இருத்தல் என்றால் என்ன?

இருத்தல்

பிக்கு அஜான் சோனா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Being

Adapted from a Dhamma talk by Ajahn Sona

English version follows the Tamil translation.

கேள்வி: இருத்தல் என்றால் என்ன?

பௌத்தப் பார்வையில் இதற்கு ஒரு வார்த்தை உண்டு - 'பவா' (பாலி மொழியில் பவா Bhava. தமிழில் பவம்). இதனை இருப்பு/இருத்தல் அல்லது ஆகுதல்/ஆகுகை அல்லது உளதாதல் என்று மொழி பெயர்க்கலாம். இருப்பவரைப் பற்றிப் புத்தர் சுட்டிக் காட்டுவது என்னவெனில், ஒருவிதத்தில் அப்படி 'இருப்பவர்' என்று யாரும் இல்லை என்பதுதான். அதாவது நிலையாக இருக்கும் பொருள் ஒன்றும் இல்லை. எனவே இருத்தல் என்று நாம் நினைப்பது எப்போதும் ஆகுதல் என்பதே. நிலையான இருப்பு இல்லை. இருப்பது ஓட்டம் மட்டுமே.

காவிரி ஆறு ஒரு நிலையான பொருள் இல்லை. அதனைத் தேடிச்சென்றால் காண்பது ஒரு தொடர் செயலை மட்டுமே. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் காவிரி ஆறு என்று குறிப்பிடுவது நம் வழக்கம். காவிரி ஆறு என்றால் என்ன? நீர் கீழ் நோக்கி ஓடுகிறது. ஒரே நாளில் நீர் கடலைச் சென்றடைகிறது. பின் ஒரு புதிய ஆறு உருவாகிறது. ஒவ்வொரு நாளும் அது புதுபிக்கப் படுகிறது. அல்லது ஒவ்வொரு மணியிலுமா? ஒவ்வொரு நிமிடத்திலுமா? அதன் கரை எங்கு உள்ளது? அதன் கரை எங்கு உள்ளதென்று உறுதியாகக் குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா? நீரின் எல்லை எங்கே? காவிரி ஆறென்று குறிப்பிட்டால் அது அதில் ஓடும் நீரை மட்டும் குறிக்குமா அல்லது நீர் கலந்த மண்ணையும் குறிக்குமா அல்லது அதன் கரையிலிருந்து இரண்டடி சென்றபின் துவங்குகிறதா அல்லது மூன்றடியா அல்லது அதன் கரை சென்ற ஆண்டு இருந்த கரையைக் குறிக்குமா? காவிரி ஆற்றைத் தேடினால் அதைக் கண்டு பிடிக்க முடியாது. அதே சமயம் காவிரி ஆறு என்று சொல்வது ஒரு பயனுள்ள கருத்து. 'காவிரி ஆற்றைக் கடந்து சென்றேன்,' என்றால் எல்லோருக்கும் நாம் என்ன சொல்கிறோம் என்பது விளங்கும். ஏறத்தாழ விளங்கும். நாமும் அது போலத்தான். நாம் பல சம்பவ ஆறுகளைக் கொண்டவர்கள். நமது எல்லை எதனோடு முடிகிறது? மூச்சென்ற ஆறு நமக்குள் ஓடுகிறது. காற்றை உள் மூச்சின் போது இழுக்கிறோம். அந்தக் காற்று என்ற ஆறு எங்கு முடிகிறது? நுரையீரலின் உள்ளேயா அல்லது அதனுள் ஊடுருவிக் கிடக்கும் துவாரங்களிலா? காற்றுத் தன்மை எங்கு முடிகிறது? கெட்டித் தன்மை எங்கு துவங்குகிறது? இந்த உடலில் கெட்டியான பொருட்களும் திரவங்களும் உள்ளன. இங்கு உட்கார்ந்து தேநீர் பருகுகிக் கொண்டிருக் கின்றோம். நாம் திரவ ஆற்றை நமக்குள் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம் எனலாம். அந்தத் தேநீர் எப்போது நாமாகிறது? வாயினுள் உள்ள போதா? வாயிலிருக்கும் போது அதைத் துப்பி விட்டால் பின் அது நாமாகாதா? உங்கள் அனுமதி இல்லாமல் அந்தத் தேநீரை யாரவது தொட்டால் அப்போது உங்கள் மனம் புண்படுமல்லவா? அது அங்கு (சில அடிகள் தள்ளி உள்ள கோப்பையில்) உள்ள போது யாரவது அதைத் தொட்டால் மனம் புண் படுவதில்லை. அதை ஒரு வாய் குடித்து உங்கள் வாயில் உள்ள போது யாரவது உங்கள் கன்னத்தைத் தொட்டால் உங்களுக்குக் கோபம் எழுகிறது. அந்தத் தேநீர் இப்போது 'நாம்' ஆகி விட்டது. குறிப்பாக அதை விழுங்கிய பின் யாராவது முதுகைத் தட்டினாலோ, விரலைக் கொண்டு குத்தினாலோ - அது அவர்கள் ஆசையோடு செய்தாலும் சரி, வெறுப்போடு செய்தாலும் சரி - நமக்குக் கோபம் கொப்புளித்துக் கொண்டு வந்து விடுகிறது. 'என்னைத்' தொட்டு விட்டாயா? ஆனால் அது வெறும் நீர் தான் இல்லையா? அது வெளியே உள்ள வரை அதை 'நாம்' என்று நினைப்பதில்லை. குடித்த பின் அதை 'நாம்' என்று நினைக்கின்றோம். பின் அதை உடலிலிருந்து சிறுநீராகக் கழித்த பின் அதனை யார் தொட்டாலும் நமக்குப் பிரச்சனையில்லை. அது எப்போது நமதாகிறது? எப்போது நமதில்லாமல் போகிறது? உங்கள் மூச்சைக் கவனித்துப் பாருங்கள். ஒரு நொடி நமக்குள் சென்றபின் அது நமதாகிறது, வெளியே வந்தபின் அது நமதில்லை. நீர் நமக்குள் ஓடுகிறது –முதலில் கோப்பையிலிருக்கும் போது, அது நாம் இல்லை. குடித்த பின் நமதாகிறது. பின் மீண்டும் உடலிருந்து சிறுநீராகக் கழிந்த பின் அது நாம் இல்லை. இவையெல்லாம் கருத்துக்கள் மட்டுமே.

இதைத்தான் நாம் நான்கு பூதங்கள் என்கிறோம். நமது உடல் நான்கு பூதங்களால் உருவானது. அவை மண், நீர், வளி (காற்று), தீ ஆகியவை. இங்கு மண் என்பது கெட்டித்தன்மையைக் குறிக்கின்றது. கெட்டியான உணவு என்பது வாழ்கிற பொருள் அல்லாத மண்ணை, வாழ்வு சம்பந்தமான மண்ணாக மாற்றுவதனால் உண்டானது. வாழ்வு சம்பந்தமான மண்ணாகும் போது அதனை நாம் ஜீரனிக்கமுடிகிறது. ஒரு வெண்டைக்காயை வாழ்வு சம்பந்தமான மண் எனலாம். முன் அது வாழ்வு சம்பந்தமில்லாத மண்ணாக இருந்தது. அதன் விதை அதனை வாழ்வு சம்பந்தமான மண்ணாக்கிப் பின் அதை உண்டதால் நாமும் வாழ்வு சம்பந்தமான மண்ணாகி விடுகிறோம். அவ்வளவு தான். அது தான் இந்த உடல். உயிரியல் செயற்பாட்டினால் வாழ்வு சம்பந்தமான மண் உடலாகிறது. ஆனால் நம் உடலை யாராவது ஒருவர் போற்றவில்லையென்றாலோ அல்லது யாராவது ஒருவர் அவமதித்துவிட்டாலோ நமக்குத் துயரம் உண்டாகிறது. இந்த உடலைப் பற்றி யாராவது பேசி விட்டால் பொதுவாகப் பேசுவதாக எடுத்துக் கொள்ளாமல் 'நம்மைப்' பற்றிப் பேசுகின்றார் என்று எடுத்துக் கொள்கிறோம். எல்லாம் சம்பவ ஆறுகள்; மாறிக் கொண்டே இருக்கும் சம்பவங்கள். துறவிகளாகிய நாங்கள் எங்கள் தலை முடியை மழித்துக் கொள்கிறோம். முடி இருக்கும் போது யாராவது வந்து முடியைத் (தலையைத்) தொட்டால் நமக்குக் கோபம் உண்டாகிறது. 'அட என்ன செய்கிறாய்?' என்று சற்று எரிச்சலுடன் கேட்கிறோம். ஆனால் அதை மழித்த பின் அது தரையில் விழுந்தபின் அதைத் துடைப்பத்தால் பெருக்கித் தள்ளினாலும் நம்மை அது பாதிப்பதில்லை. நாம், 'நமது' என்பதைப் பற்றி விசித்திரமான எண்ணங்களைக் கொண்டுள்ளோம். 'நான்' என்ற உணர்ச்சி இந்த வாழ்வில் நமக்குப் பொதுவாகத் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் சற்றே ஆராய்ந்தால் அப்படி நிலையான 'நான்' என்ற ஒன்று இல்லாதது விளங்கும். தொடர்ந்து ஓடும் எண்ண ஆறுகளும் உணர்ச்சி ஆறுகளுமே உண்டு. உடலும் மாறிக்கொண்டே இருக்கும் ஓர் ஆறு போலத்தான். இது தான் உள்ளது உள்ளபடியான உண்மை.

