அகதவிநய சுத்தம் 2 : வெறுப்பைத் தணித்தல்

அகதவிநய சுத்தம் 2 : வெறுப்பைத் தணித்தல்

Aghatavinaya Sutta: Subduing Hatred (2)

பாலி மொழியிலிருந்தது மொழி பெயர்த்தவர் தணிசாரோ பிக்கு

Source

பின் போற்றுதற்குரிய சாரிபுத்திரர் துறவிகளை: "துறவு மேற்கொண்டுள்ள நண்பர்களே!" என விளித்தார்.

"கூறுங்கள் நண்பரே," என்று பதிலளித்தனர் துறவிகள்.

போற்றுதற்குரிய சாரிபுத்திரர் சொன்னது: "ஒரு துறவியின் மனத்தில் வெறுப்புத் தோன்றினால், ஐந்து வழிகளில் அந்த வெறுப்பைத் தணித்து அதனை முழுமையாக அகற்றிவிட முடியும். எந்த ஐந்து வழிகள்?

"செயலில் (நடத்தையில்) தூய்மையற்றவராகவும் [1] ஆனால் பேச்சில் தூய்மையானவராகவும் [2] சிலர் உள்ளனர். அப்படிப்படவர் மீதான வெறுப்பை அடக்க வேண்டும்.

பேச்சில் தூய்மையற்றவராகவும் ஆனால் செயலில் தூய்மையானவராகவும் சிலர் உள்ளனர். அப்படிப்படவர் மீதான வெறுப்பை அடக்க வேண்டும்.

"செயலிலும், பேச்சிலும் தூய்மையற்றவராகச் சிலர் உள்ளனர். ஆனால் அவ்வப்போது தெளிந்த மனத்தோடும், அமைதியோடும் இருப்பார்கள். அப்படிப்படவர் மீதான வெறுப்பை அடக்க வேண்டும்.

"செயலிலும் பேச்சிலும் தூய்மையற்றவராகச் சிலர் உள்ளனர். மேலும் ஒருபோதும் தெளிந்த மனத்தோடும், அமைதியோடும் அவர் இருப்பதில்லை. அப்படிப்படவர் மீதான வெறுப்பையும் அடக்க வேண்டும்.

"செயலிலும் பேச்சிலும் தூய்மையானவராகச் சிலர் உள்ளனர். மேலும் அவ்வப்போது தெளிந்த மனத்தோடும், அமைதியோடும் இருப்பார்கள். அப்படிப்படவர் மீது வெறுப்பு இருந்தால் அந்த வெறுப்பையும் அடக்க வேண்டும்.

"செயலில் தூய்மையற்றவராகவும், ஆனால் பேச்சில் தூய்மையானவராகவும் உள்ளவர் மீதான வெறுப்பை எப்படி அடக்க வேண்டும்?

மற்றவருக்குப் பயன்படாததையும் பயன்படுத்தும் ஒரு துறவி, சாலை ஓரத்தில் கிடக்கும் ஒரு கிழிந்த துணியைக் காண்கிறார். இடது காலால் அந்தத் துணியின் ஒரு பகுதியை மிதித்துக் கொண்டு வலது காலைப் பயன்படுத்தி அதை விரித்து அந்தத் துணியின் பயன்படக்கூடிய பகுதியை மட்டும் கிழித்து எடுத்துச் செல்கிறார். அது போல, செயலில் தூய்மையற்றவராகவும் ஆனால் பேச்சில் தூய்மையானவராகவும் உள்ளவரின் நடத்தையை விலக்கி விட்டு அவர் பேச்சின் தூய்மையை மட்டும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் மீதுள்ள வெறுப்பைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

"பேச்சில் தூய்மையற்றவராகவும், ஆனால் செயலில் தூய்மையானவராகவும் உள்ளவர் மீதான வெறுப்பை எப்படி அடக்க வேண்டும்?

நீர்ப்பாசியும், நீர்ச்செடிகளும் நிறைந்த ஒரு குளம் உள்ளது. அங்கு ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் வாடி வதங்கியவராக, வேர்வை சொட்டச்சொட்ட, சோர்வடைந்து, நடுக்கங்கொண்டு, மிகுந்த தாகத்துடன் வருகிறார். அவர் அந்தக் குளத்தில் இறங்கி, இரு கைகளாலும் நீர்ப்பாசிகளையும், நீர்ச் செடிகளையும் விலக்கிவிட்டு, கைகளைக் குவித்து அந்த நீரை அள்ளிப் பருகித் தாகம் தணிந்தவராய்ச் செல்கிறார். அது போலவே பேச்சில் தூய்மையற்றவராகவும் ஆனால் செயலில் தூய்மையானவராகவும் உள்ளவரின் பேச்சைக் கண்டு கொள்ளாமல், அவர் செயலின் தூய்மையை மட்டும் கவனித்து அவர் மீதுள்ள வெறுப்பைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

"செயலிலும், பேச்சிலும் தூய்மையற்றவராக உள்ள ஒருவர் அவ்வப்போது தெளிந்த மனத்தோடும், அமைதியோடும் இருப்பவராயின் அவர் மீதான வெறுப்பை எப்படி அடக்க வேண்டும்?

