பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - புத்த ஞாயிற்றின் உதயம்

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அத்தியாயம் 1. புத்த ஞாயிற்றின் உதயம்

The Buddha

பரத கண்டத்திலே நேபாள தேசத்திலே பிற்காலத்தில் உலகத்தின் மாபெரும் சமயத் தலைவராக வரவிருந்த சித்தார்த்த கௌதமர் கி.மு. 623ம் ஆண்டு வைகாசி மாதத்தின் நிறைமதி நன்னாளாகிய புண்ணிய தினத்திலே, சாக்கிய குல இளவரசராகத் திருவவதாரஞ் செய்தார்.

சகல அரச சுகபோகங்களில் வளர்க்கப்பட்ட கௌதமர், இளவரசருக்குரிய கல்வி அறிவைப் பெற்றார். உரிய பருவத்தில் மணம் முடித்து ஒரு மகனுக்கும் தந்தையானார்.

இவருடைய ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும் எல்லையில்லாக் கருணையும், அரண்மனையின் நிலையற்ற இலௌகீக இன்பங்களை அநுபவிப்பதற்குத் தடையாயிருந்தன. இவர் ஒரு துன்பத்தையும் அநுபவிக்காவிட்டாலும், துன்பமுறும் மானுடரைக் கண்டு மிகவும் மனம் இரங்கினார். சகல சுக போகங்களின் நடுவே அவர் வாழ்ந்த உலகை வியாபித்த துன்பத்தின் தன்மையை நன்குணர்ந்தார். கருணையுள்ளம் படைத்த இளவரசருக்கு அரச மாளிகையும் அதன் போகங்களும் உகந்ததாகப்படவில்லை. அவர் அரச வாழ்வைத் துறக்க வேண்டிய பருவம் அணுகிவிட்டது. புலனுகர் இன்பங்களின் பகட்டை உணர்ந்த கௌதமர், இலௌகீக இன்பங்களைத் துறந்து, தமது 29வது வயதில் துறவிகளின் எளிய உடையாகிய துவராடையைத் தரித்து, உண்மையையும் மன அமைதியையும் தேடித் தன்னந் தனியனாகப் புறப்பட்டார்.

இது வரலாறு கண்டறியாத ஒரு மாபெருந் தியாகம். ஏனெனில், அவர் தன்னைத் தியாகம் செய்தது, எல்லா நலன்களும் நிறைந்த இளமைப் பருவத்தேயல்லாமல், நரை திரை நிறைந்த முதுமையிலன்று; நிறைந்த செல்வச் செழிப்பிலேயல்லாமல் வறண்ட வறுமையிலன்று. பண்டைக் காலத்தில் துறவற வாழ்க்கையே வீடு பேற்றுக்கு வழி என நம்பப்பட்டது. அதற்கேற்பக் கௌதமரும் எல்லா விதமான கடும் தவங்களையும் நோன்புகளையும் மேற்கொண்டார். வழிபாட்டுக்கு மேல் வழிபாடும், நோன்புக்கு மேல் நோன்புமாக மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளில் ஆறு வருடங்கள் ஈடுபட்டார்.

இதனால் அவரது உடம்பு வற்றியுலர்ந்து ஓர் எலும்புக்கூடாகியது. அவர் எவ்வளவுக்குத் தன் உடம்பை வருத்தினாரோ அவ்வளவுக்கு அவருடைய குறிக்கோள் அவரிடமிருந்து விலகியது. அவர் கடுமையாக வருத்தி அனுசரித்த நோன்புகள் எவ்விதப் பயனையும் அளிக்கத் தவறிவிட்டன. உடல் நலிவையும் மனத் தளர்ச்சியையும் கொடுக்கும் இந்த நோன்புகளினால் தம்மை வருத்துதல் எவ்விதப் பயனையும் தராதென்னும் உண்மையைத் தம் அநுபவ வாயிலாகத் தெளிவாகக் கண்டுகொண்டார்.