ஆற்றில் நீர்ச்சுழிகளும் உண்டு. காவிரி ஆற்றுக்குச் சென்றால் அதில் எங்காவது ஒரு நீர்ச்சுழியைக் காணலாம். பத்து வருடங்களுக்கு முன்பும் அந்த நீர்ச்சுழி இருந்திருக்கலாம்.

முன்மாதிரியே இப்போதும் தோன்றினாலும் அதே நீர், அந்த நீர்ச்சுழியில் இருப்பதில்லை. மழைக்காலத்தில் ஆற்றில் நீர் பொங்கி வரும்போது நீர்ச்சுழி மறைந்து விடுகிறது. நீர்ச்சுழி ஒருவரைக் குறிக்கும் தனித்தன்மை எனலாம். நாம், 'அவர் கொஞ்சமும் மாறவில்லை,' என்று ஒருவரைப் பற்றிக் கூறுகிறோம். அது போன்று பேசுவது ஒருவரின் தனித்தன்மையைக் குறிக்கிறது. ஆனால் அது ஒரு நீர்ச்சுழி மட்டுமே. தொடர்ந்து ஓட்டம் உள்ள நீர்ச்சுழி. ஆற்றின் கரையில் உட்கார்ந்து கொண்டு ஆற்றின் நீர்ச்சுழிகளையும் அலைகளையும் பார்க்கும் போது அவற்றின் பௌதிகவியல் சம்பந்தமான தன்மைகள் மிகவும் சிக்கலானவை என்பதை அறிகிறோம். திரவத் தன்மையும் திரவச் செயற்பாடுகளும் மிகச் சிக்கலானவை. அந்த நீர்ச்சுழியை மாற்ற வேண்டுமென்றால் அந்த நீர்ச்சுழிக்கே நேராகச் செல்லாமல் சற்று ஆற்றின் மேற்புரம் சென்று ஒரு பெரிய கல்லை வைத்தால் போதும். அதன் காரணமாக நீரோட்டம் மாற்றமடைந்து நீர்ச்சுழியும் மறைந்துவிடும். அல்லது நீர்ச்சுழியை உண்டாக்கும் பாறையை அகற்றிவிட்டாலும் போதும். நீர்ச்சுழி ஏன் உருவாகிறது? ஏனென்றால் ஒரு பாறை நீர் ஓட்டத்தைத் தடை செய்வதால் நீரில் சுழல் உண்டாகிறது. எனவே அந்தப் பாறையை அகற்றிவிட்டால் நீரில் ஏற்பட்ட சுழலும் மறைந்துவிடும். இப்படித்தான் பௌத்தம் மாற்றத்தை உண்டாக்குகிறது. உங்களுக்குள் நீங்கள் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்க விரும்புகின்றீர்கள்? எந்த நீர்ச்சுழியை நீக்க விரும்புகின்றீர்கள்? (அதாவது உங்களின் விரும்பத்தகாத தனித்தன்மை) உங்களுக்கு வேறு ஒரு நீர்ச்சுழி உருவாக்க வேண்டுமா? அப்படியென்றால் நீர்ச்சுழியுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியதே இல்லை. ஆற்றில் நீர் வந்த வழியே சற்று மேலே சென்று அங்கு ஒரு தடங்கலை உருவாக்கவோ அல்லது உள்ள தடங்கலை நீக்கவோ முற்படவேண்டும். அப்படித்தான் நீங்கள் ‘இருத்தல் அல்லது ஆகுதல்’ ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும். இருத்தல் என்றோ இருக்கும் ஒருவரோ இல்லை. ஆகுதல் மட்டுமே உள்ளது. ஆகுதலை உண்டாக்கும் காரணிகள் தொடர்ந்து இருக்கின்றன. விளைவுகளின் மீது கவனம் செலுத்தாமல், காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். வீடு கட்டும் போது முடிந்த பின் வீடு எப்படி இருக்கும் என்று தொடர்ந்து கனவு கண்டு கொண்டிருக்க வேண்டாம். செங்கல்லை ஒன்றன் மீது ஒன்றாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இப்படிக் கவனம் செலுத்தினால் வீடு தானாக உருவாகி விடும். இல்லையா? விளைவுகளைப் பெற முடியாது. நமது செய்கை காரணிகள் மீது மட்டுமே இருக்க முடியும். காரணிகளைச் செய்தால் விளைவு தானாக வரும். வரலாம் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக வரும். காரணிகளைச் செய்யாவிட்டால் விளைவும் கண்டிப்பாக வராது. எனவே கவனத்தை விளைவுகள் மீது செலுத்த வேண்டாம். அது உங்கள் சக்தியை வீணாக்கி விடும். காரணிகள் மீதே கவனம் செலுத்துங்கள். இறுதியாகப் பெற விரும்புவதை முடிவு செய்யுங்கள் - இந்த உலகில் நீங்கள் எங்கு போக விரும்புகின்றீர்கள்? என்னவாக விரும்புகின்றீர்கள்? தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றோம். சம்பவங்கள் தொடர்ந்து ஆறு போல ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றை விரும்பியவாறு திசை திருப்பத் தகுந்த காரணிகளைச் செய்ய வேண்டும்.

