ajahn Lee would say we are feeding off the words that they spit out.Whereas if the breath is going good you can sit there feeding of that comfortable feeling inside you. You look at their words that they are spitting out and they stay right there on the ground. You don't have to pick them up. You don't have to swallow them. You don't have to let the mind be the vacuum cleaner that it ordinarily is, picking up the dirt all around it. Because you have something better to feed off.

As for equanimity there are times when you really can't do much about the breath. No matter how much you work with it it doesn't seem to improve anything at all. That is when you have o develop your equanimity. Well ok, let us be with the breath as it is. Give it some time. Let it work itself out. And the funny thing is that when you develop these attitudes towards the breath you are also developing healthy attitudes for different parts of the mind. You will be amazed how people can be rough on themselves. Or maybe you wouldn't be amazed you can see it in yourself. In a way that is harmful. But when you use the breath as the medium the way you relate to different parts of the mind, different emotions coming up in the mind you have got your tool. You have got your friend near. And it has taught you when to be friendly, when to be compassionate, when to be sympathetic when to be appreciative and when to have equanimity. Once you have developed those skills with regards to the breath you can use them in your own inner relationships and in your relationships with other people. And the ideas of these qualities become embodied in skills that you develop in the mind the sensitivity that you developed when to be proactive when to be more passive. And what ways it is to be proactive that are really helpful both for yourself and the people around you. And when you learn to relate to the breath in this way it is always there to relate to that way. Get in touch with it and the relationships are there. The sensitivity that you developed inside is there so you can use it to dealing with the world around you. So don't thing of the breath as a place where you go to hide. Learning how you deal with the breath you develop skills you develop attitudes. Ways of relating that are useful in all areas of your life. If you take the time to pay it the attention it deserves.

* * * * *