வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
தமிழாக்கம் Tamil Translation
நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa
* * *
தொடக்கவுரை
போல் தேமீவீல் (பிரான்ஸ் கல்விக் கழக அங்கத்தவர்)
பிரான்ஸ் கல்லூரிப் பேராசிரியர்.
பாரிஸ் உயர் ஆராய்ச்சிக் கல்லூரியில் பௌத்த ஆராய்ச்சி இயக்குநர்
புத்த சமயத்தில் மிக உயர்ந்த தகைமையும், சிறந்த ஞானமும் உள்ளவரும், அதன் பிரதிநிதிகளில் ஒருவருமான, இந்த ஆசிரியரால் இக்காலப் போக்குக்கு ஏற்ற முறையில் திடமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விளக்கத்தை இந்த நூலிலே காணலாம். வணக்கத்துக்குரிய கலாநிதி வல்போல ராஹுலர், பௌத்த பிக்குக்குரிய சம்பிரதாய முறையான பயிற்சியையும், கல்வியையும் இலங்கையில் பெற்று, அந்நாட்டிலுள்ள சிறந்த பிரிவேணாக்களுள் முதன்மை வாய்ந்த ஒன்றில் பல உயர் பதவிகளை வகித்தார். இந்த வித்தியா பீடத்தில் அசோகன் காலந்துவங்கி புத்த தருமம் சிறப்போடு வளர்ந்து இன்றுவரை அத் தர்மத்தின் உயர் ஓட்டம் குன்றாது விளங்கி வருகிறது. புராதனக் கல்வி மரபில் வளர்ந்த அவர், மரபுகளெல்லாம் ஆட்சேபிக்கப்பட்டுவரும் இக்காலத்தில், சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி முறையில் பயிற்சி பெற வேண்டுமென்று தீர்மானித்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்து கலைமாமணி விசேட பட்டத்தை லண்டன் சர்வ கலாசாலைப் பரீட்சையில் பெற்றார். பின்னர் இலங்கையில் புத்த சமயம் வளர்ந்த வரலாற்றைப் பற்றி மிகச் சிறப்பான ஆராய்ச்சி நூலை எழுதி, இலங்கை சர்வகலாசாலை வழங்கிய கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் கல்கத்தா சர்வகலாசாலையில் சேர்ந்து, அங்குள்ள பிரசித்த பெற்ற பேராசியர்களோடு ஒருமித்து ஆராய்ச்சி நடத்திய காலத்தில், மகாயான பௌத்தத்தில் விசேட அறிவு பெற்ற அறிஞர்களின் தொடர்பைப் பெற்றார். திபெத்திலிருந்து தூரக் கிழக்கு நாடுகள் வரை பரந்துள்ளது இந்த மகாயானப் பௌத்தமே. இதன் பயனாக அவர் தமது அறிவை விரிவுபடுத்துவதற்காகத் திபெத்திய மொழியிலும், சீன மொழியிலுமுள்ள பௌத்த நூல்களை ஆராய்ந்தார். பின்னர் பாரிஸ் சர்வகலாசாலையில் (சோபோண்) சேர்வதன் மூலம் எங்களைக் கௌரவப்படுத்தினார். அங்கே பிரசித்திபெற்ற புராதன மகாயானத் தத்துவ அறிஞரான அசங்க ஆசாரியரின் சிந்தனைகளை ஆராய்ந்தார். அசங்காசாரியர் சமஸ்கிருதத்தில் எழுதிய நூல்கள் இன்று மறைந்து விட்டன. அவை இன்று திபெத்திய மொழியிலும் சீன மொழியிலுமே மொழிபெயர்ப்பு வடிவத்தில் விளங்குகின்றன. கடந்த எட்டு வருடமாக அவர் சீவரஆடை அணிந்து துறவியாக எம்முடன் வாழ்ந்து, மேல்நாட்டு வாடையைச் சுவாசித்து, நமது பழைய மங்கலான கண்ணாடியில், தமது சமயத்தின் சர்வவியாபகமானதோர் பிரதி பிம்பத்தைக் காணலாமென்ற நாட்டமுடையவராயிருக்கிறார்.