நல்ல விளைவுகளைக் காண வேண்டுமானால் அதற்குத் தேவையான காரணிகள் விளக்கப் பட்டுள்ளன. அதில் மர்மம் ஒன்றும் இல்லை. அதிக அவா இருந்தால் விருப்பமற்ற விளைவுகள் உண்டாகும். அறியாமையின் காரணமான ஏற்படும் ஆசை, அவா, கிடைக்க முடியாதவை மீது ஆசை கொள்வது போன்றவை. ராக்கூன் என்ற விலங்கை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா? அது தனது உணவைக் கழுவிய பின்தான் சாப்பிடும் என்ற செய்தி வியப்புக்குரிய ஒன்றாகும். உணவு கிடைத்தால் அருகில் நீர் இருந்தால் உடனே அதைக் கழுவி விடும். அதனிடம் ஒரு சர்க்கரைக் கட்டியைத் தந்தால் அதை உடனே கழுவ ஆரம்பிக்கும். ஆனால் சர்க்கரைக் கட்டியோ தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடுமல்லவா? அதனால் ராக்கூன் குழப்பமடைந்து விடுகிறது. மறுபடியும் ஒரு சக்கரைக் கட்டியைத் தந்தால் மீண்டும் அதைக் கழுவத் துவங்குகிறது. உணவைக் கழுவியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அதற்கு. ஆகவே அதனுடைய இந்த முயற்சி சில சமயம் முற்றுப் பெறாமலே போய்விடுகிறது. உணவு கரையக் கூடியதாக இருந்தால் அதனுடைய வேலை நிறைவு பெறாது. எனவே அதன் அறியாமையால் உணவைக் கழுவ வேண்டும் என்ற ஆசை இருப்பதாகக் கூறலாம். அந்தச் சர்க்கரைக் கட்டி அதற்கு உணவாகக் கிடைப்பதே இல்லை. ஏனென்றால் அதை எப்போதும் கழுவிக் கழுவிக் கரைத்து விடுகிறது. ஆசைப்படுவதில் என்ன பிரச்சனை? ஆசைப் படுவதால் நாம் விரும்பும் பல விஷயங்கள் நமக்குக் கிடைக்கும் அல்லவா? - காட்சிகள், ஒலி.. போன்றவை. அழகான பொருட்கள் - அவை உண்மையில் பார்வை சம்பந்தபட்டது தான் இல்லையா? பொருள் பெரிய விஷயம் இல்லை - அதன் பார்வையில் தான் உள்ளது விஷயம். நமக்கு ஒன்றின் காட்சி பிடிக்கிறது, ஒன்றின் சப்தம் பிடிக்கிறது, ஒன்றின் நுகர்வு, சுவை பிடிக்கிறது, ஒன்றைத் தொட்டால் பிடிக்கிறது, ஒன்றின் எண்ணம் நமக்குப் பிடிக்கிறது. உண்மையில் ஒன்றைப் பார்க்கும் போது அதிலிருந்து வரும் ஒளி நம் கண்களில் படுவது மட்டுமே நமக்குப் பிடிக்கிறது எனலாம். கண்களில் படும் ஒளி தான் நமக்குத் திருப்தி தருகிறது - அந்தப் பொருள் இல்லை. ஒரு பொருளை எப்படி அனுபவிக்கின்றோம்? பார்வையால் தான் அனுபவிக்கிறோம். அந்தப் பொருளைக் கண்களில் திணிக்கவும் முடியாது அல்லது அதை உண்டு அனுபவிக்க முடியுமா? முடியாது. அதிலிருந்து வரும் ஒளி நமது கண்களில் விழுகிறது. அவ்வளவு தான். ஒரு பொருள் மீது நாம் சொந்தம் கொண்டாடுவது மிகவும் விசித்திரமான விஷயம். இந்த வீடு என்னுடையது, இந்த நிலம் என்னுடையது, அப்படி இப்படி என்கிறோம். நமக்குச் சொந்தமானது எது? ஒளி மட்டுமே. அதற்கு எவ்வளவு காசு செலவுசெய்கிறோம்! யார் வேண்டுமானாலும் அதை இலவசமாகப் பார்க்கலாம். அவர்கள் கண்களிலும் அதே ஒளிதான் படுகிறது.

நான், துறவறம் பூணுமுன் இசைக் கலைஞனாக டொரண்டோ நகரில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தேன். பணக்காரர்கள் வாழும் பகுதியில் நான் தங்கியிருந்தேன். என்னால் அங்கு வீடு வாங்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. ஓர் இடத்தில் வாடகைக்குக் குடியிருந்தேன். நான் தங்கியிருந்தது அந்தப் பெரிய மாளிகைகளுக்கு அருகிலேயே இருந்தது. எனக்கு வேடிக்கை பார்க்க, நடந்து செல்ல நேரம் இருந்தது. அப்பகுதியில் சுமார் ஒரு ஆண்டு காலத்தில் குறைந்தது 150 தடவையாவது நான் நடை பயின்றிருப்பேன். எனினும் அச்சமயத்தில் நான் அதிகப் பட்சம் இருவரை மட்டுமே சந்தித்திருப்பேன். ஆள் நடமாட்டம் இல்லாத இடம். மிகவும் அழகிய வீடுகள். சில மிகப் பழமையானவை. அழகான கட்டட நிர்மாணம். நான் அவற்றை ரசிக்க அவற்றிற்குச் சொந்தக்காரனாக இருக்க வேண்டுமென்பதில்லை. அவற்றின் அருகில் நடந்து சென்று, பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் வேறு எப்படி அவற்றை ரசிக்கப் போகின்றனர்? அவர்களும் பார்த்துத்தான் ரசிக்க முடியும். அவ்வீடுகளின் வெளிப்புறத்தை என்னால் ரசிக்க முடிந்தது. வீட்டின் சொந்தக்காரர்கள் எங்கே? அவர்களுக்கு எந்நேரமும் வேலை. ஓய்வில்லாத வேலை. பகலில் வீட்டில் இருப்பதே இல்லை. வெளிச்சம் வரும் முன்னர் வேலைக்குச் சென்று விட்டு, இருட்டிய பின்பே வீடு திரும்புகின்றனர். தங்கள் வீடுகளை ரசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. நான் பார்த்த ஓரிருவரும் அவ்வீடுகளில் பணிக்கு அமர்த்தப் பட்ட ஊழியர்கள் தான். குழந்தைகளைக் கவனிக்கும் ஆயாக்கள். அவர்கள் அவ்வீட்டுச் சொந்தக்காரர்கள் இல்லை. சொந்தக்காரர்களுக்கு நேரமே இல்லை. பரிதாபம் தான். எனவே வீடு என்பது கண்ணில் விழும் ஒளி மட்டுமே. வீட்டுக்குள் என்னால் பார்க்க முடியவில்லையென்றாலும் யார் வேண்டுமானாலும் வெளிப்புறத்தை இலவசமாகப் பார்த்து ரசிக்கலாம். நம் வீட்டை மட்டும் அல்லாமல் மற்றவர் வீடுகளையும் ரசிக்கலாம். சொந்தம் கொண்டாடுவதென்றால் என்ன? பார்க்கும் பொருட்களுடன் உள்ள உங்கள் உறவெல்லாம் உங்கள் கண்களில் விழும் ஒளிக் கதிர்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே. உங்கள் கண்களில் குறைபாடுகள் இருந்தாலோ, கண்பார்வையற்ற குருடராக இருந்தாலோ உங்களுக்குப் பெரிய வீடு இருந்தாலும் அதைப் பார்க்க முடியாது. வீடு மறைந்து விட்டது போலத்தான். சுவற்றைத் தடவிப் பார்க்கலாம். அவ்வளவு தான். எனவே உங்களுக்குச் சொந்தமான தெல்லாம் ஒளி சம்பந்தப்பட்டவை தான். உள்ளத்தின் அனுபவங்கள் எல்லாம் புலன் சம்பந்தப்பட்டவை.

