கிணற்றில் விழுந்த மனிதன்
மனிதனாக உயிர் வாழ்தல் பற்றிய பௌத்த உவமானம்.
பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
The man in the well
Parable of our existence - A Buddhist simile on what it is to be human.
Adapted from a Dhamma talk by Ajahn Sona
English version follows the Tamil translation.
பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கின்றான் ஒரு மனிதன். உச்சிக் கதிரவனின் சுடும் கிரணங்கள் அவனை வாட்டுன்றன. நாக்கு வறண்டு போன அவனுக்குத் தாகம் தாங்கவில்லை. தூரத்தில் அவன் கண்ணுக்கு மரங்கள் நிறைந்த ஒரு வனம் தென்படுகிறது. மெதுவாகப் பாலைவனத்தைத் தாண்டி அந்த வனத்தை நோக்கி நடக்கின்றான். காட்டின் எல்லையை அடைந்து விட்டஅவனுக்குள் ஒரு மகிழ்வு கலந்த நிறைவு தோன்றுகிறது. கொஞ்சம் நிழல் இருக்கும் இடத்தில் சரிகிறான். சற்று ஓய்வெடுத்த பின் மனதை ஒரு நிலைப்படுத்தி யோசனையில் ஈடுபடுகிறான். வனத்தின் விளிம்பில் இருந்துவனத்தின் உள்ளே செல்ல விரும்பி நடக்கத் தொடங்குகிறான்.
துவக்கத்தில் அதிக மரங்கள் இல்லை. எனினும் உள்ளே போகப் போகக் காடு அடர்த்தியாகிறது. கீழே கிடக்கும் மரக் கட்டைகளைத் தாண்டித் தாண்டிச் செல்ல வேண்டி யிருக்கிறது. மெதுவாக முன்னேறுகிறான். ஆனால் அவனுக்கு உணவுப் பொருள் ஒன்றும் கண்ணில் தென்பட வில்லை. மேலும் அவ்விடத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டி யிருக்கிறது. நடக்க நடக்கக் கல்லும் முள்ளும் தொல்லை தருகின்றன -தோலில் சிராய்ப்பு, முல்லில் சிக்கிய துணி கிழிகிறது, கால் விரல்கள் மறைந்துள்ள வேர்களில் சிக்கித் துன்புறுத்துகின்றன. அவனுக்கு வியர்வை கொட்டுகிறது. மரக்கட்டைகளைத் தாண்டும் போது சில சமயம் கீழே விழுகிறான். காட்டுக்குள் செல்லச் செல்லஅவ்வப் போது புதர்களின் பின்னும் மரங்களின் பின்னும் விலங்குகளின் மஞ்சல் நிறக்கண்கள் ஒளி விளக்குகளைப் போலப் பளிச்சிடுகின்றன. அது என்ன பெரிய விலங்கு? விலங்குகள் நடமாடும் சப்தம் கேட்கிறது. கொஞ்சம் மிரண்டு பயந்து விடுகிறான்.
சற்று நேரம் கழிந்தபின் சூரியனும் மறைந்து இருட்டத் தொடங்குகிறது. இருட்டுவதற்கு முன் இரவு தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். சற்றுப் பீதியில் உள்ள அவனுக்கு ஒரு திறந்த வெளி தென்படுகிறது. அங்கு ஒரு கிணறு இருப்பதும் தெரிகிறது. அது ஒரு பாழடைந்த கிணறு. கொடிகளும் புதர்களும் கிணற்றின் சுவரில் மண்டிக் கிடக்கின்றன. சற்று பயம் ஏற்பட்டாலும் இரவில் விலங்குகளிடமிருந்து தப்பக் கிணறு பாதுகாப்பாக இருக்கு மென்று எண்ணுகின்றான். கிணற்றின் சுவற்றில் நீண்டிருந்த கல் ஒன்றில் கால் வைத்து இறங்க முற்படுகிறான். அய்யோ என்ன நேர்ந்தது! வழுக்கலுள்ள அந்தக்கல்அவனை நிலைகுலைந்து கீழே விழச் செய்கிறது. ஆனால் நல்ல வேளையாக ஒரு கொடி அவன் காலில் சுற்றிக் கொண்டு முழுவதும் கீழேவிழாமல் தடுக்கிறது. கும்மிருட்டில் தலை கிழாகக் கிணற்றின் சுவர் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றான்.
