ஆசிய ஜோதி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
6. புத்தரும் ஏழைச் சிறுவனும்
(அரண்மனையிலிருந்து வெளிப்பட்டுச் சென்ற புத்தர் வழி நடந்த களைப்பால் சோர்ந்து கிடந்தார். அவரைக் கண்ட ஓர் இடைச் சிறுவன், தான் தாழ்ந்த குலத்தினனாதல் பற்றி, தன் கலயத்தில் பால் கறந்து அவருக்குக் கொடுக்கத் தயங்கினான். பிறப்பினால் உயர்வு தாழ்வுகள் பாராட்டலாகாது என்று புத்தர் அவனுக்குப் போதித்த வரலாறு இதனுள் கூறப்படுகிறது.)
தாழ்ந்த குலத்தினனாதல் பற்றி - தாழ்ந்த குலத்தினன் ஆதலால்
கலயம் – கலசம் – குடம், Small pot of earth. பாரட்டலாகாது - பாராட்டக் கூடாது
புண்ணிய மூர்த்தி புத்தமா முனிவன்
உண்மையை உணர்ந்துஇவ் வுலகினில் என்றும்
அழியா இன்பம் அடையும் அவாவினால்
மன்னர் வாழ்வையும் மறுத்தவ னாகித்
தந்தையை மறந்து தனையனைத் துறந்து
அவா - ஆசை
தனையன், தனயன் – மகன், Son
மங்கை யசோதரை மதிமுகம் நீத்து
நள்ளிர வதனில் நன்னகர் நீங்கி,
உண்ணும் உணவும் உறக்கமும் இன்றி
இரவும் பகலும் இடைவிடாது எங்கும்
நடந்து மெலிந்து நலிவுற்று ஒருநாள்
நலிவு - துன்பம் Trouble, distress
வேனில் வெயிலில் வெந்தெரி கானலில்
கைகால் தளர்ந்து கண்களும் மூடி
மூச்சும் அடங்கி முகமும் வெளிறி
உயிரும் உடம்பில் ஊச லாட
விஞ்சிய மயக்கால் வீழ்ந்து கிடந்தனன். 82
வேனில் வெயிலில் வெந்தெரி கானலில்:
வேனில் - கோடை காலம் Hot season; வெயிலில் – வெம்மையில்
வெந்தெரி - வெந்து + எரியும்; கானல் - வெப்பம்,
வெளிறி - வெளுத்து, நிறக்கேடு Paleness; pallor
விஞ்சிய, விஞ்சுதல் - மிகுந்த To be excessive
வேறு
ஆடுகள் மேய்த்து வரும் - ஒருவன்
ஆயர் குலச்சிறுவன்,
வாடிக் கிடந்தவனைச் - செல்லும்
வழியின் மீது கண்டான். 83
ஆயர், ஆயன் – இடையன், Man of the cowherd caste, herdsman
வையகம் வாழ்ந்திடவே - பிறந்த
மாதவச் செல்வன்முகம்
வெய்யிலில் வெந்திடாமல் - தழைகள்
வெட்டி அருகில் நட்டான். 84
தெய்வ குலத்திவனை - எளியேன்
தீண்டலும் ஆகாதினிச்
செய்வதும் யாதெனவே - சிறிது
சிந்தை தயங்கி நின்றான். 85
தீண்டலும் – தொடுவதும், தீட்டு, Touching
உள்ளந் தெளிந்துடனே - வெள்ளாடு
ஒன்றை அழைத்துவந்து,
வள்ளல் மயக்கொழிய - மடுவை
வாயில் கறந்துவிட்டான். 86
மடு - பசு முதலியவற்றின் பால் சுரக்கும் மடி. Udder, especially of a cow;
மடுவை வாயில் கறந்துவிட்டான் - சித்தார்த்தரைத் தொட விரும்பாமல் பாலை நேராக வாயில் கறந்து விட்டான்.
நட்ட தழைகளெல்லாம் - வளர்ந்து
நாற்புற மும்கவிந்து,
கட்டிய மாளிகைபோல் - வனத்தில்
காட்சி யளித்ததம்மா! 87
கவிந்து, கவிதல் - மூடுதல், To cover, overspread, overshadow
பூவொடு காய்கனியும் - தளிரும்
பொலிந்து நிரம்பியங்கே
மேவு பலமணிகள் - இழைத்த
விதானமும் ஆனதம்மா! 88
மேவு பலமணிகள் - மேவும் (பொருத்தமான) திருமண பந்தலில் கட்டுவது போலப் பல மணிகளாகத் தோன்றின.