இந்த உலகம் என்பது என்ன? புத்தரின் கருத்துப்படி உலகம் என்பது பார்வைகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவை, உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மட்டுமே. இது தான் உலகம். பிரதிபலித்துப் பாருங்கள். இந்த உலகம் இந்த உடலினுள் உண்டானதே. இங்கு தான் உலகத்தைக் காணமுடியும். நமக்கு உரிய உலகம் என்பது நமது உலக அனுபவங்கள் மட்டுமே - காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், சுவைகள், உணர்வுகள் ... பிரச்சனை என்னவென்றால் நாம் அவற்றுக்குச் சொந்தம் கொண்டாட விரும்புகிறோம். அவற்றுக்கு ஆசைப் படுகிறோம். அவற்றை நிலையாக்க விரும்புகிறோம். பற்றிக் கொள்ள விரும்புகிறோம். ஆகவே நமக்கும் சக்கரை கட்டியை நீரில் கழுவும் ரக்கூனுக்கும் வேறுபாடு இல்லை. இவற்றைச் செய்ய முடியாது. இருப்பது வெளிச்சம் மட்டுமே - கண்களில் படும் ஒளி அவ்வளவு தான். வெறும் நுகர்வுகள், சுவைகள் மட்டுமே. அவற்றை நிலையாக்க முடியாது. எனவே நமது ஆசை நிறைவேறாமல் நிலை குலைந்து போய் விடுகிறோம். இவற்றை நிலைநிறுத்திச் சொந்தம் கொண்டாடுவது முடியாத காரியம். எனவே எல்லாம் ஆகுகை என்கிறோம். எல்லாம் ஆகுகை என்பதை அறிகிறோம். பல உலகங்கள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கும் ஒரு உலகம். உங்களுக்குக் கண் பார்வை இல்லாவிட்டால் அந்த (பார்வை சம்பந்தபட்ட) உலகமும் இருப்பதில்லை. மேலும் உலகத்தைத் தரவாரியாகவும் பிரிக்கலாம். கண்கள் இருந்தும் ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். ஒன்றைப் பற்றித் தகவல் இல்லாமல் இருக்கலாம். அது சம்பந்தப்பட்ட உலகம் உங்களுக்குத் தெரிவதில்லை. உதாரணமாகக் கலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கலை உலகம் பற்றி ஒரு நாய்க்குத் தெரியுமா? ராஜா ரவி வர்மாவின் ஓவியம் நம் வீட்டு நாய்க்கு விளங்காது. அந்த ஓவியத்தைச் சுவற்றோரம் சாய்த்து வைத்தால் அந்த நாய் சிறுநீர் கழிக்கத்தான் அதைப் பயன் படுத்தும். அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. கண்களால் பார்க்க முடிந்தாலும் அந்தக் கலை உணர்வு நாய்க்கு இல்லை. அதே போலப் பக்குவமில்லா மனிதர்களுக்கும் அந்தக் கலை உணர்வு இருப்பதில்லை. இவ்வுலகம் நமது உள்ளத்தில் மட்டுமே உள்ளது. புறத்தில் இல்லை. இந்த உலகம் உண்டாவதெல்லாம் ஆகுதல் என்பதால் தான். நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொண்டால் அந்த உலகம் விளங்கும். கோடிக்கணக்கான உலகங்கள் உள்ளன. எவை இரண்டும் ஒன்று போல இருப்பதில்லை. இருத்தல் என்பது அந்த இருத்தல் பற்றிய அனுபவத்திற்கு வெளியே இல்லை. இவை எல்லாம் நம்முள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பிடித்துப் பார்த்துச் சொந்தம் கொண்டாட முயன்றால் அது அறியாமையினால் உண்டான ஆசை எனலாம். ஏனென்றால் அவற்றின் ஓட்டம், மாற்றம் தான் இயற்கை நிலை. இது தான் ஆசையினால் உருவான பிரச்சனை. நம்மைச் சுற்றி நடப்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் அது நம்மை நிலைகுலைய வைத்து விடும்.

சரி. இருத்தல் பற்றி நான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன்.

கேள்வி: இருக்கையும், 'நான்' என்ற எண்ணமும் வேவ்வேறு விஷயங்களா?

'நான்' என்பது வழக்கத்திற்காகப் பயன்படுத்தப் படும் ஒரு வார்த்தை மட்டுமே. 'நான்', 'எனது', 'எமது' ஆகியவை பயனுள்ள வார்த்தைகள் என்றாலும் அவற்றிற்குச் சாராம்சம் ஏதும் இல்லை. 'நான்' என்ற ஒரு பொருள் இல்லை. அப்படியே இருந்தாலும் அது எப்படிப் பட்டதாக இருக்கும்? மக்கள், 'இது தான் நான்,' என்கிறார்கள். உண்மையான நான் என்கிறார்கள். அப்படி ஒரு உண்மையான பொருள் இருப்பது போலப் பேசிக் கொள்கின்றனர். ஆனால் அப்படி ஒரு பொருள் ஏதும் இல்லை. மாற்றமில்லா உண்மையான 'நான்' என்று ஒன்றும் இல்லை. இருப்பதெல்லாம் எண்ணங்கள், உணர்ச்சிகள், காட்சிகள், நுகர்வுகள், சுவைகள் - இவற்றை அறிந்திருப்பது மட்டுமே. இவை தொடர்ந்து மாற்றம் காண்பவை. 'என்னைத்’ தேட முயன்றால், இந்த 'வண்டியை' ஓட்டும் சாரதியைத் தேடமுயன்றால், கண்களுக்குப் பின்னால் உள்ள யாராவது ஒருவரைத் தேட முயன்றால், அவரைக் கண்டுபிடிக்க முடியாது. 'எனது கண்களுக்குப் பின்னால் ஒருவர் இருக்கிறார். அவர் தான் என்னை இயக்குகிறார்,' என்பது ஒரு மாயக் கருத்து. சரியாக விசாரிக்கப்படாத ஊகம் மட்டுமே. சரியாக விசாரித்தால் உங்கள் மனக் கண்ணால் அகத்தைப் பார்த்தால் அங்கு பார்ப்பவர் யாரையும், நுகர்பவர், தொடுபவர், கேட்பவர் யாரையும் காணமுடியாது. இருப்பதெல்லாம் காட்சிகளும், சுவையும், வாசனைகளும் உணர்ச்சிகளும், இவற்றைப் பற்றிய எண்ணங்களும் மட்டுமே. 'ஓ, அதை அறிந்திருக்கிறேன்.' அறிந்ததெல்லாம் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட மனக்குறிப்புகளே. நமக்குத்தெரிந்தது மனக்குறிப்புகள். அது மிக வேகமாக நடைபெறும் நினைவு சம்பந்தப் பட்டது. உதாரணமாக இது ஒரு கோப்பை (கப்) என்பதை அறிவீர்கள். ஆனால் உண்மையில் இது ஒரு கோப்பை அல்ல. கோப்பை என்று சொல்வது மனக்குறிப்புத் தான். நினைவின் காரணமாகத் தான் இதைக் கோப்பை என்கிறோம். வேகமாக நடைபெரும் மனக்குறிப்பு நேரடியாக இதனை ஒரு கோப்பை என்று அறிவதாக நினைக்க வைக்கிறது. ஆனால் ஒரு மழலைக் குழந்தைக்கு இது ஒரு கோப்பை அல்ல. வெறும் ஒரு பொருள் மட்டுமே. ஒரு காட்சி மட்டுமே. இதுவே தூய்மையான அறிந்த நிலை. அதே போலத்தான் ஒரு நாய்க்கும். நாய்க்கும் இது ஒரு கோப்பை அல்ல. அதைப் பார்க்கிறது. ஆனால் அதற்கு அங்கு ஒரு கோப்பை தெரிவதில்லை. தெரிவது ஒரு பொருள் மட்டுமே. எல்லாம் மிக வேகமாகச் செயல் படுகின்றன. நடப்பது இது தான். 'நான்' என்பது ஒரு வழக்குச் சொல் மட்டுமே. உண்மையில் வேகமாக நடைபெரும் சம்பவ ஆறுகளே உள்ளன. (அந்தப் பொருளைக் கோப்பை என்று நமது மனக்குறிப்பு தெரிவித்தவுடன் 'நான்' என்ற ஒருவர் கோப்பை என்பதைத் தெரிவித்தார் என்று தவறாக நினைக்கின்றோம். உண்மையில் இருப்பதெல்லாம் ஒரு காட்சி மட்டுமே. சிறு வயதில் இந்த வடிவில் உள்ள பொருளை ஒரு கோப்பை என்று நமக்கு சொல்லித்தரப் பட்டதால், அந்த வார்த்தையும் நம் நினைவில் இருப்பதால், அதைப் பார்த்தவுடன் கோப்பை என்கிறோம். )

கேள்வி: 'என்னை' உறுதிப் படுத்திக் கொள்ள ஆசைப் படுகிறேனே! வயதான காலத்தில் என்னைப் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்பதால் எதிர் காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கிறதே! ஓய்வூதியத்திற்கு வழி தேடவேண்டுமே! இன்றைய பொருளாதாரச் சூழலில் எதிர்காலம் உறுதியாகத் தெரியவில்லை. பத்து ஆண்டுகள் வாழ்வேனா அல்லது இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ்வேனா என்பது உறுதியில்லை. ஆனால் எதற்கும் தயார் செய்து கொள்ள வேண்டுமல்லவா! எனவே இந்த ஓட்டுனரை ஆதரிக்க ஆசை இருக்கிறது. அதனாலேயே நான் எழுந்து வேலைக்குச் செல்கிறேன்.

