கடைப்பிடியுடன் (கவனத்துடன் சாஷ்டாங்கமாக) வணங்குவது
தியானம் செய்வது எப்படி? முகப்பு
தியானம் செய்வது எப்படி?
புதிதாகத் தியானப் பயிற்சி தொடங்குவோருக்கு அமைதிக்கு எடுத்துச் செல்லும் வழிகாட்டி
யுத்ததம்மோ பிக்கு
How To Meditate:
A Beginner's Guide to Peace
Yuttadhammo Bhikkhu
அதிகாரம் ஐந்து - கடைப்பிடியுடன் (கவனத்துடன் சாஷ்டாங்கமாக) வணங்குவது
Chapter Five: Mindful Prostration
இந்த அத்தியாயத்தில் மூன்றாவது தியான முறை ஒன்றை விளக்குகிறேன். இதனை நடந்து மற்றும் உட்கார்ந்து தியானம் செய்வதற்கு முன்பாகச் செய்ய வேண்டும். இதுவே கவனத்துடன் (சாஷ்டாங்கமாக) வணங்குவது எனப்படுவது. விருப்பமில்லாவிட்டால் இந்தப் பயிற்சியைச் செய்யாமலும் ஒதுக்கி விடலாம்.
உலகெங்கிலுமுள்ள பல சமயங்களிலும் வழிபடுவோர் சாஷ்டாங்கமாக வணங்குவதைக் கடைப் பிடிக்கின்றனர். பௌத்த நாடுகளில் இவ்வாறு வழிபடுவது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சமயக் குருமார்களுக்கும் மரியாதை செலுத்தும் முறையாக உள்ளது. பிற சமயங்களில் இவ்வாறு வணங்குவது வழிபாடு செய்யப்படுபவர்களுக்கு - அவர் கடவுளாகவோ, தேவராகவோ, புனிதராகவோ இருக்கலாம் - பக்தியையும், பணிவையும் காட்டும் முறையாக உள்ளது.
இங்கு, இவ்வாறு வணங்குவது தியானப் பயிற்சிக்குச் செய்யும் மரியாதை என்று கருத வேண்டும். அகங்காரமற்ற உண்மையான மரியாதை காட்டும் வழி என்று நினைத்துக் கொள்ளுங்கள். தியானம் ஒரு பொழுது போக்கல்ல, அது மரியாதை காட்ட வேண்டிய முக்கியமான பயிற்சி என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், குறிப்பாகக் கவனத்துடன் செய்யும் வணங்குதல் ஒரு தயார்படுத்தும் பயிற்சி யென்றும் எடுத்துக் கொள்ளலாம், ஏனெனில் அது உடலின் வெவ்வேறு உறுப்புகளை மீண்டும், மீண்டும் அசைய வைப்பதனால் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிக்க வைக்கிறது.
கடைப்பிடியுடன் வணங்கும் முறை பின்வருமாறு செய்ய வேண்டும் [1]:
1. முழங்கால் முட்டியிட்டு உட்காருங்கள். பாதவிரல்கள் தரையைத் தொட வேண்டும் (A) அல்லது பாதத்தின் மேல் பகுதி தரையைத் தொட வேண்டும் (B).
2. கைகள் தொடைமீது உள்ளங்கை கீழாக இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். (1). முதுகு நேராகவும், கண்கள் திறந்தவாறும் இருக்க வேண்டும்.
வலது கை 90° தொடைமீது திருப்பி தரைக்குச் செங்கோணமாக இருக்குமாறு வைத்துப் பயிற்சியைத் துவங்குங்கள். கையின் அசைவு மீது மனம் கவனம் செலுத்த வேண்டும். கை திரும்பும்போது "திருப்பு" என்று குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். பாதி வழி திரும்பிய பின் மீண்டும் "திருப்பு" என்றும், திருப்பி முடிக்கும் பொழுது மீண்டும் ஒரு முறை "திருப்பு" என்றும் குறித்துக் கொள்ள வேண்டும் (2). துவக்கம், நடுவில் மற்றும் முடிவு என்று மூன்று அசைவின் நிலைகளிலும் கவனம் செலுத்துவதற்காகவே மூன்று முறை இவ்வார்த்தையைக் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.