இழைத்த விதானமும்: இழைத்தல் - பதித்தல் ; விதானம் - மேற்கட்டி, Canopy
விளக்கம்: வெட்டி நட்ட தழைகள் வளர்ந்து மாளிகை போலக் கவிழ்ந்து மூடுகிறதெனில் அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஐயனை இவ்வுலகம் - காணுதற்கு
அரியவோர் தெய்வமெனக்
கைகள் தொழுதுநின்றான் - சிறுவன்
களங்கமிலா வுளத்தான். 89
நிலத்திற்கிடந்த ஐயன் - மெல்ல
நிமிர்ந்து தலைதூக்கிக்
"கலத்தினி லேகொஞ்சம் - பாலைக்
கறந்து தருவாய்" என்றான். 90
'ஐயையோ! ஆகாது,'என்றான் - சிறுவன்,
'அண்ணலே! யானும்உனைக்
கையினால் தீண்டவொண்ணா - இடையன்ஓர்
காட்டு மனிதன்,' என்றான். 91
தீண்டவொண்ணா - தீண்டத்தகாத
உலகம் புகழ்பெரியோன் - இந்த
உரையினைக் கேட்டுஅந்நாள்
அலகில் கருணையினால் - சொன்ன
அமுத மொழிஇதுவாம்.; 92
அலகில் - அளவில்லாத
"இடர் வரும்போதும் - உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன் பிறந்தவர்போல் - மாந்தர்
உறவு கொள்வர்,அப்பா! 93
இடர் - துன்பம், Affliction, distress, trouble
இரங்கிடும் - வருத்தமுறுதல் Depressed
ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்,
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவ துண்டோ அப்பா! 94
எவர் உடம்பினிலும் - சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழிநீர்க்கும் - உவர்ப்பே
இயற்கைக் குணமப்பா! 95
உவர்ப்பு – உப்புச்சுவை, Saltishness, the taste of any kind of salt
நெற்றியில் நீறும் - மார்பில்
நீண்ட பூணூலும்
பெற்றுஇவ் உலகுதனில் - எவரும்
பிறந்த துண்டோஅப்பா! 96
நீறும் - திருநீறும்
பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டும்,அப்பா! 97
நன்மை செய்பவரே - உலகம்
நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே - அண்டித்
தீண்ட ஒண்ணாதார்." 98
தின்மை- தீமை, Evil, misfortune
ஒண்ணுதல் - இயலுதல்To be fit, proper;
ஒண்ணாதார் – தகாதவர்
நிலத்துயர் ஞானி - இவை
நிகழ்த்தி, "என்தம்பீ!
கலத்தினிலே கொஞ்சம் - பாலைக்
கறந்து தா,"என்றான். 99
ஆயர் சிறுவனும் - கலத்தில்
அளிக்க வாங்கியுண்டு,
தாயினும் இனியன் - கொண்ட
தளர்ச்சி நீங்கினனே. 100
* * * * *
And once, at such a time the o’erwrought Prince
Fell to the earth in deadly swoon all spent,
Even as one slain, who hath no longer breath
Nor any stir of blood; so wan he was,
So motionless. But there came by that way
A shepherd boy, who saw Siddhàrtha lie
With lids fast-closed, and lines of nameless pain
Fixed on his lips—the fiery noonday sun
Beating upon his head—who, plucking boughs
From wild-rose, apple trees; knitted them thick
Into a bower to shade the sacred face.
Also he poured upon the Master’s lips
Drops of warm milk, pressed from his she-goat’s bag,
Lest, being of low caste, he do wrong to one
So high and holy seeming. But the books
Tell how the jambu-branches, planted thus,
Shot with quick life in wealth of leaf and flower
And glowing fruitage interlaced and close,
So that the bower grew like a tent of silk
Pitched for a king at hunting, decked with studs
Of silver-work and bosses red gold.
And the boy worshipped, deeming him some God;
But our Lord, gaining breath, arose and asked
Milk in the shepherd’s lota. “Ah, my Lord,
I cannot give thee,” quoth the lad; “thou seest
I am a Sudra, and my touch defiles!”
Then the World-honoured spake, “Pity and need
Make all flesh kin. There is no caste in blood,
Which runneth of one hue, nor caste in tears,
Which trickle salt with all; neither comes man
To birth with tilka-mark stamped on the brow,
Nor sacred thread on neck. Who doth right deeds
Is twice-born, and who doeth ill deeds vile.
Give me to drink, my brother; when I come
Unto my quest it shall be good for thee.”
Thereat the peasant’s heart was glad, and gave.
“Light of Asia”, by Sir Edwin Arnold - Book the Sixth