எரி அனல் அறவுரை

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

எரி அனல் அறவுரை [1]

ஆதித்த பரியாய சுத்தம்

(எரியும் அனல் பற்றிய சூத்திரம்)

நான் இவ்வாறு கேள்வியுற்றேன்.

பகவான் ஒருமுறை கயாவிலுள்ள காயசீஷ என்ற இடத்தில் ஆயிரம் பிக்குகளோடு வாழ்ந்துவந்தார். இவ்வாறு பிக்குகளுக்கு அறவுரை புகன்றார்: பிக்குகளே, எல்லாம் எரிகிறது. என்ன எல்லாம் எரிகிறது?

பிக்குகளே கண் எரிகிறது, கண்ணால் காணும் உருவங்களெல்லாம் எரிகின்றன. காட்சி உணர்வு எரிகிறது, காட்சிக் குறிப்பு எல்லாம் எரிகிறது. குறிப்பினால் எழும் இன்பமும் துன்பமும் நொதுமலுமான காட்சி வேதனைகள் எல்லாம் எரிகின்றன. எதனால் எப்படி எரிகின்றன? காமம், வெகுளி, மயக்கம் என்ற அனல் பற்றி எரிகின்றது. பிறப்பு, மூப்பு, சாக்காடு, அவலக்கவலைக்கையாறு என்பவற்றால் எரிகிறது.

காது எரிகிறது. சத்தங்கள் எரிகின்றன. புலன் எரிகிறது. காதினால் வரும் குறிப்பு எரிகிறது. காதினால் வரும் குறிப்பிலிருந்து வரும் இன்பம் துன்பம் நொதுமல் என்ற வேதனைகள் எரிகின்றன. அதுவும் எரிகிறது. எதனால் எரிகிறது? காமத் தீயால் ........... எரிகிறது.

மூக்கு எரிகிறது. கந்தம் எரிகிறது. கந்தப்புலன் (உணர்ச்சி) எரிகிறது. கந்தக் குறிப்பு எரிகிறது. கந்தக் குறிப்பு காரணமாக எழும் இன்பமும் துன்பமும் நொதுமலுமான கந்த வேதனை எரிகிறது. எதனால் எரிகிறது? காமத்தினால் ...........எரிகிறது.

நாக்கு எரிகிறது. சுவை எரிகின்றன. சுவைப்புலன் எரிகிறது. சுவைக் குறிப்பு எரிகிறது. சுவைக் குறிப்பினால் எழும் இன்பம் துன்பம் நொதுமல் ஆன வேதனை எரிகிறது. எதனால் எரிகிறது? காமத் தீயால் ........... எரிகிறது.

உடல் எரிகிறது. பரிசப் பொருள் எரிகிறது. பரிசப்புலன் எரிகிறது. பரிசக் குறிப்பு எரிகிறது. பரிசக் குறிப்பிலிருந்து தோன்றிய இன்பம் துன்பம் நொதுமல் ஆன வேதனை எரிகின்றன. எதனால் எரிகிறது? காமத் தீயால் ........... எரிகிறது.

மனம் எரிகிறது. மனக்கருத்துக்கள் எரிகின்றன. மனப்புலன் எரிகிறது. மனக் குறிப்பு எரிகிறது. மனக் குறிப்பிலிருந்து எழும் இன்பம் துன்பம் நொதுமல் ஆன வேதனை எரிகின்றன. எதனால் எரிகிறது? காமம், குரோதம், மோகம் என்பவற்றால் எரிகின்றது. பிறப்பு, மூப்பு, சாக்காடு, அவலக்கவலைக் கையாறு என்பவற்றால் எரிகிறது.

பிக்குகளே, கல்வியறிவுள்ள உயர் சீடன் இவ்விஷங்களை இவ்வாறு காணும்போது கண் விஷயத்தில் நிராசை கொள்கிறான். காணும் பொருள்கள் விஷயத்தில் நிராசை கொள்கிறான். காணும் புலன் விஷயத்தில் நிராசை கொள்கிறான். காட்சிக்குறிப்பு விஷயத்தில் நிராசை கொள்கிறான். இக்குறிப்பினால் எழும் இன்பம் துன்பம் நொதுமல் என்ற வேதனைகள் விஷயத்தில் நிராசை கொள்கிறான்.

காது விஷயத்தில், சத்த விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்...........மூக்கு விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்........... கந்தம் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான். ...........நாக்கு விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான். ...........சுவை விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்............உடல் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்............பரிசிக்கும் பொருள் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்........... மனம் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான்...........மனக் கருத்துகள் (கற்பனை முதலியன) விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான். மனப்புலன் விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான். மனக் குறிப்பு விஷயத்தில் நிராசை கொள்ளுகிறான். மனக் குறிப்பிலிருந்து எழும் இன்பம், துன்பம், நொதுமல் என்பன விஷயமாக நிராசை கொள்ளுகிறான்.

நிராசை காரணமாகப் பற்றற்றவனாகிறான். பற்றின்மை காரணமாக விடுதலை பெறுகிறான். விடுதலை பெற்றதும் 'விடுதலை பெற்றேன்' என்ற அறிவைப் பெறுகிறான். அப்போது 'பிறப்பு ஒழிந்தது. தூய வாழ்வு வாழ்ந்தேன். செய்ய வேண்டியது செய்து விட்டேன், இவ் விஷயமாக மேலும் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை', என்று உணருகிறான்.

பகவான் இதைக் கூறினார். பிக்குகள் மகிழ்ந்து அவர் கூறிய சொற்களைக் கேட்டு ஆனந்தமடைந்தனர்.

இந்த உபதேசத்தைக் கேட்ட போதே ஆயிரம் பிக்குகளின் மனம் ஆசவங்களிலிருந்து விடுபட்டுப் பற்று நீங்கின.

(சம்யுத்த நிகாய XXXV, 28)

* * *

[1] டி. எஸ். எலியட் எழுதிய The Waste Land என்ற கவிதையின் மூன்றாம் பகுதி 'எரி அனல் அறவுரை' என்ற தலையங்கத்தைக் கொண்டுள்ளது. 308 வது வரி 'எரிகிறது, எரிகிறது, எரிகிறது, எரிகிறது' என்பது. அதன் குறிப்பில் எலியட் பின்வருமாறு எழுதுகிறார், 'புத்தருடைய "எரி அனல் அறவுரை" யின் பாடம் முழுவதும் அதன் சிறப்பு நோக்கி (மலைப் பிரசங்கத்தோடு ஒப்பிடத்தக்கது) அதிலிருந்தே இந்தச் சொற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதை காலஞ் சென்ற ஹென்றி கிளார்க் வாறன் என்பவருடைய Harvard Oriental Series - Buddhism in Translation என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. மேனாட்டில் புத்தசமய ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் திரு. வாறனும் ஒரு முன்னோடி.'

இங்கே தரப்படும் சுத்த பிடகத்தின் சம்யுத்த நிகாயம் மூல கிரந்தத்திலிருந்து இந் நூலாசிரியரால் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டது. வாறன் மொழி பெயர்த்தது விநய பிடகத்தைச் செர்ந்த மஹாவக்கத்திலுள்ள கதையைச் சேர்ந்தது.