இந்த அருமையான அநுபவத்தால் தெளிவடைந்த கௌதமர், முடிவாகத் தன் குறிக்கோளையடைய, புலனுகர்ச்சியில் திளைத்தல், தன்னை ஒறுத்தல் ஆகிய இரு அந்தங்களையும் தவிர்த்து ஒரு வழியைப் பின்பற்ற உறுதிகொண்டார். முன்னர் கூறப்பட்ட புலனுகர்ச்சி ஆத்மீக வளர்ச்சியைத் தடை செய்யும்; பின்னர் கூறப்பட்ட தன்னை ஒறுத்தலாகிய வழி புத்தியை மந்தமாக்கும். கௌதமர் தாமாகவே கண்டுபிடித்த புதியவழி நடுவழி அல்லது 'மஜ்ஜிமா பட்டிப்பதா' என்று பெயரிடப்பட்டது. இதுவே, பின்னர் அவர் செய்த போதனைகளின் முக்கியமான அம்சமாக இருந்தது.

ஒரு மங்களமான காலைப் பொழுதில், கௌதமர் ஆழ்ந்த நிஷ்டையில் மூழ்கியிருக்கும் போது, எந்தவிதமான தெய்வீக சத்தியின் வழிகாட்டலோ, உதவியோ இல்லாமல், தம் சுய முயற்சியினாலும் ஞானத்தினாலும் தம்மிடமிருந்த களங்கங்களை வேரறக் களைந்தெறிந்து தம்மைப் பரிசுத்தராக்கிக் கொண்டார். அத்தோடு இப்பிரபஞ்சத்தின் உண்மை நிலையை உணர்ந்து சித்தார்த்த கௌதம பிரான் தமது முப்பத்தைந்தாவது வயதில் எவராலும் இலகுவில் அடைய முடியாத பரிபூரண ஞானம் உதிக்கப் பெற்று ஒரு புத்தரானார். கௌதமர் பிறக்கும்பொழுது புத்தராக, விளிப்படைந்த அல்லது ஞானம் பெற்ற ஒருவராக (அதாவது ஞானம் பெற்றவராக)ப் பிறக்கவில்லை. ஆனால் அவர்தம் சொந்த முயற்சியினாலேயே ஒரு புத்தரானார். எல்லா நற்குணங்களின் திருவுருவாக அமைந்த புத்ததேவர் தமக்கு இயற்கையில் அமைந்திருந்த ஆழ்ந்த அறிவோடும், அளவு கடந்திருந்த எல்லையற்ற கருணையோடும் அல்லலுற்ற மக்களுக்குத் தமது நற்போதனைகளை வாரி வழங்கினார். அவர் தமது விலைமதிப்பற்ற வாழ்நாளின் எஞ்சிய பகுதியை மனித குலத்துக்குத் தமது பெரிய போதனைகளாலும் அரிய சாதனைகளாலுஞ் சேவை புரிவதற்கென அர்ப்பணித்தார்.

தமது நலம் எதுவும் கருத்திலின்றி, இடையறாது நாற்பத்தைந்து ஆண்டுகள் மிக வெற்றிகரமாகத் தொண்டாற்றித் தமது போதனையையே குருவாக ஏற்றுக் கொள்ளும்படி தம் சீடருக்குப் பணித்து, மனிதனாகப் பிறந்த எவரையும்போல் எண்பதாவது வயதில் நிலைபெற்ற உலகவியலின்படி இவ்வுலகை நீத்துப் பரிபூரண நிர்வாணப் பேற்றையெய்தினார்.