மெதுவாக அவன் கண்கள் இருட்டுக்குப் பழக்கப் படுகின்றன. அது ஒரு தண்ணீர் இல்லாத வறண்ட கிணறு. இன்னும் இருபது அடிகளுக்குக் கிழே கிணற்றின் அடிப் பகுதி தெரிகிறது. அங்கு மூன்று பெரிய நாகப்பாம்புகள் தென்படுகின்றன. கொடியால் சுற்றியுள்ள அவன் காலை நோக்கி மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் கொடியை மென்று கொண்டிருப்பது தெரிகிறது. ஒரு எலி கருப்பு; மற்றது வெள்ளை. கிணற்றில் ஒரு தேன் கூடும் இருக்கிறது. அவன் விழுந்த போது தேன் கூடு கலைக்கப்பட்டு தேனீக்கள் கிணற்றில் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன. தேன் கூட்டுக்கு நேர் கீழே அவன் தொங்கிக் கொண்டிருப்பதால் அவ்வப்போது ஒரு சொட்டுத் தேன் அவன் உதட்டின் மீது விழுகிறது. அதை நக்கிச் சுவைக்கிறான். சுவை மிகுந்த தேன் அது. தேனிக்கள் அவ்வப்போது அவனைச் சுற்றி வந்து கொட்டவும் செய்கின்றன. இந்தச் சூழலில் பெரிய யானை ஒன்று கிணற்றோரம் வருகிறது. யானையின் தலை வெளிச்சத்தை முற்றும் தடுக்க இருள் சூழ்கிறது. பின் அந்த யானை சென்று விடுகிறது. இது தான் அவன் சூழ்நிலை.
இந்த நிலையில் ஒரு நல்ல மனிதர் கிணற்றோரம் வந்து எட்டிப் பார்க்கிறார். அவன் நிலைமையைப் புரிந்து கொண்டு அவனிடம் சொல்கிறார்: 'ஓ! நீ இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறதே! தலைகிழாகத் தொங்குகிறாய். தேனீக்கள் கொட்டுகின்றன. கிணற்றடியில் நாகப்பாம்புகள் நெளிகின்றன. நீ நல்ல நிலையில் இருப்பதாகத் தெரியவில்லையே. உனக்கு நான் உதவி புரியலாமா?'
அவன் பதில்: "நான் இன்னும் சில சொட்டுத் தேன் கிடைக்குமா என்று எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
கதை இத்தோடு முடிகிறது.
பாலைவனத்தில் பயணம் என்பது கோடிக் கணக்கான முறை பிறந்து, துக்கம் அனுபவித்து, இறந்து மறுபிறப்பு எடுத்து வரும் நம் 'சம்சாரப்' பயணத்தைக் குறிக்கும். 'சம்சாரப்' பயணம் என்பது திருப்தியற்ற பயணம், முழு மன நிறைவு இல்லாத பயணம். இருக்கும் நிலையோடு திருப்தியடையாமல் வேறு எதாவது உருவெடுக்க வேண்டுமென்ற தாகம் தான் இந்த 'சம்சாரப்' பயணத்தைத் தொடர வைக்கிறது. இந்த 'சம்சாரப்' பயணத்தில் நாம் பல விதமான பிறப்பெடுக்கக் கூடும் (மிருக, நரக, பூத, மனித, சொர்க்க). 'சம்சாரப்' பயணத்தில் இறுதியாக ஓய்வெடுக்க இடம் ஏதும் இல்லை.