‘நான்’ என்ற எண்ணம்

ஆசை என்பது ஒன்று, செய்கையோ வேரொன்று. பள்ளிக்கூடம் போவது, வேலைக்குச் செல்வது, உறவுகள் போன்றவை சாதாரணமாக நாம் செய்யும் செயல்கள் . சில விஷயங்கள் நமக்கு முக்கிய மானதாகத் தோன்றும். ஆனால் அடுத்தவருக்கு அது முக்கியமானதாக இருக்காது. அடுத்தவருக்கு முக்கியமானதாக இருப்பது நமக்கு முக்கியமானதாகத் தோன்றாது. இச்செயல்களில் ஆணவ எண்ணம் அதிகம் இல்லாமல் இருந்தால்- 'எனது', 'நமது' என்ற பிணைப்பு அதிகமாக இல்லாமல் இருந்தால்- அச்செயல்களை எளிதாகச் செய்து விடலாம். அதாவது அவை கடினமான செயல்களாகத் தோன்றுவதில்லை. ஆனால் அதையே ஆணவச் செயலாக்கி விட்டால் , அதாவது, 'இந்த விளைவை நான் பெற்றாக வேண்டும்,' என்று நினைத்தாலோ அல்லது, 'இதில் நான் தோல்வியுறக் கூடாது,' என்று நினைத்தாலோ அதே செய்கைகள் அவனுக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கும். பதற்றத்தை உண்டாக்கும். இதைத்தான் நாம் ஆசை என்கிறோம். ஆசையைப் பற்றிப் பேசும் போது அதனால் உண்டாகும் சுமையைப் பற்றியே பேசுகிறோம். இதைச் செய்தே ஆகவேண்டும், அதைச் செய்தே ஆகவேண்டும் என்ற ஆசையில் சுமை உள்ளது. சில சமயம் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள்: ஓர் இடத்திற்கு நடந்து செல்கின்றீர்கள். எந்த நோக்கமும் மனத்தில் இல்லை. அப்படி நடப்பது எளிதாகச் சுமை இல்லாததாகத் தோன்றுகிறது. ஆனால் பிரிதொரு சமயம் ஒன்றை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு (ஆசையோடு) அதே நடையில் ஈடுபடுகின்றீர்கள். ஆனால் இப்போது அவசரம் உண்டாகி விடுகிறது. அந்த இடத்தை இன்னும் எட்டு நிமிடங்களில் அடைந்தாக வேண்டுமே என்ற எண்ணம் நேற்று நடந்த போது கவலை இன்றி எளிதாக நடக்க முடிந்தது. இன்றோ ஆசை இருப்பதால் அதே நடை சுமையாகத் தோன்றுகிறது. ஒரு பேருந்தில் உட்கார்ந்திருக்கும் போது கூட ஒரு அவசரம். விரைவாகப் போக வேண்டும் என்ற துடிப்பு. முன்னால் உள்ள ஆசனத்தைத் தள்ளுகிறோம். தள்ளினாலும் பேருந்து வேகமாகப் போகப் போவதில்லை. அந்தச் சந்திப்பிற்குப் போக வேண்டும் என்ற அவசரம். இதைத்தான் ஆசை என்கிறேன். ஓர் இடத்திற்குப் பேருந்தில் போக வேண்டுமா? அதில் உட்கார்ந்திருக்கும் போது நாம் துயரம் கொள்ளாமல் இருப்பதும் துயரப் படுவதும் நம் கையில் தான் உள்ளது. அதேபோலத்தான் வயதான காலத்திற்கு முதலீடு செய்து வைப்பதும். அப்படி முதலீடு செய்வதை அவசரத்தோடும், பயத்தோடும், கவலையோடும் செய்யலாம். அது சுமையான வழி. அல்லது அதே முதலீடு சம்பந்தமான வேலைகளைச் சுமை இல்லாமலும் செய்யலாம். செய்கைகள் தான் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பேராசைப் படுவதினாலோ உணர்ச்சி வசப்படுவதினாலோ இல்லை. பேராசைப் படாவிட்டால் செய்கையில் ஊக்கம் இருக்காது என்று நினைக்க வேண்டாம். இதைப் பெரும்பாலானோர் நினைத்துப் பார்ப்பதில்லை.