புத்தர் ஒரு மானுடப் பிறவி. அவர் மனிதனாகவே பிறந்தார். மனிதனாகவே வாழ்ந்தார். அவரது வாழ்வும் பிற மனிதருடைய வாழ்வைப் போலவே முற்றுப்பெற்றது. அவர் மனிதனாகப் பிறந்தாலும், உயர்வும் ஒப்பும் இல்லாத ஒரு தனிப் பெரும் மனிதனாக (ஆச்சரிய மனுசா) இருந்தார். ஆனால் அவர் ஒரு போதும் தம்மிடம் தெய்வீகம் இருந்ததாகக் கருதவில்லை. இந்த முக்கிய விஷயத்தை வலியுறுத்தித் தம்மை ஒரு மரணமில்லாத் தெய்வீகப் பிறவி என்று எவரும் தப்பெண்ணம் கொள்ளவும் அவர் இடங்கொடுக்கவில்லை. அதிட்டவசமாக, யாரும் புத்தரை என்றைக்கும் கடவுளாகப் போற்றவில்லை. எனினும் புத்தரைப் போலக் கடவுள் நம்பிக்கை இல்லாதவரும், ஆனால் அவரைப்போல் "கடவுள் தன்மையுடையவருமாகிய" ஒரு மதபோதகர் என்றைக்கும் இப்பூவுலகில் இருந்ததில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலர் எண்ணுவதுபோல், புத்தர் இந்துமதக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமோ அல்லது தமது சொந்தக் கடைத் தேறலினால் மற்றவரை இரட்சிக்கும் ஆண்டவரோ அல்லர். "ஒருவனின் தூய்மையும் களங்கமும் அவன் மேல் தான் தங்கியுள்ளன. ஆனபடியால், சீடர்களுடைய விடுதலை அவர்களிலேயே தங்கியுள்ளது," எனப் புத்தர் தம் சீடர்களிடம் வற்புறுத்திக் கூறியுள்ளார். தன்னம்பிக்கையையும் சுயமுயற்சியையும் வலியுறுத்திய அவர், தமக்கும் தம்மைப் பின்பற்றுவோருக்கும் உள்ள தொடர்பை விளக்கித், "ததாகதர்கள் ஆசிரியர்களாக மட்டுமே இருப்பார்கள். எனவே நீங்களாகவே தான் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்," என்று விளக்கமாகக் கூறினார்.

புத்தர்கள் எமக்குப் பாதையை மாத்திரம் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்வழியே சென்று பரிசுத்த நிலையைப் பெறுவது எம்மைப் பொறுத்தது. "இரட்சிப்புக்காக இன்னொருவரை நம்புவது எதிர்மறைவழி; ஆனால் தன்னைத் தானே நம்புவது நேர்வழி. எதற்கும் இன்னொருவரை நம்பியிருப்பது ஒருவன் தன்னுடைய ஆற்றலை வேறொருவனிடம் கொடுப்பதை ஒக்கும்."

தங்களையே எதற்கும் ஆதாரமாகக் கொள்ளவேண்டுமென்று தம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்ட புத்தர் பெருமான், பரி நிர்வாண சுத்தத்தில் இங்ஙனம் கூறினார்: "உங்களுக்கு நீங்களே தீவுகளாக (புகலிடமாக) இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே அடைக்கலமாக இருங்கள். மற்றவர்களிடம் அடைக்கலம் புக வேண்டாம்." இந்தப் பொருள் நிறைந்த வாக்கியங்கள் ஒருவனை உயர்த்துகின்றன. இவை, இலட்சியத்தை அடைய சுயமுயற்சி எத்துணை அத்தியாவசிய மானதென்பதையும், இரட்சகர்கள் மூலம் மீட்சி பெறுவது எவ்வளவு பகட்டான பயனற்ற செயல் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. மேலும் அர்த்தமில்லாத தியாகங்களாலும், பயன்கிட்டா வழிபாடுகளாலும், கற்பனைத் தெய்வங்களின் சினமாற்றுதலாலும் பின்பிறவியில் அநுபவிக்கவிரும்பும் கற்பனையின்பங்களை நாடுவது எவ்வளவு பயனற்றது என்பதையும் விளக்குகின்றன.

மேலும் உண்மையில், திருவருள் கைகூடிய மனிதன் ஒருவனுக்கு மாத்திரமே உரிமையென்று அமையாத பௌத்த நிலையின் தனியுரிமையைப் புத்தர் பெருமான் என்றுமே கொண்டாடியது இல்லை. மனிதனாகப் பிறந்த எவனும் அடையக் கூடிய மிகவுயர்ந்த பரிபூரண நிலையை அவர் அடைந்தார். ஆசிரியரின் விரல் மடித்த கையினுதவி யில்லாமலே, அந்தப் பரிபூரண நிலையையடையக் கூடிய ஒரேயொரு நேர்வழியை அவர் வெளிப்படுத்திக் காட்டினார். புத்ததேவரின் போதனையின்படி ஏற்ற முயற்சி செய்பவர்கள் அந்த மிக மேன்மையான பரிபூரண நிலையை யடைய விரும்பலாம்.