சான்றாக ஒருவர் வெப்பத்தால் (வெய்யிலால்) தாக்கப்பட்டு , வேர்வையில் நனைந்து, களைப்புற்று, தாகத்தால் வாடித் தவிக்கும் பொழுது ஒரு பசுவின் காலடி பதிந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்கி இருப்பதைப் பார்க்கிறார். அப்போது அவர் 'நான் இந்நீரைக் கைகளால் அள்ளிப் பருக முயன்றால் நீர் கலங்கிச் சேறாகிக் குடிப்பதற்குத் தகுதியற்றதாகி விடும். ஆதலால் கை, கால்கள் நான்காலும் மண்டியிட்டு ஒரு பசு நீரைக் குடிப்பதைப்போலக் குடிப்பதுதான் சரி' என்று நினைத்து மண்டியிட்டு நீரை வாயால் உறிஞ்சிக் குடித்துவிட்டுச் செல்கிறார். அதைப்போலவே ஒருவர் சொல்லிலும் செயலிலும் தூய்மையற்றவராக இருந்து, ஆனால் மனத்தால் மட்டும் அவ்வப்போது தெளிவானவராக இருந்தால், அவரது செயல், சொல் இரண்டுக்கும் எவ்வித மதிப்பும் அளிக்காமல் நிராகரித்துவிட வேண்டும். அவருடைய தெளிவான எண்ணத்தையும், அமைதியான நிலையையும் மட்டும் நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் மீதான வெறுப்பைத் தணித்து விடலாம்.

ஒருவரின் செயலும், பேச்சும் தூய்மையற்றும் அவர் மனத்தாலும் தெளிவற்றும், அமைதியின்றியும் இருந்தால் அவர் மீதுள்ள வெறுப்பை எப்படித் தணிப்பது?

ஒரு நோயாளி நோயில் வாடிக் கொண்டிருப்பவர், உடல் நலிந்து மிக மோசமான நிலையில் ஒரு நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு முன்பும், அருகிலும் மருந்தோ, உணவோ பெற ஒரு சிற்றூர் கூடத் தென்படவில்லை. அவரைக் கவனித்துக் கொள்ளவும் யாருமில்லை. அவரை அடுத்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல வழிகாட்டியும் இல்லை. அத்தகைய தருணத்தில் யாராவது ஒரு மனிதன் அவரைக் கண்டு இரக்கப்பட்டு, 'பாவம் இந்த மனிதன். அவருக்குக் கண்டிப்பாக உதவ வேண்டும். இல்லையேல் அவர் மிகவும் துன்பப் படுவார்' என்று தனக்குள் நினைத்துக் கொண்டு உதவுவார். அதைப்போலவே ஒருவரின் வழிகள் தூய்மையற்றதாக இருந்தால், அவர் எப்போதும் மனத் தெளிவற்றும், அமைதியில்லாமலும் இருந்தால் அவர் மீது இரக்கம், கருணை, கழிவிரக்கம் முதலியவற்றுடன், 'பாவம் இவர் கெட்டவற்றையெல்லாம் விட்டுவிட்டு நன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இறந்த பின் அவருக்குத் தீய மறுபிறப்பே ஏற்படும்!' என்று நினைக்க வேண்டும். இவ்வாறு அவர் மீதான வெறுப்பைத் தணித்து விடலாம்.

சொல்லாலும், செயலாலும் தூய்மையானவராகவும், தெளிவான மனச்சிந்தனையும், அமைதியும் உடையவராகவும் இருந்தால், அவர் மீது ஏற்படும் தீய எண்ணங்களை எப்படி ஒழிப்பது? (ஆம், அப்படிபட்டவர் மீதும் வெறுப்புக் கொண்டுள்ளவர் சிலர் இருக்கலாம்.)

எடுத்துக்காட்டாக, ஒருவர் வெப்பத்தால் தாக்கப்பட்டு, வேர்வையில் நனைந்து, களைப்புற்று ஏங்கித் தாகத்தால் தவிக்கும்போது, நாற்புறமும் நிழல்தரும் பலவித மரங்கள் அடர்ந்த சோலை சூழ்ந்த இனிமையான, குளிர்ந்த, தெளிவான பொய்கையைக் (குளத்தை) கண்டால், அவர் அப்பொய்கையில் மூழ்கிக் குளித்து, நீரருந்திக் களைப்பைப் போக்கிக் கொண்டு அம்மரநிழலில் வந்து ஓய்வெடுப்பார். அதைப் போலவே அவருடைய தூய்மை, தெளிவான மனச்சிந்தனை, அமைதியைப் பற்றி நினையுங்கள். இவ்வாறு அவர் மீதான வெறுப்பைத் தணித்து விடலாம். முழுமையாக ஊக்கமளிக்கும் ஒருவர் நம் மனத்தை அமைதிப் படுத்துவார்."

"எனவே ஒரு துறவியின் மனத்தில் வெறுப்பு தோன்றினால், இவ்வைந்து வழிகளில் அந்த வெறுப்பைத் தணித்து அதனை முழுமையாக அகற்ற முடியும். "

* * *

குறிப்பு:

[1] தூய்மையான செயல்: எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல் ; கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்; தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்;

[2] தூய்மையான பேச்சு : பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுஞ்சொல் கூறுவதும், புறம்கூறலும் தவிர்த்தல்.

[3] இந்தத் தமிழாக்கத்தின் சில வரிகள் தி.சுகுணன் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டது.