மேனாட்டவர்க்கு அறிமுகஞ் செய்யுமாறு அவர் என்னை அன்போடு கேட்டுக் கொண்ட இந்நூல் பௌத்த தர்மத்தின் மூலாதாரமான கொள்கைகளை எல்லாரும் அறிந்து கொள்ளக்கூடியவாறு விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. வடமொழியில் "ஆகமங்கள்" என வழங்கப்படுவதும், பாளியில் "நிகாயங்கள்" என வழங்கப்படுவதுமான, பழைய பௌத்த கிரந்தங்களில் காணப்பட்ட கருத்துக்கள் இக்கிரந்தங்களிலே உண்டு. கலாநிதி ராகுல தேரருக்குரிய அறிவு ஒப்புயர்வற்றது. அவற்றை அவர் அடிக்கடி பிரத்தியேகமாக மேற்கோள் காட்டிச் செல்வார். பௌத்த சமயத்திலே பல கிளைகளுண்டு. அவை முன்னுமிருந்தன. இப்பொழுதுமிருந்து வருகின்றன. இக்கிளைகளெல்லாம் இங்கு கூறிய பௌத்த கிரந்தங்களையே தம் பிரமாண நூலாகக் கொள்ளுகின்றன. தருமத்தை நன்கனம் விளக்குவதற்கன்றி வேறெக்காரணங் கொண்டும் இக்கிளைகள் இப்பிரமான நூல்களிலிருந்து விலகுவது கிடையாது. பௌத்த சமயம் பல நூற்றாண்டாகப் பல தேசங்களில் பரவிய காரணத்தால் இந்த விளக்கம் இயல்பாகவே பலபட விரிந்து செல்ல வேண்டியதாயிற்று. அதனால் அத்தர்மம் பல தோற்றங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் கலாநிதி இராகுலர் இங்கு மேற்கொள்ளும் போக்கு மனிதாபிமானமுடையது. பகுத்தறிவு வாதம் சார்ந்தது. சில அமிசங்களில் சோக்கிரதரின் ஆராய்ச்சிப் போக்குடையது. வேறு சில அமிசங்களில் பிரசாரப் போக்குடையது. அல்லது பெரும்பாலும் விஞ்ஞான ஆராய்ச்சிப் போக்குடையது. தமது கருத்துக்களுக்கெல்லாம், பிரமான நூல்கள் பலவற்றை ஆதாரமாகக் கொள்ளுகிறார். அவர் அவ்வாதாரங்களை எடுத்துக் காட்டி அவற்றையே பேசவிடுகிறார்.
மேற்கோளாக எடுத்துக்காட்டும் சூத்திரங்களை நுட்பமாகவும் அச்சொட்டாகவும், தெளிவாகவும், இலேசாகவும், நேரடியாகவும், பகட்டுப் புலமை ஆரவாரம் சிறிது மின்றி மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றுள் சில, மகாயானக் கோட்பாடுகளின் ஊற்று எல்லாம் பாளியிலேயுண்டு என்பதைத் தெருட்டும் நோக்கமுடையன வாயிருக்கும் பட்சத்தில், சர்ச்சைக்குரியனவாக அமையலாம். ஆனால் அவற்றில் அவருக்குரிய பரிச்சயத்தின் காரணமாக அவற்றைப் பற்றிப் புதிய விளக்கத்தைக் கொடுக்கிறார். அவர் தற்கால மனிதனைக் கருத்தில் கொண்டு எழுதினாலும், பொதுவுடைமை, நிரீச்சுரவாதம், அர்த்தமற்ற விசுவத்திலுள்ள மனிதன் தன் தருக்க ரீதிக்கு மாறான நிலையை முற்றாக உணர்வதன் மூலமே விடுதலைபெற முடியுமென்ற தத்துவக் கோட்பாடு (எக்ஸிஸ்டென்சியலிஸம்) உளவியல் ஆராய்ச்சி, என்ற சில இக்காலச் சிந்தனை ஓட்டங்களை ஆங்காங்கு சுட்டிக் காட்டிய போதிலும் அவற்றோடு பௌத்தத்தை ஒப்பிட்டுப் பார்க்குமாறு வலியுறுத்தவில்லை. இங்கே பௌத்தம் அதன் ஆதிவளம் பொலிய உண்மையான புலமையுடன் விளக்கப்பட்டிருப்பதால், அதில் தொக்கு நிற்கும் தற்காலச் சிந்தனைச் செறிவையும் அதற்கேற்றவாறு அத்தருமத்தை விளக்கும் தகைமைப்பாட்டையும் வாசகரே உணர்ந்து சுவைக்க வேண்டும்.