புத்தர், மானுடரைக் கொடிய பாவிகள் எனக் கண்டிக்காது, அவர்கள் கருவிலே உளத் தூய்மையுடையவர்கள் எனக் கூறி, அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தார். உலகம் கொடியதன்று; ஆனால் அறியாமையால் மயக்கப்பட்டிருக்கின்றது என்பதே அவரது அபிப்பிராயம். தம்மைப் பின்பற்றுவோரை மனந்தளரவிடாமலும், அம்மேலான நிலையைத் தமக்கென்று வைத்துக்கொள்ளாமலும், எல்லோரையும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, தம்மைப் பின்பற்றி அவர்களும் உயர்ந்த புத்தநிலையை அடையவேண்டுமென ஆவல் கொண்டார். ஏனெனில் எல்லோரிடத்தும் புத்த தன்மை மறைந்துள்ளது, அதாவது எல்லோரும் புத்தராகும் உள்ளாற்றலை உடையவர்களே.

புத்தர் என்னும் நிலையை அடைய விரும்பும் ஒருவன் போதிசத்துவன் எனப்படுகிறான். போதிசத்துவன் என்றால் ஞானம் உள்ளவன் என்று அர்த்தம். இந்த ஆணவமுனைப்பு நிறைந்த உலகுக்கு எப்பொழுதாவது வழங்கப்பட்டவற்றுள், இப்போதிசத்துவ இலட்சியம், மிக அழகானதும் அதிக மேன்மையானதும் ஆகிய வாழ்க்கை நெறியாகும். ஏனெனில் சேவையும் தூய்மையும் நிறைந்த வாழ்வைவிட உயர்வானது வேறு எதுவுமில்லை.

புத்த பெருமான் மானுடனாகவே புத்த நிலையை அடைந்து, மனிதனுள் மறைந்திருக்கும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தன்மைகளையும், மனிதனின் படைப்பாற்றலையும் உலகுக்குப் பறை சாற்றினார். கண்ணுக்குப் புலப்படாதவரும் எல்லாம் வல்லவருமாகிய ஒரு கடவுளை மனித குலத்தின் விதியைக் கட்டுப்படுத்த அமர்த்தி, மனிதனை மேலானவொரு சத்திக்குக் கீழ்ப்படியச் செய்யாமல், மனிதகுல மேன்மையை மேம்படச் செய்தார். ஒருவன் தனக்குப் புறத்தேயுள்ள கடவுளாலேயோ, அல்லது தூதுசெல்லும் மதகுருமார்கள் மூலமாகவோ தன் ஆத்தும ஈடேற்றத்தையும், தூய்மையையும் அடைவதில்லையென்றும், அவன் தன் சொந்த முயற்சியினாலேயே அவற்றைப் பெறக்கூடும் என்றும் புத்தபிரான் கூறினார். அவர்தாம் இந்த ஆணவமுனைப்புடைய உலகுக்குத் தன்னலமற்ற சேவையாகிய உத்தம இலட்சியத்தைக் கற்றுக் கொடுத்தார். அவர்தாம், மனிதகுலத்துக்கு இழிவு செய்யும் சாதி முறையை எதிர்த்தெழுந்தார். மனித குலத்தின் சமத்துவத்தைப் போதித்து, எல்லோரும் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் மேன்மை பெறச்சம வாய்ப்புக்களை அளித்தார்.

உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, ஞானியோ, கொலைகாரனோ என்ற பாகுபாடற்று, எவரும் மனந்திருந்தி ஒரு புதிய வாழ்க்கையை நடாத்தப் பிரயத்தனம் செய்வார்களானால், அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியும், செழிப்பும் காத்திருக்கும் என்று அவர் கூறினார்.