ஒரு எடுத்துக்காட்டுக் கூறுகிறேன். மனிதர்கள் போட்டிகளை நடத்துகின்றனர். சில போட்டிகள் மனிதர்களுக்காக நடத்தப்படுகின்றன, சில போட்டிகள் விலங்குகளுக்காக நடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் மனிதர்களுக்கும், நாய் போன்ற விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்போம். மனிதர்கள் நாய்களுக்குப் போட்டி நடத்துகின்றனர். நாய்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இது. நாய்க்கு, தான் ஒரு போட்டியில் கலந்திருப்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. தான் பார்க்க அழகாக இருப்பதோ, இல்லாததோ தெரிவதில்லை. இதைப் பற்றியெல்லாம் அதற்குக் கவலை இல்லை. மனிதருக்குத்தான் இதெல்லாம் தெரியும். நாய் நாயாக மட்டும் இருந்து இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறது. நான் ப்ரிஸ்பீயைப் (விளையாடப் பயன் படுத்தப்படும் ஒரு பிளாஸ்டிக் தட்டு) பிடிக்கும் நாய்களைப் பற்றிய படம் ஒன்றைப் பார்த்தேன். நாய்களுக்கு நாம் வேகமாக வீசும் ப்ரிஸ்பீக்களைக் தவ்விப் பாய்ந்து கவ்விப் பிடிக்க விருப்பம் அதிகம். அந்தப் படம் ‘ஸ்லோ மோஷன்’ முறையில் எடுக்கப்பட்ட படம். அற்புதமான காட்சிகள் கொண்ட படம் அது. நாய்கள் அந்தத் தட்டுகளைப் பாய்ந்து பிடிப்பது, பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. நாய்கள் காற்றைவிட விரைந்து ஓடுகின்றன. ஒலிம்பிக் போட்டியில் போட்டியிடும் மிக வேகமாக ஓடும் வீரர்களைவிட அதி வேகமாக ஓடுகின்றன. நாய்கள் தட்டின் வேகத்தைச் சரியாகக் கணித்து, குதித்துத் தங்கள் வாயால் அதைக் கவ்விப் பிடிப்பது அதிசயமான காட்சி. N B A கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் வீரர்கள் உயரக் குதித்துப் பந்தைப் பிடித்துக் கூடைக்குள் போடுவதைவிட, அற்புதமாகத் தட்டுகள் நிலத்தைத் தொடுவதற்குமுன் நாய்கள் கவ்விப் பிடித்து விடுகின்றன. அந்த நாய்களின் உடலையும், கால்களையும் கவனித்தால், அழுத்தமோ, பதட்டமோ இல்லாமல் மிக இயல்பாக எம்பிக் குதித்துத் தட்டுக்களைக் கவ்விப் பிடிப்பது தெரிகிறது. நாய்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. குதிக்கும் போது எந்த அழுத்தமும், பதட்டமும் இல்லாமல் குதிக்கின்றன. பிடிப்பதும் அழுத்தம் இல்லாமல் பிடிக்கின்றன. அதன் பின் எங்கு தரையில் இறங்கலாம் என்பதை யோசித்து இறங்குகின்றன. எல்லாம் சரியான வரிசையில் இயல்பாகச் செய்கின்றன. நாய்கள், 'கடவுளே! தட்டைத் தவற விட்டால் என்ன ஆகும்?,' என்றோ, அதைப் பிடிக்கவில்லையென்றால் நாம் தோற்றுப்போய் விடுவோமே,' என்றெல்லாம் கவலைப் படுவதில்லை. தன்னைத்தானே தூண்டிக் கொள்வதும் இல்லை. 'வெற்றி பெற்றால் அத்தனை பேரும் தன்னைப் புகழ்வார்கள் என்றும் நினைப்ப தில்லை. இவை ஏதும் இல்லாமலும் எவ்வளவு அற்புதமாக குதித்துத் திறமையாகச் செயல்படுகின்றன! 'நாய் தட்டைப் பிடித்த பின் எங்கு தரையில் இறங்குவது என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. இதையெல்லாம் நாய் செய்வதில்லை. குதிக்கிறது, பிடிக்கிறது, பின் தரையில் பாய்கிறது. சரியாக, தொடர்ச்சியாகச் சிக்கலில்லாமல் செய்கிறது. இந்தச் செயல் தொடரின் குறுக்கே எந்த விதமான ஆசையும் நுழைவதில்லை. நாய்க்கு, தான் போட்டியில் வென்றதாகவோ, தோற்றதாகவோ தெரிவதில்லை. ஆனால் செய்ய வேண்டியதை உணர்ச்சிவசப்படாமல் செய்து விடுகிறது. மனிதரைவிட மிகவும் திறமையாகச் செய்துவிடுகிறது. 'எல்லைகளில் இருக்காமல், மையத்தில், அசைவில்லா இடத்தில் இருக்கச் சொல்கிறார், புத்தர். எல்லைகள் மேலும் கீழுமெனத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்' வாழ்க்கைச் சம்பவங்கள்: நாம் எதையுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டு மரணம் எய்தவேண்டும் என்று சொல்லவில்லை. வாழ்க்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள். ஆனால் தேவையில்லாத சுமைகளை அத்துடன் சேர்த்துக் கொள்ளவேண்டாம். இக்கதைகள் உங்களை ஆக்குவதில்லை. அல்லது இக்கதைகளை நீங்கள் நம்பினால் அதனுடன் சார்ந்திருக்கும் அழுத்தத்தையும், அதனால் உண்டாகும் துயரத்தையும் அறிவீர்களானால் அக்கதைகளை நம்புவதை நிறுத்தி விடுவீர்கள். இங்கு தான் உங்கள் ஆணவத்துடன் நீங்கள் மோதுகின்றீர்கள். நாம் இப்படி இருக்க வேண்டும் அல்லது அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. நீங்கள் நினைக்கலாம்: "நான் ஏன் இப்படி இருக்க வேண்டும்? ஏனென்றால் எனது பெற்றோர்கள் இதை எதிர்பார்க்கின்றனர். அல்லது என் நண்பர்கள் இப்படி எதிர்பார்க்கின்றனர். அல்லது வேறு எதாவது காரணம் இருக்கும். நான் மற்றவர் கண்களில் உளதாகிறேன். 'நான்' என்று நினைப்பது மற்றவர் மனக்குறிப்போடு சேர்ந்துவிடுகிறது. இவை இரண்டு கொக்கிகள். இவற்றை நாம் கீர்த்தியென்றும், கீர்த்தி குன்றுவதென்றும் கூறுகிறோம். புகழ்ச்சி என்றும் இகழ்ச்சி என்றும் கூறுகிறோம். இவை உலகில் எளிதாக மாறக்கூடிய இயல்புகள். நான் பாராட்டப் பட்டேன், நான் இகழப் பட்டேன். நான் நன்கு அறியப் பட்டவன், என்னை யாருக்கும் தெரியவில்லை. நான் வெற்றி பெற்றேன். நான் தோல்வியுற்றேன். எனக்கு லாபம் உண்டானது, எனக்கு நட்டம் உண்டானது. நான் செல்வம் சேர்த்தேன். நான் எல்லாவற்றையும் இழந்தேன்," போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறோம். மற்றவர் சொல்வதைக் கேட்டு, நம்பி ஏன் நமது ஆணவத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்? அதனை நாம் அறிவதில்லை. பின் மற்றவர் சொல்லக் கேட்டு நமக்கு விருப்பமில்லாத செயலைச் செய்கிறோம். எனக்கு இதைச் செய்ய விருப்பமில்லை. ஆனால் இதைச் செய்யவில்லையென்றால் நான் என்ன ஆவேன்? ஆகவே இதனைச் சரிவர விசாரிக்க வில்லையென்றால் நாம் சிக்கல் உள்ளவராகிறோம். இதனைத்தான் புத்தர் உலகில் உள்ள எட்டு ஏற்றத் தாழ்வுகள் என்றார். ஜோடிகள் - கீர்த்தியும் அபகீர்த்தியும், புகழும் யாருக்கும் தெரியாமல் போவதும், வெற்றியும் தோல்வியும், லாபமும் நட்டமும்... ஏன் இப்படி ஊசலாட வேண்டும்? பெரும்பான்மையானோருக்கு ஒரு முனை அல்லது மறு முனை மட்டுமே விளங்கும். ஆனால் புத்தர் மையத்தில் நிற்கச் சொல்கிறார். மையத்தில் அசைவு இல்லை. மேலும் செல்வதில்லை, கீழும் செல்வதில்லை. அங்குதான் குளுமை உள்ளது. அங்குதான் நிதானம் உள்ளது.

'நான்' என்பதே கற்பனைக் கதை. நாம் சொல்லும் இந்தக் கதையை மற்றவர்களும் நம்புகிறார்கள். பின் இருவரும் சேர்ந்து இக்கதையைத் தொடர்கிறோம். யாரைப் பற்றிய கதை? உங்களைப் பற்றிய கதை. உண்மையில் இது 'நான்' என்று நீங்கள் நினைக்கும் ஒருவரைப் பற்றிய கதை தான். கதை மட்டுமே. இது நீங்கள் இல்லை. நீங்கள் இக்கதையைச் சொல்வதை நிறுத்தி விடுங்கள். மற்றவர்கள் இதைத் தொடரலாம். ஆனால் அது (அக்கதைகள்) இனிமேல் நீங்கள் இல்லை.

சரி. இனி, புத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நாம் ஏன் துக்கம் அனுபவிக்கின்றோம்? இந்த வாழ்க்கையின் சுமை என்ன? பிரச்சனை எங்கு உள்ளது? அது இந்த அறையைக் கடந்து நடப்பதில் இல்லை. வேலைக்குச் செல்வதாலும் இல்லை. வீட்டைக் கட்டும் போது ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவதில் இல்லை. இதன் பின்னனியில் இருக்கும் கதையிலும், நாடகத்திலும் தான் பிரச்சனை இருக்கிறது. எதிர் காலத்தில் எப்படி இருப்பேன்? இறந்த காலத்தில் எப்படி இருந்தேன்? என்னைப்பற்றி மற்றவர் என்ன நினைப்பார்கள்? இதில்தான் பிரச்சனை உள்ளது. 'எனக்கு இதெல்லாம் போதும், போதும் என்றாகிவிட்டது,' என்று நினைத்தால் பிரச்சனை. 'இது எனக்குப் பிடித்திருக்கிறது,' என்று நினைத்தால் அதுவும் பிரச்சனை. ஏனென்றால் எல்லாம் ஓட்டம் தான். எல்லாம் மாற்றத்தைத் தழுவி உள்ளன. எதுவும் நம் கையில் இல்லை. இவை இரண்டும், இரண்டு எதிர் எல்லைகள் –வெறுப்பும், ஆசையும். மனம் விட்டு விட்டு, ஒளிவு மறைவாக இருக்க ஆசைப் படுவது, 'விபாவ தன்ஹா' என்பார்கள். பவ என்றால் ஆகுதல். மறைய விரும்புவதும் ஓர் ஆசைதான். இந்த ஆசைகளில் எல்லாம் சுமை உள்ளது. முன்னேற வேண்டும். உச்சத்தில் இருக்க வேண்டும். உச்சத்தை அடைந்து விட்டால் அங்கேயே இருக்கலாம் என்ற எண்ணம். ஆனால் உச்சநிலையை அடைந்து விட்டால் அங்கு தொடர்ந்து இருப்பது மிகக் கடினமான செயல். எல்லாம் மனத்தின் விளையாட்டுத்தான். இந்த விளையாட்டை அறிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற சுமைகளை இறக்கி வைத்து விடுங்கள். இந்த உள அழுத்தங்களையும், கவலைகளையும் உண்டாக்கி கொள்ள வேண்டியதில்லை. இதைத்தான் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

* * * * * *

தமிழில் / Translation:

பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading

திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

Transcribed from an audio tape available at birken.ca

Q. What is being?

From a Buddhist point of view, there is a word 'bhava' - sometimes called becoming or being or existing. One of the things the Buddha points out about beings is that in some ways there is no being. There is no noun. There is nothing that a noun refers to. Noun indicating that something is a thing. So our concept of being is always becoming. There is no being, there is a flow.