முன்னுரை
இன்று உலகெங்கும் புத்தசமயத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் வளர்ந்து வருகிறது. பல சங்கங்களும் ஆராய்ச்சிக்கழகங்களும் தோன்றியுள்ளன. புத்த பகவானுடைய போதனையை விளக்கும் ஏராளமான நூல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை தகைமையற்றவர்களால் எழுதப்பட்டுள்ளன. அல்லது வேறு சமயங்களிற் காணப்படும் கருதுகோள்களைப் புகுத்திப் பௌத்தத்தைத் தவறாக விளக்குகின்றன. சமயங்களைப் பற்றி ஒப்பியல் முறையில் ஆராய்ந்த ஒரு பேராசிரியர், புத்தபகவானின் அணுக்கத் தொண்டரான ஆனந்தர், பிக்கு என்பதைக்கூட அறியாது அவர் உபாகசர் என சமீபத்தில் எழுதிய தம் நூலில் குறிப்பிட்டார். அத்தகைய நூல்கள் எவ்வாறிருக்குமென்பதை வாசகர்களே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
புத்தர் உண்மையில் போதித்தது என்ன என்பதை அறியவிரும்புவோரும் அதைப்பற்றி இதுவரை அறிந்திராதவரும், கல்வி அறிவும் விவேகமும் உள்ளவர்களுமான சாதாரண வாசகரின் நன்மையை முதலிற் கருத்திற் கொண்டே இச் சிறு நூலை எழுத முற்படுகிறேன். பகவான் திருவாய் மலர்ந்தருளிய போதனைகளில் மிகப் பழையவையும் இப்போது கிடைக்கக்கூடியவையுமென ஆராய்ச்சியாளரால் எங்கும் ஒப்புக்கொள்ளப்பட்டவையுமெனத் திரிபிடகப் பாளிக்கிரந்தங்களில் காணப்படும் வாக்கியங்களையே மாற்றமின்றி அப்படியே ஒல்லும் வகையால் இலேசாகவும் நேரடியாகவும், எடுத்தாள முயல்கிறேன். இங்கு பயன்படுத்தப்படும் விடயங்களும் மேற்கோளாகக் காட்டப்பட்டவையும் மூலக்கிரந்தகளிலிருந்து நேராக எடுக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பிந்திய காலத்து நூல்களையும் குறிப்பிட்டுள்ளேன்.
ஏற்கனவே புத்தருடைய போதனைகளைப் பற்றிச் சிறிது அறிந்துள்ள வாசகர் இருப்பார்கள். மேலும் தம்மறிவை விசாலமாக்க விரும்பும் அத்தகைய வாசகரின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளேன். அதனால் முக்கியமான அரும்பதங்கள் பெரும்பாலானவை குறிக்கும் பாளிச் சொற்களைக் குறிப்பிடுவதோடு அவைவரும் மூலகிரந்தங்களை அடிக் குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். அதனோடு தெரிந்து எடுத்த பௌத்த சம்பந்தமான உசாத்துணை நூல் அட்டவணையும் சேர்த்துள்ளேன்.
நாம் மேற்கொண்ட இப்பணி இலேசனதன்று. சாதாரணமாகப் பழக்கமில்லாத கருத்துக்களுண்டு. மிகப்பழக்கமான சனரஞ்சனமான கருத்துக்களுமுண்டு. நான் இவற்றிடையே நடுவழியைப் பின் பற்றி இக்காலத்து ஆங்கில மொழி வாசிப்போர் புத்த பகவானுடைய பிரசங்கங்களின் கருத்தையோ அவை பொதிந்த வடிவத்தையோ நன்கு புரிந்து, குறைவின்றி விளங்கிக் கொள்ளும் முறையில் முயன்றுள்ளேன். இந்நூலை எழுதும்போது பழைய பாளிப் பனுவல்களின் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கும். அதனால் பகவான் அவற்றில் பயன் படுத்தும் ஒரு பொருட் பன்மொழிகளையும் கூறியது கூறல்களையும் கர்ண பரம்பரையாக அவை வந்தபடி அப்படியே பாதுகாத்துள்ளேன். பகவான் அனுசரித்த போதணை முறையை அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். மூல கிரந்தங்களில் உள்ளவற்றைப் பெரிதும் அனுசரித்து மொழிபெயர்ப்புக்களை இலேசாகவும் சிரமமின்றி வாசிக்கக் கூடியதாகவும் செய்துள்ளேன்.