பகவான் பக்குவ நிலை அடைந்த ஆண் பெண் ஆகிய இரு பாலாருக்கும் சாதி, வர்ண, வகுப்புப் பேதமில்லாத ஒரு பொதுவான பிரமச்சரிய சங்கத்தை ஜனநாயக முறையில் நிறுவினார். அவர் தன்னைச் சார்ந்த மக்களைத் தன் கொள்கைகளுக்கோ அல்லது தனக்கோ அடிமையாக்காமல் அவர்களின் சொந்தச் சிந்தனையின்படி நடக்க முழுச் சுதந்திரம் வழங்கினார். துன்பமுற்றோருக்கு ஆதரவான சொற்களால் ஆறுதலளித்தார். ஆதரவற்ற நோயாளிகளைப் பராமரித்தார். துறக்கப்பட்ட ஏழைகளுக்கு உற்றுழி உதவிசெய்தார். மாயையினால் பீடிக்கப் பட்டவர்களின் வாழ்க்கையை மேன்மைப்படுத்தி, குற்றவாளிகளின் களங்கமான வாழ்க்கையைப் பரிசுத்தப்படுத்தினார். பலவீனமானவர்களை ஊக்கப்படுத்தியும், பிரிந்தவர்களைச் சேர்த்து வைத்தும், அறிவில்லாதவருக்கு அறிவொளி தந்தும், மறைபொருள்களைத் தெளிவுபடுத்தியும், வழிதப்பினோரை நெறிப்படுத்தியும், சான்றோரைக் கௌரவித்தும் மானுட குலத்துக்குப் பெருஞ்சேவை புரிந்தார். செல்வரும், வறியவரும், ஞானிகளும், குற்றவாளிகளும் ஆகிய எல்லோரும் அவரை ஒரேமுகமாக நேசித்தனர். செங்கோல், கொடுங்கோல் அரசர்கள், புகழ்பெற்ற, அறியப்படாத இளவரசரும், பட்டவர்த்தனரும், வள்ளல்களும், உலோபிகளும், கர்வமான அறிஞரும், பணிவான புலவரும், அநாதரரும், ஏழைகளும், தாழ்த்தப்பட்ட தோட்டிகளும், கொடிய கொலைஞரும், வெறுக்கத்தக்க தாசிகளும் என்ற இவர்களெல்லோரும் புத்தரின் ஞானமும் கருணையும் நிறைந்த வார்த்தைகளால் நன்மையடைந்தனர்.

இவரின் உயரிய முன்மாதிரி, மற்றவர்களுக்கெல்லாம் ஊக்கமளித்தது. இவருடைய சாந்தமும் அமைதியும் நிறைந்த திருமுக மண்டலம், பத்தி நிறைந்த கண்களுக்கு ஆறுதலளிக்கும் காட்சியாக இருந்தது. சமாதானம் சகிப்புத்தன்மை பற்றிய புத்தருடைய செய்தி, எல்லோராலும், கூறுதற்கரிய ஆனந்தத்தோடு வரவேற்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்டுப் பின்பற்றி நற்பயன் பெற்றவர் ஒவ்வொருவருக்கும் ஈடில்லாப் பயனளித்தது.

எங்கெங்கு அவருடைய போதனை ஊடுருவினவோ அங்கங்குள்ளோர் மனத்திலெல்லாம் அது ஒரு அழியா முத்திரையை விட்டுச் சென்றது. புத்தசமயம் பரவியதேசங்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் இவருடைய உத்தம போதனைகளே. இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், லாவோஸ், திபெத், சீனா, மங்கோலியா, கொரியா, யப்பான் முதலிய பௌத்த நாடுகள் புத்த சமயத்தின்மடியிலே வளர்ந்தன. புத்த தேவர் மறைந்து 2500 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தாலும் அவரது ஈடும் எடுப்புமில்லா விசேட ஆளுமை

இன்னும் அவரைப் பற்றி அறிவோரிடத்திலெல்லாம் பெரும்பயனை விளைவிக்கின்றது.

புத்ததேவரின் எஃகு அனைய உறுதிப்பாடு, ஆழ்ந்தகன்ற அறிவு, உலகை வியாபித்த அன்பு, எல்லையற்ற தன்னலமற்ற சேவை, வரலாற்றுப் புகழ்பெற்ற துறவு, பரிபூரணத் தூய்மை, பிறரைக் கவரும் ஆளுமை, தம் போதனையைப் பரவச் செய்ய அவர் கையாண்ட உன்னதமுறைகள், அவரது இறுதி வெற்றி ஆகிய இவைகளெல்லாம் இன்றைய உலகின் ஐந்தில் ஒரு பங்கு சனத்தொகை தங்களுடைய மேலான சமயப் போதகராகப் புத்ததேவரை ஏற்றுக்கொள்ளத்

தூண்டின.

