நற்காட்சி
நற்காட்சி (சம்மா திட்டி)
Right View (Samma Ditti)
நற்காட்சி அட்டாங்க மார்க்கத்தின் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம் அதுவே மற்ற படிகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது தான். பௌத்த மார்க்கத்தைப் பயிற்சி செய்யும்போது அந்தப் பாதை தெளிவாகப் புலனாவதற்கு, நற்காட்சிகள் அளிக்கும் அறிவாற்றலும் (vision), நெறிமுறையும் தேவைப் படுகிறது. நற்காட்சியின் தலைமையில், மற்ற பிரிவுகளையும் சார்ந்து, நமது நடத்தையும், பயிற்சியும் சீராக இருக்குமானால் நாம் போக வேண்டிய இடத்திற்குச் சிரமமின்றிப் போய்ச் சேர்ந்து விடலாம்.
நற்காட்சி, பாதையின் முதற்படியாக இருப்பது ஏனெனில் பாதையில் நாம் முதல் அடி எடுத்து வைக்கும் முன், அதன் நோக்கத்தை நற்காட்சியின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நற்காட்சி நமக்கு வழிகாட்டியாகவும், உள்ளத்தின் இயக்குநராகவும், நாம் எங்கே துவங்கினோம், எங்கே போகிறோம், படிப்படியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக்குகிறது.
பொதுவாக, புத்தர் நற்காட்சி என்றால் நான்கு மேன்மையான உண்மைகளைப் புரிந்து கொண்டதன் சாரம் என்று விளக்குகிறார்: துக்கம், அதன் தோற்றம், அதன் முடிவு, முடிவுக்கு எடுத்துச் செல்லும் பாதை, இவைகளே அந்த நான்கு மேன்மையான உண்மைகள். பாதையைத் துவங்கு முன்னரே மனித நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு துவங்க வேண்டும். நமது வாழ்க்கை பூரண திருப்தி தருவதாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நிலையற்றது என்பதையும், அது துக்கத்தைச் சந்திக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். துக்கத்தை நாம் அறிவின் துணையோடு புரிந்து கொண்டு அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பதையும், வலியைக் குறைக்க முற்படுவது, கவனத்தை வேறு திசையில் திருப்பும் காரியங்களில் ஈடுபடுவது, சுறுசுறுப்பற்ற மறதி போன்றவற்றால் அதனிடமிருந்து தப்பித்து விலக முயற்சிப்பது போன்ற செயல்கள் பயன் தராது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இதை ஆழ்ந்து கவனிக்கும் போது ‘நாம்’ என்று நினைக்கும் ஐந்து கந்தங்களும் நிலையற்றவை, தொடர்ந்து மாற்றத்துக் குள்ளாவன என்பதை அறிய வேண்டும். அவை நமது பாதுகாப்புக்கும் நிலையான மகிழ்ச்சிக்கும் அடித்தலமாக இருக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பின் துக்கத்தின் காரணம் நமது உள்ளத்தில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். துக்கத்தை நமக்கு யாரும் தரவில்லை. புறத்திலிருந்து எவரும் நம்மீது அதைத் திணிக்கவில்லை. புறத்தில் உள்ள எதன் மீதும் நாம் குறை கூற முடியாது. நமது பற்றின் காரணமாகவும், பிடிப்பின் காரணமாகவும் நாமே துக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். துக்கத்தின் காரணம் நமது மனத்திலேயே இருப்பதை உணர்ந்தபின், அதன் விடுதலைக்கான திறவுகோலும் நமது உள்ளத்தில் தான் இருக்கின்றது என்று உணர வேண்டும். அந்தத் திறவுகோல் தான் அறியாமை மற்றும் பேராசையை மெய்ஞ்ஞானம் மூலம் வெற்றி கொள்ளும் திறவுகோலாகும். பின் மார்க்கத்தில் நுழையும் போது அட்டாங்க மார்க்கமென்னும் பாதையைத் தொடர்வதால் தான் துக்கத்தின் முடிவுக்குப் போக முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு நிலைத்திருக்க வேண்டும்.
நற்காட்சி என்பது நான்கு மேன்மையான உண்மைகளை உணர்வது என்று புத்தர் வரையறுப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அவரது சீடர்கள் தனது போதனைகளைத் தன் மீது உள்ள பற்றின் காரணமாகவோ, பக்தியின் காரணமாகவோ தொடரக் கூடாது என்று புத்தர் விரும்பினார். மாறாக, அவர்கள் மார்க்கத்தை நன்கு புரிந்து கொண்டதன் விளைவாகவே அதைத் தொடர வேண்டும் என்று விரும்பினார். மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட பின் மார்க்கத்தை அவர்கள் தொடர வேண்டும் என்று விரும்பினார்.
மார்க்கம், நற் காட்சியின் ஆரம்பக் கட்டத்தைப் புரிந்து கொண்டவுடனே துவங்குகிறது. பயிற்சி செய்யச் செய்ய மனம் வளர்ச்சி பெற்று நமது நற்காட்சி பற்றிய அறிவும் மேலும் மேலும் ஆழமாகிறது. பின் நாம் நற்காட்சியைத் திரும்பத் திரும்பப் பிரதிபலித்து மேலும் அதை விரிவாக்குகிறோம்.