ஆனால் இதற்கு ஒரு எல்லையுண்டு. இலேசாக்கும் வேளையில் ஒரு கருத்தைப் பகவான் என்ன வகையில் வளர்க்க விரும்புகிறாரோ அதனை எல்லை கடந்து இலேசாக்க முயன்றால் அதன் விசேடக் கருத்து மாறுபடலாம். கருத்து இலேசாகப் புரிய வேண்டுமென்பதற்காக, அதை விகாரப்படுத்த நாம் விரும்பவில்லை. அதனால் "புத்தர் போதனை" என்ற இந்நூலின் பெயருக்கு ஏற்றவாறே அவர் கூறிய வார்த்தைகளையும், அவர் பயன்படுத்திய உருவகங்களையும் அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.
பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் புத்தருடைய போதனையின் அடிப்படைக் கொள்கைகளையும், சாரத்தையும் எல்லாம் இந்நூலில் ஆராய்ந்துள்ளேன். இவை நான்கு மேலான சத்தியங்கள், எட்டு உயர் நெறிகள் (ஆரிய அட்டாங்கமார்க்கம்) பஞ்சகந்தங்கள், கன்மம், மறுபிறப்பு, படிச்ச சமுப்பாதம், அனத்மவாதம், சதிபட்டானம் என்ற நல்லகடைப்பிடி என்பனவாகும். இந்த ஆராய்ச்சியில் மேல்நாட்டவர்க்குப் பழக்கமில்லாத சொற் பிரயோகங்கள் இருக்கலாம். எனவே முதல்முறை நூலை வாசிக்கும் போது முதல் அத்தியாயத்தை வாசித்தபின், ஐந்தாம், ஏழாம், எட்டாம் அத்தியாயங்களை வாசிக்குமாறும் பின்னர் இரண்டாம், மூன்றாம், நாலாம், ஆறாம் அத்தியாங்களை, பொதுவாகக் கருத்துக்கள் தெளிவானதும் வாசிக்குமாறும் கேட்டுக் கொள்ளுகிறேன்.
புத்தரின் போதனைகளைப் பற்றி எழுதும் போது தேரவாத, மகாயான பௌத்தத்தில் மூலக்கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை ஆராயாமலிருக்க முடியாது.
தேரவாதம், ஹீனயானம்-"சிறியபுணை" எனவும் வழங்கப்பட்ட போதிலும் அறிஞரிடையே ஹீனயானம் என்ற வழக்கு அருகிவிட்டது. தேராவாதம் என்றால் தேரர் - முதியவரின் கோட்பாடு என்று பொருள்படும். பௌத்தத்தின் மற்றப்பிரிவு மகாயானம். மகாயானமென்றால் பெரிய புணை. இன்று உலகில் பெருவழக்காயுள்ள பௌத்தப் பெரும்பிரிவுகள் இவையே. ஆதியில் நிலவி வந்த பௌத்தம் தேரவாதம். அது இன்று இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், கிழக்குப் பாகிஸ்தானிலுள்ள சிட்ட கோங் ஆகிய நாடுகளில் நிலவி வருகிறது. மகாயானம் சற்றுக் காலத்திற்குப் பின் உண்டானது. அது சீனா, ஜப்பான், திபெத், மங்கோலியா மேலும் சில நாடுகளிலும் நிலவி வருகிறது. முக்கிமாகச் சில கோட்பாடுகள், ஆசாரங்கள், அனுட்டானங்கள் என்பவற்றில் இவ்விரு பிரிவுகளிடையே சில வேறுபாடுகளுண்டு. ஆனால் மிக முக்கியமான போதனைகளில் வேற்றுமை கிடையாது. அவை இங்கே ஆராயப் பட்டுள்ளன.
பேராசிரியர் ஈ. எவ். சி, லுடோவைக் அவர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன். இந்நூலை எழுதுமாறு கேட்டுக் கொண்டவர் அவரே. அவர் பல வகையில் செய்த உதவிகளுக்காகவும், இந்நூல் பற்றிக் கூறிய ஆலோசனைகளுக்காகவும், இதன் கையழுத்துப் பிரதியை வாசித்துக் கூறிய யோசனைகளுக்காகவும் நன்றி தெரிவிக்கிறேன். இதன் கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பயனுள்ள ஆலோசனைகளைக் கூறிய செல்வி மரியானே மொன் அவர்களுக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். பாரிசில் என் ஆசிரிராயிருந்த பேராசிரியர் தேமீவீயல் அவர்கள் அன்புடன் இந்நூலுக்கு முகவுரை வழங்கியதற்காகப் பெரிதும் கடப்பாடுடையேன்.
W. ராகுல
பாரிஸ்
ஜூலை, 1958