So the Fraser river is not really a thing. When you look for the Fraser river actually it is a process. It is a conventional way of designating approximately some area. What is it? It all flows down, in a day the whole river empties out. There is a whole new river in there. Every day it is new. Or is it every hour? Or every minute? Where are the banks? Are they fixed? Where exactly are the banks? Where does the water actually stop? When you say the Fraser river do you mean just the water in there or do you mean the mud that is soaked with the water or 2 ft into the bank or 3 feet into the bank or the bank that was there last year? When you look for the Fraser river you can't locate it . But at the same time it is a useful concept. When we go rafting on the Fraser river everyone knows what we are talking about - roughly.

So we are the same. We are rivers of events. We are also that. Where do we stop? Where are our boundaries? There is a river of breathing. There is air being internalized. There is a river of air and where does it stop? In the lungs or the permeation of the lungs. Where does the air stop and where does the solid begin? There are solids and liquids in the body. We are sitting here drinking tea. We are actually 'rivering' some liquid into us. When is it you? When it is in your mouth? You can still spit it out and then it it wouldn't be you, right? When would you be offended when somebody touched it without your permission. When a glass of water is in here (pointing a few feet away)? When somebody touches it without your permission you don't really take offense. But the moment you put it in your mouth if somebody goes like that (pokes your cheek) without your permission then you get all offended because now it is you. That water is you, you think. Specially when you swallow it and then it goes into your body. Now if somebody pokes you there, touches your knee, touch you on the behind a little bit, either in a desiring way or a smack then there is this hugh explosion of myself has been violated. But really it is just water, isn't it. When the water is outside it is not yourself and there is no sense of personalizing it , no sense of privacy. And then of course when you excrete it, you don't care who touches it after that . You are not offended. When is it you and when is it not you? When you look at this every breath you take and you are exhaling, it is you and then it is not you. The water is flowing through you - it is not you then it is you and then it is not you. These are just concepts.

This is called the four elements. Our body is basically just water, air, heat and solid. The solid is the solid food which is just the conversion of inorganic dirt to organic. We can digest it when it is organic dirt. Like a carrot it is organic dirt. Before that it is inorganic. That little seed turns it into organic and then we become organic dirt and that is all it is. That is the body. We can be traumatized deeply when somebody does not admire it so much or insults this organic dirt - which is just processing by biological means. We personalize it. It is a river of events. It is a constant river of changing events. We shave out heads. I got my hair and you come and rustle it and I am offended, 'What are you doing?' And then I shave it off and it falls on the floor and then I don't care. You sweep it up at the end of a broom and it does not matter to me anymore. This very strange notion of personalizing and identifying. We have the feeling in the ordinary sense that there is a sense of myself that is a constant through my life but the least bit of investigating reveals that there isn't a self that is a constant through my life. There is a river of thoughts and feelings and the physical body is flowing and so this is the way it really is.

There are whirlpools in the river. You go to the Fraser river. There is a whirlpool there that was there 10 years ago. Of course it is not the same water but the pattern there is the same. But when water rises in the spring, that whirlpool disappears too. So the whirlpool is what we call identifiable personality. We say so and so has not changed a bit. That kind of stuff. That is just a whirlpool. In a constant flow. It is just a whirlpool. If you sit on a bank of a river and watch those patterns and ripples that is so complex. Fluid mechanics is almost of infinite complexity. But that whirlpool there, if you want to change that whirlpool instead of dealing with the whirlpool directly all you got to do is move upstream and put a rock in there. Because that changes the preceding causes and that whirlpool will disappear. Or remove the rock. Why is there a whirlpool? Because a rock is changing or being a impediment in the water and so the water is swirling. So if I pluck that rock out, the whirlpool disappears.

That is the way Buddhism works on change. How do you want to change? Which whirlpool do you want removed? Do you want a whirlpool? Do you want another whirlpool? You don't deal with the whirlpools at all. You go up the stream and you place something in or pull something out. That is the way we deal with being or becoming. There is no real being. There is becoming. There is a constant condition of becoming. We get our eyes off results and we put them on causes. So in building a house or something like that don't keep craving the final product. Put one two by four after another two by four and you got a house. A house is made of these causes, isn't it? You cannot get the results. Your activity is limited to causes. We get this adjustment. Just put in the causes and the results must appear. it is not a matter of if. They must appear. And if you don't put in the causes the results can't appear. So you take your eye off the results. That is a waste of energy. Just put your eye on causes. You decide on the final product - where do you want to go in the universe. What do you want. The stream of becoming, the river of events what form do you want it to take and then just put in the causes.

The causes are well known for good results. They are not mysterious. Negative results will occur from excess craving. Misinformed craving, misinformed desire. Desire for things that cannot be got. Have you ever seen Racoons. It washes its food before it eats. Very interesting. And they automatically wash it. If you give a Raccoon a sugar cube he will go and wash it and then he will not have his sugar cube. He is very mystified by this. You give him another one and he goes and washes it again. He has got this compulsion to wash. His system only works in certain areas. If the food dissolves in water then it does not work. So he has desire that is misinformed, misinformed desire. He never gets the sugar. He keeps washing it.

What is the problem with desire? What is the problem? All these things we could have - sights, sounds. Things that look beautiful - that is a sight really. It is not the thing itself, it is the sight of the thing. We like the sight of something, sound of something, smell of something, taste of something, touch of something, a thought of something. Actually when you look at it we just like the light in our eyes. It is the light in our eye that is the gratification not the thing itself, it is the light from the thing. How do you experience a thing? Through sight. Do you put it in your eye? Do you eat it? All you can do is the light bounces into your eye . it is very interesting about ownership, the sense of ownership. You own a house, you own land, this and that. What do you own? Just the light. And you pay a lot of money for this light. And the thing is anybody else can go look at it for free. And get exactly the same light.

I lived in Toronto for 7 years when I was a musician. I lived in the fringe of the ritzy area. I couldn't afford these houses but I lived in an apartment. I used o walk in Forest Hills. That is where Gordon Lightfoot and people with money lived. I was just a block away. That is where the big ritzy houses are. I walked around looking at these houses. I had time to go for walks. I must have walked there for about a year. I probably took 150 walks around in that area. In that time I met maybe 2 people in the side walk. That is the most deserted area. Very beautiful houses. Big. Some of them very old and the architecture is very beautiful. Of course, I don't have to own them. I get to enjoy them. I get to walk by them. How else is the owner who is inside the house going to enjoy his house except by looking at it. All the aspects of the external part of the house is available to me. Where are the guys who own this? They are too busy to actually enjoy. They are never there in the day. They arrive at night. They leave when it is still dark. The two people whom I met were both nanny's pushing a buggy or something. They were not the people who owned the houses. Too busy. It is a shame. What is that house except light in your eyes. Of course I don't get to see the internals. But anybody for free can see the outside. Not only just your house but all these houses. What is ownership? So your relationships to the sensory objects boils down to light in your eyes. Now if your eye is slightly defective, if you have a vision impairment even if you have a big house - too bad. The house is gone. All you can do is feel the walls. So your ownership is actually processes of light and the senses are internal experiences.