வனம் என்பது நிழலையும் சற்று நிவாரணம் கிடைப்பதையும் குறிக்கும். மனிதப் பிறவி எடுப்பதற்கு அடையாளம். மனிதப் பிறவியில் சற்று நிழல் கிடைக்கிறது. பிறக்கும் போதே துக்கம் அனுபவித்துக் கொண்டு தான் பிறக்கின்றோம். தாயின் வயிற்றில் பல மாதங்கள் சிக்கிக் கிடப்பது மனதிற்கினிய விஷயம் இல்லை. பிறந்த உடன் தூங்கி ஓய்வெடுக்கிறோம். மக்கள் வந்து உங்களுக்கு உணவூட்டுகிறார்கள். இங்கும் அங்கும் கொண்டு செல்கிறார்கள். பின் உங்கள் சுற்று வட்டாரத்தைக் கவனிக்க ஆரம்பிக்கின்றீர்கள். எழுந்து உலகை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கின்றீர்கள். இது வனத்தில் நடந்து செல்வதைக் குறிக்கும். வயதாக ஆக வேறு வழி இல்லை. காட்டுக்குள் சென்றே ஆக வேண்டும். பின் வாங்க வழியில்லை. ஐந்து வயதானவுடன் உங்களைப் பள்ளிக்கூடம் போகச் சொல்கிறார்கள். அங்கு போனதே இல்லை. அது என்ன பள்ளிக்கூடம்? ஆனால், போயே ஆக வேண்டும். அதன் பின் சிறிய வலி தொடங்க ஆரம்பிக்கிறது. கல்லும் முள்ளும், கிழியும் துணியும் மற்றவருடன் ஒன்று சேர்ந்து வேலை செய்யும் போது ஏற்படும் சிக்கல்களைக் குறிக்கும். சிறு வயதில் அது தானே நடக்கிறது. கிழே விழுந்து காயம் ஏற்படுகிறது, காயம், வெட்டு, சிராய்ப்பு போன்ற உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில சமயம் அழத் தோன்றுகிறது. ஆனாலும் ஏதோ உங்களைக் காட்டுக்குள் மேலும் போகச் சொல்கிறது. வயதாக ஆக மேலும் போவதைத் தவிர வேறு வழியே இல்லை. வயது கூடக் கூடப் புதிய அனுபவங்கள் தோன்று கின்றன. பதினைந்து இருபது வயதான பின் தான் வாழ்க்கையின் அபாயங்கள் உங்களுக்கு விளங்குகிறது. உறவினர் இறக்கின்றார்கள். பல விதமான அபாயங்கள் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பைத் தேடுகிறோம். வீடு என்று சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்றும் வாழ்வை எப்படி உறுதிப்படுத்துவது என்றும் எண்ணுகிறோம். இந்தக் காட்டிலிருந்து எப்படி பாதுகாப்புக் கிடைக்கும்? 'வாழ்க்கையே ஒரு வனம்' என்று சொல்லக்கேட்டிருக்கின்றோம். கிணறு நம் சுருக்கமான வாழ்வைக் குறிக்கிறது. நம் உடலை யும் குறிக்கலாம். நாம் நம் உடலை ஒரு புகலிடமாகக் கருதுகிறோம். சிறு வீடான உடல் மீது பற்றுக் கொள்கிறோம். தலை கீழாகச் சிக்கிய வண்ணம் இருக்கின்றோம். ஒரு விதத்தில் தாயின் வயிற்றிலிருந்து வெளி வரும் வழியே ஒரு சுரங்கப்பாதை தான். அதிலும் நாம் தலைகீழாகத்தான் இருக்கின்றோம். இந்த சுரங்கப் பாதையிலிருந்து தலை தான் முதலில் வெளியே வருகிறது. ஆனால் இந்தச் சுரங்கப்பாதையின் அடியில் மூன்று நாகப் பாம்புகள் உள்ளன - அவை வயோதிகம், நோய், மரணத்தைக் குறிக்கும். தலை கீழாக நேராக அதை நோக்கிச் செல்கின்றீர்கள். மேலே பார்த்தால் இரண்டு எலிகள்; ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. அவை கொடியைக் கடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த கொடி தான் உங்கள் வாழ்வுக் காலம். வெள்ளை எலி பகலையும் கருப்பு எலி இரவையும் குறிக்கும். இரவும் பகலும் உங்கள் வாழ்வுக் காலத்தைச் சுருக்கிக் கொண்டிருக்கிறது. விழ ஒரு வழி தான் இருக்கிறது. வயோதிகம், நோய், மரணம் மீது தான்.