அடுத்து, வலது கையை மார்புக்கு நேராக உயர்த்துங்கள். பெரு விரல் மார்பைத் தொடுவதற்கு முன்னர் நிறுத்திக் கொள்ளுங்கள். "உயர்த்து, உயர்த்து, உயர்த்து" என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் (3). அடுத்து பெரு விரல் மார்பைத் தொடும்போது, 'தொடு, தொடு, தொடு' (4) என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து இதே தொடர் வரிசையை இடது கையோடும் செய்ய வேண்டும்: 'திருப்பு, திருப்பு, திருப்பு' (5), "உயர்த்து, உயர்த்து, உயர்த்து" (6), 'தொடு, தொடு, தொடு' (7). இடது கை மார்பைத் தொடுவதுமட்டுமின்றி வலதுகையையும் தொட வேண்டும். இரண்டு உள்ளங்கைகளும் சேர்ந்தவாறு இருக்க வேண்டும்.
அடுத்து இரண்டு கைகளையும், 'தூக்கு, தூக்கு, தூக்கு' என்று குறிப்பிட்டுக் கொண்டே (8) நெற்றிக்குக் கொண்டு வாருங்கள். பின் பெரு விரலின் நகங்கள் நெற்றியைத் தொடும் போது 'தொடு, தொடு, தொடு' என்று குறிபிட்டுக் கொள்ள வேண்டும் (9). பின்னர், கைகளை மீண்டும் மார்பிற்குக் கொண்டு வரும்போது, 'இறக்கு, இறக்கு, இறக்கு' (10) என்றும் 'தொடு, தொடு, தொடு' என்றும் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் (11).
அடுத்து வருவது சாஷ்டாங்கமாக வணங்கும் தியான முறை; முதலில் முதுகை 45° வளைக்க வேண்டும். வளைக்கும்போது 'குனி, குனி, குனி' என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் (12). அடுத்து வலது கையை முழங்கால் முட்டிக்கு முன்னால் தரைப் பகுதிக்குக் கொண்டு வாருங்கள். அப்போது 'இறக்கு, இறக்கு, இறக்கு' (13) என்றும், 'தொடு, தொடு, தொடு' (14)' என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும். சுண்டுவிரல் தரையைத் தொடும் போதும், கை தரைக்குச் செங்கோணமாகவே இருக்க வேண்டும். இறுதியாகக் கையைத் திருப்பி உள்ளங்கை தரையை மூடிக் கொள்ளும் போது 'மூடு, மூடு, மூடு' (15) என்று குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். பின் இதே தொடர் வரிசையை இடது கையோடும் செய்ய வேண்டும்: 'இறக்கு, இறக்கு, இறக்கு' (16), 'தொடு, தொடு, தொடு' (17)' , 'மூடு, மூடு, மூடு' (18). இப்போது இரண்டு கைகளும் தரையில் பதிந்திருக்கும். இரண்டு பெரு விரல்களும் தொட்டுக் கொண்டிருக்கும். இரண்டு சுட்டுவிரல்களுக்கும் இடையில் சுமார் நான்கு அங்குல இடைவெளி இருக்க வேண்டும்.
அடுத்து, முதுகை நன்கு வளைத்து, தலையைக் குனிந்து பெரு விரல்களைத் தொடுமாறு வைக்க வேண்டும், 'குனி, குனி, குனி' என்று முதுகை வளைக்கும் போது சொல்லிக் கொள்ள வேண்டும் (19). நெற்றி பெரு விரலைத் தொடும்போது 'தொடு, தொடு, தொடு (20)' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். பின் முதுகை மீண்டும் கைகள் நேராகும் வரை நிமிர்த்த வேண்டும். அதே சமயம் 'உயர்த்து, உயர்த்து, உயர்த்து' என்று சொல்லிக் கொள்ள வேண்டும் (21). இதுவே முதல் முறை சாஷ்டாங்கமாக வணங்குதல் ஆகும்.