புத்த பிரானுக்குப் புகழ்மாலை சூட்டுகையில் பிரபல இந்தியத் தத்துவஞானி, சர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பின்வருமாறு கூறினார்: "மனிதகுலத்தின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உண்டாக்கிய விளைவினைப் பொறுத்தவரையில், கீழ்த்திசையில் வேறெவருக்கும் குறையாத ஒரு மாபெரும் சிந்தனைச் சிற்பியாகக் கௌதம புத்தரை நாம் காண்கின்றோம். மேலும், அவர் மற்றெவரிலும் பார்க்க அகலத்திலும் ஆழத்திலும் குறைவில்லாத பற்றினையுடைய மதமரபு ஒன்றினை நிறுவியவராக மதிப்போடு கருதப்படுகின்றார். அவர் உலகின் சிந்தனை வரலாற்றிலும், நாகரிகமடைந்த மக்களின் முதுசொத்திலும் தனியொருவராக விளங்குகின்றார். ஏனெனில் அறிவாற்றலையும் மனமார்ந்த ஒழுக்கம், ஆத்மீக நுண்ணறிவு முதலிய அம்சங்களைக் கொண்டு மதிப்பிடும்போது, புத்ததேவர் வரலாற்றின் ஒரு மாபெரும் மனிதர் என்பதில் ஐயமில்லை."

தனது "வரலாற்றில் மாபெரும் மனிதர் மூவர்," என்ற நூலில் புகழ்பெற்ற ஆங்கிலப் பேரறிஞரும் எழுத்தாளருமாகிய எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: "புத்தர் ஒரு புராணக் கதாபாத்திரம் அல்லர். அவர் எளிமை, பத்தி, தனிமை ஆகிய பண்புகளுக்கு உறைவிடமாயிருந்து அறமாகிய ஒளியைப் பெறப் போராடும் ஒரு மனிதப் பிறவியாகவே காணப்படுகிறார். உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்தி ஒன்றையும் அவர் மனிதகுலத்துக்கு அருளினார். எங்கள் சிறந்த நவீன கருத்துக்கள் பல அதனோடு ஒத்திருக்கின்றன. எல்லாத் துயரங்களும் அதிருப்திகளும் சுயநலத்திலிருந்தே உற்பத்தியாகின்றன என புத்ததேவர் போதித்தார். ஒருவன் மனச்சாந்தி யடையவேண்டுமானால் அவன் தனக்காகவும் தனது ஐம்புல ஆசைகளுக்காகவும் வாழ்வதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின் அவன் ஒரு உன்னத புருடராகத் தோன்றுகிறான். கிறீஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே, தன்னை மறத்தல்பற்றி பல்வேறுவிதத்தில் கூறியுள்ளார். சில விதங்களில் புத்ததேவர் எமக்கும், எம்முடைய தேவைகளுக்கும் கிட்டியவராகிறார் எனக் கருதலாம். கிறீஸ்துவைவிட, எமது தனி முக்கியத்துவம், சேவைகள் ஆகியவை பற்றியும் சுயநித்தியவாழ்வின் பிரச்சினையைப் பற்றியும் மிகத் தெளிவான கொள்கையுடன் இருந்தார்."

"அவர் போதித்த எல்லா நற்குணங்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார்.... அவரது தூய வாழ்க்கையில் ஒரு கறையேனும் படியவில்லை," என சாந்த ஹில்லாயர் குறிப்பிடுகின்றார்.

பாஸ்போல், "அவரை எவ்வளவு அதிகமாக அறிகிறேனோ, அவ்வளவுக்கு அதிகமாக அவரிடம் பத்திகொள்கிறேன்," என்கிறார்.

"நான் எவ்வளவு அதிகமாக அவரை அறிகிறேனோ அவ்வளவுக்கு அதிகமாக அவரிடம் பத்திகொள்கிறேன். எவ்வளவு அதிகமாக அவரிடம் பத்தி செலுத்துகிறேனோ அவ்வளவு அதிகமாக அவரை அறிந்துகொள்ளுகிறேன்," என்று புத்தரின் ஒரு பணிவான பத்தர் கூறுவார்.

* * * * *