அதே சமயம் வாழ்க்கையின் சாதாரணச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை தான் தேனீக்களின் கொட்டலும், சிறுதுளி தேனை சுவைக்கக் கிடைக்கும் வாய்ப்பும். இந்தத் தேன் தான் வாழ்வில் அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு இன்பங்கள். ஒரு கோப்பை காப்பி, ஒரு சினிமாப் படம், அந்தரங்க உறவு. நாம் காதலிப்பவரைக்கூடத் 'தேனே' என்று தானே அழைக்கின்றோம்! ஆனால் சமயத்தில் நண்பர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள், உறவுகள் சில சமயம் கசக்கின்றன; அல்லது முறிகின்றன. காப்பி குடித்தால் வயிறு ஒத்துக்கொள்வதில்லை. இவையெல்லாம் தேனி கொட்டுவதற்குச் சமம். தேனி கொட்டுவது மிகவும் இன்னல் ஏற்படுத்தும் என்றாலும் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதில்லை. ஒரு சொட்டுத் தேன் என்பது சுவை யாக இருந்தாலும் வெறும் ஒரு சொட்டுத்தானே? அதனால் வயிறு நிரம்பப் போவதில்லை. சுவையும் அதிக நேரம் நீடிப்பதில்லை. முகத்தில் விழும் தேன் சொட்டு எப்போது விழும் என்றும் சொல்வதிற்கில்லை. உங்கள் கட்டளைக்கேற்ப அது விழுவதில்லை. சில சமயம் உங்கள் முகத்தில் விழுகிறது. அடுத்து என்ன வரும் என்றும் சொல்வதிற்கில்லை. தேன் சொட்டா? தேனியின் கொட்டா? அவ்வப்போது கிணற்றின் ஓரத்தில் வரும் யானையின் தலை முற்றாக வெளிச்சத்தை மறைத்து விடுகிறது. இது மரணத்தைக் குறிக்கும். அவ்வப்போது தெரிந்தவர்கள் இறக்கின்றனர். அப்போது நீங்களும் ஒரு நாள் மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்பதை உணர்கின்றீர்கள். அந்தச் சமயங்களில் உங்கள் இன்பங்களும் துன்பங்களும் முழுமையாக மறக்கப்படுகின்றன. இருப்பினும் உங்கள் மரணத்தைப் பற்றிய எண்ணங்கள் விரைவில் மறக்கப்படுகின்றன. மீன்டும் தேனின் நினைவு தான் வருகிறது. என்ன, அவ்வப்போது மரணத்தின் எண்ணங்கள் வரும் போது இன்ப துன்பங்கள் எல்லாம் மறக்கப்பட்டு மனதில் குழப்பம் உண்டாகிறது.
இறுதியாகக் கிணற்றோரம் வரும் நல்ல மனிதர், புத்தரைக் குறிக்கிறது. அவர் உங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உங்களுக்கு உதவ முன்வருகிறார். அவர் நீங்கள் முயற்சி எடுக்காமலே உங்களைக் காப்பாற்றி விடமுடியும் என்று சொல்ல வில்லை. அவரால் உதவ முடியும் என்று தான் சொல்கிறார். உங்கள் காலை இங்கு வையுங்கள். கையை அங்கே பிடியுங்கள். முயற்சி செய்து உடலை மேலே தூக்குங்கள் என்று தான் சொல்ல முடியும். ஆனால், கிடைக்கும் உதவியைப் பயன் படுத்துவதை விட்டு விட்டு இன்னும் சிலதுளி தேன் சொட்டுகள் கிடைக்குமா என்று தான் எதிர்பார்க்கின்றோம். நம் கடினமான நிலையைப் பார்க்கும் போது இந்தச் சிறு தேன் சொட்டுக்கள் எப்படி ஈடு செய்ய முடியும்? கிணற்றை விட்டு வெளியே சென்றால் என்ன ஆகுமோ என்ற ஐயம் நமக்கு இருக்கிறது. இருக்கும் இடத்தில் கொஞ்சம் தேனாவது கிடைகிறதே என்று நினைக்கின்றோம். அறியாததற்கு அஞ்சி சங்கட மான சூழ்நிலையென்றாலும் தெரிந்தவற்றோடு இருக்கவே விரும்புகிறோம். மனிதனின் நிலைக்குப் புத்தரின் விளக்கம் இதுவே.
************
A man is walking in the desert. He is scorched by the sun, dry and thirsty. In the distance he spies a forest. He crosses the desert and makes for the forest. He makes it to the edge. He feels very grateful. He throws himself to the edge of the forest where there is a bit of shade. For a little while he rests there feeling relieved, escaping from the blazing sun. He rests for a while, collects himself and realizes that he is at the edge of the forest and that he better go into the forest. He starts walking into the forest. It is a bit open at the edge but as he moves in, he has to step onto logs and so forth and it gets a little more dense. He keeps pushing on. There is nothing here. There is no sustenance. He has to explore the place. As he moves further there is thorns and stuff that gets caught in his clothing, catches at his skin, he stubs his toes, get sweaty and falls down stepping over logs sometimes. As he goes deeper he begins to see every now and then behind the trees and bushes the yellow eyes of animals. What is that big animal in there? He hears the movements. He begins to get a bit frightened and nervous. He keeps going and then he begins to see the sun is going down. He thinks 'I must find some place that is safe. there are predators here, the forest is dense.' He comes out to an open space. He is a bit panicky by this time. In the space he sees a well, an old overgrown well. It is very dilapidated, vines growing down the side. He is concerned but he thinks that at least he can get some shelter here. He climbs over the side of the well but slips and falls but his foot is caught by one of the vines and he is hanging upside down in this well and it is very dark.