கைகளை நேர்ப்படுத்திய பின்னர் இரண்டாம் முறையாகக் கைகள் தரையிலிருப்பதிலிருந்து துவங்கி முன்கூறிய படிகளைத் திரும்பச் செய்ய வேண்டும். முன்னர் மடியிலிருந்த கைகளோடு துவங்கினோம் இப்போது தரையில் உள்ள கைகளோடு துவங்குகிறோம். வலது கையைத் திருப்பும்போது 'திருப்பு, திருப்பு, திருப்பு' (22) என்றும் அதைத் தூக்கும்போது 'தூக்கு, தூக்கு, தூக்கு' (23) என்றும் 'தொடு, தொடு, தொடு' (24) என்றும் குறிப்பிட வேண்டும். பின் இடது கையைத் திருப்பும்போது 'திருப்பு, திருப்பு, திருப்பு' (25) என்றும் அதைத் தூக்கும் போது 'தூக்கு, தூக்கு, தூக்கு' (26) என்றும் 'தொடு, தொடு, தொடு' (27) என்றும் குறிப்பிட வேண்டும். இடது கையைத் தூக்கும்போது, முதுகையும் 45° கோணத்திலிருந்து நேர்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அசைவைக் குறிப்பிட வேண்டியதில்லை. இடது கை மார்போடு சேரும் அதே நேரத்தில் முதுகையும் நிமிர்த்துக் கொள்ளுங்கள் (வரைபடம் 26 பார்க்கவும்).
பின் மீண்டும் இரண்டு கைகளையும் நெற்றிக்குத் தூக்கும்போது, 'தூக்கு, தூக்கு, தூக்கு' (28) என்றும், 'தொடு, தொடு, தொடு' (29) என்றும், மீண்டும் மார்புக்குக் கொண்டு வரும் போது 'இறக்கு, இறக்கு, இறக்கு' (30) என்றும் 'தொடு, தொடு, தொடு' (31) என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும். பின் முதுகை மீண்டும் வளைத்துக் 'குனி, குனி, குனி' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். [2]
இறுதியாக இரண்டு கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக இறக்கி 'இறக்கு, இறக்கு, இறக்கு', 'தொடு, தொடு, தொடு', 'மூடு, மூடு, மூடு' , 'இறக்கு, இறக்கு, இறக்கு', 'தொடு, தொடு, தொடு', 'மூடு, மூடு, மூடு' என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும். மீண்டும் நெற்றி தரையிலுள்ள பெருவிரல்களைத் தொட வைக்க வேண்டும், 'குனி, குனி, குனி', 'தொடு, தொடு, தொடு' பின் மீண்டும் நிமிர்ந்து 'உயர்த்து, உயர்த்து, உயர்த்து' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். இது இரண்டாம் முறையாகச் சாஷ்டாங்கமாக வணங்குவதாகும். பின் மூன்றாம் முறையாக இதே முறையில் வணங்க வேண்டும். 22 - லிருந்து மீண்டும் அனைத்துப் படிகளையும் முறையாகச் செய்ய வேண்டும்.
மூன்றாம் முறை வணங்கிய பின்னர் முன் போலவே தரையிலிருந்து வலது கை 'திருப்பு, திருப்பு, திருப்பு', 'தூக்கு, தூக்கு, தூக்கு', 'தொடு, தொடு, தொடு'. பின் இடது கை 'திருப்பு, திருப்பு, திருப்பு', 'தூக்கு, தூக்கு, தூக்கு', 'தொடு, தொடு, தொடு'. பின் இரண்டு கைகளையும் நெற்றிக்குக் கொண்டு வரும்போது ''தூக்கு, தூக்கு, தூக்கு', 'தொடு, தொடு, தொடு' பின் மார்புக்குக் கொண்டு வரும் போது 'இறக்கு, இறக்கு, இறக்கு', 'தொடு, தொடு, தொடு' என்று சொல்லிக் கொள்ள வேண்டும். இதே முறையில் மீண்டும் நான்காம் முறை வணங்குவதற்குப் பதிலாகக் கைகளைத் தொடைமீது வைத்து மீண்டும் முந்தைய நிலைக்கே கொண்டு வந்துவிடுங்கள்; வலது கையில் துவங்கி 'இறக்கு, இறக்கு, இறக்கு' (32), 'தொடு, தொடு, தொடு' (33), 'மூடு, மூடு, மூடு' (34) பின் இடது கை 'இறக்கு, இறக்கு, இறக்கு' (35), 'தொடு, தொடு, தொடு' (36), 'மூடு, மூடு, மூடு' (37).
