பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு - மெத்தா

பௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு

வண. நாரத தேரர் அவர்கள்.

தமிழில்

செல்வி யசோதரா நடராசா

அநுபந்தம் - 2 ஈன-இரக்கம் மேல் தியானம்

(மெத்தா)

Meditation on Loving-kindness (Metta)

அசையாமல் அமைதியாக இரு.

மும் முறை சொல் - நமோ புத்தாய (புத்தருக்கு அஞ்சலி)

மும் முறை சொல் - அரஹம் (பரிசுத்தமானவன்)

உரத்துச் சொல் -

புத்தம் சரணம் கச்சாமி (நான் புத்தரிடம் சரண் புகுகிறேன்)

தம்மம் சரணம் கச்சாமி (நான் தம்மத்திடம் சரண் புகுகிறேன்)

சங்கம் சரணம் கச்சாமி (நான் சங்கத்திடம் சரண் புகுகிறேன்) *

* அன்னியமதத்தவர் இந்த முகவுரையைத் தவிர்க்கலாம்

இப்படியாக நினை:

என் மனம் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுத் தற்காலிகத் தூய்மையை

உடையது. வேட்கை, வெறுப்பு, அறியாமை என்பவற்றிலிருந்தும் விடுவிக்கப் பட்டது.

எல்லாத்தீய எண்ணங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டது. என் மனம் தூய்மையாகவும்

துப்பரவாகவுமுள்ளது. மினுக்கப்பட்ட முகக் கண்ணாடியைப்போல் கறையற்றது.

ஒரு துப்புரவான, கலியாணப் பாத்திரம் தூயநீரினால் நிரப்பப்படுவதுபோல நான் எனது துப்புரவான இதயத்தையும், தூய மனதையும் எல்லையற்ற அன்பான கனிவு, பொங்கி வழியும் கருணை, பரிவான களிப்பு, பரிபூரண அமைதி முதலியவற்றைப் பற்றிய உயரிய அமைதியான சிந்தனைகளால் நிரப்புகிறேன். நான் இப்போது கோபம், தீய எண்ணம், கொடுமை, அட்டுழியம், பொறாமை, ஆசை, வெறுப்பு என்பனவற்றை என் இதயத்திலிருந்தும் மனத்திலிருந்தும் கழுவிவிட்டேன்.

பத்துத்தரம் நினை.

நான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேனாக! நான் துன்பம், பிணி, அவலம், கவலை, கோபம் முதலியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவேனாக!

நான் திடகாத்திரமாக, தன்னம்பிக்கையுள்ளவனாக உடல் நலத்துடன் அமைதியாக இருப்பேனாக!

இப்படியாக நினை.

இப்போது நான் எனது தொகுதியின் ஒவ்வொரு துணிக்கையையும் எல்லையற்ற அன்பு, கனிவு, கருணை பற்றிய சிந்தனைகளால் நிரப்புகிறேன். என் முழு உடம்பும் அன்பான இரக்கம், கருணை முதலியவற்றால் நிரப்பப் பட்டுள்ளது. இவற்றின் ஒரு கோட்டையாக, ஒரு அரணாக நான் இருக்கிறேன். நான் அன்பான கனிவு, கருணையைத்தவிர வேறொன்றில்லை. நான் என்னை உயர்த்தி மேம்படுத்தி மாட்சிமையுடையவனாக ஆக்கியுள்ளேன்.

பத்துத்தரம் நினை.

நான் * நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பேனாக! நான் துன்பம், பிணி, அவலம், கவலை, கோபம் முதலியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவேனாக!

* இங்கு 'நான்' என்னும் சொல் மரபுரீதியாக உபயோகிக்கப்பட்டுள்ளது.

நான் திடகாத்திரமாக, தன்னம்பிக்கையுள்ளவனாக, உடல் நலமாக, அமைதியாக இருப்பேனாக!

இப்படியாக நினை.

மனதுக்குரிய ரீதியில் நான் அன்பான கருணையின் ஒளிவட்டத்தை என்னைச்சுற்றி உருவாக்குகிறேன். இவ்வொளிவட்டத்தின் மூலமாக நான் எல்லா எதிர்மறையான சிந்தனைகளையும், எதிரான அதிர்வுகளையும் வெட்டியெறிகிறேன். மற்றவர்களின் தீய அதிர்வுகளால் நான் பாதிக்கப்படவில்லை. நான் தீமைக்கு நன்மையும், கோபத்துக்கு ஈன-இரக்கமும், கொடுமைக்குக் கருணையும், பொறுமைக்குப் பரிவான களிப்பையும் தருகிறேன். நான் அமைதியையும் நல்ல சமநிலையான மனதையும் உடையவன்.

இப்போது நான் ஈன இரக்கத்தின் அரணாகவும் நல்லொழுக்கத்தின் கோட்டையாகவும் இருக்கிறேன். நான் பெற்ற பலன்களை இப்போது மற்றவர்களுக்கு அளிக்கிறேன்.

உன்னுடைய உற்றார் உறவினரைத் தனித்தனியாக அல்லது கூட்டம் கூடமாக நினைத்து, அவர்களை அன்பான கனிவு நிறைந்த, சிந்தனைகளால் நிரப்பி, "எல்லா உயிர்களும் நலமாக மகிழ்ச்சியாக இருப்பதாக," என்ற சுலோகத்தை மீண்டும் உச்சரித்து, அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அவர்களை வாழ்த்து. பிறகு எல்லாக் காணப்படும் உயிர்கள், காணப்படாத உயிர்கள், அண்மையிலிருப்பவை, சேய்மையிலிருப்பவை, ஆண், பெண், விலங்குகள் நாற்றிசைகளிலும் மேலும் கீழும் உள்ள எல்லா உயிர்கள் ஆகிய அனைத்தையும் நினைத்து அவைகளிடம் அன்பான கனிவைப் பகைமையின்றியும், தடங்கலின்றியும், சமயம், நிறம், பாலின வகுப்புப் பேதமின்றியும் செறியச்செய்.

வாழ்வு என்ற சாகரத்தில் எல்லோரையும் சகோதர சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் நினை. நீ எல்லாரோடும் ஒன்றியிரு. நீ எல்லாரோடும் ஒன்று பட்டவன்.

"எல்லா உயிர்களும் நலமாகவும் சந்தோஷமாகவும் இருபனவாக," என்றதைப் பத்துத்தடவை உரத்துச் சொல்லி அவர்கள் அமைதியாக மகிழ்ச்சியாக இருபதற்கு வாழ்த்து.

உன்னுடைய அன்றாட வாழ்வில் உன் சிந்தனைகளை நடைமுறையில் சந்தர்ப்பத்திற்கேற்பச் செயல்படுத்து.

* * * * *