So as the Buddha thinks about it is, what is the world? The world is sights, sounds, smells, taste, touches, ideas. That is the world. Reflect on that. The world is really occurring within this body. That is where the world is found. The only relevant world is the experience of the world - the sights, the sounds, the smells, the taste, the touches.... Our problem is that we want to own them. We want to have them, stabilize them, hold them, possess them. That is why we are like racoons with a sugar cube. Because you can't. It is light- just light in your eyes. It is smells, taste .. you cannot stabilize them. So it is a frustration, it is an impossible task to stabilize and own it. That is why it is all being, all becoming. And it is all becoming within your consciousness. There are many many worlds out there. Each of us is a little world walking around. If you don't have sight then that world is absent. Then of course there is gradations of the world. If you have sight but you don't appreciate, if you don't have information about something then that does not exist for you. Like art. The world of art does not exist for the dog. A Rembrandt or Picasso is lost on Rover. If you lean it against the wall he may pee on it, but that is all. He sees it but that world is absent . Also for the crude person it simply does not exist. It only exists inside of you, not outside. This is all cultivation, being, becoming. There are millions and millions of worlds. No two alike. No two snow flakes alike. Each world is contained within. Without that experience of world then there is no point talking about existence at all. There is no existences outside of the experience of the existence. This is all flowing through you. if we grasp at it, try to possess it and so forth because its nature is to flow and change we have misinformed desire. That is the problem with desire. It is frustrating if you don't have the correct understanding of what is going on around you.

So that is a little bit about being, what is being.

Q: Is ‘being and self‘ two different things?

Self is just a conventional word. Myself etc. which is perfectly useful but does not really have a real object. There is no self. What would a self be? Imagine a self, self as a noun, as something that does not change, like you, the real you, the Real you. People talk about the real me. The authentic me. As if there was something that corresponds to this. There is no real you. No authentic you. There is just thoughts, feelings, awareness of sights, smells, taste, touches - changing all the time. That is what is. When you look for the me, the little person inside the car driving, the chauffeur, back there behind your eyes. 'There is somebody behind my eyes.' That is an illusion. That is an unexamined assumption. ie. when you look for it, when you examine it, when you turn your mental eye inward you won't find the one who is seeing, who is smelling, who is tasting, who is touching. You won't find the one. All there will be is sights, taste, smells, touches and then the mental phenomena commenting on it. 'Oh that is familiar.' Thinks that are familiar that we know about is called perception and that is based on memory. It is memory that happens so fast that you are not aware that it is happening. The familiar world to you is perception which is very rapid memory. You are all adults in this culture you know what this is - its is a cup. But that is not what really what it is. That is perception. You know it is a cup because of memory. It did not seem like you remembered it to be a cup but the perception is so fast that you get the feeling that you directly knew that was a cup. But a child who is under 1 year old. For her it is not a cup yet. It is just an object. It is juts a sight. Pure consciousness. Same with a dog. That is not a cup for a dog. He sees that, but there is no cup there. That's happening so rapidly built in all of these. This is what is going on but the self is just a convention. It is river of very fast flowing events.

Q: In one way there is this drive to sustain myself, to keep this object alive. I will reach an age when I will need help to sustain myself. I have to think of the future which does not keep me in the present. In the present economics I need to prepare for a future that is not tangible. Will I live another 10 years 30 years. I don't know. There is something in me that keeps wanting to maintain that driver, that sense of self. Something that makes me want to get up and go to my job.

Sense of self

Desire is one thing, the action is another. Somethings - normal type of processes - going to school, going to work, relationships. Somethings are important to you and not to the guy besides you. Somethings are important to the guy beside you but not you. If there is not a lot of ego investment in it or future sense of self investment in it you can carry out these actions in a light hearted way. And if he has a lot of stake in his sense of self, 'I must get this result', 'I cannot fail with this', 'This must be so' then for him the same actions are going to be fraught with tension and expectation. That is what we mean by desire. When we talk about desire we mean the burden of desire. The burden of being driven. Don't you notice that sometimes if you are just walking along and you don't have the idea of a goal and so forth there is no burden to experience. But then you think I got to get to such and such a place and I have eight mins to get there. The same walk you took yesterday without the slightest burden now ... even if its on the street car. You can't get the street car to go any faster. Pushing on the backseat in front of you or on the floor is not going to help. You want to get to the appointment. That is what I mean by desire. There is nothing you can do about that. You sit there and you create suffering or no suffering. Same with this process of accumulating things for you old age. You can either invest it with a sense of drivenness or burden or just do the same actions without that. It is the actions that get results not the melodrama behind it or the intensity of desire. It is not that. You do not necessarily lose motivation or do things less well without the desire. Most people don't examine that.

I like to bring out the difference between humans competing and animals performing similar activities in so called competitions. The animal, the dog does not know he is in a competition. Humans conduct dog shows. The dog does not know he is in a show. He does not know whether he looks good or not good etc. He is totally oblivious to this. Only humans know this. He just walks around being a dog. I remember this film of the frisbee catching dogs. Dogs like to catch frisbees. This was a slow motion film of dogs catching frisbees. To watch this incredible, athletic event. They run like the wind much faster than the best olympic athlete and then jump into the air and catch this frisbee in their mouth calculating the vector of the frisbee, so that they will meet it just at the moment much better than a NBA basketball player - much better. When you look at the body of the dog, the tremendous leap into the air much higher than the best human can do , the body the feet - they are relaxed. There is still no goal to it. They jump with relaxation and then they catch with relaxation and then they think about where to land. All in perfect order. There is no this, 'Oh my God what if I miss? What if I don't catch the frisbee? That collie will win the competition.' There is none of this. There is no motivation. 'If I win it I will be admired by so many people.' None of this exists and yet they do the action with amazing skill and ability. None of this, 'I better think about where I am going to land after I catch it.' They don't do that. They jump, they catch and they land. All in the order that it actually occurs. They don't interfere with all this process by an overlay of drama or desire or anything like that. They don't know if they won or lost or anything like that. But they accomplish the task that we overlay with a hugh drama. They do it better than us without any drama at all. Just jump.

The events of life. We aren't saying that just sit there and die. We say go about the events of life but be aware of how much unnecessary overlay you are putting on to this. It is not what keeps you going. Or maybe it is and maybe if you really become aware of the stress and strain of this and that you cannot get your happiness through that then you may quit that activity. You may . That is where you get a conflict with your ego. You have the projection. You must do this. And you think, 'Why must I do this?' Because my parents expect me to do this or my friends or some others. I exist in other peoples eyes. Part of my mental existence is through the perceptions of others. So that's two of the hooks we call praise and blame, fame and obscurity. Those are the worldly whims the worldly teeter totter that you swing back and forth to. Because you place such strong emphasis on 'I am praised, I am blamed, I am well known, I am obscure, I succeed, I failed, gain and loss, I accumulate, I don't accumulate.' We invest that. So much of that concept of self you give it to others to make you. You are not aware of this process but this is what is driving you. So you do things you don't want to do. I really don't want to do this. But I can't not do this because who would I be if I didn't do this. So when it is unexamined like that you are in conflict. That is why the Buddha is saying those are the 8 worldly ups and downs, the vicissitudes, the teeter totter, the pairs - the praise and the blame, the fame and the obscurity the success and the failure. gain and loss and so forth. Where do you want to be on that teeter totter? Most people only know one end or the other. He says I got a better idea. Stand in the centre. It doesn't move. It doesn't go up, it doesn't go down. There is the point of ease. that is the virtue of equanimity, the balance, the point of balance.

The fantasy self that doesn't exist to begin with somebody else believes the same story we are telling so that two people participate in a story about somebody - somebody called you. Fact is it is a story about somebody called you. It is not you. It is a story. You stop telling the story. Other people may continue telling the story. They are talking about this you you you. That is not me any more. Very interesting.

So what the Buddha is talking about is, How do we suffer? What is the burden of life? What is the problem? It is not walking across the room, it is not going to work, it is not putting a 2 by 4 up, it is not any of these things really. It is about the drama and the story behind all this. The future and the past and the me and who will I be and how will I be perceived. That is where the problem comes. If I swing to, 'I am sick of this.' that's is a problem. If I think, 'I love this,' that is a problem too because it is all flowing, changing and so out of our control . That is called the two extremes. aversion and grasping. Giving up - the desire to vanish is called vibhava thanha. Bhava is being becoming. The desire to not exist is a desire. All these cravings have burdens with them and the desire to exist, to get to stage when I am finally at the top and I can stay there. Of course you notice notoriously the problem of staying at the top. If you get to the top the problem of staying at the top, it is a very very uncomfortable experience. It is a game in the mind. You have to see through the game. The unnecessary burden. We don't have to create these inner stress and tensions. That is what you find out.

* * * * * *