சாஷ்டாங்கமாக வணங்கிய பின்னர், நடைத் தியானத்தையும், உட்கார்ந்து செய்யும் தியானத்தையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டும். மேலும் ஒரு நிலையிலிருந்து மற்றதற்கு மாறும்போது கடைப்பிடியோடு அந்நிலையை மாற்ற வேண்டும். அவசர அவசரமாகக் கவனம் இல்லாமல் நிற்பதோ, உட்காருவதோ கூடாது. நிற்பதற்கு முன் 'உட்கார், உட்கார்' (38) என்றும் உடலை நிற்கும் நிலைக்குக் கொண்டு வந்த பின் 'நில், நில்' (39) என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும். நின்ற பின்னர், உடனே நடைத் தியானத்தைத் துவங்குங்கள். இதனால் நிகழ் காலத்தில் உள்ள கவனம் விடுபடாமல் தொடரும். நடைதியானம் உட்கார்ந்து செய்யும் தியானத்துக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறதோ அதுபோலவே, சாஷ்டாங்கமாக வணங்குவது பற்றிய பயிற்சி, நடைத் தியானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
தீவிரமான தியான முகாம்களின் போது, மாணவர்கள் இந்த மூன்று வழிகளிலும் பயிற்சி செய்யுமாறு போதிக்கப் படுவார்கள்; பயிற்சியை ஒருமுறை முடித்த பின்னர், சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் முதலிலிருந்து பயிற்சியைத் துவங்குவார்கள். இப்படித் திரும்பத் திரும்பப் பாட நேரம் முடியும் வரை பயில வேண்டும் - பொதுவாக இது இருபத்து நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். இந்தக் காலம் முடிந்தபின்னர் மாணவர்கள் ஆசிரியரைச் சந்தித்துத் தங்களது அனுபவத்தைக் கூறிய பின்னர் அடுத்த பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள். அதில் நடைப் பயிற்சி மற்றும் உட்காரும் பயிற்சி முறைகளிலுள்ள மேலும் சிக்கலான பாடங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
இந்தப் புத்தகத்தில் அடிப்படைத் தியான முறை மட்டுமே கூறப்படுவதால் மேலும் முன்னேற்றதுக்கு இட்டுச் செல்லும் பாடங்கள் விளக்கப் படவில்லை. இந்த அடிப்படை முறைகளைச் சிறப்பாகப் பயின்ற பின்னர் ஒரு தகுதியான ஆசிரியரைச் சந்தித்து மேலும் முன்னேறுவதற்கான வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளலாம். தியானப் பாடத் திட்டத்தில் சேர்வதற்கு முடியாவிட்டால் இந்த முறைகளைத் தினசரி ஒன்று அல்லது இரண்டு முறை நீங்களே பயின்று முன்கூட்டியே ஒரு ஆசிரியரிடம் கலந்து கொண்டபின் அவரிடம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை சந்தித்துப் படிப் படியாகப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
தியானம் எப்படி முறையாகச் செய்வது என்பதன் விளக்கம் முற்றுப் பெற்றது; அடுத்த அத்தியாயத்தில் தினசரி வாழ்க்கையில் இந்தப் புத்தகத்தில் கற்றுக் கொண்டதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம். தியானம் செய்யவதில் உங்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு நன்றி. இந்தப் போதனை உங்களுக்கு நீடித்த அமைதியையும், மகிழ்ச்சியையும், துன்பத்திலிருந்து விடுதலையும் தரவேண்டும் என்பதே எனது விருப்பம்.
விளக்கம்:
[1] எண்கள் பின்னிணைப்பில் உள்ள வரைபட எண்களைக் குறிக்கும்.
[2] வழிமுறைப் படங்கள் 12 - லிருந்து 31 வரை – இரண்டாம், மூன்றாம் வணக்கங்கள் பயிற்சி செய்யும் முறையைக் குறிக்கின்றது.
* * *