Slowly the eyes become accustomed. It is a dry well and he sees 20 feet further down at the bottom of the well there are cobras, three big cobras. He looks up and where his foot is caught on the vine he sees a couple of mice chewing on the vine. One of them a black mouse and the other a white mouse. There is also a bees nest int he well. The bees are buzzing around disturbed by the mans fall but he happens to fall where every now and then a drop of honey comes out of the hive and falls onto his lip. He licks this drop of honey very sweet. Every now and then the bees come around and sting him. While this is going on, a huge elephant comes to the side of the well and his head blocks out all the light. It goes dark and then the elephant goes away. He is in this situation. At the end of this a very nice man leans over the well. He says 'Oh, you are in quite a situation there. Caught upside down, the bees stinging you, cobras at the bottom. Doesn't look very nice to me. Can I help you get out of there? "
The reply is "I just want to catch a few more drops of honey".
This is the end of the story.
The desert is the wandering in existence of samsara, the unsatisfactory quality of existence, the lack of final satisfaction. The thirst, the inner thirst in the sense of deprivation that drives us. It also represents the many possibilities of birth in samsara. the many types of being (ghost, animal, hell, human, heaven) and most of them very unsatisfactory. There is no final place to rest in samsara.
The forest represents shade and a a little relief. from the heat and sun. That symbolizes the human realm. In the human realm there is shade. you are not scorched directly. So you take birth in the human realm. When you are born you have already been suffering trapped in the womb. It is not very pleasant and then you are born and you mostly sleep and rest. You are lying there resting and people are feeding you and taking you around and then you begin to look around. You get up and explore the world and that is moving farther into the forest. As you grow older there is no alternative. You must go into the forest. There is no backing out. By the time you are five, they are telling you to go to school. You have never been there before so what is all that about? But you must go and there the little pains starts. Things tearing at your cloths and the thorns are the abrasions while interacting with the world and other people . As a kid that is exactly what you do. You are falling down, cutting yourself, scrapping your self, experiencing physical problems. Makes you cry sometimes. But there is some element that keeps driving you in to the forest. There is no way back, you have to keep going that is the inevitability of you keep getting older. You grow older and new experiences are coming up all the time. Finally as you get to your teens and twenties you conceive of the dangers of life. People die. All kinds of threats are out there and you begin to look for security. Some place to call home and how to stabilize this. Where do I get protection from this jungle. Life is a jungle. So the well represents a very small narrow life. It could represent the body itself. You tend to take refuge in your own body and to find some place to protect yourself for the night, to get away from the threat . Attachment to the body, to the small house. You are caught upside down in the body. In a sense the womb you come out off is a tunnel. You are caught upside down in that. You come out head first out of this tunnel. You are hanging upside down in this tunnel too. But this tunnel has three cobras at the bottom - old age, sickness and death. Thats what is at the bottom of the tunnel and you are upside down, head first heading for that. you look up and there is the white mouse and the black mouse chewing on the vine. The vine is your lifespan. the white mouse is day and black mouse is night. Day and night, time is chewing on your lifespan, eating your life span up. There is only one way to fall. You always fall down into old age, sickness and death.
While this is going on, the ordinary events of life are going on which are the stings of the bee and the drops of honey. They are the little pleasures of life. A cup of coffee, a movie, the odd little intimate fling. You even call them honey, don't you?! And then you get stung by your friends, by your romance, by your relationships. You can't drink the coffee any more because it upsets your stomach, you get stung by it. A bee sting is definitely painful but not fatal and a drop of honey is definitely sweet and pleasant but it is just a drop of honey. It doesn't last very long and you notice it just falls on your face. There is very little matter of control over these stings and drops of honey. It is not like you are commanding them. They tend to fall your way sometimes. You are not sure which one is going to happen next. Every now and then the whole thing is blotted out by this elephant looking over the well. That is the symbol of death. Every now and then somebody dies or you become conscious of your own mortality. At that moment everything is blotted out. it over shadows and overwhelms all of you your existence and your preoccupations with the honey and everything. And then it goes back, because you can't sustain the consciousness of your own mortality and that of others. It just that every now and then it hits you and blocks out and disturbs.
Finally, the nice man looking over the side is the Buddha and he is saying, you are in such a mess. can I help you. He is not saying, ' I will save you. you don't do anything'. Obviously you have gonna have to work. He can help. I can say put your foot here and you have to make the effort. and your reply is instead of starting on this attempt to get yourself out of there. i think it is nice but i just need to get a few more drops of honey. this is the terrible tiny little thing that keeps us there it just doesn't compensate for the situation we are in. these little drops of honey. but we are not sure what will happen if we climb out of the well. at least we have got this honey. It is the known. that is the Buddha's description of the human dilema.